Wednesday, December 31, 2008

சந்தை நிலவரத்தின் புத்தாண்டு பலன்கள்


சந்தைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் 2008 ஆம் ஆண்டு மிக உற்சாகமாகவே தொடங்கியது. சென்செக்ஸ் குறியீட்டு புள்ளிகள் புதிய சாதனை அளவாக 21,000 புள்ளிகளையும் தாண்டிச் சென்றது. ஜனவரி மாதம் நிகழ்ந்த ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகள் திவாலாகும் சூழ்நிலைகள் உருவான கட்டத்திலும் மற்ற உலக சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து வந்த போதும் இந்தியாவின் கதை சற்று வித்தியாசமானது என்று இந்திய முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் நம்பினர். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவிற்கு முற்றிலும் புதிதான நுகர்வோர் கலாச்சாரம் நம் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் என்றும் பரவலாக நம்பப் பட்டது.

ஆனால் நடந்த கதை வேறு. இந்த ஆண்டு உலக சந்தைகளில் மிக அதிகமாக வீழ்ச்சி பெற்ற சில சந்தைகளில் இந்தியாவும் ஒன்றென ஆயிற்று. இந்திய சந்தைகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து வந்த வெளிநாட்டு வர்த்தகர்கள் தம் பணத்தை திரும்பப் பெற்று கொண்டதும், அதே அளவிற்கு முதலீடு செய்ய இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்களால் முடியாமல் போனதும் முக்கிய காரணங்களாக ஆயின. ஒரே ஆண்டில் சுமார் 55 சதவீத வீழ்ச்சியை நமது சந்தை முக்கிய குறியீடுகள் (சென்செக்ஸ் & நிபிட்டி) சந்திக்க, குறிப்பிட்ட சில நிறுவனங்களோ தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான வீழ்ச்சியைச் சந்தித்தன. முக்கியமாக, ரியல் எஸ்டேட், உலோகம், வாகனம், கட்டுமானப் பணிகள் ஆகிய துறைகளைச் சார்ந்த பங்குகள் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் பகுதியில் அபரிமித வளர்ச்சியைக் கண்ட கச்சா எண்ணெய் விலை ஆண்டின் இறுதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. அதே போல பொருட் சந்தை, ரூபாய் சந்தை ஆகியவனவும் பெருமளவு சரிவையே கண்டுள்ளன.

பொருளாதாரத்திலும் ஏகப் பட்ட மாற்றங்கள். பத்து சதவீதத்தை தொட்டு விடும் என்று வருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கப் பட்ட நமது பொருளாதார வளர்ச்சி, பிற்பாடு தளர்ச்சியை சந்திக்க நேரிட்டது. பணவீக்கம் மட மடவென்று உயர்ந்து பின் அதே வேகத்தில் சரிந்துள்ளது. பல உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. பலருக்கு வேலை பறிபோய் உள்ளது. இடையிடையே ஏகப் பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள். இப்படி மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிய கடந்த ஆண்டு விரக்தியுடனே முடிவடைந்தது.

இப்போது வரும் ஆண்டு எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். அமெரிக்காவில் புதிய நம்பிக்கையை தந்துள்ள ஒபாமா வரும் ஆண்டின் துவக்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். அவருடைய புதிய கிரியா ஊக்கித் திட்டம் எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும். முக்கியமாக, அமெரிக்க வங்கிகள் மேற்கொண்டு வீழ்ச்சி அடையாமல் காப்பதும், அமெரிக்க வாகனத்துறை மீட்டெடுப்பும் உலக சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும். அதே சமயம், அமெரிக்கா 1930 களில் சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சியை இப்போதும் சந்திக்குமானால், உலக பொருளாதாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகள் ஏற்படக் கூடும்.

இந்தியாவில் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் பெருமளவிற்கு மாறாமல் இருப்பதனால் ஆட்சி மாற்றம் பெருமளவிற்கு சந்தையை பாதிக்காது என நம்பலாம். அதே சமயம், தொங்கு பாராளுமன்றம் அமையும் பட்சத்திலும் அடிக்கடி கூட்டணி மாற்றங்கள் ஏற்படும் நிலையிலும் சீர்திருத்தங்களின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

பணவீக்கம் மேலும் குறையும் என்றும் வங்கி வட்டி வீதங்கள் கீழ் நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த கால நோக்கில் உயர்வு பெறக் கூடும் என்றாலும் நீண்ட கால நோக்கில் பெருமளவு உயர வாய்ப்புகள் குறைவு. அதே சமயம், கட்சா எண்ணெய் விலை இதே அளவில் சில காலம் நீடிக்கவும், உலகப் பொருளாதாரம் சற்று தலை நிமிரும் பட்சத்தில் சற்று மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தைகள் இந்த ஆண்டு புதிய ஒரு தாழ்வு நிலையைச் சந்திக்க கூடும் என்றாலும் கூட, மொத்த வருடத்திற்காக பார்க்கும் போது ஒரு மிதமான வளர்ச்சி (20-30 சதவீதம்) அடைய வாய்ப்புகள் அதிகம். வங்கித் துறை, அடிப்படை கட்டுமான துறை, நுகரும் பொருட்கள் துறை மற்றும் மின்சார துறை பங்குகள் நன்கு செயல் பட வாய்ப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. அதாவது, கடலலை பின் செல்லும் போதுதான், யார் துணியுடன் குளிக்கிறார்கள், யார் துணியில்லாமல் குளிக்கிறார்கள் என கண்டு பிடிக்க முடியும் என்று. அது போல, பொருளாதார சிக்கலான சமயத்தில் எந்தெந்த நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்பதை கவனித்து அவற்றில் தகுந்த இடைவெளி விட்டு முதலீடு செய்யலாம்.

(எனது நேரக் குறைவினால், தற்போதைக்கு இது குறித்த ஒரு விரிவான அலசல் செய்ய முடியாமல் உள்ளது. எனவே, வருங்காலங்களில் சந்தை மற்றும் பொருளாதாரத்தின் போக்கு பற்றி விரிவாக விவாதிக்கலாம். )

வரும் ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பானதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி.

Tuesday, December 30, 2008

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!


உங்களுக்கு தெரியுமா? உலகம் எப்போதும் ஒரே சீரான வேகத்தில் சுற்றி வருவதில்லை. காரணம், பூமிக்கும் சூரிய சந்திரருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாற்றங்கள் பூமியின் சுழற்சி வேகத்தைப் பெருமளவு பாதிக்கின்றன. மேலும், பூமி முழுக்க முழுக்க திடப் பொருளாக இல்லாமல் உள்ளே ஆழ்மட்டத்தில் குழம்பு வடிவம் கொண்டு அமைந்திருப்பதால் அதன் சுழற்சி வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. இவற்றின் காரணமாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் காலப் போக்கில் மாறிக் கொண்டே (பெரும்பாலும் அதிகரித்துக் கொண்டே) வருகிறது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ஆறு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாக சொல்லப் படும் நம் பூமி தற்போது இருபத்து நான்கு மணி நேரத்தை விட சற்று கூடுதலான மில்லி செகண்ட் எடுத்துக் கொள்கிறது. (ரொம்ப வயதாகி விட்டதால் தளர்ந்து போய் விட்டதோ?)

ஒரு நாள் பொழுதை தனியாகப் பார்க்கும் போது இந்த வித்தியாசம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இல்லாதது போல தோன்றினாலும், தொடர்ந்து பல நாள்களுக்கு இந்த வித்தியாசம் கூட்டப் படும் போது (நம்மூர் கந்து வட்டி போல) இத்தகைய சுழற்சியில் ஏற்படும் தளர்ச்சி ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்த வித்தியாசத்தை சரிக் கட்டவே அவ்வப்போது ஒரு செகண்ட் நேரம் (இது லீப் செகண்ட் என அழைக்கப் படுகிறது) சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப் படுகிறது.

புவியின் சுழற்சியின் அடிப்படையில் நொடியைக் கணக்கிடும் வழக்கமான முறை மாற்றப் பட்டு அணுகடிகாரத்தின் உதவி கொண்டு நொடியினை துல்லியமாக கணக்கிடும் புதிய முறை சர்வதேச அளவியல் மையத்தால் 1967 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் படி சீசியம் எனும் ஐசோடோபு ஒரு (சக்தி) நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற எடுத்துக் கொள்ளும் நேரமே ஒரு நொடி என முடிவு செய்யப் பட்டது. இந்த சக்தி நிலை மாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம் எப்போதும் மாறாமல் ஒரே அளவில் இருப்பதால் இதை அடிப்படை நொடியாக தேர்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அணு கடிகாரத்தின் உதவியுடன் கணக்கிடப் படும் நாளின் அளவிற்கும் மேலே குறிப்பிட்டவாறு புவியின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்துள்ள நாளின் அளவிற்கும் உள்ள வித்தியாசம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் செகண்டின் உதவியால் சரிக் கட்டப் படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு(2008) வழக்கமான அளவை விட (இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு லீப் ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு செகண்ட் கூடுதலாக பெற்று இருக்கும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.59.59 நேரம் மட்டும் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
எனவே அப்போது உங்களது கடிகாரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: இந்த பதிவு, அறிவியல் பற்றியும் எழுதுங்கள் என்று பின்னூட்டம் மூலம் கேட்டுக் கொண்ட திரு.ராஜே மற்றும் எங்களுக்காகவும் ஏதாவது எழுதுங்கள் என்று நேரில் கேட்டுக் கொண்ட எங்க ஊர் துளிர்களுக்குமான ஒரு முயற்சி.

நன்றி.

Monday, December 29, 2008

வாழ்வில் என்றும் உற்சாகமாக இருக்க வேண்டுமா?


ஆதி மனிதனின் தேடல்களும் அந்த தேடல்களுக்கான உந்துதல்களுமே, உலகின் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் ஆகும். ஒரு சராசரி மனிதனின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கூட தேடல்களும் தேடல்களுக்கான உந்துதல்களும் மிக அவசியம் இத்தகைய உந்துதல்கள் உருவாகும் விதம் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் இங்கு விவாதிப்போம்.

மனவியல் வல்லுநர், திரு.மாஸ்லொவ் அவர்களால் உருவாக்கப் பட்ட விதிகள் இவை.

மனிதனின் தனது வாழ்க்கைப் படிகளில் முன்னேறும் போது வெவ்வேறு விதமான தேவைகள் உருவாகுகின்றன.

முதலில் அடிப்படைத் தேவைகளை தீர்க்க வேண்டி மன உந்துதல்கள் ஏற்படுகின்றன . அடிப்படைத் தேவைகள் தீர்க்கப் பட்டதும் அதற்கான உந்துதல்கள் மறைந்து போகின்றன. அதே சமயத்தில், வாழ்வின் முன்னேற்றத்தின் காரணமாக புதிய தேவைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான புதிய மன உந்துதல்களும் உருவாகுகின்றன.

சமூக நாகரிக வளர்ச்சிக்கு கூட இது பொருந்தும். உதாரணமாக, இந்தியாவில் உணவு, உடை என்பது ஒரு காலத்தில் மிக அத்தியாவசிய தேவையாக இருந்தது. இப்போது உணவு உடை தேவை என்பது ஓரளவிற்கு தீர்க்கப் பட்டு விட்டதும் அதன் மீதான அக்கறை குறைந்து விட்டது. அதே சமயத்தில் மின்சாரம் என்பது நவீன யுகத்தின் அத்தியாவசிய தேவையாக இப்போது இருக்கிறது. மின் வெட்டு பிரச்சினை பெரியதாக உணரப் படுகிறது. மின்சாரம் தடங்கலின்றி கிடைக்க ஆரம்பித்து விட்டால் அதை பற்றி கவலைகளும் மறந்து போகும். வேறு புதிய உந்துதல்கள் ஏற்படும் .

மாஸ்லொவ் மனிதன் தனது வாழ்வில் அடையும் முன்னேற்றத்திற்கு ஏற்ப ஐந்து வகையான தேவைகளை (படிகளை) கண்டறிந்தார். அதன் வடிவம் கீழே.

௧. அத்தியாவசிய தேவைகள்

உணவு, உடை மற்றும் இதர உடல் ரீதியான தேவைகள் இவற்றில் அடக்கம்.

௨.பாதுகாப்பு தேவைகள்

வேலை, வீடு, காப்பீடு போன்ற தேவைகள் இவற்றில் அடக்கம்.

௩. சமூக தேவைகள்

நட்பு, குடும்பம், அன்பு பாசம், காதல் முதலியவை இவற்றில் அடக்கம்.

௪. புகழ் தேவைகள்

பணி மேன்மை, தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி, சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் பாராட்டு ஆகியவை இவற்றில் அடக்கம்.

௫. சுய ஊக்கி (உள்நோக்கும்- Self Actualization) தேவைகள்

வேறு எந்த தேவைகளும் இல்லாமலேயே ஏற்படும் உள் உந்துதல்கள் இவை.
உருவாக்கும் திறன், சமூக சிந்தனைகள், பிரதி பலன் பாரா உதவிகள் போன்றவை.

கவனிக்கப் பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம். ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு படியாக முன்னேறலாம். ஒருசிலரால் மட்டுமே கீழே உள்ள படிகளை ஒரேயடியாக தாவி (skip செய்து) விட்டு நேரடியாக மேலே உள்ள படிகளுக்கு முன்னேற முடியும். அத்தகையோர் மாமனிதர்களாக கருதப் படுகின்றனர்.

முப்பது வயதுகளில் உள்ள திரைப் பட கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருக்க, அதே வயது ஒத்தவர்கள் ஓரளவிற்கு கல்வி வேலை, குடும்பம் மற்றும் குழந்தை என்று அமைந்த பிறகு வாழ்வில் அடைய மேலும் ஏதுமில்லை என்று உற்சாகம் இழந்து போகிறார்கள்

ஐம்பது வயதுகளில் உள்ள அரசியல்வாதிகள் இளைய தலைவர்களாக உணரப் படும் வேளையில் அவரது வயது ஒத்தவர்கள் பணி ஓய்வை எதிர்பார்த்துக் கொண்டும் பணி ஓய்வு பெற்ற பிறகு மீதம் உள்ள வாழ்வை எப்படி கடத்துவது என்றும் குழம்பி போகிறார்கள்.


இந்தியாவின் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் 70-80 வயதுகளில் அரசியல் மற்றும் அரசுப் பணிகளை திறம் பட கவனித்துக் கொண்டு இருக்க, அவர்களின் வயதை ஒத்தவர்கள் கிழம் அல்லது பெரிசு என்று மற்றவரால் அழைக்கப் பட்டு தனது உயிர் நீப்பு எப்போது என்று மட்டுமே வருத்தத்துடன் எதிர் நோக்கி உள்ளனர்.


முதலில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்களுக்கும் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டு உள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் (வாழ்வின்) நான்காவது மற்றும் ஐந்தாவது படிகளில் உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்க நம்மில் பலரும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளினால் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது படியிலேயே நின்று போகிறோம்.

வாழ்கை முழுக்க உற்சாகமாக இருக்க ஒரே வழி, முடிந்த வரை வேகமாக ஐந்தாவது படிக்கு முன்னேறி விடுவதுதான்.

இப்போது சொல்லுங்கள். நீங்கள் இருப்பது எந்த படியில்? எவ்வளவு வேகமாக ஐந்தாம் படிக்கு செல்லப் போகிறீர்கள்?

நன்றி

Friday, December 19, 2008

அன்பார்ந்த நன்றிகள் சமர்ப்பணம்


இது சந்தை நிலவரத்தின் தொண்ணூற்று ஒன்பதாவது பதிவு. நூறாவது பதிவு சற்று தாமதமாகலாம் என்பதினால் இப்போதே சிலருக்கு எனது வணக்கத்துக்கும் அன்புக்கும் உரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமுதாயத்திற்கு பயன்படுமாறு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு என் (நேரடி) முன்மாதிரிகளாக இருக்கும் எனது தந்தை மற்றும் தமையனுக்கு முதல் நன்றி சமர்ப்பணம். இவர்களைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு இவ்வாறு வாய்ப்புகள் கிடைக்க வில்லையே என்று வருத்தப் பட்டிருக்கிறேன். (சமுதாயப் சேவை பணியினை ஒரு முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கூட , நேரடியாக அந்த சேவைகளில் ஈடுபட முடியாத ஒரு சிறப்பு தனித் துறையிலேயே அதிக நாட்கள் (இன்று வரை) பணியாற்றி வந்திருக்கிறேன் என்பதும் நிறுவன வாயிலாகவே வருங்காலங்களில் நேரடி சேவையில் ஈடுபட பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.)

எனது வாழ்வில் இதுவரை பலவாறாகப் பெற்ற அனுபவங்களையும் அறிந்தவற்றையும் மற்றவர்களுக்கு உபயோகப் படும் வகையில் பரிமாறிக் கொள்ளாமல் இருந்தால் என்ன பலன் என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் இருந்து வந்தது. அதே சமயத்தில் அவற்றை எப்படி பலருடன் பரிமாறிக் கொள்வது என்பதில் குழப்பங்கள் இருந்ததன. இணையதள பதிவுலகைப் பற்றி பத்திரிக்கைகளில் தவறான செய்திகளை மட்டுமே அதிகம் படிக்க நேர்ந்ததால், பதிவுலகு என்பது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற மற்றும் சாட்டிங் போன்றவற்றிக்கான ஒரு ஊடகம் மட்டுமே என்று மட்டுமே (தவறாக) எண்ணியிருந்தேன். எனக்கிருந்த இந்த தவறான எண்ணத்தை நீக்கி தமிழில் பல நல்ல பதிவு வலைகள் உண்டு என்று அவற்றை அறிமுகம் செய்து என்னையும் "ஒரு பதிவு பூ ஆரம்பியுங்கள்" என்று ஊக்கப் படுத்திய கார்த்திக் தம்பிக்கு இரண்டாவது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக, சட்டம் போன்ற கடினமான துறை சார்ந்த விஷயங்களைக் கூட தமிழில் எளிமையாகவும் சுவையாகவும் வழங்க முடியும் என்று நிருபித்து தமிழில் எழுத எனக்கு முன்மாதிரியாக இருக்கும் வழக்கறிஞர் திரு.ஜெயராஜன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப் பார்வை எனும் இதழை நடத்தி வரும் இவர் தமிழில் சிறப்பாக எழுதியமைக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் புதிதாக எழுத வரும் இளைய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் தனக்கு பிடித்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய பதிவினையும் அங்கீகரித்து மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தினையும் இன்னும் சிறப்பாக செயல் படவேண்டும் என்ற பொறுப்புணர்வையும் பதிவுலகில் நுழைந்த சில நாட்களுக்குள் எனககு ஈந்த எழுத்தாளர். திரு. சாருநிவேதிதா அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்னூட்டம் என்பது ஒரு பதிவருக்கு கிடைக்கும் க்ளுகோஸ் போன்றது. இதை நன்கு புரிந்து கொண்டு தனது சக பதிவர்களை போட்டியாக நினைக்காமல் இந்த பதிவுப் பூவினை தொடங்கிய நாட்களில் இருந்து பின்னூட்டங்கள் இட்டு ஊக்கமளித்து வரும் வால்பையன் அவர்களுக்கும், சந்தை நிலவரத்தில் தொடர்ந்து பின்னூட்டங்கள் பல இட்ட கபீஷ், dg, சுரேஷ், சதுக்க பூதம், ராஜநடராஜன், பொதுஜனம், நம் தமிழ், நனவுகள் மற்றும் இந்தப் பட்டியலில் விடுப்பட்டுப் போன பலருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்கறை கலந்த பல அறிவுரைகளை நேரிலும், மின்னஞ்சல் வாயிலாகவும், பின்னூட்டங்கள் வாயிலாகவும் தந்த (மிகுந்த தமிழார்வம் மற்றும் உயர்ந்த சமுதாய நோக்கங்கள் கொண்ட) திரு. நெற்குப்பை தும்பி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல வெகுஜன பத்திரிக்கையான ஆனந்த விகடனை படிக்க மட்டுமே வாய்ப்புகள் கிடைத்த எனககு, என்னுடைய படைப்பு ஒன்று அதன் வரவேற்பறையிலேயே இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான பெருமையான ஒரு தருணம். இந்த வாய்ப்பினைத் தந்த விகடன் குழுமத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்து மற்றும் பதிவுலத்தைப் பொறுத்தவரை அனுபவம் மிகவும் குறைந்த என்னையும் மதித்து, என் குறைகளைப் பொறுத்து இந்த பதிவுக்கு பல முறை வருகை தந்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் இந்த பதிவினைத் தொடரும் அன்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரித்துக் கொள்கிறேன். இவ்வாறு பலர் இந்தப் பதிவைப் பார்க்க முக்கிய காரணமான தமிளிஷ், தமிழ்மணம், திரட்டி போன்ற தமிழ் திரட்டிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே வோட்டு போட்டவர்களுக்கும் எனது நன்றிகள் பல.

எல்லாவற்றிக்கும் கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, குடும்பத்திற்கான நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி பதிவுகள் இட ஒத்துழைத்ததற்காக என் இனிய குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை படிக்கும் உங்களுக்கும் கூட ஒரு நன்றி.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள் பல.

பின்குறிப்பு: அன்புள்ள நண்பர்களே! வரும் வாரம் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் சொந்த ஊரான சேலத்திற்கு செல்ல (வர) இருப்பதால் புதிய பதிவுகளுக்கு சில நாட்கள் விடுப்பு அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். (அப்பாடா கொஞ்ச நாளைக்கு தப்பிச்சோம்னு நினைக்கிறீங்களா? )

இதை இடைவெளியில் நீங்கள் இது வரை பார்க்காமல் விட்ட பழைய பதிவுகளைப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள். ஒரு வாரம் புதிய பதிவுகளுக்கு மட்டுமே விடுப்பு. பின்னூட்டங்களுக்கு பதில் நிச்சயமாக இடுவேன்.

Wednesday, December 17, 2008

நாட்டுப் பற்றை எப்படி வெளிப்படுத்துவது?


முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளில் மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுப் பற்று, தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கதையாகி விட்ட பிறகு இப்போதெல்லாம் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் வெளிப் படுகிறது. உண்மையான நாட்டுப் பற்றை ஒவ்வொரு இந்தியரும் எவ்வாறு வெளிப் படுத்த வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளின் போது, தேசிய மூவர்ண உடைகளை அணிந்து கொண்டும், தேசிய கொடிகளை கையில் வைத்துக் கொண்டும், உடலில் வண்ணங்கள் தீட்டிக் கொண்டும் பலர் தங்களது தேசிய உணர்வை வெளிப்படுத்தியதுண்டு. போட்டிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டில் தொலைக்காட்சிகளில் அந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டும் டெண்டுல்கர் போன்றவர்கள் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் தங்களது நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியதுண்டு. வசதி படைத்த சிலரோ பல ஆயிரம் செலவு செய்து பார் வசதியுடன் கூடிய ரெஸ்டாரண்டுகளில் நண்பர்களுடன் இந்த போட்டிகளை (காக்டேயிலுடன்) ரசித்துக் கொண்டே தேசிய உணர்வுகளை வெளிப் படுத்தியதுண்டு. இதற்கெல்லாம் வசதியில்லாதவர்கள் ரோட்டில் சில எலக்ட்ரானிக்ஸ் கடை வாசலில் இந்த மாட்சுகளை பார்த்துக் கொண்டும், ஸ்கோரை கேட்டுக் கொண்டும், எதிரணியை திட்டிக் கொண்டும் தமது தேசிய உணர்வை வெளிப் படுத்துவதுண்டு. இதெல்லாம் செய்யாதவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று சொல்வது கூட நாட்டுப் பற்றை ஒருவகையில் வெளிப்படுத்துவதுதான் என்று கருதுபவர்கள் கூட நாட்டில் உண்டு.

இப்போது ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் நாட்டு பற்றை எப்படி வெளிப் படுத்துகிறோம் என்று பார்க்கலாம். தொலைக் காட்சி , பத்திரிக்கை, வலைதளம் போன்ற பொது ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று அரசியல்வாதிகளை, கண்காணிப்பு அதிகாரிகளை திட்டுவதும், பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும் என்பதும், உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவதும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய திருப்தியைக் கொடுக்கின்றன. ஊடக விவாதங்களில் ஈடு பட முடியாதவர்கள் ஊடகங்களை விடாமல் பின்தொடர்ந்தும், வீடு மற்றும் அலுவலங்களில் மற்றவர்களோடு மேற்சொன்னவாறு கலந்துரையாடியும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பலர் நாட்டுப் பற்று மிக்க குறுந்தகவல்களை பரிமாறிக் கொண்டும் (இவற்றை ஆரம்பித்து வைப்பது வணிக நோக்கம் கொண்ட சிலரே என்ற சந்தேகம் எனக்குண்டு), மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டும் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்துகின்றனர். சிலர் இதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயமே காரணம் என்று குறை சொல்லிக் கொண்டும் சிலர் மனித சங்கிலி, கையெழுத்துப் போராட்டம் நடத்திக் கொண்டும் நாட்டுப் பற்றை வெளிப் படுத்துகின்றனர்.

நாட்டுப் பற்று என்பது மிகவும் அவசியம் . இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. மேற்சொன்னவை எல்லாம் நாம் தாக்கப் பட்டு விட்டோமே என்ற ஒரு வேகத்தில் மட்டுமே வரும் உணர்வுகள் என்பதும் வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகின்றன என்பதுமே வேதனையான விஷயங்கள்.

அது சரி. நாட்டுப் பற்று என்பது எப்படி இருக்க வேண்டும்? நாம் ராணுவத்திலோ, காவல் துறையிலோ பணியாற்ற வில்லையே? நம்மை போன்ற சாதாரண குடிமக்கள் எவ்வாறு நாட்டுப் பற்றை வெளிப்படுத்த முடியும்?

எப்படி ஒரு அமைதியான சராசரி வாழ்வில் நாட்டுப் பற்று வெளிப் பட வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் சுவாமி விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்கா சென்ற போது நடைபெற்ற ஒரு சிறிய சம்பவம். அவருக்கு தூங்குவதற்கு முன்பு பால் அருந்தும் வழக்கம் இருந்தது. அவர் தங்கியிருந்த பகுதியிலோ பால் விற்கும் கடை எதுவும் காணப் பட வில்லை. சுவாமி அவர்கள் பாலுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தார். அதை கவனித்த ஒருவர் அவரிடம் வந்து எதற்காக தேடிக் கொண்டிருக்கிறார் என்று வினவ சுவாமியும் காரணத்தைச் சொன்னார். உடனே அந்த நபர் தனது வீட்டுக்குச் சென்று ஒரு கப் பால் கொண்டு வந்தார். சுவாமி மறுத்து பால் இல்லாமலேயே தாம் தூங்க முயற்சி செய்வதாக கூற, அந்த அமெரிக்கர் ஒரு பதில் அளித்தார். அது ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது. அவர் சொன்னது " நீங்கள் திரும்பிச் சென்று அமெரிக்காவில் பால் கிடைக்க வில்லை என்று கூறக் கூடாது. ஒரு அமெரிக்கன் என்ற முறையில் என் நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை"

இதுதான் நாம் நாட்டுப் பற்றை வெளிப் படுத்த வேண்டிய முறை. நம் ஒவ்வொருவரும் நாட்டின் பெருமையை தோளில் சுமக்க வேண்டும்.

காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை நம்மாலும் பல வகையிலும் நாட்டுப் பற்றை வெளிப் படுத்த முடியும். சில உதாரணங்கள் கீழே.

மனம் மற்றும் உடல் உறுதி பெறுவதற்கான பயிற்சிகள் (நாட்டிற்கு வலுவானவர்கள் அதிகம் தேவைப் படுகிறார்கள்)

சாலை விதிகளில் தொடங்கி நாட்டின் அனைத்து சட்ட திட்டங்களையும் மதிப்பது. வரிகளை ஒழுங்காக செலுத்துவது.

சக இந்தியர்களை நேசிப்பது - நாடு என்பது நிலமும் நீர்நிலைகளும் மட்டும் அல்ல. இங்கு வாழும் மனிதர்களே இந்த இந்திய நாடு. நாட்டு மக்களை நேசிப்பதின் மூலமே நாட்டை நேசிக்க முடியும்.

சமுதாயத்தால் அங்கிகரிக்கப் பட்ட பணிகளில் மாத்திரம் ஈடுபடுவது. அந்தப் பணி எதுவானாலும் உண்மையாக உழைப்பது.

உண்மையான திறமையை மதிப்பது. நாட்டுப் பற்று உள்ளவர்களை அங்கீகரிப்பது. சமுதாயத்திற்கு தொண்டு செய்பவர்களைப் போற்றுவது. முக்கியமாக போலித்தனமானவர்களை ஒதுக்கி வைப்பது.

தம்மைச் சுற்றி நடைபெறும் அநியாங்களை தட்டிக் கேட்பது, முடியாவிட்டால் குறைந்தப் பட்சம் சுட்டிக் காட்டுவது, அதுவும் முடியா விட்டால் தட்டிக் கேட்பவர்களையும் சுட்டிக் காட்டுபவர்களையும் ஆதரிப்பது, அது கூட முடியாவிட்டால் குறைந்த பட்சம் அநியாயங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பது. (தவறுகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் அவற்றுக்கு ஆதரவு கொடுப்பது போலத்தான்).

எரிசக்தி மற்றும் இதர ஆதாரங்களையும் வீணடிக்காமல் வருங்காலத்திற்காக சேமிப்பது.

இவை மட்டுமல்ல. நடைபாதையில் கிடக்கும் ஆணி போன்ற ஒரு கூர்மையான பொருளையோ அல்லது மக்கள் வழுக்கி விழக் கூடிய பழத் தோல் போன்றவற்றை எடுத்து ஓரத்தில் போடுவது கூட ஒருவகையில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுதான்.

இன்னும் கூட பல வகைகளில் நம்மைப் போன்ற குடிமக்கள் நமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தலாம். இவ்வாறான நாட்டுப்பற்றுக்கு விளம்பரமோ அல்லது மற்றவர்களின் சான்றிதழோ தேவை இல்லை. நமது ஆத்ம திருப்தியே போதும்.

நன்றி.

"சத்தியமா" இது பகல் கொள்ளைத்தானுங்க!கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை என்பார்கள். அது கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய பொது நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட 8000 கோடி ருபாய் முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து தனது தனிப்பட்ட லாபத்திற்கு தாரை வார்க்க முயற்சி நடந்திருக்கிறது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஓன்றுஆகும். இந்த நிறுவனம் தனது பங்குகள் சந்தைகளில் வர்த்தகம் ஆகி வரும் ஒரு பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி) ஆகும். இதை நிறுவியவர் திரு. ராமலிங்க ராஜு ஆவார். ஆனால் இந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகளில் பெரும்பகுதியை சந்தைகளில் ஏற்கனவே அவரால் விற்பனை செய்யப் பட்டு விட்டன. அவருடைய தற்போதைய பங்கு வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான் என செய்திகள் கூறுகின்றன.

இவருடைய மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மய்டாஸ் இன்பிரா மற்றும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் . இவற்றில் முதல் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகி வரும் ஒரு பொது நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 100 சதவீதம் அதன் நிறுவனத்திற்கே சொந்தமான ஒரு தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட் கம்பெனி).

மேற்சொன்ன நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கிடையே தந்தை-மகன்கள் உறவு இருந்தாலும், நிறுவனங்களிடையே நிறுவன ரீதியான உறவு முன்னரே இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நேற்று, திடீரென சத்யம் நிறுவனம் மய்டாஸ் இன்பிரா நிறுவனத்தில் 51 சதவீத பங்கும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் 100 சதவீத பங்கும் தனது நிறுவன கணக்கில் இருந்து முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.

மொத்தம் 8000 கோடி முதலீட்டு தொகையில் சுமார் 1500 கோடி முதல் நிறுவனத்திலும் சுமார் 6500 கோடி இரண்டாவது நிறுவனத்திலும் முதலீடுகள் செய்யப் படும் என்றும் அறிவித்தது. சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜுவின் பங்கு வெறும் 8.5 சதவீதம் மட்டுமே என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இவ்வளவு குறைவான பங்கு உரிமையை கொண்ட ஒரு தலைமை நிர்வாகி, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் (மென்பொருள் துறைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத) நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, பொது முதலீட்டாளர்களுக்கு உரிமையான ஒரு நிறுவனத்தின் பணத்தை எப்படி தாரை வார்க்க முடியும் என்ற கேள்வி நிதிச் சந்தைகளில் எழுந்துள்ளது.

சத்யம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப் பட்ட இந்த முடிவு முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது. நேற்று இரவு எடுக்கப் பட்ட இந்த முடிவின் எதிர்வினை, உடனடியாக அமெரிக்கா சந்தைகளில் வெளிப்பட்டது . அங்கு சத்யம் நிறுவனத்தின் பங்கின் விலை ஒரே நாளில் சுமார் 54 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களும் தங்கள் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தினர். இதனை புரிந்து கொண்ட சத்யம் நிறுவனத்தின் நிர்வாகம் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இன்று காலை அறிவித்தது. ஆனால், நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

இந்த நிகழ்வு இந்திய வணிகத் துறையில் முதலாவதோ அல்லது முடிவானதோ அல்ல. மேலும் பல நிறுவனங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இந்திய வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் (Promoters) அவற்றின் பங்குகளை பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் விற்ற பின்னும், அவற்றை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க சொந்த நிறுவனங்களைப் போலவே நிர்வகித்து வருவதையே அதிகம் பார்க்க முடிகிறது. பல முடிவுகள் வெளிப்படையானவையாக இருப்பதில்லை. அவற்றிற்கு பங்குதாரர்கள் ஒப்புதலும் முறையாக பெறப் படுவதில்லை. தொழிற் நிறுவனங்களை வழி நடத்துவதற்கான வகுக்கப் பட்ட நெறி முறைகள் (Corporate Governance) பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சட்டத்தின் பிடிகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே அதிகம் கவனிக்கப் படுகிறது. இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ஆகும்.

இன்றைக்கு இந்தியாவின் கடைக் கோடி குடிமகனும் பங்குகளில் முதலீடு செய்ய முன்வரும் சூழ்நிலையில் அரசு கண்காணிப்பு ஆணையங்கள் மக்களின் பணத்தை கையாட நடக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்காவில் தற்போது ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிலை இந்தியாவிலும் உருவாகி விட வாய்ப்பு உள்ளது.

நன்றி

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு


மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.

முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்று எண்ணும் கடினமான இறுக்கமான மனதுடையவர்கள். ஆனால் சுற்றம் (சமூகம்) இவர்களை விட மிகவும் பெரியது . அவற்றில் உள்ள பிரச்சினைகளும் மிகவும் வலிமையானவை. எனவே அந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இவர்களைத் தீர்த்து விடுகின்றன. தொடர்ந்து போராடுவதன் மூலம் இவர்கள் துவண்டு போய் விடுகிறார்கள். இறுதியாக உறுதி குலைந்து தோல்வியில் துவண்டு போய் விடுகிறார்கள்.

இரண்டாம் வகை முட்டை போன்றவர்கள். இவர்கள், ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் காலத்தை தள்ளி விடலாம் என்று எண்ணும் வழவழ கொளகொள ஆசாமிகள். சுற்றத்தாரை இளகிய மனதுடன் எதிர் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகளை தீர்க்க இளகின மனது மட்டும் போதாது. பிரச்சினைகளை சரிவர புரிந்து கொள்ளும் திறமை வேண்டும். பெரும்பாலும் சுற்றத்தார் இவர்களது இளகிய மனதை சரிவர புரிந்து கொள்வதில்லை. மாறாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இவர்கள் மனதை இறுக்கி விடுகின்றன. இறுதியாக உலகத்தைக் குறை கூறுபவர்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள்.

மூன்றாம் வகையினர் காஃபி பொடி போன்றவர்கள். இவர்கள் ஆளுமை குணம் மிக்கவர்கள். சுற்றத்தார் இவர்களின் சொந்த குணத்தை மாற்ற இவர்கள் அனுமதிப்பதில்லை. பிரச்சினைகளின் சந்திக்கும் போது இவர்கள் தன் ஆளுமைத் திறத்தை வெளிப் படுத்துகிறார்கள் (மணம் வீசுகிறார்கள்). சுற்றுப் புற சூழ்நிலையை இவர்கள் (விரும்பும்) குணத்திற்கு மாற்றுகிறார்கள். சுற்றத்தைப் (சமூகத்தை) புரிந்து கொண்டு அதோடு கலந்து வாழ்ந்து, வாழும் சூழலையே இவர்கள் மணம் வீச செய்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

ஒரு கப் காஃபி குடித்துக் கொண்டே யோசியுங்கள்.

நன்றி.

Tuesday, December 16, 2008

மார்கழியைக் கொண்டாடுவோம்


என் தாயார் தனது சிறுவயதிலிருந்தே மார்கழி மாதம் காலை வேளைகளில் கோயிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டவர். ஒரு முறை அவரால் போக முடியாத நிலையில் வீட்டிலிருந்து ஒருவராவது மார்கழி மாதத்தின் ஒரு அதிகாலையிலாவது கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில், பதின் வயதில் பகுத்தறிவு பேசித் திரிந்த என்னை கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக கோயிலுக்கு ஒரு விடிகாலையில் அனுப்பி வைத்தார்.

வெயில், அதிக வெயில், வெயிலோ வெயிலோ என்றே பழக்கப் பட்ட நாம் புதிதாக உணரும் அந்த அதிகாலையின் மிதமான இதமான குளிர், வேர்த்து விறுவிறுத்த முகங்களே அதிகம் பார்க்க முடிகின்ற நம்மூரில் அப்போதே மலர்ந்த மலர்களைப் போன்ற புத்துணர்வு கொண்ட முகங்களின் (கோயில்) தரிசனம், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் இன்னும் அழகாக தெரியும் கோயில், இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று ஏங்க வைக்கிற நெய் வடியும் பொங்கல் பிரசாதம், காதுகளுக்குள் நுழைந்து இதயத்தைத் துளைத்து உயிரைத் தொடும் அந்த திருப்பாவை வரிகள், ஏதோ நம்மிடம் சொல்ல வருவது போன்ற ஒரு உணர்வைத் தரும் ஆண்டாள் தாயாரின் முகம், எல்லாவற்றிக்கும் மேலாக எம்பெருமாளின் அந்த விஷ்வரூப தரிசனம், இவை அனைத்தும் ஏதோ கடமைக்கு ஒரு நாளைக்கு மட்டும் என்று கிளம்பிய என்னை அம்மா சொல்லாமலேயே அடுத்த நாள் மட்டுமல்ல அந்த மாதம் முழுதும் கோயிலுக்கு வரச் செய்தன.

மார்கழி மாதத்தின் சிறப்பு பற்றி பல கருத்துகள் சொல்லப் படுகின்றன. நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஒரு நாளின் அதிகாலை வேளையில் மனம் மிகவும் அமைதியானதாகவும் உடல் அதிக வலு உள்ளதாகவும் இருக்கும் என்று கருதப் படுகிறது. ஒரு ஆண்டின் விடிகாலையே இந்த மார்கழி மாதம். அதாவது உத்திராயான நேரம் (அதாவது வடக்கை நோக்கி சூரியன் பார்வை நகர ஆரம்பிக்கும்) என சொல்லப் படும் தை மாதத்திற்கு முந்தின மாதம் இந்த மார்கழி. மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தரும் மாதமும் இந்த மார்கழி மாதம். ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், கூடார வல்லி (கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கூட இந்த மாதத்திலேதான்) , போகி என வரிசையாக பண்டிகைகள், இசை நிகழ்ச்சிகள், கதா கலாட்சேபங்கள், பஜனைகள், தெருவை அடைக்கும் வண்ணக் கோலங்கள் (கோலப் போட்டிகள் கூட உண்டு) என நம்மூரை ஒரு பூலோக சொர்க்கமாகவே காட்டும் இந்த மார்கழி மாதம் தரும் இன்பத்தில் பங்கு பெறுவதற்காகவே உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இந்த மாதத்தில் தமிழ் நாடு வருவதுண்டு. இந்த லிஸ்டில் இந்த முறை நானும் உண்டு. மார்கழி மாதத்திற்கு எம்மதமும் சம்மதம். வைணவ மார்க்கம் தொடங்கி வைத்த இந்த மார்கழி கொண்டாட்டத்தில் பின்னர் சைவம் மற்றும் இதர மார்க்கங்களும் பெருமளவு பங்கு கொண்டன.

எனவே நண்பர்களே! எந்த நம்பிக்கையுடைவராயினும் சரி. அதிகாலை வேளையில் எழுந்து உங்கள் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு தளத்திற்கு சென்று வாருங்கள். இறையிலாக் கொள்கை கொண்டவர்கள் கூட இயற்கை அழகு தவழும் இடங்களுக்கு அதிகாலையில் சென்று வரலாம்.

இந்த வருடம் நம்முடைய கண்களையும், காதுகளையும், இதயங்களையும் கொஞ்சம் அதிகமாக திறந்து வைத்து (சீக்கிரம் எழுந்து) மார்கழி தரும் உணர்வு பூர்வமான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முயற்சி செய்வோம்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

நன்றி.

Monday, December 15, 2008

சரித்திரம் காணாத சந்தை மோசடி


இது வரை சரித்திரம் கண்டிராத சந்தை மோசடி அமெரிக்காவில் இப்போது நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மோசம் செய்யப் பட்ட பணத்தின் அளவு சுமார் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்) என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவரங்கள் உள்ளே.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் ஹெட்ஜ் பான்ட் (Hedge Fund) என்றழைக்கப் படும் குறுகிய வட்ட முதலீட்டு நிதிகள் பிரபலமானவை. நமக்கு மிகவும் அறிமுகமான பரஸ்பர நிதியைப் போல, பொது மக்களிடம் இருந்து இவை நிதி திரட்டுவதில்லை. மாறாக, ஒரு சில பணக்காரர்களிடம் (குறைந்த எண்ணிக்கையில்) இருந்து மட்டும் பெருமளவு பணம் திரட்டப் படுகிறது. அந்தப் பணம் உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பெரும்பாலும் குறுகிய கால வர்த்தக நோக்கில் முதலீடு செய்யப் படுகிறது. இந்த நிதிகள் பரஸ்பர நிதிகளைப் போல பொதுவாக எந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் வரம்புகளுக்கும் உட்படுவதில்லை. மேலும், சுய அளவில் கூட எந்த வரையறுக்கப் பட்ட கட்டுப்பாடுகள் அற்றவை. எந்த நாட்டிலும், எந்த சந்தையிலும், எந்த பங்கு அல்லது வர்த்தகத்திலும் முதலீடு செய்ய இவறிற்கு சுதந்திரம் உண்டு. இந்த நிதிகளின் ஒரே நோக்கம் லாபம் லாபம் லாபம் மட்டுமே.

அமெரிக்க பங்கு சந்தையின் (நாஸ்டாக்-Nasdaq) முன்னாள் தலைவரான பெர்னார்ட் மடொப்ப் (Bernard Madoff) நடத்தி வந்த ஒரு ஹெட்ஜ் பான்ட் நிதியமைப்பு இப்போது ஐம்பது பில்லியன் டாலர் பணத்தை மோசடி வழிகளில் இழந்திருப்பதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிதி நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பிருந்தே இழப்புகளைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரியப் படுத்தப் படவில்லை. அதிகம் லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாகவே விளம்பரம் செய்யப் பட்டு வந்துள்ளது. தனது சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டங்களையே சந்தித்து வந்தாலும், புதிய முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் பட்டுவாடா (லாபம் சம்பாதிப்பது போல) செய்யப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் நிதி முதலீட்டு நிறுவனம் போல அல்லாமல் ஒரு பெரிய போன்சீ (பிரமிட் முறையிலான) நிதி அமைப்பாகவே செயல் பட்டு வந்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

போன்சீ (Ponzi) நிறுவனம் என்பது சட்டவிரோதமாக செயல் படும் ஒரு அமைப்பாகும். இதில் தொடர் முறையில் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் கை மாறுகிறது. நம்மூரில் இதனை லிங்க் ஸ்கீம் என்று அழைப்பார்கள்.

(பணம் இழந்தவர்கள் கம்பெனி முன்னர் கூடியிருக்கிறார்கள். நம்மூர் மோசடி பைனான்ஸ் கம்பெனிகளில் பணம் போட்டு இழந்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?)

சந்தை வட்டாரங்களில் மிகவும் மதிக்கப் படும் நாஸ்டாக் அமைப்பின் முன்னாள் தலைவரே இந்த தகிடு தித்த வேளையில் ஈடுபட்டிருப்பது உலகின் சந்தைகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சூப்பர் பெண்மணி என்று பிரிட்டிஷ் பத்திரிக்கை உலகில் வர்ணிக்கப் பட்ட நிகோலா ஹோர்லிச்க் நிதி மேலாளர் ஆக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. (நன்றி: பி.பி.சி. வேர்ல்ட், டெலிகிராப்)

இந்தியாவில் இது போன்ற ஹெட்ஜ் பான்ட் நிதிகள் புழக்கத்தில் இல்லை என்றாலும், இந்தியாவின் கடைக் கோடி மனிதனும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முன் வரும் இந்த காலக் கட்டத்தில், பொது மக்கள் பணத்தை கையாளும் அனைத்து நிதி அமைப்புகளையும் அரசு உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். இதற்காக அமைக்கப் பட்டுள்ள செபி (SEBI) போன்ற அரசு அமைப்புகள் நிதி நிறுவனங்களில் வருடாந்திர ஆய்வுகள் நடத்தி நிதி அறிக்கைகளின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.

நன்றி

Sunday, December 14, 2008

சவாலே சமாளி!


அமெரிக்க பாராளுமன்றத்தில் அவர்களது வாகனத் துறைக்கான மீட்டெடுப்பு மசோதா தோல்வி, உலக சந்தைகளின் மந்தமான சூழல் மற்றும் இந்திய தொழிற் உற்பத்தியின் வீழ்ச்சி என்ற பல சவால்களை நமது பங்கு சந்தை மிகத் திறமையாக சந்தித்து (நாம் ஏற்கனவே எதிர்பார்த்தப் படி) முன்னேற்றமும் கண்டுள்ளது. விவரங்கள் கீழே.

ஏற்கனவே நம் பதிவில் குறிப்பிட்ட படி, சென்ற வாரம் நமது பங்கு சந்தை பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் இறுதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிபிட்டி குறியீடு சுமார் ஏழரை சதவீதமும் சென்செக்ஸ் எட்டு சதவீதமும் அதிகரித்துள்ளன. முந்தைய வார இறுதியில் தலைமை வங்கி அறிவித்த வட்டி வீத குறைப்பு, மத்திய அரசு அறிவித்த கிரியா ஊக்கித் திட்டங்களுமே இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணங்கள். அதே சமயம் மேற்சொன்ன சவால்களின் காரணமாக, சந்தை பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிட்டது.

இந்த வார பணவீக்கம் மேலும் குறைந்து எட்டு சதவீதம் ஆனது மற்றும் தொழிற் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற புதிய நம்பிக்கையை சந்தைக்கு தந்துள்ளது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சென்ற வாரம் மிக அதிக முன்னேற்றத்தை கண்டன. இதே காரணத்தின் அடிப்படையில் வங்கிகளின் பங்குகளும் உயர்ந்தன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்பாடு மற்றும் அரசு வெளியிட்ட ஏற்றுமதி சலூகைகளின் அடிப்படையில் உலோகத் துறையை சேர்ந்த பங்குகளும் உயர்ந்தன. அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான எரிவாயு பிரச்சினை விரைவில் தீரும் என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளும் வளர்ச்சியைக் கண்டன.

சென்ற வார பதிவில் சொன்ன படி சென்செக்ஸ் 9350 புள்ளிகளுக்கு வெகுவாக மேலே முடிவடைந்திருப்பது, டெக்னிகல் அனலிசிஸ் படி வரும் வாரத்திற்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கிறது. F&O இல் சாதகமான நிலையில் எதிர்காலங்களுக்கான இருப்பு (Positive Open Interest) அமைந்திருப்பதும் புதிய தெம்பைத் தருகிறது. அமெரிக்க தலைமை வங்கி மேலும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் நமது தலைமை வங்கியின் நிலை மற்றும் அரசின் புதிய சலுகை/கிரியா ஊக்கி திட்டங்கள், உலக சந்தைகள் போக்கு, அமெரிக்க வாகனத்துறைக்கான மீட்டெடுப்பு மசோதாவில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இந்திய சந்தைகளின் போக்கை நிர்ணயிக்கும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9750-9850, 10200-300,
நிபிட்டி 2980-3030, 3140-60

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்
சென்செக்ஸ் - 9350-9450, 8700-8800
நிபிட்டி - 2800-2810, 2675-2700
வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம். சென்செக்ஸ் 10200 புள்ளிகளுக்கு அருகே மற்றும் நிபிட்டி 3150 புள்ளிகளுக்கு அருகே தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) விற்பனை செய்யலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகத்தில் ரூபாய் மேலும் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 47.50 இலிருந்து 49.00 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
நன்றி.

Saturday, December 13, 2008

இந்திய தொழில் உற்பத்தி வீழ்ச்சி - ஒரு அலசல்


பதினைந்து வருடங்களுக்கு பின்னர், முதன் முறையாக இந்திய தொழில் உற்பத்திக் குறியீடு (IIP) வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகளைப் போல இல்லாமல், இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது எனவும் அதிக பட்சம் பொருளாதார மந்த நிலையே காணப் படும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. விரிவான அலசல் இங்கே.

இந்திய தொழிற் வளர்ச்சிக் குறியீடு, சுரங்கத் தொழில், மின்சாரத் துறை, உற்பத்தித் துறை மற்றும் பொதுவான தொழிற்துறை ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மதிப்பிடுவதாகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தொழிற் வளர்ச்சிக் குறியீடு 0.40 சதவீதம் இறக்கத்தை சந்தித்துள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலக் கட்டத்தில் இந்த குறியீடு 12.20 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத் தக்கது. பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதத்தின் வளர்ச்சியாக எதிர்பார்த்தது இரண்டு முதல் மூன்று சதவீதம் அளவிலான வளர்ச்சியை. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையாக வந்தது 0.80 சதவீதம் இறக்கம். காரணம் என்ன?

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

உள்நாட்டில் வாகன விற்பனை மிகவும் குறைந்துப் போனது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்.

இந்த காலண்டர் ஆண்டு (2008) முழுவதும் இத்தகைய வீழ்ச்சி தொடரும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியிலும் (GDP) பின்னடைவு நேரிடும் என்றும் கருதப் படுகிறது.

இந்திய தலைமை வங்கி மற்றும் அரசு இது குறித்து தங்களது நிலையை குறுகிய காலத்திற்குள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக தலைமை வங்கி வட்டி வீதங்களை மேலும் குறைக்கும் என்றும் கடன் விதிமுறைகளை தளர்த்தும் என்றும் சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். அரசும் தன் பங்காக மேலும் சில வரிச் சலுகைகளும் ஏற்றுமதிக்கான சில புதிய அணுகுமுறையையும் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஆனால், நாட்டின் பொருளாதரத்தை தலை நிமிர்த்த இவை மட்டும் போதுமா என்பது ஒரு பெரியக் கேள்விக் குறி. இந்த பதிவர் தனது ஆங்கிலப் பதிவில் ஏற்கனவே சொல்லி இருந்த படி இந்திய அரசு, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சாலைகள், வாழ்வியல் மேம்பாடு போன்ற துறைகளில் பெரிய அளவில் புதிய முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும். இதன் காரணமாக பணப் புழக்கம் மீண்டும் அதிகமாகும், தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் மீண்டும் அதிகப் படியான தேவையைச் சந்திக்கும். சமூகமும் நலம் பெரும்.

செய்யுமா நம் அரசு?

நன்றி

அம்மா குடித்த ஞானப் பால்


(இன்று வார இறுதி நாளல்லவா? ஒரு கதை எழுத முயற்சி செய்யலாம் என்று ஆசை. படித்துப் பாருங்கள்.)

அவளுக்கு நிறைய கர்வம் உண்டு. அவள் ரொம்ப அழகென்று. அந்த நினைப்பில் ஒரு நியாயம் உண்டு. கடந்து சென்ற பல ஆண்கள் அவளைத் திரும்பி திரும்பி பார்த்திருக்கிறார்கள். அவளுடைய நிறுவனத்தில் அவளுக்கென்று தனி மரியாதை. அவளுடைய நிறுவனம் பரஸ்பர நிதி திட்டங்களை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனம் ஆகும். அது சம்பந்தமாக நிறுவனம் நடத்திய பல பொது நிகழ்ச்சிகளில் அவளே முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கிறாள். பங்கு சந்தைகள் மற்றும் நிதி சந்தைகள் விஷயத்தில் அவள் ஒரு கற்றுக் குட்டியே ஆயினும், சந்தை போக்கு பற்றி அவள் விவரிக்கும் போது, சந்தை விவரம் நன்கு தெரிந்த விற்பன்னர்கள் கூட மது அருந்திய வண்டுகள் போல மயங்கி கிறங்கி போய் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

குழந்தை பெற்றுக் கொண்டால் தனது அழகு போய் விடும் என்று பயந்த அவள் பிள்ளை பெறுவதை பல காலம் தள்ளிப் போட்டு வந்தாள். அவளது கணவன் பலவாறு முயற்சி செய்து பிள்ளை பெற்றுக் கொண்டும் அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக அவளை குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்கச் செய்தான். அழகான குழந்தையும் பிறந்தாகி விட்டது. இப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம். (அழகைக் காப்பாற்ற) சில வாரங்கள் வரையே குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க முடியும் என்கிறாள். அவனோ குறைந்தது சில மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறான். இந்த முடிவை எடுக்கும் பொறுப்பை அவர்களது குடும்ப மருத்துவருக்கு கொடுக்க முடிவு செய்கிறார்கள் அவர்கள். அவளோ, குடும்ப மருத்துவரிடம் சில வாரங்களில் நிறுத்தப்படும் தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாற்று உணவு எது என்று மட்டும் கேட்கும் மறைமுக உள்நோக்கத்துடன் சென்று மருத்துவருக்காக மருத்துவமனையில் தன் குழந்தையுடன் ஒரு மாலை வேளையில் காத்திருக்கிறாள்.

அப்போது, திடீரென்று கீழ் தளத்தில் ஒரே அலறல் சத்தம். ஆம். அன்று அந்த நகரத்திற்கே ஒரு சோக தினம். தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் குழந்தைகள்/பெண்கள்/பிரசவ மருத்துவமனை என்றும் பாராமல் அந்த மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து விடுகிறார்கள். கண்ணில் கண்டவரையெல்லாம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

அச்சத்தில் நடுங்கி போய் மேல்தளத்தில் இருந்தவர்கள் (நமது கதாநாயகியையும் சேர்த்து) எல்லோரும் ஒரு சிறிய அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்கிறார்கள். மேலேயும் வந்த அந்த பயங்கரவாதிகள் ஒவ்வொரு பகுதியாக கொலைவெறி வேட்டை நடத்தி வருகிறார்கள். பல தாய்மார்களும் பல குழந்தைகளும் அந்த சிறிய அறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். புழுக்கம் தாளாமல் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பிக்க ஒரு புத்திசாலி நர்ஸ் ஒரு யோசனை கூறுகிறார். "தீவிரவாதிகள் இங்கிருந்து செல்லும் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் குடுத்துக் கொண்டே இருங்கள் "

இந்த முறை விரைவில் செயல் பட்ட நம் அதிரடிப் படை வீரர்கள், அந்த தீவிரவாதிகளை உடனடியாக முடித்துக் கட்ட, அறையில் இருந்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்புகிறார்கள்.

சில நாட்கள் கழிந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய கணவனிடம் அவள் சொன்னது " சில மாதங்கள் அல்ல சில வருடங்களுக்கு நான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பேன் என்று" அவளது மனமாற்றத்திற்கு அவனுக்கு காரணம் ஏதும் விளங்க வில்லை. நமக்குத்தானே தெரியும் அவள் ஞானப் பால் குடித்தவளென்று.

நன்றி.

(பின்குறிப்பு: கத பரவால்லேன்னு ஒரு நாலு பேர் பின்னூட்டம் இல்லேன்னா வோட்டு மூலம் சொன்னாப் போதும். இன்னொரு தரம் கத எழுதுவேன். ஐயோ! இப்பயே கண்ண கட்டுதேன்னு சொல்றீங்களா? பயபடாதீங்க அடிக்கடி இல்ல, எப்பயாவது ஒரு தரம்தான் . அப்பாடா தப்பிச்சமுன்னு நிம்மதி பெருமூச்சு விடுறீங்களா? அதுக்குள்ளே இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க. ஒரு கவித கூட எழுத முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முயற்சி திருவினையாக்கும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.)

Friday, December 12, 2008

ஒரு நாள் எம்.எல்.ஏக்கள்!


கடந்த மாதம் உத்தர பிரதேச மாநில சட்டசபையில் 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றி விவாதம் நடத்த ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டது. அந்த குழந்தைகளும் (ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் என்றாலும்) ஐந்து வருட முழு செயல்பாட்டை ஒரே நாளில் வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். விவரம் உள்ளே.

உலக குழந்தைகள் உரிமை நாளை முன்னிட்டு, யூனிசெப் மற்றும் சில குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக பணி புரியும் வாய்ப்பு தரப் பட்டது. மிக அமைதியாக, பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்தி அந்த குழந்தைகள் அனைவரிடமும் "சபாஷ்" வாங்கினார்.

அந்த குழந்தைகள் விவாதித்த சில விஷயங்கள் கீழே.

குழந்தைகள் நலம் காப்பதற்காக குழந்தைகள் நல ஆணையம் அமைப்பது குறித்து இந்த ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் வலியுறித்தனர்.

வாரணாசியில் வந்த ஒரு குழந்தை அந்த ஊர் ரயில் நிலையத்தில் அமைப்பு சாரா முறையில் பனி புரியும் குழந்தைகள் உணவு, வீடு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் படும் அவதியை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியது. மற்றொரு குழந்தை, ஊனமுற்ற குழந்தைகளை தனியே ஒதுக்காமல் அவர்களையும் சாதாரண பள்ளிகளிலேயே படிக்க வகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. மேலும், இந்த ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் வெவ்வேறு வகையில் சுரண்டப் படுவது, சாதி அடிப்படையில் வித்தியாசம் பாராட்டுவது, குழந்தைத் தொழிலாளர்கள் மீது போலீஸ் அராஜகம், கிராமப் புறங்களில் போதுமான அளவு கல்வி, சுகாதார வசதி இல்லாதது மற்றும் பொது வாழ்கை வசதிகள் இல்லாதது போன்றவை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினர்.

அந்த சட்டசபைக் கூட்டத்தை பார்வையாளர்களுக்கான அரங்கில் இருந்து பார்வையிட்ட அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர். சட்டசபை சபாநாயகர் இது பற்றி பின்னர் கருத்து தெரிவிக்கையில் குழந்தைகள் சொன்னவை எல்லாம் கசப்பான உண்மைகள் எனவும் இவற்றின் மீது பெரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஒவ்வொரு வருடமும் இதே தேதியில் (நவம்பர் 20) இது போன்று குழந்தைகளின் சட்ட சபை நடைபெறும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த கூட்டம் முடியும் வரை தொடர்ந்து விவாதங்களைக் கூர்ந்து கவனித்த பி.ஜெ.பி. எம்.எல்.ஏ. திரு. ஓம் பிரகாஷ் சிங், பல முழு கூட்டத் தொடர்களை விட இந்த ஒரு நாள் கூட்டம் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

இந்த ஒரு நாள் குழந்தைகள் சட்டசபை பற்றி கருத்து தெரிவித்த யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி, இது விளையாட்டாக நடத்தப் பட்ட மாதிரி சட்ட சபை அல்ல எனவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட அனைத்து விஷயங்களும் முறைப்படி பதிவுகள் சட்டமன்ற பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டன எனவும் கூறினார்.

இது போன்ற அனைவரையும் கவர்ந்த ஒருநாள் சட்டசபைக் கூட்டம் நடைபெற காரணமாக இருந்த அனைவரும் (சட்டசபை சபாநாயகர் உட்பட) பாராட்டுக்குரியவர்கள். இது போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு ஒருநாள் எம்.எல்.ஏக்களாக விவாதம் நடத்த (மட்டும் அல்ல முடிவுகள் எடுக்கவும்) வாய்ப்பு கொடுத்தால், இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

Thursday, December 11, 2008

சக பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்


புரட்சிக் கவி பாரதி பிறந்த இந்த திருநாளில், சக தமிழ் பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நானும் ஒரு தமிழ் எழுத்தாளன்/பதிவர் என்ற முறையில் நான் விடுக்கும் ஒரு உரிமை கலந்த வேண்டுகோள் இங்கே.

சங்ககாலத்தில் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் காதல் மற்றும் வீரம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டு வந்தன. பின்னர், சமண பௌத்த மதங்களின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் ஆனதும், அறம், பொருள் மற்றும் வீடு பேறு என வாழ்வியல் போதனைக்குரிய விஷயங்கள் அதிகமான அளவில் அற நூல்களாக எழுதப் பட்டன. இடைக்காலத்தில் தமிழ் பொதுவாக பக்தி மொழியாகவே அறியப் பட்டு கம்பராமாயணம், திருப்பாவை, திருவாசகம் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் இயற்றப் பட்டன.


தற்காலத்திலோ, தமிழ் இலக்கியங்கள் காதல், அரசியல், சமூகக் கருத்துக்கள், தனிப் பட்ட உணர்வுகள் போன்றவற்றையே அதிகம் பிரதிபலிக்கின்றன.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

என்று கர்வமாக சொன்ன அதே பாரதியே மற்றொரு கவிதையில்

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்த பேதை (தமிழ்த் தாய்) உரைத்தாள் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்!


என்றும் தமிழில் நுட்பமான விஷயங்கள் (அதிகம்) இல்லையே என்ற தனது வருத்தத்தையும் வெளிபடுத்தினான்.

அதிர்ஷ்ட வசமாக, தமிழர்களாகிய நாம் இன்றைக்கு உலகின் எட்டுத் திக்கிலும் சென்று பல தொழிற்நுட்ப துறைகளிலும் சிறந்து விளங்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். நாம் (வேற்று மொழியில்) கற்ற பல கலைச் செல்வங்களை தமிழிலும் தந்தால் பாரதியின் (மேற்சொன்ன) கனவு நிறைவேறுமல்லவா? தொழிற்நுட்ப செல்வங்கள் தமிழில் (அதிகம்) இல்லையே என்ற வருத்தமும் நீங்குமல்லவா? எனவே நண்பர்களே, நாம் கற்றறிந்த நுட்பமான விஷயங்களை தமிழில் எளிமையாகவும் சுவையாகவும் தெளிவாகவும் தர முயற்சி செய்வோம் என இந்த நல்ல நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

நன்றி

பின் குறிப்பு: எனக்கு இன்னும் கொஞ்சம் பேராசையான கனவு கூட உண்டு. தமிழில் இல்லாத நுட்பமான விஷயங்களே உலகில் இல்லை எனும் அளவிற்கு தமிழ் இலக்கியம் வளர்ந்து வேற்று மொழியாளர்களும் தமிழ் கற்றுக் கொண்டால் தம்மறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நினைக்கும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?

Tuesday, December 9, 2008

சமூகத்தில் நடை பெறும் விஷயங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டுமா?


நாடு உலகம் எப்படியோ போகட்டும். எதற்காக அலட்டிக் கொள்ள வேண்டும்? எனக்கென்ன ஆயிற்று? சமுகத்தினைப் பற்றி கவலைப் பட பலர் இருக்கிறார்கள். சாமான்ய மத்திய தர வர்க்கத்தில் ஒருவனான என்னால் கவலைப் பட்டு மட்டும் என்ன செய்ய முடியும்? என் அளவில் அல்லது என்னை சார்ந்தவர்கள் அளவில் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது.

சமீபத்தில் ஒரு கவிதை படித்தேன். நீங்களும் படிக்க கீழே கொடுக்கப் பட்டது.

அவர்கள் கம்யுனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
காரணம் நான் தொழிற்சங்கவாதியும் கூட இல்லை

அப்புறம் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை.
ஏனென்றால் நான் யூதன் கூட இலலை

கடைசியாக என்னை தேடி தேடி வந்தனர்
குரல் கொடுக்க யாரும் இலலை
காரணம் அங்கு யாருமே இலலை.

ஹிட்லரின் ஆதரவாளராக இருந்து பின்னர் எதிர்ப்பாளராக மாறிய மார்ட்டின் நீமுல்லேர் என்பவரால் ஜெர்மெனியின் நாஜி காலத்தில் எழுதப்பட்டது. இந்த கவிதை. நாஜிகளின் முதல் இலக்கு கம்யூனிஸ்ட்கள், பின்னர் அவர்களின் இலக்குப் பட்டியல் தொழிற்சங்க வாதிகள், பத்திரிக்கையாளர்கள், யூதர்கள் என நீண்டு கடைசியாக சர்ச்சுகளில் வந்து முடிந்தது என்பதையும் நாஜிகள் முதலிலேயே அனைவராலும் தடுக்கப் பட்டிருந்தால் அவர்கள் கொடுமை பட்டியல் நீண்டிருக்காது என்பதையும் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நம்மைச் சுற்றி நடைபெறும் விஷயங்களில் அக்கறை காட்டி மட்டும் என்ன பிரயோஜனம்? என்னால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று வினவுகிறீர்களா? அக்கினி குஞ்சு மட்டுமே ஒரு பெரிய காட்டை எரிக்க போதுமானது என்றான் நம் பாரதி. இது கவிதை மட்டுமே என்கிறீர்களா? இதற்கு சரித்திரபூர்வமான ஆதாரங்கள் பல உண்டு. ஒரு ஆதாரம் இங்கே.

காந்தி எனும் சூரியன் இந்திய அரசியல் வானில் உதிக்காத காலம் அது. சூரியனே மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்று அரசியல் பெருந்தலைவர்கள் கூட நினைத்திராத காலம் அது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பெட்டிசன் தலைவர்கள் என்று மட்டுமே உணரப் பட்ட காலம் அது.

அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளை பற்றி ஒரு தலைவர் ஒரு பெட்டிசன் தயாரிக்கிறார். அதற்காக, மிகவும் கடினமாக உழைத்து வார்த்தைகளையும் விவரங்களையும் சேகரிக்கிறார். அவர் இதற்காகப் படும் கஷ்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைய தலைவர் வருத்தத்துடன் அவரிடம் கேட்கிறார். "ஐயா, இந்த கடிதத்தை எழுத நீங்கள் மிகவும் கஷ்டப் படுகிறீர்கள். ஆனால் இந்த கடிதத்தின் மீது பிரிட்டிஷ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. சொல்லப் போனால் இந்தக் கடிதத்தை பெற்ற உடன் குப்பைக் கூடையில் போட்டாலும் போட்டு விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு இந்த விண்ணப்பத்தை தயாரிக்க வேண்டும்?"

இதற்கு அந்த பெருந்தலைவர் அளித்த பதிலைப் படிக்கும் போது என்னையுமறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தது. அவர் கூறியது. "நண்பரே! இந்த கடிதம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு முகவரியிடப் பட்டிருக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பத்தின் வரிகள் இந்திய மக்களை சென்றடைவதற்காக தயாரிக்கப் பட்டவை. இவற்றில் உள்ளவற்றை அவர்கள் சரியாக புரிந்து கொண்டால் போதுமானது. இந்த கடிதத்தின் மீது அரசு இன்றைய தேதியில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். ஆனால், மக்கள் ஒரு நாள் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்கள். அன்றைக்கு இந்தியாவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஆனால் அதற்கு பல காலம் கூட பிடிக்கலாம். ஏன் அப்போது நான் உயிரோடு இருப்பேனா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எனது சந்ததியினர் அந்த விடிவு நாளை நிச்சயம் பார்ப்பார்கள். இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் "

அன்று, அவரிட்ட சிறு தீப்பொறி பரவ கொஞ்ச நாள் பிடித்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தது. ஆனால் அவரது சத்திய வார்த்தைகள் பலித்த நாளை அவரால் காண இயலவில்லை. ஆம், அவர் உயிர் அதற்கு முன்னரே பிரிந்து விட்டது.

நமது பாரதி கூட இந்தியா சுதந்திரம் பெற்றால் பாட ஒரு பாட்டு வேண்டுமே என்று "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" நாம் விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே ஒரு பாட்டை எழுதி வைத்தான். அவன் கூட,அந்த சுதந்திர திருநாளை காண முடிய வில்லை. ஆனால் அவன் பாடல்களோ இன்னும் கூட பல நூற்றாண்டுகள் வரை ஒலித்து கொண்டே இருக்கும்.

எனவே நண்பர்களே, நம்மை சுற்றி நடைபெறும் தீமையான விஷயங்களைக் கூர்ந்து கவனிப்போம், வீதியில் வந்து போராடா விட்டாலும் குறைந்த பட்சம் அவற்றின் மீது நமது கருத்துக்களை உருவாக்குவோம் (இது சுதந்திர வேள்விக்கு அச்சாணி போட்டவர்களின் பாணி.) அவற்றை உரிய வகையில் வெளிப்படுத்துவோம். அந்த தீப்பொறிகள் நாடு முழுக்க பரவி, இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள், தீமைகளைச் சுட்டெரிக்கும். இல்லாவிடில், நீமுள்ளர் சொன்னது போல இன்றைக்கு நாம் பாதிக்கப் படவில்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் தீமை நம்மையும் விடாமல் தாக்கும்.

நன்றி.

முதல் ரவுண்ட் காங்கிரசுக்கு. முடிவான ரவுண்ட் யாருக்கு?


2009 மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 3-2 என்ற செட் கணக்கில் முக்கிய எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்த தேர்தல் தரும் பாடங்கள் குறித்து இங்கு விவாதிப்போம்.

டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் முதல் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தேர்தலுக்கு முன்னர், டெல்லி மாநிலத்தில் காங்கிரசும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி செய்து வந்தன. மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய கட்சி எனும் பிராந்திய கட்சி ஆட்சி செய்து வந்தது.

இப்போது காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பி.ஜெ.பி இடமிருந்தும், மிசோரத்தை மிசோரம் தேசிய கட்சியிடமிருந்தும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும் மத்திய பிரதேசத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று பி.ஜெ.பி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அரசியல் நோக்கர்கள் பார்வையில் இந்த தேர்தல் முடிவுகள் தரும் பாடங்களை பார்ப்போம்.

பயங்கரவாத பிரச்சினையில் அரசியல் பண்ண வேண்டாம்

பொது மக்கள் தீவிரவாதத்தை கட்டுபடுத்த அரசுகள் தவறிவிட்டதற்கு ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே பொறுப்பாக்காமல் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகள் மீதும் கோபமாக உள்ளனர். மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஜெ.பி. பயங்கரவாதத்தை முன்னிறுத்தியும் காங்கிரஸ் மீது (தடுக்கவில்லை என்ற) குற்றச்சாட்டை சுமத்தியும் செய்த பிரசார யுக்தி பலிக்காமல் போனது குறிப்பிடத் தக்கது.

ஆட்சி எதிர்ப்பு அலை அவசியம் இல்லை

Anti Incumbency Wave என அழைக்கப் படும் ஆட்சி எதிர்ப்பு அலை இந்த முறை பெருமளவு வீசாமல் போனது ஒரு கவனிக்க வேண்டிய விஷயம். நான்கு பெரிய மாநிலங்களில் மூன்றில் ஆட்சியாளர்களே மீண்டும் பதவிக்கு வந்துள்ளனர். டெல்லியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களும், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் மீது இருந்த நல்ல இமேஜும் சட்டிஸ்கரில் மக்களுக்கு திருப்தியான அரசு மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுமே இவ்வாறு ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்ள உதவின என கூறப் படுகிறது. அது மட்டுமல்லாமல், மக்களிடம் நல்ல மாற்று என்று யாரையும் கருத முடியாமல் போனதும் ஒரு காரணமே.

முன்னிறுத்தப் பட்ட வலிமையான தலைமையே வெற்றிக்கு அடிப்படை

வெற்றி பெற்றால் இவரே முதலமைச்சர் என முன்னரே தெளிவு படுத்தப் பட்டு, அந்த தலைவரின் முழு கட்டுப்பாட்டில் தயாரிக்க பட்ட பிரசார வியுகங்களே வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உதாரணம், டெல்லியில் திருமதி. ஷீலா தீக்ஷித், ராஜஸ்தானில் திரு.அசோக் கெலத், மத்திய பிரதேசத்தில் திரு.ஷிவ்ராஜ் சிங் சௌகாந் மற்றும் சட்டிஸ்கரில் திரு.ராமன் சிங் ஆகியோர் மக்களின் முன்னர் முதலமைச்சர் வேட்பாளர்களாக தெளிவாக முன்னிறுத்தப் பட்டனர். பெரும்பாலான தோல்விகள், உட்கட்சி பூசல்களினாலும் தலைவர்களுக்கு மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாததனாலுமே என்பது குறிப்பிடத் தக்கது.

மூன்றாவது அணி தாக்கம் குறைவு

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரளவுக்கு அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், மூன்றாவது அணியால் பெருமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போனதும் கவனிக்கத் தக்கது. பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு அணியினருக்குமே நேரடி போட்டி இருந்தது. (இந்த மாநிலங்களில் ஏற்கனவே கூட மூன்றாவது அணி வலுவாக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.)

இறுதி வரை கடும் போட்டி

அனைத்து பெரிய மாநிலங்களிலுமே, கடும் போட்டி நிலவியதும், வெற்றி பெற்றவரின் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருந்ததும், கடைசி வரை யாருக்கு வெற்றி என்று தீர்மானிக்க முடியாமல் இருந்ததும் கவனிக்க தக்கவை.

இந்தியா முழுக்க பொது தேர்தல் என்பது இந்த மாநில தேர்தல்களிலிருந்து அளவிலும் பிரசார யுக்திகளிலும் பெருமளவுக்கு வேறு பட்டிருக்கும் என்றாலும் கட்சிகள் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.

1.மக்களவைக்கு நடை பெறும் பொது தேர்தலில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும்.

2. நல்லாட்சிக்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருக்கும். மக்களுடன் கலந்து பழகி அவர்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்.

3. மக்கள் விரும்புவது உறுதியான மற்றும் (தெளிவாக) முன்னரே முன்னிறுத்தப் பட்ட தலைமை.

4. தீவிரவாதத்தை பொறுத்தவரை கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதையும் தேர்தல் பிரச்சார யுக்தியாக உபயோகிப்பதையும் மக்கள் விரும்ப வில்லை. இவற்றை நிறுத்தி விட்டு நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான பொதுவான தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையை உருவாக்குவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

5. மூன்றாவது அணி வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை உருவாக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். அதே சமயத்தில், மாயாவதி அவர்களின் தாக்கம் அனைத்து கட்சிகளாலும் உணரப் படும்.

6.பல கட்சிகள் இருந்தாலும், மக்களுக்கு நல்ல சாய்ஸ் மற்றும் சரியான மாற்று என்பது மிகவும் அரிதான விஷயமாக இருக்கிறது.

தெளிவான சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்கள் நடக்கும் என்ற ஜனநாயகத்தின் முதிர்ச்சி நிலை இந்தியாவில் விரைவில் மலர வேண்டும் என்பதே எனது ஆசை. ஒரு இந்திய குடிமகனின் இந்த ஆசை நிறைவேறுமா?

நன்றி

Monday, December 8, 2008

ஈகைப் பெருநாளைக் கொண்டாடுவோம்


உலகின் பல பண்டிகைகள் மனிதன் தானும் தன்னை சார்ந்தவர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடும் தினங்களாக மட்டுமே அமைந்திருக்க, இரக்கத்துடன் தம்மை சாராதவர்களுக்கும் கூட மகிழ்ச்சியை ஈந்து அதன் வழியே இன்பம் கொண்டாடும் பண்டிகையே ஈகைப் பெருநாள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவன், இறைதூதர் இப்ராஹிம் முன்னே தோன்றி உனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு தருவாயா என்று கேட்க அவர் தனது பிரியமான மகனையே அர்ப்பணிக்க முடிவு செய்த நாளே இந்த திருநாள் என்று கருதப் படுகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த நிகழ்வு இறையாளர் இப்ராகிமின் ஆழமான கடவுள் பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவது போல தோன்றலாம். ஆனால், எல்லாம் வல்ல இறைவனுக்கே கூட ஏதாவது ஒன்று தர விரும்பும் அளவுக்கு உயரிய கருணையும் ஈகையும் கொண்டது ஒரு மனித மனம் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான நிகழ்வு இது என்பது எனது கருத்து. இப்படி தம்மைப் படைத்த இறைவனுக்குக் கூட ஏதாவது வழங்க எண்ணும் மனித உள்ளம் தன்னை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எளியவர்களுக்கும் கூட கருணை காட்ட வேண்டும் என்பதையே இந்த ஈகைத் திருநாள் அனைவருக்கும் உணர்த்துகிறது என்று நம்புகிறேன்.

பணம் தேவையில்லை. கருணை காட்ட மனம் மட்டுமே போதும். உண்மையான அன்புடன் கொடுக்கப் படும் உணவு சாதாரணமானதாக இருந்தாலும் அது அமிர்தத்திற்கு ஒப்பானது என்பதை எல்லா வேதங்களும் வலியுறுத்துகின்றன.

இஸ்லாம் மார்க்கம் உலகிற்கு ஈந்த உயரிய கருத்துக்களாகிய சகோதரதத்துவத்தையும் மனித நேயத்தையும் உலகத்தினர் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இந்த ஈகைப் பெருநாள் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

Sunday, December 7, 2008

கிரியா ஊக்கிகள் பலன் தருமா?


கடந்த சில வருடங்களாக மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்த நமது பொருளாதாரம் இப்போது தளர்வுறும் நிலையில் உள்ளது. மீண்டும் பொருளாதாரத்தை செழிப்புற செய்ய இந்திய அரசாங்கம் மற்றும் தலைமை வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அவை பற்றியும் சந்தை போக்குகள் குறித்தும் இங்கு பார்போம்.

இந்திய அரசு சுமார் மூன்று லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நான்கு சதவீத சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்திய தலைமை வங்கியும் (RBI) தன் பங்குக்கு வட்டி வீத குறைப்பு, வீட்டு கடன் வழங்குவதில் விதி முறைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான அலசல் விரைவில். இப்போதைக்கு வரும் வார சந்தை மாற்றங்கள் குறித்து மட்டும் அலசுவோம்.

கடந்த வாரம் சிறப்பான துவக்கத்தை சந்தித்த பங்கு சந்தை அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம், உலக அளவில் முக்கியமாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார தேக்க நிலை உறுதிப்படுத்தப் பட்டிருப்பது. இதன் காரணமாக நமது மென்பொருட் துறையை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை கடந்த வாரம் சந்தித்தன. மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது, வாகன துறை பங்குகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. அதே சமயத்தில், வட்டி வீதம் குறைக்கப் படும் என்ற நம்பிக்கையில் வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான நிதி நிலை அறிக்கையால் உலோக துறையை சார்ந்த பங்குகள் பெரும் முன்னேற்றம் கண்டன. இவ்வாறு மாறுபட்ட பங்குகளின் போக்கினால், பங்கு சந்தை பெரிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேலும், வார அடிப்படையில் முக்கிய குறியீடுகள் சிறிது வீழ்ச்சியைக் கண்டன.

அதே சமயத்தில், கடந்த இருவாரங்களாக நான் குறிப்பிட்ட முக்கிய அரண் நிலையான (Support) 8900 புள்ளிகளுக்கு மேலேயே சென்றவாரமும் சென்செக்ஸ் முடிவடைந்திருப்பது நல்ல நம்பிக்கையை தருகிறது. கடந்த வாரம் பணவீக்கம் 8.40% ஆக குறைந்ததும் கட்சா எண்ணெய் நாற்பது டாலருக்கு கீழே வீழ்ச்சி அடைந்ததும் சந்தைக்கு நல்ல செய்திகளாகும். இந்திய அளவிலும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவித்திருப்பதால், பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அரசும் தலைமை வங்கியும் அறிவித்துள்ள கிரியா ஊக்கி திட்டங்கள் சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

விலை தொழிற்நுட்ப ஆராய்ச்சியின் (Technical Analysis) படி பங்கு சந்தைகள் வரும் வாரம் முன்னேற்றம் காணும் என்று நம்பப் படுகிறது. சென்செக்ஸ் குறியீடுக்கான எதிர்ப்பு நிலைகள் 9350, 9950, மற்றும் 10,200 எனும் நிலைகள். அரண் நிலைகள் 8350 மற்றும் 7600. 9350க்கு மேல் சந்தை முடிவடையும் பட்சத்தில் பங்கு வர்த்தகர்கள் மேல் செல்லும் நிலையை (long position) எடுத்துக் கொள்ளலாம்.

தலைமை வங்கி அறிவித்துள்ள வட்டி வீத குறைப்பால் பயன் பெறும் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். மேலும் அரசின் கட்டமைப்பு முதலீடுகளினால் பயன் பெறக் கூடிய கட்டுமானத் துறை, இயந்திர தயாரிப்பு துறை போன்றவற்றைச் சார்ந்த பங்குகளும் முன்னேற்றம் காணக் கூடும்.

இந்திய ருபாய் சந்தையும் சென்ற வாரம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேற்சொன்ன காரணங்களினால், வரும் வாரம் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது.

சந்தைகளில் சிறப்பாக செயல்படவும் வரும் வாரம் நல்ல வாரமாக அமையவும் வாழ்த்துக்கள்.

நன்றி

ஆனந்த விகடனில் "சந்தை நிலவரம்"வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் "சந்தை நிலவரம்" இப்போது பிரபல தமிழ் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றுள்ளது. விவரங்கள் உள்ளே.
இதழ் 10.12.2008 பக்கம் எண் 47.


(தெளிவாக தெரிய இதன் மீது சொடுக்கவும்)

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன். மேலும் இந்த வலைப்பூ ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை பல வகையிலும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளித்தவர்கள், வருகை புரிந்து உற்சாகம் தந்தவர்கள் மற்றும் அக்கறையோடு அறிவுரை சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். (தனித்தனியான நன்றிகள் எனது நூறாவது பதிவில்)

புதியவர்களை உற்சாகப் படுத்தும் இந்த சிறந்த சேவையினை புரியும் விகடன் குழுமத்திற்கும் வந்தனம் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகம் தந்த இந்த அங்கீகாரத்திற்கு என்றும் கடமை பட்டிருப்பதுடன் இந்த அங்கீகாரம் தரும் கூடுதல் பொறுப்புகளையும் உணர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்புடன் கூடிய பதிவுகளை வழங்க முயற்சி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

நண்பர்களே, நீங்கள் இது வரை தந்த ஆதரவு மேலும் தொடரவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் தாய்க்கு வந்தனம்

நன்றி.

Saturday, December 6, 2008

மருந்து கம்பெனிகளின் மோசடி


அரசையும் மக்களையும் இந்திய மருந்து கம்பெனிகள் பெரிய அளவில் ஏமாற்றி வருகின்றன. அதிர்ச்சி தரும் இந்த தகவலை தருபவர் யார் தெரியுமா? இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) புதிய தலைவரான திரு.எ.கே.பானர்ஜீ. சற்று விரிவாக பார்ப்போம்.

"இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இது வரை சுமார் 1600 கோடி ரூபாய் மருந்து கம்பெனிகள், நுகர்வோரிடம் இருந்து அதிகம் பெற்றுக் கொண்டதாக கூறி அந்த கம்பெனிகளுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிறது. இதில் சுமார் 1000 கோடி ரூபாய் கோரி ஒரே ஒரு (சிப்லா) நிறுவனத்திடமிருந்து மட்டும் வர வேண்டும்.

இதை விட அதிர்ச்சி தரக் கூடிய தகவல் அடுத்தது. அத்தியாவசிய மருந்துகளின் மீது அரசு விதித்துள்ள விலை கட்டுபாட்டை மீற இந்த கம்பெனிகள் செய்யும் ஏமாற்று வேலை. இவ்வாறு கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளில் சிறிது மாற்றம் செய்து (சமயங்களில் கிட்டத்தட்ட அதே பெயரில் கூட) அந்த மருந்துகளை அதிக விலைகளில் விற்க படுகின்றன. இதனால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து இந்த கம்பெனிகள் தப்பித்துக் கொள்வதுடன் கொள்ளை லாபம் அடிக்க முடிகிறது."(நன்றி: The Economic Times)

மற்ற நுகர்வோர் சந்தைகளுக்கும் மருந்து வியாபாரத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மருந்து பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்த மருந்து பெயர்களைப் பற்றியும் அவற்றின் குணங்களை பற்றியும் அவற்றின் மீது உள்ள அரசு (அத்தியாவசிய மருந்துகள் குறித்த) விலை கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இங்கு நுகர்வோர் பெரும்பாலும் நொடிந்த மனதுடனே காணப் படுகின்றனர். மருத்துவர்களில் சிலர் மருந்து கம்பெனிகள் தரும் சில அன்பளிப்புகள், சில வெளிநாட்டு உள்நாட்டு பயணங்கள் ஆகியவற்றிக்கு ஆசைப் பட்டுக் கொண்டு அதிக விலையில் உள்ள மருந்துகளையே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். எனவே, இந்த மருந்து சந்தை, பொதுவான சந்தை விதிகளுக்கு முரணாக உள்ளது. அதாவது, விலை அதிகமுள்ள மருந்துகளே இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. இதனால், ஏற்கனவே உடலாலும் மனதாலும் நொந்து போன நோயாளிகள் பெருமளவு பணத்தையும் இழக்கின்றனர்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அரசு தனது நல்ல முயற்சிகளை (அத்தியாவசிய மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாடு) கூட மக்களிடையே சரிவர கொண்டு செல்லாததுதான். மேலும் மக்களிடையே இருக்க வேண்டிய அரசு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் சற்று குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

ஒவ்வொரு தனியார் மருத்துவ மனையிலும் பல்வேறு வியாதிகளை குணப் படுத்த கொடுக்க வேண்டிய (அரசு பட்டியலில் உள்ள ) மருந்துகளின் பட்டியல் அனைவரும் கவனிக்கக் கூடிய அளவில் பெரியதாக இட்டிருக்க அரசு ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உரிய அளவில் ஏற்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வர வழி வகுக்கும். குறைந்த பட்சம் எந்த மருந்து எந்த வியாதிக்கு என்ற கேள்வியை மருத்துவரிடமும், இதே குணத்தில் உள்ள மற்ற கம்பெனி மருந்து என்ன விலை என்று மருந்து கடைக் காரரிடமும் நோயாளிகள் (அல்லது அவர்களது உறவினர்கள்)கேட்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப் படுமா என்று சொல்வது கடினம். நோயாளி மக்கள் கடவுளாக நம்பும் டாக்டர்கள் அனைவரும் (சில்லறைக்கு ஆசைப் படாமல் சேவை மனதுடன்) மனது வைத்தால் தான் உண்டு.

ஏற்கனவே உடல் கெட்ட அந்த பாவப் பட்ட மக்களுக்காக கொஞ்சமாவது மனதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அந்த சில மருத்துவர்களிடம் நாம் கோரிக்கை வைப்போம்.

நன்றி

Friday, December 5, 2008

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அணுகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் - அமெரிக்க அறிக்கை


அமெரிக்க அரசும் அதன் கூட்டணி நாடுகளும் உரிய மற்றும் கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்காவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களில் பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய பலம் வந்து விடும் என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. விவரங்கள் கீழே.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்க பாராளுமன்றம் (காங்கிரஸ்) ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த குழு உலகெங்கும் சுற்றுபயணம் செய்து பல நாடுகளில் சுற்றுபயணம் செய்து மற்றும் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமார் ஆறு மாதங்கள் ஆய்வுக்கு பிறகு சென்ற வாரம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது (மும்பை தாக்குதலுக்கு முன்னரே).

அந்த அறிக்கையில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப் படுவது, அமெரிக்க பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் தற்போதைய மேற்கொள்ளப் படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல (அமெரிகாவிலேயா? அப்ப இந்தியாவின் நிலை) எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஒரு நட்பு நாடாக விளங்கினாலும் கூட அதுதான் உலகின் பாதுகாப்புக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது. புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா அவர்களின் முதல் சவால் மற்றும் கடமை (நேச நாடான) பாகிஸ்தானை தீவிரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவதேயாகும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. "உலகில் தீவிரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதங்களுக்கான வரைபடம் என்று ஒன்று இருக்குமேயானால், அதில் உள்ள அனைத்து சாலைகளும் இணையும் சந்திப்பு பாகிஸ்தானே" என்று திட்டவட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது.

"பாகிஸ்தான் ஒரு அமெரிக்காவின் நேச நாடாக இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அமெரிக்காவில் ஒரு பேரழிவு ஆயுதங்கள் மூலமான ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்குமேயானால் அந்த தாக்குதலின் விளை நிலம் பாகிஸ்தானாகவே இருக்கும் அபாயம் உண்டு" எனவும் சொல்லப் பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் இரண்டு எல்லை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளே தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரச்சினையில் உடனடியாக உலக நாடுகள் தலையிட வில்லையென்றால், 2013 இல் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் அணு ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களாலேயே இருக்கும் என்று எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. உலக நாடுகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை (அந்த நாட்டின் ஜனநாயக ரீதியான அரசின் உதவியுடன்) உடனடியாக களையெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. (நன்றி நியூயார்க் டைம்ஸ்)

நண்பர்களே! அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டீர்களா? நானும் அப்படித்தான் முதன்முதலாக இந்த தகவலைப் படித்தவுடன் திகைத்துப் போய் விட்டேன். நம் நாட்டின் தூரதிர்ஷ்டம் அண்டை நாடாக பாகிஸ்தான் அமைந்து விட்டது. அந்த நாட்டின் தீவிரவாதிகளிடம் அணுகுண்டு கிடைத்து விட்டால் அவர்கள் அமெரிக்காவைத் தாக்குவதற்கு முன்னர் பரிசோதனை பார்க்க விரும்பும் சோதனைக் களம் இந்தியாவாகத்தான் இருக்கும். இப்போது நமது காவல்துறை வழங்கும் "பதட்டமான நாட்களில் வீட்டிற்குள்ளேயே இருங்கள்" என்பது போன்ற அறிவுரைகள் அத்தகைய தாக்குதலின் போது பலனளிக்காது. கமோண்டோ படை பாதுகாப்பிற்கு இருந்தாலும் கூட தலைவர்களும் அனைவருடன் சேர்ந்து "கூண்டோடு கைலாசம்" போக வேண்டி இருக்கும்.

எனவே தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு பொதுமக்கள் கூடும் சிலபகுதிகளில் சில போலீஸ்காரர்களை நிறுத்திவிட்டால் போதும் என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளவேண்டும். மேலும் குண்டுவெடிப்புகளை சில நாட்களில் மறந்து போகும் சிறுகால மறதி (short-term memory loss) வியாதியினை உடனடியாக குணப் படுத்த வேண்டும்.

இந்த செய்தியினை நமது உளவுத்துறை வழங்கும் குறிப்புகள் போல "பத்தோடு பதினொன்றாக" மறந்து போகாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும். நாமும் நமது வேற்றுமைகளையும் வாக்கு வங்கி அரசியலையும் சிலகாலம் மறந்து இந்த பிரச்சினையில் அரசு எடுக்கும் நிலைக்கு முழு ஆதரவு தர வேண்டும்.
நன்றி

Thursday, December 4, 2008

உயிர் பிழைத்திருப்பதற்காக பயப்படும் தீவிரவாதி!


எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு முக்கியமாக மரணதண்டனைக்கு பயப் படுவது வழக்கம். ஆனால், இந்த தீவிரவாதியோ உயிர் தப்பித்து விடுவோமோ என்று அஞ்சுகிறான். வேதனையிலும் வேடிக்கையான இந்த கதையை கேளுங்கள்.

மும்பை தாக்குதலின் போது ஒருவன் மட்டுமே உயிரோடு பிடிக்கப் பட்டான் என்பது நினைவிருக்கும். அவன் வெளியிடும் தகவல்கள் (பத்திரிக்கை செய்தி) இதோ. இவன் பாகிஸ்தானில் உள்ள பாரிட்கொட் பகுதியில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவனைப் பெற்றவன் இவனை ஒரு தீவிரவாதிகளின் குழுத் தலைவனிடம் (லஸ்கர் ஈ தோய்பா) பெரும் பணம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தான்.

அந்த தலைவனிடம் இவனைப் போலவே இளைய வயதுடையவர்கள் (இவனையும் சேர்த்து) 25 பேர் இருந்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் காட்டுப் பகுதிகளில் ஒரு வருடம் தீவிர பயிற்சி அளிக்கப் பட்டுவந்தது. இந்தியாவில் தாக்கவே இவர்கள் தயார் செய்யப் படுகின்றனர் என்ற தகவல் இவனுடைய தந்தைக்கு முன்னரே தெரிந்ததே இருந்தது. சுமார் 45 நாட்களுக்கு முன்னர், இந்த 25 பேர் கொண்ட குழுவிலிருந்து 10 பேர் மும்பையை தாக்க தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கு தாஜ் ஹோட்டல், நரிமன் ஹௌஸ் மற்றும் ஒபேராய் ஹோட்டல் ஆகியவற்றின் வரைபடங்களின் நகல்கள் வழங்கப் பட்டன.


எக்காரணத்தை கொண்டும் பாகிஸ்தான் இவர்கள் திரும்பக் கூடாது என்பது இவர்களுக்கு இடப் பட்டிருக்கும் உறுதியான கட்டளை என்றும் இவன் உயிர் தப்பித்துள்ளான் என்று தெரிந்தால் இவனுடைய குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.இவனுக்கு மரண தண்டனை உறுதி அல்லவா? எப்படி இவன் உயிர் தப்பிக்க அலல்து பாகிஸ்தான் உயிரோடு திரும்ப முடியும்? இவன் பலர் முன்னிலையில் நடத்திய உயிர்வேட்டை பல வீடியோக்களில் கூட நேரடியாக பதிவு செய்யப் பட்டுள்ளன அல்லவா? மேலும் இவனை போலீஸார் நேரடி சண்டையில் கையும் களவுமாக அல்லவா பிடித்துள்ளனர்? இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு அப்பாவி.

இங்கே இந்தியாவில் இவனை போன்றவர்களை காப்பாற்றுவதற்கென்றே கும்பல் கும்பலாக பலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னென்னவெல்லாம் சொல்லி இவனை காப்பாற்ற முயற்சிப்பார்கள் தெரியுமா? "போலீஸார் இந்த வழக்கை ஒரு அப்பாவி மீது ஜோடித்து விட்டனர். போலீஸார் சாட்சியை உண்மையென்று எடுத்துக் கொள்ள முடியாது. வீடியோ ஆதாரங்கள் செல்லாது. அவை திரிக்கப் பட்ட ஆதாரங்கள். எவரேனும் நேரடி சாட்சி சொனாலும் கூட அவர் ஒரு பொய் சாட்சி. இவனுக்கு சட்டரீதியான (நீதிமன்றங்களில் வழக்காட) உரிய உதவிகளை செய்ய வேண்டும்"சுப்ரீம் கோர்ட் வரை இந்த வழக்கு சென்று இவன் மீதான குற்றச் சாட்டு மெய்ப்பிக்கப் பட்டாலும் கூட இவனுக்காக கருணை மனு அனுப்பப் படும். இவன் தங்கி இருக்கும் சிறை அனைத்து வசதிகளுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சில கோரிக்கைகள் எழும். அரசியல்வாதிகளோ இவன் சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் வாக்கு வங்கி என்ற மாயத்திரையின் ஊடேயே பார்ப்பார்கள். மனித நேயத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து மரணதண்டனையையே முழுமையாக நீக்க வேண்டும் என்று கூட சில கோஷங்கள் எழும்.


இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு முக்கிய விஷயம் கவனிக்கப் படத் தக்கது. இவன் போன்றவர்கள் லட்சியத்திற்காக போராடும் போராளிகள் அல்ல. இவர்கள் சொந்த குடும்பத்தினராலேயே பணத்திற்காக விற்பனை செய்யப் பட்ட கூலிக் கொலைகாரர்கள் மட்டுமே.


நன்றி

Wednesday, December 3, 2008

எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்.


வணக்கம். உங்களில் சிலருக்கு வழங்கப் படும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை (Z+ வகை) , தனது சாலையோர பயணங்களின் போது, கூர்ந்து கவனித்த ஒரு பொது ஜனம் நான்.

உங்கள் வீடுகளை சுற்றி திரும்பிய திசையெல்லாம் உள்ள பாதுகாப்பு வளையங்கள் எத்தனை?. அங்கே நவீன ஆயுதங்களைத் தாங்கிய உடல் துடிப்பான போலீஸ் வீரர்கள் எத்தனை பேர்? இது நாடா அல்லது போர்க்களமா என்று சந்தேகப் பட வைக்கிற பல மணல்மூட்டை மேடுகள் கூட உங்கள் வீட்டை ஒட்டிய சாலைகளில் வைக்கப் பட்டுள்ளது அல்லவா? போலீஸ் கவச வாகனங்கள் சுற்றிலும் நிறுத்தப் பட்டு , அதில் ஏராளமான போலீசார்கள் 24 மணி நேரமும் உங்களை பாதுகாக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள் சினிமா நட்சத்திரங்களை அருகே அமர்த்திக் கொண்டு, மாலை நேர விருந்துகளுக்கு (சுயமாக ஒட்டி) செல்லும் செல்லும் போது கூட, முன்னேயும் பின்னேயும் எத்தனை போலீஸ் வாகனங்கள்? இத்தனை பாதுகாப்பு போதாதென்று, பல வண்டிகளில் கூடவே செல்லும் தொண்டர் படை ஊர்வலம் அதுவும் சாலையில் செல்லும் என்னை போன்ற மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டிக் கொண்டு செல்வது கூட உண்டு.

அதே சமயம் பொதுமக்கள் லட்சக் கணக்கில் தினந்தோறும் வந்து செல்லும் மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் (அதுவும் லத்தி மட்டுமே துணை கொண்டு) எங்களின் பாதுகாப்பிற்கு துணை சேர்க்கிறார்கள். கடைசியாக மும்பையில் தாக்குதல் ஏற்பட்ட போது, இந்த பரிதாபத்திற்குரிய போலீஸ்காரர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவே மிகவும் தடுமாறி விட்டனர். ஏன் இந்த வேறுபாடு? எல்லா உயிருமே போனால் திரும்பி வராததுதானே?

என்னை போன்று, எளிமையாக சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டு தன்னிச்சையாக வாழும் பொது மக்களுக்கு மத்தியில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டு இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ள உங்களது உயிருக்கு அதிக விலை உண்டு என்பதை நான் மறுக்க வில்லை. நீங்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்து இந்த நாட்டு மக்களுக்கு பல சேவைகள் புரிய வேண்டும் என்பது கூட என் ஆசைதான். மேலும் உங்கள் உயிருக்கு பல தீவிரவாத அச்சுறுத்தல்களும் உண்டுதான். எனவே, உங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொண்டு எங்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள் என்று நான் கேட்க வில்லை.

ஆனால், உங்களை விட்டால் நாங்கள் யாரிடம் இது குறித்து முறையிட முடியும்? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் பேச்சை மட்டுமே அரசு இயந்திரம் கேட்கிறது. என்னை போன்றவர்களிடம் வாக்கினை மட்டுமே விரும்பிக் கேட்கும் நீங்கள் எங்கள் கருத்துகளையும் கவலைகளையும் ஏன் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்கக் கூடாது? எங்களுக்காக நீங்கள் ஏன் அரசு இயந்திரத்திற்கு அனைத்து மக்களுக்கும் உரிய சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரச சொல்லி உத்தரவிடக் கூடாது? இதற்கு தேவையான பண வசதி, மனித வளங்கள் மற்றும் அறிவியல் தொழிற் நுட்பம் அனைத்தும் இந்தியாவில் உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள். இல்லாதது "செய்து முடிப்போம்" என்ற மனம் மட்டும்தான்.

பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் உடனடியாக செயல்பட தவறினால், நீங்கள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் தேர்தலுக்கு அடிப்படையான ஜனநாயகம் எங்களோடு சேர்ந்து மடிந்து போய் விடும். சொல்லப் போனால், இதே போல தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போய் வாக்கு அளிக்க இந்தியர் ஒருவர் கூட உயிரோடு இல்லாத அவல நிலை கூட ஏற்பட்டு விடும் ஆபத்து உள்ளது. அப்போது நீங்கள் பிணங்களுக்கு மத்தியில் பேயாட்சிதான் செய்ய முடியும் (இப்போது மட்டும் வேறு ஆட்சி நடக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள்?) எங்களுக்காக இல்லாவிடிலும் உங்களுக்காகவாவது பொது மக்களுக்கான பாதுகாப்பை அதிகரியுங்கள்.

நன்றி

மீண்டும் வணக்கத்துடன்

Tuesday, December 2, 2008

வாழ்க்கைக்குள் அடிக்கடி தொலைந்து போய் விடுகிறீர்களா ?


சரியான சாலை வசதி இல்லாத ஒரு அடர்த்தியான காட்டுக்குள் பயணம் செய்யும் நேரிடும் போது, ஒரு சரியான திசைமானி மற்றும வரைபடம் இருந்தால் மட்டுமே நம்மால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக, சரியான நேரத்திற்குள் செல்ல முடியும். இல்லையென்றால், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதது ஒரு பக்கம், மறு பக்கம் நாம் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால், ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரவோ அல்லது முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்று விடவோ வாய்ப்பு உள்ளது.

நமது வாழ்க்கையை கூட ஒரு அடர்த்தியான காட்டுடன் ஒப்பிடலாம். வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சரியான திசை இன்றி வழி தெரியாமல் தடுமாறி விடுகிறோம். அப்போதெல்லாம், சரியான இலக்குகள் மற்றும அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இல்லாவிடில் நாம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன ஒரு சிறுவனின் மனநிலையை அடைந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படுவது பெரும் அச்சம் மற்றும பரிதவிப்பு. இந்த மாதிரியான தருணங்களில் நமது மூளை சரியாக வேலை மறுத்து விடுகிறது.

இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்க மனவியல் வல்லுனர்கள் தரும் யோசனை இது. "தொலை தூர இலக்குகளும் அவற்றை அடைவதற்கான திட்டமும் இருக்கும் பட்சத்தில் நாம் வாழ்க்கையில் தொலைந்து போவதிலிருந்து தப்பிக்க முடியும்."

ஆனால் தொலை தூர இலக்குகளை நிர்ணயிப்பதும் திட்டங்களை தீட்டுவது நம்மில் பலருக்கு மிகக் கடினமான காரியம். காரணம் சாமான்ய மனிதர்களுக்கு அத்தகைய திட்டமிடுதலுக்கு தேவையான தகவல்களும் (Data) எதிர்காலத்தை பற்றிய சரியான முன் கணிப்பும் (Forecasts) முழுமையாக கிடைப்பதில்லை. மேலும், மிகப் பெரிய வல்லுனர்களால், பல காலம் கடினமான உழைப்பில் உருவாக்கப் படும் திட்டங்களே பல சமயங்களில் தோல்வி அடைந்து விடுகின்றன. நம்மை போன்ற சாமான்யர்கள் என்ன செய்ய முடியும்?

நீண்ட கால பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு மற்றும் அவற்றை அடைவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய சிறிய பரிசோதனை முயற்சி இது. (இன்றைக்கே தொடங்கி விடுதல் உத்தமம்) குறுகிய கால நோக்கில், சிறிய மற்றும் எளிதில் அடையக் கூடிய இலக்குகளை உங்களுக்கு நீங்களே நிர்ணயித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, நாளை காலை 6.00 (முடியாவிட்டால் ஒரு 7.00) மணிக்கு படுக்கையை விட்டு எழுவோம் என்பது கூட ஒரு இலக்குதான். அந்த இலக்கை அடைய திட்டம் தீட்டுங்கள். அதாவது அலாரம் வைக்கலாம். இரவில் சீக்கிரமாக தூங்கலாம். இப்படி தீட்டிய திட்டம் வெற்றி பெறுவது நீங்கள் காலையில் எழுவதை பொறுத்தது.
அப்படி எழுந்து விட்டால், உங்களை நீங்களே பலமாக பாராட்டிக் கொள்ளுங்கள் (வேறு யார் வருவார் இதற்கெல்லாம் பாராட்ட) . எப்படி பாராட்டுவது என்றால், "டே (உங்கள் பெயர்) நீ உண்மையிலேயே பெரிய ஆளுடா. சாதிச்சுட்டடா " பக்கத்தில் யாரும் இல்லையென்றால் வாய் விட்டு சத்தமாக கூட பாராட்டிக் கொள்ளலாம். (பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது). ஒருவேளை வெற்றி பெறா விட்டால் (அடுத்த நாள்) முயற்சியை தளர விடாதீர்கள். இறுதி வரை போராடுங்கள், அடைவதற்கான புதிய வழிகளை தேடுங்கள். நாள் முழுதும் அதற்காகவே யோசித்துக் கொண்டிருங்கள்.

முதல் திட்டம் வெற்றி பெற்ற பிறகு புதிய இலக்குகளை நிர்ணயித்து கொள்ளலாம்.உதாரணம், அரை மணி நேர நடை பயிற்சி, உடற்பயிற்சி அல்லது மன பயிற்சி, ஒரு குறிப்பிட்ட புத்தகம் படித்து முடிப்பது, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்வது, பிடித்த ஊருக்கு அல்லது சினிமாவிற்கு செல்வது இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே ஒரு நிபந்தனை. இலக்கு அடையக் கூடியதாகவும் அதனை அடைவதற்கான திட்ட வழி முறைகள் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கை அடைந்த பிறகும் நீங்கள் அதனை (உங்களுக்கு பிடித்த அல்லது முடிந்த வரை) கொண்டாடுவதும் மிகவும் அவசியம்.

இந்த பயிற்சிகள் முதல் பார்வையில் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இவை உளவியல்ரீதியானவை. இவற்றால் நாம் அடையக் கூடிய பயன்கள் கீழே.
இலக்குகளை நிர்ணயிக்கவும் திட்டங்களை தீட்டவும் மனம் பழகிக் கொள்கிறது. நாம் அடையும் சிறு சிறு வெற்றிகள் மூலம் நமக்கு புதிய தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. இந்த வெற்றிகள் நம்மை புதிய மற்றும் பெரிய இலக்குகள் நிர்ணயிப்பதற்கான உற்சாகத்தைக் கொடுக்கிறது. சிறிய திட்டங்களை தீட்ட நாம் மேற்கொண்ட பயிற்சி பெரிய திட்டங்களை சிறப்பாக தீட்ட உதவுகிறது. சில சமயங்களில் இவை நம்முடைய நீண்ட கால நோக்கம் என்ன என்பதைக் கூட நம்மை உணரச் செய்ய உதவுகின்றன. வெற்றிகளை நாம் கொண்டாடுவது மிகவும் அவசியம் என்று சொன்னேன் அல்லவா? ஏனென்றால், நம்முடைய லட்சியங்களின் வெற்றி முதலில் நமக்கு திருப்தி அளிக்க வேண்டும். மற்றவர்களின் பாராட்டையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்த்திருக்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்த்திருந்து ஒரு வேளை பாராட்டு வெளியிலிருந்து கிடைக்காத பட்சத்தில் மனம் தளர்ந்து விடும்.

இப்படி நீங்கள் இலக்குகளும், அவற்றை அடைவதற்கான முயற்சிகளும், முயற்சிகளில் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சிகளும் கொண்ட மனிதராக இருக்கும் பட்சத்தில், வாழ்க்கைக்குள் நீங்கள் எங்கே தொலைய போகிறீர்கள்? வாழ்க்கையை எப்போதும் துரத்தும் மனிதராக அல்லவா இருப்பீர்கள்?
எங்கே கிளம்பி விட்டீர்கள்? முதல் இலக்கை நிர்ணயிக்கத்தானே?

நன்றி.

Monday, December 1, 2008

ஒரு உண்மையான காவலர்


மும்பையை தாக்கிய இரு தீவிரவாதிகள் கையில் நவீன ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள். இவர் கையில் வெறும் ஒரு வாக்கி டாக்கி மட்டுமே. ஆனால் மனதிலோ ஏராளமான வீரம் மற்றும் நெஞ்சுரம். இந்த இருவரில் ஒருவனை தீர்த்துக் கட்டவும் மற்றவனை பிடிக்கவும் தன்னுயிர் நீத்து பல உயிரைக் காப்பாற்றிய இந்த உண்மையான காவலரின் கதையை கேளுங்கள்.

கடந்த புதனன்று, மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவ மனையில் கொடும் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் வழியில் மறித்த தீவிரவாதி தடுப்புக் குழுவின் தலைவரையும் மற்ற சில போலீசாரையும் சுட்டுக் கொன்று விட்டு போலீஸ் ஜீப்பில் தப்பித்தனர். அங்கிருந்து மெட்ரோ சினிமா வழியே சென்ற இவர்களை வழி மறித்து போலீஸ் தாக்கும் போது இவர்கள் சென்ற ஜீப் டயர் பஞ்சர் ஆனது. குறுக்கே வந்த ஒரு ஸ்கோடா காரை வழி மறித்த இந்த பயங்கரவாதிகள் அதில் ஏறிக் கொண்டு மும்பையின் முக்கிய புள்ளிகள் (மகாராஷ்டிரா கவர்னர் உட்பட) வாழும் பகுதியான மலபார் ஹில்சை நோக்கி விரைந்தனர்.

அப்போது மாரின் டிரைவ் சாலையில் டுயுட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர் திரு.துக்காராம் ஒம்ப்லெ எனும் ஒரு உதவி காவல் அலுவலர். அவருக்கு இந்த வழியாக தீவிரவாதிகள் வருகிறார்கள் என்ற தகவல் வாக்கி டாக்கி மூலமாக அனுப்பப் பட்டது. ஏற்கனவே சொன்னது போல அப்போது அவரிடம் எந்த ஆயுதமும் கைவசம் இல்லை. ஆனால் நெஞ்சம் முழுதும் தைரியம் நிறைந்திருந்தது.

அப்போது தீவிரவாதிகள் சென்ற ஸ்கோடா கார் அந்த சாலையில் இவரை கடந்து சென்றது. துணிச்சலாக அந்த காரை தனது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றார் நம் ஹீரோ. மிக வேகமாக செல்லும் அந்த காரையும் விடாமல் (தன் உயிரையும் பொருட்படுத்தாமல்) பைக்கில் துரத்திக் கொண்டே சென்றார்.

மலபார் ஹில்ஸ் பகுதியுள் நுழைவதற்கு முன்னர், கிர்காவும் கடற்கரை சிக்னலில் தடுப்பு சுவர் இட்டு காத்துக் கொண்டிருந்தனர் மும்பை போலீஸார். அதை கண்டு வேகத்தைக் குறைத்து காரை பின்பக்கம் திருப்ப முயல, அந்த சமயத்தில் அவர்களது காரின் முன்னே சென்று தனது பைக்கை நிறுத்தினார் துக்காராம். இதனால் நிலை தடுமாறிய பயங்கரவாதிகள், சாலையின் மத்திய தடுப்புச் சுவரில் காரை மோதிவிட்டனர். ஆனால், அதே சமயத்தில் தங்களது துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். அப்போது அவர்களை நோக்கி ஓடிவந்த துக்காராம் ஒருவனது துப்பாக்கியை தன் கையில் அழுத்தமாக பற்றிக் கொண்டார்.

அந்த சமயம் துப்பாக்கியின் குண்டுகள் அவரது வயிற்றை துளையிட்ட போதும் அந்த துப்பாக்கியின் பிடியை அவர் தளர விடவே வில்லை. இதனால், மற்ற போலீஸார் மீது ஒருவனால் சுட முடியவில்லை. துக்காராம் வீர மரணம் தழுவும் அந்த இறுதி தருணத்திலும் கூட துப்பாக்கியில் இருந்து கையை மட்டும் எடுக்கவே இல்லை. (நன்றி: DNA India)

விரைந்து செயல் பட்ட மற்ற போலீஸார் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். அதில் ஒருவன் உயிர் பிழைத்து வாக்கு மூலம் அளித்த கதை இன்னொரு பதிவில்.
துக்காராம் செய்த உயிர் தியாகத்தின் மதிப்பு அளவிடற்கரியது.

மும்பை வந்த தீவிரவாதிகளில் முதன் முதலாக ஒருவன் பிடிப் பட்டதற்கும் ஒருவன் கொல்லப் பட்டதற்கும் இவரே மூல காரணம்.

அந்த பயங்கரவாதிகள் மலபார் ஹில்ஸ் பகுதிக்கு திட்டமிட்டபடி சென்றிருந்தால் இழந்திருக்கக் கூடிய உயிர்கள் எத்தனை இருந்திருக்கும்? மேலும் பிடிபட்ட ஒருவன் மூலமே நமக்கு பல பயங்கர உண்மைகள் வெளிவந்துள்ளன என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.

இன்றைய தேதியில் காவல் துறையின் மீது எத்தனையோ (ஊழல் உட்பட) குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. அந்த அத்தனை கறைகளையும் ஒரே இரவில் நீக்கும் ஒரு சிறந்த அரிய சேவையை இன்னுயிரைக் கொடுத்து இந்த காவல்காரர் செய்துள்ளார். கதைகளில் படித்தும் திரைபடங்களில் பார்த்தும் மட்டுமே உள்ள இத்தகைய அரிய தியாகத்தை பார்த்த பின்னராவது இந்திய போலீஸ் துறை சிறப்பாக செயல் பட்டு நம் நாட்டை காப்பாற்றினால் அதுவே அவருக்கு செலுத்தப் படும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தியாகத்திரு.துக்காராம் ஒம்ப்லெ அவர்களது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பம் இந்த வருத்தமான சூழலில் இருந்து மீண்டு சிறந்த முறையில் வாழவும் வேண்டிக் கொள்வோம்.

வாழ்க துக்காராம் புகழ்!


ஜெய் ஹிந்த்.

Sunday, November 30, 2008

நாளை நமதே


சென்ற வார நிலவரம்

கடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் வார நிலவரம்

டெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைகள் 9350, 9650 மற்றும் 10200. மேலும் உலக சந்தைகளில் ஏற்படும் மற்றம் மற்றும் இந்திய வங்கியின் வட்டிவீத நிலைப் பாடு நம் சந்தைகளின் ஏற்றதாழ்வுகளை பாதிக்கும். டாலர் மதிப்பு 50 இன் அருகிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்குசந்தைகளின் நிலை மற்றும் NDF சந்தையின் நிலை பொருத்து இது மாறும்

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்


நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"
Blog Widget by LinkWithin