Saturday, January 31, 2009

மாற்றம் தேவை - ஒரு காரோட்டியின் கதை


நீங்கள் வளைவுகள் நிறைந்த ஒரு கிராமப் புறச்சாலையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திறமையான, அதே சமயத்தில் சாலை விதிகளை எப்போதும் மதிக்கும் ஒரு காரோட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவில் செல்லும் போது தவறான திசையில் வேகமாக ஆனால் தடுமாறியபடி கார் ஒட்டியபடி வரும் ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்து "எருமை" என்று கத்தியபடி கடந்து சென்றால் என்ன செய்வீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை. சாலையின் சரியான பக்கத்திலேயே சென்று கொண்டிருந்தீர்கள். எதிரில் வந்தது அந்த பெண்ணின் தவறு. தவறான பக்கத்தில் வந்த வண்டியில் மோதாமல் தப்பித்தது கூட உங்களுடைய தனித் திறமையால்தான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

இப்படித்தான் ஒரு முறை தவறான பக்கத்தில் வந்து விட்டு தன்னை நோக்கி கத்தி விட்டு சென்ற பெண்மணியின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு திறமையான காரோட்டி அவளை விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிக வேகமாக அவளைப் பின் துரத்திச் சென்றான். பல கி.மீ. தூரம் துரத்திய பின்னர் அவளை மடக்கிய அவன் அவளை பார்த்துக் கோபமாக கூறுகிறான். "நான் ஒரு எருமை என்றால் நீ ஒரு பசு மாடு" என்று. அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை. "எதற்காக இப்படி கூறுகிறாய்?" என்று கேட்க இவனுடைய பதில் " வளைவில் தவறான திசையில் வந்த நீ எப்படி என்னைப் பார்த்து எருமை என்று கூறலாம்?" அதற்கு அவள் கூறியது. " நான் உன்னைப் பார்த்து எருமை என்று கூற வில்லை. ஒரு எருமை கூட்டம் வழியை மறித்து நின்று கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாகப் போ என்று எச்சரிக்கை செய்வதற்காகவே எருமை என்று கத்தினேன். மேலும் எனக்கு அவசர வேலை இருந்ததால் மேற் கொண்டு விளக்கம் அளிக்க முடியாமல் வேகமாக வந்து விட்டேன்"

இப்போது சொல்லுங்கள். உங்களுடைய பதில் என்ன? இந்த கேள்வி கேட்கப் பட்ட கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா? "நான் ஏதேனும் ஒரு வகையில் கோபத்தை காட்டி இருப்பேன்."

இந்த நிலைக்கு காரணம் நம் எல்லாருக்கும் உள்ள "ஒருவகை கோட்பாடுகளுக்குள் இயங்கும் மனநிலை அமைப்பு"தான் ஆகும். அதாவது, அழுதால் பால் கிடைக்கும் என்று ஒரு குழந்தை நினைப்பதிலிருந்து, இந்த இனத்தை/ மதத்தை/ மொழியை/ கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று பெரியவர்கள் நினைப்பது வரை எல்லாமே, பிறந்த முதலே ஒரு மனிதனுக்கு மெல்ல மெல்ல உள்ளே திணிக்கப் பட்ட கலாச்சாரக் கோட்பாடுகளின் விளைவே ஆகும்.

ஆனால் இந்த கோட்பாடுகளை உடைப்பது சாதாரண காரியமல்ல. பூமியை மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்ற நம்பிக்கையை உடைத்த கலீலியோ மத நம்பிக்கையாளர்களால் சித்திரவதை செய்யப் பட்டார்.

அதே சமயம், இந்த கோட்பாடுகள் உடைக்கப் பட்டால்தான் புதிய உலகம் தென்படும்.பல உண்மைகள் புரிபடும். பல நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு முன்னொரு காலத்தில் கடிகாரம் என்றாலே சுவிற்சர்லாந்து என்று அறியப் பட்டது. சுவிஸ் நாட்டு கம்பெனிகள் ஒரு கடிகாரத்தை பற்சக்கரம், ஸ்ப்ரிங், கீ ஆகியவற்றைக் கொண்ட ஒரு மெகானிகல் இயந்திரமாகவே பார்த்து பழக்கப் பட்டவை. முதன் முதலாக குவார்ட்ஸ் கடிகாரம் சுவிஸ் விஞ்ஞானி ஒருவராலேயே கண்டுப் பிடிக்கப் பட்டாலும், சுவிஸ் கம்பெனிகள் அவரை புறந்தள்ள, அந்த கண்டுப் பிடிப்பை முதன் முதலில் ஏற்றுக் கொண்டது ஜப்பான் கம்பெனிகள்தான். விளைவு, சுவிற்சர்லாந்து கடிகார கம்பெனிகள் காணாமல் போயின. ஜப்பான் உலகின் மிகப் பெரிய கடிகார தயாரிப்பாளர் நாடாக மாறியது.

சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம். உயிரியல் கோட்பாட்டின் படி இயற்கையின் போக்கிற்கு ஏற்றவாறு மாற முடியாத விலங்குகள் மண்ணோடு மண்ணாக (டினோசார் கூட இதற்கு விதி விலக்கல்ல), மாற முடிந்த விலங்குகள் மட்டுமே இன்று வரை உயிர் வாழ்கின்றன.

எனவே, பழைய கட்டுப்பாடான கோட்பாடுகளை களைவோம். ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக நோக்குவோம். சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குவோம்.

நன்றி.

10 comments:

Felix Raj said...

அருமையா கட்டுரை நன்றி

Maximum India said...

அன்புள்ள பெலிக்ஸ் ராஜ்

பின்னூட்டத்திற்கு நன்றி

பொதுஜனம் said...

நாம் மாறுகிறோமோ இல்லையோ.. மும்பை காரோட்டிகள் மாற வேண்டும்.. தண்ணி அடித்து இரவில் காரோட்டி எத்தனை பேர் உயிரை ஓட்டி விடுகிறார்கள்...

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//மும்பை காரோட்டிகள் மாற வேண்டும்.. தண்ணி அடித்து இரவில் காரோட்டி எத்தனை பேர் உயிரை ஓட்டி விடுகிறார்கள்...//

மானின் உயிரை விட மனிதனின் உயிர் மலிவாகி விட்ட இந்தியாவில், சில மேல்தட்டு மக்களின், "பணத்தைக் கொடுத்து எதையும் ஏன் உயிரையும் கூட வாங்கி விடலாம்" என்ற பண போதையே (குடி போதையை விட) மும்பையின் தொடரும் சோகத்திற்கு காரணம். எனது தனிப் பட்ட அனுபவத்தில் கூட, வேடிக்கைக்காக, இரு சக்கர வாகனங்களை உரசுவது போல பயமுறுத்தி வேகமாக காரோட்டும் சில பணக்கார வீட்டு பையன்களை சந்தித்திருக்கிறேன்.

நன்றி

கார்த்திக் said...

// சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம்.//

உண்மதாங்க.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

வால்பையன் said...

ஏற்கனவே படித்தது போல் நினைவு,
இது மீழ்பதிவா?

காரோட்டி கோபப்பட்டது அடுத்த பிரச்சனை! அது நமக்கு அவசர சமங்களில் வராமலும் போகலாம்.
ஆனால் தவறு செய்தவருக்கு புத்தி சொல்லுதல், அறிவுரை வழங்குதல் தான் தீய குணம்.

மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசுவது, கோபப்படுவதை விட முட்டாள்தனமானது என நினைக்கிறேன்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//ஏற்கனவே படித்தது போல் நினைவு,
இது மீழ்பதிவா?//

இது மீள்பதிவு அல்ல. ஆனால், இதே போன்று (மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை) ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் இது தொடர்பாக இடவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

//காரோட்டி கோபப்பட்டது அடுத்த பிரச்சனை! அது நமக்கு அவசர சமங்களில் வராமலும் போகலாம்.
ஆனால் தவறு செய்தவருக்கு புத்தி சொல்லுதல், அறிவுரை வழங்குதல் தான் தீய குணம்.

மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசுவது, கோபப்படுவதை விட முட்டாள்தனமானது என நினைக்கிறேன்//

உண்மைதான். தனது எண்ணங்களின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதே, தனது எண்ணங்களை அவ்வப்போது புனரமைத்துக் கொள் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

நன்றி.

மங்களூர் சிவா said...

/
சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம்.
/

நல்ல அருமையான பதிவு. நன்றி

Maximum India said...

அன்புள்ள சிவா

நன்றி :)

Blog Widget by LinkWithin