
குறிப்பிட்ட சில படங்கள் வெற்றி பெற்றதற்கான உண்மையான காரணங்கள் வேறாக இருந்தாலும், உதாரணமாக நல்ல கதை, திரைக்கதை, இசை மற்றும் இதர தொழிற் நுட்ப விஷயங்கள் காரணங்களாக இருந்தாலும், திரைப்படத்தின் வெற்றிக்கான முழுக்காரணமும் அந்த படங்களின் முக்கிய கதாபாத்திரமான நடிகர்தான் என்ற ஒரு மாயை உருவாகுகிறது.
இந்த மாயை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இதர தொழிற் நுட்ப கலைஞர்களுக்கும் கூட ஏற்படுகிறது. விளைவு, ஒட்டு மொத்த ரசிகர்களுக்காக என்று இல்லாமல் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களுக்காக (ரசிகர் வட்டம் என்பது கூட ஒரு மாயைதான்) என்று படம் தயாரிக்க முனைகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்த ஆர்வங்கள் மாறிப் போய், கமர்ஷியல் ஹிட் படங்கள் செய்ய வேண்டும் என்று விளைகிறார்கள்.
கடைசியில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், திரைப் பட விரும்பிகள்தான்!
வெற்றிப் படங்களுக்கென தனி பார்முலாக்கள் உருவாக்கப் படுகின்றன.
புதிய முயற்சிகள் மங்கிப் போய், வெற்றி பெற்ற வேற்று மொழி படங்கள் ரீமேக் அதுவும் அவசர கதியில் செய்யப் படுகின்றன.
நடிகைகள் உடை அளவு மேலும் சுருக்கப் படுகிறது.
இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் இன்னும் அதிகமாகின்றன.
படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட வெளிநாட்டு லொகேஷன்கள் சேர்க்கப் படுகின்றன.
சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு பல கழுதை வயதானாலும், அவர்களை இளமையாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் உடற்பயிற்சிகள், அதிலும் டிஜிட்டல் முறையிலான உடல் தோற்றத்தை மாற்றும் முயற்சிகள் வேறு. முன்னர் நடிகைகள் மட்டுமே அடிக்கடி உடையை கழற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போது நடிகர்களும் தனது சட்டையை அடிக்கடி கழற்றி வீசுகின்றனர்.
இந்த மாயவலையில் கடைசியாக சிக்கி இருக்கும் நடிகர் அக்ஷய் குமார். நடுத்தர பட்ஜெட் படங்களின் கதாநாயகனாக இருந்தவர் அவர். சிங் இஸ் கிங் போன்ற சில படங்கள் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்தின. சென்ற வருடத்தில், கான்களையும் பச்சன்களையும் ஓரம் கட்டி அதிகமான வருமான வரி செலுத்திய ஹிந்தி நடிகர் இவர்தான் என்று சொல்லப் படுகிறது.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற முதுமொழிக்கேற்ப இப்போது படங்களாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் குங் பூ பாண்டா முதல் நம்மூர் பம்மல் கே சம்பந்தம் வரை மாற்று மொழி படங்களை தேடிக் கண்டுபிடித்து ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.
ஹாலிவுட் ஸ்டன்ட்மேன், சில்வர்ஷ்டல்லோன் போன்ற நடிகர்கள் மற்றும் பம்மல் சம்பத்தின் கதை என்றெல்லாம் திரை அரங்கிற்கு ஆவலுடன் சென்றால் நம்மை கதி கலங்கடித்து விட்டார்கள். படம் பார்த்த அன்று எங்களுடன் சேர்ந்து மும்பை மொத்தமும் அழுதது. இந்த படம் பார்ப்பதற்காக மும்பை மழையில் இவ்வளவு கஷ்டப் பட்டு கூட்டிக் கொண்டு வர வேண்டுமா என்று மனைவி முறைத்தார்.
கோடம்பாக்கத்திற்கு பதிலாக ஹாலிவுட் லொகேஷனை தேர்வு செய்த இவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு தேவையில்லை, கோலிவுட் தரத்திற்கு கூட படத்தை எடுக்க முடியவில்லை.
நடிகைகள் ஒண்ணேகால் பீஸ் உடையுடன் வலம் வருகிறார்கள். ஆஞ்சநேயர் பக்தராக வரும் கமல் பாத்திரத்தை தலைகீழாக மாற்றி நாளுக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்யும் ஒரு காமக் கொடூரன் பாத்திரத்தை (தினம் ஒரு பெண். ஆனால் கட்டை பிரமச்சாரி! கொடுமையடா சாமி!) அக்ஷய் குமாருக்கு கொடுத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒரு விஷயத்தில் கில்லாடிகள். எப்படியோ தமது படத்திற்கு யு சான்றிதழ் பெற்று விடுகிறார்கள். அரங்கில் பல பெரியவர்கள் திரையை பார்க்காமல் தங்களது குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது.
இன்னொரு விஷயத்தில் கூட இவர்களை பாராட்ட வேண்டும். ஊடகங்களின் ஆதரவும் இவர்களுக்கு பலமாகவே இருக்கிறது. நன்றாகவே கவனித்து விடுவார்கள் போல இருக்கிறது. எப்போது நம்மை வெளியே விடுவார்கள் என்று கவனித்துக் கொண்டே இருந்து, வெளிக் கதவு திறந்ததும், போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் வெளியேறும் இது போன்ற படங்களை சூப்பர் ஹிட் படங்கள் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இந்த சாதனை (நமக்கு வேதனை) படத்தில் நடித்து பற்றி நடிக நடிகையரின் ஏராளமான பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின்றன.
"கம்பாக் இஷ்க்" வசூலில் புதிய சாதனைகளை உருவாக்கி இருக்கின்றது என்று ஏராளமான விளம்பரங்களை சென்ற வாரம் பார்த்த நான், நம்மை போல இன்னும் யாரெல்லாம் ஏமாற போகிறார்களோ என்று பெருமூச்சு விட்டேன். (சிவாஜி மற்றும் சிங் இஸ் கிங் படங்கள் விஷயத்தில் இது போன்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.)
மொத்தத்தில் ஒரு ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால் அவருக்கு கோடிகளில் சம்பளம். தயாரிப்பாளர்களுக்கும் திரை உரிமையாளர்களுக்கு பல கோடிகளில் வருமானம். ஆனால் ரசிகர்களுக்கு?
நன்றி.
10 comments:
தெரிந்தே ஏன் வேட்டிக்குள் கண்டதை விட்டு கொள்கிறீர்கள் ? இந்த மாதிரி படம் பார்க்க பணம் கொடுத்து உள்ளே போகும் முன் மேல் மாடியில் உள்ள மூளையை ஆப் செய்து விட்டு போங்களேன். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தியேட்டருக்கு செல்லும் முன் படத்தை பற்றி எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்புடனே உள்ளே செல்கிறோம். அதற்க்கு படம் மேட்ச் ஆக வில்லை என்றல் திட்டுகிறோம். சினிமா பார்க்க செல்லும் ஜீவன்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நியாயமானதே. வித்யாசமான தரமான படங்களான அன்பே சிவம் ஹே ராம் போன்றவை ஏன் சரியான வசூல் கொடுக்க வில்லை. ? சிவாஜி போல் சரியான மசாலா படங்கள் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. ஒரு நடிகர் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக செய்தால் அதற்க்கு வரவேற்பு இல்லை. மாறாக குத்து பாடல வைத்து 55 வயது மாஸ் ஹீரோ ஆடினால் குடும்பத்தோடு பொய் கும்மி அடிக்கிறார்கள். ஆக ரசிகர்களின் ரசனை திறன் மாறாத வரை , ரசிக்கும் திறமை வளராத வரை குப்பை படங்கள் கோபுரம் பொய் கொண்டுதான் இருக்கும். அம்மாதிரி படங்களின் வருகையை குறைக்க ஒரு வழி.. அந்த படங்களின் திருட்டு சீடி யை குறைந்த விலையில் வாங்கி பார்க்காமல் குப்பையில் போடலாம்..
//பல கழுதை வயதானாலும்//
நச்!
நன்றி பொதுஜனம்!
// இந்த மாதிரி படம் பார்க்க பணம் கொடுத்து உள்ளே போகும் முன் மேல் மாடியில் உள்ள மூளையை ஆப் செய்து விட்டு போங்களேன். //
அதெல்லாம் தானாகவே ஆப் ஆகிவிடும். அதுதானாலதானே திரும்ப திரும்ப போய் மாட்டிக்கிறோம். :-)
//ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தியேட்டருக்கு செல்லும் முன் படத்தை பற்றி எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்புடனே உள்ளே செல்கிறோம். அதற்க்கு படம் மேட்ச் ஆக வில்லை என்றல் திட்டுகிறோம். //
இதற்கெல்லாமா மேட்ச் பிக்சிங் செய்ய முடியும்? :-)
//வித்யாசமான தரமான படங்களான அன்பே சிவம் ஹே ராம் போன்றவை ஏன் சரியான வசூல் கொடுக்க வில்லை. ? //
மல்லிகைப் பூவுக்கும் மார்கெட்டிங் தேவைப் படுகின்ற காலம் இது. தரமான படங்களாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லாதது படத்தை தயாரித்தவர்களின் தவறுதான்.
//சிவாஜி போல் சரியான மசாலா படங்கள் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. //
வணிக ரீதியாக சிவாஜி எந்த அளவு வெற்றி பெற்றது என்று தெரியாது. அதே சமயத்தில் அந்த படத்தையும் குசேலன் படத்தையும் வெளியிட்ட பிரமிட் சமிரா கம்பெனி மிகப் பெரிய நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டது என்பது மற்றும் தெரியும். வெற்றி பெற்றது என்று விளம்பரம் செய்வது கூட ஒரு வணிக யுத்திதான்.
//ஒரு நடிகர் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக செய்தால் அதற்க்கு வரவேற்பு இல்லை. மாறாக குத்து பாடல வைத்து 55 வயது மாஸ் ஹீரோ ஆடினால் குடும்பத்தோடு பொய் கும்மி அடிக்கிறார்கள். //
இது எனக்கும் கூட புரிய வில்லை. ஒரு வயதானவரை இளமையாக காட்டுவதில் காட்டும் ஆர்வத்தை கதையில் அல்லது தொழிற்நுட்பத்தில் காட்டலாம். ஹாலிவுட்டில் எத்தனையோ பெரிய ஹீரோக்கள் சற்று வயதான வேடத்தில் வந்தே பட்டையை கிளப்பும் போது, நம்மூரில் மட்டும் ஹீரோக்களை கல்லூரி வயதிலேயே காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
//ஆக ரசிகர்களின் ரசனை திறன் மாறாத வரை , ரசிக்கும் திறமை வளராத வரை குப்பை படங்கள் கோபுரம் பொய் கொண்டுதான் இருக்கும்.//
உண்மைதான். We deserve the movies we watch.
//அம்மாதிரி படங்களின் வருகையை குறைக்க ஒரு வழி.. அந்த படங்களின் திருட்டு சீடி யை குறைந்த விலையில் வாங்கி பார்க்காமல் குப்பையில் போடலாம்..//
உண்மைதான். இன்றைய தேதியில் வெளி வரும் பல படங்கள் திருட்டு சிடியில் பார்க்கக் கூட தகுதி இல்லாதவைதான்.
நன்றி.
நன்றி ஐந்திணை!
//சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்த ஆர்வங்கள் மாறிப் போய், கமர்ஷியல் ஹிட் படங்கள் செய்ய வேண்டும் என்று விளைகிறார்கள்.//
துவக்கத்தில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம்,படம் வெற்றி
பெற்றதும் அவர் கூட சேரும் பல ஜலர்க்கள் அவர் எது செய்தாலும் சூப்பர், சூப்பர்,எனக்
கூறி அவர் யோசிக்க முடியாதப்படி தலைகனத்தை அதிகரித்து விடுகிறார்கள்.
//கடைசியில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், திரைப் பட விரும்பிகள்தான்! //
உண்மைதான் சார்.
படம் வந்துருச்சா!?
நன்றி தாமஸ் ரூபன்!
//துவக்கத்தில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம்,படம் வெற்றி பெற்றதும் அவர் கூட சேரும் பல ஜலர்க்கள் அவர் எது செய்தாலும் சூப்பர், சூப்பர்,எனக் கூறி அவர் யோசிக்க முடியாதப்படி தலைகனத்தை அதிகரித்து விடுகிறார்கள்.//
உண்மைதான் தாமஸ் ரூபன்!
//படம் வந்துருச்சா!?//
நீங்க வேற! "படம் சூப்பர் டுப்பர் வெற்றி! சரித்திரம் காணாத வசூல்" என்று ஏகப் பட்ட விளம்பரங்கள்! எத்தனை அப்பாவிகள் ஏமாறப் போகிறார்களோ என்று தெரிய வில்லை.
நன்றி வால்பையன்!
பம்மல் கே சம்மந்தம்னு இல்லை, பராசக்தி படத்தையே அக்ஷய் குமாரை வெச்சு ரீமேக் பண்ணா அதுல அவரு பிளே பாய் கேரக்டர்லதான் வருவாரு, கேத்ரீனா கைஃப் மாதிரி யாராவது உருகி உருகி உடம்பை காமிப்பாங்க...
அவரு அப்படி இருக்கற படத்தைதான் எடுக்கணும்னு எல்லா டைரக்டரும் விரும்புறாங்களோ என்னமோ???
அவரு படம்னு தெரிஞ்சும் நீங்க ஏங்க போனீங்க? பரங்கிமலை ஜோதில சாமி படம் ஓடுதுன்னு சொன்னா, அது உண்மையான சாமி படம்னு நினைச்சுகிட்டீங்கண்ணா அது உங்க தப்பா இல்லை பரங்கி மலை ஜோதி தப்பா :))))???
பொது ஜனம் சொல்ற மாதிரி சிடிக்கள் வாங்குவதை ஆதரிச்சு பிரச்சாரம் பண்ணலாம்னு இருக்கேன்....
//அவரு படம்னு தெரிஞ்சும் நீங்க ஏங்க போனீங்க? பரங்கிமலை ஜோதில சாமி படம் ஓடுதுன்னு சொன்னா, அது உண்மையான சாமி படம்னு நினைச்சுகிட்டீங்கண்ணா அது உங்க தப்பா இல்லை பரங்கி மலை ஜோதி தப்பா :))))???//
சில வார இறுதிநாட்களில் சற்று லைட்டான ஜனரஞ்சக படங்களை பார்க்க வேண்டுமென்று நானும் குடும்பமும் ஆசைப் படுகிறோம். ஆனால் அவற்றில் சில நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது. என்ன செய்ய?
நன்றி நரேஷ்!
Post a Comment