
அதே சமயத்தில், சென்ற வாரம் நமது சந்தை முடிவடைந்த பிறகு வெளிவந்த சில தகவல்கள் வரும் வாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டின் ரேட்டிங் குறைப்பு ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய வலுவற்ற தன்மையையும், கடன் நெருக்கடியையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. மேலும் அமெரிக்க பொருளாதார தகவல்களும், அந்த நாட்டின் பொருளாதார மீட்சி அதிக வலுவில்லாமல் இருப்பதையே காட்டுகின்றன.
ஏற்கனவே சொன்னபடி, இந்தியாவின் வளர்ச்சி இன்னும் பல காலத்திற்கு தொடரும் என்றாலும் உலக நிகழ்வுகள் இந்தியாவில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய பங்கு சந்தையும் கூட நீண்ட கால நோக்கில் பெருமளவுக்கு வளர்ச்சி பெறும் என்றாலும், குறுகிய கால நோக்கில், பங்கு சந்தையின் முன்னேற்றம் அந்நிய முதலீட்டாளர்களின் மனப்போக்கை சார்ந்தே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் வாரம் வெளியிடப் படவுள்ள இந்திய பொருளாதார வளர்ச்சி (GDP Quarterly Growth) பற்றிய அறிக்கை, சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய வானிலை கழகம் எதிர்பார்த்த படி வரும் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்குகிறதா என்பதையும் சந்தை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பர். மேலும் இந்திய உற்பத்தி நிலை அளவு (PMI Manufacturing Index), அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை, ஐரோப்பிய கடன் நெருக்கடி நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே சொன்னபடி முதலீட்டாளர்கள் நிபிட்டி அளவு 4950க்கு அருகில், அடிப்படையில் சிறந்த பங்குகளை சிறுகச் சிறுக சேகரிக்கலாம். வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் செய்திகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.
வரும் வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment