சமீபத்தில் ஒரு மூத்த முதலீட்டளார் ஒருவருடன் சந்தை நிலவரம் குறித்து விவாதித்து கொண்டிருந்தேன். அந்த நண்பர் முப்பது ஆண்டுகளாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை பத்து ரூபாயில் வாங்கியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொருளாதார அனுபவம் மிகுந்த அவர் கூறிய சில அறிவுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் வியப்பூட்டும் அளவில் வேகமாக வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். தனிப்பட்ட அளவிலும் பலருடைய வருமான அளவுகள் உயர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு குறைவாக ஒருவரது தனிப்பட்ட வருமானம் உயரும் பட்சத்தில் அவரது பாடு திண்டாட்டமாகி விடும். குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வங்கி வைப்புத் தொகை வட்டியில் வாழ்பவர்கள் மேலும் பொருளாதார வேகத்திற்கு ஏற்றபடி தம்முடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கைப் பயணம் (ஒப்பீட்டு முறையில் பார்க்கும் போது) தடுமாறுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்த பாடம் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்குள் ஓய்வு பெற போகிற நம்மைப் போன்ற இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதுவும் கடந்த பல வருடங்களில் பெறப் பட்ட பொருளாதார முன்னேற்றத்தைப் போல பல மடங்கு வேகத்தில் வருங்கால வளர்ச்சி இருக்கும் என்று அந்த நண்பர் கருதுகிறார். அப்போது, நம்முடைய நாற்பது ஐம்பது ஆயிர வருமானமெல்லாம் தற்போதைய மதிப்பில் (Net Present Value) நான்காயிரம் ஐந்தாயிரம் அளவிலேயே இருக்கும் என்று அவர் எச்சரிக்கின்றார். அவர் கருத்துக்களில் வலு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இரண்டிலக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஒவ்வோர் ஆண்டும் நமது பணத்தின் மதிப்பை இருபது முதல் இருப்பதைந்து சதவீதம் வரை குறைக்கின்றது என்பது ஆச்சரியமூட்டும் ஆனால் மறுக்கவியலாத உண்மை ஆகும். அரசியல் லாபங்களுக்காக பொறுப்பில் உள்ளவர்கள் பணவீக்கத்தை கட்டுப் படுத்த விரும்புவது இல்லை. எப்போதும் விரும்பப் போவதுமில்லை. எனவே வருங்காலத்திற்கான தமது சேமிப்பை திறம்பட நிர்ணயிப்பது மற்றும் நிர்வகிப்பது ஒவ்வொருவது முக்கிய தனிப்பட்ட கடமை ஆகும்.
அந்த நண்பர் முதலீட்டிற்கு பரிந்துரைத்தது, சொந்த வீடு, நல்ல பங்குகள் அல்லது பரஸ்பர நிதி மற்றும் ஓரளவுக்கு வைப்பு தொகை ஆகியவை ஆகும்.
ஆகவே நண்பர்களே! பணவீக்கம் பெரியதொரு சுனாமியாக வந்து நம்மெல்லோரையும் அள்ளிக் கொண்டு போகும் முன்னே, நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய சொந்த கடமையாகும்.
இளமையில் சேமியுங்கள், விரைவாக சேமிக்க ஆரம்பியுங்கள், திட்டமிட்டு சேமியுங்கள்.
இப்போது வாராந்திர சந்தை நிலவரம் பற்றி கவனிப்போம்.
சர்வதேச நிதி அமைப்பின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு மற்றும் தவறாத பருவ மழை இந்திய பங்கு சந்தைகளை பெருத்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவு, பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையை சந்தைக்கு தந்திருக்கின்றது. உலக பொருளாதார தடுமாற்றங்கள் இந்தியாவை பெருமளவுக்கு பாதிக்காது என்ற நம்பிக்கையையும் சந்தை இப்போது பெற்றிருக்கிறது.
தன்னுடைய முன்னேற்றத்தை பங்கு சந்தை தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயத்தில் நிபிட்டி 5400 அளவுகளில் தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கும். இந்த எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் பட்சத்தில் சந்தை புதிய உயர்வை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அப்போது வர்த்தக வாங்கும் நிலை எடுக்கலாம். முதலீட்டாளர்கள் ஒவ்வொரு சரிவின் போதும் முதலீடு செய்யலாம். முந்தைய பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள பரஸ்பர நிதிகளின் மாதாந்திர முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
இந்த மாதம் காலாண்டு நிதி அறிக்கை மாதம். எனவே முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் நிதி அறிக்கையையும் மேலோட்டமாக அறிந்து கொள்வது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை ஆகும்.
தெளிந்த அறிவுடன் முதலீடுகளை செய்வோம். வருங்காலத்தின் மீதான கவலைகளை விடுவோம்.
வரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!