Saturday, January 31, 2009

மாற்றம் தேவை - ஒரு காரோட்டியின் கதை


நீங்கள் வளைவுகள் நிறைந்த ஒரு கிராமப் புறச்சாலையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திறமையான, அதே சமயத்தில் சாலை விதிகளை எப்போதும் மதிக்கும் ஒரு காரோட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவில் செல்லும் போது தவறான திசையில் வேகமாக ஆனால் தடுமாறியபடி கார் ஒட்டியபடி வரும் ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்து "எருமை" என்று கத்தியபடி கடந்து சென்றால் என்ன செய்வீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை. சாலையின் சரியான பக்கத்திலேயே சென்று கொண்டிருந்தீர்கள். எதிரில் வந்தது அந்த பெண்ணின் தவறு. தவறான பக்கத்தில் வந்த வண்டியில் மோதாமல் தப்பித்தது கூட உங்களுடைய தனித் திறமையால்தான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

இப்படித்தான் ஒரு முறை தவறான பக்கத்தில் வந்து விட்டு தன்னை நோக்கி கத்தி விட்டு சென்ற பெண்மணியின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு திறமையான காரோட்டி அவளை விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிக வேகமாக அவளைப் பின் துரத்திச் சென்றான். பல கி.மீ. தூரம் துரத்திய பின்னர் அவளை மடக்கிய அவன் அவளை பார்த்துக் கோபமாக கூறுகிறான். "நான் ஒரு எருமை என்றால் நீ ஒரு பசு மாடு" என்று. அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை. "எதற்காக இப்படி கூறுகிறாய்?" என்று கேட்க இவனுடைய பதில் " வளைவில் தவறான திசையில் வந்த நீ எப்படி என்னைப் பார்த்து எருமை என்று கூறலாம்?" அதற்கு அவள் கூறியது. " நான் உன்னைப் பார்த்து எருமை என்று கூற வில்லை. ஒரு எருமை கூட்டம் வழியை மறித்து நின்று கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாகப் போ என்று எச்சரிக்கை செய்வதற்காகவே எருமை என்று கத்தினேன். மேலும் எனக்கு அவசர வேலை இருந்ததால் மேற் கொண்டு விளக்கம் அளிக்க முடியாமல் வேகமாக வந்து விட்டேன்"

இப்போது சொல்லுங்கள். உங்களுடைய பதில் என்ன? இந்த கேள்வி கேட்கப் பட்ட கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா? "நான் ஏதேனும் ஒரு வகையில் கோபத்தை காட்டி இருப்பேன்."

இந்த நிலைக்கு காரணம் நம் எல்லாருக்கும் உள்ள "ஒருவகை கோட்பாடுகளுக்குள் இயங்கும் மனநிலை அமைப்பு"தான் ஆகும். அதாவது, அழுதால் பால் கிடைக்கும் என்று ஒரு குழந்தை நினைப்பதிலிருந்து, இந்த இனத்தை/ மதத்தை/ மொழியை/ கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று பெரியவர்கள் நினைப்பது வரை எல்லாமே, பிறந்த முதலே ஒரு மனிதனுக்கு மெல்ல மெல்ல உள்ளே திணிக்கப் பட்ட கலாச்சாரக் கோட்பாடுகளின் விளைவே ஆகும்.

ஆனால் இந்த கோட்பாடுகளை உடைப்பது சாதாரண காரியமல்ல. பூமியை மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்ற நம்பிக்கையை உடைத்த கலீலியோ மத நம்பிக்கையாளர்களால் சித்திரவதை செய்யப் பட்டார்.

அதே சமயம், இந்த கோட்பாடுகள் உடைக்கப் பட்டால்தான் புதிய உலகம் தென்படும்.பல உண்மைகள் புரிபடும். பல நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு முன்னொரு காலத்தில் கடிகாரம் என்றாலே சுவிற்சர்லாந்து என்று அறியப் பட்டது. சுவிஸ் நாட்டு கம்பெனிகள் ஒரு கடிகாரத்தை பற்சக்கரம், ஸ்ப்ரிங், கீ ஆகியவற்றைக் கொண்ட ஒரு மெகானிகல் இயந்திரமாகவே பார்த்து பழக்கப் பட்டவை. முதன் முதலாக குவார்ட்ஸ் கடிகாரம் சுவிஸ் விஞ்ஞானி ஒருவராலேயே கண்டுப் பிடிக்கப் பட்டாலும், சுவிஸ் கம்பெனிகள் அவரை புறந்தள்ள, அந்த கண்டுப் பிடிப்பை முதன் முதலில் ஏற்றுக் கொண்டது ஜப்பான் கம்பெனிகள்தான். விளைவு, சுவிற்சர்லாந்து கடிகார கம்பெனிகள் காணாமல் போயின. ஜப்பான் உலகின் மிகப் பெரிய கடிகார தயாரிப்பாளர் நாடாக மாறியது.

சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம். உயிரியல் கோட்பாட்டின் படி இயற்கையின் போக்கிற்கு ஏற்றவாறு மாற முடியாத விலங்குகள் மண்ணோடு மண்ணாக (டினோசார் கூட இதற்கு விதி விலக்கல்ல), மாற முடிந்த விலங்குகள் மட்டுமே இன்று வரை உயிர் வாழ்கின்றன.

எனவே, பழைய கட்டுப்பாடான கோட்பாடுகளை களைவோம். ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக நோக்குவோம். சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குவோம்.

நன்றி.

Thursday, January 29, 2009

மாணவர்களுக்காக ஒரு செய்தி


தற்போது நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் மாணவர்கள் கலந்து கொள்வதாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொண்டேன். இதன் மீது தனிப் பட்ட அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரை.

பொதுவாக இது போன்ற உணர்வு பூர்வமான போராட்டங்களில் இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவர் சமுதாயம் துடிப்போடு கலந்து கொள்வது இயல்பான விஷயம். இதை குறை கூற முடியாது. கடந்த முறை கூட ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போதை விட மிகத் தீவிரமாகவே கலந்து கொண்டார்கள்.

அதே சமயம், இத்தகைய போராட்டங்கள் சட்டத்தின் வரம்பு மீறி போய் விடாமல் மாணவர்களும், இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள், சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சில அசம்பாவித நிகழ்வுகளின் காரணமாக போலீஸ் ரெகார்டில் ஒரு மாணவர் பெயர் வருவது பிற்காலத்தில் அவருக்கு , வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுவது, மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கான மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கான உத்யோகத்தினை பெறுவது போன்ற சமயங்களில் வழங்கப் பட வேண்டிய போலீஸ் நற்சான்றிதல் பெறுவதில் பல சிக்கல்களை உருவாக்கும். எனவே, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்திற்கு முற்றிலும் உட்பட்டே, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, மாணவர்களால் சமூகத்திடையே விழிப்புணர்வும், மக்களிடையே பொது கருத்தும் உருவாக்க முடியும். மேலும் அரசாங்கத்திற்கு கூட இந்த பிரச்சினை குறித்து மக்களின் உணர்வை தெளிவாக தெரிவிக்கவும் முடியும். உதாரணம், மனித சங்கிலிகள், அமைதிப் பேரணிகள், சிறு நாடகங்கள், கையெழுத்து இயக்கங்கள், அடையாள உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை. இப்படி, ஆக்கப் பூர்வமான அமைதியான வழியிலேயே உணர்வுகளை வெளிப் படுத்துவது, மாணவர்களுக்கும் அவர்கள் சுமக்கும் இந்தியாவின் வருங்காலத்திற்கும் நல்லது.

நன்றி.

பின்குறிப்பு: இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம்மை போன்ற முன்னாள் மாணவர்களின் கடமை என்று நினைக்கிறேன்.

Wednesday, January 28, 2009

உயிர் காக்கும் இறப்பு நிலை.


எங்களுக்காகவும் சில பதிவுகள் இடுங்கள் என்று கோரிக்கை வைத்த செல்வன்.தீபக் சூர்யா, செல்வன்.ஜெய சூர்யா போன்ற சில இளம் அறிவியல் சிந்தனையாளர்களுக்கான ஒரு பதிவு இது. இளைஞர்கள் போல அறிவியல் தாகம் கொண்ட பெரியவர்கள் கூட இதை படிக்கலாம்.

துருவப் பகுதி போன்ற அசாதாரண தட்பவெட்ப நிலைகளைக் கொண்ட உலகின் சில பகுதிகளில் (சில சமயங்களில் சாதாரண பகுதிகளில் கூட)வாழும் சில உயிரினங்கள் வருடந்தோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெறும் கடுமையான பருவநிலை மாற்றத்தின் போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள ஒரு வித கோமா போன்ற நிச்சலன அல்லது ஜட நிலைக்கு சென்று விடுவது உண்டு. பருவ நிலை சீர்பெற்றவுடன் தம்மை தாமே மீண்டும் உயிர்ப்பித்து எழுவதும் உண்டு. இந்த அதிசய நிகழ்வுகள் பற்றியும் இந்த நிலையை மனிதன் எப்படி உபயோகித்துக் கொள்வது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

இத்தகைய நிச்சலன நிலைக்கு அறிவியல் ரீதியான பெயர் HIBERNATION என்பதாகும். கடுமையான பருவநிலைகளில் உணவு தேடுவது (உணவு கிடைப்பது அரிது) உயிரினங்களுக்கு ஒரு சிரமமான செயலாகும். எனவே உணவு கிடைக்காத நிலையில் கூட உடல்ரீதியான தனது செயல்பாடுகளை ஒரே மாதிரி தொடர்ந்து கொண்டிருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உயிரினங்களின் உடல் தளர்ந்து போய் விடும். தொடர்ந்து பல நாட்கள் உணவு பெற முடியாத நிலையில் உயிரிழப்பு கூட நேரிடலாம். இந்த வகையான ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வகை உயிரினங்கள் இத்தகைய காலகட்டத்தில் ஒருவித நிச்சலன (ஜட) நிலையை மேற்கொள்ளும். அப்போது, உயிரினங்களின் உடலில் ஒருவித வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து அவற்றின் உடலின் வளர்சிதை மாற்றங்கள் (Metobolism) குறைந்து போகின்றன. மேலும் இவற்றின் உடல் வெட்ப நிலை மிகவும் குறைந்து போகிறது. மூச்சு விடும் வேகம் மிகவும் குறைந்து போகிறது. இதனால், அவற்றின் சக்தி வெளிப்பாடு (விரயம்) மிக குறைவாக மாறி, தமது சக்தியை பல நாட்கள் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலை மேற்கொள்ளும் சில உயிரினங்கள் கீழே.

ஒரு வித அணில்கள், ஒரு வகை வௌவால்கள், ஒரு வகை முள்ளம் பன்றிகள் மற்றும் ஒரு வித பாம்புகள்

(bats, some species of ground squirrels and other rodents, mouse lemurs, the West European Hedgehog and other insectivores, some rattlesnakes, such as the Western Diamondback, monotremes and marsupials.)

HIBERNATION நிலைக்கு செல்லும் சில உயிரினங்களின் (நிலத்தடி அணில்கள் - GROUND SQUIRRELS) வெட்ப நிலையோ 27* F அளவிற்கு கீழே (அதாவது நீரின் உறை நிலைக்கும் கீழே) சென்று விடுகிறது.

(பெரியதாக தெரிய இதன் மீது சொடுக்கவும்)

இந்த HIBERNATION எனும் நிச்சலன நிலை பொதுவாக குளிர் ரத்த பிராணிகளுக்கு அதிகம் சாத்தியமான ஒன்று. இவற்றின் உடலில் வெளியிடப்படும் ஒரு வித வேதி பொருள் இந்த நிச்சலன நிலை உருவாக முக்கிய காரணமாக உள்ளது என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பறவைகள், மனிதர்கள் போன்ற வெதுவெதுப்பான ரத்தம் கொண்ட உயிரினங்களுக்கு பொதுவாக இது சாத்தியமில்லை. அதே சமயம், வெதுவெதுப்பான ரத்த அமைப்பு கொண்ட பனிக் கரடிகள் உண்மையான நிச்சலன நிலைக்கு செல்லா விட்டாலும், குளிர்காலத்தில் ஒரு வித நீண்ட தூக்க நிலைக்கு சென்று விடுகின்றன. இந்த காலகட்டத்தில் அவற்றின் உடல் வெட்ப நிலை 98.6°லிருந்து 88 °F அளவிற்கு சென்று விடுகிறது. மனித உடல் கூட சில எதிர்பாரா விபத்துகளின் போது தற்காலிக நிச்சலன நிலைக்கு சென்று விடுவதாக சில அறிவியலார் வாதிடுகின்றனர். சில உதாரணங்கள் அவர்களால் கொடுக்கப் பட்டுள்ளன.

ஒரு பெண் நோர்வே நாட்டில் ஐஸ் நீரில் மூழ்கி ஒரு மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப் பட்டார். அப்போது அவருக்கு இதய துடிப்பு முழுமையாக நின்று போயிருந்தது. மற்றும் உடல் வெட்பம் 57* F ஆக குறைந்து போயிருந்தது. (1999)

கனடாவில் பதிமூன்று மாத குழந்தை இரவில் வெளிவந்தது விட பணியில் உறைந்து போனது. அப்போது வெளியில் இருந்த வெட்ப நிலை 11*F (உறை நிலைக்கும் மிகக் கீழே). அந்த குழந்தையும் இரண்டு மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப் பட்டது. அப்போது அதன் உடல் வெட்ப நிலை 61* F என கண்டுபிடிக்கப் பட்டது. (2001)

இது போன்ற தற்செயலான நிகழ்வுகள், மனிதர்களுக்கும் HIBERNATION எனப்படும் நிச்சலன நிலையை மருத்துவ ரீதியாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளன. இதனால், பல கடுமையான வியாதிகளை குணப் படுத்தலாம், உடல் உறுப்புகள் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றலாம் என்பதோடு, இப்போது கனவாக மட்டுமே உள்ள "தொலை தூர கிரகங்களுக்கு (ஏன் நட்சத்திரங்களுக்கு கூட) மனிதனின் பல ஆண்டுகள் பயணம்" என்பது கூட சாத்தியமாகும்.

இப்போது அமெரிக்காவில் உள்ள மார்க் ரோத் (Mark Roth) எனும் ஒரு விஞ்ஞானி, ஒருவித இயற்கையான வேதிபொருளை மனிதர்களுக்கு செலுத்துவதன் மூலம் (வெதுவெதுப்பான ரத்த அமைப்பை குளிர் ரத்த அமைப்பாக மாற்றி) அவர்களுக்கு "FORCED HIBERNATION" கொண்டு வர முடியும் என்று கூறுகிறார். இந்த வேதிப் பொருள் மனித உடலில் இயல்பாக தோன்றும் ஒன்றுதான் என்றும் இந்த வேதிப் பொருளை ஏற்கனவே எலியின் உடலில் செலுத்திய சோதனை முயற்சி வெற்றி பெற்று விட்டதாகவும் கூறுகிறார். கூடிய விரைவில் மனிதர்களின் உடலிலும் இந்த வேதிப் பொருள் கூடிய விரைவில் பரிசோதிக்கப் படும் என்று தெரிகிறது.

இந்த சோதனை வெற்றி பெற்றால், மனிதரின் அறிவியல் பயணத்தில் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். ஏற்கனவே சொன்னபடி, இன்று கான்செர் போன்ற கடுமையான வியாதியினால் அவதிப் படுவோருக்கு அறுவைசிகிச்சை செய்தல், உறுப்புகளை மாற்றி பொருத்துதல், வெளிக் கிரக பயணம் போன்றவை எளிதில் சாத்தியமாகும்.

நன்றி

பின்குறிப்பு: சமீபத்தில், செயற்கை முறையில் ஒருவரின் ரத்தத்தை முழுவதுமாக வெளியேற்றி உடலை ஒரு "மருத்துவரீதியான மரண நிலைக்கு" கொண்டு சென்று பின்னர் மிகக் குறைந்த வெட்ப நிலையில் (கிட்டத்தட்ட -17* c என்று ஞாபகம்) அறுவை சிகிச்சை (கான்செர்) வெற்றிகரமாக செய்த பிறகு ரத்தத்தை மீண்டும் பாய்ச்சி உயிர்ப்பித்து ஒரு புதிய மருத்துவ சாதனை படைத்துள்ளனர் நம்மூர் (மும்பை) விஞ்ஞானிகள். இவர்களுக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Monday, January 26, 2009

பூவா? தலையா?


ஒபாமா மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைத்த அளவிற்கு அவர் மீது சந்தைகள் நம்பிக்கை வைக்க வில்லை. சொல்லப் போனால், சந்தைகளினால் மிகவும் மதிக்கப் படும் வர்த்தக குருக்களில் ஒருவரான திரு.ஜிம் ரோஜர்ஸ் அவர்கள், ஒபாமா அமெரிக்காவின் மிக மோசமான அத்தியாயத்தை துவங்கி வைப்பார் என்ற பொருளில் பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவை மீண்டும் ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்றும் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருப்பது அங்குள்ள சந்தை வணிகர்களின் மனப் போக்கினை எதிரொலிக்கிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மீதும் அங்குள்ள நிறுவனங்களின் மீதும் நம்பிக்கை இழந்த வர்த்தகர்கள் பங்குகளை பெரிய அளவில் விற்றது இங்குள்ள பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து சென்ற வார சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சென்ற வார நிலவரம்

மேலே கூறியது போல அமெரிக்காவின் பொருளாதாரத்தின் போக்கு பற்றிய கவலை உலக சந்தைகளில் சென்ற வாரம் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. IBM நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை நம்பிக்கையை தந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி அறிக்கை ஏமாற்றத்தையே தந்தது. மேலும் அங்குள்ள வங்கிகள் வீழ்ச்சியிலிருந்து மீளுமா என்ற மிகப் பெரிய கேள்வியும் வர்த்தகர்களை தடுமாறச் செய்தது. அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தையின் எதிர்பார்ப்பை விட நல்ல ஒரு நிதி அறிக்கையைத் தந்தாலும் ஆடிக் காற்றில் அடித்துச் செல்லப் பட்ட அம்மிக் கல்லாகவே அது இருந்தது. மேலும், சத்யம் நிறுவனத்தில் லார்சன் நிறுவனம் காட்டி வரும் அக்கறை சத்யம் பங்குகளுக்கு உதவியாக இருந்தாலும், லார்சன் நிறுவன பங்குகள் சரிய காரணமாக இருந்தது. பணவீக்கம் சந்தை எதிர்பார்ப்புகளை விட மிக அதிகமாக இருந்ததால், வட்டி குறைப்பு பற்றிய எழுந்த சந்தேகங்கள் சந்தை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.

மொத்தத்தில் சந்தைக்கு மிகுந்த ஏமாற்றம் தந்த ஒரு வாரமாகவே சென்ற வாரம் அமைந்தது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 650 புள்ளிகள் குறைய மற்ற முக்கிய குறியீடுகள் அனைத்துமே பெரும் இழப்பை சந்தித்தன. ரியல் எஸ்டேட் துறை எப்போதும் போல மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தது. உலோகங்கள் மற்றும் வங்கித் துறை பங்குகளும் பெரும் இழப்பைச் சந்தித்தன. நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மிக அருகிலேயே முடிவடைந்தது சற்று தெம்பைத் தருகிற விஷயம். ஆனால், சென்செக்ஸ் ஜனவரி 2008 க்கு பிறகு மிகக் குறைந்த அளவில் (வாராந்திர அடிப்படையில்) முடிவடைந்திருப்பது வருத்தமான விஷயம்.

வரும் வார நிலவரம்

வரும் வாரத்தின் முதல் நாள் சந்தை வணிகம், குறுகிய கால நோக்கில் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே சொன்னபடி, நிபிட்டி தனது முக்கிய அரண் நிலையான 2700 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால், துவக்கத்தில் ஏதேனும் வீழ்ச்சி ஏற்படுமேயானால், அது சந்தையை மீண்டும் 2500 புள்ளிகளுக்கு கொண்டு சென்று விடும் ஆபத்து உள்ளது. வரும் வாரத்தில் வெளியிடப் பட உள்ள இந்திய தலைமை வங்கியின் காலாண்டு அறிக்கையில் ஏதேனும் வட்டிக் குறைப்பு இருக்குமா என்று சந்தைகளில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் வரும் வாரம் நடை பெற உள்ள அமெரிக்க தலைமை வங்கியின் கூட்டமும் சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 8850-8950, 9450-9550,
நிபிட்டி 2700-2730, 2800-2850

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்

சென்செக்ஸ் - 8550-8450, 7750-7650,
நிபிட்டி - 2550-2600, 2405-2430

மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருந்தாலும் கீழ் நோக்கி செல்லவே வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் நிபிட்டி 2730 க்கு மேல் முடிவடையும் பட்சத்தில் ஒரு குறுகிய கால மேல்நோக்கிய பயணத்தை சந்தை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. வர்த்தகர்கள் மிக கவனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.

சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், முதலிட்டாளர்கள் நன்கு செயல் படும் நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 50.00 அளவை தொட கூட வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.

Sunday, January 25, 2009

இந்திய குடியரசு நாள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்


உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசான இந்தியாவின் குடியரசு நாளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நாளில் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் வடிவமைப்பு சாசனத்தின் சிறப்பியல்புகள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

இந்தியாவை விட்டு 1947 இல் வெள்ளையர்கள் வெளியேறுவதற்கு முன்னர், ஜனவரி 26 ஆம் தேதியே இந்திய சுதந்திர நாளாக இந்தியாவின் தேசியவாதிகளால் கொண்டாடப் பட்டது என்றும் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே பின்னர் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய குடியரசு நாளாக ஏற்றுக் கொள்ளப் பட்டது என்ற செய்து உங்களுக்கு தெரியுமா? சற்று விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் தேவை பூரண சுதந்திரமே என்ற தீர்மானம், 1929 ஆம் ஆண்டு ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப் பட்டது. மேலும் 1930 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர நாளாக இந்திய மக்கள் அனுசரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் விடுதலை நாளாக தேசிய உணர்வுள்ள அனைவராலும் 1947 ஆம் ஆண்டு வரை அனுசரிக்கப் பட்டு வந்தது. இந்தியருக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் வழங்குவதாக முதலில் தீர்மானித்திருந்த பிரிட்டிஷ் அரசு, திடீரென 1947 ஆம் ஆண்டிலேயே இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடு இரவில் இந்திய நாட்டிற்கு விடுதலை தந்தது. (இந்த அதிரடி அவரச வெளியேற்ற முடிவே, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மிகப் பெரிய வன்முறைக்கும் அதன் பின்னர் இன்று வரை நிலவி வரும் இந்திய பாகிஸ்தான் விரோதப் போக்கிற்கும் அடிப்படைக் காரணமென அரசியல் நோக்கர்களால் கருதப் படுகிறது)

இடையே, பிரிக்கப் படாத இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் வடிவமைப்பு நிர்ணய சபை 1946 இல் பிரிட்டிஷ் அரசால் அமைக்கப் பட்டது. இதன் முதல் கூட்டம் டிசம்பர் 1946 இல் நடை பெற்றது. இதன் உறுப்பினர்கள், அப்போதைய பிராந்திய பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் இந்திய சிறு அரசவை ஆகியவற்றால், அந்தந்த பிரதேச மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

சுதந்திர இந்தியாவில் (திருத்தி அமைக்கப் பட்ட) இந்த பேரவை முதல் முறையாக அக்டோபர் 1947 இல் கூடியது. இதன் தலைவராக அரசியல் சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கர் செயல்பட்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பின்னரும், பொது கருத்துக்களை கேட்டறிந்த பின்னரும் இறுதியான அரசியல் வடிவமைப்பு சாசனம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முழுமையான வடிவு பெற்றது. ஆனால், விடுதலை போராட்ட வீரர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், ஜனவரி 26 ஆம் நாள், இந்தியாவின் குடியரசு தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, அந்த நாளில், இந்தியாவின் அரசியல் வடிவமைப்பு சாசனம் அமலுக்கு கொண்டு வரப் பட்டது. (குடியுரிமை, தேர்தல்கள், தற்காலிக பாராளுமன்றம் போன்ற சில பிரிவுகள், நவம்பர் மாதம் முதலே அமலுக்கு வந்து விட்டன).

இப்படி ஜனவரி 26 ஆம் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. அவையாவன.

௧. உலகின் மிக நீளமான எழுதப் பட்ட அரசியல் சாசனம் இந்திய அரசியல் சாசனம். அமெரிக்காவை போல மேலோட்டமான அடிப்படைப் பிரிவுகளை மட்டுமே கொண்டிருக்காமல், முழுமையான தீர்வுகள் பலவற்றையும் இந்திய அரசியல் சாசனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

௨. உலகின் (அன்றிருந்த) சிறந்த அரசியல் சாசனங்களின் முக்கிய அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற வைக்கப் பட்டன. அந்த நாடுகளின் சாசனங்கள் செயல் பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்திய சாசனத்தில் நுண்ணிய பிரிவுகள் அமைக்கப் பட்டன.

௩. காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள ஏதுவாக, எளிதில் திருத்தியமைக்க அரசியல் சாசனத்தில் சில பிரிவுகள் அமைக்கப் பட்டன. உலகிலேயே நெகிழ்வுத் தன்மை அதிகம் கொண்ட சாசனம் இந்திய சாசனம் என்று கருதப் படுகிறது. (சமீபத்திய தீர்ப்பில், உச்ச நீதி மன்றம், அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்றி அமைக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது).

௪. இந்திய குடிமக்களுக்கு மட்டுமில்லாமல், இந்தியாவில் வாழும் பிற நாட்டு குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் வழங்குவது நமது அரசியல் சாசனம். (இது பல நாடுகளில் கிடையாது)

௫. அடிப்படை உரிமைகள் மட்டுமில்லாமல், குடிமக்களுக்கான சில அடிப்படை கடமைகளையும் உள்வைத்தது நம் அரசியல் சாசனம்.

௬.அடிப்படை உரிமைகளை காக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திற்கும் உயர்நீதி மன்றங்களுக்கும் வழங்கிய இந்திய அரசியல் சாசனம், அந்த உரிமைகளை பெற்றுத் தர நீதிமன்றங்களிடம் கோரும் உரிமையை இந்திய மக்களுக்கும் வழங்கியது.

இப்படி பல வகையிலும் சிறப்பு பெற்றது நமது அரசியல் சாசனம். நாம் இன்று அனுபவிக்கும் தனி மனித சுதந்திரத்திற்கு அடிகோலியது இந்த அரசியல் சாசனமே.

மிகுந்த தேசப் பற்றும், தியாக உணர்வும் கொண்ட சிறந்த தலைவர்களின் கடும் உழைப்பில் உருவாக்கப் பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளுக்கு முழு மரியாதை கொடுத்தாலே இந்தியாவின் இன்றைய பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்பது எனது நம்பிக்கை.

எனவே, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களால் முதலில் விடுதலை நாளாக கொண்டாடப் பட்டு பின்னர் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதியை சகோதரத்துவ உணர்வுடனும், தேசப் பற்று உணர்வுடனும் நாம் கொண்டாடுவது, விடுதலைப் பயிரை கண்ணீர் விட்டும் செந்நீர் விட்டும் வளர்த்த அந்த மாமனிதர்களுக்கு செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாக இருக்கும்.

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய

அனைவருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துக்கள்

நன்றி.

Saturday, January 24, 2009

சத்யம் தப்பிப் பிழைக்குமா?


ஒரு பொருளாதார பிரச்சினையாக மட்டுமே முதலில் கருதப் பட்ட சத்யம் விவகாரம் இப்போது அரசியல் பூச்சு பெற்று வருகின்ற நிலையில் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் (?) மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரமாக கருதப் படும் சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்பது பற்றி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒரு அலசல்.

முதலில் அரசியல் ரீதியான அலசல்

இந்த பிரச்சினை அரசியல் வடிவம் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சத்யம் (முன்னாள்) தலைவரின் கட்சி வேறுபாடற்ற அரசியல் தொடர்புகள். மென்பொருள் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர் ராமலிங்க ராஜு. மென்பொருள் வளர்ச்சி என்ற பெயரில் அரசிடமிருந்து பல சலூகைகளை (மென்பொருள் தொழிலுக்கென நிலம் பெற்று அதை இவரது மகன்களின் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததாக கூட குற்றச் சாட்டு உண்டு) இவரால் பெற முடிந்தது. 2003 இல் வரி தணிக்கையின் போது ராம லிங்க ராஜு சார்பாக பல பினாமி கணக்குகள் இருந்ததாக இந்திய குடியரசு கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செபி கடிதம் அனுப்பியதாகக் கூறப் படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க சந்திர பாபு நாயுடு அவர்களுடன் இருந்த தொடர்பு மற்றும் நாயுடுவுக்கு அப்போதைய பா.ஜ.க. அரசில் இருந்த செல்வாக்கு உதவியதாக கூறப் படுகிறது

சந்திர பாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த ராம லிங்க ராஜு 2004 இல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் வியந்து கொண்டிருந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடுவிடம் மென் பொருள் எனும் தலையைக் காட்டிக் கொண்டிருந்த ராமலிங்க ராஜு, ராஜசேகர ரெட்டி அவர்களிடம் காட்டியது அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் எனும் வாலை. ராஜசேகர ரெட்டி ஆட்சி பொறுப்பு ஏற்பட்ட பின்னர் வழங்கப் பட்ட பொதுத்துறை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏறக்குறைய அனைத்து ஒப்பந்தங்களும் ராமலிங்க ராஜுவின் மகனால் நடத்தப் பெறும் மைடாஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டது என்றும் அந்த ஒப்பந்தங்களின் அளவு சுமார் 19,000 கோடிகள் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத் மெட்ரோ பணிகள் மைடாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மெட்ரோ தலைவர் இந்த ஒப்பந்தம் ஒரு ஊழல் என்றும் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் கண் துடைப்பே என்றும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ரியல் எஸ்டேட் லாபங்கள்தான் என்றும் கடந்த செப்டம்பர் மாதமே கூறியது கவனிக்கத் தக்கது.

ராஜுவின் அரசியல் தொடர்புகள் முக்கியமாக முதல்வருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆந்திர மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் காரணத்தினாலும் ஆந்திர பிரதேச சட்ட சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாலும் சத்யம் முன்னாள் தலைவரை மட்டுமல்ல சத்யம் நிறுவனத்தையும் காப்பாற்றுவது ஆளுங்கட்சியின் அவசரத் தேவையாகிறது. இந்த விவகாரத்தை ஏற்கனவே கையில் எடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, ராமலிங்க ராஜுவுக்கும் ஆந்திர முதல்வருக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி ஆந்திர மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. மேலும் சென்ற தேர்தலில் மத்திய அரசு அமைக்க காங்கிரஸ்சுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆந்திராவின் வாக்குகளை இழக்க விரும்பாத காங்கிரஸ் அரசு அந்த மாநிலத்தின் பெருமையாகக் கருதப் படும் சத்யம் நிறுவனம் முழுகிப் போவதையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50,000 பேர் (?) வேலை இழப்பதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறப் படுகிறது. இதன் அடிப்படையிலேயே சத்யம் நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகள் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய வணிகத் துறை அமைச்சர் முதலில் கூறினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், செபி கையில் ராஜுவை மாட்ட விடாமல் தடுப்பதற்கே அவர் அவசர அவசரமாக நீதிபதி முன் ஆஜர் செய்யப் பட்டார் என்றும் பின்னர் செபி விசாரிப்பதற்கு பல சட்டரீதியான தடங்கல்களை ஆந்திர அரசு செய்வதாகவும் பலரால் கருதப் படுகிறது. எனவே, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியை (மற்ற நிறுவனங்களுடன் இணைந்து போவதின் மூலம் சத்யம் சுயமிழந்து போவதை) எந்த காரணத்தைக் கொண்டும் விரும்பாத மத்திய மாநில அரசுகள், புதிய சத்யம் தலைமைக்கு போதுமான உதவிகள் செய்யும் என்று முதலில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்காக கணக்கு வழக்கில் திருத்தங்கள் என்ற "கணக்கு வழக்கு மோசடி" மட்டும் ராஜு செய்தார் என்று அனைவரும் முதலில் நம்பியிருந்த நிலை மாறி நிறுவனத்தின் பணத்தை பல வகையிலும் (சொந்த கணக்குக்கு திருப்பியது, போலி வங்கி வைப்பு தொகை, போலியான ஊழியர் எண்ணிக்கை என) மிகப் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளிவரவே, காங்கிரஸ் மத்திய தலைமை, இப்போது சத்யத்திற்கு நேரடியாக உதவி செய்ய தயங்குகிறது. ஆனால், சத்யத்தை விட பெரிய மய்டாஸ் விவகாரத்தினால் தனது அரசியல் எதிர்காலமே ஒரு கேள்விக் குறியாகி விட்ட நிலையில் ஆந்திர முதல்வர் சத்யத்தை உயிர்ப்பிக்க தீவிரமாக இருப்பதாக சொல்லப் படுகிறது.

மொத்தத்தில், சத்யத்தை தக்க முதலுதவி செய்து இதுவரை உயிர் பிழைக்க செய்திருப்பது "பழைய நிர்வாக குழுவை அடியோடு நீக்கி வணிக உலகில் சிறந்த பெயர் பெற்ற தீபக் பரேக் உள்ளிட்ட புதிய நிர்வாக குழு அமைத்திருக்கும்" மத்திய அரசின் நடவடிக்கைதான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது பொருளாதார ரீதியான அலசல்

இப்போது சத்யம் நிறுவனத்தின் தலைமை குழுவில் மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் திரு. தீபக் பரேக், தொழில் முறையில் திறம்பட செயல் பட்டுக் கொண்டிருக்கும் HDFC நிறுவனத்தின் தலைவருமாவார். இவருடன் தலைமைக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்களும் கூட நிறுவனத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்த மிகவும் உதவிகரமாக உள்ளனர்.

நிதித் தட்டுப்பாடு

இப்போது நிறுவனத்தின் உடனடி பிரச்சினை என்னவென்றால்,ரொக்க கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்றாட செலவினங்களுக்கும் சம்பள பட்டுவாடாவுக்கும் நிதித் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெற்ற நிறுவனம் என்பதால் வங்கிகள் கடன் தர தயங்குகிறார்கள். மேற்சொன்ன அரசியல் காரணங்களால், அரசினாலும் நேரடியாக கடன் வசதிகளை செய்து தர முடிய வில்லை. நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு பூர்வாங்க விசாரணையில், சத்யம் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் தொகை பாக்கி உள்ளது என்றும் சத்யம் நிறுவனத்தில் அசையா சொத்துகளின் மீது இதுவரை எந்த ஒரு வங்கிக் கடனும் பெறப் படவில்லை எனவும் அறியப் பட்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி தேவைகளை சமாளிக்க நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மீது வங்கிகளிடம் கடன் கோரலாம் என்று புதிய நிர்வாக குழு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

தலைமை இல்லாத நிலை

நிறுவனத்தின் மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை, இந்த நிறுவனத்தின் மீது ஊழல் கறை
படிந்திருப்பதால் தலைமை நிர்வாகி பொறுப்பேற்க யாரும் முன்வராதது. அதே சமயம், இந்த நிறுவனத்தை கையகப் படுத்த முடியுமா என்று இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான லார்சன் டுப்ரோ தீவிரமான சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது. சத்யம் தலைமைக் குழுவிடம் சில திட்ட விவரங்களை முன்வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்க இன்னும் காலம் பிடிக்கும் என்றும் சொல்லப் படுகிறது. இடையில் இந்த நிறுவனம், சத்யத்தில் தனது பங்கினை நான்கு சதவீதத்திலிருந்து பன்னிரண்டு சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. தலைமை குழுவில் தனது பிரதிநிதியை அமர்த்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமும் சிறந்த வணிக நியதிகளை கடைப் பிடிப்பதாகவும் அறியப் படும், லார்சன் டுப்ரோ நிறுவனம் சத்யத்தின் நிர்வாகத்தை ஏற்கும் எனில் சத்யம் நிறுவனத்திற்கு நம்பகத் தன்மை கிடைக்க உதவி புரியும். மேலும் சில நிறுவனங்கள் (டெக் மகிந்திரா, ஐ.கேட் போன்றவை) கூட சத்யத்தை கையகப் படுத்த முயலுவதாகவும் வணிக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

வாடிக்கையாளர்கள் பின்வாங்கும் அபாயம்

தற்போது சத்யம் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்ட நிலையில் மேலும் பலர் இவ்வாறே செய்வார்களோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. அதே சமயத்தில் மென்பொருள் சேவைகளை சட்டென்று துண்டிப்பது மிகவும் கடினம் எனவே பல வாடிக்கையாளர்கள் சத்யம் சேவையை தொடர்வார்கள் என்றும் துறை விற்பன்னர்களால் கருதப் படுகிறது. ஏற்கனவே சொன்ன படி தீபக் பரேக், லார்சன் டுப்ரோ ஆகியோர் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை வளர்க்க உதவுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சட்டரீதியான சிக்கல்

இந்திய சட்ட காவலர்களிடம் இருந்து சத்யம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் தப்பித்தாலும், அமெரிக்க சந்தைகளில் இதன் பங்கு வர்த்தகமாகி வருவதால், அங்குள்ள கண்காணிப்பாளர்கள் இந்நிறுவனத்திற்கும் ராஜுவிற்கும் கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்றும் இதில் இருந்து தப்பித்து அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப் படுகிறது. (சரிவர கண்காணிக்கத் தவறிய இந்திய செபி மீது கூட அமெரிக்க அரசு வழக்கு தொடரலாம் என்று கூட வதந்திகள் உள்ளன)

ஆக மொத்தத்தில் சத்யம் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்றாலும் இதைப் பிழைக்க வைக்க ஐ.சி.யு வில், லார்சென் டுப்ரோ மற்றும் தீபக் பரேக் எனும் திறமை மிக்க டாக்டர்களின் நேரடி கவனிப்பில், சத்யம் நிறுவனம் இருப்பதால் அது தப்பிப் பிழைக்கும் என்று ஓரளவு நம்பிக்கையோடு இருக்கலாம்.

பின்குறிப்பு: சத்யம் நிறுவனத்தின் தொடர்பாக லார்சென் மற்றும் தீபக் பரேக் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருபவர்கள், மிக்க துணிச்சல் இருந்தால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முடிவில் மிகுந்த சந்தை அபாயம் உள்ளது. முழுமையாக பணம் இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் முதலீடு செய்த பணம் முழுமையாக போனாலும் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு மட்டுமே பணம் முதலீடு செய்ய வேண்டும். இது தகவலுக்காக மட்டும். பரிந்துரை அல்ல.

Thursday, January 22, 2009

நரேந்திர மோடி நாடாளலாமா?


சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது.

தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜராத் திகழ்கிறது. கனிமத் துறை, ஜவுளித் துறை, மருந்துத் துறை, பெட்ரோலியத் துறை, வேதிப் பொருட்கள் துறை, பால்வளத் துறை இன்னும் பல துறைகளில் குஜராத் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்தில் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. மேலும், இந்தியாவிலேயே மிக அதிக அளவில் புதிய தொழில் முதலீடுகள் இங்கேதான் செய்யப் பட்டுள்ளன என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் பன்னிரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. இது ஒரு சாதனை அளவாகும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பொறாமைப் படத் தக்க குஜராத் மாநிலத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

குஜராத் மக்களின் வணிக மற்றும் தொழில் திறன்:

குஜராத் மக்கள் இயல்பிலேயே சிறந்த வியாபாரத் திறமை கொண்டவர்கள். குஜராத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் இதுவே என கருதப் படுகிறது. மேலும் மாநிலத்தின் நலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குணம் குஜராத் மக்களுக்கு உண்டு.

சிறந்த கட்டமைப்பு வசதி

குஜராத்தில் மின்சாரத் தட்டுப் பாடு பிற மாநிலங்களின் விட மிகக் குறைவு. மிகச் சிறந்த சாலை வசதிகள், துறைமுக வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கிழக்கில் இருக்கும் சீனாவில் இருந்து பொருட்கள் மேற்கு கரையிலிருக்கும் குஜராத் வழியாகவே இந்தியாவிற்கு அதிக அளவில் இறக்குமதியாகின்றன. சிறந்த முறையில் செயல் படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இங்கு உண்டு. நந்திக்ராம் பிரச்சினைகள் உருவாக முக்கிய காரணமான "தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம்" பற்றிய கவலைகள் இங்கு கிடையாது.

வேகமாக முடிவெடுக்கும் அரசின் திறன்:

மேற்கு வங்காளத்தில் வாகன தொழிற்சாலை அமைக்க முயன்ற டாட்டா அங்கு நடைபெற்ற அரசியல் சச்சரவு காரணமாக தொழிற்சாலை இருப்பிடத்தை மாற்றி அமைக்க முயன்ற போது, குஜராத் முதலமைச்சர் அது பற்றி முடிவு செய்ய சில வினாடிகளே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. புதிய தொழில்கள் பலவும் குஜராத் நோக்கி பயணிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக உணரப் படுகிறது.

பொதுவாக ஊழலற்ற நிர்வாகம்:

இந்தியா என்றாலே ஊழல் என்ற நிலையில் கூட குஜராத் அரசில் ஊழல் குறைவாக உள்ளதாக கூறப் படுகிறது. எனவே இந்தியாவில் புதிய தொழில் தொடங்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தையே அதிகம் விரும்புவதாக கருதப் படுகிறது.

தொழிற்துறை வளர்ச்சி மட்டுமல்ல, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் விஷயத்தில் கூட குஜராத் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறந்த ஆரம்ப பள்ளிகள், குறைந்த மின் தட்டுப் பாடு (மின் வெட்டு குறைவு), சிறந்த போக்குவரத்து வசதி, மிக முக்கியமாக கிராமங்களில் கூட குடிநீர் வசதி (உபயம் சர்தார் சரோவர் திட்டம்) மற்றும் பாசன நீர் வசதி என அடிப்படை வசதிகள் அங்கு சிறந்து விளங்குவதாக எனது குஜராத் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இலவச மின்சாரமா அல்லது தங்கு தடையற்ற மின்சாரமா என்ற கேள்வியை நரேந்திர மோடி ஒரு முறை விவசாயிகளிடம் கேட்டதாகவும் இரண்டாவதையே விவசாயிகள் விரும்பியதாகவும் கூட ஒரு குஜராத் நண்பர் தெரிவித்தார்.

மொத்தத்தில் குஜராத் ஒரு வளமான மாநிலமே என்று உறுதியாக நம்மால் இப்போது சொல்ல முடிகிற நிலையில் நமது அடிப்படையான கேள்விக்கு வருவோம். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் நரேந்திர மோடிதான் முக்கிய காரணமா?

ஆமாம் என்று சொல்வோருக்கு அடுத்த கேள்வி. குஜராத் தனது பல ஆயிரம் ஆண்டு கால சரித்திரத்தில் எப்போது பின் தங்கிய மாநிலமாக இருந்தது? குஜராத்தின் கொழிக்கும் செல்வத்திற்கு ஆசைப் பட்டுதானே, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கஜினி முஹம்மது பதினேழு முறை இந்தியாவின் மீது படையெடுத்தான். சுதந்திர இந்தியாவில் கூட, நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே கூட, பெரும் தொழில்களின் இருப்பிடமாக குஜராத் மாநிலம்தானே திகழ்ந்தது? நரேந்திர மோடியின் மிகப் பெரிய சாதனையாக பலரால் கருதப் படுகிற சர்தார் சார்வோர் திட்டம் கூட இவர் ஆட்சிக்கு வரும் முன்னரே உருவாக்கப் பட்டு ஆரம்ப பணிகளும் முடிந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.(1940 களில் தீட்டப் பட்ட இந்த திட்டம் 1979 இல் ஆரம்பித்தது. 1999 இல் உச்ச நீதி மன்றம் அணையின் உயரத்தை அதிகப் படுத்த அனுமதி அளித்தது. குஜராத் மாநிலத்தின் இன்றைய நீர் வளத்திற்கு முக்கிய காரணம் இந்த திட்டம்தான். ஆனால் இதன் வெற்றிக்கான புகழ், இந்த நிகழ்வுகளுக்கு பின் அதாவது 2001 இல் பதவிக்கு வந்த நரேந்திர மோடியை சென்றடைந்தது மக்களின் ஞாபக மறதிக்கு ஒரு எடுத்துக் காட்டு)

மேலும் இந்தியாவின் சில பகுதிகள் (தமிழ் நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) எப்போதுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறியவையாகத்தானே இருந்திருக்கின்றன. பூகோள ரீதியாகவும் (கர்நாடகா - மிதமான வெட்ப நிலை, பஞ்சாப் - மண் வளம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ் நாடு - சிறந்த துறைமுகங்கள்), மனித வள ரீதியாகவும் (குஜராத், மகாராஷ்டிரா - வணிகத் திறன், பஞ்சாப் - உழைப்பு, தமிழ்நாடு - உழைப்புடன் தொழிற் திறமை) சில சிறந்த அம்சங்கள் இந்த பகுதிகளுக்கு காலம் காலமாக இருந்திருக்கின்ற காரணமாகவே இவை முன்னேறிய மாநிலங்களாக இருந்து வருகின்றன. இவற்றுக்கு எப்படி ஒருவரால் அல்லது ஒரு ஆட்சியால் உரிமை கொண்டாட முடியும்? மேலும் பீகார் மாநிலம் போன்ற பின்தங்கிய மாநிலத்தை மாற்றி அமைப்பது ஒரு பெரிய சாதனையாக கொள்ள முடியும். ஆனால், ஏற்கனவே நன்கு வளர்ந்த ஒரு மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை சற்று அதிகப் படுத்துவது ஒரு பெரிய சாதனையா என்பது கேள்விக் குறியே.

எனவே, இயல்பிலேயே பெரும் வணிகத் திறனும் அரசுக்கு வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைக்கின்ற மனப் பாங்கும் கொண்ட (கிட்டத்தட்ட) ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை உள்ளடக்கிய, காலம் காலமாய் வளமான மாநிலமாக திகழும் குஜராத் மாநிலத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் மட்டுமே நரேந்திர மோடி, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய பெரும்பாலும் வளர்ச்சியற்ற பகுதிகளையே கொண்டுள்ள ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது.

மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை அரசே துன்புறுத்துவது அல்லது அவர்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை போய் அதிக தீவிரவாதத்தையே உருவாக்கும் என்பது சரித்திரம் நமக்குத் தரும் பாடம். பாதுகாப்பற்ற உணர்வில் சிறுபான்மை மக்களை வாழச் செய்வது நீண்ட கால நோக்கில் எதிர்வினைகளையே உருவாக்கும். அக்சர்தாம் தாக்குதல், அஹ்மேடபாத் குண்டு வெடிப்பு, சூரத் நகரில் கண்டெடுக்கப் பட்ட வெடிகுண்டுகள் போன்ற நிகழ்வுகள் குஜராத்தை ஒரு பாதுகாப்பான மாநிலமாக மோடி மாற்றினார் என்ற வாதத்தை பிசுபிசுக்க செய்கிறது.

இப்போது தனிப் பட்ட முறையில் நரேந்திர மோடியின் சாதக பாதக அம்சங்கள் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

செயல் படும் முதல்வர் : இன்றைய தேதியில் இந்தியாவிலேயே வெகு சிறப்பாக செயல் படும் அரசு குஜராத் அரசு என்று கருதப் படுகிறது.

விரைந்து முடிவெடுக்கும் திறன்: நானோ தொழிற்சாலை ஒரு சிறந்த உதாரணம்.

தொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வம். - இது வெளிப் படையான உண்மை.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறைந்து காணப் படுதல் - எதிர் கட்சியினரால் கூட பெரிய குற்றச்சாட்டுகளை இவர் மீது சாட்ட முடியவில்லை. இதன் காரணமாகவே மத கலவரத்தை அடிப்படையாக கொண்டே சென்ற மாநில தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

இப்போது பாதக அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

மதச் சாயம் பூசப் பட்ட முதல்வர் - குஜராத் கலவரத்தின் முதல் மூன்று நாட்கள் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டது இவர் மீது சுமத்தப் படும் மிகப் பெரிய மற்றும் வலுவான ஒரு குற்றச் சாட்டு. ஹிட்லர் போலவே தனது பாசிச கொள்கைகளை மக்கள் மறக்கச் செய்யவே "முன்னேற்றம்" என்ற முகமூடியை நரேந்திர மோடி அணிந்து கொண்டதாகவும் எதிரணியினரின் குற்றச் சாட்டுகள் உண்டு.

தன்னிச்சையான போக்கு- இது குறித்து பா.ஜ.க. கட்சியினரே வெளிப் படையாக குற்றம் சாட்டுவது உண்டு. மேலும் பா.ஜ.க. மத்திய தலைமைக்கும் இவருக்கும் இடையே ஒரு பனிப் போர் நிலவுவதற்கு இவரது தன்னிச்சையான போக்கே காரணம் என்று சொல்லப் படுகிறது.

இப்போது, நரேந்திர மோடி நாடாளலாமா என்ற கேள்விக்கு வரலாம். இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கு வர பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற, தேர்தலில் நிற்க தகுதியுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதற்கு அவர் வாய்ப்புகள் உண்டா என்பதே பெரிய கேள்வி.

பா.ஜ.க.கட்சியே தனது மதச் சாயலை தவிர்க்க பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் குஜராத் வன்முறையில் பலமான குற்றச்சாட்டுகள் சாட்டப் பட்டுள்ள இவர் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப் படுவாரா என்பதே ஒரு மிகப் பெரிய கேள்வியாகும்.

குஜராத் மாநிலத்தில் இவர் செய்து காட்டிய சாதனைகளின் அடிப்படையிலும் இவரை முன்னிறுத்துவது பா.ஜ.க.வுக்கு கடினமான ஒரு விஷயம். "முன்னேற்றம்" என்ற கோஷத்தை வைத்து நடைபெற்ற முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், செயல்படும் தலைவர்களாக கருதப் பட்ட சந்திர பாபு நாயுடு, எஸ்.எம்.கிருஷ்ணா, திக்விஜய் சிங் ஆகியோர் அடுத்த தேர்தலில் பதவியை இழந்ததும் கவனிக்க வேண்டிய விஷயம். இதிலிருந்து சாதாரண இந்திய மக்கள் "முன்னேற்றம்" என்பது சில புள்ளிவிவரங்களிலும் சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதிலும் இல்லாமல் தமது சொந்த வாழ்வில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஆக மொத்தத்தில் நரேந்திர மோடி இப்போதைக்கு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் பட மாட்டார் என்றும் நிறுத்தப் பட்டாலும் வெற்றி வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் கருதுகிறேன். எனவேதான், பிரதமர் பதவிக்கு இப்போதைக்கு போட்டியிட அவரே விரும்ப வில்லை என்றும் கூறப் படுகிறது. மேலும் பெரும்பான்மையான இந்தியரால் ஏற்றுக் கொள்ள படுகிற வகையில் தான் 'வளர்ந்த' பின்னரே பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிட விரும்புவதாகவும் சில பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இந்தியாவிற்கு வளர்ச்சியைத் தர சிறப்பாக செயல் படும் ஒரு பிரதமர் தேவையென்றாலும், பலதரப் பட்ட கலாச்சாரங்களையும் சமூக பொருளாதார வேறுபாடுகளை கொண்ட பகுதிகளையும் உள்ளடக்கிய இந்த மிகப் பெரிய நாட்டிற்கு பிரதமர் பதவிக்கு வர ஒருவருக்கு (எனது பார்வையில்) மேலும் சில முக்கியமான தகுதிகள் வேண்டும்.

உயரிய சிந்தனைகள்
சாதாரண மக்களை வாழ்வில் உயர்த்த விருப்பம்
அதற்கான நீண்ட கால நோக்குடன் கூடிய திட்டங்கள் தீட்டும் திறன்.
செயல் படும் தலைமை
பலதரப் பட்ட மக்களை புரிந்து கொள்ளும் திறமை
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை.
பாரபட்சமற்ற பார்வை.
பொதுவாழ்வில் தூய்மை.
தேசத்தின் பாதுகாப்பில் உறுதி.

இது ஒரு சிறிய லிஸ்ட்தான். பிரதமர் பதவிக்கு இன்னும் பல தலைமை பண்புகள் தேவை. இத்தகைய தகுதிகளை நரேந்திர மோடி வளர்த்துக் கொள்வாரேயானால், அவர் இந்தியாவின் பிரதமராக என்னைப் போன்ற சாதாரண இந்திய மக்களால் தயக்கமின்றி வரவேற்கப் படுவார்.

நன்றி.

Tuesday, January 20, 2009

இந்தியாவின் ஒபாமா?


இன்று உலகின் சரித்திரத்தின் மிக முக்கியமான நாள். சுரண்டலின் அடையாளமாக திகழும் அமெரிக்காவின் தலைவராக பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப் பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார். உலகின் மிக வலிமையான ஒரு ஜனநாயக நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாக ஏற்பட்டுள்ள இந்த புரட்சி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் (அதுதாங்க நம்ம இந்தியா) சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரைப் போன்றே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல நூற்றாண்டுகளாக நேர்மையற்ற முறையில் ஒடுக்கப் பட்ட தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவாரா என்றும் அப்படி ஆவது எப்போது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

அது வேறு இது வேறு என்று நினைப்பவர்களுக்காக, பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருவேறு திசைகளில் அமைந்திருக்கும் இரு பெரும் நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஏற்பட்ட இரண்டு சமுதாய மீட்சி இயக்கங்களுக்கிடையே உள்ள அதிசயத்தக்க சில ஒற்றுமைகள் பற்றி பார்ப்போம்.
தங்களுக்குள்ள நியாமான உரிமைகள் பற்றியும், தம் மீது இழைக்கப் படும் கொடுமைகளை எப்படி களைவது என்பது பற்றியும் பெருமளவு விழிப்புணர்வு நலிவுற்ற சமுதாயங்களுக்கு இல்லாத காலகட்டத்தில், இவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர்கள் இரண்டு நாட்டிலும் பிறப்பால் ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்திருந்தாலும் மனதால் சமுதாய சீர்திருத்தத்தை விரும்பிய சிலர்தான். அதே சமயம் ஒட்டுமொத்த நாட்டைச் சீர்திருத்த முயன்ற ஒரு பெரிய இயக்கத்தின் சிறு பகுதியாகவே ஒடுக்கப் பட்டவர்களை ஓரளுவுக்கேனும் உயர்த்தும் முயற்சி இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் அமெரிக்காவை ஒன்றிணைக்க அமெரிக்காவில் ஏற்பட்ட புனரமைப்பு இயக்கத்தின் (Reconstruction Movement) ஒரு பகுதியாக "அடிமை கலாச்சாரத்தை" ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தியர்களை சமூக ரீதியாக ஒருமைப் படுத்த இந்தியாவில் தோன்றிய ஆர்யா சமாஜ், பிரம்ம சமாஜ் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் "தீண்டாமை ஒழிப்பு" பணியிலும் ஈடுபட்டன. உயரிய சமுதாய கொள்கைகள் இந்த இயக்கங்கள் கொண்டிருந்தாலும், அவர்களுடைய பணிகளின் வீச்சும் பலனும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. மேலும் அடிபட்டவர்களின் வலி முழுமையாக தெரியாதவர்களால் இந்த இயக்கங்கள் நடத்தப் பட்டதால் இந்த இரு இயக்கங்களுமே பெரிய வெற்றி பெற வில்லை. அதே சமயம், பிற்காலத்தில் நடைப் பெற்ற பெரும் மாற்றங்களுக்கு இவை அடிகோலின என்பதை மறுக்க முடியாது.

இந்த புரட்சியின் இரண்டாம் பாகம் இரண்டு நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரின் வானில் விடி வெள்ளியாக அதே இனத்தைச் சேர்ந்த மார்ட்டின் லுதேர் கிங் அவர்களும், இந்திய தலித்துகளின் பகலவனாக அவர்களிடமிருந்தே அம்பேத்கர் அவர்களும் புரட்சிக்கு தலைமை வகிக்க முன் வந்தனர். தங்களது இனத்தைச் சார்ந்த ஒருவர் ஆதிக்க வர்க்கங்களில் இருந்து வந்த தலைவர்களுக்கு சமமான தகுதிகளுடன் அவர்களுக்கு இணையாக அரசியல் வானில் உயர்ந்தது இந்த இனங்களின் மக்களுக்கு புதிய தன்னம்பிக்கையும் எழுச்சியையும் அளித்தது.

அடிமைகள் எனப் பொருள் படும் "நீக்ரோக்கள்" என்ற பெயரில் முதலில் வழங்கப் பட்டு, ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்த மிதவாதிகளால் பின்பு "கறுப்பர்கள்" எனப் பெயர் சூட்டப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் தம் பெயர் மீது இருந்த மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க விரும்பி தம்மைத் தாமே "ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர்" என்று அழைத்துக் கொண்டனர். இதே போல, முதலில் கீழ்சாதி என்றும் தாழ்த்தப் பட்டவர் என்றும் அழைக்கப் பட்ட தலித் மக்கள், "ஹரிஜன்" என்று ஆதிக்க வர்க்கத்தினரால் சூட்டப் பட்ட பெயரையும் விரும்பாமல், தம்மைத் "தலித்" என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்பினர்.

வர்க்க வேறுபாடுகளுக்கு மதமே மூல காரணம் என்று நம்பிய ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் பெரும் எண்ணிக்கையில் கிறித்துவ மதத்தை விட்டு விலகி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர். கிட்டத் தட்ட அதே சமயத்தில் இந்திய தலித்துகள் தம்மை பிறப்பிலேயே தாழ்ந்தவராக வைத்த ஹிந்து மதத்தை விட்டு அம்பேத்கர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்தில் இணைந்தனர்

அதே சமயம் மார்டின் லூதர் கிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களுக்கு நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர தகுதிகள் பல இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வில்லை. ஆனால், அந்த வாய்ப்பை சுரண்டப் பட்ட சமுதாயங்களின் பிந்தைய சந்ததிகள் பெறக் கூடிய வகையில் அடித்தளம் போட்டவர்கள் இவர்கள் என்பதை மறுக்க முடியாது.

சமுதாய மாற்றத்தின் மூன்றாம் பகுதியாக, சுரண்டலின் சின்னமாகவும், ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவும், முதலாளித்துவத்தின் அடையாளமாகவும் அறியப் படும் அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் அடிமைகளாக கருதப் பட்டவர்களின் இனத்திலிருந்து ஒருவர் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

சரித்திரம் சொல்லும் ஆச்சரியகரமான ஒற்றுமைகளின் அடிப்படையில் இப்போது அமெரிக்காவில் ஒபாமா அடைந்த வெற்றியினை இந்தியாவில் பழமைவாதத்தின் அடிப்படையில் பிறப்பினாலேயே தாழ்ந்தவராக கருதி ஒடுக்கப் பட்ட தலித் இனத்திலிருந்து வரும் ஒருவர் பெறுவாரா என்பது இப்போது எழுந்துள்ள ஒரு கேள்வி.

பலருடைய பார்வை இப்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி அவர்களின் மீதுதான் உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள இவர், மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளர் எனவும் அறியப் படுவது குறிப்பிடத் தக்கது. இவரையும் ஒபாமாவையும் சற்று ஒப்பிடலாம்.

ஒபாமாவின் தந்தை ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் என்றாலும் தாயார் ஐரோப்பிய-அமெரிக்கா இனத்தைச் சார்ந்தவர். மேலும், தாயாரின் குடும்பத்திலேயே மேல்தட்டு நாகரிகத்துடன் வாழ்ந்து உயர்ந்த கல்வி மற்றும் சமூக வசதிகளைப் பெற்றவர் ஒபாமா. அதே சமயம் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடுமையான சூழல்களுக்கிடையே போராடியே வாழ்வில் உயர்ந்தவர் மாயாவதி. இந்த வகையில் மாயாவதியின் வெற்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

பெரும்பாலும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் அமெரிக்கத் தேர்தல் பிரசாரங்களில் தனது தனிப் பட்ட விவாதத் திறனால் மக்களைக் கவர்ந்தவர் ஒபாமா. சாதி மற்றும் வாக்கு வங்கிகளின் அடிப்படையிலேயே நடைபெறும் இந்தியத் தேர்தலில் தனது சிறந்த மேடைப் பேச்சுத் திறனாலும் சாதுரியமான வேட்பாளர் தேர்வாலும் உத்திரப் பிரதேச தேர்தலில் வென்றவர் மாயாவதி.

ஒபாமா ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாக அறியப் படாமல் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூடியவராகவே அறியப் படுகிறார். அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாகவே அறியப் படும் மாயாவதி மற்ற இனத்தவரால் குறிப்பாக மேல்தட்டு மக்களால் சாதிக் கட்சி தலைவராகவே அறியப் படுகிறார். இதை மாற்ற இப்போது முயற்சி செய்து வரும் மாயாவதி கடந்த உ.பி. தேர்தலில் பல இடங்களில் ஆதிக்க சாதியைச் சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தியதும், அந்த முயற்சி உ.பி. சட்ட மன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற உதவியதும் நாம் அறிந்ததே. இத்தகைய சாதுர்ய முயற்சி (கூட்டணி அரசியலாக வடிவெடுத்து) இந்தியா முழுதும் வெற்றி பெறுமேயானால் மைய அரசியலில் மாயாவதியின் முன்னேற்றம் தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பது என் கருத்து.

ஒபாமா மாற்றத்தின் அடையாளமாகவும் நம்பிக்கையின் சின்னமாகவும் பெரும்பாலான அமெரிக்கர்களால் அறியப் படுகிறார். அதே சமயத்தில் மாயாவதி பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இந்தியாவின் ஒரு சராசரி அரசியல்வாதியாகவே அதிகம் உணரப் படுகிறார்.

இப்படி இருவருக்குமிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், இப்போதைக்கு இந்தியாவின் தலைமைப் பொறுப்பேற்க அதிகம் வாய்ப்புள்ள தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் மாயாவதி என்றே கருதப் படுகிறது. இவரால் தலைமைப் பதவிக்கு உடனடியாக வரமுடிய வில்லையென்றாலும், அப்படி வந்து அதில் நீடிக்க முடிய வில்லையென்றாலும் கூட, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் (அது மாயாவதியாகவே கூட இருக்கலாம்) , அதன் தனி பிரதிநிதியாக உணரப் படாமலேயே, பெரும்பாலான இந்தியரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கு வர அதிக காலம் பிடிக்காது என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை விதைத்தது, இவ்விரு பெரிய நாடுகளில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களின் தோற்றங்களும், வளர்ச்சிகளும் வேறுபட்டு இருந்தாலும் விளைவுகள் கிட்டத்தட்ட ஒன்றே போலவும் ஒன்றையொன்று காலரீதியாக ஒட்டி அமைந்ததும்தான்.

ஒபாமா வெற்றி பெற்ற போது போட்டி வேட்பாளர் "மக்.கைன்" கூறியது.

"ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.''

இதே போல பல ஆயிரம் ஆண்டுகளாக கொடுமைப் படுத்தப் பட்டுள்ள தலித் இன மக்களில் இருந்து ஒருவர், மற்றவர்களின் அனுதாபத்தாலோ அல்லது அவர்கள் இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவோ அல்லது வெறுமனே சிம்பாலிக்காகவோ இல்லாமல், பெரும்பாலான இந்திய மக்களால் தனது தனிப் பட்ட தகுதியினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் அமர்வாரேயானால், அந்நாள் இந்தியாவின் பொன்னாளாக இருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

Sunday, January 18, 2009

ஒபாமாவே வருக! நம்பிக்கையைத் தருக!


பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், வங்கிகள் மூடப் படுதல், வாகனத்துறை வீழ்ச்சி மற்றும் சந்தை ஊழல்கள் என கெட்ட செய்திகளாகவே வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து பல நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, வரும் வாரத்தில் திரு.ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் முதல் குடிமகனாக பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி. பல நூற்றாண்டுகளாக கொடுமைபடுத்தப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் என்பது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வு ஆகும்.

அதே சமயம், பல ஆண்டுகளாக ஒரே (பொருளாதார) பாதையில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவிற்கு (ஓரளவிற்கேனும்) வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் பொறுப்பேற்கிறார் என்பது சந்தைகளிற்கு சற்று தெம்பைக் கொடுக்கும் விஷயம். இந்த தெம்பு வரும் வாரத்தில் சந்தைகளில் என்ன மாற்றம் தர உதவும் என்று பார்க்கலாம்.


சென்ற வார சந்தை நிலவரம்


நாம் எதிர்பார்த்தது போலவே, சத்யம் ஊழல் மற்றும் சரிவைக் காட்டும் அமெரிக்க பொருளாதார புள்ளி விவரம், சென்ற வாரம் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் ஊழல் பற்றி தினந்தோறும் வரும் புதிய தகவல்களும், முதலில் சத்யம் நிறுவனத்தை மீட்கலாம் என்று களத்தில் இறங்கிய மத்திய அரசு, ராஜு செய்த மோசடியின் வீச்சு கண்டு சற்று தயங்கியதும், இந்த வார வீழ்ச்சிக்கு பெரிய காரணங்கள்.


பொருளாதார பின்னடைவு குறித்த அச்சத்தின் காரணமாக உலக சந்தைகள் இந்த வாரம் பெரும் சரிவை சந்தித்ததும் நமது சந்தைகளின் நம்பிக்கையைச் சிதைத்தன. அமெரிக்க வங்கிகளின் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் மிக மோசமாக இருந்ததும் நமது சந்தைகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.

அதே சமயம், இந்திய கார்பொரட் உலகத்தின் அச்சாணிகளான அண்ணன்-தம்பிகளுக்கிடையேயான எரிவாயு பங்கீடு குறித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்ற பலமான வதந்தியும் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தி விரைவில் தொடங்கும் என்ற செய்திகளும் சந்தைக்கு ஊக்கத்தைத் தந்தன. மேலும் சரியும் பணவீக்கம் (5.24), அதனடிப்படையில் வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற நம்பிக்கைகளைத் தந்தது. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் இந்த வாரம் சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்தன. டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை ஏமாற்றத்தைத் தந்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மென்பொருள் துறை பங்குகள் சிறப்பாக செயல் பட உதவியது. வங்கிகளின் நிதி அறிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், உலகளாவிய நிதித் துரையின் வீழ்ச்சி இந்திய வங்கிகளின் பங்குகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வீழ்ச்சி சென்ற வாரமும் தொடர்ந்தது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்தன.


வரும் வார சந்தை நிலவரம்.


மேலே கூறியது போல, ஒபாமா வருகை சந்தைகளுக்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். திங்கள் கிழமை அமெரிக்கா சந்தைகளுக்கு விடுப்பு என்பதால், வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் இந்திய சந்தை நல்ல நிலையில் இருக்கக் கூடும். சென்ற வாரம் சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்ததும் சந்தைக்கு ஒரு நல்ல தெம்பை கொடுக்கும்.


அதே சமயத்தில், சந்தை மிக அதிக முன்னேற்றம் காணும் என நம்புவது கடினம். அமெரிக்கா நிதி சந்தைகளின் நிலை மற்றும் இந்திய நிறுவனங்களின் (முக்கியமாக ரிலையன்ஸ்) காலாண்டு அறிக்கைகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.


வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9500-9600, 9900-10100,
நிபிட்டி 2900-2930, 3000-3030

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்


சென்செக்ஸ் - 8950-9050, 8400-8500,
நிபிட்டி - 2700-2725, 2475-௨525


நிபிட்டி 2700 க்கு (சென்செக்ஸ் 9000) கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம்.

நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மேல் தொடரும் வரை தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 48.00 இலிருந்து 49.50 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.


நன்றி

Saturday, January 17, 2009

தடுமாறும் இந்திய திரைப்படத் துறை


2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "கஜினி" 200 கோடி வசூல், "சிங்க் இஸ் கிங்" வசூல் மழை, "தசாவதாரம்" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது.

ஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த வருடம் திரைப் படத் துறையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களின் பங்குகள் மற்ற தொழிற் துறைகளைச் சேர்ந்த பங்குகளை விட மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்ததும் சினிமா துறையின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.

தெலுங்கு திரையில் வெளிவந்த படங்களில் தொண்ணூறு சதவீதம் வணிக ரீதியான தோல்வி பெற்றன எனவும் தமிழில் வெளி வந்த 115 படங்களில் 100 படங்கள் தோல்வியைச் சந்தித்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் திரைப் படத் துறை கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று விநியோகஸ்தர் சங்கத் தலைவர் (கலைப் புலி சேகரன்) கூறுகிறார். மற்ற மொழி திரை உலகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஹிந்தி திரையுலகம் கூட இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக சில திரையுலக வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில், இந்திய திரையுலகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. பல புதிய திரை முயற்சிகள் (மர்ம யோகி போன்றவை) தள்ளிப் போடப் பட்டுள்ளன. ஹிந்தியில் தொண்ணூறு சதவீத புதிய முயற்சிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தயாரிப்பில் உள்ள திரைப் படங்கள் வெகுவாக காலதாமதமாகுவதாகவும் பிரபல ஹிந்தி திரைப் பட தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறுகிறார். நம்மூரில் கூட ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் "எந்திரன்" கைமாறியதற்கும் திரையுலகை வாட்டும் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணம் எனக் கருதப் படுகிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு அலசல்.

காசுக்கேற்ற பணியாரம் இல்லை.

மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் திரைப் படங்களைப் பார்ப்பதற்கான செலவினை கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாநகரத்தில் வாழும் ஒரு சிறிய குடும்பம் ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சாதாரணமாக ஆகும் செலவு கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய். செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது. அதிக செலவு செய்து பார்த்த படம் திருப்தி இல்லாத போது பணம் ஏமாற்றப் பட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. அதே நடிகர் அல்லது இயக்குனரின் அடுத்த படத்தை அவர்கள் பார்க்க இரு முறை யோசிப்பார்கள். மேலும், ஒட்டு மொத்த பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட் செலவு செய்து அரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்க்க முன் போல மத்திய தர வர்க்கத்தினர் முன் வருவார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

சின்னத் திரை வழங்கும் போட்டி

வீட்டிற்குள்ளேயே வரும் சின்னத் திரை முக்கியமாக நெடுந்தொடர்கள் பெரிய திரைக்கு கடும் போட்டியைத் தருகின்றன. நெடுந்தொடர்களின் ஒரு நாள் பகுதியைக் கூட தியாகம் செய்ய (திரைப்படம் பார்க்க) பல தாய்மார்கள் தயங்குவது பெண்களின் கூட்டம் வார நாட்களில் அரங்குகளில் குறைந்துக் காணப் பட முக்கிய காரணமாகிறது. திரை இயக்குனர் செல்வராகவன் சொல்வது போல, சின்னத் திரையில் ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து காட்டப் படுவது மக்களுக்கு ஒரு வித திகட்டலையே தருகிறது.

மலிவான வியாபார தந்திரங்கள்

மக்களை திரை அரங்குக்கு வரவழைக்க திரை உலக வியாபாரிகள் மேற்கொள்ளும் மலிவான முயற்சிகள் நீண்ட கால நோக்கில் எதிர்வினையையே ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த "பல நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் புக் செய்யப் பட்டு விட்டன", "இது வரை இல்லாத அளவிற்கு வசூல் மழை" (வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இது ஒரு ஹவாலா முயற்சி என்று கூட சொல்லப் படுகிறது) என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுவதைக் கூறலாம். "சிங்க் இஸ் கிங்" என்ற படத்திற்கு இவ்வாறே விளம்பரம் செய்யப் பட்டிருக்க, மேலும் ஒரு தினப் பத்திரிக்கையோ மிகச் சிறந்த படம் என சான்றிதழ் வழங்க, நான் இது ஒரு காணுதற்கரிய படம் என்று நம்பி அரங்கிற்கு செல்ல மிஞ்சியது ஏமாற்றமே. படம் வெளி வந்து நான்காவது நாள் மாலைக் காட்சியில் முன்னூறு பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்தது என் குடும்பத்தையும் (3) சேர்த்து மொத்தம் பத்திற்கும் கீழே. சான்றிதழ் வழங்கிய தினத்தாள் அந்த படத்திற்கு ஒரு "மீடியா பார்ட்னர்" என குறிப்பிடப் பட்டிருந்தது எனக்கு வெறுப்பையே தந்தது.

நிதி பற்றாக் குறை.

இந்திய திரையுலகம் ஒரு தொழிற் துறையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் சரிவர அங்கீகரிக்கப் படாதது, திரை உலகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம். மேற்சொன்னபடி, வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ள துறையாக சினிமாத் துறை இருப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. சினிமா துறை பங்குகளின் செயல்பாடு போதுமான அளவிற்கு திருப்தியாக இல்லாததால் பங்கு சந்தையிலும் நிதி திரட்ட திரையுலகத்தினருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு படம் தயாரிக்கும் செலவில் பெரிய பங்கு (நடிகர்களின் ஊதியத்திற்கு அடுத்தபடியாக என்று கூட கூறலாம்) வட்டிக்கே போகிறது. திரைப் படம் தயாரிப்பில் மற்றும் வெளியீட்டில் ஏற்படும் தாமதங்கள் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்து ஒரு கேள்விக் குறி

ஸ்டார் நடிகர்களுக்கு உள்ளதாக சொல்லப் படும் "மக்களை அரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி" இந்த ஆண்டு பெருமளவு வெளிப் பட வில்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணம், பெரிய நடிகர்கள் நடித்த குசேலன், யுவராஜ் போன்ற படங்கள் அடைந்த தோல்வி. ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி "குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?" என்பதே. எனவே மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

ஹாலிவுட் படங்கள் தரும் போட்டி

மொழிமாற்றம் செய்யப் படும் ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு கடும் சவாலாக விளங்குகின்றன. சிறந்த தொழிற் நுட்பம், நேர்த்தியான கதை அமைப்பு, அரங்குகளில் மட்டுமே அனுபவிக்க முடிகிற பிரமாண்டம், கலைஞர்களின் தொழிற் அர்ப்பணிப்பு தன்மை இவற்றுடன் எளிதில் புரிய உதவும் தாய்மொழி மாற்றம் ஆகியவை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெரும் வெற்றி பெற காரணமாக அமைகின்றன.

இந்திய திரைத் துறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


இதற்கான பதிலை நாம் சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் இருந்தே பெற முடியும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்கவை கஜினி மற்றும் தசாவதாரம் ஆகியவை. எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு கடும் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்ததே இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. இவ்விரண்டு படங்களும் வெளி வர நீண்ட காலம் பிடித்தாலும் இடை பட்ட காலத்தில் மிகச் சிறந்த விளம்பர யுக்திகள் பின் பற்றப் பட்டதும் இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்க அஞ்சாதே மற்றும் சுப்ரமணியபுரம் ஆகியவை ஸ்டார் நடிகர்கள் இல்லையென்றாலும் கூட சிறந்த வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்தன.

எந்த ஒரு தொழிற்துறையிலும் செய்த முதலீட்டைப் போல பல மடங்கு லாபம் அதுவும் அதிக உழைப்பின்றி குறுகிய காலத்தில் பார்க்க முனைவது பல சமயங்களில் எதிர் வினையையே ஏற்படுத்தும் என்பது வணிக நியதி. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய திரைத் துறையினர் செய்ய வேண்டியது என்ன?

௧. தமது (மொழிக்கான அல்லது வட்டாரத்திற்கான) சந்தை வீச்சை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட் இடுதல். தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல். சிக்கனம் கூட ஒரு வகையில் வணிக ரீதியான வெற்றிக்கு உதவும்.


௨. ஸ்டார் நடிகர்களின் சம்பள பணத்தை படத்தின் மொத்த பட்ஜெட்டின் குறிப்பிட்ட விகித்தத்திற்குள் வைத்தல். முடிந்த வரை சிறந்த கதையமைப்பிற்கு மற்றும் தொழிற் நுட்ப நேர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல். இதன் மூலம் நுகர்வோருக்கு அதுதாங்க ரசிகர்களுக்கு அதிக திருப்தியை வழங்க முடியும்.

௩. சிறந்த திட்டமிடல் அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே முழுமையான திட்டம் இருப்பது படத்தின் செலவைக் குறைப்பதோடு திரைப் படம் நேர்த்தியான முறையில் வெளியாக உதவும். சிறந்த திட்டம் பாதி வெற்றிக்கு கியாரண்டி.

௪. அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். "குறைந்த விலை அதிக லாபம்" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.

லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கோடிக் கணக்கான மக்களின் பொழுது போக்கு சாதனமாகவும் உள்ள இந்திய திரைப் படத் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வரும் ஒரு தொழிற் துறையாக நீடித்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.

நன்றி.

Monday, January 12, 2009

திருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்


பரவலாக எதிர்பார்க்கப் பட்டது போலவே ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னவென்று பார்ப்போம்.

தி.மு.க. :

குடும்பம் மற்றும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வரும் இந்த வேளையில் திருமங்கலம் தொகுதி வெற்றி கட்சித் தலைமைக்கு ஓரளவுக்கு திருப்தியைத் தந்திருக்கக் கூடும். அதே சமயம் ஒரு சிறிய தொகுதியில் முழு அரசு பலத்தையும் காட்ட முடிந்தது போல, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காட்ட முடியாது என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை அப்போது என்னவாக இருக்கும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருப்பதாலும் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. பொருளாதார தளர்ச்சியின் பாதிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள இன்றைய சூழலில் சாதாரணமாக மக்களின் கோபம் ஆளுங்கட்சியின் மீதே திரும்ப வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, உடனடியாக தேர்தலை விரும்பாத மத்திய அரசு குறுகிய கால நோக்கில் பல பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை (பெட்ரோல் விலை குறைப்பு, வட்டி வீத குறைப்பு போன்றவை) எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் பெருமளவு பலன் தராத பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு பொதுத் தேர்தல் கடும் சவாலாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.

அ.தி.மு.க.:

இந்த தேர்தலின் மூலம் தி.மு.க. விற்கு மாற்றுக் கட்சியாக அ.தி.மு.கவையே மக்கள் கருதுகிறார்கள் என்பதும் மூன்றாவது நான்காவது கட்சிகள் பெருமளவு வோட்டுகளைப் பெற வில்லை என்பதும் அ.தி.மு.க. தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயங்கள். ஏற்கனவே சொன்னபடி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் இப்போதைய பொருளாதார தளர்ச்சி நீடிக்குமேயானால், அதன் பலன் அ.தி.மு.க.விற்கே அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், வெற்றி பெற்றால் அ.தி.மு.க. தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும், புதிய ஆட்சியில் அ.தி.மு.க. வின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அதன் தலைமை தெளிவு படுத்த வேண்டி இருக்கும். மேலும் பா.மா.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது, ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை தர உதவும் என்று கருதுகிறேன்.

தே.மு.தி.க. :

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பின்னர் வந்த இடைத் தேர்தலிலும் மிகப் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்திய தே.மு.தி.க. இந்த தேர்தலில் டெபொசிட் இழந்துள்ளது இந்த கட்சியும் ம.தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகளின் நிலையை (சிறந்த துவக்கத்திற்கு பின்னர் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிப் போனது) அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு நல்ல மாற்று போல துவக்கத்தில் தோற்றமளித்த இந்த கட்சியில் ஏற்பட்ட தலைமையின் குடும்ப தலையீடுகள் மற்றும் வாய் சவடால்கள் காரணமாக இந்த கட்சிக்கும் மற்ற திராவிட கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டதாலேயே இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை இந்த கட்சி பெற்றுள்ளது என்று கருதுகிறேன். இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சியால் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல, பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது அகில இந்திய அளவில் ஒரு அறிமுகத்தையும், நிதி தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பத்தோடு பதினொன்றான ஒரு கூட்டணி கட்சியாக மாறி மக்கள் மதிப்பை இழக்க வேண்டி இருக்கும். எனவே இந்த தேர்தல் முடிவுகள் கட்சித் தலைமைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

இதர கட்சிகள்:

கூட்டணியை மாற்ற காங்கிரஸ்சின் தமிழக கிளையின் ஒரு பிரிவினர் செய்து வந்த முயற்சிகள் இப்போதைக்கு பின்னடைவை சந்திக்கும். எந்த கட்சியுடன் கூட்டு என்ற பாமகவின் முடிவு பொதுத் தேர்தல் வரும் வரை தள்ளிப் போடப் படலாம். நான்காவது ஐந்தாவது இடம் பெற்ற கட்சிகள் ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து (சீட்டு இல்லாமல்) போட்டி இடலாம். அல்லது ஒரு மாபெரும் (?) மூன்றாவது கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம்.

வன்முறை:

தமிழகம் இதுவரை காணாத வன்முறையை இந்த தேர்தல் கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீர், பீகார் மாநிலங்களின் தேர்தல்களை விட அதிக வன்முறை திருமங்கலம் தேர்தலில் நடைபெற்றதாக தேர்தல் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கட்சிகள் இந்த தேர்தல் முடிவை கௌரவ பிரச்சினையாக நினைத்ததே இந்த வன்முறைக்கு காரணம் என்று நினைக்கிறேன். இது வருத்தத்துக்குரிய மற்றும் கடுமையாக கண்டிக்கத் தக்க விஷயம் என்றாலும், பரவலான பொதுத் தேர்தலின் போது இத்தகைய வன்முறை நிகழாது என்று நம்புகிறேன்.

ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஆதிக்கமே இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்பதையே இந்த இடைத் தேர்தல் முடிவு காட்டுவதாக கருதுகிறேன். மேலும் இந்த இரண்டு கட்சிகளில் (கூட்டணிகளில்) நாடாளுமன்ற தேர்தலுக்கான வியுகத்தை சிறப்பாக அமைக்கிற கட்சியே (கூட்டணியே) வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

நன்றி

Sunday, January 11, 2009

"சத்ய" சோதனை


சந்தைகளுக்கு இப்போது அக்னி பரிட்சைக் காலம். சத்யம் நிறுவனத்தையும் இந்திய வணிக நிறுவனங்களின் நம்பகத் தன்மையையும் காப்பாற்ற மத்திய அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றி பெறும் பட்சத்தில் பங்குக் குறியீடுகளில் மீண்டும் ஒரு வளர்ச்சி நிலையை நாம் காண முடியும். தோல்வி பெற்றால் சந்தைகள் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும். வரும் வாரத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பலாம்.

சென்ற வார சந்தை நிலவரம்

சத்யம் நிறுவனத்தில் நடை பெற்றுள்ள ஊழல் வெளியாகும் வரை சந்தையில் நல்ல ஏறுமுகம் காணப் பட்டது. முக்கியமாக சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதும் சந்தையில் ஒரு எழுட்சி நிலையை உருவாக்கியது. ஆனால், சத்யம் தலைவரின் ஒப்புதல் கடிதம் வெளியிடப் பட்ட இரு தினங்களில் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் இரு தினங்களுக்குள்ளாகவே சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்த ஊழல் மூலம் சத்யம் மட்டுமில்லாமல் மேலும் பல இந்திய நிறுவனங்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தாமதமான செயல்பாடும் வீழ்ச்சிக்கு மற்ற முக்கிய காரணங்கள். பணவீக்கம் குறைந்ததும், கச்சா எண்ணெய் விலை சரிவும் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

வரும் வார சந்தை நிலவரம்.

சத்யம் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப் பட்டதும், அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை மாற்றி அமைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும் சந்தையின் மனநிலையை சற்றே தேற்ற முடியும். அதே சமயத்தில் மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க வேலை இழப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பது சந்தையின் நம்பிக்கையைச் பாதிக்கும். வணிக நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சற்றே அவநம்பிக்கையுடனேயே பார்க்கப் படும். சில நாட்களாக முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் கடைசி இரண்டு நாட்களில் பெருமளவு இந்திய பங்குகளை விற்றது சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், வரும் வாரத்தில் ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்தாலேயொழிய சந்தைகள் கீழ் நோக்கியே பயணிக்கும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9650-9750, 10200-300,
நிபிட்டி 2940-2970, 3130-60

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்

சென்செக்ஸ் - 9100-9200, 8650-8750
நிபிட்டி - 2780-2800, 2675-2700

நிபிட்டி 2780 க்கு கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம். நிபிட்டி 2950 புள்ளிகளுக்கு மேல் முடியும் பட்சத்தில் அருகே தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகத்தில் ரூபாய் மேலும் சரிவு அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 47.50 இலிருந்து 49.00 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.

நன்றி.

Friday, January 9, 2009

மக்களின் வெற்றி


பொதுவாக ஒரு மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும். அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இடைத் தேர்தலில் நின்றால் கேட்கவே வேண்டாம். எத்தனையோ நிர்பந்தங்கள் இருந்தாலும் சரியான முறையில் வாக்களித்து சட்டங்கள் தண்டிக்க தவறிய ஒருவரை தண்டித்தவர்கள் நாமெல்லோரும் படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதும் ஜார்கண்ட் மாநில மக்கள். அவர்களின் வெற்றியைக் பாராட்டுவதுடன் இந்த தேர்தலில் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை யாவை என்று பார்போம்.

இந்தியாவில் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் உதாரணம் காட்டக் கூடிய வகையில் இந்திய அரசியல்வாதிக்கு தேவையான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் கொண்டவர் திரு.ஷிபு சோரேன்.

ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு என்ன தகுதி இல்லை அவரிடம்?

ஊழல் குற்றச் சாட்டுக்கள்.

கிரிமினல் குற்றச் சாட்டுக்கள்

கொலைக் குற்றச்சாட்டுக்கள்.

தலைமறைவு வாழ்க்கை

காவலர்களால் கைது

நீதி மன்றங்கள் வழங்கிய தண்டனைகள்.

முன்ஜாமீன் மனுக்கள்

சிறை வாசம்

மேல் முறையீடுகளின் மூலம் தண்டனைகளில் இருந்து தகுந்த ஆதாரம் இல்லாமல் தப்பித்தல். (இங்கு கவனிக்க வேண்டியது. நிரபராதி என்பதால் அல்ல)

தில்லி உயர்நீதி மன்றமே ஒரு வழக்கில் குற்றங்களை காவல் துறை சரிவர நிருபிக்காததைச் சுட்டிக் காட்டியது. (Delhi High Court in August, 2007 cited the CBI as "miserably failing" in proving Soren's involvement in the crime.)

கூட்டணி மாற்றங்கள்.
கூட்டணி பேர குற்றச்சாட்டுகள்
ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டுகள்

இவை மட்டுமல்ல, முதல் முறையாக மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டுக்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட பெருமையும் கொண்டவர் இவர். அதன் அடிப்படையில் மிகுந்த நிர்பந்தங்களுக்கு பின்னரே பதவியை ராஜினாமா செய்த இவர் உடனடியாக தலை மறைவும் ஆக முடிந்த மந்திரக் கலைகள் கற்றவர்.

இவரைப் பற்றி உலகமே அறிந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கூட்டணி தர்மங்களின் (?) அடிப்படையில் இவருக்கு பலமுறை பதவிகள் மத்தியிலும் மாநிலத்திலும் வழங்கப் பட்டன. கடைசியாக, ஜார்கண்ட் மாநிலத்தின் பழைய முதல்வரைக் கவிழ்த்த இவரது கூட்டணி இவ்வளவு தகுதிகள் பெற்ற இவரையே முதல்வராக்கியது.

பதவி ஏற்று ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இடைத் தேர்தலில் நின்ற இவருக்கு ஜார்கண்ட் மக்கள் ஒரு சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். (இப்போது கூட முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள புதிய முயற்சிகள் செய்வதாக கேள்வி). இந்த தேர்தலில் நிஜமாக வெற்றிப் பெற்றவர்கள் அந்த தொகுதி மக்களே என்பது என் கருத்து.

இந்த உண்மையான இந்திய குடிமக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது யாவை என்று பார்ப்போம்.

தவறாமல் வாக்களிப்பது.

தயங்காமல் தவறிழைத்தவர்களை வாக்கினால் வீழ்த்துவது.

தேர்தலில் நிற்பவர்கள் எல்லாரும் மோசமாக இருக்க முடியாது. கண்டிப்பாக யாராவது ஒருவராவது நல்ல நோக்கங்களுடன் போட்டியிடுவார். அவரை கண்டறிந்து வாக்களிப்பது நமது கடமை.

நமது காலுக்குக் கீழ் சிலகாலம் உழைக்கின்ற செருப்பைத் தேர்வு செய்வதற்காக பல கடைகள் ஏறி இறங்கும் நாம், நமது தலையில் மேல் ஏறி பல வருடங்கள் உற்காரும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க கொஞ்சம் சிரமப் பட்டால் தவறில்லை.
நன்றி.

Thursday, January 8, 2009

மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை


இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.


நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது.


இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது.

இங்கே இரண்டாவது பாதையை தேர்ந்தெடுக்கும் நமது கழுகு ஒரு மலை உச்சிக்கு செல்கிறது.

அங்கே தனது அலகினால் ஒரு பாறையைக் கடுமையாக மோதி அலகினை தானே உடைத்துக் கொள்கிறது. புதிய அலகு வளர்ந்த பின்னர் தனது நகங்களை பிய்த்து எறிகிறது.

புதிய நகங்கள் முளைத்த பின்னர் தனது இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிகிறது.

சுமார் ஐந்து மாதங்களுக்கு பின்னர் புதிய இறகுகள் முளைத்து விட இந்த கழுகு புனர் ஜென்மம் பெறுகிறது.
அதன் பின்னர் இந்த கழுகு முப்பது ஆண்டுகள் நீண்ட புதிய வாழ்க்கையை வாழ முடிகிறது.

இந்த கதை தரும் பாடம்.

கடினமான சவால்கள் நிறைந்த நமது வாழ்வில் தாக்குப் பிடிக்க நாம் பல முறை புனர் ஜென்மம் எடுத்து நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மேற்சொன்ன கதையில் உள்ள கழுகைப் போல, தேவைப் படும் போது நமது பழைய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை நீக்கி காலத்திற்கு ஏற்றாற் போல புதிய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பழைய சுமைகள் நீங்கினால் நம்மால் சவால்களை உற்சாகமாக எதிர் கொள்ள முடிவதுடன் புதிய வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாற்றத்திற்கான பாதை எப்போதுமே வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வழிகளும் வேதனைகளும் நமக்கு மாற்றம் தேவையில்லையோ என்ற மாயையை உருவாக்கும். அப்போதெல்லாம் புனர் ஜென்மம் அடைய இந்த கழுகு அடைந்த வேதனைகளையும் (தனது உறுப்புகளை தானே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வேதனை?) மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்களையும் நம் கண்முன் ஒரு கணம் நிறுத்தினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்.

பழையன கழிவோம்.

புதியன புகுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: மேற்சொன்ன கதைக்கு அறிவியல் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை என்றாலும், இந்த கதை தரும் புதிய உற்சாகத்திற்காக பல உளவியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

பொருளாதார பயங்கரவாதம்


சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.

சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது. (இது குறித்து இன்னொரு பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது)

இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.

௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

பல ஆயிரம் பேர் வேலை.
முதலீட்டாளர்களின் பணம்.
இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
புதிய வெளிநாட்டு முதலீடுகள்.

சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நன்றி

Tuesday, January 6, 2009

தேவை ஒரு அரசியல் தீர்வு


கிளிநொச்சியின் வீழ்ச்சி தமிழர்களின் மீதான சிங்களர்களின் வெற்றியாக இலங்கையில் கருதப் படுவதும், அதனடிப்படையில் அங்கு பட்டாசு வெடிகளுடன் நடைபெறும் கொண்டாட்டங்களும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த நமது அச்சத்தை அதிகப் படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள ஜனதா விமுக்தி பெரமுணா போன்ற ஒரு சிங்கள அடிப்படைவாத அமைப்பு அதிக செல்வாக்கு பெற்று வருவதும், அந்த அமைப்பு வருங்காலங்களில் தமிழர்களுடன் அதிகார பங்கீடு ஏற்படுத்திக் கொள்வதை கடுமையாக எதிர்ப்பதும் கவலையைத் தருகிறது. தமிழர்கள் தற்போது இலங்கையில் படும் பாடு குறித்து சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரே (அதிலும் இலங்கை தேசிய அமைதிக் குழு தலைவர் டாக்டர்.பெரேரா) தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகுந்த மன வேதனையை தருகின்றன.

உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை ராணுவ ரீதியான வெற்றிகள் தொடர்ந்து நிலைத்ததில்லை என்பது வரலாறு தரும் செய்தி மற்றும் பாடம். இதற்கு அமெரிக்கா எனும் உலகின் மிகப் பெரிய வல்லரசு வியட்நாம் எனும் சிறிய நாட்டிடம் (நீண்ட கால அடிப்படையில்) தோல்வி அடைந்து வெளியேற நேரிட்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். இலங்கையில் தற்போது நடைபெறும் தமிழீழ போராட்ட சரித்திரத்தில் கூட இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

அது மட்டுமல்ல, இது போன்ற (போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் பார்க்காத) ராணுவ தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவதால் முன்னிலும் அதிக போராளிகள் பிற்காலத்தில் உருவாகி இருக்கிறார்கள் என்பதற்கு சரித்திரம் பல சான்றுகளைக் கொண்டிருக்கிறது. எனவே சிங்கள ராணுவத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் எந்த ஒரு நிரந்தர தீர்வையும் கொடுத்து விட முடியாது என்பது எனது தனிப் பட்ட கருத்து. (பாலஸ்தீனியனில் தற்போது நடைபெறும் தாக்குதலுக்கு கூட கிட்டத் தட்ட இது பொருந்தும்).

எனவே, எதிர்ப்பினை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மேலும் அதிக எதிர்ப்புகளையும் விரோதங்களையும் உருவாக்கும் இது போன்ற செயல்களை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். சண்டையிடும் இரு வேறு தரப்புகளையும் பேச்சு வார்த்தை நடத்த நிர்பந்தித்து சுமுகமான அரசியல் தீர்வு காண உதவ வேண்டும். (இந்தியா கூட தனது நிலபரப்பிற்கு மிக அருகே நடைபெறும் இந்த விஷயத்தில் பாராமுகமாக நடந்து கொள்வது வருத்தத்தையே தருகிறது). ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பட்ட முறையில் தேவைப் படும் அமைதியும் பாதுகாப்பும் அனைத்து உலகும் அமைதியாகவும் சமாதானமாகவும் இருப்பதையே சார்ந்திருக்கிறது என்பதை யாரும் மறக்கக் கூடாது.

நன்றி.

Monday, January 5, 2009

கடற் கொள்ளைக்காரர்களும் நிலக் கொலைகாரர்களும்


இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் இரண்டு பெரிய அபாயங்கள். சோமாலிய நாட்டுக் கடற் கொள்ளைக்காரர்களும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுமே.

சோமாலிய நாட்டுக் கடல் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களை கொள்ளை அடிக்கும் கடற் கொள்ளைக் காரர்களை அடக்குவதற்காக பன்னாட்டு கடற் படைகள் அங்கு நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனாலும் விடாமல் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்கள், பல முறை வணிக கப்பல்களைத் தாக்கிய பின்னர், தம்மைத் துரத்தி வரும் பன்னாட்டுப் படைகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, சோமாலிய நாட்டு எல்லைக்குள் ஓடி ஒளிந்து கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சோமாலியா சுதந்திர இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதால் பன்னாட்டு படைகள் அதன் வான் எல்லையையோ நில எல்லையையோ தாண்டி உள்ளே செல்வதில்லை. காரணம் முறையான அமைப்புகளுக்கு எப்போதுமே சர்வதேச எல்லைகளை மதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு.

ஆனால் கொள்ளையருக்கும் கொலைகாரருக்கும்தான் எந்த எல்லையும் கட்டுப்பாடும் இல்லையே? (சோமாலிய கடற்கொள்ளையரைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக சொல்லப் பட்டுள்ளது). சமீபத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, சோமாலிய நாட்டின் நில எல்லை மற்றும் வான்வெளி எல்லைக்குள் பன்னாட்டு படைகள் சென்று (அந்நாட்டின் ஒப்புதலுடன்) கடற்கொள்ளையரைத் தாக்கலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு வரவேற்கத் தக்க முன்னேற்றம் ஆகும். இதன் மூலம் கடற்கொள்ளையர் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்று நம்பலாம்.

கடற்கொள்ளையரின் பிரச்சினையை விடப் பெரியது நிலகொலைகாரர்களின் பிரச்சினை. கடற்கொள்ளையராவது உடமைகளை மட்டுமே பறிக்கின்றனர். இந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளோ பல அப்பாவிகளின் உயிரையே பறிக்கின்றனர். உலகில் பயங்கரவாத தாக்குதல் நடத்துபவரில் 75 சதவீதம் பேர் பாகிஸ்தானிலேயே பயிற்றுவிக்கப் படுகின்றனர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகமெங்கும் உயிர் வேட்டை நடத்தி விட்டு பாகிஸ்தானில் சென்று பயங்கரவாதிகள் பதுங்கிக் கொள்கின்றனர். உலகின் மிகக் கொடிய தீவிரவாதிகள் எனக் கருதப் படும் ஒசாமா பின் லேடன், தாவூத் இப்ராஹிம், மசூத் போன்றவர்கள் பாகிஸ்தானிலேயே தஞ்சம் புகுந்து கொள்கின்றனர் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமாகி உள்ளது. .

இவர்களது தாக்குதல் அடிப்படைவாதிகளால் எதிரி நாடுகளாகக் கருதப் படும் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகள் மட்டுமில்லாமல் இப்போது இந்தோனேசியா, பாகிஸ்தான் (வளர்த்த கடா மார்பிலே), சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் துவங்கி உள்ளது. இவர்களை நீடிக்க விடுவது உலகத்திற்கு வேறு எதனை விடவும் பெரிய ஆபத்து ஆகும்.

எனவே . ஐ நா. பாதுகாப்பு சபை ஒரு தீர்மானம் இயற்றி சர்வதேச படையை (முக்கியமாக சீனாவின் ஒத்துழைப்பை பெறுவது மிகவும் அவசியம்) பயங்கரவாதிகளின் விளை நிலமாகவும் சாவு தொழிலாளிகளின் சரணாலயமாகவும் உள்ள பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை ஒன்று விடாமல் வேரோடு அழிக்க வேண்டும். இந்த சர்வதேச முயற்சிக்கு இந்தியா முன்னோடியாக இருந்து இந்த பிரச்சினையின் தீவிரத்தை மற்ற நாடுகளுக்கு புரிய வைத்து ஒருமித்த கருத்து உருவாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நன்றி.

Saturday, January 3, 2009

அன்புள்ள மும்பைக்கருக்கு ஓர் கடிதம்


மும்பையில் தற்போதைக்கு வசிக்கும் ஆனால் மும்பையை சொந்தம் கொண்டாடாத ஒரு இந்தியன் எழுதிக் கொள்வது. நான் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வாழ்ந்தவன். சில பயணங்களின் போதும் திரைப்படங்களின் மூலமுமே மும்பையின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வந்திருக்கிறேன். மும்பைக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை இங்கு வசிப்பதற்கு வந்த பிறகே அறிந்து கொண்டேன்.

சில ஆயிரம் ரூபாய் வாடகையில் பெங்களூர் போன்ற ஒரு மாநகரத்தின் மையப் பகுதியில் சௌகரியமாக வாழ முடிந்த நான் மும்பையில் பல ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குருவிக்கூடு போல ஒரு வீடு கிடைக்குமா என்று விசாரித்த போது ஏளனமாக பார்த்தீர்கள். அந்த வாடகைக்கு நகரத்தை விட்டு குறைந்த பட்சம் 50 கி.மீ. தூரம் வெளியே போக வேண்டும் என்றீர்கள்.

சில நூறு ரூபாய் பெறாத விஷயங்களுக்காக கூட பல ஆயிரம் ரூபாய் செலவழிக்கும் நீங்கள் எங்களை போன்ற மத்திய தர மக்களின் வாழ்க்கை முறையை திருப்பி போட்டது மட்டும் இல்லாமல் பணத்துக்கே அவமரியாதை செய்தீர்கள். இவ்வாறு செலவிடும் பணமெல்லாம் சொந்த கணக்கில் அல்ல, தம் பொறுப்பில் உள்ள நிறுவனக் கணக்கில்தான் என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன்.

டீ கடையில் கூட உலக விஷயங்கள் அலசப் பட்ட ஊரிலிருந்து வந்த என்னிடம் நீங்களோ உங்கள் தொழில் மற்றும் பங்கு சந்தைக்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டீர்கள். "அரசியல்வாதிகள் கூட எங்களைத் தேடியே வருகிறார்கள். எனவே எங்களுக்கு அரசியல் தேவையில்லை" என்று (அதிகம் படித்தவர்கள் இங்கே இருந்தும் கூட) வாக்களிக்கும் நாட்களை கூட விடுமுறை நாட்களாக மட்டுமே எடுத்துக் கொண்டீர்கள்.

சொந்த வீடு இருக்கும் போது உள்ளூர் ஹோட்டலில் தங்கினால் எங்கள் ஊர் பக்கம் வித்தியாசமாக பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ அதை வழக்கமாக கொண்டு தாஜ் போன்ற ஹோட்டல்களில் தங்குவதை வாடிக்கையாக கொண்டீர்கள். இன்போசிஸ் பெங்களூரில் இருக்கலாம் ஆனால் அதனால் அதிகம் சம்பாதித்தவர்கள் மும்பைக்கர்களே, இந்தியாவில் சம்பாதிக்கும் எல்லா செல்வமும் எங்கள் வாசல் கதவை தட்டித்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று மார் தட்டிக் கொண்டீர்கள்.

ஆனால் அதே சமயம் காஷ்மீர் பிரச்சினை காஷ்மீருடையது, குஜராத் பிரச்சினை குஜராத்துடையது என்றும் எங்களுக்கு பங்கு சந்தை மற்றும் வணிகம் மட்டும்தான் உலகம் என்று வாழ்ந்தீர்கள். மகாராஷ்ட்ராவில் கூட உழவர் தற்கொலை பிரச்சினை எழுந்த போதும் வட இந்தியர் தாக்கப் பட்ட போதும் மும்பையை ஹாங்காங் போல தனி ஆட்சிப் பகுதியாக மாற்றி உள்ளே வருபவர்களுக்கு தனி பாஸ்போர்ட் கொடுத்தால் என்ன என்று கேள்வி கேட்டீர்கள். மும்பைக்கென ரூபாயை தவிர்த்து புதிய கரென்சி (மும்பை டாலர்) புழக்கத்தில் விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தீர்கள். நீங்களோ, அல்லது உங்கள் முன்னோரோ இந்தியாவில் இருந்தே வந்தவர்கள் என்றாலும் கூட முற்றிலும் அந்நியர் போலவே நடந்து கொண்டீர்கள். நீங்கள் நாட்டுப் பற்று வெளிப் படுத்தியதெல்லாம் அதிகம் கிரிக்கெட் மாட்ச்களில் அதுவும் பார் வசதியுடன் கூடிய அரங்குகளில் அமர்ந்து கொண்டு.

நீங்கள் சொந்தம் கொண்டாடும் மும்பையிலும் கூட, பெரு வெள்ளம் (2005) ஏற்பட்ட போது துடிதுடித்துப் போன புதியவனான எனக்கு பெரும் ஆச்சர்யத்தையே கொடுத்தீர்கள். ஊரே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு கூட பங்கு சந்தை மேலே போனது என்று சந்தோசப் பட்டுக் கொண்டீர்கள். 2006 ரயில் குண்டு சம்பவத்தின் போதும் கூட கிட்டத் தட்ட அதே நிலைதான். மேற்சொன்ன அசம்பாவிதங்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் காணாமல் போயினர் என்ற விவரத்தை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படவில்லை. உங்களுக்கென்ன பங்கு சந்தைதான் எப்போதும் போல மேலே போய்க் கொண்டே இருந்ததே?

இங்கே பாதுகாப்பு அற்ற அச்ச உணர்வு இருந்தும் கூட வேறு வழியில்லாமல் எளிய மக்கள் பணிக்கு சென்று கொண்டிருப்பதை மும்பைக்கு வெளியே இருந்தவர்கள் ஒவ்வொரு அசம்பாவிதத்திற்கு பின்னரும் மும்பை மக்கள் எவ்வளவு வேகமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள் என்று ஆச்சரியத்துடன் நோக்க என்னை போல இங்கேயே இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இங்கே வாழ வந்த எளிய மக்களுக்கு வேறு வழி இல்லாமல் அன்றாட வாழ்விற்காக எந்த ஒரு பாதுகாப்பற்ற சூழ் நிலையிலும் பணிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மறு பக்கத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு (அதுதான் உங்களை போன்ற மும்பைக்கர் என்ற மேல்தட்டு மக்களுக்கு) எந்த சூழலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்று.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பிறகு அதிக செல்வாக்கு கொண்ட உங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கிய பின்புதான் இந்தியாவில் தீவிரவாதம் என்று ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். பங்குசந்தையையும் வணிகத்தையும் தாண்டி ஒரு உலகம் உள்ளது அதிலுள்ள பிரச்சினைகள் நம்மையும் கூட ஒரு நாள் தாக்கும் என்பதையும் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது கூட மும்பை தாக்கப் பட்ட போது இந்தியாவே கண்ணீர் விட்டது. ஆனால் நீங்களோ அதில் கூட வர்க்க பேதம் பார்த்தீர்கள். தாஜ் ஹோட்டலிலும் ஒபேராய் ஹோட்டலிலும் இறந்தவர்களின் உறவினர்கள் எப்படியெல்லாம் வருத்தப் பட்டார்கள் என்பதை இரவும் பகலும் வெளிச்சம் போட்டு காட்டிய நீங்கள் சி.எஸ்.டீ. ரயில் இறந்து போன குப்பன் சுப்பன் யார் என்றும் எத்தனை பேர் என்றும் கண்டுகொள்ளவே இல்லை. ஒபேராய் ஹோட்டல் முன்புறமும், தாஜ் ஹோட்டல் முன்புறமும் அணியணியாய் சென்று அஞ்சலி செலுத்திய நீங்கள் சி.எஸ்.டீ. ரயில் நிலையத்தில் இறந்தவர்களுக்காக ஒரு சிறிய மரியாதை கூட செய்ய வில்லை.

மும்பை பலகோடி ரூபாய் வரி இந்திய அரசுக்கு செலுத்துகிறது அதில் ஒரு பகுதியை மும்பையின் பாதுகாப்பிற்கு (அதுதான் உங்களை போன்றவர்களை பாதுகாக்க) உபயோகப் படுத்தவேண்டும் என்று சொல்லும் உங்களுக்கு, அந்த வரியானது மும்பையை தலைமையிடமாக கொண்ட அனைந்திந்திய நிறுவனங்களால் செலுத்தப்படுவதே என்றும் அந்த வரிக்கு முழு இந்தியாவுமே சொந்தம் கொண்டாட முடியும் என்பதும் ஏன் மறந்து போனது? மேலும் தனிநபர் வரி கூட யார் கட்டுகிறார்கள்? இந்தியா முழுதும் திரைப்படம் காட்டி சம்பாதிக்கும் திரைப் பட நடிகர்கள், அனைத்து இந்திய பணத்தில் வாழும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய பங்கு சந்தை தரகர்கள் போன்றவர்கள்தானே?

ஆனால் இப்போது கூட இதுபோன்று மேல்மட்டத்தினரை குறிவைத்து மும்பையில் இனியொரு தாக்குதல் நடைபெற கூடாது என்ற குறுகிய நோக்கத்திலேயே உங்கள் கோரிக்கைகள் மற்றும் கோஷங்கள் பலவும் அமைந்துள்ளதை உணர முடிகிறது. யானை உண்ணும் போது சிந்துவதை கொண்டு பல உயிர்கள் பல நாள் வாழும் என்பார்கள். அது போல உங்கள் பேச்சை கேட்க வேண்டிய நிலையிலேயே பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இருக்கும் பட்சத்தில், ஏன் உங்கள் கோரிக்கையை சற்றே விரிவு படுத்தி இந்திய மக்கள் அனைவர்க்கும் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்யக் கூடாது?

இப்படிக்கு

உங்கள் மீது மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதியிலும் இனியொரு தாக்குதல் நடைபெறக் கூடாது என்று விரும்பும் ஒரு இந்தியன்.
Blog Widget by LinkWithin