Skip to main content

இருக்க இடம் கொடுத்தால்?

ஊர்பக்கம் ஏதோ சொல்வார்கள். இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடம் கேட்பார்கள் என்று. அது போல, சத்யம் நிறுவனத்திலிருந்து சுமார் 8000 கோடி ரூபாய் கொள்ளையடித்து போதாது என்று அந்த நிறுவனத்திலிருந்து மேலும் 1200 கோடி ரூபாய் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் ராஜுவின் உறவினர்கள்.

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் அதன் முன்னாள் தலைவரான ராஜு ஏகப் பட்ட தில்லுமுல்லுகள் செய்து அதிலிருந்து ஏகப் பட்ட பணத்தை கொள்ளை அடித்து தெரிந்த விஷயம்தான். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு அரசால் முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ராஜுவோ ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப் பட்டார். இன்னும் குற்ற விசாரணை முடிவடையாத நிலையில் எந்த துணிச்சலில் அவரது உறவினர்கள் மேலும் 1200 கோடி ரூபாய் கோரி புதிய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பித்தனர் என்பது நமது கேள்வி.

ராஜுவாகவே முன்வந்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் அவரைக் கைது செய்ய ஏகப் பட்ட அவகாசம் எடுத்துக் கொள்ளப் பட்டது. அதுவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை செய்ய ஹைதராபாத் சென்ற பின்னரே அவசர அவசரமாக அவர் கைது செய்யப் பட்டார். இந்த குற்றம், நிதித் துறை மற்றும் பங்குத் துறை சார்ந்தது என்றும் இதனை ஓரளவுக்காகவாவது சரியாகவும் நுணுக்கமாகவும் விசாரிக்க செபி போன்ற தொழிற் ரீதியான அமைப்புகளின் உதவி கண்டிப்பாக தேவை என்று தெரிந்த பின்னரும் அவரை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்காமல் (சட்ட ரீதியான சிக்கல்களை முன்னிறுத்தி) மாநில போலீசார் விசாரணை செய்தனர்.

தணிக்கை விவகாரம் மற்றும் பங்கு மாற்றம் போன்ற நிதி நுணுக்கமான விஷயங்களை எப்படி ஒரு மாநில போலீசாரால் சரியாக புலனாய்வு செய்ய முடியும்? கிட்டத் தட்ட ஒரு மாதம் கழிந்த பின்னரே ராஜுவை விசாரிக்க செபி உச்ச நீதி மன்றம் வரை சென்று அனுமதி வாங்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ராஜுவின் உறவினர்கள் ஆய்வு சம்பத்தப் பட்ட ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? இந்த ஒரு மாதத்தில் போலீசாரின் விசாரணை எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் ஏன் வெளியிடப் படவில்லை?

நிதி தொடர்பான குற்றச் சாட்டுகளில் தொண்ணூறு நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் குற்றம் சாடப் பட்டவர் ஜாமீனில் வெளி வர முடியும். அதே போல, இந்த வழக்கின் விசாரணை, மாநில போலீஸார் தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த குற்றப் பத்திரிக்கையில் ஏதேனும் (தொழிற்நுட்ப ரீதியாக) தவறுகள் இருந்தால், தவறான தகவல்கள் கொடுக்கப் பட்டதின் அடிப்படையில், குற்றம் சாட்டப் பட்டவர் தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், போலீஸார், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்க செபி போன்ற நிறுவனங்களின் உதவியை கோரியது போல இது வரை தகவல் எதுவும் இல்லை. மேலும், செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் உருவாக்கப் பட்ட சட்டங்களில் உள்ள (பெரிய) ஓட்டைகளுக்குள் புகுந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற திமிரிலேயே, இப்படி "அடித்த கொள்ளை போதாது, இன்னும் பணம் பிடுங்குவோம்" என்ற தொனியில், சத்யம் நிறுவனத்திற்கு ராஜுவின் உறவினர்கள் 1200 கோடி ரூபாய் கொடுக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Comments

குடும்ப ஊழல் நம் நாட்டுக்கு புதிதா ? தனியாக ஊழல் பண்ணத்தான் தப்பு. இவர்களை நம்பி பணம் போட்ட வர்கள் தெருக்கோடிக்கு போய் விட்டார்கள். ஆயிரம் கோடி எல்லாம் இப்போ சாதரணமாகி விட்டது. ராஜு ஜெயிலில் செஸ் விளையாடுகிறார். அடுத்து எப்படி தப்பிக்கலாம் என்று பயிற்சி எடுக்கிறாரோ?
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி. என்னுடைய மிகப் பெரிய வருத்தம் மற்றும் அச்சம் என்னவெனில், இப்போதெல்லாம் ராஜு குடும்பம் போன்றவர்கள் எவ்வளவு பெரிய ஊழல் செய்து மாட்டிக் கொண்டாலும், குற்ற உணர்ச்சி அறவே இல்லாமல் இருப்பது நாட்டிற்கு பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.

நன்றி
//செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.//

இதிலென்ன சந்தேகம்,
பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி

//இதிலென்ன சந்தேகம்,
பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!//

இப்போதெல்லாம் பணம் பாதாளம் வரை மட்டுமல்ல. மேலே மேலே -------(சட்டப் படி சொல்ல முடியாத இடம்) வரை பாய்கிறது.

நன்றி

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...