Thursday, December 31, 2009அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Sunday, December 6, 2009

தடை ஓட்டம்


கடந்த காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பல பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் வெகுவாக விஞ்சி 7.9% அளவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் முக்கிய காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு செலவினத் தொகைகள்தான் என்றாலும் கூட, சென்ற காலாண்டில் குறிப்பிடத் தக்க அளவு இந்திய தொழிற்துறை வளாச்சி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியின் அளவும் சென்ற மாதம் வெகுவாக குறைந்திருப்பது, கூடிய சீக்கிரமே இந்தியா ஒரு "வேகமான வளர்ச்சிப் பாதைக்கு" திரும்பும் (Return to High Growth Trajectory) என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

இந்த வளாச்சி பாதைக்கு பெரிய வில்லனாக அமைந்திருப்பது, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் "உணவுப் பொருட்களின் விலைவாசிகள்" ஆகும். அமெரிக்காவின் "எளிமையான வட்டியில் கடன் " (Easy Monetary Policy) எனும் பொருளாதார கொள்கை மற்றும் இந்தியாவின் "அதிகரிக்கும் வருவாய் இடைவெளி" சமூக அமைப்பு, தெளிவில்லாத "உணவு கொள்கை" மற்றும் உணவு பதுக்கல்கள் ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்து இன்றைய தேதியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர வழிவகுத்துள்ளன. பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றி அளவுக்கதிகமாகவே கவலைப் படும் நமது அரசாங்கம் உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசிகளைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாக தெரிய வில்லை.

மும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் உணவு பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தொழிற் துறையையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசு ஏதேனும் "பணக்கட்டுப்பாடு" (Reversal of Fiscal/Monetary Relief Measures) முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி பங்குசந்தைகள் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஒன்று இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி. சென்ற காலாண்டின் வேகம் அடுத்த இரு காலாண்டுகளிலும் தொடர வாய்ப்புக்கள் சற்று குறைவுதான் என்றாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளாச்சி ஏழு சதவீதமாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று பல பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். எனவே பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த பொருளாதார வளர்ச்சி தகவலினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாவது முக்கிய காரணி, தடையில்லாத அமெரிக்க டாலர் உள்வரத்து (FII Inflows). சென்ற வெள்ளிக்கிழமை வெளிவந்த அமெரிக்க "வேலைவாய்ப்பு இழப்பு விகிதம்" (Unemployment Rate) முந்தைய மாதத்தை விட குறைந்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி தனது "எளிய வட்டிக் கொள்கையை" மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயத்தை சந்தைகளில் உருவாக்கியுள்ளது. இந்த பயத்தின் விளைவாக, தங்கம் ஒரே நாளில் பெரிய விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது. "டாலர் மாற்று வர்த்தக திருப்பம்" (Unwinding of Dollar Carry Trade) நேரிட்டால் உலக அளவில், பங்குசந்தைகளில் பெரிய இழப்பு நேர வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம், "எளிய வட்டிக் கொள்கை", வெறுமனே அமெரிக்க பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையின் இன்னொரு வெளிப்பாடே இந்த கடன் கொள்கை என்பதையும் மனதில் வைத்து பார்க்கும் பார்க்கும் போது, உடனடியாக வட்டிகள் கடுமையாக்கப் படும் என்ற பயம் தேவையில்லை என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னபடி நிபிட்டி 5100 -5200 அளவுகளில் பெருத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 5200 என்ற அளவு ஒருவேளை "அதிக வர்த்தகத்துடன் முழுமையாக" (Break Out with High Volume) முறியடிக்கப் பட்டால், சந்தைகள் இன்னும் கூட வெகுவாக உயர வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளபடி இந்தியா மற்றும் (அடிப்படை சிறப்பாக உள்ள) இந்திய நிறுவனங்களின் வளாச்சி நீண்டகால நோக்கில் சிறப்பானதாகவே இருக்கும். ஆனால், அந்த வளர்ச்சியின் பலனை இந்தியர்கள் முழுமையாக அனுபவிக்க, அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய அரசின் குறுகிய கால முதலீட்டுக் கொள்கைகளும், அதிக இடம் தருவதில்லை என்பது வருந்துதற்குரிய விஷயம். வர்த்தகர்கள் 5200 என்ற நிபிட்டி அளவை "மையப் புள்ளியாக" (Pivot Point) வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Tuesday, December 1, 2009

ஜாலியாக இருக்கலாம்! ஆனால்?


நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதப் படும் "ஆல்கெமிஸ்ட் (The Alchemist)" புதினத்தில் இருந்து ஒரு சிறிய கதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

முன்னொரு காலத்தில், ஒரு வியாபாரி தன் மகனை "மகிழ்ச்சியின் ரகசியத்தை" அறிந்து கொள்வதற்காக, ஒரு மகாஞானியிடம் அனுப்பி வைத்தார். அவனும் பல நாட்கள் அலைந்து திரிந்து அந்த மகாஞானியின் இருப்பிடத்தை கண்டறிந்தான். அங்கே துறவியின் எளிமையான கோலத்துடன் மகாஞானி இருப்பார் என்று எதிர்பார்த்த வியாபாரியின் மகனுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு ஆடம்பரமான மாளிகையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருக்க ஒரு மூலையில் இன்னிசையுடன் மிகப் பெரிய விருந்தும் நடந்து கொண்டிருந்தது. பலருடனும் உரையாடிக் கொண்டிருந்த அந்த ஞானியுடன் பேசுவதற்கான வாய்ப்பே இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நமது ஹீரோவுக்கு கிடைத்தது.

நம் ஹீரோ தன்னை தேடி வந்த காரணத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஞானி, அவனிடத்தில் ஒரு டீ ஸ்பூனைக் கொடுத்து அந்த ஸ்பூனில் இரண்டு சொட்டு எண்ணெய்யை விட்டு விட்டு, "முதலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வா! அதே சமயத்தில் எண்ணெய் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்" என்று கூறினார்.

அந்த மாளிகை மிகவும் பெரியதாக இருந்தது. மாளிகையில் பல அடுக்குமாடிகள், நந்தவனங்கள், நூலங்கள், கேளிக்கை கூடங்கள் என்று பல பகுதிகளிலும் சுற்றினாலும், இளைஞனின் கவனம் முழுதும் ஸ்பூனில் இருந்த எண்ணெய் மீதே இருந்தது.

ஒருவழியாக பத்திரமாக எண்ணெய்யை திருப்பிக் கொண்டு வந்த இளைஞனிடம் ஞானி கேட்டாராம், "என்னுடைய மாளிகையில் உலகப் புகழ் வாய்ந்த பல அம்சங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தாயா?"

தன்னுடைய கவனம் முழுதும் எண்ணெய் மீதே இருந்ததால், ஒன்றையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்ட இளைஞனிடம், "மீண்டும் ஒரு முறை சென்று அனைத்தையும் ஆசை தீர அனுபவித்து வா" என்று பணித்தாராம்.

மனம் லேசாகிய இளைஞன், இந்த முறை ஸ்பூனைப் பற்றி கவலைப் படாமல், மாளிகை முழுதும் சுற்றிப் பார்த்து விட்டு ஆனந்தமாக திரும்ப, அந்த ஞானி கேட்டாராம், "உன்னை நம்பி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?" என்று.

திகைத்துப் போன இளைஞன் ஸ்பூனை பார்க்க அதில் எண்ணெய் இல்லை.

அப்போது ஞானி சொன்னாராம், "உனக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்ல விரும்புகிறேன்! மகிழ்ச்சியின் ரகசியம் உலகத்தின் அனைத்து சந்தோசங்களையும் அனுபவிக்கும் அதே சமயம் தன்னுடைய கடமையிலும் கவனமாக இருப்பதுதான்"

எனக்கு மிகவும் பிடித்த இந்த கருத்தை இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்

"வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஜாலியாக இருப்போம்! அதே சமயம் வருங்காலத்திலும் அந்த ஜாலி நிலைத்திருக்கும்படி ஜாக்கிரதையாகவும் இருப்போம்!"

நன்றி

டிஸ்கி: இந்த பதிவு எய்ட்ஸ் தினத்தன்று வெளியிடப் பட்டாலும், அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Blog Widget by LinkWithin