பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, December 31, 2010
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நண்பர்களே!
வரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்!
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
Saturday, December 18, 2010
ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !
இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை.
கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார்.
"எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப கஷ்டம் ஆகி விட்டது சார். "
சிறிது நேர மௌனத்திற்கு பின்னர், அந்த ஒரு லட்சம் கோடியை எப்படித்தான் அடித்திருப்பார்கள் சார் என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்ட அவரை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.
முதல் பத்தியிலேயே சொன்னபடி பலரையும் புலம்ப விடும் அரசியல்வாதிகளையும் கூட புலம்ப வைக்கும் அளவுக்கு இப்போது காலம் கெட்டுப் போய் விட்டது.
நன்றி!
இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!
முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் கூறினர். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தவறாமல் தர்காவிற்கு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இன்று தினமலர் வலைதளத்தில் வந்த ஒரு செய்தி, இது ஏதோ இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் அபூர்வமான நிகழ்வு அல்ல என்பதை சுட்டிக் காட்டியது. மேலும் இது போன்ற மத இணக்க நிகழ்வுகள் இந்தியாவில் ஏராளம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் உணர்ந்திருப்பான். உடல் நிலை பாதிப்புகளின் போது மசூதிக்கு சென்று தாயத்து கட்டுவதும் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதும் இந்தியாவில் தினந்தோறும் பார்க்கக் கூடிய மிகவும் சகஜமான நிகழ்வுகள் ஆகும்.
இந்த நிலையில் இந்தியாவின் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள நிற தீவிரவாதத்தை பற்றிய அமெரிக்க தூதரிடம் அடித்த கமன்ட்டுக்களை விகிலீக்ஸ் வழியாக அறிய நேரிட்டது.
அவரிடம் சொல்ல விரும்புவது இதுதான்.
"பலதரப்பட்ட வண்ணங்களை விரும்புவர்கள் இந்தியர்கள்.
அவர்களின் விருப்பத்திற்குரிய பலதரப்பட்ட வண்ணங்களிலும், எதை தின்றால் பித்தம் தீரும் என்று அன்றாட சமூக பொருளாதார சிக்கல்களில் அவதிப்படும் சாதாரண இந்தியர்களின் எண்ணங்களிலும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு இடம் இருந்தததில்லை.
தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்!
தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான்.
முதலில் சாதாரண இந்தியர்களை போல எல்லா வண்ணங்களையும் இயல்பாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
உங்கள் எண்ணங்கள் தானாக மாறிப்போகும்."
நன்றி!
Sunday, November 21, 2010
பயமா? லாப விற்பனையா?
நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சீனா தனது வங்கி கையிருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பதும் அயர்லாந்து விவகாரம் ஐரோப்பிய நிதி சிக்கல் இன்னும் தீர்ந்து விட வில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருப்பதும் கூட இந்த விற்பனைக்கான இதர காரணங்கள் என்று கூறப் படுகின்றன. கிட்டத்தட்ட நூறு சதவீத லாபத்தை கொடுத்திருக்கும் இந்திய பங்கு சந்தைகளில் நிகழும் இப்போதைய விற்பனை, அந்நிய முதலீட்டாளர்களின் லாபத்தை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் டாலர் மேலேறுவதும் கூட இதர காரணங்களாக இருக்கலாம்.
ஆக மொத்தத்தில், இந்திய பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் வாய்ப்பு இப்போதைக்கு பறி போயுள்ளது மட்டுமல்லாமல், முக்கிய குறியீடுகள் வலுவான அரண் நிலைகளுக்கு கீழேயும் (நிபிட்டி 5930, சென்செக்ஸ் 19800) முடிவடைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும் .

குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி அளவு 5850 க்கு அருகே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். 6050க்கு மேலே சந்தையில் வாங்கும் நிலை எடுக்கலாம் (இலக்கு 6400) .
நீண்ட கால முதலீட்டாளர்கள் நிபிட்டி 5700க்கு கீழே அடிப்படையில் சிறந்த பங்குகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.
வரும் வாரம் சிறந்த வாரமாக அமைந்திட அனைவரும் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
Thursday, November 18, 2010
ஊழலின் ஊற்றுக்க்கண்!
ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம்.
கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தவணைகளை விடுங்கள்!
கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர்.
வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிறது என்று புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த அனுபவம் எங்கேயோ எப்போதோ ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உயர்ந்து கொண்டே வரும் கல்வி வாராக் கடன்கள் இந்த நிகழ்வை உறுதிப் படுத்துகின்றன.
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது அந்த கால பழமொழி.
ஊழல் சமூகத்தில் இருந்துதான் ஸ்பெக்ட்ரம் ராஜாக்கள் உருவாகிறார்கள் என்பது இந்த கால புதுமொழி.
கல்மாதிகளும், எட்டியூரப்பாக்களும், ரெட்டிகளும்,அசோக் சவான்களும் இன்றைய குப்பன்களையும் சுப்பன்களையும், ரமேஷ்களையும் சுரேஷ்களையுமே பிரதிபலிக்கிறார்கள் என்பது மிகையாகாது.
ஊழலை ஒழிப்பது என்பது ஒவ்வொரு தனி இந்தியரிடமிருந்தும் துவங்க வேண்டும்.
சுத்தமான சமூகத்தில் ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்போதுமே இடமில்லை.
நன்றி!
Tuesday, November 16, 2010
எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!
எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா?
இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை!
1. யாரையும் வெறுக்காதீர்கள்.
2. எதற்கும் கவலைப் படாதீர்கள்!
3. எளிமையாக இருங்கள்!
4. குறைவாக எதிர்பாருங்கள்!
5. நிறைவாக கொடுங்கள்!
6. நிறைய புன்னகையுங்கள்!
7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்!
நன்றி!
Tuesday, November 9, 2010
வேலை தேடி வந்த ஒபாமா!
பொதுவாக, வேலை தேடி அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் அமெரிக்க தூதகரங்களின் வாசலில் விசா வேண்டி தவமிருப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு மாறுதலுக்காக இப்போது ஒபாமா வேலை தேடி இந்தியாவிற்கு வந்துள்ளார்.
எப்போதுமே அமெரிக்க அதிபர்களின் வருகைகள் தில்லியை குறிவைத்தே அமைவதுண்டு. அவ்வப்போது அமெரிக்க சேவை தொழிலாளிகளின் தலை நகரங்களான பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அமெரிக்க அதிபர்களின் காலடிகள் படுவதுண்டு.
ஆனால் இந்த முறை டில்லிக்கு கொடுக்கப் பட்டது ஒரு நாள் மட்டுமே. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் திரும்பிக் கூட பார்க்கப் படவில்லை. முதலாளிகளின் நகரமான மும்பைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய தொழில் அதிபர்களுடன் போடப் பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு பின்னரும், அந்த ஒப்பந்தத்தினால் எத்தனை அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகப் போகின்றன என்று வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது, இந்த பயணத்தின் முக்கிய நோக்கத்தினையும், காலசக்கரத்தின் மாற்றத்தையும் பறை சாற்றியது.
யாருக்குத் தெரியும்?
ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த காலமும் மாறிப் போய் பல ஒபாமாக்கள் வேலை தேடி இந்தியாவிற்கு ஓடி வரும் காலமும் வரலாம்!
நன்றி!
Sunday, October 31, 2010
தீப ஒளி பரவட்டும்!
நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன.
அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது.
குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள் 5930 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட்டாக வைத்துக் கொள்ளலாம்.
இப்போது தீபாவளிக்கு வருவோம்.
எப்போதுமே தீபாவளிக்கு முந்தைய வாரம் ஒரு உற்சாகமான வாரம்.
தேடி தேடி செய்யும் தீபாவளி பர்ச்சேஸ் நமது பர்சை காலி செய்தாலும், அது மனதை நிரப்பும் ஒரு டானிக். எனவே இந்த தீபாவளி வாரத்தை மகிழ்ச்சியோடு வரவேற்ப்போம்.
இந்த தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடும் அன்பு நண்பர்கள் கார்த்திக், மஞ்சள் ராஜன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
Sunday, October 17, 2010
மறு மதிப்பீடு அவசியம்!

பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம் போலவே தவறுதான் என்பதை அன்றைய பங்குசந்தை முடிவுகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்தன.
இன்போசிஸ் நிறுவனம் என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தாலும், விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) முப்பதுக்கு அருகே இருப்பது ஒரு வித நெருடலையே ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த சந்தையும் இப்போது அதிக விலை-வருவாய் விகிதத்திலேயே (கிட்டத்தட்ட 20௦) வர்த்தகமாகி வருகிறது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதம் மற்றும் பணவீக்கம் எட்டு சதவீதம் என மொத்தத்தில் பதினாறு சதவீத வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையின் விலை வருவாய் விகிதம் இருபதுக்கு அருகே இருப்பது, இது மலிவு விலை மார்க்கெட் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்திய பங்குசந்தை வரலாற்றின் மிகப்பெரிய வெளியீட்டான இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd) கதையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி விகிதம் பதினைந்து சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், பங்கின் விலை-வருவாய் விகிதம் 15 .4 ஆக நிர்ணயித்திருப்பது ஏமாற்றத்தையே வரவழைக்கிறது. பொதுவாக கனிம பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருப்பதால், கனிம நிறுவனங்களின் விலை-வருவாய் விகிதம் குறைவாகவே இருப்பது வழக்கம். "கோல் இந்தியா" நிறுவனம் அடிப்படையில் சிறப்பான ஒன்று என்பதால், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என்றாலும், குறுகிய கால கண்ணோட்டத்தில், அரசின் விலை நிர்ணயம் மகிழ்ச்சியை தரவில்லை.
குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
Monday, October 11, 2010
இது ஒரு அறுவடைக் காலம்!
பங்குசந்தையில் தீபாவளி முன்கூட்டியே ஆரம்பித்து விட்டது. அதிரடியான அந்நிய முதலீடுகளும் இந்திய பொருளாதாரத்தின் வெகு வேகமான மீட்சியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். விதை முளையாகி, விருட்சமாக வளர்ந்திருப்பது சரியான சமயத்தில் விதைத்தவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தரும்.
அதே சமயத்தில் சரியான சமயத்தில் அறுவடை செய்ய வில்லை என்றால் உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடும் அல்லவா?
ஒரு முதலீடு எவ்வளவு முக்கியமோ, சரியான தருணத்தில் லாப விற்பனை செய்வதும் அவ்வளவு முக்கியமானது. எனவே நண்பர்களே, உங்களிடம் உள்ள முதலீடுகளை ஓரளவிற்கு விற்று விடுங்கள்! எந்த எந்த பங்கை எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.
நெல் கோதுமை போன்ற ஒரு சில ஆயுள் குறைந்த பயிர்கள் முழுமையாக அறுவடை செய்யப் படுகின்றன. காய்கறி, காப்பி போன்ற செடிகளின் உற்பத்திப் பொருட்கள் மாத்திரம் அறுவடை செய்யப் படுகின்றன. அதே சமயம் தென்னை, மாங்கனி போன்றவை விருட்சமாக வளரும் வரை பொறுத்திருக்கிறோம்.
இந்த பதிவு வலையிலேயே பரிந்துரைக்கப் பட்ட மைத்தாஸ் போன்ற பங்குகள் முதல் வகையை சேர்ந்தவை. முழுமையாக விற்று லாபம் பார்க்கலாம். அதே போல இன்னொரு பதிவில் பரிந்துரைக்கப் பட்ட எஸ் பேங்க் போன்ற பங்குகள் இரண்டாம் மூன்றாம் வகையை சேர்ந்தவை. பகுதியை விற்று விட்டு சற்று விலைகுறையும் வரை பொறுமையாக இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த அறுவடைக் காலத்தை திறமையாக உபயோகிப்பவர்கள் அடுத்த பருவத்தில் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி!
Sunday, October 10, 2010
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!
என்னைப் போன்ற அனைத்திந்திய பணியில் உள்ள வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை முறை ஒரு பணி மாறுதல் உத்தரவில் தலைகீழாக மாறிப் போய் விடுகிறது. அதுவும் பணி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் என்றால் கேட்கவே வேண்டாம். கிராமப் புற/ சிறு நகர சேவைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் படி, கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு நான் இப்போது மாறுதலாகி உள்ளேன். இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த நான், அதுவும் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் பல வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு இங்கே முற்றிலும் புதிய அனுபவங்கள்.
குடி நீர், சாலை வசதி, மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற வாழ்வியல் ஆதார வசதிகள் மிகவும் குறைந்த இது போன்ற பகுதிகள் இந்தியாவின் மறுபக்கமா அல்லது இதுதான் இந்தியாவின் உண்மையான பக்கமா என்ற கேள்வி என்னுள்ளே இப்போது எழுகின்றது.
அதே சமயம் இந்தியாவின் இந்த பக்கத்தை (அல்லது உண்மையான பக்கத்தை) அறிந்து கொள்ள /புரிந்து கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த பணிக்காலத்தைக் கருதுகின்றேன். எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி!
Sunday, July 11, 2010
பணவீக்கம் எனும் சுனாமி!
சமீபத்தில் ஒரு மூத்த முதலீட்டளார் ஒருவருடன் சந்தை நிலவரம் குறித்து விவாதித்து கொண்டிருந்தேன். அந்த நண்பர் முப்பது ஆண்டுகளாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை பத்து ரூபாயில் வாங்கியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொருளாதார அனுபவம் மிகுந்த அவர் கூறிய சில அறிவுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் வியப்பூட்டும் அளவில் வேகமாக வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். தனிப்பட்ட அளவிலும் பலருடைய வருமான அளவுகள் உயர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு குறைவாக ஒருவரது தனிப்பட்ட வருமானம் உயரும் பட்சத்தில் அவரது பாடு திண்டாட்டமாகி விடும். குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வங்கி வைப்புத் தொகை வட்டியில் வாழ்பவர்கள் மேலும் பொருளாதார வேகத்திற்கு ஏற்றபடி தம்முடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கைப் பயணம் (ஒப்பீட்டு முறையில் பார்க்கும் போது) தடுமாறுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்த பாடம் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்குள் ஓய்வு பெற போகிற நம்மைப் போன்ற இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதுவும் கடந்த பல வருடங்களில் பெறப் பட்ட பொருளாதார முன்னேற்றத்தைப் போல பல மடங்கு வேகத்தில் வருங்கால வளர்ச்சி இருக்கும் என்று அந்த நண்பர் கருதுகிறார். அப்போது, நம்முடைய நாற்பது ஐம்பது ஆயிர வருமானமெல்லாம் தற்போதைய மதிப்பில் (Net Present Value) நான்காயிரம் ஐந்தாயிரம் அளவிலேயே இருக்கும் என்று அவர் எச்சரிக்கின்றார். அவர் கருத்துக்களில் வலு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இரண்டிலக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஒவ்வோர் ஆண்டும் நமது பணத்தின் மதிப்பை இருபது முதல் இருப்பதைந்து சதவீதம் வரை குறைக்கின்றது என்பது ஆச்சரியமூட்டும் ஆனால் மறுக்கவியலாத உண்மை ஆகும். அரசியல் லாபங்களுக்காக பொறுப்பில் உள்ளவர்கள் பணவீக்கத்தை கட்டுப் படுத்த விரும்புவது இல்லை. எப்போதும் விரும்பப் போவதுமில்லை. எனவே வருங்காலத்திற்கான தமது சேமிப்பை திறம்பட நிர்ணயிப்பது மற்றும் நிர்வகிப்பது ஒவ்வொருவது முக்கிய தனிப்பட்ட கடமை ஆகும்.
அந்த நண்பர் முதலீட்டிற்கு பரிந்துரைத்தது, சொந்த வீடு, நல்ல பங்குகள் அல்லது பரஸ்பர நிதி மற்றும் ஓரளவுக்கு வைப்பு தொகை ஆகியவை ஆகும்.
ஆகவே நண்பர்களே! பணவீக்கம் பெரியதொரு சுனாமியாக வந்து நம்மெல்லோரையும் அள்ளிக் கொண்டு போகும் முன்னே, நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய சொந்த கடமையாகும்.
இளமையில் சேமியுங்கள், விரைவாக சேமிக்க ஆரம்பியுங்கள், திட்டமிட்டு சேமியுங்கள்.
இப்போது வாராந்திர சந்தை நிலவரம் பற்றி கவனிப்போம்.
சர்வதேச நிதி அமைப்பின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு மற்றும் தவறாத பருவ மழை இந்திய பங்கு சந்தைகளை பெருத்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவு, பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையை சந்தைக்கு தந்திருக்கின்றது. உலக பொருளாதார தடுமாற்றங்கள் இந்தியாவை பெருமளவுக்கு பாதிக்காது என்ற நம்பிக்கையையும் சந்தை இப்போது பெற்றிருக்கிறது.
தன்னுடைய முன்னேற்றத்தை பங்கு சந்தை தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயத்தில் நிபிட்டி 5400 அளவுகளில் தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கும். இந்த எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் பட்சத்தில் சந்தை புதிய உயர்வை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது வர்த்தக வாங்கும் நிலை எடுக்கலாம். முதலீட்டாளர்கள் ஒவ்வொரு சரிவின் போதும் முதலீடு செய்யலாம். முந்தைய பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
இந்த மாதம் காலாண்டு நிதி அறிக்கை மாதம். எனவே முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் நிதி அறிக்கையையும் மேலோட்டமாக அறிந்து கொள்வது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை ஆகும்.
தெளிந்த அறிவுடன் முதலீடுகளை செய்வோம். வருங்காலத்தின் மீதான கவலைகளை விடுவோம்.
வரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
Monday, July 5, 2010
பொறுமையின் எல்லை எதுவரை?
ஒரு பந்த் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவைப் படும். கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற பல முழு அடைப்பு போராட்டங்கள் (மேற்கு வங்கம் மற்றும் கேரளா நீங்கலாக) தோல்வி பெற்றதற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அரசியல் கட்சி இரட்டை நிலைப்பாடும், நீதி மன்றங்களின் தலையீடும் இந்த போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்த இதர காரணங்களாக அமைந்தன. நான் மும்பையில் வசிக்கும் ஐந்து வருடங்களில் (எதிர்கட்சிகள் சார்பில்) முழுமையான பந்த் போராட்டத்தை ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பல முயற்சிகளையும் மீறி இன்றைய போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று சற்று யோசித்தேன். எதிர்கட்சிகளின் செல்வாக்கு, கலவரம் குறித்த மக்களின் அச்சம் ஆகியவற்றையும் மீறி, மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. நிர்பந்தங்கள் இல்லாமலேயே பல தொழிலாளர் மற்றும் சிறு வணிகர் அமைப்புக்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், பணவீக்கம் காகித அளவில் குறைவதை கூட மத்திய அரசு விரும்ப வில்லை என்றே மனதில் படுகின்றது. உலக சந்தையில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் உள்ளூர் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அரசின் நோக்கங்களின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது. அதுவும் பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்திய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பலனளிக்காது போன இப்போதைய சூழலில் மத்திய அரசு ஒரு செயற்கையான விலைவாசி உயர்வை உருவாக்குவது எளிய மக்களுக்கு மனசோர்வையே அளிக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிக்கைகளிலும், இணைய உலகிலும் ஐரோப்பிய தொழிற் கூட்டமைப்பினர் சிலரின் இந்தியா மீதான கருத்துக்கள் வலம் வந்தன. இந்திய அரசு பணக்காரர்களின் கரத்தை வலுப்படுத்துவதற்காக எளிய மக்களின் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவும் எளிய மக்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கு அதிக காலம் பிடிக்காது என்ற தொனியில் அந்த கருத்துக்கள் அமைந்திருந்தன. வேகமாக முன்னேறி வரும் இந்தியாவின் மீது, பொருளாதார தளர்ச்சியில் உள்ள அவர்களுக்கு பொறாமை என்று கூட நான் சந்தேகப் பட்டேன். ஆனால் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த எதிர்கட்சிகளின் பந்த் அழைப்பு இன்று குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்றிருப்பது அவர்களின் கருத்தின் பின்புலத்தை உறுதிப் படுத்துகின்றது.
பொதுமக்களின் துன்பங்களை தொடர்ந்து மத்திய அரசாங்கங்கள் அலட்சியம் செய்தால் இந்தியாவில் பெரிய போராட்டங்கள் தோன்றும் அபாயங்கள் உள்ளன என்பதை கட்டியம் கூறும் நிகழ்வாகவே இன்றைய முழு அடைப்பு போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு, எளிய மக்களின் துயரை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் அவர்களின் துயரத்தை அதிகப் படுத்தாமல் இருப்பது நம் நாட்டிற்கு இந்த அரசாங்கம் செய்யும் பெரிய தொண்டு என்றே நினைக்கிறேன்.
நன்றி!
Sunday, June 20, 2010
சீன (யுவான்) நாணயத்தின் சீரமைப்பு - ஒரு இந்திய பார்வை!

இப்போது நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது, மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதே சமயம், கட்டுப்பாட்டினை குறைப்பதற்கான கால அட்டவணையை சீன அரசு தெளிவாக வெளியிடாததும், டாலருக்கு எதிராக யூரோ நாணயம் ஏற்கனவே பெருமளவுக்கு சரிந்திருப்பதும் கவனிக்க தக்கவை. எனவே உடனடியாக பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அதே சமயம், சீனா மீதான நிர்பந்தங்களை மற்ற நாடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், சீனா தனது ஏற்றுமதி விலை சாதகத்தினை பெருமளவுக்கு இழந்து விட வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது உலக வர்த்தகம் மீண்டும் ஒரு சமநிலையை எய்ய வாய்ப்புக்கள் உள்ளன.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு சில எதிர்வினைகளும் உள்ளன. சீன ஏற்றுமதியாளர்கள் பாதிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் வழங்கியுள்ள சீன வங்கிகள் திவாலாக வாய்ப்புக்கள் உள்ளன. சீன ஏற்றுமதி குறைந்தால் "பொருட்கள் சந்தை"யிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம். ஏற்கனவே பல பதிவுகளில் கூறியுள்ளபடி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதித்தால் அந்நாட்டில் (ரத்தகளரியுடன் கூடிய) அரசியல் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நிலையை சந்தைகள் விரும்பாது என்றே நினைக்கிறேன்.
பொருளாதார ரீதியாக பார்க்கும் போது, சீனாவின் முடிவு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்திதான். அவர்களின் போட்டியிடும் திறமை உலக சந்தைகளில் அதிகமாக நல்வாய்ப்புக்கள் உள்ளன. சீன இறக்குமதி (போட்டி) பொருட்களின் விலை இனி அதிகமாகும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூட ஒருவகையில் மகிழ்ச்சி கொள்ளலாம். அதே சமயம் உள்நாட்டு (சீன பொருட்கள்) நுகர்வோர்களுக்கு விலையேற்ற பாதிப்பு உண்டு.
இப்போது பங்கு சந்தைக்கு வருவோம். உலக சந்தைகளின் சாதகமான போக்கும் அந்நிய முதலீட்டாளர்களின் மீள்வரவும் இந்திய பங்குகளை சென்ற வாரம் வெகுவாக உயர்த்தின. இந்திய நிறுவனங்கள் பெருமளவுக்கு முன்-வருமான வரி செலுத்தியதும் சந்தைகளை மகிழ்ச்சியுற செய்தன. அதே சமயம் ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்ட அறிவிப்புக்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.
வரும் வாரம் "மாதாந்திர எதிர்கால வர்த்தக நிலை" முடிவை ஒட்டி, சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் நாணய சீரமைப்பு முடிவு இருபக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். லார்சன் நிறுவன பங்குகள் புதிய உயரத்தினை காணும் பட்சத்தில், வர்த்தகர்கள் வாங்கும் நிலை எடுக்கலாம். மற்ற ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.
நிபிட்டி 5200 க்கு மேல் இருக்கும் வரை வாங்கும் நிலை எடுக்கலாம். அடுத்த எதிர்ப்பு 5400 க்கு அருகாமையில் இருக்கும். மற்றபடிக்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
Friday, June 18, 2010
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எப்படி?

முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிருங்கள். காரணங்கள் கீழே.
1. புதிய திட்டங்களில், விளம்பர செலவினம், தரகு போன்ற செலவின தொகைகள் அதிகமாக இருக்கும். அந்த செலவினத்தொகைகள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் மீதுதான் சுமத்தப் படும். எனவே நிதியின் செயல்பாடு வெகுவாக பாதிக்கும்.
2. புதிய திட்டங்களுக்கு எந்த ஒரு வரலாறும் கிடையாது. பழைய வெற்றிகள் வருங்காலத்திற்கு உத்திரவாதம் அளிக்காது என்றாலும், குறிப்பிட்ட திட்டத்தின், பரஸ்பர நிதியின் மற்றும் நிதி மேலாளரின் திறமை பற்றி கணிக்க "வரலாறு ரொம்பவும் முக்கியம்" நண்பர்களே!
3. நடப்பு பரஸ்பர நிதித் திட்டங்களில் நாம் முதலீடு செய்யும் போது, அந்த பணம் கால தாமதம் இல்லாமல் பங்கு சந்தைக்கு போகின்றது. ஆனால் புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் பணம் பங்கு சந்தைக்கு போக சிறிது கால அவகாசம் பிடிக்கின்றது.
4. தரகர்கள் ஆசைக் காட்டுவது போல புதிய நலத்திட்டங்கள் மலிவான விலையில் ஒருபோதும் கிடைப்பதில்லை. அதே போல ஒரு திட்டத்தின் உள்ளிருப்பு மதிப்பு (NAV), அது எவ்வளவு குறைவு அதிகமாக இருந்தாலும், நிதியின் செயல்பாட்டை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
ஆக மொத்தத்தில், நிருபிக்கப் பட்ட நடப்பு திட்டங்களில் (Existing Schemes with Proven Track Record) முதலீடு செய்வதையே நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.
சந்தையில் ஏராளமாக உள்ள நடப்பு நிதி திட்டங்களில் நாம் ஒரு நிதி திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்று இனிமேல் பார்ப்போம்.
ஏற்கனவே சொன்னபடி வரலாறு ரொம்பவும் முக்கியம். ஒரு திட்டம் கடந்த சில ஆண்டுகளில், எவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது என்பதை பார்ப்பதை, வருமான அளவு எவ்வளவு சீராக உள்ளது (Consistent Performance) என்பதை ஆராய்வதே சிறந்தது. உதாரணத்திற்கு, சந்தை சிறப்பாக இருக்கும் போது அந்த நிதியின் செயல்பாட்டை விட, சந்தை சரிவின் போது நிதியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதே முக்கியம்.
அதே போல, நிதி மேலாளரின் முன்னனுபவம் எவ்வளவு, அந்த அனுபவம் சிறப்பானதா என்பதையும் பார்க்க வேண்டும். குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி காண முனையும் நிதி மேலாளர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், நிதியின் செலவினங்கள் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். (இந்த தகவல்களை எளிதாக இணையத்தில் சேகரிக்க முடியும்).
நிதி திட்டத்தின் நோக்கங்கள் (Objectives and Investment Strategy) யாவை என்பதையும் கவனிக்க வேண்டும். நிதி திட்டத்தின் நோக்கங்கள் முதலீட்டாளரின் நோக்கங்களுடன் ஒத்துப் போக வேண்டும். உதாரணத்திற்கு, ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புபவர்கள் விரிவார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (Diversified Schemes) முதலீடு செய்யலாம். ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்புபவர்கள் சிறிய நிறுவன பங்கு திட்டங்களில் (Small & Mid Cap Funds) முதலீடு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட துறை (உதாரணத்திற்கு மென்பொருள்) சிறப்பாக செயல் படும் என்று நம்புபவர்கள், துறை சார்ந்த திட்டங்களில் (Sector Funds) முதலீடு செய்யலாம். வருமான வரி தவிர்க்க விரும்புபவர்கள் பங்கு சிறுசேமிப்பு திட்டங்களில் (ELSS) முதலீடு செய்யலாம். முக்கிய பங்குக் குறியீடுகளின் வளர்ச்சியின் லாபத்தை நேரடியாக பெற விரும்புபவர்கள் குறியீட்டு நிதி திட்டங்களில் (Index Funds/Exchange Traded Funds) முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்க நிதிகளில் முதலீடு செய்யலாம்.
மேலும், அந்த பரஸ்பர நிதியில் தற்போதைக்கு உள்ள பங்குகள் யாவை என்பதையும் பார்க்க வேண்டும். அந்த பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு தோராய கணிப்பு முக்கியம். மேலும் மிக அதிகமான பங்குகளின் இருப்போ அல்லது மிகக் குறைந்த பங்குகளின் இருப்போ, ஆக இரண்டுமே பரஸ்பர நிதியின் செயல்பாட்டை பாதிக்கும்.
இப்போது ஒருவர் எத்தனை நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
ஒருவர் ஏராளமான நிதி திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒரே நிதி மேலாளர் நிர்வகிக்கும் இரண்டு திட்டங்கள் தேவையில்லை. அதே போல ஒரே நோக்கத்துடன் உள்ள இரண்டு நிதிகளும் அனாவசியம். ஒருவர் நான்கு முதல் ஐந்து வரையிலான திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விரிவடைந்த நிதி திட்டங்கள், ஒரு சிறிய பங்கு நிதித்திட்டம் (ரிஸ்க் விருப்பத்தைப் பொருத்து), ஒரு துறை சார்ந்த திட்டம், ஓரிரண்டு வரி தவிர்ப்பு திட்டங்கள், ஒரு குறியீட்டு திட்டம் என்று நாம் திட்டமிட்டு செயல்படலாம்.
இப்போது எப்போது முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
பங்கு சந்தையின் போக்கை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள், ஒவ்வொரு சரிவின் போதும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். சந்தையின் போக்கை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்களுக்கு வரப்ரசாதமாக அமைந்தவை மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் (Systematic Investment Plan ) ஆகும். இவற்றில் முதலீடு செய்வது நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தர மிக அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.
என்னுடைய கணிப்பின் படி எந்தெந்த திட்டங்கள் (இப்போதைக்கு) நன்றாக செயல் படுகின்றன என்பதையும் நான் இங்கு பதிய விரும்புகிறேன்.
1. விரிவார்ந்த பரஸ்பர (பெரிய பங்குகள்) நிதி திட்டங்கள் - HDFC Equity Fund அல்லது HDFC Top 200 Fund
2. விரிவார்ந்த பரஸ்பர (சிறிய பங்குகள்) நிதி திட்டங்கள் - IDFC Premier Equity Plan A
3. வருமான வரி திட்டங்கள் - Fidelity Tax Advantage Plan
4. முக்கிய குறியீடுகளின் திட்டங்கள் - Nifty BeES & Junior Nifty BeES.
உங்களுடைய முதலீடுகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்!
நன்றி!
டிஸ்கி: பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்னர், பரஸ்பர நிதி திட்ட விண்ணப்பத்தில் உள்ள மற்ற டிஸ்கிகளை படிக்கவும்.
Sunday, June 13, 2010
பொருளாதார வளர்ச்சி Vs பணவீக்கம்
உலக பொருளாதார சிக்கலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பொருளாதார (GDP) வளர்ச்சி பிரமிக்க தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்ற காலாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. பணவீக்கமான பத்து சதவீதத்தையும் சேர்த்துக் கொண்டால், நடப்பு விலைவாசியின் படி பொருளாதார வளர்ச்சி (GDP at current Prices) பதினெட்டு சதவீதத்திற்கும் மேல். ஓரிரண்டு சதவீதத்திற்கு மேல் வளர்வதற்கே மூச்சு முட்டும் மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி அசாதாரணமானதுதான். மற்ற புள்ளி விபரங்களும் இந்தியாவின் பொருளாதார மீட்சியை தெளிவாகவே பறை சாற்றுகின்றன. ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழிற் வளர்ச்சியோ (Industrial Production) பதினேழுக்கும் மேலே இருந்திருக்கிறது. தொழிற் நம்பிக்கை குறியீடு (Manufacturing Confidence) ஐம்பதுக்கும் மேல். உள்நாட்டின் கார் விற்பனை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அலைவரிசை விற்பனையில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிட்டியுள்ளது.
இப்படி பல பொருளாதார புள்ளி விபரங்களும் இந்தியாவின் முன்னேற்றத்தை புடம் போட்டுக் காட்டுகின்றன. அன்றாட வாழ்வில் கூட, நம்மால் இந்த வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. முன்போல குறைந்த ஊதிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. பொது மக்கள் கையில் பணபுழக்கம் அதிகமாகி வருகிறது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள். மூன்று வேளை சாப்பிட்டவர்கள் உணவின் தரத்தை அதிகப் படுத்துகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.
மேற்சொன்ன நல்ல விஷயங்களுக்காக சந்தோசப் படும் அதே நேரத்தில், இந்தியாவில் வளர்ச்சிக்கு வில்லன்களாக நான் இப்போதைக்கு கருதுபவை, சமூகமெங்கும் புரையோடிப் போயுள்ள ஊழல், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அடிப்படை கட்டுமான வசதிகள் குறைபாடு, அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலக பொருளாதார தளர்ச்சி மற்றும் விஷம் போல ஏறி வரும் பணவீக்கம். இவற்றோடு, இவற்றின் மீது அதிகாரத்தில் உள்ளோரின் அக்கறையின்மையையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இந்த பதிவின் தலைப்பான பணவீக்கத்தை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.
பணவீக்கத்தினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் அலசப் பட்டுள்ளது. நேர அவகாசமிருந்தால் இந்த பதிவை படித்து விட்டு வாருங்கள்.
மேற்சொன்ன பதிவில் குறிப்பிட்டுள்ளபடி பணவீக்க சுழற்சியின் முதல் பாதி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமைந்திருப்பதை நம்மால் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது. பொதுமக்களின் கைகளில் அதிக பணபுழக்கம், நுகரும் பொருட்களின் தேவையை அதிகப் படுத்தி உற்பத்தியை ஊக்குவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் குறைவான வட்டிவீதம், தொழில் அதிபர்கள் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வைத்துள்ளது. அரசாங்கமும் தனது மீட்சி நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
இப்போது பணவீக்க சுழற்சியின் இரண்டாவது விரும்பத்தகாத பாகம் ஆரம்பித்துள்ளது என்று நினைக்கிறேன். அடிப்படை பொருட்களின் விலை உயர்வு (Primary Articles Inflation) பதினேழு சதவீதத்திற்கும் மேல் என சென்ற வார புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலை நல்ல பருவமழைக்கு பின்னே கட்டுக்குள் வந்து விடும் என்றும் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த மத்திய வங்கி மற்றும் அரசுக்கு இந்த தகவல் ஒரு எச்சரிக்கை மணி என்று கருதுகிறேன். இன்றைய பணவீக்கத்தின் உயர்வுக்கு காரணம், உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மட்டுமல்ல, பொதுமக்கள் புழக்கத்தில் மற்றும் பதுக்கல் பேர்வழிகள் கையில் உள்ள ஏராளமான பண இருப்பும்தான் என்பதை மத்திய வங்கி புரிந்து கொள்ள வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.
பணவீக்கம் இதற்கு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப் பட்டால், நிறுவனங்களின் உற்பத்தி செலவினங்கள் உயரும் வாய்ப்புள்ளது. உற்பத்தி பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் போது பொதுமக்களின் தேவைகள் குறையும். அதிகப் படியான பணப்புழக்கம், கையிருப்பு பணத்தின் மதிப்பை வெகுவாக குறைத்து விடும். பதுக்கல் இன்னமும் அதிகமாகும். செயற்கையான பொருள் தட்டுப்பாடுகள் உருவாக்கப் படும். மொத்தத்தில் அதிகப் படியான, கட்டுக்கடங்காத பணவீக்கம் பொருளாதாரத்திற்கு ஏராளமான பாதிப்புக்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. சொல்லப் போனால் பொருளாதார வளர்ச்சி பெருமளவுக்கு பாதிக்கும்.
எனவே, பங்கு சந்தையின் கவனம் இப்போதைக்கு, பணவீக்கத்தின் போக்கு மற்றும் மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப் படுத்த எடுக்கின்ற நடவடிக்கைகளின் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்கிறேன். அதே சமயம், எப்போதும் போல உலக சந்தைகளின் போக்கு, குறிப்பாக ஐரோப்பிய கடன் விவகாரம் ஆகியவற்றின் தாக்கம் இந்திய சந்தைகளின் மீது தொடரும்.
சென்ற பதிவிலேயே சொன்னபடி நிபிட்டி 4950 க்கு அருகே அரணைக் கொண்டிருக்கும். 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்ச்சரிகையை தொடர்வது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Saturday, June 12, 2010
தமிழகம்! ஜாக்கிரதை!
இந்தியாவை பொறுத்த வரை பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப் படாத மாநிலமாகத்தான் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வந்த செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில்வே துறை ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடுகள்தான் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் சந்திக்கவிருந்த மிகப் பெரிய விபத்தினை தவிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டம் இது என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.
ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது என்றாலும், சதி வேலையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள் மற்றும் சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
வட மாநிலங்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் பயங்கரவாதத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவன் நான். அந்த வகையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. சதிக்கும்பலை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் எதிர்கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நன்றி!
Thursday, June 10, 2010
மன்னிப்பு - ஒவ்வொருவரது அகராதியிலும் இருக்க வேண்டிய வார்த்தை!
சென்ற வாரம் முழுதும் தமிழ் கூறும் பதிவுலகம் பரபரப்பாக இருந்தது. பதிவுலகத்தின் வெளிவட்டத்தை மட்டுமே சார்ந்தவன் என்றாலும், "கூட்டமாக இருந்தால் எட்டிப்பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும்" என்பதால் நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். தீர்ப்பு அல்லது தீர்வை விடுங்கள், குறைந்த பட்ச கருத்தை சொல்லும் அளவுக்கு கூட, சம்பந்தப் பட்ட பிரச்சனையைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் எனக்கு மிகக் குறைவாக இருந்ததால், "கோட்டுக்கு அந்த பக்கமே" இருந்து விட்டேன். பெண்ணியம், ஆணாதிக்கம், பார்ப்பனியம் என புரிந்து கொள்ள சிக்கலான பல வார்த்தைகளுக்கு இடையே அடிக்கடி உச்சரிக்கப் பட்ட "மன்னிப்பு" என்ற ஒரு வார்த்தை, என்னுள் வேறு சில நினைவுகளை வரவழைத்தது. அந்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
டாக்டர்.வேனி டபுள்யு டயர் (Dr.Wayne W Dyer) என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனை செய்யப் பட்ட "ஆளுமை வளர்ச்சி" தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கதான "Your Erroneous Zones" யை எழுதியவர். இவர் எழுதிய இரண்டாவது புத்தகம் "You 'll See It When You Believe It". இந்த புத்தகத்தின் முன்னுரையில் இவரது வாழ்வில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். அந்த சம்பவங்களை அவரது சொந்த வரிகளில் (சாராம்சம் மட்டும்) இங்கே பதிகிறேன்.
"எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே எனது தந்தை, எங்கள் குடும்பத்தை கை விட்டு விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதற்கு எனது தாயார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய தந்தையைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நான் கேள்விப் பட்ட விஷயங்கள் அனைத்தும் தவறானவைதான். குடிகாரர், மனைவியை கொடுமைப் படுத்தியவர், நேர்மையற்றவர், சட்டத்தை மீறியவர், சிறைக்கு சென்றவர் இன்னும் பல. அவரை நேரில் பார்த்திரா விட்டாலும், அவரின் பிம்பம் எனது மனதில் (மற்றவர்களின் வர்ணனை வாயிலாக) ஆழமாக பதிந்து வந்தது. அவரைப் பற்றி அதிகம் கேள்விப் பட, கேள்விப் பட அவர் மீதான வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. வெறுப்பு அதிகமாக அதிகமாக அவரை பற்றிய (வன்மம் நிறைந்த) ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில், எனது கனவுகளில் எனது தந்தையின் பிம்பம் வர ஆரம்பித்தது. அந்த பிம்பத்துடன் நான் சண்டையிட ஆரம்பித்தேன். சண்டைக்கு இடையே அலறிக் கொண்டு எழுந்த சம்பவங்களும் உண்டு.
பெரியவனான பின்னரும், கனவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவரை என்றாவது ஒரு நாள் சந்தித்து அவரை கேள்விக் கணைகளால் துளைக்க வேண்டும் என்று விரும்பினேன். எத்தனையோ ஊர்கள், வேலைகள், மனைவிகள், குடும்பங்கள் என்று மாறிக் கொண்டே இருந்தவரை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வாழ்வியல் போராட்டங்களும் அந்த முயற்சிகளுக்கு அதிக நேரம்/ சக்தியை வழங்கவில்லை.
நியூ ஓர்லேன்ஸ் என்ற ஊரில் அவர் இறந்து விட்டதாக உறுதிபடுத்த முடியாத தகவல் வந்தது. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்கள் நிறைந்த அன்றைய சூழலில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த நான் முனைய வில்லை. ஆனால் வன்மங்களும், போராட்ட கனவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சொல்லப் போனால் சிக்கலான கால கட்டங்களில் கனவின் வருகை அதிகமானது. மனதின் துன்பமும் அதிகரித்துக் கொண்டே போனது.
சில வருடங்கள் கழித்து, நியூ ஓர்லேன்ஸ் நகரத்திற்கு அருகே எனது அலுவல் தொடர்பாக செல்ல வேண்டியிருந்தது. கல்லறை நிர்வாகியிடம், புதைக்கப் பட்டது அவர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, அங்கே சென்றேன். கல்லறையின் முன்னர் அமர்ந்து கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் "உயிரற்ற அந்த மனிதரிடம்" உரையாடினேன். சுற்றுப்புறத்தை மறந்து சத்தம் போட்டு அழுதேன். "ஒரு கல்லறை மனிதரை" பதில்கள் தர வேண்டி கட்டாயப் படுத்தினேன்.
நேரம் செல்ல செல்ல எனது மனது இளகியது. ஒரு வித நிச்சலன நிலை அங்கே நிலவியது. எனது தந்தையே அருகில் இருப்பது போல ஒரு உணர்வு அப்போது தோன்றியது.
மீண்டும் "இல்லாத அவரிடம்" பேச ஆரம்பித்தேன்.
"உன்னிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த நிமிடத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது. உன்னுடைய வாழ்க்கையை ஏன் அப்படி வாழ்ந்தாய் என்று எனக்குத் தெரியாது. அந்த (கேடுகெட்ட) வாழ்க்கைக்காக நீ என்றாவது வருந்தினாயா என்றும் தெரியாது. உன்னுடைய எண்ணங்கள் எப்படி இருந்திருந்தாலும், உன்னைப் பற்றிய தீய எண்ணங்களை இன்றுடன் நான் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். உன்னுடைய வாழ்வை (அந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப) எப்படி வழி நடத்த நேரிட்டதோ, அதன்படியே நீ வாழ்ந்தாய் என்று எனது மனதில் சொல்லிக் கொள்கிறேன். உன்னைப் பற்றிய தவறான நினைவுகள் நம்மிடையே இனி தடையாக இருக்க வேண்டாம். உன்னிடம் நான் காட்ட விரும்புவது என்னுடைய உண்மையான அன்பை மட்டுமே. இப்போது உனக்கு எனது அன்பை தருகிறேன். நீ எனது களங்கமற்ற அன்பை பெற்றுக் கொள்"
அந்த கணத்தில் "மன்னிப்பின்" மகத்துவத்தை என்னால் உணர முடிந்தது. அது வரை மன்னிப்பை பற்றி அறிந்திராத நான் எனது வாழ்வின் மிகப் புதிய அனுபவத்தை உணர்ந்தேன். மனம் முழுக்க தூய்மை அடைந்தது போலவும், மனம் இலவம் பஞ்சு போல எடையற்றுப் போனது போலவும் உணர்ந்தேன்.
இந்த அனுபவத்திற்கு பின்னர் என் வாழ்வில் நிகழ்ந்தது எல்லாம் சரித்திரம். அமெரிக்க புத்தக வரலாற்றில் சரித்திரம் படைத்த "Your Erroneous Zones" புத்தகத்தை இலகுவாக எழுதி முடித்தேன். மேடைப் பேச்சுகளின் போது குறிப்புகளின் அவசியம் இல்லாமல் போனது. எனது மேடை பேச்சுக்கள் மக்களை ஈர்த்தன. தனிப்பட்ட வாழ்விலும் முன்னேற்றம் நேரிட்டது.
இன்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். வன் உணர்வுகளால் துன்பப் பட்டுக் கொண்டிருந்த, வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த என்னை முழுமையாக மாற்றியதும் வாழ்வில் உயர்த்தியதும், நான் "மன்னிக்க" முன் வந்த அந்த தருணம்தான்."
இப்போது நமது பதிவுக்கு மீண்டும் வருவோம்.
கோபம் அல்லது வன்மம் அவற்றை "கொண்டவருக்குத்தான்" அதிக (மனரீதியான) துன்பங்களை விளைவிக்கின்றன. மன்னிப்பு என்பது அதுவரை வலியுடன் சுமந்து வந்த ஒரு (மன) பாரத்தை இறக்கி வைத்து விடும் ஒரு செயல் என்றே கருதுகிறேன். மன்னிப்பின் போது மன்னிக்கப் பட்டவரை விட மன்னிப்பவருக்கே மனரீதியான அதிக பலன்கள் கிடைக்கின்றது என்பது நடைமுறை உண்மை.
இதை உணர வேண்டுமானால் உடனடியாக மன்னிக்க ஆரம்பியுங்கள்.
(இந்த பதிவில் ஏதேனும் குறைகள் இருப்பது போல உணர்ந்தீர்கள் என்றால், மன்னிப்பை இந்த பதிவரிடமிருந்தே கூட ஆரம்பிக்கலாம்)
நன்றி!
Sunday, June 6, 2010
அடுத்தது ஹங்கேரி?
கிரீஸ் மற்றும் ஸ்பெயின் கடன் சிக்கல் அலை ஓய்ந்து முடிவதற்குள்ளேயே, ஹங்கேரி அலை இப்போது உலக சந்தைகளை தாக்க ஆரம்பித்துள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைப் போலவே ஹங்கேரியும் கடன் சிக்கலில் தவிப்பதாக வந்த செய்திகளை அந்த நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக மறுத்துள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை விட தற்போது மோசமாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐரோப்பிய நாடுகளின் தவறான சமூக பொருளாதார கொள்கைகளே அவற்றின் இப்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
சென்ற நூற்றாண்டின் மத்திய காலம் வரை உலகின் பெரும்பகுதியை காலனியாதிக்கம் செய்தவை ஐரோப்பிய நாடுகள் ஆகும். தொழிற் புரட்சி மற்றும் காலனியாதிக்கத்தின் சுரண்டல் வாயிலாக செல்வ செழிப்பு நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் அப்போது விளங்கி வந்தன. ஆனால் இரண்டாவது உலகப் போர் மற்றும் புதிய சுதந்திர நாடுகளின் உதயம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் செல்வாக்கை பெருமளவுக்கு குறைத்தன. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்நுட்ப வளர்ச்சி இன்னும் கூட பலகாலம் வரை அந்த நாடுகளை செல்வந்த நாடுகளாகவே நீடிக்க உதவியது.
சீனா மற்றும் கிழக்காசிய நாடுகள் உலகின் தொழிற்சாலையாக மாற ஆரம்பித்த பிறகு, இந்த நாடுகளில் உள்ள மலிவான மனித மூலதனம் ஐரோப்பிய நாடுகளின் "போட்டியிடும் சக்தியை" வெகுவாக குறைத்தது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தனது குடிமக்களுக்கு உயர்தர கட்டுமான வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக வெகுவாக செலவு செய்வதை குறைக்காமல் தொடர்ந்தே வந்தன. பொருளாதார தேக்கம் ஏற்பட்ட பின்னரும் கூட இந்த நாடுகளின் மக்களாட்சி அரசாங்கங்கள் தமது செலவினத்தை குறைக்காமல் தொடர்ந்ததால், இவற்றின் கடன் அளவு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போனது.
"டாலர் சுழற்சி முறை" சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த நூற்றாண்டின் துவக்க காலம் ஐரோப்பிய நாடுகளின் குறைகளை மூடி மறைக்க வெகுவாக உதவியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நேரிட்ட "பொருளாதார சிக்கல்" காரணமாக, உலகெங்கும் உள்ள அனைத்து அரசாங்கங்களும் அதிக செலவினங்களின் மூலம் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடிவு செய்ததால், ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னிலும் அதிகமாக தமது செலவினத்தை தொடர்ந்து வந்தன. ஆனால், அமெரிக்க மற்றும் இந்திய-சீனா போல பொருளாதார மீட்சி ஐரோப்பாவில் சிறப்பாக அமையாததால், ஐரோப்பிய நாடுகள் கடன் சிக்கலில் வெகுவாக மாட்டிக் கொண்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய கடன் சிக்கலை போக்குவதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு சுமார் ஒரு டிரில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அறிவித்திருந்தாலும், இந்த திட்டம் சிக்கலை தீர்க்காது என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். ஒரு கடனாளியால் இன்னொரு கடனாளியின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே இவர்களின் வாதம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
ஐரோப்பிய கடன் சிக்கலுடன் அமெரிக்காவின் மோசமான வேலைவாய்ப்பு அறிக்கையும் சேர்ந்து கொள்ள, சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. ஆசிய சந்தைகள் நாளை இந்த வீழ்ச்சியை தொடர வாய்ப்புள்ளது.
இப்போது இந்தியாவிற்கு வருவோம்.
ஐரோப்பாவின் கடன் சிக்கல் இந்தியாவின் ஏற்றுமதி துறைகளை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவின் கருப்பு பொருளாதாரத்தில் தற்போது குவிந்துள்ள ஏராளமான பணம் இந்தியாவின் வளர்ச்சி பெருமளவு மட்டுப்படாமல் இருக்க உதவும் என்றே நம்புகிறேன். சென்ற வாரம் வெளியிடப் பட்ட பொருளாதார வளர்ச்சி அரசின் முந்தைய எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்துள்ளது. மேலும் மே மாத வாகன விற்பனை வளர்ச்சி, குறிப்பாக மாருதி நிறுவன கார்களின் விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுகின்றது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்தாலும் மத்திய அரசு அதைப் பற்றி அதிக அக்கறை கொல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியம் கொடுப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஏற்கனவே சொன்னபடி இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தை சார்ந்த (வங்கித்துறை, வாகனத்துறை, பெட்ரோலிய விற்பனைத்துறை) நிறுவனங்களின் பங்குகளில் (சரிவின் போது) முதலீடு செய்யலாம். ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வணிகத் தொடர்பு உள்ள நிறுவனங்களை தவிர்க்கலாம். (இந்த பதிவில் தவிர்க்கும்படி அறிவுறுத்த பட்ட டாடா ஸ்டீல் பங்கு சென்ற சில வாரங்களில் பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது)
ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 4950 புள்ளிகளுக்கு அருகே வரும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். வர்த்தகத்தில் புதிய நிலை எடுப்பவர்கள் 5150-5200 அளவை நிபிட்டி முழுமையாக கடந்த பிறகு வாங்கும் நிலை எடுக்கலாம். மற்றபடிக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Sunday, May 30, 2010
(பண) மழை வருமா?

அதே சமயத்தில், சென்ற வாரம் நமது சந்தை முடிவடைந்த பிறகு வெளிவந்த சில தகவல்கள் வரும் வாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டின் ரேட்டிங் குறைப்பு ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய வலுவற்ற தன்மையையும், கடன் நெருக்கடியையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. மேலும் அமெரிக்க பொருளாதார தகவல்களும், அந்த நாட்டின் பொருளாதார மீட்சி அதிக வலுவில்லாமல் இருப்பதையே காட்டுகின்றன.
ஏற்கனவே சொன்னபடி, இந்தியாவின் வளர்ச்சி இன்னும் பல காலத்திற்கு தொடரும் என்றாலும் உலக நிகழ்வுகள் இந்தியாவில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய பங்கு சந்தையும் கூட நீண்ட கால நோக்கில் பெருமளவுக்கு வளர்ச்சி பெறும் என்றாலும், குறுகிய கால நோக்கில், பங்கு சந்தையின் முன்னேற்றம் அந்நிய முதலீட்டாளர்களின் மனப்போக்கை சார்ந்தே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் வாரம் வெளியிடப் படவுள்ள இந்திய பொருளாதார வளர்ச்சி (GDP Quarterly Growth) பற்றிய அறிக்கை, சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய வானிலை கழகம் எதிர்பார்த்த படி வரும் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்குகிறதா என்பதையும் சந்தை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பர். மேலும் இந்திய உற்பத்தி நிலை அளவு (PMI Manufacturing Index), அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை, ஐரோப்பிய கடன் நெருக்கடி நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே சொன்னபடி முதலீட்டாளர்கள் நிபிட்டி அளவு 4950க்கு அருகில், அடிப்படையில் சிறந்த பங்குகளை சிறுகச் சிறுக சேகரிக்கலாம். வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் செய்திகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.
வரும் வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
Saturday, May 15, 2010
ஆண்டி மடம் கட்டிய கதை!
அடுத்த வேளை உணவுக்கும் தூங்குவதற்கும் வசதியில்லாத சில ஆண்டிகள் ஒன்றாகக் கூடி, "தமக்காக பெரிய மடம் கட்டிக் கொள்ள வேண்டும், அங்கே இருபத்து நான்கு மணி நேரமும் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கதை பேசி விட்டு நிம்மதியாக குறட்டை விடுவார்கள் என்ற கதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். சென்ற வாரத்தில் கிரீசுக்கு உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முன்வந்த போது எனக்கு இந்த கதைதான் ஞாபகம் வந்தது. குறிப்பாக ஸ்பெயின் போன்ற நாடுகள், தாமே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் கிரீசுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக உறுதி அளித்தது வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் ஆசிய சந்தைகள் துவங்குவதற்கு முன்னரே உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முனைந்தது சந்தைகளில் Shorting செய்பவரை (குறிப்பாக யூரோ நாணய சந்தையில்) தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக இருந்ததை வெளிக்காட்டியது. நீண்ட கால திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை.
இந்த கெட்டிக்காரர்களின் வேடம் மிகக் குறைந்த காலமே நீடித்துள்ளது. கிரீஸ் மற்றும் வேறு சில நாடுகளின் கடன் சிக்கல் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் ஐரோப்பிய யூனியன் பிளவு படும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல தமது நாணயத்தை தாமே (மத்திய வங்கியின் மூலமாக) வெளியிட்டு, விரும்பியபடி (ஓரளவுக்கேனும்) செலவு செய்யும் அதிகாரம் யூனியன் நாடுகளில் இல்லாதது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளை யூனியனிலிருந்து வெளியேறுவதை பரிசீலிக்கும்படி செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் இப்போதைய கடன் சிக்கலில் இருந்து மீண்டு வந்தாலும், முன்பை போல சந்தைகளில் பணத்தை வாரி இறைக்க முடியாது என்பது நிச்சயம். மேலும், ஏற்கனவே சொன்னபடி ஐரோப்பியா உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றது. ஐரோப்பிய கடன் சிக்கல் உலக பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு என்றே சொல்லவேண்டும். நமது இந்தியாவும் கூட தனது ஏற்றுமதிக்கு பெருமளவில் ஐரோப்பாவை சார்ந்துள்ளது. குறிப்பாக மாருதி, சுஸ்லான் மற்றும் ஐடி நிறுவனங்கள். ஐரோப்பியாவின் பின்னடைவு சீனாவையும் கூட பெருமளவு பாதிக்கும். சீனாவின் தொழிற் உற்பத்தி குறைந்தால் இரும்பு போன்ற தாதுப்பொருட்களின் விலைகள் சரியவும் வாய்ப்புள்ளது.
ஆக மொத்தத்தில் இப்போதைக்கு பங்கு சந்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்வது கடினம். இந்தியாவிலும் கூட தொழிற் உற்பத்தி உயர்வு தொடர்ந்து சிறப்பாக இருந்தாலும், வேகம் மட்டுபட்டிருப்பதும், அரசு மற்றும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் குறைய வில்லை என்பதும் கவனிக்க வேண்டியவை.
ஏற்கனவே சொன்னபடி நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று நிதானம் காட்டுவது நல்லது. நிபிட்டி 4950 க்கு அருகே செல்லும் போது, பங்குகளை மெல்ல மெல்ல (முன்போல) சேகரிக்க ஆரம்பிக்கலாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
Friday, May 14, 2010
கடித்த படி சாரி, படித்த கடி!
ரீசன்ட்டா படித்து ரசித்தது...
ஒரு ஆள் பாக்கெட்ல மொத்தமா Rs.200 இருக்கு... அப்போ 4 ஏழைகள் அவன் கிட்டே வந்து பணம் கேட்கிறார்கள்.... அவன் உடனே ஆளுக்கு 100 ருபாய் கொடுக்கறான்.. எப்படி??
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்ன, மொத்த பணம் 200 ல நாலு பேருக்கு 100 ருபாய் எப்படி கொடுக்க முடியும், தப்பா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
"நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்லே" !!
டிஸ்கி: படித்ததுமே கொஞ்சம் தலை சுற்றியது. அதனால்தான் தலைப்பில் கொஞ்சம் குழப்பம். உங்களுக்கு எப்படி?
நன்றி!
Thursday, May 13, 2010
ஐபிஎல்'லும் ஆஸ்கார் விருதும்!

சராசரி கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக நான் இவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இங்கே.
நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் போன்றவர்கள் நடித்த படங்களில் பல இங்கே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் இதுவரை ஆஸ்கார் விருது ஏன் வாங்க வில்லை என்று யாராவது கேள்வி கேட்கின்றனரா? யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். "அதுவேறு, இது வேறு" என்று. அதே போலத்தான், ஐபிஎல்'லும் ஐசிசி கிரிக்கெட்டும்.
உள்ளூரில் விலை போகும் சரக்குகள் வெளியூரிலும் விலை போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
ஐபிஎல் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவின் முக்கிய பொழுது போக்கு அம்சங்களான கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டின் கூட்டணிதான். கவர்ச்சி, திரில், ஆட்டம்-பாட்டம் அனைத்தும் கூடிய ஐபிஎல் இந்தியர்களிடம் எளிதில் விலை போனது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.
உலகக் கோப்பை எல்லாம் "ஆஸ்கார்" போல. ஏதோ சில நாடுகளின் அணிகள் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு ஒரு முறை விளையாடுவது. அதைப் பற்றியெல்லாம் இந்திய ரசிகர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தேவையானது எல்லாம், "நிறைய மசாலா". அதை ஐபிஎல் நிறையவே தருகின்றது.
இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் அளவுக்கு உயர வேண்டும் என்று சில உலக நாயகர்கள் (?) (அவ்வப்போது) சொல்லிக் கொண்டே மசாலா படங்களை தயாரிப்பது போல, நாமும், இந்திய அணி உலக தரத்துக்கு உயர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அடுத்த ஐபிஎல் போட்டிகளை "என்ஜாய்" செய்வதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.
சூனா பூனா! போ! போ! போயிட்டே இரு!
நன்றி!
Wednesday, May 12, 2010
சாதனையும் வேதனையும் !

சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் கணித்ததற்கு மாறாக வெற்றியாளர்களுக்கு எதுவும் தடையில்லை என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிருபித்துக் காட்டினார்.
அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வோம்.
இப்போது வேதனைக்கு ஆறுதல்!
20-20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து செமி பைனல் வாய்ப்பையும் இழந்து திரும்பி இருக்கிறது டோனி தலைமையிலான இந்திய அணி. தொடர்ந்து பல நாட்கள் உள்ளூரின் சாதகமான ஆடுகளங்களில் சாதாரண பந்து வீச்சாளர்களுடன் மோதியது, இந்திய பேட்ஸ்மென்களின் தயார்நிலையை வெகுவாக பாதித்தது. கோடை வெயில் வீரர்களின் உடல் தகுதியை ஒருபக்கம் பாதிக்க, இன்னொரு பக்கம் இரவு நேர கேளிக்கைகள் அவர்களின் மனரீதியான தயார்நிலையை பாதித்திருக்கின்றன. குறிப்பாக முக்கியமான உலகக் கோப்பைக்கு இடையேயும் கூட "கேளிக்கைகளுக்காக" நான்கு நாட்கள் இந்திய வீரர்கள் முழுமையாக செலவழித்தது அவர்கள் "ஐபிஎல் ஜுரத்திலிருந்து" முழுமையாக வெளிவரவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் போதும். இந்திய அணியினர் மீண்டும் கடவுளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் கவலைப் பட வேண்டியதில்லை.
அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
நன்றி!
Monday, May 10, 2010
Sunday, May 9, 2010
உலக பொருளாதார சிக்கல் - பகுதி - II ?

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் "கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு" வரைமுறைகளை மீறியதால் அவர்கள் கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் காலாவதியாகும் நிலையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், ஏன் ஒரு வங்கியை கூட இன்னொரு வங்கி நம்பாத சூழ்நிலை உருவாகியது. உலக பொருளாதாரம் சில மாதங்கள் வரை ஸ்தம்பித்து காணப் பட்டது. பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சந்தைகளும் சரிவை சந்தித்தன.
அப்போது, பொருளாதார சிக்கலை தீர்க்க வேண்டி, உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிகப் படியான கடனை வாங்கி அந்த கடனின் உதவியால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை நிமிர்த்தின. அதே போல காலாவதியான வங்கிகளுக்கு (கடன் மூலமாக) அதிக மூலதனத்தை அளித்து புத்துயிர் கொடுத்தன. இப்படி சந்தையினையும் வங்கிகளையும் காப்பாற்றிய பல மேலை நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த கடனை திருப்பி தர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கிரீஸ் ஒரு "tip of the ice berg" மட்டுமே என்றும் அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகள் கூட "கடன் சிக்கலில்" தத்தளிக்கும் காலம் விரைவில் வரும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிரீஸ் நாட்டினை காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்கள் முன்வந்தாலும், அவர்களும் கூட மீண்டும் மீண்டும் கடன் வாங்கித்தான் சிக்கலை தள்ளிப்போட முனைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நாளை (10.05.2010) காலை ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு உத்தேச திட்டம் வெளியிடப் படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருப்பது, இவர்கள் நிஜப் பிரச்சினைகளை விட சந்தை சரிவைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.
ஆக மொத்தத்தில் பெருகி வரும் கடன் குவிப்பால் (Spiralling of Public Debt) உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு மந்த நிலைக்கு தள்ளப் பட இப்போதைக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தோன்றுகிறது.
இப்போது நமது சந்தைக்கு வருவோம்.
நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே செல்ல செல்ல லாப விற்பனை செய்யுங்கள் என்றும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் என்றும் இந்த பதிவில் திரும்ப திரும்ப வலியிறுத்தி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன். மேலே சொன்னபடி கிரீஸ் திட்டம் நாளை காலையில் அறிவிக்கப் பட்டு, அந்த திட்டம் சந்தைகளை சந்தோசப் படுத்தும் பட்சத்தில், நிபிட்டி (சந்தையும் கூட) ஒரு தற்காலிக முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன. சரிவில் மிகவும் பாதிக்கப் பட்ட உலோகம் மற்றும் இதர தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.
அதே சமயம் ஐரோப்பா என்பது உலக பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். அங்கே காணப் படும் சிக்கல்கள் மற்ற பகுதிகளையும் நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்துடன் அதிகப் படியான வர்த்தக தொடர்புகள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை (நீண்ட கால நோக்கில்) தவிர்க்கலாம். உதாரணம் டாடா ஸ்டீல் போன்றவை.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Friday, May 7, 2010
நீதிக்கு தலை வணங்குவோம்!

முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.
பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.
மற்றொரு தீர்ப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.
"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)
மேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி!
Thursday, May 6, 2010
பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே.
கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது கண்டமேனிக்கு (ஆரோக்கியமில்லாத) ஆகாரங்கள் உள்ளே போகின்றன.
தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம்.
எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகின்றது. நிறைய பேரிடம் சண்டைக்குப் போகின்றோம். சாலையில் முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுகின்றோம்.
ஒரு சிலர் இன்னும் சில படி மேலே சென்று மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சினையை மறக்க முயற்சிக்கின்றனர்.
மேலே சொன்னவையெல்லாம் உடலையும் மனதையும் இன்னமும் தளர்ச்சியாக்கி பிரச்சினைகளை சமாளிக்கும் (அல்லது தீர்வு காணும்) திறனை குறைக்கின்றனவே தவிர எந்த வகையிலும் நமக்கு உதவியாக இருப்பதில்லை. மேலும் கடைசியாக சொன்ன சில விஷயங்கள் நம்மை மீளமுடியாத அபாயங்களுக்கு தள்ளி விடவும் வாய்ப்புக்கள் உள்ளன.
சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை ஒரு பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட, என்னுடைய இயல்பான பழக்க வழக்கங்கள் (பதிவுகள் உட்பட) பலவும் மாறிப்போய் விட்டன. ஒரு வித மந்தமான மனநிலை புதிய சிந்தனைகளை வரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தன. அப்போது என்னை சந்திக்க வந்த ஒருவர் சில கருத்துக்களைக் கூறினார். அவரது பாசிட்டிவான சில கேள்விகள் எனது மனநிலையை வெகுவாக மாற்றியது.
'அதாவது எண்ணங்களை பதிவு செய்வது (Documentation of thoughts) என்ற ஒரு நல்ல விஷயத்தை (பதிவு வலை) ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டார். பிரச்சினைகள் வரும் போகும். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிராமல் நம்மிடமுள்ள நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். உடனடியாக எழுத ஆரம்பியுங்கள் என்றும் கூறினார்.'
எனக்கு புரிந்த வரையில் எவ்வளவு பெரிய கடுமையான காலகட்டமாக இருந்தாலும், ஒருவரது நல்ல பழக்க வழக்கங்களை நிறுத்தி விடக் கூடாது. சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். உதாரணம், உடற்பயிற்சி, நல்ல புத்தகங்கள், அன்றாட கடமைகளை பெண்டிங் வைக்காதது, சுகாதாரமான உணவு, சிறிய சுற்றுலா போன்றவை. இவை மனதிற்கு சற்று ஓய்வு தருவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் பலத்தை தருகின்றன.
மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சினையுமே நமது வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நாமில்லா விட்டால் பிரச்சினைகளும் இல்லை. ஒரு சிஸ்டத்தை விட அதன் சப் சிஸ்டம் ஒருக்காலும் பெரியதாக இருக்க முடியாது. எனவே நாம் எப்போதுமே நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் விட பெரியவர்கள்தான்.
பிரச்சினையை வாழ்வின் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்வை விட பெரியது (larger than life) என்ற தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காமல் இருந்தாலே அவற்றை ஓரளவுக்கு எளிதாக சமாளித்துவிடலாம் என்று நம்புகிறேன்.
நன்றி!
டிஸ்கி: இந்த பதிவை எழுதும் வரை பிரச்சினைகள் முற்றுப் பெற வில்லை என்றாலும், இயல்பான உற்சாகமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு முழுமையாக திரும்பியது பிரச்சினைக்கான பாதி தீர்வை ஏற்கனவே தந்து விட்டது.
Monday, April 26, 2010
நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

மரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே.
நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:
(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;
செய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)
தண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.
கிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.
பழங்குடியினருக்கும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :
வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர் பழங்குடியினரிடையே S T 47 %
தலித்துளில் S C 37 %
பிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%
மற்றவர் 16%
தலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்றுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)
இது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.
கிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.
ஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.
அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை;! ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).
தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா? அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.
இந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.
ஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).
பழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;
நன்றி!
Sunday, April 25, 2010
அடங்காத காளையும் விடாத கரடியும்!

கிரீஸ் நாட்டின் நிதி நிலை முன்னர் எதிர்பார்த்ததை விட மோசமாகவே இருக்கின்றது என்ற தகவலும் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை ஆபத்தான வளர்ச்சியை கண்டிருப்பதால் அந்த நாட்டின் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற ஊகமும் இந்திய பங்கு சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. (ஆறின கஞ்சி பழங்கஞ்சி?). அதே சமயம் மற்ற சந்தைகளை விட நமது சந்தை பலமுறை லேட்டாகவே ரியாக்ஷன் செய்திருக்கிறது என்பதையும் அந்த ரியாக்ஷன் ஓவர் ரியாக்ஷனாக இருந்திருக்கிறது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. (லேட்டானாலும் லேட்டஸ்ட்?).
சென்ற வாரம் சந்தை வெளிவந்த ரிலையன்ஸ் காலாண்டு நிதியறிக்கை எதிர்பார்த்ததை விட மோசமாகவே அமைந்துள்ளது வரும் வார துவக்கத்தில் காளைகளுக்கு சற்று தளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் "BULLS DIE HARD" என்ற சந்தை மொழிக்கேற்ப அவர்கள் முட்டி மோதி முன்னேறவே எத்தனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வரும் வருடத்திற்கான மழை அளவு நீண்ட கால சராசரியை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காளைகள் முயற்சிப்பார்கள். பொதுவாகவே இந்திய வானிலை அறிக்கைகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்பதையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் போலவே நம்பகத்தன்மை அற்றவை என்பதையும் இங்கே மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
கிரீஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிதிநிலை கரடிகளுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கக் கூடும். ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தாலும், அந்த உதவி போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான். குறிப்பாக அடுத்த மாதத்தில் முடிவடையும் கடனை கிரீஸ் நாட்டு அரசினால் குறித்த நேரத்தில் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகமும் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.
ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மாதாந்திர வருங்கால வர்த்தக நிறைவு அதிகப் படியான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.
ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Sunday, April 4, 2010
மீண்டும் ஒரு யேன்-பண-மாற்றும் (Yen Carry Trade) சுனாமி?
தொடர்ந்து எட்டாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் பங்குகளில் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத போதும் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் ஏராளமாக முன்னேறியுள்ளன. தொடர்ந்த அந்நிய பணவரவு, இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீதான புதிய நம்பிக்கைகள், உலக சந்தைகளின் சாதகமான சூழ்நிலை ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், சமீபத்தில் ஜப்பானிய யேன் நாணயத்தில் நிலவி வரும் மாறுதல்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறைந்த வட்டியில் கிடைக்கும் ஜப்பானிய நாணயத்தை மற்ற சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு, 2006 -07 ஆம் ஆண்டிற்கு மீண்டும் துவங்கியுள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இத்தகைய குறைந்த வட்டி பண வரவு துவக்கத்தில் பங்குசந்தைகள் வேகமாக முன்னேற உதவினாலும், இறுதி நேர திடீர் பண-திருப்புதல்கள் பங்குசந்தையின் மோசமாக பாதித்து விட வாய்ப்புள்ளது.
இந்திய பெரிய பங்குகளின் குறியீடான நிபிட்டி தனது முக்கிய எதிர்ப்பு நிலையான 5300 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வேலை இழப்புகள் குறைந்து வருவதாக கடந்த வெள்ளியன்று (இங்கு விடுமுறை) வெளிவந்த செய்தியின் துணையோடு இந்த எதிர்ப்பு நிலை முறியடிக்கப் பட நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அப்படி முறியடிக்கப் படும் பட்சத்தில், நிபிட்டி தனது அடுத்த குறிக்கோளான 5400 என்ற அளவை நோக்கி முன்னேற வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், நண்பர்கள் தமது வாங்கும் நிலையை (விற்று) முடித்துக் கொள்ளலாம். புதிய வாங்கும் நிலைகளை தவிர்ப்பது நல்லது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகளை பற்றிய யூகங்களை எடுத்த எடுப்பில் நம்பி விட வேண்டாம். ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.
மேலும் அடுத்த வாரத்தில் இருந்து வெளிவரும் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளின் அடிப்படையில் புதிய வாங்கும் நிலைகளை எடுக்கலாம். கிரீஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவி வரும் "அரசு கடன் நிலை", சீனா அதிபரின் அமெரிக்க பயணத்தில் எடுக்கப் படும் முடிவுகள், உலக சந்தையில் "யேன்" நாணயத்தின் போக்கு ஆகியவையும் நமது பங்கு சந்தையை பாதிக்கும்.
ஏற்கனவே சொன்னபடி இது லாப-விற்பனைக்கான நேரம். முதலீடு செய்திருக்கும் பங்குகள் நல்ல லாபத்தை தரும் பட்சத்தில் விற்று விடலாம். அதே போல ஒரு பங்கினை (நிறுவனத்தைப்) பற்றி தெளிவாக தெரியாமல் புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Wednesday, March 31, 2010
நீங்கள் ரொம்ப புத்திசாலியா?

ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள்.
அமுக்கிட்டீங்களா?
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!
நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம்.
"முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!"
நன்றி!
Monday, March 29, 2010
டெக்னிகல் அனாலிசிஸ் - ஒரு அறிமுகம்!
ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis.
சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு முன்னரே சில முக்கிய புள்ளிகளுக்கு (Insiders) தெரிய வரும் வாய்ப்புள்ளது. அந்த முக்கிய புள்ளிகள் பங்குசந்தையில் நிகழ்த்தும் சில வர்த்தக நடவடிக்கைகளை பங்கின் விலை மற்றும் வர்த்தக அளவில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் டெக்னிகல் அனாலிசிஸ் ஆகும்.
மேலும் ஒரு பங்கு மேலேறும் போதும் கீழிறங்கும் போதும் ஒருவித சீரான போக்கினை (Prices move in trends) கடைப்பிடிக்கிறது. அந்த சீரான போக்கில் தடை வந்தால் அதுவும் அந்த சீரான போக்கில் பெரியதொரு மாற்றம் (Reversal Pattern) நிகழ்ந்தால், அந்த நிகழ்வு இயல்பை மீறிய நிகழ்வாகவும், பங்கின் போக்கினை திசை திருப்பக் கூடியதாகவும் கருதப் படுகிறது.
உதாரணத்திற்கு, சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அரேவா டி அண்ட் டி பங்கின் வரைபடத்தை கூர்ந்து கவனிப்போம்.

இந்த பங்கு தொடர்ந்து பல நாட்கள் கீழ்த்திசையிலேயே பயணித்து வந்திருக்கிறது. இங்கே கீழ்த்திசையில் (Downtrend ) பயணிக்கும் ஒரு பங்கின் விலையின் அலைகளின் அதிக பட்ச விலைகள் (Connecting the highs of the candles)ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கிறோம். அந்த நேர்க்கோடு எவ்வளவு நீளமாக இருக்கின்றது என்பதையும் அந்த நேர்கோட்டை தாண்ட நடந்த முயற்சிகள் எத்தனை தோல்வி அடைந்திருக்கின்றன என்பதையும் பொறுத்து அந்த நேர்கோடு வலிமையானதா என்பது கணிக்கப் படுகிறது. வலிமையான நேர்கோடு முழுமையாக முறியடிக்கப் பட்டால் (Decisive Breakout), அந்த பங்கின் திசை மாறும் வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம்.
இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அளவில் கடந்த வியாழனன்று பெரியதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. விலை மாற்றம் அதிக வர்த்தக அளவுடன் நிகழ்ந்திருந்தால் (Breakout with high volume) அதனை வலுவான மாற்றமாக கருத முடியும். இங்கேயும் அதிக அளவு வர்த்தகம் நடந்திருப்பதன் மூலம், இந்த பங்கு கீழ்த்திசைப் பயணத்தை முடித்துக் கொள்ளும் என்று நம்பலாம். மேலும் இருநூறு நாட்கள் சராசரி விலை அளவையும் (200-day Moving Average) இந்த பங்கு முறியடித்திருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.
பல டெக்னிகல் அனலிஸ்ட்கள் இவ்வாறான பெரிய அளவினான விலை மாற்றம் நிகழும் போது, சில அடிப்படைகளையும் கவனிக்கின்றனர். இந்த பங்கினை பொறுத்த வரை, அரேவா நிறுவனத்திற்கு கிடைத்த பெரியதொரு ஆர்டரும், மின்திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்று இந்திய பிரதமர் உறுதியளித்ததும் முக்கிய காரணிகளாக கருதப் படுகின்றன.
இந்த பங்கினை வர்த்தகம் செய்ய விரும்புவர்கள் ஸ்டாப் லாஸ் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அதாவது ஒருவேளை இந்த பங்கு மீண்டும் தனது பழைய கீழ்த்திசை பயணத்தில் இணைத்துக் கொண்டாலோ (Entering into the downward trend) அல்லது இருநூறு நாள் சராசரி அளவுக்கு கீழேயே தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் முடிவடைந்தாலோ, இந்த பங்கினை விட்டு விலகி விடலாம். இப்போதைக்கு இந்த பங்கு Rs.295 அளவுக்கு கீழே முடிவடைந்தால் (Closing prices) இந்த பங்கினை விற்று விடலாம்.
இந்த பங்கிற்கான இலக்கு என்ன என்று பார்ப்போம்.
ஓடும் வரை ஓட்டம் என்பதே எனது பாலிசி. தொடர்ந்து இந்த பங்கு முன்னேறிக் கொண்டே இருக்கும் வரை விற்க வேண்டியதில்லை. மேலே செல்ல செல்ல புதிய புதிய ஸ்டாப் லாஸ் அளவுகள் (Running Stop Loss Limits) வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது தொடர்ந்து சில தினங்கள் கீழ் முகமாக இருந்து கொண்டு நாம் வகுத்துள்ள ஸ்டாப் லாஸ் லிமிட்டுக்கு கீழே வந்தால் மட்டுமே பங்கினை விற்பனை செய்யலாம்.
எனினும் ஒரு குறிப்புக்காக இந்த பங்கின் அடுத்த இலக்குகள் சுமார் Rs . 325 மற்றும் Rs.360 என்றும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். பங்கின் விலை மாற்றம் மற்றும் நிறுவனத்தைப் பற்றி வெளிவரும் முக்கிய செய்திகளின் அடிப்படையில் இலக்குகளையும் ஸ்டாப் லாஸ் லிமிட்டுகளையும் அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
நன்றி!
டிஸ்கி: இந்த பதிவு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.
Sunday, March 28, 2010
இது விபத்து பகுதி! கவனம் தேவை!
தொடர்ந்து ஏழாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அதிவேகமான மீட்சி, உலக சந்தைகளின் சாதகமான நிலை மற்றும் மிக முக்கியமாக ஏராளமான அந்நிய முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.
அதே சமயத்தில் தற்போது நம்முடைய பங்குசந்தை 2010 ஆம் ஆண்டின் அதிக பட்ச நிலைக்கு மிக அருகிலே வர்த்தகமாகி வருகின்றது என்பதும் தினந்தோறும் பல சிறிய/இடைநிலை பங்குகள் அதிவேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எதிர்கால வர்த்தகநிலையின் (F&O Open Position) அளவு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே காணப் படுவது, நமது பங்குசந்தையில் ஏராளமான வர்த்தக நிலை (Trading Position) எடுக்கப் பட்டதையே வெளிக்காட்டுகின்றது. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதாரத்தின் பங்கு மதிப்பீடுகள் (Valuation Ratios) அளவுக்கு சற்று அதிகமாகவே காணப் படும் என்றாலும் 2008 இல் நிகழ்ந்தவற்றையும் நாம் மறந்து விட முடியாது.
எனவே புதிய வர்த்தக நிலை எடுப்பவர்கள் சற்று அதிகப் படியான எச்சரிக்கையுடன் சந்தையை அணுகவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகள் செய்ய பொறுத்திருக்கலாம்.
நிபிட்டி குறியீடு 5280 -5320 என்ற நிலையில் இன்னும் கூட நல்ல எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. இந்த நிலை முழுமையாக முறியடிக்கப் பட்டால் இன்னும் நூறு புள்ளிகள் வரை நிபிட்டி வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது.
குறுகிய கால பங்கு வர்த்தகர்கள், அரேவா டி அண்ட் டி (Areva T&D), சின்டெக்ஸ் (Sintex), டாடா கெமிகல்ஸ், அடானி பவர், ரிலையன்ஸ் பவர் ஆகிய பங்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வரலாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
Friday, March 26, 2010
தாடிக்காரன் தப்பு செஞ்சான்! மீசைக்காரன் மாட்டிக்கிட்டான!
மும்பை தாக்குதலில் கைதாகி விசாரனைக்குள்ளாகி வரும் கசாபின் வழக்கறிஞர் கூறிய மராட்டிய கவிதை இது. கசாப் ஏதோ சினிமா ஆசையில் இந்தியாவிற்கு வந்து ஜுஹு கடற்கரையோரம் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், அவனை அங்கிருந்து போலீசார் பிடித்து வந்து மும்பை தாக்குதல் வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது போல உலகிற்கு காட்டவே போலீசார் அவனுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்கியிருப்பதாகவும் திறம்பட வாதிட்ட அந்த வழக்கறிஞர் தன துணைக்கு மேற்சொன்ன மராட்டிய கவிதையும் சேர்த்துக் கொண்டார்.
சிங்க மராட்டியர்தம் கவிதைக்கு கேரளத்து தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதியே சொல்லியிருந்தாலும், தீவிரவாதத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்ட இந்திய மக்களில் எவரேனும் இந்த மராட்டிய கவிதைக்கு வாய் வழி பாராட்டேனும் அளிப்பாரா என்பது சந்தேகமே . சொல்லப் போனால் கசாப்புக்கு கூட இது கொஞ்சம் ஓவர் எனவே தோன்றியிருக்கும். அனைத்து வீடியோ மற்றும் இதர நேரடி ஆதாரங்களுமே சித்தரிக்கப் பட்டவை என்று ஆவேசமாக வழக்கறிஞர் வாதிட்டாலும் அந்த நேரம் கசாப் தலையை நிமிர்த்தக் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
ஒரு பிரபல மராட்டிய நாடகத்திலிருந்து எடுக்க பட்ட மேற்சொன்ன கவிதையை வழக்கறிஞர் மொழிந்தவுடன், மாண்புமிகு நீதிபதி கேட்டாராம், "இது கூட நாடகமா என்று?"
ஒரு பயங்கரவாதிக்கு கூட தன்னுடைய தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவும், ஒரு வழக்கறிஞருக்கு நாட்டின் ஒட்டு மொத்த இறையாண்மையை கையில் எடுத்துக் கொள்ளவும் உரிமை தரும் இந்த தேசத்தின் எல்லையற்ற சுதந்திரம் ஒருபக்கம் புல்லரிக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது போன்ற வாதங்களிலும் உண்மை இருக்குமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கும் இந்திய போலீசாரின் மீதான நம்பகத்தன்மையின்மை வேதனையை அளிக்கிறது.
நன்றி!
Tuesday, March 23, 2010
இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல.
குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம்.
எனவே நண்பர்களே!
வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள்.
தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்!
டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே?
நன்றி!
Sunday, March 21, 2010
பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?
இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையான பணவீக்கம் இருபது சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்பது பர்ஸ் எவ்வளவு வேகமாக காலியாகிறது என்று அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. எடுக்கப் பட்ட சிற்சில நடவடிக்கைகள் கூட மிகுந்த கால தாமதத்துடனேயே எடுக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் பணவீக்கத்தினால் ஆதாயங்கள் உள்ளனவா அப்படியென்றால் யாருக்கு ஆதாயம் என்பதை இங்கே பார்ப்போம்.
பொதுவாகவே பொருளாதாரத்தில் அளவான பணவீக்கம் என்பது வரவேற்கப் படும் ஒன்று. பணவீக்கம் இருந்தால்தான் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு செய்கையில் வேலைவாய்ப்புக்கள் பெருகும். சமூகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக கருதுகின்றன. பணவீக்கம் பூஜ்யத்திற்கு அருகாமையில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சி பலவருடங்களாக நின்று போயிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பணவீக்கம் வளர்ந்த நாடுகளின் பணவீக்கத்தினை விட சற்று அதிகமாகவே இருக்கும். இதன் காரணம் இங்கு வளர்ச்சி அதிகம் என்பது மட்டுமல்ல, கட்டுமான வளர்ச்சி குறைவு (Infrastructure Bottlenecks lead to supply based inflation) என்பதும் எளிய மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கங்கள் கவலைப் படாமல் இருப்பதும் பணக்காரர்களின் சொல்லிற்கு அதிக மரியாதை இருப்பதுமே ஆகும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணவீக்கம் வளர்வதை அரசு கண்டுகொள்ளாமல் போனால், வளர்ச்சி நின்று போய் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே, பழைய சீனா மற்றும் பழைய ஜெர்மனி போன்றவற்றை கூறலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரை பணவீக்கம் தற்போதைக்கு அபாய அளவினை தொட வில்லை என்றாலும், அதிகப் படியான பணவீக்கம் நமது வளர்ச்சியை மட்டுபடுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
பணவீக்கத்தினால் லாபம் யாருக்கு என்று பார்ப்போம்.
பணவீக்கத்தினால் மிக அதிக அளவு ஆதாயம் கிடைப்பது அரசாங்கத்திற்குத்தான். ஏனென்றால், பணவீக்கம் ஒரு மறைமுக வரிவிதிப்பு ஆகும். மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது. எனவேதான் அரசாங்கங்கள் பணவீக்கத்தை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. பணவீக்கத்தின் காரணமாக பட்ஜெட்டின் அளவு வருடாவருடம் அதிகரிக்கும் போது, அரசியல்வாதிகளின் கையில் அதிக பணம் புழங்குவதும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தைப் போலவே நிறைய கடன் வாங்கி இருக்கும் கடனாளிகளுக்கும், திருப்பி தர வேண்டிய பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது லாபகரமான ஒன்றுதான்.
இரண்டாவதாக அதிக ஆதாயம் அடைபவர்கள், பணவீக்கத்தினால் ஏற்படும் விலை உயர்வை (சற்று கூடுதலாகவே) நுகர்வோர் தலையில் கட்டுமளவுக்கு பலம் படைத்த வர்த்தகர்கள் (Pricing Power). போட்டி குறைந்த (Monopoly) அல்லது கூட்டாக செயல்படும் (Oligopoly) மற்றும் விலைநிர்ணய பலம் படைத்த தொழிற் துறையினர் பெருமளவுக்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் பணவீக்கத்தினால் ஆதாயமடைகின்றனர்.
மூன்றாவதாக விலைவாசி உயர்வுக்கேற்ப "பஞ்சப் படி" பெறக் கூடிய நிலையில் அரசு ஊழியர்களும் பணவீக்கத்தினால் பலனடைகின்றனர். அதுவும் செலவின அதிகரிப்பை விட பஞ்சப் படி அதிகரிப்பு அதிகம் இருக்கும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் பணவீக்கத்தினால் அதிக பலன் பெறுகின்றனர். அரசு ஊழியர் மட்டுமல்லாமல், பணவீக்கத்தை காரணமாக காட்டி சம்பள உயர்வு அல்லது விலை உயர்வு செய்யக் கூடிய செல்வாக்கு படைத்த தனி ஊழியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் பணவீக்கத்தினால் ஆதாயம் பெறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வினால் விவசாயிகளுக்கும் குறைந்த ஆதாயமும் இடைத்தரர்களுக்கு பெரிய ஆதாயமும் கிடைக்கின்றது.
பலவான் வாழ்வான் (Survival of the fittest) என்ற இயற்கையின் நிதிப் படி செல்வாக்கு படைத்த பலருக்கும் பணவீக்கம் என்பது ஆதாயமான ஒன்றாகவே இருக்கின்றது. இருந்தாலும் சமூகத்தில் பலம் குறைந்த பலருக்கு பணவீக்கம் கடுமையான சவாலாகவே இருக்கின்றது.
உதாரணத்திற்கு, கடும் போட்டியின் காரணமாக பணவீக்கத்தை காரணமாக வைத்து விலையை உயர்த்த முடியாதவர்கள் பணவீக்கத்தினால் பாதிக்கப் படுகின்றனர். ஓய்வூதிய பணத்தை வங்கியில் இட்டு வட்டியில் வாழும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். வருவாயின் பெரும்பகுதியை உணவுக்கே செலவிட வேண்டிய நிலையில் உள்ள குறைந்த வருவாய் பிரிவினரின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
பணவீக்கம் ஆரம்பத்தில் பலருக்கும் பலனளிப்பதாக இருந்தாலும் பொருளாதார சுழற்சியின் (Economic Cycle) பின்பகுதியில் அனைவருக்குமே வில்லனாக அமைகிறது. பணவீக்கத்தை கட்டுபடுத்த மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் போது தொழிற் துறைகள் பாதிக்கப் படுகின்றன. பணவீக்கம் பொதுமக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) குறைக்கும் போது வணிகர்களும் இதர உற்பத்தியாளர்களும் பாதிக்கப் படுகின்றனர். பாதிக்கப் பட்ட தொழிற் நிறுவனங்கள் தமது செலவினத்தை கட்டுபடுத்த முனையும் போது வேலைவாய்ப்புக்கள் அல்லது அதிக சம்பளங்கள் பாதிக்கப் படுகின்றன. அரசாங்கத்திற்கான வரி வருமானம் குறைவதனால் அரசும் தனது செலவினத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
இப்படி ஆரம்பத்தில் இனிப்பாக இருக்கும் பணவீக்கம் அளவிற்கு அதிகமாக உயரும் போது கசப்பாக முடிகிறது.
இப்போது நமது பங்கு சந்தைக்கு வருவோம்.
பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக, இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது, பங்கு சந்தைக்கு ஒரு கசப்பான செய்தியாகும். எனவே நாளை (22.03.2010) பங்கு சந்தை இழப்புடன் வாரக்கணக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில், வட்டி வீதங்கள் உயர்த்தப் படுவது இந்திய பொருளாதாரம் இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே துவக்கத்தில் சரிவு ஏற்பட்டாலும், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயரா விட்டால் சந்தை மீண்டும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக நிலவரத்தைப் பொறுத்த வரை, கிரீஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் மோதல்கள் யூரோ நாணயத்தை பாதிப்பதுடன் இந்திய சந்தைகளிலும் ஒருவித மனநிலை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
இந்த வாரத்தில் நிகழ உள்ள மாதாந்திர எதிர்கால நிலைகளின் முடிவு (F&O Expiry) சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். நிபிட்டியின் அடுத்த எதிர்ப்பு நிலை 5280-5320 ஆகிய புள்ளிகளுக்கு அருகில் இருக்கும்.
உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயருவதைப் பொருத்து ரிலையன்ஸ் பங்குகள் குறுகிய கால முன்னேற்றம் அடையும். 3-G ஏலம் மற்றும் பாரதியின் ஆப்ரிக்க முதலீடுகள் தொலை தொடர்பு நிறுவனங்களின் பங்குகளின் மீது அதிக ஆர்வத்தினை உருவாக்கும்.
வட்டி வீத உயர்வினால் வாகனம், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் ஓரளவுக்கு சரிவை சந்திக்கலாம்.
மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாகவே வரும் வாரம் இருக்கும் என்று நம்புகிறேன். நிபிட்டி 5320 அளவுகளை உறுதியாக முறியடித்த பின்னர் பங்குகளை வாங்கும் நிலை எடுக்கலாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!