
மும்பையின் பூகோள அமைப்பு சற்று விசித்திரமானது. நீளமாக வால் போன்று நீண்டு கிடக்கும் இந்த 'ஏழு தீவுகளால் ஆன நகரத்தில்' முக்கிய அலுவலகங்கள் யாவும் நகரத்தின் தென் கோடியில் அமைந்திருக்க, விண்ணளவு உயர்ந்த குடியிருப்பு வாடகைகள்/ விலைகள் இங்கு பணிக்கு செல்வோரை வட கோடிக்கு தள்ளி விட்டன. இதனால் காலையில் பெரும்பாலான மக்களின் பயணம் தெற்கு நோக்கி. மாலையில் அப்படியே நேரெதிரில். சாலைப் பயணம் என்பது போக்குவரத்து நெருக்கடியால் மிகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள, பல லட்சம் வருமானம் பெறுவோர் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை பயண நேரத்தை மிச்சப் படுத்த லோக்கல் ரயில் வசதியினையே நாடுகின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அறுபது லட்சம் பேர் மும்பை லோக்கல் வண்டிகளில் பயணிக்கின்றனர். விளைவு, இரண்டு மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் வண்டி இருந்தாலும் கட்டுகடங்காத கூட்டம். ரயில் வண்டிகளும் ரயில் நிலையங்களும் மூச்சு திணறுவதை நாம் நேரடியாக பார்க்க முடியும்.
மும்பைக்கு புதிதாக வரும் பலரும் ரயில் விஷயத்தில் முதலில் படு எச்சரிக்கையாக இருக்க முயலுவார்கள். கவனமாக வண்டிக்குள் ஏறவும், அனைத்து விதிமுறைகளையும் ஒழுங்காக பின்பற்றவும் முயற்சி செய்வார்கள். நான் கூட மும்பை வந்த புதிதில், கூட்டமாக வரும் ரயிலை விட்டு விட்டு அடுத்து வரும் ரயிலில் போகலாம் என்று எண்ணுவேன். ஆனால் அடுத்த ட்ரைனிலோ முன்பை விட அதிக கூட்டம் வரும். இப்படி ஒவ்வொரு வண்டியாக தவற விட்டுக் கொண்டே இருந்தால் நேரம்தான் போகும். நெரிசலில்லாத ட்ரைன் கிடைக்காது. சலித்துப் போன பின்னர் ஒரு வழியாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு முண்டியடித்து ரயிலுக்குள் நுழைய நேரிடும்.
ஆனால், தினந்தோறும் ஒரே போல எச்சரிக்கையை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது. அலுவலக வேலைப் பளு, அன்றாட சமூக பொருளாதாரக் கவலைகள், நமது கவனத்தை எளிதில் சிதறடித்து விடும். இதற்கிடையே நமது அன்றாட ரயில் நிலைய செயல்பாடுகள் இயந்திர கதியாக மாறிப் போய் இருக்கும்.
விளைவு தொடரும் விபத்துக்கள்.
இங்கு மனிதச் சாவுகள் ஏராளம்.

மீதிப் பேர் ஓடும் ரயில் ஏறவோ அல்லது இறங்கவோ முயலுகையில் தவறி விழுந்து அடிபடுகின்றனர். மும்பை லோக்கல் ரயில் வண்டிகள் ஒவ்வொரு நிலையத்திலும் சில வினாடிகளே நின்று செல்கின்றன. அந்த சில நொடிகளில் நூற்றுக்கணக்கானோர் வண்டியை விட்டு கீழே இறங்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் வண்டிக்குள் ஏற வேண்டும். இதற்கிடையே, ரயில் நிலையத்தில் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு பராமரிப்பு வேலைகள் வேறு பயணிகளை இக்கட்டுக்குள்ளாக்கும்.
அதிர்ஷ்டவசமாக என் வீடு அலுவலகத்திற்கு அருகேயே அமைந்திருப்பதால், ரயில் பயணங்கள் எனக்கு மிகவும் குறைவு. ரயில் விபத்துக்களை பெரும்பாலும் பத்திரிக்கை வாயிலாகவே அறிந்து வந்திருக்கிறேன்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து வந்த சில உறவினர்கள் லோக்கல் ரயில் பயணம் எப்படி இருக்கும் என்று உணர விரும்பியதால், நேற்று ரயில் நிலையத்திற்கு சென்ற போது ஒரு நிகழ்வை நேரில் பார்க்க முடிந்தது. நேற்று உள்ளூர் விடுமுறை நாள் என்றாலும், ரயில்களில் கூட்டத்திற்கு குறைவில்லை.
குடும்பத்துடன் சென்றதால், வழக்கம் போல கூட்டம் அதிகமாக வந்த ஒரு ரயிலை விட்டு, சரி, அடுத்த ரயில் போகலாம் என்று சற்று பின் நகர்ந்தால், ஒருவர் ரயில் பெட்டியின் கதவைப் பிடித்து தொங்கிக் கொண்டு செல்கிறார். முதலில் சற்று புரியாமல் மீண்டும் உற்று நோக்கிய போது அவர் கால்கள் ரயிலுக்கு அடியே நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஓடத் துவங்கிய ரயிலில் நுழைய முயன்ற அவரது கால்கள் "சிலிப்" ஆகி விட பேட்டியினை பிடித்துத் தொங்கிக் கொண்டே செல்கிறார். வண்டியோ சில நொடிகளிலேயே முழு வேகம் பிடித்து விட்டது. அலறியபடியே, அவர் தொங்கி கொண்டே செல்ல சுற்றிலும் உள்ளோர் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். மும்பை லோக்கல் ரயிலுக்கு புதிய என் உறவினர்களோ இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அவர் கால்கள் இருந்ததால், அந்த ரயில் ரயில்நிலையத்தை தாண்டும் வரை அவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆனால், அதற்கு பின்னர் என்ன ஆனது என்று எனக்கு தெரிய வில்லை. அதிவேக ரயிலில் அரைகுறையாக தொங்கிக் கொண்டு அதிக தூரம் செல்ல முடியாது. அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் அவர் வண்டிக்குள் ஏறியிருந்தால் மட்டுமே தப்பித்திருக்க முடியும்.
அவருக்கு இருபத்தைந்து முப்பது வயதுக்குள் இருக்கலாம். வெளிமாநிலத்தவர் போலவே இருந்தார். அவரை நம்பி யாரெல்லாம் இருக்கிறார்களோ? எங்கே இருக்கின்றனரோ?
ஏன் இப்படி? சில நிமிடங்கள் தாமதித்து பயணம் செய்தால் என்ன? அல்லது சில நிமிடங்கள் முன்னரே கிளம்பினாள் என்ன? உயிரை விட பெரியது எது?
இது போன்ற விபத்துக்களை தடுக்கும் முக்கிய கடமை அரசாங்கத்திற்கு (ரயில்வே துறைக்கு) இருந்தாலும், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டியதும் தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய வேண்டியதும் ஒவ்வொரு தனி மனிதனின் முதல் கடமை அல்லவா?
நன்றி.
பின்குறிப்பு: இன்று காலை முதல் வேளையாக பத்திரிக்கைகளில் ஏதாவது ரயில் விபத்து பற்றிய செய்தி இருக்கிறதா என்று தேடினேன். நல்ல வேளையாக எதுவும் இல்லை. அதே சமயம், மும்பையில் லோக்கல் ரயிலில் யாரும் அடிபட வில்லை என்றால்தான் அது செய்தி. அந்த அளவுக்கு லோக்கல் ரயில் விபத்துக்கள் இங்கு பழகி விட்டன. அந்த நபர் பிழைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் நம்மால்.
14 comments:
பகிர்வுக்கு நன்றி... யோசிக்க வைக்கின்றது
நன்றி ஞானசேகரன்
அனைவரும் விழிப்புணர்வு மிக்கவர்களே, ஆனாலும் அவரவர்க்கு அவரவர் கால அவசரம்... ஒன்று வாழ்கையில் முன்னேறுவதற்கோ அல்லது வாழ்க்கையிலிருந்து மேலேருவதற்கோ.
எப்படியாயினும் இதுபோன்ற பதிவுகளின் ஊடாய் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எச்சரிக்கை நினைவூட்டல் அவசியம் என நான் கருதுகிறேன்.
நன்றி பீர்
பயனுள்ள பதிவு. நன்றி
நன்றி dg
RIIL(Reliance Industrial Infrastructure Limited )3 நாள்ல 200% அதிகரித்துள்ளது எதனால் சார்?
மும்பாய்..பம்பாயாக இருந்த போது ஆதாவது 1994யில் போனது அதற்கு முன்னால் போன போதே ரயில் வண்டிகளின் கூட்டம் சொல்லிமாளாது இதனாலேயே அங்கு வேலை தேடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இவ்வளவு முன்னேறிய நாம் ஏன் ரயிலிலும் மூடு கதவுகளை வைக்கக்கூடாது.லாலு ஜீ இது உங்க கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை?
அடித்தட்டு மக்களின் வாழ்கை எப்போதும் தொங்கி கொண்டுதான் இருக்கிறது என்பதை மும்பை மக்கள் தொங்கி தொங்கி உணர்த்துகிறார்கள்.தின போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிகட்டாயத்தில் உள்ள அவர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.புற்றீசல் போல் வரும் மக்கள் கூட்டத்தை அரசால் அணை போட்டு கட்டு படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் மும்பை என்ற எப்போதும் வளரும் பூதம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் உரிய வசதிகளை செய்து கொடுத்தால் மக்கள் தங்களை உரியவாறு மாற்றிக்கொள்வார்கள். வெட்டியாக இனம் , மொழி என்று பேசும் போராட்டவாதிகள் இந்த மக்களின் கஷ்டத்தை ஒருநாளும் யோசித்ததில்லை. ஒரு வழி இருக்கிறது. முகமது துக்ளக் செய்தது போல் திடீர் என்று வணிக தலைநகரை எங்காவது ஒரிசா பக்கம் மாற்றி விட்டால் அந்த பக்கம் கொஞ்சம் வளர்ச்சி பெறும்.லல்லு செய்வார். அட அவர்தாங்க ரெயில்வே துறை மந்திரி.
நன்றி வடுவூர் குமார்!
//மும்பாய்..பம்பாயாக இருந்த போது ஆதாவது 1994யில் போனது அதற்கு முன்னால் போன போதே ரயில் வண்டிகளின் கூட்டம் சொல்லிமாளாது இதனாலேயே அங்கு வேலை தேடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.//
உண்மைதான். நானும் கூட நெரிசலான ரயில் பயணத்திற்கு பயந்துதான், இங்கு வரும் நல்ல பணி வாய்ப்புக்களை தவிர்த்திருக்கிறேன்.
//இவ்வளவு முன்னேறிய நாம் ஏன் ரயிலிலும் மூடு கதவுகளை வைக்கக்கூடாது.லாலு ஜீ இது உங்க கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை?//
கண்டிப்பாக முடியும். ஆனால் இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? போகிறது யாருடைய உயிரோ? கஷ்டப் படுவது யாருடைய சுற்றமோ? அரசியல் வியாதிகளுக்கு என்ன கவலை?
நன்றி.
அன்புள்ள பொதுஜனம்
பல நாளுக்கு பின்னே வந்த உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இனி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்கிறேன்.
//அடித்தட்டு மக்களின் வாழ்கை எப்போதும் தொங்கி கொண்டுதான் இருக்கிறது என்பதை மும்பை மக்கள் தொங்கி தொங்கி உணர்த்துகிறார்கள்.தின போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிகட்டாயத்தில் உள்ள அவர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.//
உண்மைதான். அவர்கள் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறது.
//புற்றீசல் போல் வரும் மக்கள் கூட்டத்தை அரசால் அணை போட்டு கட்டு படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் மும்பை என்ற எப்போதும் வளரும் பூதம் //
காரணம் ஓரளவுக்கேனும் சம்பாதிக்க அதிக வாய்ப்பு தராத நாட்டின் இதர பகுதிகள்.
//காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.//
எவ்வளவுதான் அதிக கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும் உள்ளே வரும் பெரிய கூட்டத்தினால் போதுமானதாக இருக்க முடிய வில்லை.
//ஒரு வழி இருக்கிறது. முகமது துக்ளக் செய்தது போல் திடீர் என்று வணிக தலைநகரை எங்காவது ஒரிசா பக்கம் மாற்றி விட்டால் அந்த பக்கம் கொஞ்சம் வளர்ச்சி பெறும்.லல்லு செய்வார். அட அவர்தாங்க ரெயில்வே துறை மந்திரி.//
முகமது பின் துக்ளக் அவர்களுக்கு இருந்த அளவுக்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் மேல் அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நன்றி.
அன்புள்ள dg
//RIIL(Reliance Industrial Infrastructure Limited )3 நாள்ல 200% அதிகரித்துள்ளது எதனால் சார்?//
இந்த கம்பெனி ரிலையன்ஸ் உடன் இணையும் என்று சிலர் கட்டியம் கூறுகின்றனர். ஆனால் இதை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரிய வில்லை.
ஏற்கனவே ஒரு பதிவில் கூறி இருந்த படி, சந்தையில் தற்போது பெரிய அளவிலான ஆபரேடர்கள் மீண்டும் பெரிய அளவில் வர்த்தகம் செய்கின்றனர். எனவே நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நன்றி.
ஆயுதம் தாங்கிய தீவிராவதத்தை விட, இது போன்ற செயல்களும், இதில் அரசின் அலட்சியமும் மிகுந்த வருத்தம் தருகிறது...
துப்பாக்கி ஏந்தி கொள்வது தீவிரவாதம் என்றால், எந்த செயலும் செய்யாமல், விவாசிகள் பட்டினிச்சாவு செய்வதை வேடிக்கை பார்ப்பதையும், இது போன்ற ரயில் விபத்துகளை வேடிக்கை பார்ப்பதையும் என்ன சொல்வது? அரச பயங்கரவாதம் என்றா?
நரேஷ்
www.nareshin.wordpress.com
அன்புள்ள நரேஷ் குமார்
//ஆயுதம் தாங்கிய தீவிராவதத்தை விட, இது போன்ற செயல்களும், இதில் அரசின் அலட்சியமும் மிகுந்த வருத்தம் தருகிறது...
துப்பாக்கி ஏந்தி கொள்வது தீவிரவாதம் என்றால், எந்த செயலும் செய்யாமல், விவாசிகள் பட்டினிச்சாவு செய்வதை வேடிக்கை பார்ப்பதையும், இது போன்ற ரயில் விபத்துகளை வேடிக்கை பார்ப்பதையும் என்ன சொல்வது? அரச பயங்கரவாதம் என்றா?//
உண்மைதான் நரேஷ். எனக்குக் கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கும் அரசு, ரயில்வே துறை, ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களின் அலட்சிய போக்கு ஆகியவற்றைப் பார்க்கும் போது, கடுங்கோபம் வருகிறது. இன்று இன்னொருவருக்கு நடப்பது நாளை நமக்கோ அல்லது நமக்கு வேண்டப் பட்டவர்களுக்கோ நடக்கலாம் என்று ஏன் யாரும் உணர மறுக்கிறார்கள்?
பணம், பதவி, செல்வாக்கு, நேரம் எல்லாமே முக்கியம்தான். ஆனால், உயிரை விட உயர்ந்தது எது? உயிர் போய் விட்டால் வேறு எதற்கும் மதிப்பில்லையே? மற்றவர் உயிரை ஏளனமாக பார்க்கும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து இருப்பது வேதனைக்கு உரியது.
நன்றி.
Post a Comment