Saturday, February 28, 2009

இந்திய ரூபாயின் வீழ்ச்சி


சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது.

இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அளித்தாலும், நிலைமை பெருமளவுக்கு மேம்பட வில்லை.

மேலை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிகள் பெருமளவு குறைந்து போனது. அதே சமயம், பெட்ரோலிய பொருட்கள் நீங்கலான இதர இறக்குமதிகள் இந்தியாவில் அதிக அளவு குறையாமல் போனது. இந்த நிலை காரணமாக, ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி பெருமளவு அதிகரித்தது.

இந்திய அரசின் மிகப் பெரிய நிதிப் பற்றாகுறை காரணமாக உலக தர வரிசையில் இந்தியாவிற்கான தர மதிப்பீட்டை தர நிர்ணய நிறுவனம் (S&P) சமீபத்தில் குறைத்து. இதனால், வெளிநாட்டு செலவாணியின் புதிய வரத்து குறையும் என்பதுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு செலவாணி வெளியே செல்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

உலகெங்கும் உள்ள பொருளாதார நிரந்தமற்ற நிலை காரணமாக, அந்நிய செலவாணியை வைத்திருப்போர் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவிற்கு (யானை படுத்தாலும் குதிரை உயரம்) திருப்பி எடுத்துச் செல்வது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் பற்றி சந்தேகங்கள் நிலவுவதால், பணம் இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமான அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தஞ்சமடைகிறது. இதனால், மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கரன்சியை பெருமளவு வர்த்தகம் செய்து வரும் சிங்கப்பூர் என்.டி.எப் (Non Delivarable Forwards) சந்தையில் ரூபாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில், ரூபாய் பலமிழந்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை (ஒரே டாலர் அளவில் அதிக ரூபாய்) என்றாலும், ஏற்றுமதி அளவு பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதால் (முதல்ல டாலர் கிடைக்கனுமில்ல?), அவர்களுக்கு பெரிய நன்மை இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்களுக்கும் ஓரளவுக்கு லாபமே.

அதே சமயத்தில், இறக்குமதியாகும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி ஏற்கனவே விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் விலைவாசிகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சியின் வலுவின் அடிப்படையிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும். அந்த வகையில், இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்நிய நிறுவனங்கள் எட்டி பார்க்காது என்று தோன்றுகிறது. இதனால், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து உள்நாட்டில் பண நெருக்கடி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப் படும்.

ஆக மொத்தத்தில் இந்திய கரன்சியின் வலுவிலப்பு, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ரூபாயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான விடை இங்கே.

மிக மோசமான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, கூடிய சீக்கிரம் வரப்போகிற பொதுத் தேர்தல், இப்போது நிலவி வரும் உலக அளவிலான "பொருளாதார தேக்க நிலை (Recession)" "வீழ்ச்சி நிலையாக (Depression)" உருவெடுக்கக் கூடிய ஆபத்து போன்ற விஷயங்களால், இன்னும் கொஞ்ச நாளைக்கு ரூபாய் தனது வீழ்ச்சியைத் தொடரும் என்றே தோன்றுகிறது.

நன்றி.

Friday, February 27, 2009

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க!


நீங்கள் கணிப்பொறி முன்பு பல மணி நேரம் தொடர்ந்து உட்காந்து முயற்சி செய்தும் தீர்க்கமுடியாத மென்பொருள் ரீதியான பிரச்சினைகள் சிறிய இடைவேளை விட்டு மீண்டும் முயற்சி செய்யும் போது, எளிதில் தீர்ந்து விடுவதை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள். என்ன நடந்தது அந்த சிறிய இடைவெளியில்?

நீங்கள் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரிலாக்ஸ் செய்து கொண்டது, உங்கள் மூளையை (உடலை) சுறுசுறுப்பாக்கி, மென்பொருள் பிரச்சினையை எளிதில் தீர்க்க உதவி இருக்கிறது அல்லவா? இதே போன்ற ஒரு ரிலாக்சான மனநிலை வாழ்நாள் முழுக்க தொடரும் பட்சத்தில், வாழ்கையின் பல பிரச்சினைகளுக்கும் நம்மால் எளிதில் தீர்வு காண முடியும் இல்லையா?

மனதை எப்போதும் ரிலாக்சான நிலையில் வைத்துக் கொள்வதற்கு சில யோசனைகள் இங்கே.

உடற்பயிற்சி; உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு. வலுவான உடல் அமைப்பு மன வலிமைக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான சீரான உடற்பயிற்சி மனதை இலகுவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாளுக்கு முப்பது நிமிடங்கள் வீதம் உடலுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது என்றும் கூறப் படுகிறது. மெல்லிய ஓட்டம், நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் செய்யலாம்.

மனப் பயிற்சி: பலவிதமான தியான முறைகள் பல பெரியவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. இவற்றால் மனதுக்கும் உடலுக்கும் பல நன்மைகள் உண்டு என்றும் கூறப் படுகிறது. ஆனாலும், எனக்கு தியானத்தில் தனிப்பட்ட முறையில் அதிக பரிச்சயமில்லை. எனக்குத் தெரிந்த வகையில், மனதை ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடங்கள் மனதை அமைதியாக மற்றும் லேசாக வைத்துக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது.

அலுவலக நேரத்தில் சிறிய இடைவெளிகள்: தொடர்ந்து வேலையிலேயே முழுகி கிடைக்காமல், அவ்வப்போது இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடந்து வருவது நல்லது. அலுவலக நண்பர்களுடன், சிறிய அரட்டை, நகைச்சுவை பரிமாற்றம் ஆகியவை உதவும். சிலர் மூச்சுப் பயிற்சி (Deep Breathing), சோம்பல் முறிப்பது போன்றவற்றைக் கூட செய்வார்கள்.

இதர பழக்கங்கள்: அலுவலகம், வீடு, இரண்டுக்குமிடையே பயணம் என்றே இருக்காமல், ஒருநாளில், சில சில இதர நல்ல பழக்கங்கள் இருப்பது மனநிலையை லேசாக்க உதவும். அதாவது, விளையாட்டுக்கள், புத்தகம் படிப்பது, மியூசிக் கேட்பது, ஓவியங்கள் வரைதல் போன்றவை.

ஒரு நேரத்தில் ஒரே கவனம்: எல்லாவற்றுக்கும் கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, எந்த ஒரு வேலை செய்தாலும், அதிலேயே முழு மனதையும் செலுத்துவது நல்லது. சாப்பிடுவது, மியூசிக் கேட்பது, அலுவலக பணிகள், படிப்பது, முக்கியமாக வாகனம் ஓட்டுவது போன்ற சமயங்களில் தனது முழுக் கவனம் செலுத்த பயிற்சி மேற்கொள்வது நல்லது.

மேற்சொன்ன பயிற்சிகள் மனதை ரிலாக்ஸ் ஆகா வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வெளியே எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதிலேயே ஒருவரின் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

நன்றி.

Thursday, February 26, 2009

காப்பீடு எவ்வளவு செய்யலாம்?


உலகம் இன்றிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில், தனி மனிதனின் உயிருக்கும் குடும்பத்தின் தலைவருக்குப் பின் அந்த குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பிற்கும் எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் ஒவ்வொருவரும் தனக்கு பின்னர் குடும்பத்தின் சீரான வாழ்வினை ஓரளவுக்கேனும் உறுதி செய்ய எவ்வளவு காப்பீடு செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த கணக்கீடு பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள காப்பீட்டு முகவரை தனிப் பட்ட முறையில் அணுகலாம் என்ற போதிலும், ஒரு குத்துமதிப்பான கணக்கீடு இங்கே வழங்கப் பட்டிருக்கிறது.

முதலில் ஒருவர் தன் சம்பளத்தில் குடும்பத்திற்காக செலவு செய்யும் சராசரி மாதத் தொகையை (தனது சொந்த அனுபவத்தின் பேரில்) கண்டறிய வேண்டும். அந்தத் தொகையை பன்னிரண்டால் பெருக்க வேண்டும் (வருட செலவினத்தை கண்டறிவதற்காக).

இதில் வரும் தொகையை மீண்டுமொரு முறை பதினைந்தால் பெருக்க வேண்டும். (இழப்பீட்டுத் தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்தால் சுமார் ஏழு சதவீத வட்டித் தொகை கிடைக்கும் என்ற மதிப்பீட்டின் படி). பிறகு, படிப்பு கல்யாணம் போன்றவற்றுக்காக ஆகக் கூடிய செலவினத் தொகையை மேற் சொன்ன வழிமுறையின் படி கண்டறியப் பட்ட தொகையுடன் கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசியாக, குடும்பத்திற்காக தான் இது வரை சேமித்து வைத்துள்ள தொகையினை மேற்சொன்ன தொகையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும். இப்படி வரும் தொகைக்கு ஒருவர் நீண்ட கால காப்பீடு (Term Insurance) செய்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக, ஒருவரின் மாதாந்திர குடும்ப செலவினம் ரூ.12,500 என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனை பன்னிரண்டால் பெருக்கும் போது, (வருட செலவு) ஒன்றரை லட்சம் வரும். மீண்டும்,இந்த தொகையை பதினைந்தால் பெருக்கினால், 22.50 லட்சம் வரும். இதனுடன் கல்யாண மற்றும் படிப்பு செலவாக பத்து லட்சத்தை கூட்டி கொள்ளுங்கள். இது வரை சேமித்து வைத்துள்ள தொகை சுமார் பன்னிரண்டு லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நபர், மொத்தமாக 20.50 லட்சம் அளவிற்கு காப்பீடு (Term Insurance) செய்ய வேண்டி இருக்கும். இந்த காப்பீட்டுத் தொகைக்கான சந்தாத் தொகை அவரவர் வயதினைப் பொருத்து லேசாக மாறுபடும்.

ஒவ்வொருவரும் காப்பீடு செய்யுங்கள். வாழ்வை நிம்மதியாக கழியுங்கள்.

நன்றி.

Wednesday, February 25, 2009

வரி குறைப்பும் தரம் இழப்பும்



பொருளாதார மீட்பு திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, மத்திய அரசு மிகப் பெரிய அளவில் வரி குறைப்பு செய்துள்ளது. உற்பத்தி வரியில் (Excise Duty) இரண்டு சதவீதமும் சேவை வரியில் (Service Tax) இரண்டு சதவீதமும் குறைக்கப் பட்டுள்ளன. இந்த வரி குறைப்பால் உள்ளூர் விலைவாசிகள் ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்ற போதிலும் சர்வதேச தர வரிசையில் இந்தியா மேலும் கீழிறங்கவும் வாய்ப்புள்ளது. இது பற்றி இங்கு பார்ப்போம்.

மேலே சொன்னபடி, மத்திய அரசின் உற்பத்தி வரி அனைத்துப் பொருட்களின் மீதும் 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், டெலிவிஷன், கார், சோப் இன்னும் பல "தயாரிக்கப் பட்ட பொருட்களின்" விலை இரண்டு சதவீதம் குறையும். மிக முக்கியமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறுபது சதவீதத்திற்கு மேல் இடம் பெற்றுள்ள சேவைப் பணிகளின் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக, சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், தொலைபேசி, மின்சார கட்டணங்கள், விமான சேவை கட்டணங்கள் ஆகியவை குறையும்.

இந்த வரி சலுகைகள் மூலம் ஏற்கனவே பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு ஏற்படும் கூடுதல் வருவாய் இழப்பு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். (பட்ஜெட் பற்றாகுறை என்பது மறைமுக வரி விதிப்பு என்பது வேறொரு பதிவில் விளக்கப் பட்டுள்ளது.) இந்த சலுகையை அனைத்து நிறுவனங்களும் நுகர்வோருக்கு முழுமையாக அளிக்குமா என்பது சந்தேகமே என்றுள்ள நிலையில் இது போன்ற வரிகுறைப்புக்களால், மக்களுக்கு நிகர லாபம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

அதே சமயம் உலக தர வரிசையில் இந்தியாவின் தரம் இறங்க இந்த வரி குறைப்பு வழி வகுக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

இந்திய அரசின் தர மதிப்பீடு உலக தர நிர்ணய நிறுவனங்களால் BBB- என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த தரமதிப்பீடானது, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு என உருவாக்கப் பட்டுள்ள தரவரிசையில் மிகக் கீழே உள்ள இறுதி மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீட்டில் இன்னும் ஒரே ஒரு படி கீழே இறங்கினாலும், இந்தியா முதலீடு செய்ய உகந்த நாடு அல்ல என்ற பொருள் பெறும்.

அவ்வாறு ஏற்படும் நிலையில், இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து புதிதாக பண வரத்து இருக்காது. சொல்லப் போனால், இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு பணம் வெளியே போகவும் வாய்ப்பு உள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் முதல் திரட்டுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கும். இந்தியாவின் பணமான ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிரான தனது மதிப்பை மேலும் இழக்கும். இறக்குமதி பொருட்களின் விலை கூடுதலாகி விலைவாசிகளும் உயரக் கூடும். எனவே, தர வரிசையில் கீழே இறங்குதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பல சிக்கல்களை உருவாக்கும்.

சரிவின் விளிம்பில் உள்ள இந்தியாவின் நிலை இப்போது மேலும் மோசமாகி உள்ளது. உலக தர நிர்ணய நிறுவனங்களில் ஒன்றான S&P நிறுவனம் இந்தியாவின் நிலையை "நிலையான" (BBB- Stable) என்ற இடத்திலிருந்து "மோசமான" (BBB- Negative) என்ற இடத்திற்கு தற்போது கீழிறக்கி உள்ளது. இதற்கு உடனடி மற்றும் முக்கிய காரணம் , இந்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறையே என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தினால், உடனடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படப் போவதில்லை என்றாலும், இந்திய அரசினால் மேலும் புதிய திட்டங்களை உருவாக்க வசதி வாய்ப்பு இல்லாத "நிதி நெருக்கடி நிலை" ஏற்படும். இப்படிப் பட்ட ஓட்டாண்டி நிதி நிலையில், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையக் கூடிய மத்திய அரசு எந்த ஒரு பொருளாதார திட்டத்தையும் உருவாக்க அல்லது செயல் படுத்த விரும்பினால் பட்ஜெட் பற்றாக்குறை இன்னும் அதிகமாகி இந்தியா முதலீட்டு ஸ்தானத்திலிருந்து தவறி விழ வாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில், தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அள்ளி வீசும் இப்போதைய அரசு புதிய அரசுக்கு எந்த ஒரு நல்வாய்ப்பையும் வழங்க விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி

Tuesday, February 24, 2009

சரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த முரண்பாடு?


சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதம் வரை உயர்ந்த பணவீக்கம் இப்போது நான்கு சதவீதத்திற்கும் கீழே வந்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் என்பது அந்நாட்டில் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதை பிரதிபலிப்பதே ஆகும். ஆனால், இந்தியாவிலோ பணவீக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அரசு வெளியிடும் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி முதலான மளிகைப் பொருட்கள் மற்றும் பொது சேவைக் கட்டணங்கள் எந்த வகையிலும் குறைய வில்லை என்பதுடன் வெகுவாக உயர்ந்த வண்ணமே உள்ளன. கடந்த காலாண்டு நிதி அறிக்கையில், இந்திய தலைமை வங்கியே, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் குறைந்திருந்தாலும் விலைவாசிகள் குறைய வில்லை என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.ஏன் இந்த முரண்பாடு? காரணங்கள் என்ன என்று கொஞ்சம் யோசிப்போம்.

இந்தியாவில் அனைவராலும் அதிகம் பின்பற்றப் படும் பணவீக்க விவரம், மொத்த விலைகளின் (Wholesale Prices)போக்கை அடிப்படையாக கொண்டதாகும். அதே சமயம், மேலை நாடுகளில், நுகர்வோர் விலைவாசியின் அடிப்படையிலேயே பணவீக்கம் கணக்கிடப் படுவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே, மேலை நாடுகளில், பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி துல்லியமாக அரசாங்களால் உணரப் படுகிறது. உதாரணமாக, ஒரு பொருளின் மொத்த விலை (தொழிற்சாலையின் தயாரிப்பு விலை) 100 ரூபாயிலிருந்து 104 ரூபாய் ஆக உயர்ந்தால், இந்திய அரசு பார்வையில் பணவீக்கம் வெறும் நான்கு சதவீதம். பல இடைத்தரகர்கள் கைமாறி நம்மைப் போன்ற நுகர்வோரிடம் வரும் போது ஏற்படும் விலை ஏற்றங்கள் இந்த பணவீக்கத்தில் இடம் பெறுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயத்தில், நுகர்வோர் கையில் கிடைக்கும் போது, இந்த பொருளின் விலை 110 ஆக இருந்தால், மேலை நாடுகளில் பணவீக்கம் பத்து சதவீதமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தொழிற்துறையில் உபயோகிக்கப் படும் பல மூலப் பொருட்கள் கச்சா எண்ணெயை ஆதாரமாக கொண்டவையாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கண்ட படி உயர்ந்த போது, அந்த விலை உயர்வை நுகர்வோர் தலையில் கட்டிய தொழிற் நிறுவனங்கள் இப்போதைய கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனை நுகர்வோருக்கு வழங்க வில்லை என்பதும் கூட இந்த முரண்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம்.

தற்போது இந்தியாவில், பணவீக்கம், 1993-94 விலைகளை அடிப்படையாகக் கொண்டு 435 வெவ்வேறு பொருட்களின் விலை கண்டறியப் படுகிறது. முந்தைய ஆண்டு இதே நாளில் இருந்த விலையை விட இந்த ஆண்டு எவ்வளவு உயர்ந்தது என்ற கணக்கியல் மதிப்பீடே பணவீக்கம் ஆகும். இந்த முறையில் சில பலவீனங்கள் உள்ளன.

அதாவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அரிசி விலை 20 ரூபாய் அளவில் இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். உற்பத்தி குறைவாக இருந்ததால் அதே வருடம் பிப்ரவரி மாதம் இதுவே 30 ரூபாயாக உயர்ந்தது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் ஜனவரி/ பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை சமச்சீராக 33 ரூபாயாக அளவாக உள்ளது எனும் பட்சத்தில், இந்திய அரசின் மதிப்பீட்டின் படி ஜனவரி மாதம் பணவீக்கம், (33-20)/20 = 65% ஆக இருந்தது. அதுவே பிப்ரவரி மாதம் (33-30)/30 = 10% ஆக குறைந்துள்ளது.

இந்த கணக்கியல் ரீதியான பணவீக்க வீழ்ச்சி, "விலைவாசியை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளித்துள்ளன" என்று அரசு சார்பாக தம்பட்டம் அடிக்கவே உதவுகின்றது. ஆனால், அரிசி பொங்கி சாப்பிடும் நம்மைப் போன்ற பொதுஜனங்களுக்குத்தான் தெரியும், அரிசி விலை குறைய வில்லை என்று. மேற்சொன்ன உதாரணத்தின் அடிப்படையில், அரசு வெளியிடும் பணவீக்கமானது நம்மைப் போன்ற பொது மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விலைவாசி உயர்வு பிரச்சினையை சரிவர பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே சொன்னபடி, இந்தியாவில் பணவீக்கம் 435 பொருட்களின் விலைவாசி உயர்வு தாழ்வு அடிப்படையில் கணக்கிடப் படுகிறது. ஆனால், இந்த பொருட்களின் தொகுப்பு, இந்தியாவின் மாறி வரும் பொருளாதார சூழலின் அடிப்படையில் அமைய வில்லை என்பது என் கருத்து. பணவீக்க மதீப்பீடு, விவசாய, எரிசக்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலை ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இன்றைக்கு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சேவைப் பணிகளில் (தொலை தொடர்பு, போக்குவரத்து, பொதுச் சேவைகள் போன்றவை) ஏற்படும் விலைவாசி ஏற்றத்தாழ்வுககள் பணவீக்க கணக்கீட்டில் சரிவர இடம் பெறுவதில்லை.

கடைசியாக, ஆனால் முக்கியமாக, புள்ளி விவரத் துறையினரால் சரியான நேரத்தில், துல்லியமாக இந்த விலைவாசிகள் மதிப்பிடப் படுகின்றனவா என்பது கேள்விக் குறியான ஒன்றுதான். முதலில் வெளியிடப் படும் குத்துமதிப்பான பணவீக்கத்திற்கும் (Provisional Data), இறுதியாக வெளியிடப் படும் பணவீக்கத்திற்கும் பல சமயங்களில் பெரும் வேறுபாடு இருப்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, அரசாங்கம் பணவீக்க கணக்கிடும் முறையை காலத்துககேற்றார் போல, நுகர்வோர் (பொது மக்கள்) சந்திக்கும் விலைவாசி உயர்வை சரியாக பிரதி பலிக்கும் வகையில் மாற்றியமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் தற்போதைய முறையில் பணவீக்கம் குறைந்து வருகின்றது என்று தவறான மாயையில் தொடர்ந்து இருந்து விடாமல் விலைவாசியை குறைக்கும் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

நன்றி.

Monday, February 23, 2009

சரிவின் விளிம்பில்?


சென்ற வாரம் வெளியிடப் பட்ட மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கை சந்தைகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. பட்ஜெட்டில் பொருளாதார மீட்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் போனது மற்றும் பட்ஜெட்டில் காணப் பட்ட மிக அதிக அளவிலான நிதி பற்றாக்குறை, பட்ஜெட் சலூகைகளுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த சந்தைகளுக்கு அதிர்ச்சியையே தந்தது. இடையில் , தொடர்ந்து இழுத்து மூடப் பட்டு வரும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பொருளாதார சிக்கல் குறித்த பயங்கள் காரணமாக பல வருடங்களில் இல்லாத அளவிற்கு உலக சந்தைகள் வீழ்ந்தது போன்ற விஷயங்கள் நமது சந்தையில் ஒரு மிகப் பெரிய சரிவுக்கு வழி வகுத்தன.

நம்மூர் கரன்சி தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் தங்கத்தின் விலை சரித்திரம் காணாத அளவிற்கு உயர்ந்ததும், பங்கு சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தின. பணவீக்கம் பதின்மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு விழுந்தது, புதிய வட்டி வீதக் குறைப்பு பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் சந்தைக்கு பெரிய அளவில் உபயோகமளிக்க வில்லை.

அதிகரிக்கக் கூடிய வாராக் கடன்களைப் பற்றிய பயத்தில், சென்ற வாரம் வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தன. உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய அச்சத்தினால் உலோகத் துறையைச் சேர்ந்த பங்குகள் அடுத்தபடியாக அதிக அளவில் வீழ்ந்தன. மற்ற துறைகளைச் சேர்ந்த பங்குகளும் சென்ற வாரம் கணிசமான அளவில் சரிந்தன. அதே சமயம் நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலையான 2700 புள்ளிகளுக்கு மேலேயே முடிவடைந்தது ஒருவித நம்பிக்கையை அளிக்கின்றது.

சில பிரபல பொருளாதார நிபுணர்களிடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் இந்த வார துவக்கம் சற்றே சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நம்முடைய சந்தையும் கூட இந்த அளவினை (நிபிட்டி 2700 புள்ளிகள்) நல்ல அரணாக வைத்துக் கொண்டு முன்னேற முயற்சிக்கும் (இலக்குகள் 2790, 2880) என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் அமெரிக்காவில் இருந்து ஏதேனும் கெட்ட செய்தி வந்து, 2700 அரண் முழுமையான அளவில் முறிக்க பட்டால், அதல பாதாள நிலைக்கு நமது சந்தை பாயும் என்றே தோன்றுகிறது. எனவே வர்த்தகர்கள் கீழே 2700 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு எச்சரிக்கையான வர்த்தகத்தில் ஈடுபடலாம். வரும் வாரத்தில் F&O நிலைகள் காலாவதி ஆவதினால், சந்தையில் ஏகப் பட்ட ஏற்ற இறக்கங்களை காண முடியும். வரும் வாரம் வெளியிடப் படவுள்ள, இந்திய ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) பற்றிய விவரங்களும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு வேளை, வட்டிவீதங்கள் குறைக்கப் பட்டால், வட்டி வீத தொடர்பான பங்குகளில் (வாகனத் துறை, வங்கித் துறை, ரியல் எஸ்டேட் துறை) வர்த்தகம் செய்யலாம். பெட்ரோலிய துறை விநியோகஸ்த நிறுவனங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யலாம். ஒ.என்.ஜி.சி நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எண்ணெய் கண்டுபிடித்திருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தைகளில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக டாலர் வலிமை பெற்று வருகிறது. நமது பங்கு சந்தை 2700 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில், ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 50அளவை தாண்ட வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அமையும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

ஜெய் ஹோ இந்தியா!


கடந்த எண்பது ஆண்டு கால ஆஸ்கார் சரித்திரத்தில் இரண்டு இந்தியர்கள் ஆஸ்கார் மட்டுமே விருது பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஒரு தடவையிலோ மூன்று இந்தியர்கள் ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளனர். கொடுக்கிற (ஆஸ்கார்) தெய்வம் இந்த முறை கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் அடிப்படை காரணத்தைப் பற்றியும் இந்திய திரையுலகத்திற்கு இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

"Slumdog millionaire (சேரி நாய் கோடீஸ்வரன் ?)" திரைப் படம் ஒரு இந்தியப் படமா என்பதிலேயே பலமான சர்ச்சை இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இந்தியாவை தவறாக சித்தரித்துள்ளதாகவும் கூட (குறிப்பாக மும்பை தாராவியை சேர்ந்தவர்களால்) எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலம் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டில் இந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே இந்தியாவில் மொழி பெயர்க்கப் பட்டது என்பதும் இந்தியாவில் இந்தப் படம் பெரிய தோல்வியை பெற்றதும் குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு பெரிய நாடுகள் இந்தியா மற்றும் சீனா. பொதுவாகவே, சீனாவின் கலாச்சாரத்தினைப் பற்றிய உயர்ந்த கருத்துடன் அமைந்த படைப்புக்கள் மேலை நாட்டினரால் வரவேற்கப் படும் அதே வேளையில் இந்தியாவின் இருண்ட பக்கத்தினை (ஓரளவுக்கு உண்மையான பக்கங்கள்தான்) வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. (இதற்கு பல உதாரணங்கள் கூற முடியும்). அந்த வகையில் "Slumdog Millionaire" பெற்ற வெற்றியில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னும் சில காரணங்கள் கூட கூறப் படுகின்றன. பொருளாதார வீழ்ச்சியில் துவண்டு போயிருக்கும் மேலை நாட்டினருக்கு, இந்த படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்படி "துவேஷிக்கப் படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழை சிறுவன்" தனது வாழ்வில் பெற்ற மிகப் பெரிய வெற்றி ஒரு ஊக்கத்தை தருவது போல உள்ளது என்றும் கூறப் படுகிறது.

ஆனால், இந்தப் படம் ஆஸ்கார் அளவில் அடைந்திருக்கும் மகத்தான வெற்றி (8 விருதுகள்) மற்றும் இந்திய கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் உலகளாவிய அங்கீகாரம் இந்த வெற்றிக்கு பின்னணியில் இன்னும் சில விஷயங்கள் உண்டு என்பதை காட்டியுள்ளது. இந்தியப் படங்களில் இசை ஒரு நெருடலாகவே உள்ளது என்ற மேலை நாட்டு கருத்துக்களுக்கு நேர்மாறாக, இந்திய கலைஞர் ஒருவர் இசைக்காகவே விருது பெற்றிருப்பதும், மேலைநாட்டு (சிறப்பு) தொழிற்நுட்ப விஷயமொன்றில் (ஒலிக் கலவை), இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தொழிற்நுட்ப கலைஞர் விருது பெற்றிருப்பதும் அனைவரையும் தலை நிமிரச் செய்யும் விஷயங்கள். மேலும், பற்சிதைவுக்கு உள்ளான சிறுமியைப் பற்றிய ஒரு இந்திய ஆவணப் படம் விருதை வேண்டிருப்பது உலக அளவில் இந்தியாவிற்கு புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது.

இதற்கு முன்னர், இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் சென்ற மிகச் சிறந்த படைப்புக்களான ரோஜா, தேவர் மகன், ஹே ராம் மற்றும் லகான் ஆகியவை (வெளிநாட்டு படப் பிரிவில் சென்றவை) வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளன. இளையராஜா, ஆர்.டி. பர்மன் போன்ற இசையுலக மேதாவிகள் உலக அளவில் இது வரை அங்கீரிகரிக்கப் பட்டதில்லை. ஏ.ஆர் ரஹ்மான் கூட இந்தப் படத்தின் இசையமைப்புதான் அவருடைய படைப்புகளிலேயே (ரோஜா, பாம்பே, லகான் போன்றவை) மிகவும் சிறந்தது என்று ஒப்புக் கொள்ளமாட்டார் என்றே நினைக்கிறேன்.

மொத்தத்தில், உலக அரங்கிற்கான கதவு இப்போதுதான் இந்தியாவிற்கு திறந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தந்தையின் உழைப்பு தனயனுக்கு அங்கீகாரத்தை தேடித் தருவதை போல, பல இந்திய திரை மேதைகள் இட்ட அடித்தளம் உலக அளவில் இன்றைய இந்திய திரைத்துறையினர் வெற்றி பெற உதவியாக உள்ளது என்றே கருதுகிறேன்.

இந்த வெற்றியின் முக்கியத்துவங்கள்

இந்த படத்தின் மூலமாக, உலகின் பார்வை இந்திய திரைகலைஞர்களின் மீது படிந்துள்ளது. பல இந்திய கலைஞர்களுக்கு மேலைநாட்டு படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் அரிய அனுபவம் மேலும் சிறந்த இந்தியப் படங்களைத் தயாரிக்க உதவி செய்யும். இந்தியப் படங்களுக்கான சந்தை கூட உலக அளவில் விரியும் என்பதும் பொருளாதார ரீதியான நல்ல செய்தி.

நன்றி

பின்குறிப்பு: இந்தியருக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், ரேசுல் பூக்குட்டி, குல்சார் ஆகியோருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். ஆஸ்கார் மேடையில் தமிழில் பேசி அசத்திய ரஹ்மானுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள்

Sunday, February 22, 2009

மனதுகளில் ஒளிந்திருக்கும் கருங்குரங்கு - தில்லி 6 - திரை விமர்சனம்


தில்லி 6 திரைப் படம், வெளி வருவதற்கு முன்பே பலமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

காரணங்கள், ரங் தே பசந்தியின் இயக்குனர் (மூன்று வருடங்களுக்கு பின் வெளிக் கொணரும்) படம், திரையில் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமாகிவிட்ட பாடல்கள் (ரஹ்மானின் இசை ) மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைக் களம் (தில்லியின் ஜன நெருக்கடி மிகுந்த சாந்தினி சௌக் பகுதி). பொதுவாகவே, பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும். ஆனால், இந்த படம் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு (ரங் தே பசந்தியை கொஞ்சம் மறந்து விட்டால்) ஈடுகட்டுவதுடன் ஒரு சிறந்த கருத்துருவும் (concept) கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தின் கதைச் சுருக்கம் இதோ.

அமெரிக்காவில் ஒரு கலப்புத் திருமண ஜோடி (இந்து-முஸ்லீம்) குடும்பம் வாழ்கிறது. இதில் குடும்பத் தலைவரின் (இந்து) தாயாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. அமெரிக்க மருத்துவர்கள் கைவிரித்து விட, அந்த அம்மையார் தனது இறுதி நாளை இந்தியாவில் கழிக்க விரும்புகிறார். மகனுக்கு இந்தியாவிற்கு குறிப்பாக சாந்தினி சௌக் பகுதிக்கு திரும்ப விருப்பமில்லை. அப்போது, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அந்த அம்மையாரின் பேரன் (அபிஷேக் பச்சன்) அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவரது இறுதிக் காலம் வரை இங்கிருக்க முடிவு செய்கிறான்.

இந்தியாவில் சாந்தினி சௌக் பகுதி அவனுக்கு முற்றிலும் புதிய உலகமாக தெரிகிறது (நமக்கும் கூடத்தான்). குறுகிய தெருக்கள், ரிக்க்ஷாக்களுடன் பொங்கி வழியும் போக்குவரத்து, மத வேறுபாடு இல்லாமல் நெருங்கிப் பழகும் மக்கள், கள்ளம் கபடம் இல்லாமல் அன்பைப் பொழியும் அண்டை வீட்டார், ராம் லீலா கொண்டாட்டங்கள் இவற்றுடன் பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் "கருங்குரங்கு" பற்றிய வதந்"தீ"க்கள். மேலும், இங்கு வந்த பிறகு பாட்டியிடம் காணப் படும் உற்சாகமான மனநிலை, வீட்டிற்குள் அடக்கமான மகளாகவும் வெளியே "இந்தியன் ஐடல்" ஆகத் துடிக்கும் நவீனப் பெண்ணாகவும் வலம் வரும் சோனல் கபூர் (அனில் கபூரின் மகள்) , பாசமிகு அண்ணன்தம்பியின் "பாகப் பிரிவினை" கதைகள் போன்ற விஷயங்கள் இந்தியாவின் மீது கதாநாயகனுக்கு ஒரு தனி ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.

நடு ரோட்டில் பசுவினை வணங்குவது, நோயாளியை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அந்த பசு வழிபாடு மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப் படாமல், நல்ல சகுனம் என்று சந்தோசப் படுவது, அமெரிக்க மருத்துவர்களால் கைவிடப் பட்ட ஒரு நோயாளியை "ஒன்றுமில்லை, சர்க்கரை குறைவாக உள்ளது" என்று டாக்டர் சொல்வது, கருங்குரங்கைப் பற்றி ஒவ்வொரும் ஒரு கதை விடுவது, அது மெல்ல மெல்ல (ஹிந்தி சேனல்களில் இருந்து ஆங்கில செய்தி சேனல்கள் வரை) பரவுவது என்று சாந்தினி சௌக் பகுதி கதாநாயகனுக்கும் (நமக்கும் கூட) சுவாரஸ்யமாகவே கழிகிறது.

திரைக்கதை ஓட்டத்தில், மெல்ல மெல்ல "கருங்குரங்கைப்" பற்றிய மர்மங்கள் அவிழ்க்கப் படுகிறது. உண்மையில் கருங்குரங்கு என்று ஒன்றுமே இல்லை. தவறு செய்யும் ஒவ்வொருவரும் அந்த பழியை கருங்குரங்கு மீது போட்டு விடுகின்றனர் என்ற உண்மை கதாநாயகனுக்கு தெரிய வர அவனுக்கு ஒரு வித அருவெறுப்பை உண்டாக்குகிறது. சிறு வயதிலேயே "பெரியவர்களாக" ஆசைப் படும் சிறுவர்கள், ஒரு "மைனருடன்" தகாத உறவு வைத்திருக்கும் வயதானவரின் இளம் மனைவி , அடுத்தவன் ஆட்டை "ஆட்டை" போடும் அண்டை வீட்டுக் காரன் அனைவரும் கருங்குரங்கின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்கின்றனர். சந்தர்ப்ப வசமாக பல பிரச்சினைகளில் அமெரிக்க இளைஞன் சம்பந்தப் படுத்தப் பட்டு விடுகிறான்.

"கருங்குரங்கு" விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மதவாதிகள் மற்றும் மத அரசியல்வாதிகள் (ராமர் சிவன் வேடத்தில் இருப்பவர்களை தன் முன்னர் ஆட வைத்து வணங்க வைத்து வேடிக்கை பார்ப்பது அழகாக காட்டப்பட்டுள்ளது), கருங்குரங்கு பிரச்சினை தீர்வு பெற அருகிலுள்ள மசூதியை இடித்து அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்கின்றனர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள் ஒரே நாளில் கடும் விரோதிகளாக மாறுகின்றனர். அல்லாவிற்கும் அனுமானுக்கும் வித்தியாசம் பாராட்டாமல் வாழும் ஒரு முஸ்லீமின் கடை அடித்து நொறுக்கப் படுகிறது. பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

இந்த நிகழ்வுகள் கதாநாயகனின் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி அமெரிக்காவிற்கே திரும்ப நினைக்கிறான். ஆனால் பாட்டியோ, இந்தியாவிலேயேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ஆனால், தொடர்ந்து "கருங்குரங்கு" பிரச்சினையில் தேவையில்லாமல் பேரன் சம்பந்தப் படுத்தப் படுவதினாலும், அவனது தாயார் முஸ்லீம் என்பதால் அன்டைவீட்டாரால் (இந்துக்கள்) அவமானப் படுத்தப் படுவதையும் கண்டு மெல்ல மெல்ல பாட்டியின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதே சமயம், அண்டை வீட்டு பெண் மீது ஏற்படும் காதல் மற்றும் அவளை (மும்பைக்கு கூட்டி சென்று ஸ்டார் ஆக்குவேன் என்று) ஏமாற்றி வரும் "மைனரிடம்" இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆகியவை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் பாட்டி அமெரிக்கா திரும்பலாம் என்று கூற கதாநாயகன் மறுக்கிறான்.

படத்தின் உச்சகட்டமாக, ராமலீலா கொண்டாட்டங்களில் இந்துக்கள் மும்முரமாக இருக்க (கடையை இழந்த) முஸ்லீம் வாலிபனால் ஒரு இந்து கோயில் எரிக்கப் படுகிறது. கதாநாயகி "மைனருடன்" ஓட்டம் பிடிக்கிறாள். கோயில் எரிக்கப் பட்டது இந்துக்களுக்கு தெரிய வந்தவுடன் மிகுந்த பதட்டமான சூழல் ஏற்படுகிறது. பதிலுக்கு முஸ்லீம்களை தாக்க கிளம்புகிறார்கள். இந்த மோதலை தவிர்க்க அமெரிக்க இளைஞன் "கருங்குரங்கு" வேடத்தில் அனைவரின் கண்களிலும் படும்படி கட்டிடங்களின் மேலே தாவித் தாவி செல்கிறான். இதை காணும் மக்கள் அனைவரின் (இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாமல்) கவனம் மற்றும் கோபம் கருங்குரங்கின் மீது திரும்புகிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து "கருங்குரங்கை" விரட்டிப் பிடிக்கின்றனர்.

கதாநாயகன் கடுமையாகத் தாக்கப் படுகிறான். ஆடு மற்றும் கடையை இழந்த முஸ்லீம் வாலிபன் கோபத்தில் ஹீரோவை நெஞ்சிலே சுட்டு விடுகிறான். அப்போது, "பகலில் அருவெறுப்புடனும், இரவில் காமத்துடனும் நோக்கப் படும்" தெருவோரப் பெண் மற்றும் கதாநாயகி ஆகியோரால், அனைவரையும் காப்பாற்றவே இந்த முடிவை கதாநாயகன் எடுத்தான் என்ற உண்மை தெளிவுப் படுத்தப் படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் செய்த தவறை (கருங்குரங்கு மேல் பழி போட்டது) உணருகின்றனர்.

"கருங்குரங்கு" வேறு எங்கும் இருக்க இல்லை. மக்களின் மனதில் ஓரத்தில்தான் ஒளிந்திருந்து வாழ்ந்திருக்கிறது என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து வெட்கப் படுகின்றனர். அப்புறம் என்ன, சுப முடிவுதான்!

(இந்த கதையை இங்கு சொல்லப் பட்டதை விட மிக அழகாகவே திரையில் காட்டப் பட்டுள்ளது)

படத்தின் பிடித்த விஷயங்கள்:

தெளிவான திரைக் கதையோட்டம்.
ஆர்பாட்டமில்லாத அபிஷேக் மற்றும் இதர நடிகர்களின் அழகான நடிப்பு.
ஒரு சென்சிடிவான விஷயத்தை அழகாக சொன்னது.
(நம்மூர் பழைய வாசம் கொஞ்சம் அடித்தாலும்) குளுகுளு இசை

பிடிக்காத விஷயங்கள் என்று அதிகம் இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என்ற சில விஷயங்கள்

நம்மூர் "தேவர் மகனில் " காட்டப் பட்டிருப்பது போல வெளிநாட்டில் இருந்து திரும்ப வரும் இளைஞனின் மனமாற்றங்கள் இன்னும் அழுத்தமாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இறுதி முடிவு கொஞ்சம் "யதார்த்த நிலையில்" இருந்து மாறுபட்டதாக இருந்தது. ஆனால் சுப முடிவையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்ற முறையில் இது "ஒ கே"

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு "சாந்தினி சௌக்" போன்ற ஜன நெருக்கம் மிகுந்த, வாழ்க்கை தரம் குறைந்த இந்தியப் பகுதிகள் ஒரு வித ஆச்சரியத்தைக் (சில சமயங்களில் அருவெறுப்பைக்) கொடுக்கும். ஆனால், அவர்களுடைய நம்பிக்கைகள்தான் (சமயத்தில் மூட நம்பிக்கைகள்) கடுமையான அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு இடையிலேயும் வாழ்க்கையில் ஒருவித பிடிப்புடனும் உற்சாகமாகவும் வாழ வழி செய்கிறது என்பதை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் ஓம்ப்ரகாஷ். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் சமூக சிந்தனையுள்ள ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை "தில்லி 6" தந்தது.

நன்றி.

Saturday, February 21, 2009

வெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்


வெள்ளிக் கிழமை ராமசாமி கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளிக் கிழமைக்கும், அமெரிக்க வங்கிகளுக்கும் ஏதோ ஒத்து வருவதில்லை. என்னவென்று பார்ப்போமா?

அமெரிக்காவில் வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை வங்கிகள் மூடப் பட்டால், திங்கட் கிழமை மீண்டும் திறக்கப் படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை இப்போது காணப் படுகிறது. கடந்த ஆறு வாரங்களாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையானால், அலுவலக நேரம் முடிந்தவுடன், பல அமெரிக்க வங்கிகள் அதிகாரிகளால் கையகப் படுத்தப் பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2008) முழுதும் அமெரிக்காவில் மூடப் பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 25. இந்த ஆண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மூடப் பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 14. இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு 25 வங்கிகள் மூடப் பட்டாலும். அவற்றில் பெரிய வங்கிகள் இரண்டு மட்டுமே.ஆனால் இந்த வருடம் பல பெரிய வங்கிகளே மூடப் படலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் (பல) வங்கிகளின் (இறுதி) வருடமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இவ்வாறு வங்கிகள் மூடப் படுவதின் எதிரொலியை சென்ற வாரம் உலக சந்தைகளில் காண முடிந்தது. அமெரிக்க மற்றும் ஜப்பான் சந்தைகள் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்தன. இந்திய சந்தைகள் கூட பெருமளவுக்கு வீழ்ந்தன. குழப்பமான இந்த சூழ்நிலை காரணமாக வரலாறு காணாத அளவிற்கு தங்க விலை உயர்ந்தது.

இது போன்ற வங்கி வீழ்ச்சிகள் அமெரிக்க அரசின் நிதி நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காரணம், ஒரு குறிப்பிட்ட அளவு வரை வைப்பு தொகைகள் அரசு நிறுவனங்களால் உறுதி அளிக்கப் படுகின்றன.இதன் காரணமாக, மூடப் பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசு நிறுவனங்களே வைப்புத் தொகையை திருப்பி தர வேண்டியிருக்கிறது. இதனால், டாலர் கரன்சி அச்சடிப்பு அதிகமாகி, உலகம் முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் உலக பொருளாதார நிலை இப்போதைக்கு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி.

Friday, February 20, 2009

தவறான அணுகுமுறை


தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு அவலம் நிகழ்ந்தேறி உள்ளது. இந்த முறை மோதியது, போலீசாரும் வழக்கறிஞர்களும். முதலில் தவறு யார் செய்தார்கள் என்பதை விட அரசாங்கமும் போலீசும் பிரச்சினைகளை (தவறுகளை) எப்படி அணுகுகிறார்கள் எனபதைப் பொறுத்தே நல்ல தீர்வுகள் அமைகின்றன.

காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.

வழக்கறிஞர்கள் விஷயத்திற்கு வருவோம். சில வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமியை தாக்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை கைது செய்ய போலீஸார் முயன்ற போது, வழக்கறிஞர்கள் தடுத்ததால் (அல்லது தாக்கியதால்), அவர்களை திருப்பி தாக்க நேர்ந்ததாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.

என்னுடைய சில சந்தேகங்கள்:

குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களை நீதி மன்ற வளாகத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீதி மன்றத்தில் மற்ற வழக்கறிஞர்கள் முன் வைத்து அவர்களை கைது செய்தால், எதிர்ப்பு தோன்றும் என்று போலீசாருக்கு தெரியாதா?

அவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே? பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை?

பொதுமக்கள் பெருமளவிற்கு கூடுகின்ற இடத்தில் இது போன்ற கலவரங்கள் உருவானால், அப்பாவிகள் பலரின் பாதுகாப்புக்கு ஆபத்து வரும் என்று தெரியாதா?

போலீஸார் வாதத்தின் படியே கூட கலவரங்கள் செய்தது வக்கீல்கள். நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் என்ன பாவம் செய்தன? அவைகளை போலீசாரே அடித்து நொறுக்கியதற்கும் கலவரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஏன் இந்த மிருக வெறி?

கலவரம் செய்தவர்கள் வக்கீல்கள்தான் என்ற பட்சத்தில், ஊடகங்களை சேர்ந்தவர்களும், நீதிபதிகளும் தாக்கப் பட்டதற்கு காரணம் என்ன?

கைது செய்ய செல்ல சென்ற சில போலீசாரின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே பல ஆயிரம் போலீஸார் நிறுத்திவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

ஒரு வேளை, இலங்கை தமிழர் பிரச்சினை முதலான பல சமூக பிரச்சினைகளில் முன் நிற்கிற வழக்கறிஞர்களுக்கு "ஒரு சரியான பாடம்" கற்பிக்கவே இந்த தாக்குதல் என்றால், இதற்கும் "என்கௌண்டேர்களுக்கும்" என்ன வித்தியாசம் இருக்கிறது? இது ஒரு தவறான அணுகுமுறை அல்லவா? இந்த தாக்குதல்களால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா? மேலும் விரோதங்கள் அல்லவா வளரும்?

அரசின் அனுமதி இல்லாமல் போலீசாரால் இது போன்ற தாக்குதலில் ஈடுபட முடியுமா? அரசின் முதல் கடமை மக்களைப் பாதுகாக்க வேண்டியதுதானே? பொதுமக்கள் பெருமளவிற்கு கூடும் இந்த பகுதியில், தாக்குதலை நடத்த அனுமதித்தது ஏன்?

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே, வன்முறையில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு தோன்றாதா?

ஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.

நன்றி

கடவுளும் இப்போது விரக்தியில்!


இன்றைக்கு உலகம் இருக்கும் நிலை இதைப் படைத்த இறைவனையே கூட விரக்தி நிலைக்கு கொண்டு சென்று விடும். அவருடைய சிந்தனை இப்போது எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

"ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் காட்டும் அன்பேதான் நான் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எனக்கு வழங்கப் பட்ட பெயரை தமது கட்சியின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் ஒரே நாட்டில் கூடவே வாழும் மக்களை (மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களை) துன்புறுத்தி அடித்து விரட்டுகிறார்கள்.

எளிய விலங்கினமான அணிலிடமும் கூட அன்பு காட்ட வேண்டும் என்று உலகிற்கு உணர்த்திய என்னுடைய பெயரை அமைப்பின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் வன்முறையில் இறங்கி பெண்களையும் கூட தாக்குகிறார்கள்.

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள்" என்று சொன்ன எனது தூதரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் , இன்றைக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் கழுத்தையே வெட்டி எறிகிறார்கள்.

பிற மதத்தவரிடமும் அன்பு காட்டு என்று சகோதரத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த அனுப்பப் பட்டவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர் இன்று உலக மக்களையெல்லாம் கொல்லத் துடிக்கிறார்கள்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் வாழும் மக்களுக்கு அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சற்றே வேறுபட்ட வழிவகைகள் வகுக்கப் பட்டு இருந்தாலும், இலக்கு ஒன்றேதான் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்குறீர்கள்?

யானையிடம் யானை மொழியில்தான் போதிக்க வேண்டும், எலியிடம் அது புரிந்து கொள்ளும் வகையில்தான் விளக்க வேண்டும் என்ற எளிய தத்துவம் ஏன் விஞ்ஞானத்தில் வெற்றி பெற்ற உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை?

வாழுங்க என்று அனுப்பப் பட்ட நீங்கள் ஏனப்பா இப்படி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாக நினைக்கிறீர்கள்?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்த கதையாய், பெண்ணுக்காக போர், மண்ணுக்காக போர், பொன்னுக்காக போர் என்ற நிலையெல்லாம் போய், இன்றைக்கு என் பெயர் சொல்லியும் அடித்துக் கொள்கிறீர்களே?

போதும்பா போதும். எல்லாத்தையும் நிறுத்திக்குங்க. முதல்ல மனசுல இருந்து "மதத்த" விலக்கிடுங்க. தேவைப் பட்டா என்னக் கூட மறந்துடுங்க.

போங்கப்பா! போயி அவங்கவங்க பொழப்ப பாருங்க! குழந்தை குட்டி குடும்பத்த நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சி பண்ணுங்க!

மத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாத மனம்தான் உசந்த மதம்னு சொல்லலாம்னு பாத்தா, அந்த (புது) பேரச் சொல்லிக்கிட்டும் அடிச்சுகுவீங்களே? நான் இப்ப என்ன பண்ணுவேன்?"

நன்றி

Thursday, February 19, 2009

தங்கம் ஜொலிக்குமா?


சில காலம் முன் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. விண்ணை முட்டும் பங்கு சந்தைகள், வருவாயில் கொழித்த வணிக நிறுவனங்கள், சம்பளத்திற்கு மேல் போனஸ்கள் பெற்ற தொழிலாளிகள் என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கமும் செழிப்பில் இருந்தது. ஆனால், ஒரு வருடத்தில் நிலைமை தலைகீழ் ஆகி, பல விஷயங்கள் மண்ணோடு மண்ணாகி, இன்றைய தேதியில் மின்னுவது பொன் மட்டுமே. இந்த நிலை தொடருமா என்றும் தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா என்று இங்கு பார்க்கலாம்.

முதலில் தங்கத்துக்கே உரிய அரிய குணாதிசியங்களைப் பற்றி பார்ப்போம்.

தங்கம் வசீகர குணங்கள் கொண்ட ஒரு அரிய வகை உலோகம். இதன் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே, மனிதரின் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே தங்கத்திற்கு என்று ஒரு தனி மதிப்பு இருந்து வந்திருக்கிறது. காகித கரன்சி அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகள் வரை தங்கமே வணிகத்திற்கான ஒரு நாணயமாக பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தங்கத்திற்காகவே பல படையெடுப்புக்கள் கூட நடந்திருக்கின்றன. இந்திய வரலாற்றின் முதல் அன்னியப் படையெடுப்பாகக் கருதப் படும், அலெக்சாண்டர் கூட இந்தியாவின் தங்கத்திற்கு ஆசைப் பட்டுத்தான் வந்ததாக கூறப் படுகிறது.

இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்திற்கும் இதர வகை அசையும் சொத்து வகைகளுக்கும் (Liquid Assets) ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அதாவது, கரன்சி, பங்குகள், வைப்புத் தொகைகள் ஆகியவை தனக்கென ஒரு சுய மதிப்பு கொண்டிருக்க வில்லை. சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கரன்சியின் மதிப்பு அதை வெளியிடும் அரசாங்கத்தின் வலிமையை பொருத்து அமைகிறது. பங்கின் மதிப்பு அதை வெளியிட்ட நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ளது. வங்கி வைப்பு தொகைகள் கரன்சி மற்றும் வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே தன் சுயமதிப்பை அடைகின்றன.

ஆனால், தங்கத்திற்கு மட்டுமே "சுய மதிப்பு" என்று தனியாக ஒன்று உள்ளது.

இதன் காரணமாகவே உலக பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து மற்ற முதலீடுகளின் வருங்கால வரவுகள் பற்றி சந்தேகங்கள் எழுந்ததும், வர்த்தகர்கள் தங்கத்திற்கு மாறி விட்டார்கள். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஒரு வருடத்தில் (தொழிற் துறைகளில்) புன்னகைகள் மறைந்து போனதுதான் பொன்னகைகளின் மதிப்பு கூடியதற்கு முக்கிய காரணம்.

இப்போது, கடந்த சில நாட்களில் வெகு விரைவாக தங்க விலை ஏறியதற்கான வர்த்தக ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.

அமெரிக்காவின் பொருளாதார மீட்பு திட்டம் சந்தைகளை திருப்தி படுத்தாதது.

மற்ற சந்தைகளின் போக்கு பற்றிய குழப்பங்கள் ஏற்பட்டது.

பொருளாதார மீட்பு திட்டத்திற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்க அரசு புதிய டாலர் கரன்சிகளை அச்சடிக்கும் என்ற பயம் எழுந்தது.

மேற்கண்ட பயங்களையும், குழப்பங்களையும் உபயோகப் படுத்தி குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதற்காக, குறுங்கால வர்த்தகர்கள் பெருமளவுக்கு இந்த சந்தையில் நுழைந்தது.

உபரியாக ஒரு உள்நாட்டு காரணம்: இந்திய அரசின் அதிகமான நிதிப் பற்றாக் குறையின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவுக்கு குறைந்து போனது. இதனால் டாலர் மதிப்பில் ஏற்கனவே உயர்ந்து போன தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் கணக்கிடும் போது இன்னும் கூடிப் போனது.

இந்த விரைவான உயர்வு தொடருமா என்ற கேள்விக்கான விடையினை, இதே போல விரைவாக வானளவு உயர்ந்து பின் அதே வேகத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்த பங்கு சந்தை, கச்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோக சந்தைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தங்க சந்தையில் பொருளாதாரப் போக்கில் ஒரு தெளிவு ஏற்படும் வரை மட்டுமே இந்த விரைவான வளர்ச்சி தொடரும். ஓரளவுக்கு பொருளாதர தெளிவு கிடைத்தவுடன், தங்கத்தின் விலையில் ஒரு தேக்க நிலையே ஏற்படும்.

நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்று கேட்பவர்களுக்கான விடை.

முதலில் சாதக அம்சங்கள்

தங்கத்தின் மேல் ஆசை மனிதனுக்கு என்றுமே குறையாது.

சுற்றுப் புற சூழல் பாதிப்பு மற்றும் அதிக பராமரிப்பு செலவு காரணமாக பெருமளவு பழைய தங்கச் சுரங்கங்கள் மூடப் பட்டு வருகின்றன. அதே அளவிற்கு, புதிய தங்க சுரங்கங்கள் கண்டறியப் பட வில்லை.

உலகெங்கும் அரசாங்கங்கள் பெருமளவு கரன்சி நோட்டுக்கள் அச்சடிப்பதால், நிரந்தர நாணயமான தங்கத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

இப்போது பாதக அம்சங்கள்.

தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாக பொருளாதார நிபுணர்கள் எப்போதுமே ஏற்பதில்லை. காரணம், தங்கத்தினால் தனிப் பட்ட முறையில் பணத்தை உருவாக்க முடியாது. (உதாரணம்: பங்கு - டிவிடென்ட், வைப்புத் தொகை - வட்டி, ரியல் எஸ்டேட் - வாடகை).

வரலாற்று ரீதியாக நீண்ட கால அடிப்படையில், தங்கத்தின் மதிப்பின் வளர்ச்சி (பணவீக்கம் அட்ஜஸ்ட் செய்யப் பட்டால் - Inflation Adjusted Return) மிகவும் குறைவு.

தங்கத்தை வாங்குவோரால், அது ஒரு செலவினமாகவே கருதப் படுகிறது. எனவேதான், தங்கத்தின் விலை ஏறும் போதெல்லாம் அதற்கான தேவை குறைந்து போகிறது. உதாரணமாக, தங்கத்தை உலகிலேயே அதிகம் செலவிடும் நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு 24 டன் இறக்குமதி செய்யப் பட்ட தங்கம், இந்த ஆண்டு வெறும் இரண்டு டன் மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.

இதனால், மற்ற முதலீட்டு சந்தைகளைப் போல விலை ஏறினால் தேவை அதிகரிக்கும் என்ற வர்த்தகக் கோட்பாடு இங்கு செல்லாது. எனவே தங்கத்தின் விலை ஒரு சுழற்சி முறையில் உயருமே தவிர நேர்கோட்டில் வளர வாய்ப்புக்கள் குறைவு.

ஆக மொத்தத்தில் தங்கம் மற்ற சந்தை (வாழ்க்கை) அபாயங்களில் இருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ள (To moderate the Investment Risk) உதவும் ஒரு உபமுதலீடாக மட்டுமே இருக்க முடியும்.

பொன்னகையைக் கொண்டு புன்னகையை பெற முடியும் என்று நம்புவோர் குறிப்பிட்டத் தொகையை ஆபரணங்களாக முதலீடு செய்யலாம். மற்றவர்கள், தங்க பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்யலாம்.

தமது மொத்த முதலீட்டில் (Investment Mix) சுமார் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை மட்டுமே தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

நன்றி.

Wednesday, February 18, 2009

அஜ்மல் கசாப் மீதான பாகிஸ்தானின் குற்றப்பத்திரிக்கை எப்படி இருக்கும்?


மும்பை தாக்குதலின் போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீது குற்றப் பத்திரிக்கை பாகிஸ்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று சமீபத்தில் அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்த குற்றப் பத்திரிக்கை மற்றும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்திய அரசிடம் கோரும் விண்ணப்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு கற்பனை.

"அஜ்மல் கசாப் ஆகிய உங்கள் மீது சாட்டப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே.


குற்றச்சாட்டு எண் 1


தலிபான் தீவிரவாத சட்டம், இந்தியத் தாக்குதல் பிரிவின் கீழ் ,

சம்பவம் நடந்த அன்று, கடமையை சரிவரச் செய்யத் தவறியது,

கொலை கணக்கு குறைந்து போனது,

கொடுத்த வேலையை சரியாக செய்யாமல், குண்டுக் காயம் பட்டுக் கொண்டு, அதன் காரணமாக கூட்டாளி தாக்கப் பட்ட போது உதவி செய்ய முடியாமல் போனது,

இந்திய போலீசிடம் மாட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது கடமை தவறியவர் என்ற கடுமையான குற்றச் சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.


குற்றச்சாட்டு எண் 2


லஸ்கர்-தோய்பா பயங்கரவாத சட்டம், ஐ.எஸ்.ஐ, திட்டம் தீட்டும் பிரிவின் கீழ் ,

இந்தியப் போலீசிடம் மற்றும் மேலை நாட்டு புலனாய்வு அதிகாரிகளிடம் தான் ஒரு பாகிஸ்தானியன் என்று ஒப்புக் கொண்டது,

பாகிஸ்தானில்தான், இந்த தாக்குதலுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன என்று விளக்கம் கொடுத்தது,

தான் ஒரு பங்களாதேசத்தையோ அல்லது வேறு ஒரு நாட்டையோ சேர்ந்தவன் என்று பொய் விளக்கம் கொடுக்கத் தவறியது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது தேச விரோத மற்றும் காட்டி கொடுத்த குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.


குற்றச்சாட்டு எண் 3


அல்கொய்தா சட்டம், தீவிரவாத பயிற்சி பிரிவின் கீழ் ,

தந்தை தாய் மற்றும் இருப்பிடம்,

சாச்சா, போச்சா என்று திட்டம் தீட்டியவர் பெயர்,

தீவிரவாதப் பயிற்சி கொடுக்கப் பட்ட இடம்

என அனைத்து விஷயங்களைப் பற்றியும் (மறந்து போகாமல்) துல்லியமாக தகவல் அளித்ததன் மூலம், நீங்கள் எங்கள் நாட்டவர் அல்ல என்று நிரூபிப்பதற்காக நாங்கள் போட்ட நாடகங்களை தவிடு பொடியாக்கியது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது தேச அவமதிப்பு குற்றம் சாட்டப் படுகிறது."


இந்திய அரசுக்கு ஒரு விண்ணப்பம்


இந்த குற்றச் சாட்டுகள் பற்றி தெளிவான ஒரு நீதி விசாரணை நடத்தப் பட வேண்டியிருப்பதால், இவனை ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் வலியிருத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பின்குறிப்பு 1: எங்கள் நீதிமன்றங்களின் நியாயமான போக்கு பற்றி யாரும் சந்தேகப் பட வேண்டியதில்லை. ஆனானப் பட்ட அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானையே குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது எங்கள் நீதிமன்றம்.

பின்குறிப்பு 2 : ஏன் தலிபான், லஸ்கர் தோய்பா, அல்கொய்தா சட்டங்களை உபயோகப் படுத்துகிறீர்கள், ஏன் பாகிஸ்தானிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில்.

"எங்கள் நாட்டில் பின்பற்றப்படும் வெவ்வேறு சட்டங்களிலேயே மிகவும் வலுவான சட்டங்களின் படியே நாங்கள் குற்றவாளியை தண்டிக்க விரும்புகிறோம்."

நன்றி.

Tuesday, February 17, 2009

மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?


பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


(Courtesy:econjournal.com)

ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.

ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய "கரன்சி" நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.

எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை "மறைமுக வரி விதிப்பு" என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற "துண்டு" சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் "துண்டுகளின்" பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)

நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.

நன்றி.

Monday, February 16, 2009

பிரச்சினைகளும் தீர்வுகளும்


நம்மில் பலரும் பலவிதமான பிரச்சினைகளை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்களில், சில பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று விழி பிதுங்கிப் போகிறோம். ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி ஒரு நடைமுறை அனுபவக் கட்டுரை படித்தேன். அது தமிழில் இங்கே.

சில உண்மை பிரச்சினைகளும் அவற்றை தீர்ப்பதற்கு முன்வைக்கப் பட்ட தீர்வுகளும் இங்கே.

முதல் பிரச்சினை: பல ஆண்டுகளுக்கு முன்னர், விண்ணில் மனிதன் கால் பதித்த போது எழுந்த பிரச்சினை இது. அதாவது, வான்வெளியில் புவி ஈர்ப்பு விசை (Gravity) என்று ஒன்று இல்லாததால், பேனாவை உபயோகப் படுத்தி எழுத முடிய வில்லை.

தீர்வு ஒன்று: நாசா விஞ்ஞானிகள் இதற்காக சுமார் பத்து ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சி செய்து, புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் கூட எழுதக் கூடிய பேனா ஒன்றை கண்டுப் பிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்கு ஆன செலவு சுமார் அறுபது கோடி ரூபாய்.

தீர்வு இரண்டு: ரஷ்ய விண்வெளி பயணிகள், வான்வெளியில் பேனாவிற்கு பதிலாக பென்சில் உதவி கொண்டு எழுத ஆரம்பித்தனர்.

இரண்டாவது பிரச்சினை: ஒருமுறை ஜப்பானிய சோப் நிறுவனம் விற்பனை செய்த சோப் உறைக்குள் சோப் கட்டி இல்லாமல் போய் விட்டது. இது குறித்து நுகர்வோரிடம் இருந்து புகார் எழுந்தது. இந்த நிகழ்வு அந்த நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கருதிய நிறுவனத் தலைமை, இது போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க தரக் கட்டுப்பாட்டு துறைக்கு ஆணையிட்டது. அப்போது, இரண்டு விதமான தீர்வுகள் வெவ்வேறு அலுவர்களால் முன் வைக்கப் பட்டது.

தீர்வு ஒன்று: ஒரு எக்ஸ் ரே இயந்திரம் தயாரிக்கப் பட்டு, அதன் ஊடே விற்பனைக்கு செல்லும் அனைத்து சோப் உறைகளையும் அந்த செலுத்துவது. அந்த எக்ஸ் ரே திரையை இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க இரு ஊழியர்களை நியமிப்பது.

தீர்வு இரண்டு: விற்பனைக்கு செல்லும் சோப் உறைகள் செல்லும் பாதையில் ஒரு காற்றாடியை வைப்பது, ஒருவேளை உறைக்குள் சோப் கட்டி இல்லாவிடில், அது (லேசாக இருப்பதால்) காற்றில் அடித்து செல்லப் பட்டு விடும்.

இந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது:

பிரச்சினைகளை விட அவற்றுக்கான தீர்வுகளே முக்கியமானவை.
எனவே பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.
அந்த தீர்வுகள் எளிமையானதாகவும், எளிதில் நடைமுறை படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நன்றி.

Saturday, February 14, 2009

காளையும் கரடியும் சந்தித்தால்?


வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.

வரப் போகிற இடைக்கால மத்திய பட்ஜெட்டில் சந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் புதிய வரி விலக்குகளும், தொழிற் துறைக்கான சில சலுகைகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த வாரம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது சந்தைகள் மேலே சென்றதும், F&O பிரிவில் அதிகமான திறந்தநிலை ஆர்வம் (Open Interest) ஏற்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டியவை. தொழிற்துறை உற்பத்தி சரிவைக் கண்டு (-2.00%) உள்ளூர் நிலைமை திருப்தி இல்லாத நிலையிலும் கூட நாம் சென்ற வாரம் குறிப்பிட்டது போல நிபிட்டி 2900 புள்ளிகளை விட்டு அதிகம் விலகாமல் இருந்தது முக்கியமான ஒரு விஷயம். மேலும், சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.

முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற ரியல் எஸ்டேட், வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.

பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டதின் எதிரொலியாக, கரன்சி வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக உயர்ந்தது.

வரும் வார நிலவரம்

வரும் வாரம் மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில், தொழிற் துறை, ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பில் வருகின்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஓரளவுக்கு சிறப்பாக இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், சந்தைகள் ஏற்கனவே ஏகப்பட்ட அளவுக்கு முன்னேறி இருப்பதால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏற்கனவே நாம் இங்கு தெரிவித்திருந்த படி, நிபிட்டி 3050 புள்ளிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும். ஆனால், அதற்கு மிகுந்த எதிர்ப்பும் காணப் படும். எனவே, வர்த்தகர்கள் இந்த அளவில் தமது திறந்த நிலைகளை ஓரளவுக்கு சமன் செய்து கொள்வது நல்லது. மேலும், 2850 ஐ ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலையை தொடரலாம். புதிய வர்த்தக நிலை எடுப்பதில் அதிக அபாயங்கள் இருந்தாலும் நிபிட்டி 3200 வரை கூட (3050 ஐ முறிக்கும் பட்சத்தில்), "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல" என்பவர்கள் 2850 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு புதிய வர்த்தக நிலை எடுக்கலாம்.

முதலீட்டாளர்கள், (கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வருவதின் அடிப்படையில்) பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க பரிசீலிக்கலாம். வங்கித் துறை, இரும்புத் துறை, நுகர்வோர் துறை பங்குகளை (பட்ஜெட் திட்டங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில்) வர்த்தகர்கள் கவனிக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி

Friday, February 13, 2009

ஆதலினால் காதல் செய்வோம்


வாலண்டைன் பிறப்பதற்கு முன்பு யாருமே இந்தியாவில் காதல் செய்யவில்லை. அவர்தான் இந்தியாவிற்கு காதலை அறிமுகம் செய்தார். எனவே அவர் காதலுக்காக உயிர் நீத்த நன்னாளில் காதல் செய்யா விட்டால் இந்தியாவில் காதல் மரித்து விடும் என்பது போல ஒரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், காதலர் தினத்தை தடுத்து விட்டால் இந்தியாவின் அத்தனை பண்பாட்டு பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது போல இன்னொரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையே ஊடக வியாபாரிகள் "சந்திலே சிந்து" பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என்று எனக்கு தெரிய வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக ராமாயணம் என்ற காவியம் எழுதப் பட்ட இதே பூமியில்தான் காமசூத்ரா எனும் காதல் இலக்கணமும் இயற்றப் பட்டது. அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, சமூகவியல் என்று உலகின் அத்தனை தத்துவங்களையும் உள்ளடக்கிய திருக்குறளிலேயே காதலுக்கு என்று ஒரு பகுதியும் ஒதுக்கப் பட்டது. காதலும் வீரமுமாக வாழ்ந்த பண்டைய தமிழர் அகநானூறு என்றும் புறநானூறு என்றும் தனித்தனியே வைத்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக காந்தர்வ விவாகம் என்ற பெயரில் காதல் திருமணங்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களாலேயே வெகுவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

எந்தையும் தாயும் கொஞ்சி மகிழ்ந்த இந்த பூமியில் மேற்கத்திய வியாபாரிகளின் மற்றுமொரு வியாபார தந்திரமாக உள் நுழைக்கப் பட்டதே இந்த காதலர் தினம். இந்த தினம் வருகின்ற போதெல்லாம் கலாச்சார காவலர்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளும் சிலர் பண்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் வாதம் இந்த குறிப்பிட்ட நாளில், காதலர்கள் ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு கேள்வி, இந்திய திரைப்படங்களை விடவா இவர்கள் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர்? கலாச்சார காவலர்களின் தலைவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமாக உள்ள திரைத் துறையினரை கொஞ்சம் (செல்லமாகவது) தட்டிக் கேட்கலாமல்லவா? மேலும், இவர்களின் இந்த தாக்குதல்களால், காதலர் தின வியாபாரிகளுக்கு இலவச விளம்பரம் அல்லவா கிடைக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பெண்கள் விடுதலை, பின் நவீனத்துவம் என்ற பெயரில் பப் கலாச்சாரத்தை காப்பாற்றியே தீருவோம் என்று கோஷமிடும் குழுக்களுக்கு ஒரு கேள்வி. எத்தனை குடும்ப பெண்கள் பப் செல்கிறார்கள்? பெண்களின் உண்மையான சமூக முன்னேற்றம் பப்களிலா உள்ளது? மத்தியதர கீழ்த்தட்டு பெண்களின் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளுக்காக போராட முன்வருவார்களா இந்த பெண்ணியவாதிகள்?

பெண்களை தாக்குவது எந்த அளவுக்கு பேடித்தனமான காரியமோ அதே அளவுக்கு வக்கிரமானது நவீனத்துவம் பெண்ணியம் என்ற பெயரில் இளஞ்சிவப்பு உள்ளாடைகள் அனுப்பி வைப்பது.

ஆக மொத்தத்தில் இந்த இரண்டு கூட்டமும் சுய லாபத்துக்காக அடிக்கின்ற கூத்துக்களை நாம் முழுமையாக புறந்தள்ளி விடலாம்.

காதலர் தினம் என்ற கலயம் புதிது என்றாலும் காதல் என்ற கஞ்சி பழையதுதானே. நமக்கு முக்கியம் கஞ்சிதானே. எனவே எவ்வளவோ அந்நிய கலாச்சார தாக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை "இந்தியப் படுத்தி" ஏற்றுக் கொண்ட நாம் இதையும் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

ஆதலினால் காதல் செய்வோம்.

நமக்கு வாழ இடம் தந்த இந்த மண்ணை காதல் செய்வோம்.
நமக்கு அறிவைத் தந்த தமிழ் மொழியைக் காதல் செய்வோம்.
நமக்கு உயிர் தந்த பேசும் தெய்வங்களை காதல் செய்வோம்
நம் வாழ்விற்கு பொருள் தந்த (நாம் பெற்ற) செல்வங்களை காதல் செய்வோம்.
நமக்கு உறவெனும் இன்பம் தந்த சகோதர சகோதரிகளை காதல் செய்வோம்
நமக்கு தோள் கொடுக்கும் நண்பர்களை காதல் செய்வோம்

இறுதியாக, ஆனால் முக்கியமாக நம் வாழ் நாளெல்லாம் கூடவே வரும் வாழ்க்கைத் துணையை காதல் செய்வோம்.

ஆதலினால் காதல் செய்வோம்.

காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி

Wednesday, February 11, 2009

இந்தியா தாக்குப் பிடிக்குமா?


இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம்.

சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது).

சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதே சமயம், பல தனியார் அமைப்புக்கள், இந்தியா இன்னும் கூட குறைந்த அளவே வளர்ச்சிப் பெறும் என்று கணிக்கின்றன. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் போது இந்த வளர்ச்சி சாத்தியமான ஒன்றா என்றும் அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு மிதமான வளர்ச்சி சாத்தியமா என்றும் பார்ப்போம்.

ஒரு நாட்டின் "மொத்த உள்நாட்டு உற்பத்தி" (GDP) பொதுவாக கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப் படுகிறது.

GDP = தனியார் (மக்கள்) செலவிடும் தொகை + அரசு செலவிடும் தொகை + முதலீடுகள் + நிகர ஏற்றுமதி

இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், அதை விடுத்து மீதமுள்ள முக்கிய மூன்று காரணிகள் வருங்காலத்தில் எப்படி மாற்றம் பெறும் என்று பார்ப்போம்.

தனியார் (மக்கள்) செலவிடும் தொகை:

வேலையிழப்பு, வருமான பாதிப்பு, தொழிற்துறையில் குறைந்த லாபம் அல்லது நட்டம் போன்ற காரணங்களால், நடப்பு மற்றும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் தனியாரின் பங்கு குறைவாகவே காணப் படும் என்று தெரிகிறது. அதே சமயம், மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம். தனி மனிதருக்கான பெரும்பாலான தேவைகள் (குடியிருப்பு, தொலைத் தொடர்பு, கல்வி, வாகனங்கள் போன்றவை) இன்னமும் கூட இந்தியாவில் பூர்த்தி ஆகாமல் இருப்பதும், தனியார் செலவினத்தை சற்று அதிகமாகவே வைக்கும் என்று நம்பலாம்.

அரசு செலவிடும் தொகை

இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், இந்திய அரசாங்கங்கள் எப்போதுமே தாராள செலவுக்கு பேர் போனவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியில் அரசின் நேரடி பங்கு குறைந்து போய் விட்ட நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செலுத்த அதிகப் படியான அரசு செலவினம் இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது போக மாநில அரசுகளும் அதிக செலவு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு நல திட்டங்கள், ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்க்கு அதிக சம்பளம், சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த பணம் செலவு செய்யப் படும் என்று தெரிகிறது. இத்தகைய அதிகப் படியான அரசு செலவினங்கள், மேலே சொன்னபடி, தனியார் செலவினம் குறைந்து போவதினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.

முதலீடுகள்:

தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற வருங்காலம் ஆகியவற்றின் காரணமாக, புதிய முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பது சந்தேகமான ஒன்று. மேலும், வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீழ்ச்சி பெற்றுள்ள பங்கு சந்தை மற்றும் கடன் கொடுக்க தயங்கும் வங்கிகள் காரணமாக "மூலதனம் திரட்டல்" என்பது ஒரு சிரமமான காரியமாகவே தெரிகிறது. அதே சமயம், அதிக அளவு கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும், மத்திய நிதி நிறுவனங்கள் வாயிலாக (IIFCL போன்றவை) நீண்ட கால (அடிப்படை கட்டமைப்புக்கான) கடன் வசதிகள் செய்து தருவதும் கவனிக்கத் தக்கது.

பல மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று விட்டிருப்பதால், அந்த நாடுகளின் அரசாங்கங்கள் அதிக அளவில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்தியாவிலோ நிறைவேற்ற வேண்டிய பணிகள் (உதாரணம்: குடிநீர் வசதி, கல்வி வசதி,சாலை வசதி, துறைமுக வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி என்று சொல்லிக் கொண்டே போகலாம்). இவற்றுக்கெல்லாம் அரசு சரியான முதலீட்டு செலவுகள் செய்யுமானால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இப்போது, எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஓரளவுக்கு பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், இந்த வளர்ச்சி சாத்தியமே என்று தோன்றுகிறது. மேலும், ஏற்றுமதியையும் உலக பொருளாதாரத்தையும் சார்ந்திராத இந்த துறை மிதமான வேகத்தில் (பருவ மழை சரியாக இருக்கும் பட்சத்தில்) இன்னும் சில ஆண்டுகள் வளரும் என்று கருதப் படுகிறது.

தொழிற்துறை இந்த பொருளாதார வீழ்ச்சியினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், மோசமான காலம் முடிந்து விட்டதாகவே சில விற்பன்னர்கள் கருதுகின்றனர். சாலை திட்டங்கள், மின்சார உற்பத்தித் திட்டங்கள் போன்றவை இந்த துறைக்கு கை கொடுக்கும் என்று நம்பலாம்.

வெளிநாட்டு ஏற்றுமதியைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் என்று தோன்றினாலும், உள்நாட்டை சார்ந்த சேவை நிறுவனங்கள் (கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு போன்றவை) மிதமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம், அகலக் கால் வைத்த நிறுவனங்கள் தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள மிக அதிகமான ஊதியக் குழு நிலுவை பணம் விரைவில் புழக்கத்திற்கு வரவிருப்பது உள்ளூர் சேவைத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆக மொத்தத்தில், கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் காணப் பட்ட அசுர வளர்ச்சியினை இன்னும் சில காலத்திற்கு எதிர்பார்க்க முடியாதென்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், உலகின் பல நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?

நன்றி.

Tuesday, February 10, 2009

உடல்நிலை சரியில்லையா? வோட்கா மற்றும் பீர் சாப்பிடுங்கள்!


என்னடா! இது ஏதோ கேரளாவில் உள்ள ஒரு ஆரிய வைத்தியசாலையில் நடைபெறும் ராஜ வைத்தியம் போல தெரிகிறதே என்று பார்க்கிறீர்களா? இந்த வைத்தியம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தீவிரவாதிக்கு நடைபெறும் சிறைச்சாலை வைத்தியம். சற்று விரிவாக பார்ப்போம்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப் படும் இந்திய கரன்சிகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் மோசடி கும்பலின் முக்கிய புள்ளி மொஹம்மட் ரஷித் குஞ்சு. இவன் கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் தேதி மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப் பட்டு ராய்காட் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டான். ஆனால், உடல்நிலை சரியில்லை என்று அவன் தெரிவித்ததை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அதே நாளில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டான்.

அறைக்கு வெளியே இருபத்து நான்கு மணி நேர போலீஸ் காவல். உள்ளேயோ அவனுக்கு ராஜ உபசாரம். தினமும் அவனது மனைவி மற்றும் மகன் அவனை வந்து பார்த்து செல்வதோடு பீர், வோட்கா மற்றும் சிகரெட் போன்றவற்றையும் சப்ளை செய்து வந்தனர்.

இப்படி ராஜபோகமாக வாழ்ந்தவனின் சந்தோசத்திற்கு வேட்டு (இடைவேளை மட்டுமே?) அவனுடைய இரண்டு கூட்டாளிகள் மூலம் வந்தது. மும்பையில் கள்ள நோட்டு எடுத்துச் சென்ற அந்த இருவரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரிக்க அவர்களுடைய தலைவனான குஞ்சு பற்றிய தகவல் கிடைத்தது.

மேற்கொண்டு இந்த குற்றம் குறித்து இவனிடம் விசாரிக்க மருத்துவமனை வந்த புலனாய்வு அதிகாரிகள் அங்கு இவனது நிலையை கண்டு அதிர்ந்து போயினர்.

"ரூம் முழுக்க பீர், வோட்கா பாட்டில்கள் மற்றும் மயங்கிய நிலையில் குஞ்சு."

கடுமையான தேச விரோத குற்றச் சாட்டு உள்ள இவன் அறையை சுற்றி 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ள அந்த அதிகாரிகள், குறிப்பிட்ட போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் தலைவரிடம் தெரிவித்ததாகவும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே, சத்யம் ராஜுவிற்கு சிறையில் சிறப்பு அந்தஸ்து வழங்கிய விவகாரம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு தேச விரோத குற்றச்சாட்டு உள்ள ஒருவன், எப்படி இது போன்ற சுகபோக வாழ்வை (நீதிமன்ற காவலில் இருக்கும் போதே) அனுபவிக்க நமது சட்டக் காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.

மேலும் யார் வேண்டுமானாலும், இது போன்ற கடுமையான குற்றச்சாட்டு உள்ள ஒருவனை வந்து பார்க்க முடியுமேயானால், இவனைப் போன்றவர்களால் வழக்கின் முக்கிய சாட்சியங்களை கலைப்பதுடன், தங்கள் தொழிலின் தலைமையகத்தை மட்டுமே மாற்றி கொண்டு முன் போலவே இயங்கவும் முடியுமே?

ஒரு வேளை, வெளியே பயந்து பயந்து திரிவதை விட, ஒரேயடியாக போலீசாரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு, உள்ளே போலீஸ் காவலுடன் ராஜ போக வாழ்வை அனுபவிக்கலாம், தமது தொழிலையும் தொடரலாம் என்ற நம்பிக்கையை தேச விரோதிகளுக்கு கொடுத்து, இவர்களை பிடிக்க வேண்டிய தங்கள் வேலையை சுலபமாக்கிக் கொள்ளலாம் என்று என்று நம் நாட்டின் காவலர்கள் நினைக்கிறார்களா என்று புரியவில்லை.

நன்றி (DNA India)

Monday, February 9, 2009

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?


அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம்.

முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் கண்ணில் படுகின்றவையையெல்லாம் வாங்கும் மக்கள், தளர்ச்சிக் காலத்தில், அத்தியாவசமற்ற பொருட்களை வாங்க சற்று தயங்குகிறார்கள். எனவே இநத நிறுவனங்களின் லாப விகிதம் பெருமளவு குறைந்து போய் விட்டது.

ரியல் எஸ்டேட் விலைகள் (வாடகைகள்) இன்னமும் கூட பெருமளவில் குறையாத நிலையில் நகரின் மையப் பகுதியில் பெரிய இடப் பரப்பில் (வாகனம் நிறுத்தும் வசதியுடன்) வணிக தளங்களை அமைக்க வேண்டியிருப்பது அதிக "முதல்" தேவையை உருவாக்கி பொருளாதார ரீதியாக இநத நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட அரங்குகள், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள், சேமிப்பு கிடங்கு என இவர்களுடைய அமைப்பு ரீதியான செலவுக் கணக்கு கூடிய அளவுக்கு வருமானம் பெருக வில்லை.

சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்த போது, சிறு வணிகர்கள் (நமது தெருவோர அண்ணாச்சி கடைகள்) பெருமளவு பயந்தனர். இநத நிறுவனங்களுக்கு எதிராக சில போராட்டங்கள் கூட நடத்தப் பட்டன. ஆனால், உண்மையில் இநத பெரிய நிறுவனங்களால், சிறு வணிகர்களுக்கு எதிராக (சிறிய நகரங்களில் மட்டுமல்ல, பெரிய நகரங்களில் கூட) பெரிய நிறுவனங்களால் போட்டி போட இயல வில்லை என்றுதான் கூற வேண்டும். சிறு வணிகர்களின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு முக்கிய காரணங்களில் சில கீழே.

"நுகர்வோருக்கு அருகாமையிலேயே இருத்தல், சிறிய கடன் வசதி அளித்தல், சிறிய அளவில் பொருட்கள் கிடைப்பது, அமைப்பு ரீதியான செலவினங்கள் குறைவு."

இவ்வாறு சிறு வணிகர்கள் கடும் போட்டி அளிப்பதால், பெரிய சில்லறை நிறுவனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு தனி ஆதிக்கம் செலுத்தவோ, பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களை பெறவோ முடிய வில்லை.

மேலும், தமது சங்கிலி தொடர் கிளைகளை அதி வேகமாக விரிவு படுத்திய இநத வணிக நிறுவனங்கள் இப்போது கடும் நிதிச் சிக்கலில் சிக்கி கொண்டன. வட்டி வீத உயர்வு மற்றும் வீழ்ச்சியடைந்த பங்கு சந்தைகள், புதிய முதல் திரட்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. பல தொடர் சங்கிலி சில்லறை நிறுவனங்கள் கடந்த காலாண்டில் (அதுவும் பண்டிகை காலத்தில்)பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது. பெரிய அளவில் தள்ளுபடி என்று செய்யப் பட்ட வியாபார தந்திரங்கள் பெருமளவிற்கு எடுபடவில்லை

ஆக மொத்தத்தில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இநத நிறுவனங்கள், தமது கிளைகளை மூடுவது, ஆட்குறைப்பு, வைத்திருக்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைப்பு, குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு என போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இநத நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இநத நிறுவனங்களை காப்பாற்றும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். இதே பொருளாதார தளர்ச்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் கூட பல கிளைகள் ஏன் சில பெரிய நிறுவனங்கள் கூட மூடப் படுவதை நாம் பார்க்க முடியும்.

நன்றி.

Sunday, February 8, 2009

எல்லை தாண்டுமா?


எதிர்பார்த்ததை விட மோசமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்திருப்பதாக முந்தைய வார இறுதியில் வெளியிடப் பட்ட தகவலின் அடிப்படையில் நமது சந்தைகள் சென்ற வாரத்தை ஒரு பெரிய சரிவுடனேயே துவங்கின.

பெரும்பாலான காலாண்டு நிதி அறிக்கைகள் வெளி வந்து விட்ட நிலையில் சந்தையின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புதிய காரணிகள் பெருமளவில் இல்லாத காரணத்தாலும், குறுகிய கால நோக்கில் சந்தையின் போக்கு குறித்து வணிகர்களிடையே நிலவி வரும் சந்தேகங்களினாலும் சென்ற வாரம் நமது பங்கு சந்தையில் வர்த்தகம் மிகவும் குறைந்தே காணப் பட்டது.

முந்தைய வாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நன்கு உயர்ந்திருந்த பங்குகள் கடந்த வாரத்தில் லாப நோக்குடன் விற்பனை செய்யப் பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தமது பங்குகளை (குறைந்த அளவில்) விற்றன. இனி, இந்திய தலைமை வங்கி வட்டி வீதங்களை குறைக்காது என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், இயந்திர உற்பத்தி துறைகளை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.டி.எல்.எப் நிறுவனத்தின் மோசமான காலாண்டு நிதி அறிக்கையும், ரியல் எஸ்டேட் பங்குகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். சிமெண்ட் துறை சார்ந்த நிறுவன பங்குகள் முன்னேற்றத்தை சந்தித்தன. கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு விவகாரத்தில் சாதகமான இடைக் கால தீர்ப்பைப் பெற்றதால், சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகிய குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் ஏற்றத்தை கண்டது. மொத்தத்தில் நமது சந்தை சென்ற வாரத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களையே சந்தித்து வந்தது. இறுதியாக, முக்கிய குறியீடுகளான நிபிட்டி மற்றும் சென்செக்ஸ் சிறிய அளவில் சரிவைச் சந்தித்தன. நிபிட்டி 2750 அளவில் நல்ல அரணைக் கொண்டிருந்தது.

வருகிற வாரம், ஒபாமா அவர்களால் அறிவிக்கப் படவிருக்கும் அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஏற்கனவே இந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக சந்தைகள் கடந்த வெள்ளிக் கிழமை நல்ல முன்னேற்றத்தை கண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரத்தில் நமது நாட்டில் பணவீக்கம் குறைந்திருப்பதும், மைய வங்கியின் தலைவரின் அறிக்கையும், வட்டி வீதங்கள் குறைக்கப் படலாம் என்ற மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையை சந்தை வர்த்தகர்களுக்கு தந்துள்ளன. மேலும் இந்திய மத்திய அரசால் வரும் வாரத்தில் அறிவிக்கப் படவிருக்கும் இடைக் கால நிதியறிக்கையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையும் வருகின்ற வாரத்தில் சந்தையை ஏற்ற நிலையில் வைக்க உதவும்.

வெகு காலமாகவே, ஒரு குறுகிய எல்லைகளுக்குள்ளேயே (2700 -2900) தடுமாறி வரும் நமது சந்தைகள் இந்த வாரம் மேல் எதிர்ப்பான 2900 அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார திட்டம் மற்றும் இந்திய (இடைக்கால) நிதி நிலை அறிக்கை ஆகியவை சந்தைகளுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் நிபிட்டி 3050 (3200) நோக்கி பயணம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்தே காணப் படும். வர்த்தகர்கள் 2750 அளவை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு நிபிட்டி குறியீடு மற்றும் பெரிய பங்குகளை வாங்கலாம்.

தொடர்ந்து இரு வாரங்களாக "முன்னேறி வரும் நாடுகளின் சந்தைகள்" முன்னேற்றத்தை கண்டு வருவதை தொடர்ந்து, நாணய சந்தையில் டாலர் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் கட்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பங்கு சந்தைகள் உயரும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Saturday, February 7, 2009

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?


ஒரு தாமதித்த மாலை நேரத்தில், இன்னும் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருந்தாலும், வேலை முடியாது என்று ஒரு தெளிவு பிறந்து, சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தப் பிறகு, அலுவலக இருக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் இடைப் பட்ட ஒரு சோம்பல் முறிக்கிற நேரத்தில் பிறந்த ஒரு சிந்தனை இது.

"எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? "

வெட்டேத்தியாக இருந்த நிலையில் இருந்து மாறி இப்போது ஒரு பொறுப்பான உத்யோகத்தில் அமர்ந்துள்ளோம்.

அபூர்வமாக பாக்கெட் மணி கொடுக்கும் அப்பா தந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை பத்திரமாக ஒரு பழைய பர்சில் வைத்து மகிழ்ந்த நம்மால், இன்று பர்ஸ் முழுக்க நோட்டுக்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் எல்லாம் இருந்தும் சந்தோஷம் பெற முடிய வில்லையே? அன்றைய ஒரு நூறு ரூபாய் (கல்லூரியில் திருப்பித் தந்த டெபாசிட் பணம்) தந்த மகிழ்ச்சியை விட இன்றைய பல ஆயிரம் சம்பளம் குறைவான மகிழ்ச்சியையே தருகிறதே, ஏன்?

தினத்தந்தி பேப்பரின் உதவியுடன் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்தெடுத்து பின்னர் அதனுடன் கலந்து அடிக்கும் ஒரு நாயர் கடை டீ தரும் திருப்தியை இன்றைய பிஸ்ஸா, பர்ஜர் போன்ற மேற்கத்திய உணவுகள் தருவதில்லையே?

இன்னும் கொஞ்சம் யோசனை செய்கிறேன்.

ஐம்பது கிலோமீட்டருக்கு மேல் தொடர்ந்து ஓட வேண்டுமென்றால், மெக்கானிக்கின் உதவி தேவைப் படுகிற ஒரு ஓட்டை பைக்கில் ஊர் சுற்றிய அளவுக்கு இன்று காரில் பயணம் செய்ய முடிய வில்லையே?

ஒரு ரயிலில் முன்பதிவு செய்யப் படாத பொது பெட்டியில் பொதுஜனத்துடன் பல நூறு கி.மீ. நின்று கொண்டே செய்த பயணத்தை விட இன்றைய வானூர்தி பயணமோ அல்லது குளிர்சாதனப் பெட்டி பயணமோ அதிக மகிழ்ச்சி தருவதில்லையே? அன்று உலகையே சுற்றி பார்த்து விட வேண்டுமென்ற வேட்கை இருக்க இன்றோ எந்த ஊருக்கு போவது என்ற ஒரு ஆயாச உணர்வு தோன்றுகிறதே, ஏன் இப்படி?

வாழ்க்கை மாறி விட்டதா? அல்லது நாம் மாறி விட்டோமோ?

முதன் முதலாக, மொபைல் போன் அதுவும் ப்ரீ பைய்டு கட்டணத்தில் யார் யாருகெல்லாமோ போன் செய்து நம்பர் கொடுத்தோமே? இன்று அலுவலக உபயத்தில் அன்லிமிட்டட் கால் செய்ய வசதியிருந்தும், எத்தனை பேர் நம்பர் நமக்கு ஞாபகமிருக்கிறது?

ஒரு சிறிய நண்பர் வட்டத்திற்குள்ளே கும்மாளமடித்த நாம், இப்போது அலுவலகம், தொழில் ரீதியான நண்பர்கள் என ஒரு ஒரு பெரிய கூட்டத்தின் நடுவே இருந்தாலும் அன்னியமாக உணர்கிறோமே, ஏன்?

ஒரு சிறிய வானத்திற்குள் பருந்தாக வட்டமிட்ட நாம், இன்று நமது வானம் விரிவடைந்து விட அதன் நடுவே ஒரு சின்னஞ்சிறு குருவியாக உணர்கிறோமோ? நம்மை சுற்றியுள்ள வானம் வளர்ந்த அளவிற்கு நமது எண்ணங்கள் விரிவடைய வில்லையோ?

நிதானமாக சிந்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்.

Friday, February 6, 2009

காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை!


காதலர் தினம் சீக்கிரம் வரட்டும். நமது காதலியை (காதலனை) ஒரு அசத்து அசத்தி விட வேண்டும் என்று காத்துக் கிடக்கும் காதல் கண்மணிகளே! உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

ஒரு காலத்தில் காதலுக்காக உயிர்துறந்த ஒரு சாமியாரின் (?) நினைவாக ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்தியாவிலும் மேற்கத்திய வியாபாரிகளால் புகுத்தப் பட்ட இந்த கொண்டாட்டத்திற்கு நமது உள்ளூர் கலாச்சார காவலர்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வரை சிவன் (சிவ சேனா) பேரை சொல்லி எதிர்ப்பு வந்து கொண்டிருந்தது. இப்போது சிவனுக்கு போட்டியாக ராமரும் (ராம சேனே) கிளம்பி விட்டார். (வருங்காலத்தில் அனுமாரும் கிளம்புவாரோ?)

"என்ன செய்து விடுவார்கள் இவர்கள்? மிஞ்சிப் போனால், உருட்டுக் கட்டையால் அடிப்பார்கள், கற்களை வீசுவார்கள். அவ்வளவுதானே? அடிகளையும் தாண்டி புனிதமானது எங்கள் காதல்" என்றெல்லாம் வசனம் பேசும் நண்பர்களே! இதுவரை கலாச்சார காவலர்கள் தந்த இது போன்ற தண்டனைகள் எல்லாவற்றையும் விட கடுமையான ஒரு தண்டனையை தர இப்போது ஸ்ரீ ராம சேனே தலைவர் முடிவெடுத்துள்ளார். அதாவது, காதலர் தினத்தன்று பொது இடங்களில் நெருக்கமாக இருப்பவர்களைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விடப் போகிறாராம். (கேட்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா?)

இதற்காகவே ப்ரோகிதர் சகிதமாக ஸ்ரீ ராம சேனேவின் ஐந்து குழுக்கள் மப்டியில் (குண்டாந்தடி, உருட்டுக் கட்டை இல்லாமல் வருவார்களோ?) பிப்ரவரி 14 ஆம் தேதி நகர வலம் வரப் போகிறார்கள். ஒருவேளை, காதலர்கள் மைனர்களாக இருக்கும் பட்சத்தில் போலீஸ் மூலம் தகுந்த எச்சரிக்கை செய்து அனுப்பப் படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காலையில் வெளியே போகும் மேஜர் பிள்ளைகள் மாலையில் திருமணம் முடித்து திரும்புவதை விரும்பாத பெற்றோர்கள் அவர்கள் பெற்ற செல்வங்களை அன்றைய தினம் வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். (கல்யாண மாலை, நவீன சுயம்வரம், பாரத மாட்ரிமோனி, உள்ளூர் புரோக்கர் போன்றவற்றையெல்லாம் முயற்சித்து வெற்றி பெறாத பெற்றோர்கள் ஒரு ட்ரையல் பேசிஸ் முறையில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன்)

ஸ்ரீ ராம சேனேவின் தலைவர் (முத்தாலிக்) கூட ஒரு திருமணமாகாதவர் என்ற முறையில் அவருக்கு காதலை பற்றி என்ன தெரியும் என்ற கேள்விக்கு தனக்கும் காதலைப் பற்றி நன்றாகவே தெரியும் என்று பதிலளித்துள்ளார். (ஒரு வேளை நன்கு தெரிந்ததனாலேயே பிரம்மச்சாரியாக உள்ளாரோ?)

ஆக மொத்தத்தில், "ஒன்லி லவ் நோ மேரேஜ்" என்ற உயர்ந்த பாலிசி (இதும் கூட ஒரு நல்ல இன்சூரன்ஸ் பாலிசிதான்) கொள்கைகள் உள்ளவர்கள் அன்றைய தினம் யாராவது ப்ரோகிதர் சகிதமாக தொடரும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருந்தால் தப்பிப் பிழைக்கலாம்.

இதுவரை காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த நாம், அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள திருவாளர் முத்தாலிக்கு (அவரை மாதிரி ஆட்களும் நமக்கு தேவை இல்லையா? நமக்கும் பொழுது போக வேண்டாமா?) ஒரு போனஸ் எச்சரிக்கை கொடுத்து விடலாம்.

"பார்த்து முத்தாலிக் சார்! ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். அன்றைய தினம் இசகு பிசகாக இருக்கும் சில நெருக்கமான காதலர்களுக்கு திருமணம் செய்வதற்கு முன்னர் அவர்களின் உண்மையான சொந்த கணவன் மற்றும் மனைவியிடம் அனுமதி வாங்கி விட வேண்டியிருக்கும். எதற்கும் முன்னமே அவர்கள் திருமணமானவர்களா? யாருக்கு யார் கணவன் மனைவி என்று நன்கு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒரு சினிமாவில் எங்க ஊரு பத்ம ஸ்ரீ விவேக் சார் அடிபடுவது போல நீங்களும் அடி பட வேண்டியிருக்கும்"

நன்றி.

Thursday, February 5, 2009

மென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக் கதை.


ஒரு மாவட்டத்தில் அடிக்கடி திருட்டுப் போய் கொண்டிருந்தது. அந்த மாவட்டத்தில் குறைந்த அளவு போலீசார் இருந்ததால், போலீஸ் தலைவர், மாவட்டத்திலுள்ள ஊர் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அந்தந்த ஊரில் உள்ளூர் ஊர்காவல் படையை அமைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அந்த ஊர் பஞ்சாயத்தார் ஊர் காவலர்களாக ஐந்து பேரை நியமித்தனர். சில நாள் கழிந்தது.

நிர்வாக மேலாண்மை படித்த ஒரு புத்திசாலியின் யோசனையின் படி காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் காவல் காக்க வேண்டும் என்று அறிவுரை செய்வதற்காக ஒரு திட்டப் பிரிவு (Planning Department) அமைக்கப் பட்டது. அந்த குழுவில் பணி செய்வதற்காக இரண்டு பேர் (Developers) அமர்த்தப் பட்டனர். மேலும் சில நாள் கழிந்தது. இந்த காவலாளிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் சரியான நேரத்தில் பணியை முடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக ஒரு டைம் கீப்பர் பணியமர்த்தப் பட்டார்.

உள்ளூர் காவலர்களுக்கு காவல் பணியில் பயிற்சி அளிக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் (Domain Expert) நியமிக்கப் பட்டார். பின்னர், இவர்களின் பணிகளைப் பற்றி உள்ளூர் தலைகளுக்கும் மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்க ஒரு ரிலேசன்ஷிப் மேனேஜர் நியமிக்கப் பட்டார்.

இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தரவேண்டுமே? எனவே ஒரு சம்பள குமாஸ்தா, கணக்குகளை சரிபார்க்க ஒரு தணிக்கையாளர், அலுவலகத்தை மேற்பார்வை இட ஒரு உதவி நிர்வாக அலுவலர் இவர்கள் எல்லாரையும் மேய்க்க ஒரு ப்ராஜெக்ட் ஹெட் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர்.

இப்படியே கொஞ்ச நாள் போனது. எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து பஞ்சாயத்திற்கு கட்டுப் படியாக வில்லை. செலவுகளை கட்டுப் படுத்த பக்கத்திலிருக்கும் ஒரு கன்சல்டன்சியின் உதவி கோரப் பட்டது. அவர்கள் "ஊரைக் காவல் காக்கும் இந்த ப்ரொஜெக்ட்டை" ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அளித்தனர். அதன் படி ஊரைக் காவல் காக்க முதன் முதலாக நியமிக்கப் பட்ட ஐந்து ஊர்காவலர்களும் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

இந்த கதையின் நீதி - விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கதை கடந்த சில வருடங்களில் வெகுவாக ஆட்களை வேலைக்குச் சேர்த்து இப்போது அதே வேகத்தில் நீக்கும் (கிட்டத் தட்ட) அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Wednesday, February 4, 2009

இருக்க இடம் கொடுத்தால்?


ஊர்பக்கம் ஏதோ சொல்வார்கள். இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடம் கேட்பார்கள் என்று. அது போல, சத்யம் நிறுவனத்திலிருந்து சுமார் 8000 கோடி ரூபாய் கொள்ளையடித்து போதாது என்று அந்த நிறுவனத்திலிருந்து மேலும் 1200 கோடி ரூபாய் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் ராஜுவின் உறவினர்கள்.

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் அதன் முன்னாள் தலைவரான ராஜு ஏகப் பட்ட தில்லுமுல்லுகள் செய்து அதிலிருந்து ஏகப் பட்ட பணத்தை கொள்ளை அடித்து தெரிந்த விஷயம்தான். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு அரசால் முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ராஜுவோ ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப் பட்டார். இன்னும் குற்ற விசாரணை முடிவடையாத நிலையில் எந்த துணிச்சலில் அவரது உறவினர்கள் மேலும் 1200 கோடி ரூபாய் கோரி புதிய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பித்தனர் என்பது நமது கேள்வி.

ராஜுவாகவே முன்வந்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் அவரைக் கைது செய்ய ஏகப் பட்ட அவகாசம் எடுத்துக் கொள்ளப் பட்டது. அதுவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை செய்ய ஹைதராபாத் சென்ற பின்னரே அவசர அவசரமாக அவர் கைது செய்யப் பட்டார். இந்த குற்றம், நிதித் துறை மற்றும் பங்குத் துறை சார்ந்தது என்றும் இதனை ஓரளவுக்காகவாவது சரியாகவும் நுணுக்கமாகவும் விசாரிக்க செபி போன்ற தொழிற் ரீதியான அமைப்புகளின் உதவி கண்டிப்பாக தேவை என்று தெரிந்த பின்னரும் அவரை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்காமல் (சட்ட ரீதியான சிக்கல்களை முன்னிறுத்தி) மாநில போலீசார் விசாரணை செய்தனர்.

தணிக்கை விவகாரம் மற்றும் பங்கு மாற்றம் போன்ற நிதி நுணுக்கமான விஷயங்களை எப்படி ஒரு மாநில போலீசாரால் சரியாக புலனாய்வு செய்ய முடியும்? கிட்டத் தட்ட ஒரு மாதம் கழிந்த பின்னரே ராஜுவை விசாரிக்க செபி உச்ச நீதி மன்றம் வரை சென்று அனுமதி வாங்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ராஜுவின் உறவினர்கள் ஆய்வு சம்பத்தப் பட்ட ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? இந்த ஒரு மாதத்தில் போலீசாரின் விசாரணை எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் ஏன் வெளியிடப் படவில்லை?

நிதி தொடர்பான குற்றச் சாட்டுகளில் தொண்ணூறு நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் குற்றம் சாடப் பட்டவர் ஜாமீனில் வெளி வர முடியும். அதே போல, இந்த வழக்கின் விசாரணை, மாநில போலீஸார் தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த குற்றப் பத்திரிக்கையில் ஏதேனும் (தொழிற்நுட்ப ரீதியாக) தவறுகள் இருந்தால், தவறான தகவல்கள் கொடுக்கப் பட்டதின் அடிப்படையில், குற்றம் சாட்டப் பட்டவர் தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், போலீஸார், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்க செபி போன்ற நிறுவனங்களின் உதவியை கோரியது போல இது வரை தகவல் எதுவும் இல்லை. மேலும், செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் உருவாக்கப் பட்ட சட்டங்களில் உள்ள (பெரிய) ஓட்டைகளுக்குள் புகுந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற திமிரிலேயே, இப்படி "அடித்த கொள்ளை போதாது, இன்னும் பணம் பிடுங்குவோம்" என்ற தொனியில், சத்யம் நிறுவனத்திற்கு ராஜுவின் உறவினர்கள் 1200 கோடி ரூபாய் கொடுக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.
Blog Widget by LinkWithin