Sunday, November 21, 2010

பயமா? லாப விற்பனையா?


நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சீனா தனது வங்கி கையிருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பதும் அயர்லாந்து விவகாரம் ஐரோப்பிய நிதி சிக்கல் இன்னும் தீர்ந்து விட வில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருப்பதும் கூட இந்த விற்பனைக்கான இதர காரணங்கள் என்று கூறப் படுகின்றன. கிட்டத்தட்ட நூறு சதவீத லாபத்தை கொடுத்திருக்கும் இந்திய பங்கு சந்தைகளில் நிகழும் இப்போதைய விற்பனை, அந்நிய முதலீட்டாளர்களின் லாபத்தை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் டாலர் மேலேறுவதும் கூட இதர காரணங்களாக இருக்கலாம்.

ஆக மொத்தத்தில், இந்திய பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் வாய்ப்பு இப்போதைக்கு பறி போயுள்ளது மட்டுமல்லாமல், முக்கிய குறியீடுகள் வலுவான அரண் நிலைகளுக்கு கீழேயும் (நிபிட்டி 5930, சென்செக்ஸ் 19800) முடிவடைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும் .



குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி அளவு 5850 க்கு அருகே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். 6050க்கு மேலே சந்தையில் வாங்கும் நிலை எடுக்கலாம் (இலக்கு 6400) .

நீண்ட கால முதலீட்டாளர்கள் நிபிட்டி 5700க்கு கீழே அடிப்படையில் சிறந்த பங்குகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.

வரும் வாரம் சிறந்த வாரமாக அமைந்திட அனைவரும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Thursday, November 18, 2010

ஊழலின் ஊற்றுக்க்கண்!


ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம்.

கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தவணைகளை விடுங்கள்!

கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர்.

வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிறது என்று புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த அனுபவம் எங்கேயோ எப்போதோ ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உயர்ந்து கொண்டே வரும் கல்வி வாராக் கடன்கள் இந்த நிகழ்வை உறுதிப் படுத்துகின்றன.

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது அந்த கால பழமொழி.

ஊழல் சமூகத்தில் இருந்துதான் ஸ்பெக்ட்ரம் ராஜாக்கள் உருவாகிறார்கள் என்பது இந்த கால புதுமொழி.

கல்மாதிகளும், எட்டியூரப்பாக்களும், ரெட்டிகளும்,அசோக் சவான்களும் இன்றைய குப்பன்களையும் சுப்பன்களையும், ரமேஷ்களையும் சுரேஷ்களையுமே பிரதிபலிக்கிறார்கள் என்பது மிகையாகாது.

ஊழலை ஒழிப்பது என்பது ஒவ்வொரு தனி இந்தியரிடமிருந்தும் துவங்க வேண்டும்.

சுத்தமான சமூகத்தில் ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்போதுமே இடமில்லை.

நன்றி!

Tuesday, November 16, 2010

எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!


எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா?

இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை!

1. யாரையும் வெறுக்காதீர்கள்.

2. எதற்கும் கவலைப் படாதீர்கள்!

3. எளிமையாக இருங்கள்!

4. குறைவாக எதிர்பாருங்கள்!

5. நிறைவாக கொடுங்கள்!

6. நிறைய புன்னகையுங்கள்!

7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்!

நன்றி!

Tuesday, November 9, 2010

வேலை தேடி வந்த ஒபாமா!


பொதுவாக, வேலை தேடி அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் அமெரிக்க தூதகரங்களின் வாசலில் விசா வேண்டி தவமிருப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு மாறுதலுக்காக இப்போது ஒபாமா வேலை தேடி இந்தியாவிற்கு வந்துள்ளார்.

எப்போதுமே அமெரிக்க அதிபர்களின் வருகைகள் தில்லியை குறிவைத்தே அமைவதுண்டு. அவ்வப்போது அமெரிக்க சேவை தொழிலாளிகளின் தலை நகரங்களான பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அமெரிக்க அதிபர்களின் காலடிகள் படுவதுண்டு.

ஆனால் இந்த முறை டில்லிக்கு கொடுக்கப் பட்டது ஒரு நாள் மட்டுமே. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் திரும்பிக் கூட பார்க்கப் படவில்லை. முதலாளிகளின் நகரமான மும்பைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய தொழில் அதிபர்களுடன் போடப் பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு பின்னரும், அந்த ஒப்பந்தத்தினால் எத்தனை அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகப் போகின்றன என்று வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது, இந்த பயணத்தின் முக்கிய நோக்கத்தினையும், காலசக்கரத்தின் மாற்றத்தையும் பறை சாற்றியது.

யாருக்குத் தெரியும்?

ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த காலமும் மாறிப் போய் பல ஒபாமாக்கள் வேலை தேடி இந்தியாவிற்கு ஓடி வரும் காலமும் வரலாம்!

நன்றி!
Blog Widget by LinkWithin