Tuesday, June 30, 2009

இந்தியாவின் பெருமை!




பத்து வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பல்வேறு போராட்டங்கள், பற்பல முட்டுக்கட்டைகள் பலமடங்காகிப் போன செலவினங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று பந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம் பொது மக்களுக்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.



இந்த பாலத்தின் முக்கிய சிறப்புக்கள் இங்கே.



இந்த எட்டுவழி பாலத்தின் நீளம் 5.6 கி.மீ.

மொத்த சிமென்ட் உபயோகம் 90,000 டன். இரும்பு 40,000 டன்



இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவு

மைய தூணின் உயரம் 126 மீட்டர்.



பாலத்தைக் கட்டியது ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி. அணுமின் நிலையங்கள் போன்ற உயர் தொழிற்நுட்ப அமைப்புக்களை உருவாக்குவதில் வல்ல தனியார் நிறுவனத்தினர்.



மூவாயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர்



இந்த கட்டுமானப் பணி பல ஆண்டுகள் தள்ளிப் போனதால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது."

இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை வாங்கினேன். லாபத்தை எதிர் நோக்கி அல்ல. ஏதோ ஒரு அணிலின் பங்கு என்று வைத்துக் கொள்ளலாம்.



இந்த நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும், பணியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அதே வேளையில் மனதை நெருடும் ஒரு விஷயத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது. இந்த பாலம் வழியாக பயணம் செய்ய செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஐம்பது. இது ஒரு பக்க பயணத்திற்கு மட்டும். மேலும் இந்த பாலத்தில் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

சாதாரண மக்கள் ஒவ்வொரு முறையும் ஐம்பது ரூபாய் கட்டி இந்த பாலத்தில் பயணம் செய்வது பொருளாதார ரீதியாக கடினமான ஒரு விஷயம்.

பெருமை மிக்க இந்த பாலத்தில் பயணம் செய்யப் போகிறவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு மக்கள் மட்டும்தான் எனும் சேதி இன்றைய தேதியில் இந்தியாவில் பெருமைப் பட வைக்கும் விஷயங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் சொந்தமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கூடவே, எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம் என்ற காலம் எப்போது இந்தியாவில் வரும் என்ற பெருமூச்சையும் எழுப்புகிறது.

நன்றி.

Sunday, June 28, 2009

'பட்ஜெட்' பகவான் வரம் தருவாரா?


மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே இருக்க, பணத்தில் புரளும் கனவான்கள் முதல் அன்றாட உழைப்பில் சோறு பொங்கி அதில் உப்பு மட்டுமே சேர்த்துக் கொண்டு சாப்பிடும் சாமான்ய மனிதர்கள் வரை அனைவரின் கவனமும் இப்போதைக்கு மத்திய பட்ஜெட் மீதுதான் இருக்கிறது.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வேலை உறுதி திட்டங்கள், தனி நபர் ஓய்வூதிய/ காப்புறுதி திட்டங்கள் போன்றவை ஏழை வர்க்கத்தின் ஆவல்கள். தனிநபருக்கான வருமான வரி வரம்புகள் அதிகரிக்கப் படவேண்டும் என்பது மத்திய தர வர்க்கத்தினரின் விருப்பம். விஷம் போல ஏறி இருக்கும் விலை வாசியை குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் படுமா என்பதும் மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தினரின் ஏக்கம்.

புதிய ரயில் திட்டங்கள், வெட்டில்லாமல் கிடைக்கும் மின்சாரம், குடிநீர் விநியோகத் திட்டங்கள், சாலை மேம்பாடு, கட்டுமானப் பணிகள் போன்றவையும் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கள்.

இனி தொழில் துறையினரின் விருப்பங்களைப் பார்ப்போம்.

கலால் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் போன்றவை ஜவுளித் துறையினரின் விருப்பம். கலால் வரி குறைப்பு, வட்டி குறைப்பு மற்றும் தேய்மான சலுகைகள் வாகனத் துறையினர் வேண்டுவது.

வாட் வரி குறைப்பு மற்றும் மூலப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு போன்றவை சிமெண்ட் துறையினர் கேட்பது. வரி விடுமுறையினை நீடிக்க வேண்டும் என்பது தகவல் தொடர்பு/மென்பொருட் துறையின் விருப்பம்.

ஏற்றுமதி வரி குறைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான வரிச் சலுகைகள் போன்றவை மருந்துத் துறையின் விருப்பம். வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகள் வீட்டு வசதி திட்டங்களுக்கு வரி விடுமுறை ஆகியவை ரியல் எஸ்டேட் துறையினரின் கோரிக்கைகள்.

நிறுவன வரி குறைப்பு அனைத்து துறைக்கும் தேனாக இனிக்கும். குறைந்த கால பங்கு வர்த்தக வரி நீக்கப் படுமா என்று பங்கு வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வெளியிடப் படுமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசின் நிதி நிர்வாக செயல்பாடு, சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் உள்ள நிலைப்பாடு போன்றவற்றை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கூர்ந்து நோக்கி வருகின்றனர்.

இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு வகையான மக்களுக்கும் பல்வேறு விருப்பங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கின்றன. இவற்றில் எத்தனை விருப்பங்கள், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை பட்ஜெட்தான் சொல்ல வேண்டும்.

முன்னரே நாம் இங்கே பலமுறை கூறியுள்ள படி, ஏற்கனவே ஏராளமான கடனில் தத்தளிக்கும் நம் மத்திய அரசால் மேற்சொன்னவற்றில் எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான் என்றாலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டு செல்ல இந்த அரசு எந்த அளவு உறுதியுடன் இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டும் என்று நம்பலாம்.

மத்திய அரசின் ஒரு பொதுப் பணிக்காக (அனைத்து இந்திய மக்களுக்கும் அடையாள சிப் அட்டை வழங்கும் திட்டம்) இன்போசிஸ் தலைவர் திரு.நந்தன் நில்கேனி அவர்களை நியமித்திருப்பது ஒரு நல்ல துவக்கம். நாட்டின் நலத் திட்டங்களுக்கு அரசு இயந்திரத்தை மட்டுமே நம்பி இருக்கும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தில் இருந்து சற்று மாறி அமெரிக்க முறையிலான இந்த பணி நியமனத்திற்காக பிரதமருக்கு ஒரு வணக்கம் கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயத்தில், பணம் புரளும் தனியார் வேலையை உதறி விட்டு தேச நலனுக்காக அரசு பொறுப்பை ஏற்க முன்வந்திருக்கும் நந்தன் நில்கேனிக்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.

இந்த பணி நியமனத்தைப் போலவே பட்ஜெட்டும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்.

இப்போது நமது சந்தை நிலவரத்துக்கு வருவோம்.

உலகப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீள, (முன்னர் எதிர்பார்த்ததை விட) அதிக காலம் பிடிக்கும் என்று உலக வங்கி சொன்னதை அடுத்து சர்வதேச சந்தைகள் சென்ற வாரத்தை சரிவுடனேயே துவக்கின. ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சி அந்த அவநம்பிக்கையை அதிகரித்தது. அதே சமயம் சென்ற வார அமெரிக்க பொருளாதார வெளியீடுகள் ஒரு புதிய நம்பிக்கையைத் தர, சந்தைகள் சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டன. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தாமல் பழைய அளவில் தொடர்வதாக அறிவித்ததும் சந்தைகளுக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. அதே சமயத்தில், திட்டமிட்டதை விட அதிக பணம் சந்தையில் கொட்டப் படாது என்று அந்த வங்கி தெரிவித்தது ஒரு வித மன சோர்வை தந்தது.

வட்டி வீத அறிவிப்புக்குப் பின்னர் உலக சந்தையில் டாலர் வீழ்ச்சியுற்று இதர முக்கிய கரன்சிகள் உயர்ந்தன. அதே போல, கச்சா எண்ணெய், தங்கம், தொழில் உலோகங்கள் மற்றும் பங்கு சந்தைகளும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்த வரை, சென்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அந்நிய நிறுவனங்கள் பங்குகளை பெருமளவுக்கு விற்றது நமது சந்தைக்கு பெரும் நிர்பந்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் சிறிய மற்றும் மத்திய நிலை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. எதிர்கால நிலைகள் சமன் செய்யப் பட்டதின் எதிரொலியாக சந்தையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வு நிலை காணப் பட்டது.

ஆனால் வாரத்தின் கடைசி நாளில் பங்கு சந்தை பெருமளவில் உயர்ந்து கடந்த வாரத்தை ஒரு வெற்றிகரமான வாரமாக மாற்றியது. (பட"ஜெட்" வாரத்தின் முன்னோடி?).

இப்போது வரும் வார நிலவரம்.

அமெரிக்காவில் சென்ற வார இறுதியில் நான்கு வங்கிகள் நடையை சாத்தியுள்ளன. இந்த வருடத்தில் மட்டும் 44 வங்கிகள் இழுத்து மூடப் பட்டுள்ளன. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அமெரிக்காவின் பிரச்சினை இன்னும் ஓயவில்லை என்பதையே வெளிக் காட்டுகிறது.

கடந்த சில மாதங்களில் பங்கு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி பல பங்கு நிபுணர்களின் மனதில் இப்போது எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பங்கு சந்தையுடன் போட்டி போட்டுக் கொண்டு உயரும் கச்சா எண்ணெய், உலோகங்கள் மற்றும் இதர பொருட்களின் உயர்வு பொருளாதார மீட்சிக்கு பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கருதப் படுகிறது.

எனவே வரும் வாரமும் உலக சந்தைகள் பெருத்த ஏற்ற தாழ்வுடனேயே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். உலக சந்தைகள் அமெரிக்க பொருளாதார தகவல்களை குறி வைத்து இயங்கும் அதே சமயம், இந்திய பங்கு சந்தை "பட்ஜெட்டை" குறி வைத்து உயரவும் வாய்ப்புள்ளது.

சென்ற வாரமே சொன்ன படி நிபிட்டி 4400 ஐ கடக்கும் பட்சத்தில் உயர்வை எதிர்நோக்கி வியாபாரம் செய்யலாம். அதே சமயம் பட்ஜெட்டுக்கு முன்னரே லாப விற்பனை செய்வது பாதுகாப்பானது ஆகும். கீழே 4200 ஐ இழப்பு நிறுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் எதிர்ப்பு நிலைகள்: 15,500, 16,200
சென்செக்ஸ் அரண் நிலைகள்: 13,900, 13,400

முதலீட்டாளர்கள் எப்போதும் போல, பங்கு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் சமயத்தில் மட்டும் பங்குகளை சேகரிப்பது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

Friday, June 26, 2009

"ஒரு அரிசி"யின் கதை!


முன்னொரு காலத்தில் ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்த ஒரு மாமன்னன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அவனது திறமைகள் மீது அபார நம்பிக்கை. சொல்லப் போனால் நிறைய கர்வமும் கூட.

குறிப்பாக, சதுரங்க போட்டியில் அந்த மன்னன் படு கில்லாடி. போவோர் வருவோரையெல்லாம் விளையாட அழைத்து அவர்களை நிமிடத்தில் தோற்கடிப்பதில் அவனுக்கு அலாதி ஆனந்தம். அவனிடம் சதுரங்க போட்டியில் தோற்றுப் போகாத மன்னர்களே அந்த காலகட்டத்தில் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மன்னர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள், வியாபாரிகள், முனிவர்கள், வீரர்கள் அனைவரையும் அழைத்து ஏதாவது பந்தயம் கட்டி அவர்களை வீழ்த்துவதே அவனது பொழுது போக்கு. அவனிடம் மூக்கறுபட்டவர்கள் ஏராளம்.

ஒருநாள் அவன் நகர உலா போகும் போது, பரதேசி தோற்றம் கொண்ட ஒருவரைப் பார்க்கிறான். ஆனால் அவரோ அரசரை கண்டு கொள்ளாமல் நேராக தன பாதையில் நடந்து செல்கிறார். மக்களோ அவரைப் பார்த்து பணிவுடன் வணக்கம் தெரிவிக்கின்றனர்.

அரசனுக்கு எரிச்சலான எரிச்சல். ஒரு மன்னனை அதுவும் தன்னைப் போன்ற ஒரு மகா மேதாவியைப் பார்த்து உரிய மரியாதை செய்யாமல் போகின்ற இந்த பரதேசி யார் என்று கோபம் அவனுக்கு. இந்த பரதேசியை எப்படியாவது மக்கள் முன்னர் மட்டம் தட்டி அவமானப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்து அவரை சதுரங்க போட்டிக்கு அழைக்கின்றான்.

அதுமட்டுமல்லாமல் ஒரு பந்தயம் வேறு கட்டுகிறான்.

அதாவது, ஒருவேளை, மன்னன் தோற்றால் அந்த முனிவர் கேட்பது எது வேண்டுமானாலும் கொடுக்கப் படும். மாறாக முனிவர் தோற்றாலோ அவர் அரசனிடம் சேவகனாக வாழ்நாள் முழுக்க ஊழியம் செய்ய வேண்டும்.

முனிவரும் ஒப்புக் கொள்கிறார்.

ஆட்டம் தொடங்குகிறது.

அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, போட்டியில் முனிவர் எளிதில் வென்று விடுகிறார்.

பந்தயப் படி, இப்போது, வெற்றி பெற்ற அவர் மன்னனிடம் எது வேண்டுமானாலும் கேட்க வேண்டிய முறை.

மன்னனுக்கு ஏகப் பட்ட பயம். பாதி மண்ணைக் கேட்பானோ இல்லை ஏராளமான பொன்னைக் கேட்பானோ இல்லை கதைகளில் வருவது போல தனது பெண்ணையே கேட்டு விடுவானோ என்றெல்லாம் அஞ்சி நடுங்குகின்றான்.

முனிவரோ, "ஒரு அரிசி மட்டும் சதுரங்க பலகையின் முதல் கட்டத்தில் வையுங்கள், பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் முதல் கட்டத்தில் இருப்பது போல அரிசியை இரண்டு மடங்காக்கி இறுதியில் அறுபத்து நான்காவது கட்டத்தில் வரும் அரிசியின் அளவை மட்டும் எனக்குக் கொடுங்கள், போதும்" என்று மன்னனிடம் கேட்கின்றார்.

"யாரடா இவன்? நாம் நினைத்ததைப் போலவே ஒரு பைத்தியமாக இருக்கின்றான், மண் வேண்டும் பொன் வேண்டும் என்றெல்லாம் கேட்காமல் ஒரு அரிசி குவியல் கேட்கின்றான். நல்ல வேளையாக நாம் தப்பித்தோம்" என்று சந்தோசப் படும் அரசன் அவர் கேட்டபடி அரிசி கொடுத்து அனுப்புங்கள் என்று கட்டளையிடுகிறான்.

முதல் கட்டத்தில் ஒரு அரிசி, இரண்டாவதில் இரண்டு அரிசி. மூன்றாவதில் நான்கு, நான்காவதில் எட்டு, ஐந்தாவதில் பதினாறு என்று பெருகிக் கொண்டே போகும் அரிசி சதுரங்க பலகையின் பாதிப் பலகையை தாண்டுவதற்கு முன்னரே அரண்மனை ஊழியர்களுக்கு மூச்சு முட்டி விடுகிறது.

அரசாங்கத்தின் கிடங்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அரிசி மொத்தத்தையும் கொண்டுவந்தாலும் போத வில்லை. (அவர் சொன்ன கணக்குப் படி அரிசி வேண்டுமென்றால், கடைசி கட்டத்தில் பத்து எவரெஸ்ட் மலை அளவு அரிசி அடுக்க வேண்டும்)

கர்வம் அழிந்த மன்னன் அந்த ரிஷியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றான்.

இது ஏதோ நீதிக் கதை மட்டுமல்ல. "கூட்டலின்" மதிப்பை புரிய வைக்கும் கதையாகும்.

உதாரணத்திற்கு பாலு மற்றும் கோபு என்ற இரு நண்பர்களை எடுத்துக் கொள்வோம்.

இருவரும் தமது இருபந்தைந்தாவது வயதில் வேலைக்கு செல்கின்றனர். இருவருக்கும் ஒரே சம்பளம். பாலு கொஞ்சம் பொறுப்பானவன். மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய், துவக்கத்தில் இருந்தே சேமிக்க ஆரம்பிக்கின்றான். கோபு ஜாலி டைப். இளம் வயது என்ஜாய் செய்வதற்கானது. திருமணமாகி பொறுப்பு வந்தவுடன் சேமித்தால் போதுமானது என்று சம்பளப் பணத்தை முழுவதும் செலவு செய்கிறான்.

திருமணம் முடிந்து குடும்ப பொறுப்பு வந்தவுடன், பாலுவை துரிதமாக மிஞ்ச வேண்டுமென்று முடிவு செய்யும் கோபு, தனது முப்பத்தைந்தாவது வயதில் இருந்து, மாதம் இரண்டாயிரம் ரூபாய் (அதாவது பாலுவை போல இரு மடங்கு) சேமிக்க ஆரம்பிக்கின்றான். அதே சமயம் பாலு தனது ஆயிரம் ரூபாய் சேமிப்பை அதிகப் படுத்தாமல் அதே அளவில் தொடருகிறான்.

(மாத வட்டி சராசரியாக எட்டு சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.)

இருவரும் தமது ஐம்பத்தைந்தாவது வயதில் தமது சேமிப்பினை திரும்பப் பெறுகின்றனர்.

யாரிடம் அதிகப் பணம் உள்ளது என்று கணியுங்கள் பார்க்கலாம்.

சந்தேகமே வேண்டாம். பாலுதான் அதிகம்.

பாலுவிடம் இருப்பது கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் ரூபாய். கோபுவிடம் இருப்பது
பன்னிரண்டு லட்சம் மட்டுமே.

இத்தனைக்கும் முப்பது வருடத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பாலு போட்ட பணம் 3,60,000. இருபது வருடத்தில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் கோபு போட்டதோ 4,80,000.

எங்கிருந்து வந்தது மீதப் பணம்?

அதுதாங்க "கூட்டலின் வழியாக வரும் பெருகலின்" மகிமை.

எனவே சேமிக்க ஆரம்பியுங்கள். அதுவும் இளம் வயதிலேயே சேமிக்க ஆரம்பியுங்கள்.

காலத்திற்கு ஏராளமான சக்தி உண்டு.

காலம் வெறும் மண்ணைக் கூட பொன்னாக்கி விடும்.

நன்றி

Sunday, June 21, 2009

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!


வருகிற பட்ஜெட் அறிவிப்புக்கள் குறித்து சந்தையில் ஏற்கனவே ஏகப் பட்ட எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன. அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற பாப்புலர் திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், தொழிற் துறைகளுக்கு காங்கிரஸ் அரசு நிச்சயமாக ஏதாவது செய்யும் என்று பல பங்கு வணிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். முக்கியமாக நிறுவன வரி குறைப்புக்கள், நிறுவனங்களுக்கு SEZ போன்ற இதர சலுகைகள், வரி விடுமுறைகள், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல் மற்றும் அரசின் புதிய முதலீட்டுத் திட்டங்கள், இப்படி சந்தையின் எதிர்ப்பார்ப்புக்கள் எக்கச்சக்கம்.

ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் வரிச் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை, ஏற்றுமதி சார்ந்த ஒரு சில துறைகளுக்கு வரிச் சலுகைகள் அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந்தாலே நாமெல்லாரும் அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய அரசின் நிதி நிலை. முதல் அரை ஆண்டில் மட்டும் மத்திய அரசு வாங்க திட்டமிருக்கும் கடன் அளவு சுமார் 2,54,௦௦௦000 கோடி ரூபாய். இந்த கடன் அளவு இன்னும் கூட அதிகமாக வாய்ப்புக்கள் உண்டு என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த பட்ஜெட் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வரி சீர்திருத்தங்கள், சில சலுகைகள், சில பொது நிறுவனங்களின் பங்கு வெளியீடு, சில வரிகுறைப்புகள் கொண்டதாக இருக்கலாமே தவிர அனைவரின் முக்கியமாக பங்கு வர்த்தகர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு "கனவு பட்ஜெட்" ஆக இருக்க வாய்ப்புக்கள் சற்று குறைவுதான்.

இருந்தாலும் கூட, குறுகிய காலத்தில் பெருமளவு வந்து சேர்ந்துள்ள அந்நிய முதலீடு காரணமாக உருவான ஏராளமான பட்ஜெட் எதிர்பார்ப்புக்களுடன் சந்தை காத்துக் கொண்டிருக்கிறது.

சந்தையின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு மத்திய பட்ஜெட் இருப்பது கடினமான ஒன்று என்றாலும் எந்த பட்ஜெட்டையும் கனவு பட்ஜெட்டாக உருவகப் படுத்தும் பலம் (அந்நிய முதலீடு மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பட்சத்தில்) ஊடகத்திற்கும் பங்கு சந்தை நிபுணர்களுக்கும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் சந்தையின் போக்கை குறுகிய கால நோக்கில் நிர்ணயிக்கப் போவது அந்நிய நிறுவனங்களின் பண வரத்தாக இருக்குமே தவிர பட்ஜெட்டாக இருக்காது. அதே சமயம் அந்நிய நிறுவனங்களின் இந்திய சந்தை முதலீடு உலக சந்தைகளின் போக்கையும் அமெரிக்க டாலரின் ஏற்றத்தாழ்வுகளையும் பெருமளவுக்கு சார்ந்து இருக்கும்.

உலக சந்தைகளைப் பொருத்த வரை, அமெரிக்காவின் பொருளாதார எழுச்சி மிக முக்கிய காரணியாக கருதப் படுகிறது. ஒரு சில பொருளாதார தகவல்கள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது என்பதை வெளிகாட்டினாலும், வேறு சில தகவல்கள் முழுமையான மீட்சிக்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்று உணர்த்துகின்றன. முக்கியமாக கச்சா எண்ணெய், அடிப்படை உலோகங்களின் அதிரடி விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று கருதப் படுகிறது.

அதிரடி பொருளாதார மீட்சியை எதிர்பார்த்த உலக சந்தைகள் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததும் தமது வேகத்தை குறைத்துக் கொண்டன. அந்த வேகத்தடையின் எதிரொலி இந்திய சந்தைகளிலும் சென்ற வாரம் உணரப்பட்டது.

அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யெந் ஆகியவற்றின் உயர்வு மற்ற சந்தைகளை பெருமளவு பாதித்தது. முக்கியமாக இந்தியா உட்பட வளரும் நாடுகளின் சந்தைகள் பெருமளவு பாதிக்கப் பட்டன. சென்செக்ஸ், நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழங்கப் பட்ட தீர்ப்பு நமது சந்தையின் வீழ்ச்சியை துரிதப் படுத்தியது.

அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை ஓரளவுக்கு தெளிவான பின்னரே இந்தியா போன்ற நாடுகளில் மீண்டும் பெரிய அளவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற வாரம் அமெரிக்க வங்கிகளின் தரவரிசை குறைக்கப் பட்டதின் எதிரொலியாக இந்திய பங்குகள் பெருமளவு வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு விதிக்க விரும்பும் சந்தை கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்க பொது வங்கியின் வட்டி அதிகரிப்பு முயற்சி ஆகியவை உலக சந்தைகளில் பண போக்குவரத்தை பெருமளவு பாதிக்கும் என்றும் நம்பப் படுகிறது.

மேலும், இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு, பொருளாதார சீர்த்திருத்தங்களில் புதிய அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் லாப உயர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இனிமேல் புதிய முதலீடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தவிலை பணவீக்கம் எதிர்மறை பகுதிக்குச் (Negative Territory -1.61%) சென்றது நமது பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி என்றாலும் பணச்சுருக்க நிலை (Deflationary Environment) இந்தியாவில் ஏற்படாது என்று மத்திய வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், வர்த்தகர்கள் இப்போதைக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. ரூபாய் - டாலர் வர்த்தகத்தில் கவனம் வைப்பது நல்லது. நிபிட்டி மீண்டும் ஒருமுறை 4400 அளவுகளை (சென்செக்ஸ் 14725) உறுதியாக கடந்தால் மட்டுமே உயர்வை எதிர்பார்த்து வர்த்தகம் செய்யலாம். வங்கிப் பங்குகளின் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.

வரும் வாரத்திற்கான தொழிற்நுட்ப அறிகுறிகள்.

சென்செக்ஸ் - அரண்- 14,500, 14200 & 13,600
சென்செக்ஸ் - எதிர்ப்பு - 14,700 & 15,200

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, June 18, 2009

நாட்டாஆமை! தீர்ப்ப மாத்தி சொல்லு!


ஊர் பஞ்சாயத்து கூடி இருக்கிறது. ஒரே கூட்டமான கூட்டம். நாட்டாமை ஐயா என்ன தீர்ப்பு தரப் போறாருன்னு ஊரே காத்துக் கிடக்கு. அப்ப அங்க ஒரு ப்ளசர் கார் வருது. அதிலிருந்து ஒரு ஜட்ஜ் ஐயா இறங்கறாரு. என்ன இங்க கூட்டமின்னு அவரோட கார் டிரைவருகிட்ட கேட்கறார்.

டிரைவர் பதில் சொல்றாரு. "ஐயா! இங்க அண்ணன் தம்பி வழக்குக்கான ஒரு பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கு. இந்த வழக்குல நாட்டாமை என்ன தீர்ப்பு சொல்லப் போறாருன்னு, சுத்தி உள்ள பதினெட்டு பட்டி ஜனங்களும் காத்திருக்காங்க"

நகரத்தில் பல்வேறு சிக்கலான வழக்குகளை சந்தித்துள்ள அந்த ஜட்ஜ் ஐயாவுக்கு இது கொஞ்சம் வித்தியாசமா தெரியுது. '

'கிராமங்கள்ளதான் இந்தியா வாழுதுன்னு ரொம்ப பெரியவங்கள்லாம் சொல்லி இருக்காங்க. நாமும் கொஞ்ச நேரம் இங்க காத்திருந்து அப்படி என்ன தீர்ப்ப இந்த நாட்டாமை கொடுக்கறாரனு பாப்போம்" அப்படின்னு சொல்லிட்டு வழக்க கவனிக்க ஆரம்பிக்கிறாரு.

பக்கத்துல நிக்கிற ஒரு ஊர் பெரிசு சொல்லுது,

" வழக்கு கொஞ்சம் சிக்கல்தான் சாமி! அண்ணன் தம்பி ரெண்டு பேரு. அவங்க அப்பன் மேலே போயிட்டான். அவனோட சொத்துக்காக ரெண்டு பெரும் அடிச்சுக்கறாங்க. மத்த எல்லா சொத்தையும் முன்ன பின்ன பிரிச்சிக்கிட்ட இவங்களால ஒரே ஒரு சொத்த மட்டும் பிரிக்க முடியல"

" அப்படி என்னங்க அது பிரிக்க முடியாத சொத்து?" ஜட்ஜ் ஐயா கேட்கிறார்.

"அதுவா? அது ஒரு பெரிய கதைங்க. ஊருக்கு நடுவுல ஒரு பெரிய கிணறு இருக்கு. உப்புத் தண்ணி கூட கிடைக்காத இந்த ஊருக்கு வரம் தர சாமியா வந்த அந்த கிணத்துல தண்ணி வெல்லக் கட்டியா இனிக்குமுங்க!"

"அப்படியா! அப்புறம் என்ன பிரச்சினை இங்கே? யாருடைய நிலத்தில் கிணறு இருக்கிறதோ அவருக்கே அந்த கிணத்த கொடுத்து விட வேண்டியதுதானே? அந்த நிலப் பகுதியை யாருக்கு அவங்களோட அப்பா பங்கு பிரிச்சு கொடுத்திருக்கிறார்? "

" அட நீங்க வேற! அவங்கப்பாவுக்கே கிணத்து நிலம் சொந்தமில்ல! நிலம் ஊரு பஞ்சாயத்துக்கு சொந்தமானதுங்க"

"இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?"

"ஆமாங்க! நாட்டாமையும் அவங்கப்பாவும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க. அது படி, கிணத்த வெட்டி அதுல வர தண்ணிய ஊரு ஜனங்களுக்கு ஒரு குடம் நாலு ரூபான்னு விக்கலாம்னு இருக்காமுங்க! அந்த நாலு ரூபாயில ஒரு ரூபா பஞ்சாயத்து வரிங்க! "

"ஓ! அப்ப கிணத்த வெட்ட ரொம்ப செலவாயிடுச்சுங்களா"

"அதெல்லாம் தெரியாதுங்க. ஆனா கிணறு வெட்டறதுக்கு முன்னையே, வரப் போற தண்ணிக்கு வரின்னு குடும்பத்துக்கு இவ்வளவுன்னு எங்ககிட்டேயே வாங்கிட்டாங்க"

"எல்லாம் சரி! இப்ப அண்ணன் என்ன சொல்றாரு? தம்பி என்ன சொல்றாரு?"

"அண்ணனுக்கு கிணறு. ஆனா தம்பிக்கு அதுல கிடைக்கற தண்ணில ஒரு பங்க குடம் ரெண்டு ரூபாய்ன்னு கொடுக்கணும்னு அவங்க ஆத்தா சொல்லி இருக்கு. அப்படி கிணத்துல கிடச்ச தண்ணியதான், பாட்டில போட்டு விக்கிறன்னு தம்பி சொல்றாரு. ஆனா அவனுக்கு தண்ணிய நாலு ரூபாய்க்குத்தான் கொடுப்பேன்னு அண்ணன் சொல்றான். அதுதாங்க இப்ப பஞ்சாயத்துல வழக்குல இருக்கு"

"அது சரி. தம்பி தண்ணி பேக்டரி கட்டிட்டாரா?"

"இது வரைக்கும் இல்லைங்க! கூடிய சீக்கிரம் கட்டரமுன்னு சொல்லி அதுக்கும் நம்மகிட்டயே நிறைய காசு வாங்கி இருக்கராருங்க. நாங்களும் ஏதாச்சு நல்லதா நடந்து நாக்குல நல்ல தண்ணி படாதான்னு ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கிறமுங்க"

ஜட்ஜ் ஐயாவுக்கு ஆர்வம் ஜாஸ்தியாடிச்சு.

நாட்டாமை எழுந்திருக்கிறார். சொம்பை கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தீர்ப்பை வழங்குகிறார்.

"இந்த பஞ்சாயத்து இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படி ஒரு வழக்கு வந்ததில்லை. இந்த விசித்திரமான வழக்குக்கு நாட்டாமை என்ன தீர்ப்பை வழங்கப் போகிறார் என்று எல்லாரும் காத்திருப்பீர்கள்" .

"இப்பக் கொடுக்கறன்யா நான் தீர்ப்ப! அண்ணன்காரன் தம்பிக்கு கிணத்துத் தண்ணிய குடம் இரண்டு ரூபாய்க்கு கொடுக்கணும்"

தீர்ப்பை கேட்டவுடன், இதுதான்யா தீர்ப்புன்னு நிறைய எக்கோ கேக்குது. பெண்களெல்லாம் ஊவென்று குலவி சவுண்டு கொடுக்கிறார்கள்.

"அப்ப நமக்கெல்லாம் தண்ணி இல்லையா? வெறும் சொம்பு மட்டும்தானா?" என்று சில இளசுகளின் முனமுணக்கும் சத்தங்களை பெண்களின் குலவி சத்தம் அடக்கி விடுகிறது.

இதில் பின்பாட்டு வேறு. எஜமான் காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்கும் ஒரு கூட்டம். கண்ணு படப் போகுதையான்னு கவுண்டரையாவுக்கு சுத்திப் போடும் ஒரு கூட்டம். நாட்டாமை தீர்ப்பு சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்குமுன்னு தலையாட்டும் கூட்டம் ஒரு பக்கம்.

"எங்கயோ இடிக்குதே"ன்னு ஜட்ஜ் ஐயா புலம்பிக்கிட்டே போறாரு!

"ஒண்ணு நீங்க குள்ளமா இருக்கணும். இல்ல காரு பெரிசா இருக்கணும்னு" டிரைவர் நக்கல் பண்றாரு.

போற வழியில நாட்டாமைய பார்த்து ஒரு சந்தேகம் கேட்டுட்டுப் போகலாமின்னு அவர் வீட்டுக்கு வண்டிய விட சொல்றாரு ஜட்ஜ் ஐயா. என்ன பண்றது? அவரும் இதே மாதிரி ஒரு வழக்குக்கு கூடிய சீக்கிரம் தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கு.

நாட்டாமை வீட்டுல ஒரு அதிசியம். அண்ணன் தம்பி அவங்க ஆத்தா எல்லாம் ஒண்ணா குந்திக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க. நாட்டாமை அவங்களுக்கு தடபுடலா ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காரு. அங்க எந்த தண்ணின்னு வித்தியாசம் தெரியாம எல்லா தண்ணியும் கொட்டிக் கிடக்கு.

சொந்த ஊருல தண்ணிக்கு வழி இல்லாம, தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணு, கையில ஒண்ணுன்னு குடங்கள் அடுக்கி இடுக்கி வச்சுக்கிட்டு அடுத்த ஊருக்கு போய் குடிதண்ணிக்காக கையேந்த தயாரா அந்த ஊரு ஜனங்க அப்பாவியா போயிக்கிட்டு இருக்காங்க.

ஜட்ஜ் ஐயாவுக்கு ஏதோ ஒண்ணு புரிஞ்ச மாதிரி இருந்தது.

''ஊர் சொத்துல உக்காந்து சாப்பிடுற இவங்க பஞ்சாயத்துக்காகாவது ஒழுங்கா அந்த ஒரு ரூபா வரி கட்டுவாங்களா"ன்னு ஜட்ஜ் ஐயா தனக்குத் தானே முனக, " யார்ர்ராது? எங்கண்ணன வரியெல்லாம் கட்ட சொல்றது?" அப்படின்னு ஒரு அருவாள் குரல் எழ, ஜட்ஜ் ஐயா வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போகிறார்.

நன்றி.

Sunday, June 14, 2009

சோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்!


பல வாரங்களாக தொடரும் காளைப் பாய்ச்சல் சென்ற வாரம், லாப விற்பனை காரணமாக, கொஞ்சம் தடுமாறி உள்ளது. அதே சமயம், சந்தையில் அடிக்கடி நடைபெறும் அதிரடி மாற்றங்கள் கரடிகளையும் மிரளச் செய்துள்ளன. இப்படி எதிரணியில் உள்ள காளைகளும் கரடிகளும் அடுத்து செய்வதறியாது தயங்கி நிற்கும் நிலையில் வரும் வாரம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.

சென்ற வாரம் சந்தைகள் லாப விற்பனை காரணமாக, வீழ்ச்சியுடனேயே துவங்கின. ஏற்கனவே நாம் கூறியிருந்த படி நிபிட்டி 4500-4600 புள்ளிகளுக்கிடையே (லாப விற்பனை காரணமாக) கடுமையான எதிர்ப்பை சந்தித்து வந்தது. சரிதான், இதற்கு மேல் கரடிகள் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், இந்தியாவால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற பிரதமரின் பாராளுமன்ற பேச்சு சந்தையை தலைகீழாக மாற்றியது. மேலும் சத்யம் நிறுவனம் லாபம் சம்பாத்தித்தது மென்பொருள் பங்குகளை உயரத்தில் ஏற்றியது. அதே சமயம், உலக சந்தைகளின் நிலையில்லாத போக்கும், கச்சா எண்ணெயின் விலை உயர்வும் சந்தையை பெரிய அளவுக்கு முன்னேற விடாமல் செய்து விட்டன.

தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய தொழிற்துறை உற்பத்தி குறியீடு சென்ற மாதம் உயர்வு கண்டதாக வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்கள் சந்தைக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பங்கு வர்த்தகர்களின் லாப விற்பனைக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சென்ற வாரம் சிறிய மற்றும் மத்திய நிலை பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்தன.

மொத்தத்தில், மூன்று மாத காளை ஓட்டத்தின் வேகம் தடை பட்ட ஒரு வாரமாகவே சென்ற வாரம் அமைந்திருந்தது.

அதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்ந்து வரும் பங்கு சந்தை முதலீடு, கரடிகளை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுப்பதிலிருந்து தடுத்து வருகிறது.

அமெரிக்காவைப் பொருத்த வரை, பொருளாதார சரிவு ஒரு முடிவின் அருகே நெருங்கி விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், மீண்டும் அந்த நாடு ஒரு துரித வளர்ச்சியை சந்திக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தியாவைப் பொருத்த வரை, ஏற்கனவே இங்கு பல முறை சொன்னபடி, நீண்ட கால நோக்கில் பங்கு சந்தைகள் முதலீட்டுக்கு ஏற்றவை. ஆனால், பங்குகளின் தேர்வு சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.

குறுகிய கால நோக்கில், இப்போதைக்கு பங்கு குறியீடுகளின் அளவு ஒரு சமன் நிலையை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

சென்செக்ஸ் குறியீடு 15600 புள்ளிகள் அளவில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் என்று தோன்றுகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் தடையில்லா 14 வார ஓட்டத்தில் ஒரு வேகத்தடை வருவதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்படுகின்றன. மொத்தத்தில் வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.

சென்செக்ஸ் குறியீட்டுக்கான அடுத்த அரண் நிலைகள் 14500 மற்றும் 13500 புள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும். வாங்கும் நிலை எடுக்க விரும்புவர்கள், 15600 என்ற எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் வரை பொறுத்திருப்பது நல்லது.

ஒருவேளை சந்தை பெருமளவில் வீழ்ச்சி அடைந்தால், குறைந்த விலையில் ஊடகம் மற்றும் சிமெண்ட் துறை பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிப்பது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Saturday, June 13, 2009

குதிரையும் பறக்கும்!


நம்மில் பலருக்கு, வாழ்வின் பல தருணங்களில் ஒரு வித அவநம்பிக்கை தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக, சற்று கடினமான இலக்குகளுடன் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு, தம்மால் அந்த லட்சியத்தை வெற்றிகரமாக அடைய முடியுமா என்ற சந்தேகங்கள் அடிக்கடி உருவாகுகின்றன. இலக்கை அடைய செல்ல வேண்டிய தூரம், வழியிலுள்ள இடைஞ்சல்கள், அவற்றோடு போராடி நம்மால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் போன்றவை நம்முள் பல்வேறு மன சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் இருந்து விடுபட ஒரு தன்னம்பிக்கைக் கதை இங்கே!

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருக்கின்றான். ஒரு நாள், அவன் முன்னே ஒரு அண்டை நாட்டவன் கொண்டு வந்து நிறுத்தப் படுகின்றான். அவன் மீது உளவுக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றான். விசாரணை முடிந்த பின்னர் மரண தண்டனை விதிக்கின்றான் அரசன்.

மரண தண்டனை விதிக்கப் பட்ட பின்னரும், அந்த அண்டை நாட்டான் துளியும் கவலைப் பட வில்லை. தண்டனை கொடுத்தப் பின்னர் திரும்பி செல்லும் அரசனைப் பார்த்து, "அரசே! குதிரையை பறக்க வைக்கும் மந்திரம் எனக்கு தெரியும். ஒரு வருடம் அவகாசம் எனக்கு கொடுத்தால் உங்கள் பட்டத்துக் குதிரையை பறக்க வைத்துக் காட்டுகின்றேன்" என்று சவால் விடுகின்றான்.

ஒரு நிமிடம் யோசித்த மன்னன், அவனது தண்டனையை ஒரு வருடம் தள்ளிப் போடச் சொல்லி ஆணையிட்டு, கூறுகின்றான்.

"ஒரு வருடம் இவனுக்கு அவகாசம். ஒரு வருடம் கழித்து இவன் கூறியபடி குதிரை பறக்க வில்லையென்றால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இவன் தலையை துண்டித்து விடுங்கள்"

அன்றைய மட்டில், தலை தப்பித்த அந்த கைதியிடம் சக கைதி கேட்கின்றான், "எப்படி அவ்வளவு நம்பிக்கையாக கூறினாய்? உன்னால் நிஜமாலுமே ஒரு குதிரையை பறக்க வைக்க முடியுமா?"

அதற்கு இவன் அளித்த பதில், " எல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஒருவேளை, இந்த ஒரு வருடத்தில், எனது அரசன் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து என்னை மீட்கலாம், அல்லது இந்த ஒரு வருடத்தில் இந்த அரசன் நோய் வாய்ப் பட்டு தானாகவே இறந்து போகலாம், அல்லது இந்த குதிரையே கூட தன்னால் இறந்து போகலாம், அப்படி எதுவும் நடக்க வில்லையென்றாலும், ஒருவேளை எனது மந்திரத்தைக் கேட்டு கேட்டு இந்த குதிரை பறந்தாலும் பறக்கலாம். யாருக்குத் தெரியும்?"

எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்ற இந்த நம்பிக்கையை நாமும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கான இன்றைய தூரத்தை ஒழுங்காக கடப்பதில் மட்டும் கவனத்தை வைப்போம். வருங்காலத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் இன்றைய கடமையை கூட சரியாக செய்ய முடியாமல், நமது இலக்கு இன்னும் தள்ளிப் போய் விடலாம். மனச் சஞ்சலங்களால் வேறெந்த பயனும் இல்லை.

எனவே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அடைப் பட்டிருக்கும் நமது மனச் சிறகுகளை விடுவித்து வானில் பறக்க விடுங்கள்!

இன்றைக்கு மனச் சிறகுகள் உற்சாகமாக பறக்கட்டும்.

யாருக்குத் தெரியும்?

ஒருவேளை, நாளை குதிரை உண்மையாலுமே பறந்தாலும் பறக்கலாம்!

நன்றி.

Thursday, June 11, 2009

பயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி!


நவம்பர் மும்பை தாக்குதல் விவகாரத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதி கசாப். அவன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இப்போது மும்பையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அவன் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், அந்நிய நாட்டில் இருந்து வந்து நம் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு ஈடான குற்றங்கள் புரிந்திருந்தாலும், அவனை விசாரணை இன்றி தண்டிக்க நமது சட்டத்தில் இடமில்லை.

இயற்கை நீதி/நியாயங்களின் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து நமது முன்னோர்கள் இயற்றிய இந்திய சட்ட அமைப்பு, கொடுங்குற்றங்கள் புரிந்த கசாப்புக்கு கூட, தான் ஒரு நிரபராதி என்று நிருபித்து கொள்ள இப்போது ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கமே இவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளது. இந்த பெருந்தன்மையை தவறாக புரிந்து கொண்ட கசாப், நீதிமன்றத்தில் பல முறை அநாகரிமாக நடந்து கொண்டுள்ளான். இதை நீதிபதிகள் வன்மையாக கண்டித்த போதும், ஒரு வித திமிர் அல்லது அலட்சியத்துடனேயே நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்து வந்துள்ளான்.

போலீஸார் மற்றும் இதர சாட்சிகளின் விசாரணையின் போது கூட, ஒரு வித அலட்சிய சிரிப்புடனேயே பதில் தந்துள்ளான். இப்படிப் பட்டவனை நேற்றைய விசாரணையில் (மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்ட) ஒரு பத்து வயது சிறுமியும் அவளது தந்தையும் கசாப்பை தலை குனிய வைத்துள்ளனர்.

மும்பை ரயில் நிலையத்தில், கசாப் குண்டுகளால் பாதிக்கப் பட்டவர்களில் தேவிகா என்ற இந்த சிறுமியும் ஒருத்தி. காலில் பாய்ந்த கசாப்பின் துப்பாக்கி குண்டு அவளை நிரந்தரமாக ஊனமாக்கி விட்டது. அந்த சிறுமியினை சாட்சியாய் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அது பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று கசாப்பின் வழக்கறிஞரின் வாதிட்டதை மீறி, அவளது சாட்சியத்தை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

நடக்க முடியாமல் நடந்து வந்த அந்த சிறுமி இவனை சரியாக அடையாளம் காட்டினாள். அந்த சிறுமியை வெகுவாக குழப்ப முயன்ற கசாப் வழக்கறிஞரின் தந்திரங்கள் பலிக்க வில்லை. "பொய் சொன்னால் கடவுள் தண்டிப்பார்" என்றும் அந்த சிறுமி வழக்கறிஞருக்கு பதில் அளித்துள்ளாள்.

அந்த சிறுமி கசாப்பை நேரடியாக பார்த்து கை நீட்டிய போது, பொதுவாகவே அலட்சிய நோக்குடன் காணப் படும் கசாப் தலை குனிந்து, கைகளை பிசைய ஆரம்பித்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அந்த சிறுமி சாட்சியத்தை முடித்து வெளியே செல்லும் வரை அவன் தலை நிமிர வில்லை என்றும் கூறப் படுகிறது.

இது மட்டுமல்ல, மகளின் நிலையைப் பார்த்து மனம் உடைந்து போயுள்ள, அவளின் தந்தை "இந்த நாயமகன் எனது மகளின் காலை மட்டும் உடைக்க வில்லை. அவளது வாழ்க்கையையும் உடைத்து விட்டான். தயவு செய்து இவனை தூக்கில் இடுங்கள்" என்று ஆவேசமாக கதற, இந்த முறை கசாப் மட்டுமல்ல, அவனது வழக்கறிஞரும் தடுமாறி போய் விட்டாராம்.

தந்தையை சமாதான படுத்த முயன்ற நீதிபதியிடம், அவர் கூறினாராம், "அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்), இவனுக்கு தாய் தந்தை யாரும் இல்லையா?"

அரசு தரப்பு சாட்சிகள் எல்லாரையும் தனது குறுக்கு கேள்விகளால் மடக்கி தனது வக்கீல் கடமையை செவ்வனே செய்து வரும் வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மி, இந்த முறை இவரிடம் நேரடியாக எந்த கேள்வியும் கேட்க வில்லையாம்.

சட்டங்களாலும் சட்டக் காவலர்களாலும் செய்ய முடியாததை ஒரு சிறுமியும் அவளது தந்தையும் செய்து காட்டி இருக்கிறார்கள்.

சட்டமும் அதை நடைமுறை படுத்தும் அமைப்புக்களும் வலுவானவைதான்.

ஆனால் உண்மையும் நியாமும் அதை விட ரொம்ப வலிமையானவை

இவை எல்லாவற்றையும் விட அப்பாவி மக்களின் வேதனைக் கண்ணீர் மிகவும் பலமானது.

அதற்கு முன்னே எப்படிப் பட்ட முரட்டு தீவிரவாதியும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.

நன்றி.

Sunday, June 7, 2009

இப்போது என்ன செய்யலாம்?


சந்தையின் இப்போதைய அதிவேக முன்னேற்றம், முதலீட்டாளர்கள் பலருக்கும் தமது பழைய முதலீடுகள் எல்லாம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்று ஒரு பக்கம் சற்று சந்தோசத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் இந்த முன்னேற்றத்தில் சரிவர பங்கு கொள்ளாமல் போய் விட்டோமோ என்ற வருத்தத்தையும் கொடுத்திருக்கும்.

ஒரு சிலருக்கு இது வரை தவற விட்டதை இப்போது பிடிக்க வேண்டும் என்ற வேகம் கூட வந்திருக்கும். அவர்கள் முதலீடு செய்ய புதிய உத்வேகத்துடன் முன் வரும் போது, சந்தைகள் உச்சக் கட்டத்தை அடைந்து வீழ்ச்சி அடைய காத்துக் கொண்டு இருக்கும் என்பது சரித்திரம் சொல்லும் கசப்பான உண்மை.

சந்தை இது போன்ற முதலீட்டாளர்களின் மன உணர்வுகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது. சந்தை உயர்வை காணும் போது பதட்டமடைந்து முன்பின் யோசிக்காமல் முதலீடு செய்ய முன் வருவது. கீழே செல்லும் போது, பயத்தில் விற்று விடுவது அல்லது சந்தை பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொள்வது.

சமீபத்தில், பங்கு சந்தை நிபுணரான எனது நண்பர் ஒருவர், கடந்த சந்தை உச்சத்தின் போது அவரது மாமனார் தனது 77 ஆம் வயதில் நோய் வாய்ப் பட்ட நிலையில் கூட , பங்குகளில் பெருமளவில் முதலீடு செய்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பங்கு முதலீடுகள் என்பவை நீண்ட கால நோக்கம் கொண்டவை என்று நண்பர் அவரது மாமனாருக்கு பல முறை அறிவுறுத்தியும் அவர் பொருட்படுத்த வில்லை. அவர் அவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வது கடினம் என்று மறைமுகமாக உணர்த்திய போதும் கூட பங்கு சந்தை அவரை மிகவும் வசீகரித்து கவர்ந்திழுத்தது. அதிக காலம் உயிர் வாழ்வது கடினம் என்றிருக்கும் நபரைக் கூட தன்பக்கம் ஈர்க்கும் அளவுக்கு சந்தையின் கவர்ச்சி மிக வலிமையானது. . இப்போது சந்தைகள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்ட போது கூட அவரது முதலீடுகள் அதல பாதாள விலையில்தான் இருக்கின்றன. அவரது மாமனாரோ இப்போது ரொம்ப மேலே போய் விட்டார். ஒருவேளை தனது முதலீடுகள் படும் பாட்டை பார்க்க கூடாது என்றுதான் போய் விட்டாரோ என்னவோ?

எனவே, பங்கு சந்தையில் முதலீடு செய்ய முன் வருபவர்கள் ஆசை மற்றும் பயம் ஆகிய இரண்டு வலிய உந்துதல்களால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும். இது கடினமான காரியம்தான் என்றாலும் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த அடிப்படை விஷயத்தை முதலில் புரிந்து கொள்வது நல்லது.

இப்போது நமது தலைப்பு கேள்விக்கு வருவோம்.

இப்போதைய நிலையில் பங்கு சந்தைகள் (ஏற்கனவே) நல்ல வளர்ச்சியை கண்டு விட்டன. உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து இன்னும் சரிவர புரியாத நிலையில் குறுகிய கால அடிப்படையில் சந்தையின் போக்கினை கணிப்பது கடினம். அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவும் சரி இந்திய பங்கு சந்தையும் சரி நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவரது பங்கு சந்தை முதலீடுகள் நீண்ட கால நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கினை தவறான நேரத்தில் (உச்ச கட்டத்தில்) வாங்கினாலும் கூட நீண்ட கால அடிப்படையில் நல்ல வருவாயைத் தரும். அதே சமயம், சரி வர இயங்காத நிறுவனத்தின் பங்கினை எவ்வளவு குறைந்த விலையில் வாங்கினாலும் அதிக பயன் தராது.

எனவே பங்குகளை தேர்வு செய்வதில் அதிக கவனமாக இருங்கள். பரவலான சந்தை ஊகங்களை நம்பி எந்த முதலீடும் செய்யாதீர்கள். உங்களுடைய மூளையை மட்டும் நம்புங்கள். உண்மையில், பங்குகளை தேர்வு செய்ய பெரிய அளவில் பொருளாதார அறிவியல் ஒன்றும் தேவையில்லை. பார்வையை கொஞ்சம் அகல படுத்துதலுடன் சற்று புத்திக் கூர்மை மட்டும் இருந்தால் போதுமானது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறக் கூடிய துறையில் நல்ல அடிப்படைகள் அமைந்துள்ள நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

உதாரணமாக (உதாரணம் மட்டுமே! பரிந்துரை அல்ல) மின்சாரம் (NTPC) எரிவாயுத் துறை (GAIL) போன்ற துறைகளையும் பங்குகளையும் தேர்ந்தெடுங்கள்.

அந்த பங்குகளில், இடைவெளி விட்டு அவ்வப்போது, வேறுபட்ட விலைகளில் முதலீடு செய்யுங்கள். நிச்சயம் நீண்டகால நோக்கில் நல்ல பலன் காண்பீர்கள். குறுகிய கால சந்தை மாற்றங்கள் பற்றி கவலைப் பட தேவையிருக்காது.

நன்றி.

Friday, June 5, 2009

அய்! இது கூட நல்லா இருக்கே?


சிறிய வயதில் பலரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுவது உண்டு. 'போலீஸ்' சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ள, 'திருடர்கள்' அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஒரு "கவுண்ட் டவுனுக்கு" பிறகு "வரட்டா வரட்டா என்று பல முறை கேட்ட பிறகு, இந்த 'போலீஸ்' அந்த திருடர்களை தேட ஆரம்பிப்பார்.

இந்த கலி காலத்தில் நிஜ போலீஸ்-திருடர்கள் கூட இப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது.

இன்று படித்த ஒரு செய்தி எனக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தது.

செய்தி இதுதான்.

"மீண்டுமொருமுறை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது."

"இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காக (முக்கியமாக தீவிரவாத குற்றங்கள்) சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட பாகிஸ்தானியர்கள் முப்பது பேரை காண வில்லை. இவர்கள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்று அரசுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களை இந்திய போலீஸ் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்"

எனக்கு வந்த சந்தேகங்கள் சில.

இவர்களை ஏன் வலை வீசி கஷ்டப் பட்டு தேட வேண்டும்? சிறையில் இருந்து விடுவிக்கும் போதே எளிதாக பிடித்திருக்கலாமே?

அப்படி ஒருவேளை, இவர்களால் தீவிரவாத தாக்குதல் நடத்தப் படும் என்ற சந்தேகம் இருந்தால் ஏன் இவர்களை விடுவிக்க வேண்டும்? விடுவிக்காமலே இருந்திருக்கலாமே?

அப்படி விடுவித்தாலும், அவர்களை ஏன் இந்தியாவில் வைத்து விடுதலை செய்ய வேண்டும்? ஏன் அவர்களை நேரடியாக பாகிஸ்தானில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது?

ஒரு வேளை, இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியை பாகிஸ்தானில் விடுவித்ததற்கு கூச்சல் போடும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

நம் வீட்டை முதலில் ஒழுங்குப் படுத்துங்கள்! அப்புறம் அடுத்தவருக்கு அறிவுரை செய்யுங்கள்!

சிறிய வயதில் எனக்கு பெரியவர்கள் கொடுத்த அறிவுரை இது!

"பார்த்து விளையாடு! ஓவர் விளையாட்டு வினையாகி விடப் போகிறது"

அதே அறிவுரையை முக்கியப் பொறுப்பிலுள்ள ரொம்ப ரொம்ப பெரியவர்களுக்கு இந்த சிறியவன் கொடுக்க விரும்புகிறேன்.

நன்றி.

Monday, June 1, 2009

நிழலா நிஜமா!


சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன் அலுவலக அரசியல் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் ஒருவர் கூறிய கருத்தினை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

''அதாவது, தனது நண்பனை மட்டுமே ஒருவரால் ஏமாற்ற முடியும். மற்றவர்களை ஏமாற்ற முடியாது. காரணம் நண்பன் மட்டுமே ஏமாற்றப் படும் அளவுக்கு இடம் கொடுப்பான். மற்றவர்களுடன் முயற்சி செய்தாலும் ஏமாற்றும் அளவுக்கு நெருங்க முடியாது. அப்படியே ஒரு தடவை ஏமாற்றி விட்டாலும் இரண்டாவது தடவை நம் பக்கமே திரும்ப மாட்டான். நண்பன் மட்டுமே ஏமாந்தாலும் (நண்பனாக தொடரும் வரை) திரும்ப திரும்ப வந்து மீண்டும் ஏமாந்து போவான். ஒரே விஷயம், ஏமாற்றப் படுகிறோம் என்ற விஷயம் அவனுக்கு புரியக் கூடாது.

இந்த ஏமாற்றுதல் ஏமாறுதல் எல்லாம் பெரிய விஷயங்களுக்கு மட்டுமல்ல ஓசி சிகரெட், டீ காப்பி டிபன், சினிமா போன்ற சின்னச் சின்னச் விஷயங்களுக்கும் பொருந்தும். ''

இப்படி தனது நண்பனையே ஏமாற்றுவது தப்பல்லவா என்று வினவியதற்கு அவர் நண்பர் அளித்த புதியதொரு விளக்கம்.

"உனது நண்பனை ஏமாற்ற விருப்பமில்லையென்றால் நீ ஏமாற்ற விரும்புவனை உனது நண்பனாக்கிக் கொள். அப்புறம் அவனை ஏமாற்று. எந்த சிக்கலும் இருக்காது!"

என்னவொரு அருமையான விளக்கம்? "நமக்கு நல்லதென்றால் எதுவுமே தப்பில்லை" என்று இந்த புதிய நாயகனின் விளக்கமல்லவா இது?

இன்று மீண்டும் அலுவலகம் செல்லும் வரை எனக்கு இந்த விஷயம் மிகவும் குழப்பமானதாகவே இருந்தது. எப்படி ஒருவரை ஏமாற்ற முடியும்? ரொம்ப கஷ்டமான சமாச்சாரமாயிற்றே அது? அதுவும் எப்படி ஒருவரை நம்ப வைத்து நண்பராக்கி ஏமாற்ற முடியும்? இதெல்லாம் ரூம் போட்டு தனியா யோசிக்க வேண்டிய விஷயமோ? ரொம்ப யோசித்து அதற்குள் நமக்கு ரொம்ப வயசாகி விடுமோ? அல்லது நம்மை விட அதிக புத்திசாலியாக இருந்து நாம் ஏமாற்ற விரும்புவர் நம்மையே குனிய வைத்து கும்மி விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று என்னுடன் பேச வந்தவர்களையெல்லாம் ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். நம்முடன் வலிய வந்து பழக வரும் இவரின் நோக்கங்கள் என்னவாக இருக்கும்? ஒருவேளை நமக்கு முன்னரே இந்த கருத்தை இவர் கற்றுக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது? ஏற்கனவே இவர் நம்மை ஏதேனும் ஒரு வகையில் ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறாரா என்றெல்லாம் என் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த சிந்தனைகளுக்கு இடையே எனக்கு இதுவரை ஒரு பெரிய புதிராக இருந்த ஒரு பொருளாதார நுணுக்கத்தை ஆய்வு செய்யும் வேலை வந்தது. கடுமையான முயற்சிக்கு பின்னர், முழுக் கவனத்தையும் செலுத்தியதில், அந்த புதிர் அவிழ, எனக்கு திருப்தி வரும் அளவுக்கு ஒரு அறிக்கையை தயார் செய்து முடித்தேன். ரொம்ப நாள் புதிராக இருந்த ஒரு விஷயம் இன்று புரிந்த பிறகு, எனது தொழில் ரீதியாக, ஒருபடி உயர்ந்தது போல ஒரு சந்தோச உணர்வு வந்தது.

அப்போது மீண்டுமொருமுறை "ஏமாற்றும் கலை" ஞாபகத்திற்கு வந்தது. அப்போது எனக்கு தோன்றிய ஒரு கருத்து.

நமக்கு தெரிந்த வேலையை மட்டும் செய்வோம். அதையும் முடிந்த வரை சிறப்பாக செய்வோம். செய்யும் தொழிலில் ஒரு "வேலைக்காரனாக" மாறுவோம். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக முன்னேறலாம். "கனியிருக்க காய் கவந்தற்று" என்று நமது திருவள்ளுவர் சொன்ன அன்றைய கருத்து இன்று மட்டுமல்ல, என்றும் நிற்கும்.

நிழலை பிடிக்க ஓடிப் போய், நிஜத்தை தவற விட்டு விட வேண்டாம்.

நன்றி.
Blog Widget by LinkWithin