
பிறப்பிடம்
பிறப்பிலேயே இவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உள்ளது. இருவருமே இந்நாள் பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர்கள். மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பிறந்தவர். எல்.கே.அத்வானியோ பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பிறந்தவர்.
வயது
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. அத்வானி பிறந்தது 1927 இல். வயது இப்போது 81. மன்மோகன் சிங் பிறந்தது 1932 இல். வயது இப்போது 76. இருவரில் மன்மோகன் சிங்தான் இளையவர் என்றாலும், பயிற்சிக் கூடம் சென்று புஜ பலம் எல்லாம் காட்டி அதிக ஆரோக்கியமாக பார்வைக்கு தென்படுபவர் அத்வானிதான்.
இனம்
இருவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது கூட ஆச்சரியப் படக் கூடிய ஒரு ஒற்றுமை. அத்வானி 'சிந்தி' இனத்தைச் சேர்ந்தவர். மன்மோகன் சிங் 'சீக்கியர்' இனத்தைச் சேர்ந்தவர்.
படிப்பு தகுதிகள்
படிப்பு விஷயத்தில், மன்மோகன் சிங் அனைத்து இந்திய அரசியல் தலைவர்களியே முதலிடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய பட்டங்கள் அவர் பெயரை விட ரொம்பவே நீளமானவை. பி ஏவில் தொடங்கி புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பல டாக்டர் பட்டங்கள் பெற்று இருக்கிறார். எல்கே அத்வானி படித்தது பாம்பே பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு
ஆரம்ப கால தொழில் அனுபவங்கள்
மன்மோகன் சிங் - இவரது தொழில் அனுபவம் மிகவும் நீண்டது. ஐக்கிய நாடுகள் சபை, டெல்லி பல்கலைக் கழகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம், இந்திய மத்திய வங்கியின் தலைவர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளில் இடம் பிடித்திருக்கிறார்.
எல்கே அத்வானி - ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர், வழக்கறிஞர்.
அரசியல் பிரவேசம் மற்றும் அடைந்த பதவிகள்
மன்மோகன் சிங்கை அரசியலுக்குள் கொண்டுவந்தது முன்னாள் பிரதமர், நரசிம்ம ராவ் அவர்கள். மக்களவை தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையிலேயே நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 2004 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பலரும் எதிர்பாரா வண்ணம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.
தனது இளமை காலத்தில் இருந்தே அரசியலில் உள்ள அத்வானி அவர்கள் மொராஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்தார். 1996 தேர்தலுக்குப் பின்னர் 13 நாட்கள் மந்திரி சபையில் உள்நாட்டு துறை அமைச்சராக இருந்தார். 1998 க்கு பின்னர் 2004 வரை உள்நாட்டு அமைச்சராக நீடித்தார். இதில் இரண்டு வருடங்கள் துணை பிரதமர் பொறுப்பினையும் வகித்தார்.
அரசியல் அனுபவம் அத்வானி அவர்களுக்கு மிகவும் அதிகம்.
சாதனைகள் மற்றும் வேதனைகள்
பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என்றே அறியப் படுபவர் மன்மோகன் சிங். இந்திய சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக பொருளாதார வளர்ச்சி இந்தியா கண்டதற்கும் உலகின் இரண்டாவது வேகமாக வளரும் நாடு இந்தியா என்ற பெருமை பெற்றதற்கும் இவர் ஒரு முக்கிய காரணம். அதே சமயம் இவருக்கு மேலை நாட்டு தாக்கம் அதிகம் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் குறிப்பாக அதன் முன்னாள் அதிபர் புஷ் உடன் அளவுக்கு அதிகமாகவே நெருக்கம் காட்டியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. அணு ஒப்பந்தம் ஒரு சாதனைதான் என்றாலும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற நடந்ததாக சொல்லப் படும் பண பேரங்கள் இவர் மதிப்பை குறைத்தன. உறுதியில்லாத தலைமைப் பண்பு மற்றும் சோனியா காந்தியின் சொற்படியே நடந்து கொண்ட தன்மை ஆகியவை இவருக்கு பாதகமான விஷயங்களாக கருதப் படுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற கணக்கில்லாத குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், பங்கு சந்தை மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் ஆகியவை இவர் மீது படிந்துள்ள களங்கங்கள் ஆகும்.
சர்தார் வல்லபாய் படேல் போல உறுதியான ஒரு மனிதராக அறியப் படுபவர் எல்.கே அத்வானி. பல்வேறு யாத்திரைகள் நடத்தி (மக்களுக்கு ஓரளவுக்கு சிரமம் கொடுத்தாலும்) கட்சியை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. வாஜ்பாய் அரசில் மிக முக்கிய பங்கினை இவர் வகித்து வந்தார். கூட்டணி பிரச்சினைகளால் தள்ளாடும் பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் இவரே. பிஜேபி கட்சி ஓட்டுக்கு இவரது பிரச்சாரத்தையே இன்னமும் அதிகம் நம்பியுள்ளது. அதே சமயம் வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருந்தாலும், பதவிக்கு வந்த பின்னர் கொள்கைகளில் இவர் கொஞ்சம் தடுமாறி விட்டார் என்றே சொல்லே வேண்டும். பாகிஸ்தானில் ஜின்னாவைப் பற்றி புகழ்ந்து பேசியது ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் இவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கியது. இவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல், விமான கடத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் விடுதலை, குஜராத் படுகொலை ஆகியவை இவர் மீது படிந்த களங்கங்கள் ஆகும். மன்மோகன் சிங் போல அல்லாது தனித்து முடிவெடுக்கும் தன்மை மற்றும் கட்சி மீது உள்ள (ஓரளவுக்காவது) அதிகாரம் போன்றவை இவரின் பலங்கள் ஆகும்.
இப்போது இந்த பயோடேட்டாக்கள் மக்கள் முன்னர் சமர்ப்பிக்கப் படுகின்றன. யாருக்கு (பிரதமர்) வேலை கொடுக்க வேண்டியது என்று தீர்மானிப்பது இந்த நாட்டின் உரிமையாளர்களான மக்கள் பொறுப்பு.
நன்றி.
18 comments:
அத்வானி பிறந்தது 1927 இல். வயது இப்போது 81 .நம்ப முடியவில்லை கண்ணை நம்ப முடியவில்லை
நாம எங்க தேர்வு செய்யுரோம் எல்லம் நம்ம மாநில கட்சிகள் தான முடிவு செய்யுராங்க.
பிரதமர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுபவராக இருந்தா நல்லாருக்கும்.
அன்புள்ள டக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//அத்வானி பிறந்தது 1927 இல். வயது இப்போது 81 .நம்ப முடியவில்லை கண்ணை நம்ப முடியவில்லை//
உண்மைதான். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பான செயல்பாடு நம்மைப் போன்ற இளைஞர்களை வெட்கப் பட வைக்கிறது.
அவர் இன்னும் பல காலம் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டிக் கொள்வோம்.
நன்றி.
நன்றி கார்த்திக்
//நாம எங்க தேர்வு செய்யுரோம் எல்லம் நம்ம மாநில கட்சிகள் தான முடிவு செய்யுராங்க.//
மாநில கட்சிகள நாமதானே முடிவு செய்யறோம்?
//பிரதமர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுபவராக இருந்தா நல்லாருக்கும்//
அமெரிக்காவைப் போல நேரடி தேர்ந்தெடுப்பு முறை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அந்த முறையில் சில குறைபாடுகள் இருந்ததால்தான், நம் முன்னோர்கள் இந்தியாவில் இப்போதிருக்கும் முறையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதே சமயம், அமெரிக்க முறையை இப்போது மீண்டும் ஒரு முறை பரிசீலிப்பதில் தவறொன்றுமில்லை.
நன்றி.
இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சி தான் என்ற நிலையில் எந்த பிரதமரும் விட்டு கொடுத்து காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான நேரங்களில் சுய சிந்தனையை உபயோகப்படுத்தும் பிரதமராக யார் வந்தாலும் சரிதான்.பரமபத விளையாட்டு போல் தான் இன்றைய அரசியல் . ஆனால் எந்த அரசியல்வாதியை பாம்பு கடித்தாலும் விஷம் ஏறுவது என்னவோ மக்களுக்கு தான்.
மன்மோகன் சிங் ஒரு முறை கூட மக்களவைத் தேர்தலில் நின்றதில்லை.
அவர் பார்லிமெண்டில் நுழைந்தது மானிலங்கள் அவை (ராஜிய சபா) மூலமே.
ஆத்வானி அப்படியல்ல. ஒவ்வொறு முறையும் லோக் சபா தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்.
நல்ல ஆராய்ச்சி..
அவர்களது தனிப்பட்ட தகுதிகள் ஒப்பீட்டில் சிங் கொஞ்சம் தகுதியானவராக தெரிந்தாலும், அவரால் இந்தியாவில் நடந்த சாதனைகளை விட சோதனைகளே அதிகம்.
நான் மத எதிர்ப்பாளனாக இருந்தாலும் பீ.ஜே.பீ ஆட்சியில் ஊழல் குறைவு என்பது என் கருத்து மேலும் கார்க்கில் மற்றும் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் இந்தியாவின் காலரை தூக்கிவிட செய்தது பி.ஜே.பி.
மும்பை தாக்குதலில் இன்னும் மாவரைத்து கொண்டிருக்கும் காங்கிரஸ், நாட்டை யாருக்காவது அடமானம் வைத்து விடுவார்களோ என பயப்படுகிறேன்.
அமெரிக்காவுடன் நடந்த ஒப்பந்தம் எதாவது ஒருவகையில் உங்களுக்கு சாதனையாக தோணலாம், ஆனால் அதில் அவர்கள் காட்டிய வேகத்தை நாட்டின் பாதுகாப்புக்கு காட்ட மறந்தது ஏனோ?
இதெற்கெல்லாம் யாரும் பெட்டி தரமாட்டார்கள் என்பதாலா?
நன்றி பொதுஜனம்
//இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சி தான் என்ற நிலையில் எந்த பிரதமரும் விட்டு கொடுத்து காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.//
உண்மைதான். இதனால் பிரதமர் தனது தனித் தன்மையை விட்டுக் கொடுத்தே ஆட்சி நடத்த வேண்டியிருக்கிறது.
//பரமபத விளையாட்டு போல் தான் இன்றைய அரசியல் . ஆனால் எந்த அரசியல்வாதியை பாம்பு கடித்தாலும் விஷம் ஏறுவது என்னவோ மக்களுக்கு தான்.//
சரியாக சொன்னீர்கள். சமயங்களில் அரசியல்வாதிகளை பாம்பு கடித்தால் பாம்பே இறந்து விடும்.
நன்றி.
அன்புள்ள வஜ்ரா
கருத்துரைக்கு நன்றி
//மன்மோகன் சிங் ஒரு முறை கூட மக்களவைத் தேர்தலில் நின்றதில்லை.
அவர் பார்லிமெண்டில் நுழைந்தது மானிலங்கள் அவை (ராஜிய சபா) மூலமே.
ஆத்வானி அப்படியல்ல. ஒவ்வொறு முறையும் லோக் சபா தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்.//
உண்மைதான். பிரதமர் என்பவர் மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப் படுவதுதான் அதிக பொருத்தமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அத்வானி ஒரு மக்கள் தலைவராக அறியப் படுபவர். மன்மோகன் சிங் அவர்களோ ஒரு பொருளாதாரவாதியாகவே அதிகம் அறியப் படுகிறார். அரசியல் தலைவர் வேண்டுமா அல்லது செயல் (பொருளாதார) தலைவர் வேண்டுமா என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
நன்றி.
அன்புள்ள வால்பையன்
கருத்துரைக்கு நன்றி.
//அவர்களது தனிப்பட்ட தகுதிகள் ஒப்பீட்டில் சிங் கொஞ்சம் தகுதியானவராக தெரிந்தாலும், அவரால் இந்தியாவில் நடந்த சாதனைகளை விட சோதனைகளே அதிகம்.//
//நான் மத எதிர்ப்பாளனாக இருந்தாலும் பீ.ஜே.பீ ஆட்சியில் ஊழல் குறைவு என்பது என் கருத்து மேலும் கார்க்கில் மற்றும் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் இந்தியாவின் காலரை தூக்கிவிட செய்தது பி.ஜே.பி.//
ஊழல் என்பது இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லும் விஷம். இதில் கட்சி பேதம் பார்க்க வேண்டியதில்லை. அடுத்த ஆட்சி பிஜெபியுடதாக இருந்தாலும், அந்த ஆட்சி இன்றைய ஆட்சியை விட அதிக ஊழல் கொண்டதாகவே இருக்கும். அதே போல மத விஷயத்திலும் எந்த ஒரு கட்சி பேதமும் பார்க்க வேண்டியதில்லை. எந்த கட்சியும் எந்த மதத்திற்கும் உண்மையான காவலனுமில்லை. அதே போல உண்மையான மதச்சார்பற்ற கட்சியும் எதுவும் இல்லை.
கார்கில் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை. அதில் இந்தியாவிற்கு (உயிர்) இழப்பே அதிகம்.
போக்ரான் முன் யோசனை இல்லாமல் அவதிப் பட்ட கதைதான். கணினி முறையில் சோதனை செய்ய பல்வேறு வழிகள் இருக்கும் போது நிஜமான அணு குண்டு வெடிப்பு சோதனை எந்த அளவுக்கு இந்தியாவிற்கு பயன் தந்தது என்று தெரிய வில்லை. உலக அரங்கில் பாகிஸ்தானும் ஒரு அணு வல்லரசு நாடாக அங்கீகரிக்கப் பட்டதே போக்ரான் சோதனையின் மிகப் பெரிய பலன். மேலும் உலக நாடுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஆளாகி, அணு மின் சக்தி உற்பத்தி கிட்டத்தட்ட இந்தியாவில் நின்று போனதும் ஒரு தனி சோகக் கதை.
//மும்பை தாக்குதலில் இன்னும் மாவரைத்து கொண்டிருக்கும் காங்கிரஸ், நாட்டை யாருக்காவது அடமானம் வைத்து விடுவார்களோ என பயப்படுகிறேன்.//
இந்த விஷயத்தில் காங்கிரஸ் (ஷிவ்ராஜ் பாட்டில்) விட்டது பெரிய கோட்டைதான். மக்கள் மிக அதிக கோபத்தில் இருக்கிறார்கள்.
//அமெரிக்காவுடன் நடந்த ஒப்பந்தம் எதாவது ஒருவகையில் உங்களுக்கு சாதனையாக தோணலாம், //
இதில் சில நல்ல அம்சங்களும் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான மின் சக்தி உற்பத்திக்கு ஓரளவுக்கு (கவனிக்கவும், ஓரளவுக்கு மட்டும்) இந்த ஒப்பந்தம் துணை செய்யும்.
//ஆனால் அதில் அவர்கள் காட்டிய வேகத்தை நாட்டின் பாதுகாப்புக்கு காட்ட மறந்தது ஏனோ?
இதெற்கெல்லாம் யாரும் பெட்டி தரமாட்டார்கள் என்பதாலா?//
நியாயமான கேள்விதான்.
நன்றி.
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ் நெஞ்சம்
சில பல வேற்றுமைகள் இருந்தாலும், ஒரு முக்கிய விஷயமாக எனக்குப் படுவது, வாஜ்பாயின் தலைமை தாங்கிய பிஜேபி யைப் போல், அத்வானி தலைமையில் இருக்குமா என தெரியவில்லை...
அத்வானி தலைமையில், உறுதித் தன்மை பல இருந்தாலும், அவரது பல செயல்கள் மதவாதத்தை தூண்டுபவனாகவே இருக்கின்றன
எல்லா கட்சிகளும் மதவாத கட்சியாகவே இருந்தாலும், மற்றவை மதவாதப் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பவை, பாஜக வோ தூண்டி விடுபவை...
அதைவிட ஆபத்து, அது ஒன்றும் தவறான செயலல்ல என்ற பிரமையை மக்கள் மனதில் புகுத்துவது (குஜராத் சிறந்த உதாரணம்....
பாஜக விற்கு சற்றும் குறைவில்லாத வகையில் நேரு குடும்பத்து கட்சியின் (பின்ன இதை காங்கிரஸ் கட்சின்னா சொல்றது?) செயல்பாடு பல விஷயங்களில் பலத்த கோபத்தை ஏற்படுத்துகிறது.
மன்மோகனை சற்று சுதந்திரமாக செயல்பட விட்டால் கூட ஆட்சி நல்லாயிருக்கும் என்றே தோன்றுகிறது, ஆனால், சோனியாவின் தலையீடும், அவரது கால்களில் விழுந்தே அரசியல் நடத்தும் தலைவர்களும் இருக்கும் வரை அது நடக்கப் போவதில்லை...
மொத்ததில், அவர்கள் நன்றாகத்தான் இருப்பர்கள், ஆனா நாடு ?????????????????
அன்புள்ள நரேஷ்
கருத்துரைக்கு நன்றி
//சில பல வேற்றுமைகள் இருந்தாலும், ஒரு முக்கிய விஷயமாக எனக்குப் படுவது, வாஜ்பாயின் தலைமை தாங்கிய பிஜேபி யைப் போல், அத்வானி தலைமையில் இருக்குமா என தெரியவில்லை...//
உண்மைதான். பலராலும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் வாஜ்பாயீ தலைமை இருந்தது. அதே போல அத்வானி தலைமை இருக்குமா என்பது சந்தேகம்தான்.
//அத்வானி தலைமையில், உறுதித் தன்மை பல இருந்தாலும், அவரது பல செயல்கள் மதவாதத்தை தூண்டுபவனாகவே இருக்கின்றன//
இருந்தன என்று சொல்லலாம். இப்போது குறைவு. அவர் கொஞ்சம் மாறி இருக்கிறார்.
//எல்லா கட்சிகளும் மதவாத கட்சியாகவே இருந்தாலும், மற்றவை மதவாதப் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பவை, பாஜக வோ தூண்டி விடுபவை...//
வேடிக்கை பார்ப்பது கூட ஒரு வகையில் தூண்டி விடுவதுதான். உதாரணங்கள், பாபரி மஸ்ஜித் இடிபடுவதை வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் அரசு. தமிழர்கள் மீது கன்னட வெறியர்கள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த பங்காரப்பா மற்றும் எஸ் எம் கிருஷ்ணா அரசுகள். சமீபத்தில் வட இந்தியர்கள் மீது வெறி தாக்குதல் நடத்திய ராஜ் தாக்ரே கட்சியினரை வேடிக்கை பார்த்த விலாஸ்ராவ் தேஷ்முக் அரசு. இந்த அரசுகள் அனைத்தும் காங்கிரஸ் அரசுகள்தான் என்பது மக்களுக்கு காங்கிரஸ் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.
//அதைவிட ஆபத்து, அது ஒன்றும் தவறான செயலல்ல என்ற பிரமையை மக்கள் மனதில் புகுத்துவது (குஜராத் சிறந்த உதாரணம்....//
உண்மைதான். குஜராத் சம்பவங்கள் இந்தியா மீது விழுந்து விட்ட தீராத களங்கம்.
//பாஜக விற்கு சற்றும் குறைவில்லாத வகையில் நேரு குடும்பத்து கட்சியின் (பின்ன இதை காங்கிரஸ் கட்சின்னா சொல்றது?) செயல்பாடு பல விஷயங்களில் பலத்த கோபத்தை ஏற்படுத்துகிறது. //
உண்மைதான். உதாரணமாக, மக்களவை தேர்தலில் தோல்வி பெற்ற ஷிவ்ராஜ் பாட்டிலை குடும்ப விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக அமைச்சராக்கியது தேச பாதுகாப்பையே பலவீனம் ஆக்கியது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்தால் போதும், மக்கள் விசுவாசம் தேவையில்லை என்று ஒரு பழம்பெரும் கட்சி மாறிப் போனது இந்த நாட்டிற்கே ஒரு பெரிய சாபக் கேடு.
//மன்மோகனை சற்று சுதந்திரமாக செயல்பட விட்டால் கூட ஆட்சி நல்லாயிருக்கும் என்றே தோன்றுகிறது, ஆனால், சோனியாவின் தலையீடும், அவரது கால்களில் விழுந்தே அரசியல் நடத்தும் தலைவர்களும் இருக்கும் வரை அது நடக்கப் போவதில்லை...//
அவரை முழுக்க முழுக்க சுதந்திரமாக செயல் பட அனுமதிக்க அவரொன்றும் நேரடி மக்கள் தலைவர் அல்லவே. அதே சமயம் அவருக்கு ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தை அளித்து அதற்குள்ளாவது சுதந்திரமாக செயல் பட அனுமதிக்க வேண்டும்.
//மொத்ததில், அவர்கள் நன்றாகத்தான் இருப்பர்கள், ஆனா நாடு ?????????????????//
கவலைப் படாதீர்கள். அன்னியரின் ஆட்சியையே தாக்குப் பிடித்த நாடு இது. ஒரு விடிவு காலம் சீக்கிரமே பிறக்கும்.
நன்றி.
Hi.. I translated one of your post from
http://justtoshare-maximumindia.blogspot.com/2009/01/how-to-impress.html
thanks
அன்புள்ள தமிழ்நெஞ்சம்
//Hi.. I translated one of your post from
http://justtoshare-maximumindia.blogspot.com/2009/01/how-to-impress.ஹ்த்ம்ல்//
பார்த்தேன். மிக அழகாகவே மொழிமாற்றம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
நான் ஓட்டுப் போட்டது, இந்த அழகான கட்டுரை எழுதிய உங்களுக்கு :)
சிரிப்பு ஒரு பக்கம் இருக்க, இதே போல், பிரதமர் பதவிக்கு, குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால், தகுதியானவர் யார்? ஜெ.? மா.? க.?
சத்தியமூர்த்தி
அன்புள்ள சத்யமூர்த்தி
//நான் ஓட்டுப் போட்டது, இந்த அழகான கட்டுரை எழுதிய உங்களுக்கு :)//
நன்றி. நன்றி.
//சிரிப்பு ஒரு பக்கம் இருக்க, இதே போல், பிரதமர் பதவிக்கு, குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால், தகுதியானவர் யார்? ஜெ.? மா.? க.?//
மூன்றாவது அணிக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், தகுதி அடிப்படையில் என் கண் முன் ஜெயாதான் முதலில் வருகிறார். காரணம், கலைஞர் இருப்பது காங்கிரஸ் அணியில். அங்கு மன்மோகன் சிங்தான் பிரதமர் வேட்பாளர். மன்மோகன் சிங் பொருளாதார ஆலோசகர் ஆக இருப்பதற்கு அதிகம் தகுதி வாய்ந்தவர். மாயாவதி, தேவ கௌடா மீது மிக அதிக அளவில் ஊழல் கறை படிந்து உள்ளது. சரத் பவாருக்கு கிரிக்கெட்டை கவனித்துக் கொள்ளவே நேரம் போதாது. ஜெயா மீதும் ஓரளவு ஊழல் கறை உள்ளது என்றாலும், விருப்பு வெறுப்பு அதிகம் இல்லாமல் கண்டிப்பாக நடக்கக் கூடியவர், தீவிரவாதத்தை வேரறுக்கும் மனவல்லமை கொண்டவர் என்ற முறையில் ஜெயாவுக்குத்தான் முதல் வாய்ப்பு கிடைக்க வேண்டும். (தமிழன் என்ற முறையில் இனப் பாசமும் கொஞ்சம் உள்ளது)
நன்றி.
Post a Comment