Skip to main content

கிரியா ஊக்கிகள் பலன் தருமா?

கடந்த சில வருடங்களாக மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்த நமது பொருளாதாரம் இப்போது தளர்வுறும் நிலையில் உள்ளது. மீண்டும் பொருளாதாரத்தை செழிப்புற செய்ய இந்திய அரசாங்கம் மற்றும் தலைமை வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அவை பற்றியும் சந்தை போக்குகள் குறித்தும் இங்கு பார்போம்.

இந்திய அரசு சுமார் மூன்று லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நான்கு சதவீத சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்திய தலைமை வங்கியும் (RBI) தன் பங்குக்கு வட்டி வீத குறைப்பு, வீட்டு கடன் வழங்குவதில் விதி முறைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான அலசல் விரைவில். இப்போதைக்கு வரும் வார சந்தை மாற்றங்கள் குறித்து மட்டும் அலசுவோம்.

கடந்த வாரம் சிறப்பான துவக்கத்தை சந்தித்த பங்கு சந்தை அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம், உலக அளவில் முக்கியமாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார தேக்க நிலை உறுதிப்படுத்தப் பட்டிருப்பது. இதன் காரணமாக நமது மென்பொருட் துறையை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை கடந்த வாரம் சந்தித்தன. மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது, வாகன துறை பங்குகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. அதே சமயத்தில், வட்டி வீதம் குறைக்கப் படும் என்ற நம்பிக்கையில் வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான நிதி நிலை அறிக்கையால் உலோக துறையை சார்ந்த பங்குகள் பெரும் முன்னேற்றம் கண்டன. இவ்வாறு மாறுபட்ட பங்குகளின் போக்கினால், பங்கு சந்தை பெரிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேலும், வார அடிப்படையில் முக்கிய குறியீடுகள் சிறிது வீழ்ச்சியைக் கண்டன.

அதே சமயத்தில், கடந்த இருவாரங்களாக நான் குறிப்பிட்ட முக்கிய அரண் நிலையான (Support) 8900 புள்ளிகளுக்கு மேலேயே சென்றவாரமும் சென்செக்ஸ் முடிவடைந்திருப்பது நல்ல நம்பிக்கையை தருகிறது. கடந்த வாரம் பணவீக்கம் 8.40% ஆக குறைந்ததும் கட்சா எண்ணெய் நாற்பது டாலருக்கு கீழே வீழ்ச்சி அடைந்ததும் சந்தைக்கு நல்ல செய்திகளாகும். இந்திய அளவிலும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவித்திருப்பதால், பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அரசும் தலைமை வங்கியும் அறிவித்துள்ள கிரியா ஊக்கி திட்டங்கள் சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

விலை தொழிற்நுட்ப ஆராய்ச்சியின் (Technical Analysis) படி பங்கு சந்தைகள் வரும் வாரம் முன்னேற்றம் காணும் என்று நம்பப் படுகிறது. சென்செக்ஸ் குறியீடுக்கான எதிர்ப்பு நிலைகள் 9350, 9950, மற்றும் 10,200 எனும் நிலைகள். அரண் நிலைகள் 8350 மற்றும் 7600. 9350க்கு மேல் சந்தை முடிவடையும் பட்சத்தில் பங்கு வர்த்தகர்கள் மேல் செல்லும் நிலையை (long position) எடுத்துக் கொள்ளலாம்.

தலைமை வங்கி அறிவித்துள்ள வட்டி வீத குறைப்பால் பயன் பெறும் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். மேலும் அரசின் கட்டமைப்பு முதலீடுகளினால் பயன் பெறக் கூடிய கட்டுமானத் துறை, இயந்திர தயாரிப்பு துறை போன்றவற்றைச் சார்ந்த பங்குகளும் முன்னேற்றம் காணக் கூடும்.

இந்திய ருபாய் சந்தையும் சென்ற வாரம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேற்சொன்ன காரணங்களினால், வரும் வாரம் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது.

சந்தைகளில் சிறப்பாக செயல்படவும் வரும் வாரம் நல்ல வாரமாக அமையவும் வாழ்த்துக்கள்.

நன்றி

Comments

நம்பிக்கை தரும் தகவல்கள் ஆனாலும் மார்ச் வரை சந்தை பெரிதாக ஏற்றம் எதையும் சந்திக்காது என்று கேள்வி பட்டேன்.
ஒபெக் குழுமம் குரூட் ஆயில் உற்பத்தியை குறைக்க போகிறதாம்.
அதனால் மீண்டும் 75$ வரை பேரல் உயர வாய்புள்ளதால் இந்திய அரசு வெறும் 5 ருபாய் மட்டும் பெட்ரோல் விலையை குறைத்தது. ஆனால் இது வெறும் கண் துடைப்பே.

அரசு முதலாளித்துவத்தின் பாக்கெட்டில் தஞ்சம் புகுந்து விட்டது.

இவர்களின் பணவீக்க கணக்கு எதுவும் நம்பும்படியாக இல்லை. எந்த பொருளும் விலை குறைந்ததை போல் தெரியவில்லை.

விமான கட்டணம் குறைந்துள்ளதாமே
:)
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//இவர்களின் பணவீக்க கணக்கு எதுவும் நம்பும்படியாக இல்லை. எந்த பொருளும் விலை குறைந்ததை போல் தெரியவில்லை.//

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அதிகமாக அறியப் படும் இந்த பணவீக்கம் மொத்தவிலை பணவீக்கமே (WPI). இது உற்பத்தியாளர்களுக்கும் தொழிற் நிறுவனங்களுக்குமே அதிகம் உபயோகப் படும். உங்களையும் என்னையும் போன்றவர்கள் கவனிக்க வேண்டியது மாதந்தோறும் வெளியாகும் நுகர்வோர் பணவீக்க விகிதம் (CPI). இது இதுவரை குறைந்த பாடில்லை.

மேலும், நம் நாட்டில் பணவீக்கம் கணக்கிடும் முறை அறுத பழசானது. இதில் மாற்றம் தேவை. இதை பற்றி ஒரு பெரிய பதிவே போடும் அளவுக்கு விஷயம் உள்ளது. நன்றி.

//விமான கட்டணம் குறைந்துள்ளதாமே//

முழம் ஏத்தி ஜான் அளவு குறைத்துளார்கள். மத்திய தர வர்க்கத்திற்கு ஏற்ற வகையில் சில வருடங்களுக்கு முன்னர் இருந்த விமானக் கட்டணங்கள் மீண்டும் எட்டாக் கனியாகி விட்டன.

நன்றி :)
pothujanam said…
இந்திய முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரி. நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்திக்கு தடங்கல் இல்லாத நிலையை தொடர வேண்டும். இந்தியர்கள் சூதாடிகள் அல்ல. கஷ்ப்பட்டு உழைத்த பணம் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

//நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்திக்கு தடங்கல் இல்லாத நிலையை தொடர வேண்டும்//

நீங்கள் சொல்வது போல வீன்செலவுகளை குறைக்க நிறுவனங்கள் முன் வர வேண்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? மூழ்கி கொண்டிருக்கும் அமெரிக்க வாகன நிறுவனங்களின் தலைவர்கள் அவற்றை மீட்டெடுக்கும் பரிந்துரைகளை அமெரிக்க பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க முதல் முறை தனி விமானத்தில் வந்தனர். கண்டனக் குரல்கள் எழுந்ததுடன் இரண்டாவது முறை சாலை பயணம் செய்து வந்தனர். இந்தியாவிலும் தொழிற் அதிபர்கள் சொந்த வாழ்வில் சிக்கனம் மேற்கொள்ள வேண்டும்.
DG said…
சார் பங்குவர்தகம் சூதாட்டம் என்கிறார்கள் சிலர் ,உண்மை அப்படியா ?
நான் கடந்த ஒரு மாதமாக தின வர்தகம் செய்கிறேன்.பங்குவர்தகம் எனக்கு
சூதாட்டமாக தெரியவில்லை. உங்களுடைய இந்த பதிவு நன்கு பயனுள்ளதாக உள்ளது.
Maximum India said…
அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

//சார் பங்குவர்தகம் சூதாட்டம் என்கிறார்கள் சிலர் ,உண்மை அப்படியா ?//

நான் இது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.

(பங்குச் சந்தை குதிரைப் பந்தயக் களமா? ஒரு அலசல்)


//நான் கடந்த ஒரு மாதமாக தின வர்தகம் செய்கிறேன்.பங்குவர்தகம் எனக்கு
சூதாட்டமாக தெரியவில்லை.//

பங்கு சந்தையைப் பற்றி புரிந்து கொள்ள ஒரு மாதம் மிகக் குறைந்த காலமே. இன்னும் உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்க வேண்டும். பங்கு சந்தை இன்றைக்கு பல்வேறு காரணிகளால் பாதிக்கப் படுகிறது. இவை அனைத்தையும் அறிந்து கொண்டு செயல் படுவது மிகவும் கடினம். குறைந்த முதல் கொண்டு அதிக லாபம் விரைவில் சம்பாதிக்க ஆசைப் படும் எந்த தொழிலும் கிட்டத்தட்ட சூதாட்டம் போலவே ஆகும். நீங்கள் தின வர்த்தகம் செய்யும் பட்சத்தில் டெக்னிகல் அனலிசிஸ் துணை கொண்டு தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்துக் கொண்டு செயல் படுங்கள். தின வர்த்தகத்தில் (நீண்ட கால அடிப்படையில்) வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலரே. எனவே எச்சரிக்கையாக செயல் படுங்கள்.

உங்களுடைய இந்த பதிவு நன்கு பயனுள்ளதாக உள்ளது.
DG said…
நான் சாய் சார் உதவி உடன் செயல்படுகிறேன்.நான் கடந்த 1 வருடமாக சந்தை இல் உள்ளேன் .தற்பொழுது தான் தின வர்த்தகத்தில் ஈடுபடுகிறேன்.
http://top10shares.wordpress.com/
Maximum India said…
அன்புள்ள dg

நானும் கூட இந்த வலைதளத்தை பார்த்துள்ளேன். சிறப்பாகவே உள்ளது.

என்னுடைய அறிவுரை ஒன்றே மட்டும்தான் உங்களால் எவ்வளவு பணம் இழக்க முடியுமோ (இழந்தாலும் தனிப்பட்ட வாழ்வு பாதிக்காத வகையில்) அவ்வளவு பணம் மட்டும் பங்கு சந்தையில் போடுங்கள்,

பங்கு சந்தையில் பணம் பண்ண வாழ்த்துக்கள்.
DG said…
உங்கள் வாழ்துக்கு நன்றி சார்.
என்றும் அன்புடன் DG

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...