Thursday, January 8, 2009

மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை


இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.


நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது.


இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது.

இங்கே இரண்டாவது பாதையை தேர்ந்தெடுக்கும் நமது கழுகு ஒரு மலை உச்சிக்கு செல்கிறது.

அங்கே தனது அலகினால் ஒரு பாறையைக் கடுமையாக மோதி அலகினை தானே உடைத்துக் கொள்கிறது. புதிய அலகு வளர்ந்த பின்னர் தனது நகங்களை பிய்த்து எறிகிறது.

புதிய நகங்கள் முளைத்த பின்னர் தனது இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிகிறது.

சுமார் ஐந்து மாதங்களுக்கு பின்னர் புதிய இறகுகள் முளைத்து விட இந்த கழுகு புனர் ஜென்மம் பெறுகிறது.
அதன் பின்னர் இந்த கழுகு முப்பது ஆண்டுகள் நீண்ட புதிய வாழ்க்கையை வாழ முடிகிறது.

இந்த கதை தரும் பாடம்.

கடினமான சவால்கள் நிறைந்த நமது வாழ்வில் தாக்குப் பிடிக்க நாம் பல முறை புனர் ஜென்மம் எடுத்து நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மேற்சொன்ன கதையில் உள்ள கழுகைப் போல, தேவைப் படும் போது நமது பழைய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை நீக்கி காலத்திற்கு ஏற்றாற் போல புதிய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பழைய சுமைகள் நீங்கினால் நம்மால் சவால்களை உற்சாகமாக எதிர் கொள்ள முடிவதுடன் புதிய வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாற்றத்திற்கான பாதை எப்போதுமே வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வழிகளும் வேதனைகளும் நமக்கு மாற்றம் தேவையில்லையோ என்ற மாயையை உருவாக்கும். அப்போதெல்லாம் புனர் ஜென்மம் அடைய இந்த கழுகு அடைந்த வேதனைகளையும் (தனது உறுப்புகளை தானே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வேதனை?) மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்களையும் நம் கண்முன் ஒரு கணம் நிறுத்தினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்.

பழையன கழிவோம்.

புதியன புகுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: மேற்சொன்ன கதைக்கு அறிவியல் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை என்றாலும், இந்த கதை தரும் புதிய உற்சாகத்திற்காக பல உளவியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

6 comments:

வால்பையன் said...

//இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது.//

இந்த கழிகு தானே அமெரிக்காவின் தேசிய பறவை!

இது அதை பற்றிய பதிவு தானா?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

கழுகு அமெரிக்கா மட்டுமல்ல பல நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. மேலும் பல மத மற்றும் கலாச்சாரத்திலும் கழுகு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கதை (இதனை கடுமையாக மறுக்கும் அறிவியலார் உண்டு என்று பதிவிலேயே கூறியுள்ளேன்) முதலில் மதப் பிரச்சாரகர்களால் கூறப் பட்டு பின்னர், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காக உளவியலாரால் அதிகம் உபயோகிக்கப் படுகிறது.

நன்றி.

கபீஷ் said...

கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. //

என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய கதை. அதே சமயத்தில் பதிவிடுவதற்கு முன்னர் அறிவியல் ஆதாரம் தேடிய எனக்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்க வில்லை. எனவே disclaimer உடன் பதிவிட்டேன்.

//தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்./

கண்டிப்பாக. இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.

நன்றி.

மங்களூர் சிவா said...

Excellent.

Maximum India said...

Thank you shiva.

Blog Widget by LinkWithin