Saturday, December 13, 2008

இந்திய தொழில் உற்பத்தி வீழ்ச்சி - ஒரு அலசல்


பதினைந்து வருடங்களுக்கு பின்னர், முதன் முறையாக இந்திய தொழில் உற்பத்திக் குறியீடு (IIP) வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகளைப் போல இல்லாமல், இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது எனவும் அதிக பட்சம் பொருளாதார மந்த நிலையே காணப் படும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. விரிவான அலசல் இங்கே.

இந்திய தொழிற் வளர்ச்சிக் குறியீடு, சுரங்கத் தொழில், மின்சாரத் துறை, உற்பத்தித் துறை மற்றும் பொதுவான தொழிற்துறை ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மதிப்பிடுவதாகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தொழிற் வளர்ச்சிக் குறியீடு 0.40 சதவீதம் இறக்கத்தை சந்தித்துள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலக் கட்டத்தில் இந்த குறியீடு 12.20 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத் தக்கது. பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதத்தின் வளர்ச்சியாக எதிர்பார்த்தது இரண்டு முதல் மூன்று சதவீதம் அளவிலான வளர்ச்சியை. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையாக வந்தது 0.80 சதவீதம் இறக்கம். காரணம் என்ன?

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

உள்நாட்டில் வாகன விற்பனை மிகவும் குறைந்துப் போனது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்.

இந்த காலண்டர் ஆண்டு (2008) முழுவதும் இத்தகைய வீழ்ச்சி தொடரும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியிலும் (GDP) பின்னடைவு நேரிடும் என்றும் கருதப் படுகிறது.

இந்திய தலைமை வங்கி மற்றும் அரசு இது குறித்து தங்களது நிலையை குறுகிய காலத்திற்குள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக தலைமை வங்கி வட்டி வீதங்களை மேலும் குறைக்கும் என்றும் கடன் விதிமுறைகளை தளர்த்தும் என்றும் சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். அரசும் தன் பங்காக மேலும் சில வரிச் சலுகைகளும் ஏற்றுமதிக்கான சில புதிய அணுகுமுறையையும் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஆனால், நாட்டின் பொருளாதரத்தை தலை நிமிர்த்த இவை மட்டும் போதுமா என்பது ஒரு பெரியக் கேள்விக் குறி. இந்த பதிவர் தனது ஆங்கிலப் பதிவில் ஏற்கனவே சொல்லி இருந்த படி இந்திய அரசு, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சாலைகள், வாழ்வியல் மேம்பாடு போன்ற துறைகளில் பெரிய அளவில் புதிய முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும். இதன் காரணமாக பணப் புழக்கம் மீண்டும் அதிகமாகும், தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் மீண்டும் அதிகப் படியான தேவையைச் சந்திக்கும். சமூகமும் நலம் பெரும்.

செய்யுமா நம் அரசு?

நன்றி

11 comments:

raje said...

நல்ல முயற்சி எல்லாம் மக்களுக்காக "வியாபாரம்" பண்ணும் அரசியல்வாதிகள் பண்ண முன் வர மாட்டார்கள்.


ராஜேஷ் கண்ணன்

Maximum India said...

அன்புள்ள ராஜேஷ் கண்ணன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//நல்ல முயற்சி எல்லாம் மக்களுக்காக "வியாபாரம்" பண்ணும் அரசியல்வாதிகள் பண்ண முன் வர மாட்டார்கள்.//

உண்மைதான். நாட்டின் பொருளாதாரத்தை விட வீட்டின் பொருளாதாரத்தையே அதிகம் கவனிக்கும் அரசியல்வாதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சதுக்க பூதம் said...

உள் கட்டமைப்புக்கு செலவிட முத்லில் அரசுக்கு பணம் வேண்டும். ஏற்கனவே இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியனை தாண்டி விட்டது. இந்திய அரசு உள்கட்டுமானத்திற்க்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் அது முதலில் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அதற்கு அரசு தன் தேவையற்ற செலவினங்களை குறைக்க வேண்டும். முக்கியமாக ராணுவத்திற்கு தேவையின்றி செலவிடும் பணத்தை குறைக்க வேண்டும் .

அடுத்ததாக உள்கட்டுமான அமைப்புக்கு செலவிடும் பணத்தினை ஒழுங்காக சென்று அடைகிறதா என்று கண்காணிக்க வேண்டும். உதாரணமாக ரோடு போட பல ஆயிரம் கோடி செல்விடுகின்ரனர். ஆனால் அவ்வாறு போடப்படும் ரோடுகள் 6 மாதம் கூட நிலைப்பதில்லை.
அரசு IMF மற்றும் Worldbank மூலம் பெரும் கடன்களில் பெரும் பகுதி திட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் லஞ்சமாக தான் போகிறது. அவர்களிடம் அளவுக்கு மீறி கடன் வாங்குவதால் அவற்றை திருப்பி கொடுக்க இனி வரும் காலங்களில பட்ஜெட் பற்றாகுறையை மிக அதிக அளவு அதிகரிக்க வேண்டி இருக்கும்.

இன்னொரு முக்கிய மற்றும் அதிர்ச்சி தரும் செய்தி, மத்திய அரசு பட்ஜெட்டில் மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்க படும் பணத்தை மாநில அரசுகள் வாங்கி செயல்படுத்தாமல் இருக்கின்றன.

Maximum India said...

அன்புள்ள சதுக்கபூதம்

பின்னூட்டத்திற்கும் விரிவான அலசலுக்கும் நன்றி.

உங்கள் கருத்துக்களுடன் நானும் பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். உங்களது பதிவினையும் படித்தேன். நல்ல அலசல்.

//உள் கட்டமைப்புக்கு செலவிட முத்லில் அரசுக்கு பணம் வேண்டும். ஏற்கனவே இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியனை தாண்டி விட்டது. இந்திய அரசு உள்கட்டுமானத்திற்க்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் அது முதலில் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அதற்கு அரசு தன் தேவையற்ற செலவினங்களை குறைக்க வேண்டும்.//

இது சரிதான் என்றாலும், பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி புதிய முதலீடுகளை அரசு தவிர்கக் கூடாது. மேலும் பட்ஜெட் பற்றாக்குறை விஷயத்தில் அமெரிக்கா ஒரு பெரிய (நல்ல என்று சொல்ல முடியாவிட்டாலும்) முன்னுதாரணம் காட்டி உள்ளது. எனவே FRBM போன்ற இலக்குகளுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவத்திற்கு தற்சமயத்திற்கு விலக்கு அளித்து அரசு முதலீடுகள் (செலவுகள் அல்ல) அதிகம் செய்ய வேண்டும்.

//இன்னொரு முக்கிய மற்றும் அதிர்ச்சி தரும் செய்தி, மத்திய அரசு பட்ஜெட்டில் மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்க படும் பணத்தை மாநில அரசுகள் வாங்கி செயல்படுத்தாமல் இருக்கின்றன.//

இது கவலை தரும் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம்.

சதுக்க பூதம் said...

நீங்கள் கூறுவது முழு உண்மை.உள்கட்டமைப்பை மேம்படுத்தினால் தான் இனி வரும் காலங்களில் அடுத்த தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

//மேலும் பட்ஜெட் பற்றாக்குறை விஷயத்தில் அமெரிக்கா ஒரு பெரிய (நல்ல என்று சொல்ல முடியாவிட்டாலும்) முன்னுதாரணம் காட்டி உள்ளது.//

அமெரிக்காவின் கதை வேறு. அது டாலரை உலக பொது நாண்யமாக்கி அதன் மூலம் காலம் தள்ளுகிறது.அது பற்றக்குறை பற்றி கவலை பட போவது இல்லை.அது பற்றாக்குறையை சமாளிக்கும் யுக்தியும் வேறு

Maximum India said...

அன்புள்ள சதுக்க பூதம்

சரியான விவரங்களை பயன்படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

ஆனால் நான் அமெரிக்காவை உதாரணம் காட்டியது வேறு ஒரு கோணத்தில். அதாவது, உலக வங்கி மற்றும் பன்னாட்டு கடன் நிறுவனங்கள் இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சீக்கிரமாகக் குறைக்க வேண்டும் என்று முன்பு வலியுறித்தி வந்தன. இப்போது அந்த நிறுவனங்களின் முன்னோடியான அமெரிக்காவே பெருமளவு நிதிப் பற்றாக்குறையுடன் அரசை நடத்தும் போது, நம் போன்ற நாடுகளை அவர்களால் அதிகம் நிர்பந்திக்க முடியாது. எனவே நமது அரசு வெளிநாட்டு நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டு முதலீட்டு செலவினங்களை குறைக்க வேண்டியதில்லை.

சதுக்க பூதம் said...

// இப்போது அந்த நிறுவனங்களின் முன்னோடியான அமெரிக்காவே பெருமளவு நிதிப் பற்றாக்குறையுடன் அரசை நடத்தும் போது, நம் போன்ற நாடுகளை அவர்களால் அதிகம் நிர்பந்திக்க முடியாது. எனவே நமது அரசு வெளிநாட்டு நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டு முதலீட்டு செலவினங்களை குறைக்க வேண்டியதில்லை//
மிக்க சரி

சதுக்க பூதம் said...

// இப்போது அந்த நிறுவனங்களின் முன்னோடியான அமெரிக்காவே பெருமளவு நிதிப் பற்றாக்குறையுடன் அரசை நடத்தும் போது, நம் போன்ற நாடுகளை அவர்களால் அதிகம் நிர்பந்திக்க முடியாது. எனவே நமது அரசு வெளிநாட்டு நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டு முதலீட்டு செலவினங்களை குறைக்க வேண்டியதில்லை//
மிக்க சரி

Maximum India said...

நன்றி சதுக்க பூதம்

MARIMUTHU said...

நீங்கள் எல்லோரும் சொல்வது எல்லாமே சரி , நமது அரசியல் வாதிகள் என்றைக்கு திருந்தி இது என்னுடய நாடு இதில் தான் நானும் என்னுடுடைய குடும்பமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்தால் போதும் .இதை விட்டு எங்கும் போய் வாழ உண்மையில் இஷ்டம் இல்லை என்பதை உணர்ந்து இங்கு என்ன செய்ய வேண்டும் . இது வரை சேர்த்த வரை போதும் கொஞ்சம் மக்களுக்குக்காக , பொது நல நினைப்பு கூட வேண்டாம் அது உங்கள்ளுக்கு வேஸ்ட் .நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த நாட்டில் சிறப்பாக வாழ எல்லோரும் சேர்ந்து இருந்தால் மட்டுமே உங்கள் விருப்பம் நிறைவேறும். அதற்ககவாது தயுவு செய்து உங்களை மாற்றி கொஞ்சூண்டு எங்கள்ளுக்காக வாழுங்கள் . நீங்கள் போன பிறவியில் என்னவாக இருந்தீர்கள் என்று உங்களுக்கு தெரியாது.அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் யார் என்று உங்கள் எல்லா அடையாளங்களை மறந்து நினைத்து பார்த்துண்டா . உங்கள் அடையாளம் உங்கள் பதவி உங்கள் உறவு நீங்கள் வைத்திருக்கிற பணம் ,இதை எல்லாம் மறந்து நீங்கள் யார் ,எதற்காக இவ்வளவு சேர்கிறீங்க . கொஞ்சம் யோசனை பண்ணுங்க . நீங்க செத்த பிறகு உங்களையும் பாடி என்று தன் சொல்வார்கள் . அவர் இவர் என்று சொல்லபோவது இல்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு ஏதாவது, இந்த நாட்டுக்கு ஏதாவது செய்தால் எங்கள் மனதில் ,மற்றும் உங்கள் ஆத்மாஉக்கு நாங்கள் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம் நீங்களும் உங்கள் சந்ததியாரும் நல்ல முறையில் வாழ்ந்து நன்மை அடைவார்கள். தப்பாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

Maximum India said...

அன்புள்ள மாரிமுத்து

பின்னூட்டத்திற்கு நன்றி

இந்த பின்னூட்டம் உங்களது ஆத்மார்த்தமான உள்மனதின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். இந்த கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. கண்டிப்பாக நம்மைப் போன்ற மக்களின் கோபம் அரசியல்வாதிகளைச் சென்றடையும். அப்போது இந்த நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும்.

நன்றி.

Blog Widget by LinkWithin