Wednesday, December 31, 2008

சந்தை நிலவரத்தின் புத்தாண்டு பலன்கள்


சந்தைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் 2008 ஆம் ஆண்டு மிக உற்சாகமாகவே தொடங்கியது. சென்செக்ஸ் குறியீட்டு புள்ளிகள் புதிய சாதனை அளவாக 21,000 புள்ளிகளையும் தாண்டிச் சென்றது. ஜனவரி மாதம் நிகழ்ந்த ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகள் திவாலாகும் சூழ்நிலைகள் உருவான கட்டத்திலும் மற்ற உலக சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து வந்த போதும் இந்தியாவின் கதை சற்று வித்தியாசமானது என்று இந்திய முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் நம்பினர். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவிற்கு முற்றிலும் புதிதான நுகர்வோர் கலாச்சாரம் நம் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் என்றும் பரவலாக நம்பப் பட்டது.

ஆனால் நடந்த கதை வேறு. இந்த ஆண்டு உலக சந்தைகளில் மிக அதிகமாக வீழ்ச்சி பெற்ற சில சந்தைகளில் இந்தியாவும் ஒன்றென ஆயிற்று. இந்திய சந்தைகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து வந்த வெளிநாட்டு வர்த்தகர்கள் தம் பணத்தை திரும்பப் பெற்று கொண்டதும், அதே அளவிற்கு முதலீடு செய்ய இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்களால் முடியாமல் போனதும் முக்கிய காரணங்களாக ஆயின. ஒரே ஆண்டில் சுமார் 55 சதவீத வீழ்ச்சியை நமது சந்தை முக்கிய குறியீடுகள் (சென்செக்ஸ் & நிபிட்டி) சந்திக்க, குறிப்பிட்ட சில நிறுவனங்களோ தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான வீழ்ச்சியைச் சந்தித்தன. முக்கியமாக, ரியல் எஸ்டேட், உலோகம், வாகனம், கட்டுமானப் பணிகள் ஆகிய துறைகளைச் சார்ந்த பங்குகள் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் பகுதியில் அபரிமித வளர்ச்சியைக் கண்ட கச்சா எண்ணெய் விலை ஆண்டின் இறுதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. அதே போல பொருட் சந்தை, ரூபாய் சந்தை ஆகியவனவும் பெருமளவு சரிவையே கண்டுள்ளன.

பொருளாதாரத்திலும் ஏகப் பட்ட மாற்றங்கள். பத்து சதவீதத்தை தொட்டு விடும் என்று வருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கப் பட்ட நமது பொருளாதார வளர்ச்சி, பிற்பாடு தளர்ச்சியை சந்திக்க நேரிட்டது. பணவீக்கம் மட மடவென்று உயர்ந்து பின் அதே வேகத்தில் சரிந்துள்ளது. பல உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. பலருக்கு வேலை பறிபோய் உள்ளது. இடையிடையே ஏகப் பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள். இப்படி மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிய கடந்த ஆண்டு விரக்தியுடனே முடிவடைந்தது.

இப்போது வரும் ஆண்டு எப்படி இருக்கும் எனப் பார்ப்போம். அமெரிக்காவில் புதிய நம்பிக்கையை தந்துள்ள ஒபாமா வரும் ஆண்டின் துவக்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். அவருடைய புதிய கிரியா ஊக்கித் திட்டம் எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும். முக்கியமாக, அமெரிக்க வங்கிகள் மேற்கொண்டு வீழ்ச்சி அடையாமல் காப்பதும், அமெரிக்க வாகனத்துறை மீட்டெடுப்பும் உலக சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும். அதே சமயம், அமெரிக்கா 1930 களில் சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சியை இப்போதும் சந்திக்குமானால், உலக பொருளாதாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகள் ஏற்படக் கூடும்.

இந்தியாவில் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் பெருமளவிற்கு மாறாமல் இருப்பதனால் ஆட்சி மாற்றம் பெருமளவிற்கு சந்தையை பாதிக்காது என நம்பலாம். அதே சமயம், தொங்கு பாராளுமன்றம் அமையும் பட்சத்திலும் அடிக்கடி கூட்டணி மாற்றங்கள் ஏற்படும் நிலையிலும் சீர்திருத்தங்களின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

பணவீக்கம் மேலும் குறையும் என்றும் வங்கி வட்டி வீதங்கள் கீழ் நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த கால நோக்கில் உயர்வு பெறக் கூடும் என்றாலும் நீண்ட கால நோக்கில் பெருமளவு உயர வாய்ப்புகள் குறைவு. அதே சமயம், கட்சா எண்ணெய் விலை இதே அளவில் சில காலம் நீடிக்கவும், உலகப் பொருளாதாரம் சற்று தலை நிமிரும் பட்சத்தில் சற்று மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தைகள் இந்த ஆண்டு புதிய ஒரு தாழ்வு நிலையைச் சந்திக்க கூடும் என்றாலும் கூட, மொத்த வருடத்திற்காக பார்க்கும் போது ஒரு மிதமான வளர்ச்சி (20-30 சதவீதம்) அடைய வாய்ப்புகள் அதிகம். வங்கித் துறை, அடிப்படை கட்டுமான துறை, நுகரும் பொருட்கள் துறை மற்றும் மின்சார துறை பங்குகள் நன்கு செயல் பட வாய்ப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. அதாவது, கடலலை பின் செல்லும் போதுதான், யார் துணியுடன் குளிக்கிறார்கள், யார் துணியில்லாமல் குளிக்கிறார்கள் என கண்டு பிடிக்க முடியும் என்று. அது போல, பொருளாதார சிக்கலான சமயத்தில் எந்தெந்த நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்பதை கவனித்து அவற்றில் தகுந்த இடைவெளி விட்டு முதலீடு செய்யலாம்.

(எனது நேரக் குறைவினால், தற்போதைக்கு இது குறித்த ஒரு விரிவான அலசல் செய்ய முடியாமல் உள்ளது. எனவே, வருங்காலங்களில் சந்தை மற்றும் பொருளாதாரத்தின் போக்கு பற்றி விரிவாக விவாதிக்கலாம். )

வரும் ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பானதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி.

8 comments:

marimuthu said...

நாட்டு பற்றும், நாட்டின் வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட தங்களுக்கு வணக்கம் பல, நமது கணிப்பு என்று இருந்தாலும் ,நமது தாகமும் ஆசையும் ஏக்கமும்,நமது உள்ளத்தில் இருந்து புறப்பட்டு நல்ல சக்தி மிகுந்த அலைகளாக மாறி நமது தேசத்தை வலிமையாகவும் ஆற்றல் மிகுந்த சக்தியாகவும் விளங்க செய்யும் என்பது உறுதி. ஆகவே உங்களை போன்ற நல்ல உள்ளங்களினால் நல்ல சக்தி மிகுந்த அலைகளை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் நல்ல சந்தோஷமும் அமைதியும் நிச்சயம் செய்யமுடியும். உங்களுக்கும் நமது சந்தை நிலவரத்தை தொடர்ந்து வாசித்து வரும் அன்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆரோக்கியமான ஆனந்தமான இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

pothujanam said...

தினத்தந்தி சிவல் புரி சிங்காரம் போல் குழப்பாமல், தெளிவாக பலன் சொன்ன மும்பை ஜோதிடருக்கு எனது வாழ்த்துக்கள்.மனிதனின் அறிவு எல்லை ஒவ்வொரு நாளும் சிறிது தூரம் விரிவடைய செய்யபடுகிறது. அதில் செய்தி ஊடகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.இந்த சேவை கூட கம்யூட்டர் கல்வெட்டு போல்தான். தொடர்க உங்கள் சிறப்பான பணி.புது வருட வாழ்த்துக்கள்.

Maximum India said...

அன்புள்ள மாரிமுத்து

உங்களுடைய எழுத்துக்கள் உங்கள் உயர்ந்த மன நிலையையே காட்டுகின்றன. உங்களுடைய தொடர்பு கிடைத்தது சந்தை நிலவரம் மூலம் கிடைத்த ஒரு நல்ல கொடையாகவே கருதுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நாமிருவரும் எப்போதுமே கவுண்டமணி செந்தில் அல்லது லாரல் ஹார்டி போலவே இருந்து வந்திருக்கிறோம். இந்த ஒப்பீடு நாம் ஏதோ காமெடி செய்கிறோம் என்ற பொருளில் அல்ல. இந்த இருவர் கூட்டணியில் ஒருவரின் வினை மற்றவரது எதிர் வினையாலேயே முழுமை பெறுகிறது. மேலும் இருவருக்கும் இடையே எப்போதுமே இருக்கும் ஒரு பொதுவான அலை வரிசை கருத்துப் பரிமாற்றங்களை எளிமைப் படுத்துகிறது. நம்மிருவருக்கும் புதியதான இந்த பதிவுலகில் கூட எனது பதிவுகள் உங்களது பின்னூட்டங்களால் சிறப்பு பெறுகிறது.

மேலும் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களது தரப்பிலிருந்தும் நல்ல சுவாரஸ்யமான பயனுள்ள பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கார்த்திக் said...

// தொங்கு பாராளுமன்றம் அமையும் பட்சத்திலும் அடிக்கடி கூட்டணி மாற்றங்கள் ஏற்படும் நிலையிலும் சீர்திருத்தங்களின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.//

சரியான கணிப்பு.
ஆனா இப்படை நடக்கக்கூடாது.

// குழப்பாமல், தெளிவாக பலன் சொன்ன மும்பை ஜோதிடருக்கு எனது வாழ்த்துக்கள்.//

சரிதான் :-))

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

வால்பையன் said...

இது குறித்து விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்!

இன்னும் சில நாடுகளின் உண்மையான பொருளாதார நிலை வெளிவரவில்லை என்று தகவல்!

உண்மையை நீங்கள் தான் எழுத வேண்டும்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி .

//இது குறித்து விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்!

இன்னும் சில நாடுகளின் உண்மையான பொருளாதார நிலை வெளிவரவில்லை என்று தகவல்!

உண்மையை நீங்கள் தான் எழுத வேண்டும்//

நிச்சயமாக. நாம் வரும் பதிவுகளில் உலக பொருளாதார மாற்றங்களைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.

நன்றி.

Blog Widget by LinkWithin