Sunday, January 11, 2009

"சத்ய" சோதனை


சந்தைகளுக்கு இப்போது அக்னி பரிட்சைக் காலம். சத்யம் நிறுவனத்தையும் இந்திய வணிக நிறுவனங்களின் நம்பகத் தன்மையையும் காப்பாற்ற மத்திய அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றி பெறும் பட்சத்தில் பங்குக் குறியீடுகளில் மீண்டும் ஒரு வளர்ச்சி நிலையை நாம் காண முடியும். தோல்வி பெற்றால் சந்தைகள் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும். வரும் வாரத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பலாம்.

சென்ற வார சந்தை நிலவரம்

சத்யம் நிறுவனத்தில் நடை பெற்றுள்ள ஊழல் வெளியாகும் வரை சந்தையில் நல்ல ஏறுமுகம் காணப் பட்டது. முக்கியமாக சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதும் சந்தையில் ஒரு எழுட்சி நிலையை உருவாக்கியது. ஆனால், சத்யம் தலைவரின் ஒப்புதல் கடிதம் வெளியிடப் பட்ட இரு தினங்களில் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் இரு தினங்களுக்குள்ளாகவே சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்த ஊழல் மூலம் சத்யம் மட்டுமில்லாமல் மேலும் பல இந்திய நிறுவனங்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தாமதமான செயல்பாடும் வீழ்ச்சிக்கு மற்ற முக்கிய காரணங்கள். பணவீக்கம் குறைந்ததும், கச்சா எண்ணெய் விலை சரிவும் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

வரும் வார சந்தை நிலவரம்.

சத்யம் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப் பட்டதும், அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை மாற்றி அமைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும் சந்தையின் மனநிலையை சற்றே தேற்ற முடியும். அதே சமயத்தில் மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க வேலை இழப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பது சந்தையின் நம்பிக்கையைச் பாதிக்கும். வணிக நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சற்றே அவநம்பிக்கையுடனேயே பார்க்கப் படும். சில நாட்களாக முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் கடைசி இரண்டு நாட்களில் பெருமளவு இந்திய பங்குகளை விற்றது சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், வரும் வாரத்தில் ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்தாலேயொழிய சந்தைகள் கீழ் நோக்கியே பயணிக்கும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9650-9750, 10200-300,
நிபிட்டி 2940-2970, 3130-60

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்

சென்செக்ஸ் - 9100-9200, 8650-8750
நிபிட்டி - 2780-2800, 2675-2700

நிபிட்டி 2780 க்கு கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம். நிபிட்டி 2950 புள்ளிகளுக்கு மேல் முடியும் பட்சத்தில் அருகே தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகத்தில் ரூபாய் மேலும் சரிவு அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 47.50 இலிருந்து 49.00 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.

நன்றி.

7 comments:

pothujanam said...

சென்ற வருட சந்தை நிலவரம் .
இந்திய முன்னேற்ற பாதையில். ராமலிங்க ராஜு போன்ற மனிதர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவி செய்வார்கள். சந்தை மேலும் உயரும்.
சென்ற வார சந்தை நிலவரம்
இந்தியாவை வல்லரசாக முயன்ற ராஜு முதலில் வல்லரசர் ஆனார். அவர் குட்டு வெளிபட்டதனால் வேறு வழியின்றி நல்லரசர் ஆனார். இதனால் சந்தை பலூன் காற்று போக ஆரம்பித்தது.
இந்த வார சந்தை நிலவரம்.
ராஜு ஜெயில் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பியதால் அவர் ஜெயில் விருந்தினர் ஆக்கப்பட்டார்.வல்லரசர் உள்ளரசர் ஆனதால் சந்தை பலூன் சுத்தமாக காற்று போகும் அபாயம் உள்ளது.
அடுத்த வார மற்றும் அடுத்த வருட சந்தை நிலவரம்.
இன்னும் பல ராஜுக்கள் வல்லரசராக முயன்று கொண்டு இருப்பதால் சந்தை மொந்தை நிலைக்கு போக வாய்ப்புகள் அதிகம்.
நிரந்தரமான மொந்தை சாரி சந்தை நிலவரம்.
திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை நம்பி காசு போட்டால் அது நரி வாயில் போன கோழிதான். ஆக நியாயமா தொழில் பண்ற கம்பனின்னு சொல்லி சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் அதாங்க செபி, பரிசு தண்ணி கம்பெனி ( அதாங்க பிரிஸ் வாட்டர் கூபெர்) எல்லாம் பொய் சொன்னாலும் நீங்களே விசாரிச்சு புத்திய யூஸ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணுங்க. அல்லது டாட்டா மாதிரி உண்மையான கம்பனி எ நம்புங்க. ஏங்க யாராவது மம்தா பெனேர்ஜீ எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?

pothujanam said...

சென்ற வருட சந்தை நிலவரம் .
இந்திய முன்னேற்ற பாதையில். ராமலிங்க ராஜு போன்ற மனிதர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவி செய்வார்கள். சந்தை மேலும் உயரும்.
சென்ற வார சந்தை நிலவரம்
இந்தியாவை வல்லரசாக முயன்ற ராஜு முதலில் வல்லரசர் ஆனார். அவர் குட்டு வெளிபட்டதனால் வேறு வழியின்றி நல்லரசர் ஆனார். இதனால் சந்தை பலூன் காற்று போக ஆரம்பித்தது.
இந்த வார சந்தை நிலவரம்.
ராஜு ஜெயில் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பியதால் அவர் ஜெயில் விருந்தினர் ஆக்கப்பட்டார்.வல்லரசர் உள்ளரசர் ஆனதால் சந்தை பலூன் சுத்தமாக காற்று போகும் அபாயம் உள்ளது.
அடுத்த வார மற்றும் அடுத்த வருட சந்தை நிலவரம்.
இன்னும் பல ராஜுக்கள் வல்லரசராக முயன்று கொண்டு இருப்பதால் சந்தை மொந்தை நிலைக்கு போக வாய்ப்புகள் அதிகம்.
நிரந்தரமான மொந்தை சாரி சந்தை நிலவரம்.
திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை நம்பி காசு போட்டால் அது நரி வாயில் போன கோழிதான். ஆக நியாயமா தொழில் பண்ற கம்பனின்னு சொல்லி சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் அதாங்க செபி, பரிசு தண்ணி கம்பெனி ( அதாங்க பிரிஸ் வாட்டர் கூபெர்) எல்லாம் பொய் சொன்னாலும் நீங்களே விசாரிச்சு புத்திய யூஸ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணுங்க. அல்லது டாட்டா மாதிரி உண்மையான கம்பனி எ நம்புங்க. ஏங்க யாராவது மம்தா பெனேர்ஜீ எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

ஊழல்கள் மலிந்து கிடக்கும் இன்றைய உலகத்தில் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல எந்த தனி நபருக்கும் பாதுகாப்பு என்பது கிடையவே கிடையாது. சத்யத்தைப் பொருத்த வரை, அதன் நிர்வாகிகளின் நம்பகத்தன்மை பல ஆண்டுகளாகவே சந்தேகத்திற்கு இடமாகவே இருந்திருக்கிறது. மிகுந்த அரசியல் தொடர்புகள் கொண்டிருந்த இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிக அபாயம் உள்ளதாகும். ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்கு சந்தையில் நுழையும் போது பங்குகளின் முதலீடுகளில் உள்ள அபாயங்களை புரிந்துக் கொண்டே முதலீடு செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளில் இருந்து குறைந்த இழப்புகளுடன் தப்பிக்க முடியும்.

வால்பையன் said...

பொதுஜனம் பின்னூட்டம் ஜுப்பரு!

மார்ச் வரை சந்தை பெரிதாக முன்னேற்றம் அடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை!

raje said...

நாளிழதல்களில் தினசரி விபத்து, கொள்ளை, கொலை வருகிற மாதிரி வர்த்தக நாளிழதல்களிலும் தற்பொழுது சந்தைக்கு எதிர்மறையான விசயங்கள் நிரம்பவருகின்றன:(

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பொதுஜனம் பின்னூட்டம் ஜுப்பரு!//

பின்னே! யாரு அவரோட குருன்னு தெரியுமா? (Mr.பொதுஜனம். சண்டைக்கு வந்துடாதீங்க) :))

//மார்ச் வரை சந்தை பெரிதாக முன்னேற்றம் அடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். "சத்யம் விவகாரம்" சந்தைக்கு விழுந்த பெரிய அடி.

Maximum India said...

அன்புள்ள ராஜே!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//நாளிழதல்களில் தினசரி விபத்து, கொள்ளை, கொலை வருகிற மாதிரி வர்த்தக நாளிழதல்களிலும் தற்பொழுது சந்தைக்கு எதிர்மறையான விசயங்கள் நிரம்பவருகின்றன:(//

சந்தையில் ஒரு ஆங்கில சொல் வழக்கு உள்ளது. அதாவது Bull Market has no bad news. Similarly Bear Market has no good news.

நம்மூரிலும் ஏதோ சொல்வார்கள். நேரம் கேட்டுப் போனால் வருவதெல்லாம் கெட்ட செய்திகளே என்று. அது போல இப்போது சந்தைக்கு சவாலான சமயம். அதனால்தான் அதிகம் எதிர்மறையான விஷயங்களை சந்திக்கிறது.

Blog Widget by LinkWithin