Saturday, August 29, 2009

பங்கு சந்தை - இப்போது ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில்!


தவறிய பருவமழை, உயரும் வட்டி வீதங்கள், மிக அதிக அளவிலான விலைவாசி உயர்வு, குறைந்து போன ஏற்றுமதி, முடங்கிப் போன தொழிற்துறை இப்படி பல பாதக அம்சங்கள் ஒரு பக்கம்.

பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரும் மேற்கத்திய நாடுகள், டாலர் தொடர்ந்து சந்தைக்குள் இறக்கப் படும் என்ற அமெரிக்காவின் உறுதி, உயர்ந்து வரும் பொருட்விலைகள் (Commodity Prices) என சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இன்னொரு பக்கம்.

இடையே சீனா ஏதேனும் பொருளாதார வெடிகுண்டை போடுமா என்ற பயம் ஒரு பக்கம். இருந்தாலும், ஏதேனும் நடந்து சந்தைகள் 2008 ஆண்டு உயரத்திற்கு போய் விடுமா என்ற ஆசையும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பல பெரிய பங்குகள், பழைய உயர்ந்த நிலைக்கு மிக அருகில் வந்து விட்டாலும், பல சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆவலை தூண்டும் விலை அளவிலேயே இருக்கின்றன.

வெளிநாட்டு டாலர் வரத்து முன்போல இல்லையென்றாலும், உள்ளூர் நிறுவனங்களும் சிறிய முதலீட்டாளர்களும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியூர் பணவரத்து குறைந்து உள்ளூர் பணவரத்து அதிகம் ஆவது சந்தைகளின் வெற்றிப்பயணம் கடைசி கட்டத்திற்கு வந்து விட்டதை சுட்டிக்காட்டினாலும், இந்த கடைசி கட்டத்தின் கால அளவை அறுதியிட்டு சொல்வது கடினம்.

பெரிய வீழ்ச்சி உறுதி என்றாலும், அது உடனடியாக நிகழுமா அல்லது இன்னும் பல ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த பின்னர் நிகழுமா என்பதை கணிப்பது சிரமம்.

மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில், சந்தைகள் இப்போது ஒரு சுவாரஸ்யமான நிலைக்கு வந்துள்ளன.

நிபிட்டி அளவு 4730 அளவுக்கு அருகே இருக்கின்றது. 4750-4800 அளவுகளில் மிகப் பெரிய எதிர்ப்பு அலை இருக்கும். 4780 என்பது பிபனாக்கி முறையில் (Fibonacci Series) ஒரு பெரிய எதிர்ப்பு நிலையாகும்.

இனிமேலான சந்தையின் வெற்றிப்பயணம் போக்கு மேற்சொன்ன நிலைகளை முறியடிப்பதை பொறுத்தே இருக்கும்.

திங்கட்கிழமை வெளிவரும் இந்திய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஒருவேளை இந்த தகவலில் சந்தோச ஆச்சரியங்கள் (positive surprises) இருந்தால், சந்தையின் வெற்றி இன்னும் பல ஆயிரம் புள்ளிகளுக்கு தொடர வாய்ப்புண்டு. ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் சந்தை அடுத்த நல்ல தகவலுக்காக காத்திருக்கும். வெளிநாட்டு தகவல்களையும் குறிப்பாக இந்தியாவிற்கு வரும் டாலர் அளவில் ஏற்படுத்த வல்ல நிகழ்வுகளையும் நமது சந்தை வர்த்தகர்கள் தொடர்ந்து வருவார்கள்.

மேலை உலகத்தில் இருந்து வரும் நல்ல செய்திகளின் அடிப்படையில் உயருகின்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருவேளை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு என்றாலும், ரிலையன்ஸ் போன்ற பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

சந்தையின் பெரிய (கரும்) புள்ளிகள் பெருமளவு சந்தைக்குள் இருப்பது பல பங்குகளில் ஏற்படும் சுனாமி மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

நிபிட்டி 4800 புள்ளிகளுக்கு மேலே சென்றால், வர்த்தகர்கள் வாங்கும் நிலையை எடுக்கலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, August 27, 2009

பங்குசந்தை வெற்றிப்பயணம் - ஒரு நடைமுறை பயிற்சி!


பங்குசந்தை நுணுக்கங்களை ஆரம்ப அடிப்படையில் இருந்து அறிந்து கொள்வதை விட சில நேரடி பங்கு சந்தை அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வது மனதில் இன்னும் ஆழமாக பதியும் என்று நம்புகிறேன். நேரடி சந்தை அனுபவங்களின் வழியாக அவ்வப்போது எழும் ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பாட நூல் கல்வி மற்றும் விவரமறிந்தவர்களின் வழிகாட்டல் (Guidance) உதவி செய்யும் என்றும் நினைக்கிறேன்.

என்னுடைய தனிப் பட்ட அனுபவத்தில் கூட ஒரு வித ஜிக் ஜாக் (Zig Zag) கல்வி முறையே அதிக உதவியாக இருந்திருக்கிறது.

இந்த பதிவை தொடர்பவர்களில் பலர் பங்குச்சந்தை சாதனையாளர்களாக விரும்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கான ஒரு பயிற்சிக் களமாக இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்

பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கான மூன்று விதமான பாதைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். (பார்க்காதவர்கள் இங்கு சுட்டவும்) இப்போது பார்க்கும் பாதை ஒரு உப பாதை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

காரணம், இந்த பாதையை மற்ற பாதைகளுக்கு மாற்று என்றோ எப்போதுமே இந்த பாதை திறந்திருக்கும் என்றோ சொல்ல முடியாது. சரியாக முயற்சித்தால் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் என்றாலும், சில சமயங்களில் முழு தோல்வியை கூட சந்திக்க நேரிடலாம். மேலும் இந்த பாதையில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் மற்ற பாதையில் கை தேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்த பாதையில் ரிஸ்க் ரொம்ப அதிகம். "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல" என்று சொல்லுபவர்கள் வேண்டுமானால் இந்த பாதையில் அவ்வப்போது பயணிக்கலாம். இதே போன்ற வார்த்தைகளை இதற்கு முன்னர் இந்த பதிவு வலையில் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். சரியாக யூகித்தால் நீங்கள் திறமை சாலி.

பொதுவாக எந்த பங்கையும் பரிந்துரைக்காத இந்த பதிவர் தனது இந்த பதிவில் ஒரு பங்கினை அதுதான் சத்யம் நிறுவனத்தை (சில நிபந்தனைகளுடன்) வாங்கலாம் என்று கோடிட்டு காட்டியிருந்தார். மேற்சொன்ன பதிவு வெளிவந்த போது, நாற்பது ரூபாய்க்கும் கீழே இருந்த இந்த பங்கு இப்போது நூறு ரூபாய்க்கும் மேலே உயர்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

இது போன்ற அத்திபூத்தார் போன்ற வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்வதுதான் இந்த உப பாதை.

இந்த பாதையில் வெற்றி பெற்றோர் பெரிய பங்கு சந்தை ஜாம்பவான்களாக மாறி இருக்கின்றனர். அதே சமயத்தில் இந்த பாதையில் செல்வோர் தன்னுடைய முழுபணத்தையும் கூட இழந்து விட வாய்ப்புள்ளது என்பதனால் மிக மிக எச்சரிக்கையாக காய்களை நகர்த்தினால் மட்டுமே இந்த பாதையில் வெற்றி பெற முடியும். மேலும் இந்த முறையில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால் அவருக்கு சந்தையில் ஏராளமான முன் அனுபவம் வேண்டியிருக்கும்.

அதே சமயத்தில், பங்கு வர்த்தகத்தில் அதிக முன் அனுபவம் இல்லாத என்னைப் போன்றோர், இது போன்ற பங்குகளில் மிகக் குறைந்த அளவு, அதாவது முழுமையாக இழந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு மட்டுமே முதலீடு செய்து வருகின்றனர். இந்த முறையில் 'வந்தால் மலை, போனால் ஒன்றுமில்லை' என்ற பாணியும் உண்டு. அதே போல, இந்த பாதையில், குறைந்த முதலுடன் பயணிக்கும் போது, சந்தையைப் பற்றி ஏராளமான அரிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும் என்பது ஒரு நல்ல விஷயம்.

கீழே வரும் எதுவும் மீண்டும் மேலே போகும் என்ற தத்துவத்தை ("Mean Reversion is one of the great truism of capitalism" ~ Anthony Bolton) சார்ந்தது இந்த முறை. அதே சமயத்தில், கீழே விழுந்த பங்கு மீண்டும் மேலே போக வேண்டுமானால் சில நிகழ்வுகள் கட்டாயமாக ஏற்பட வேண்டும் (அதாவது நிறுவனம் தனது மோசமான நிலையில் இருந்து மெல்ல மெல்ல மீள்வது). அந்த நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்றார்போல காய்களை மெல்ல மெல்ல நகர்த்துவதுதான் இந்த முறை.

சத்யம் நிறுவனத்திற்கு வருவோம். அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜு சத்யம் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்ததால், நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய அச்சம் சந்தைக்கு வந்தது. எனவே அனைவரும் பங்குகளை விற்று தீர்த்தனர். பங்கின் மதிப்பு தொண்ணூறு சதவீதத்திற்கும் கீழே குறைந்தது.

பங்கு முதலீடுகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றாலும், சந்தையின் போக்கு பெரும்பாலும் குறுகிய கண்ணோட்டத்திலேயே இருக்கிறது. குறுகிய கால பயங்கள் அல்லது பேராசைகளே சந்தையை பெரும்பாலும் நகர்த்துகின்றன. பயங்கள் அல்லது பேராசையின் உச்ச கட்டத்தில் சந்தை இருக்கும் போது, சந்தையின் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளும் பங்கு சந்தை ஜாம்பவான்கள் களம் இறங்குகின்றனர்.

நீண்ட கால நோக்கில், ஒரு விசாலமான பார்வையுடன் சந்தையின் போக்கிற்கு எதிராக போகலாமா என்று முடிவு எடுக்கின்றனர். அவர்களின் முடிவு வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் ஏராளமாக பணம் சம்பாதிக்கின்றனர். (இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்கள் உலகின் மிகப் பெரிய பங்கு பரஸ்பர நிதிகளில் ஒன்றான பிடிலிட்டி நிதியில் முக்கிய பணியாற்றிய அந்தோணி போல்டன் எழுதிய Investing Against the Tide புத்தகத்தை படிக்கலாம். இந்த புத்தகம் பங்கு சந்தையில் ஓரளவுக்கு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. )

ஒரு முக்கிய விஷயம், வருவது ஒரு சாதாரண அலை என்றால் எதிர்த்து நிற்க முடியும். ஆனால் அதுவே சுனாமி என்றால்? எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.

அவர்களைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்போது சத்யம் விவகாரத்திற்கு வருவோம்.

சத்யம் விவகாரத்தில் அரசு அதிரடியாக களம் இறங்கியதும், நம்பகத்தன்மை மிகுந்த தீபக் பரேக் அவர்கள் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப் பட்டதும் கவனித்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

லார்சன் டூப்ரோ போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை கைப்பற்ற முயற்சித்ததும் சாதகமான விஷயங்கள். அதே சமயத்தில் அந்த தருணத்தில் நிலைமை அவ்வளவு தெளிவாக இல்லையென்றாலும், பின்னர் சத்யம் நிறுவனத்தை கைப்பற்ற மகிந்திரா நிறுவனம் முயற்சி செய்த போது, ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. பின்னர் நடந்தது எல்லாம் சரித்திரம்.

பழைய கதையை விடுவோம். தற்போதைய நிலையில் சந்தை மீண்டும் எக்கச்சக்க உயரத்திற்கு சென்றிருந்தாலும், சந்தையில் ஏராளமான வாய்ப்புக்கள் அங்கங்கே இருந்த வண்ணம்தான் உள்ளன. அவற்றில் இந்த பதிவர் கவனித்த ஒரு பங்கு இது.

சத்யம் நிறுவனத்தைப் போலவே பெரிய சிக்கலில் மாட்டி தற்போது மீள முயற்சித்து வரும் மைத்தாஸ் நிறுவனம்தான் அது.

கிட்டத்தட்ட ஆயிரம் ருபாய் வரை ஒருகாலத்தில் உயர்ந்த இந்த பங்கு இப்போது நூறு ருபாய்க்கு அருகிலேயே உள்ளது.

இந்த பங்கில் கவனிக்கப் பட வேண்டிய சில விஷயங்கள்.

இந்த நிறுவனத்திலும் அரசு தரப்பிலான சில இயக்குனர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இவ்வாறான பணி நியமனம் நிறுவனத்தின் நம்பகத் தன்மை அதிகரிக்க உதவுகிறது. கடன் சீரமைப்பு (CDR) நிறைவேற்றப் பட்டதன் மூலம் இந்த நிறுவனத்தின் கடன் பளு நிர்ப்பந்தங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் கையில் இன்னமும் ஏராளமான ஆர்டர்கள் உள்ளன என்பதும் மைத்தாஸ் நிறுவனத்திற்கு ஆசைப்பட்டதால்தான் லார்சன் நிறுவனம் சத்யம் நிறுவனத்தின் பின்வாசல் வழியாக நுழைந்தது என்று சொல்லப் படுவதும் குறிப்பிடத் தக்கது.

அரசியல் சார்புடையதாக கருதப்படும் இந்த நிறுவனத்தை பாதிக்கும் வகையில் (கடந்த தேர்தலில்), ஆந்திர மற்றும் மைய அரசியலில் அதிகார மாற்றம் ஏதும் நிகழாமல் போனதும் குறிப்பிடத் தக்கது.

இந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை அறிய விரும்புவோர் இங்கு கிளிக்கலாம்.

ஒருவேளை, இந்த மாற்றங்கள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையுமானால் பங்கு நன்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், அரசோ அல்லது நீதிமன்றமோ இந்த நிறுவனத்தின் மீதோ அல்லது தலைமையின் மீதோ ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இந்த பங்கு பாதிக்கப் படும்.
ராஜு குடும்பத்தினர் இந்த நிறுவனத்தை ஓட்டாண்டி ஆக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றிருந்தாலும் ஆபத்துத்தான்.

மற்றபடிக்கு, இந்த பங்கும் மற்ற பங்குகளை போலவே சந்தை மற்றும் இதர அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்லலாம்.

கண்டிப்பாக, மைத்தாஸ் நிறுவன பங்கை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல இந்த பதிவு. அதே சமயத்தில் பெருமளவு பாதிக்கப் பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கின் ஏற்றத் தாழ்வுகள் எப்படி நிகழ்கின்றன என்பதை கவனிக்க ஒரு வாய்ப்பை கோடிட்டு காட்டும் பதிவு மட்டுமே இது.

இது போன்ற பங்குகளில் உடனடியாக முதலீடு செய்யக் கூடாது. நிறுவன சம்பந்தமான நிகழ்வுகளை கவனமாக பின்தொடர்ந்து நிறுவனத்தைப் பற்றிய கணிப்பு மற்றும் நிலைப்பாடு ஓரளவுக்கு உறுதியானதும் பங்கு முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். முதலீட்டு முடிவு எப்போதுமே சொந்த முடிவாக இருக்க வேண்டும்.

முதலீடு செய்த பின்னரும் கூட மிகவும் கவனமாக பின்தொடர வேண்டிய பங்கு இது, காரணம் போட்ட பணம் முழுமையாகவே முழுகிப் போய் விடும் அபாயம் இங்கு உண்டு.

எடுத்த எடுப்பிலேயே அதிக அனுபவம் உள்ளவருக்கான ஒரு கடினமான பயிற்சியா என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலேயே கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்வது பின் வரும் காலங்களில் பயணத்தை எளிமையாக்கும்.

பங்கினை வாங்காமலேயே கூட, ஒரு பயிற்சியாக, சந்தையில் பெரிய அளவில் சாதிக்க ஆசைப் படுபவர்கள், இந்த நிறுவனத்தைப் பற்றிய செய்திகளையும் பங்கின் ஏற்றத்தாழ்வுகளையும் தொடரலாம். (அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான வேறு சில முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

பொதுவாக பங்கு சந்தை பற்றிய பாடங்களில் பழைய கதைகள் மட்டுமே இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாக நடப்பு கதையையே ஒரு பயிற்சி களமாக்கும் இந்த முயற்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.

இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்".

முடிவை காலம்தான் சொல்ல வேண்டும்.

பயணம் தொடரும்.

நன்றி.

பின்குறிப்பு: இன்னொரு துணை பாதை கூட உண்டு. அதாவது, சந்தையின் போக்கு சரிவர புரியாத போது மேற்கொள்ள வேண்டிய பைபாஸ் பாதை (அதாவது ஒன்றுமே செய்யாமல் அமைதி காப்பது). இதில் எந்த ஒரு கௌரவக் குறைவும் இல்லை. பெரிய ஜாம்பவான்கள் கூட இந்த பாதையில் அவ்வப்போது பயணித்து தங்களது இழப்பை குறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Monday, August 24, 2009

பங்குச்சந்தை வெற்றிப் பயணம்! முகமறியாதவர்களின் மூன்றாவது பாதை!


பங்குசந்தையில் வெற்றி பெற்றவர்கள் என்றால் பலருக்கும் வாரன் பபெட் போன்றவர்களும் மும்பை பங்கு தரகர்களும் மட்டும்தான் மனக் கண் முன்னே வருவார்கள்.

அதிமேதாவித்தனம் அல்லது செய்திகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே பங்குசந்தையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணமும் பலருக்கும் உண்டு.

காதை சுற்றி மூக்கை தொடுவதை தவிர்த்து, மிக மிக எளிமையான பாதை ஒன்றில் பயணித்து பங்கு சந்தையில் வெற்றி பெற்ற மனிதர்கள் நம்மிடையே ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.

இது மட்டுமல்ல, பங்குசந்தையில் பெரிய வெற்றிகள் குவித்த, "பங்குச்சந்தை விற்பன்னர்கள்" என்று அழைக்கப் படும் பல பெரியவர்கள் கூட இந்த பாதையைத்தான் தனது பங்கு சந்தை பயணத்தின் துவக்கத்தில் மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பெரும்பாலான தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது இன்னும் கூட ஆச்சர்யமாக இருக்கலாம்.

வெற்றி சதவீதம் மிக மிக அதிகமான இந்த பாதையை பற்றிய சில விவரங்களை இங்கு பார்க்கலாம்.

இந்த பயணிகள் தனித்தே பயணம் செய்கிறார்கள். இவர்கள் திட்டம் மிக எளிமையானது, தன்னை சுற்றியே அமைந்தது மற்றும் தனக்கு ஏற்றபடியே அமைக்கப் பட்டது.

நண்பர்கள் அல்லது தரகர்கள் தரும் பரிந்துரைகளை இவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. ஊடகங்கள் "இந்தியா ஒளிர்கிறது. இந்திய நிறுவனங்கள் உலகை ஆளப் போகின்றன" என்றெல்லாம் தம்பட்டம் அடித்தாலும் இவர்கள் அமைதி காக்கிறார்கள். சக ஊழியர்கள், பங்கு சந்தையில் தான் ஏராளமான பணத்தை சம்பாதித்திருப்பதாக பந்தா காட்டினாலும் இவர்கள் பாந்தமாகவே இருக்கிறார்கள். வங்கிகளும் பங்கு தரகர்களும், பங்குகளை வாங்க கடன் வசதி செய்து தருவதாக ஆசை காட்டினாலும் இவர்கள் மசிவதில்லை.

இவர்களுடைய முதலீடு இவர்கள் சொந்த பணத்தின் உதவியுடனேயே அமைகிறது. அதுவும் தனது சொந்த பணத்தின் ஒரு பகுதி, அதாவது முழுதும் இழந்தாலும் தனது சாதாரண வாழ்க்கையை பெருமளவுக்கு பாதிக்காது என்ற அளவில் மட்டுமே இவர்கள் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

முதலீடுகளை ஒரே நாளில் செய்யாமல், தன்னிடம் காசு சேரும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை மட்டுமே சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

இவர்கள் தனது முதலீடுகளுக்காக கடினமான கணக்குகளை நம்புவதில்லை. தனக்கு பிடித்தமான அல்லது நம்பகமான துறை/நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவித முதலீட்டுக் கொள்கையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

வீடு, மனை, தங்க வெள்ளி நகைகள் போல சந்தை முதலீடுகளையும் தனது சொத்தின் ஒரு பகுதியாகவே நினைக்கிறார்கள். வீடு தங்க நகை போன்ற இதர சொத்துவகைகளைப் போலவே இங்கேயும், இன்றைய மதிப்பு எவ்வளவென்று ஒவ்வொருநாளும் கவலைப் படுவதில்லை.

இதனாலேயே, சந்தைகள் நொறுங்கப் போகின்றன என்று ஊடகங்கள் கதறினாலும் இவர்கள் கவலைப் படுவதில்லை. இவர்கள் முதலீடு செய்த பங்கின் விலைகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தாலும் இவர்களின் ரத்த அழுத்தம் அதிகம் ஆவதில்லை. பங்கு விற்பன்னர்கள், "உங்கள் பங்குகளை உடனடியாக விற்பனை செய்து விடுங்கள், இன்னும் பல வருடங்கள் சந்தை பாதாளத்திலேயே இருக்கும்" என்று பயமுறுத்தினாலும் இவர்கள் அமைதி காக்கிறார்கள்.

யென் மாற்று வணிகம், அமெரிக்க நிதி நெருக்கடி, தற்போதைய சீனா பப்புள் போன்ற பங்குசந்தை விற்பன்னர்களின் வார்த்தை ஜாலங்கள் இவர்களை பாதிப்பதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் மாங்கு மாங்கென்று விவாதித்துக் கொண்டிருக்க இவர்கள் கண்டு கொள்ளாமல் டிவி சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் பொறுமை அலாதியானது. வாரன் பபெட் போன்றவர்களின் பொறுமை அவர்களது மேதாவிதனத்தின் மீதான நம்பிக்கை என்றால், இவர்களுடைய பொறுமை பங்குகளை நீண்ட கால முதலீடுகளாக மட்டுமே பார்க்கும் இயல்பிலானது.

வாரன் பபெட் அவர்களே ஒரு முறை கூறியிருக்கிறார். பங்கு சந்தையில் வெற்றி பெற 25 சதவீதம் புத்திசாலித்தனம் மட்டுமே போதுமானது. பொறுமையும் அமைதியும் மட்டுமே முடிவான வெற்றிக்கு வழி வகுக்கும்.

இவர்களை நீங்கள் சாதாரண வாழ்க்கையில் எளிதாக சந்திக்கலாம்.

என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் சந்தையில் வர்த்தக கணக்கு (Trading Account with Broker) ஒன்று ஆரம்பிக்க ஆலோசனை கேட்டார். வர்த்தக கணக்கு ஆரம்பிக்கும் முன்னர் பங்கு கணக்கு (Demat Account)ஆரம்பிக்க வேண்டுமென்று நான் கூறினேன். தன்னிடம் ஏற்கனவே பங்கு கணக்கு இருப்பதாகவும், அதில் ஒரே ஒரு பங்கை மட்டும் விற்க விரும்புவதால் தனக்கு வர்த்தக கணக்கின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். சரி உங்கள் பங்குகளை காட்டுங்கள் என்று நான் சற்று அலட்சியமாக கூறி பின்னர் அவரது பங்குகளை மற்றும் அவற்றின் விலைகளை பார்த்த போது அசந்து போய் விட்டேன்.

இருக்காதா பின்னே?

மாருதி, ஒ.என்.ஜி.சி போன்ற பல பங்குகளை அவற்றின் ஆரம்ப கால வெளியீட்டு விலைக்கே வாங்கி வைத்திருக்கிறார் அவர். அவற்றின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டால் பல லட்சங்கள் லாபம் வரும். இத்தனைக்கும் அவர் முதலீடு மிக மிக சிறியது.

"எப்புடி....?"ன்னு நான் கேட்க, தான் "நல்ல" நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அவற்றின் பங்கு வெளியீடுகளில் (IPO) மட்டும் முதலீடு செய்து வந்ததாக கூறினார். தான் எப்போதுமே பங்குகளை விற்றதில்லை என்றும் இப்போது கூட தனது தாயார் பெயரில் ஜாயின்ட் அக்கௌண்டில் உள்ள பங்கை மட்டுமே விற்க விரும்புவதாக கூறினார்.

இவர் யாரோ ஒரு உதாரணம் மட்டுமல்ல. பங்குகளை விற்று வீடுகளை கட்டியவர்கள், பிள்ளைகளுக்கு திருமணம் செய்தவர்கள் என்று ஏராளமானவர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், பங்கு சந்தையில் நுழைய விரும்பியவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டதுண்டு. ரிலையன்ஸ், லார்சென், பெல் போன்ற பங்குகளை நான் பரிந்துரைத்ததுண்டு. அவர்களில் பலரும் இந்த பங்குகளை வாங்கி ஏராளமான லாபம் சம்பாத்தித்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கையான உண்மை என்னவெனில், ஆலோசனை சொன்ன நானே அந்த பங்குகளை வாங்கியதில்லை.

காரணம், இவையெல்லாம் பங்குச்சந்தையில் ஆரம்ப நிலையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்று நம்பினேன். என்னைப் போன்றவர்களெல்லாம், வாரன் பபெட் போல ஒரு யாருக்கும் தெரியாத (?) புதிய வளரும் நிறுவனத்தை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

உண்மையில், கண் முன்னே தெரியும் இது போன்ற வெற்றிகதைகளில் முதலீடு செய்வதுதான் வாரன் பபெட்டின் பாணி என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன்.

வேடிக்கையான ஆனால் விஷயமுள்ள கதை ஒன்று உண்டு. கடவுளை தேடி கண்டபடி அலைந்த ஒரு பெரிய அறிவாளி கடவுளே தன கண் முன்னே வந்து நின்ற போது கடவுளை அடையாளம் கண்டு பிடிக்க முடிய வில்லையாம். கடவுளென்றால் அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என்றெல்லாம் எண்ணி இருந்த அவர், கடவுள் ஒரு எளிமையான உருவத்தில் வருவார் என்று எதிர்பார்க்க வில்லையாம். "இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே" என்ற ஆன்மீக தத்துவம் பங்குசந்தைக்கும் பொருந்தும்.

இந்த பாதை ஏதோ நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான், இந்த பாதையில் சென்றால் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று தயவு செய்து எண்ண வேண்டாம்.

மாபெரும் பங்கு சந்தை (குறுகியகால) வர்த்தகர்களாக அறியப் படுகிற ஜேம்ஸ் ரோஜர்ஸ் போன்றவர்கள் கூட இந்த பாதையைதான் தமக்கேற்றபடி வடிவமைத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கூட மற்ற முறைகளை விட இந்த முறைதான் அதிக வெற்றிகளை தேடி தந்திருக்கிறது.

இது எளிமையான பாதை என்றாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.

சாதாரணமானவர்களையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வெற்றி காண வைத்த இந்த அசாதாரண பாதையை பற்றி பின்வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

தனக்கென ஒரு முதலீட்டு கொள்கையை உருவாக்குவது என்றும் கண் முன்னே உள்ள நல்ல வாய்ப்புக்களை எப்படி தவற விடாமல் இருப்பது என்பது பற்றியும் விரிவாக பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.

பின் குறிப்பு: இந்த மூன்று பாதைகளில் எந்த பாதை உங்களுக்கு உகந்ததாக தோன்றுகிறது என்றும் எந்த பாதையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் தயவு செய்து தெரிவிக்கவும். அது இந்த பயணத்தின் அடுத்த பகுதியின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும்.

நன்றி!

Sunday, August 23, 2009

பச்சை முளைகளும் மஞ்சள் களைகளும்!


இப்போதெல்லாம் பொருளாதார ஜாம்பவான்கள் அதிகம் உபயோகப் படுத்தும் வார்த்தைகளில் முக்கியமான ஒன்று பச்சை முளைகள் (Green Shoots).

அமெரிக்காவில் வீடுகள் அதிக விற்பனை, மேற்கு ஐரோப்பாவில் தொழில் வளர்ச்சி, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி போன்ற பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளே இந்த பச்சை முளைகள்.

இந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா?

அல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா?

அல்லது, முளைகளுக்கான நீரை தானே உறிஞ்சி கொண்டு, மிகப் பெரிய அளவில் உலக சந்தைகளில் வளரும் "பப்புல்கள்" எனும் களைகள் உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லுமா?

இவையே இப்போதைக்கான கேள்விகள்.

சென்ற வாரம் வெளிவந்த பெரும்பாலான உலக பொருளாதார தகவல்கள் ஒரு துரித மீட்சிக்கான அறிகுறிகளை கொண்டிருந்தன. அதே சமயத்தில் இந்தியாவில் பருவமழை தவறியதும் சீனாவில் ஏற்பட்டு வரும் ஒரு வித பப்புளும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் பருவமழை தவறினாலும், டாலர் மழை இன்னும் பல வருடங்கள் இதே போல தொடரும் என்ற பாணியிலான தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலக சந்தைகளின் மீது கொட்டி தீர்க்கும் டாலர் மழையானது, அனைத்து வகையான விலைவாசிகளையும் மிகுந்த அளவுக்கு மேலேற்றி ஒருவகையான பப்புளை அனைத்து சந்தைகளிலும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த டாலர் வரத்தினால், இது வரை பங்கு சந்தைகள், முக்கியமாக வளரும் நாடுகளை சேர்ந்த பங்கு சந்தைகள், அதிக அளவு பலனை கண்டுள்ளன. இப்போது, இந்த பங்கு சந்தைகள் ஏற்கனவே பெருமளவுக்கு உயர்ந்து விட்டதாலும், மேலும் அதிக அளவு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் சற்று குறைவு என்பதாலும், டாலர் பணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த டாலர் பணம் தற்போதைக்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்க சந்தையில் அதிக அளவுக்கு நுழையும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. திடீரென்று சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்து முக்கிய எதிர்ப்பு நிலையான 71-72 அளவுகளை முறியடித்தது இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்துகிறது.

சென்ற வாரம் இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவுக்கு விற்றுத் தீர்த்தும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

நம்மூரைப் பொருத்த வரை மழை தப்பிதத்தை தவிர பெரிய பொருளாதார பாதிப்புக்கள் இப்போதைக்கு இல்லை.

அதே சமயம் அடானி பவர் பங்கு தனது முதல் நாளில் பெரிய அளவில் முன்னேறாதது சந்தையில் ஒருவித தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்காத படி, அதிக வெளியீட்டு விலை நிர்ணயித்த அந்த நிறுவனத்தின் பேராசையே இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

இந்த நிறுவனம் தனியார் நிறுவனம் என்பதால் இதன் பேராசையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். NHPC போன்ற அரசு நிறுவனமே இது போலவே அதிக விலையை நிர்ணயித்தது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது? NHPC பங்கு பெரிய அளவில் முன்னேறாவிடில், அரசின் இதர வெளியீடுகளும் பாதிக்கப்படக் கூடும்.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி ஒரு முக்கிய நிலையில் இப்போதைக்கு உள்ளது. திங்கட்கிழமை சந்தை வலுவாக துவங்கினால் 4610 மற்றும் 4700 அளவுகளில் எதிர்ப்புகள் வரக் கூடும்.

கீழே 4450, 4380, 4320 ஆகிய அளவுகளுக்கு அருகே அரண் நிலை இருக்கக் கூடும்.

வர்த்தக நிலை எடுப்போர், கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்தால், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய் கண்டுபிடிப்பாளர்கள் போன்ற பங்குகளை கவனிக்கலாம். அதே சமயம், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சற்று சரிவை சந்திக்கும். மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதனால் 'வாங்கும் நிலையில்' சற்று கவனமாக இருப்பது நல்லது.

முதலீட்டாளர்கள் இப்போதைக்கு சற்று நிதானித்து செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Thursday, August 20, 2009

பங்குசந்தை வெற்றிப் பயணம் - இன்ட்ரெஸ்டிங்கான இரண்டாவது பாதை


எல்லாருமே வாரன் பபெட் போல இருந்து சந்தையில் என்றைக்காவது ஒரு நாள் மட்டுமே பங்கு வர்த்தகம் செய்தால் சந்தை எப்படி இயங்குவது?

ஒரு குறிப்பிட்ட நிலைதான் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு சரியான அளவு என்றால் மற்ற நேரங்களில் யாரால் வர்த்தகம் செய்ய முடியும்?

வாங்குவதற்கு சரியான விலை என்று எல்லாருமே ஒரு விலையை நினைத்தால் அந்த விலையில் யார்தான் விற்பார்கள்?

நடைமுறையில், சந்தையின் எல்லா தருணங்களிலும் வாங்குபவர்களும் இருக்கின்றனர். விற்பவர்களும் இருக்கின்றனர்.

இவர்களில், தொழில் முறை தின வர்த்தகர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பங்குதரகர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு பங்கு வர்த்தகம் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அந்தந்த தருணத்தில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலும் தொழிநுட்ப வரைபடங்களின் அடிப்படையிலும் (Technical Analysis) சந்தையின் போக்கின் (Trend) அடிப்படையிலும் இயங்குகின்றனர். (ஒரு நிமிடம் என்பது இவர்களைப் பொறுத்த வரை மிகப் பெரிய கால இடைவெளி.) இவர்களின் ரியாக்சன் மிக வேகமானதாக இருக்கும். அந்த வேகம்தான் அவர்களுடைய பலமாகும்.

இவர்களின் பாணியை நம்மில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியாது என்பதால் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள குறுகிய கால வர்த்தகர்களின் பாதைக்கு செல்வோம்.

இந்த பாதையை உழைப்பாளிகளின் பாதை என்றும் திறமைசாலிகளின் பாதை என்றும் சொல்லலாம். காரணம் இவர்கள் இயல்பிலேயே திறமைசாலிகள் மற்றும் சந்தையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பவர்கள்.

செய்திகளை சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில்தான் இவர்களின் பலம் அடங்கி இருக்கிறது.

இதற்காக இவர்கள் படும் பாடு சாமான்யமானதல்ல. காலை முதல் இரவு வரை சில சமயங்களில் இரவு நேரங்களில் கூட இவர்கள் கடுமையாக உழைப்பார்கள்.

இவர்களது கண் பார்வை எப்போதுமே வணிக தொலைக்காட்சிகளின் மீதேதான் இருக்கும். கையில் எப்போதும் வணிக தாள்கள் அல்லது வணிக இதழ்கள் இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இவர்கள் நடத்தும் பெரும்பாலான உரையாடல்கள் பங்கு வணிகத்தை சார்ந்தே இருக்கும்.

ஏராளமான தரகர்களுடனும் இதர வர்த்தகர்களுடனும் இவர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பார்கள். நிபுணர்களின் பரிந்துரையை இவர்கள் விழுந்து விழுந்து படிப்பார்கள். யாராவது ஏதாவது டிப் தருவார்களா என்று எப்போதும் எதிர்பார்த்திருப்பார்கள்.

இவர்களில் சிலர் குறுக்கு வழியிலும் செல்வார்கள். சிலர் குழுக்களாக சேர்ந்து கொண்டு "தப்பு" விளையாட்டு விளையாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக, நீண்ட கால நோக்கில் மட்டுமே செயல்பட வேண்டிய பரஸ்பர நிதிகளில் சில கூட இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றன என்பது சந்தை தகவல்.

இவர்கள் வதந்தியையும் நிறுவனங்களின் உள்தகவல்களையும் முந்தியே அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள், எந்த பங்கில் ஆர்வம் காட்டுகிறார்கள், வாரன் பபெட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் எந்த பங்கில் முதலீடு செய்கிறார்கள் என்பதையெல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் புள்ளி விவரங்களின் ராஜாக்கள்.

இந்த புள்ளி ராஜாக்கள், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், மழை நிலவரம், அரசியல் மாற்றங்கள் என்று எல்லா முக்கிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். (சில சமயங்களில் அதிகாரபூர்வ தகவல்களுக்கு முன்னரே கூட)

இது போன்ற பொதுவான தகவல்கள் மட்டுமல்லாமல், பன்றி காய்ச்சல் போல புதிது புதிதாக வரும் பொருளாதார வைரஸ்(தகவல்)களையும் சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துவார்கள். (இதைப் பற்றிய ஒரு வேடிக்கையான பழைய பதிவு இங்கே) சமீபத்திய சில உதாரணங்கள், டாலர் வரத்தை அறிய உதவும் டாலர் இன்டெக்ஸ், உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணிக்க உதவும் பால்டிக் ட்ரை இன்டெக்ஸ், சீனா பப்புள் போன்றவை.

இவர்களை நெரிசலான சாலை போக்குவரத்தில் குறுக்கிலும் நெடுக்கிலும் நுழைந்து, முந்தியடித்து பயணம் செய்யும் நம் சக வாகன ஓட்டிகளுடன் ஒப்பிடலாம். பொதுவாக ஒரு போக்குவரத்து நெரிசலின் போது, சாலையின் சராசரி வேகத்தை மிஞ்சுவது கடினம் என்றாலும் (ஒரு சிக்னலில் தப்பித்தால் இன்னொன்றில் மாட்டிக் கொள்வோம்) இவர்கள் அயராது முயற்சிப்பார்கள். மஞ்சள் சிக்னல் விழுந்தாலும் இவர்கள் வேகத்தை குறைக்காமல் (அதுதான் இவர்களுக்கு பழக்கம் இல்லையே) செல்வார்கள். இதனாலேயே இவர்களில் பலர் அதிகம் விபத்துகளில் மாட்டிக் கொள்வார்கள்.

இப்படி விபத்துக்களில் மாட்டாதவர்கள் மிகக் குறைவு என்றாலும், இவர்களுடைய வருங்கால பயணத்திற்கு அதிக உத்தரவாதம் இல்லை

இவர்களது சக்திநிலை அபாரமானது.

இவர்களது வேகமும் அசாத்தியமானது.

அதே சமயம், இந்த திறமை அளவை ஒவ்வொரு நாளும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கின்றனர். காரணம் இவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகம். அவர்களும் இவர்களைப் போலவே மிகவும் திறமைசாலிகள். அவர்களை ஜெயித்தால் மட்டுமே இவர்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் இந்த வகை பயணிகளுக்கு எப்போதுமே நெருக்கடி அதிகம்.

இவை எல்லாவற்றையுமே மீறி வருபவர்கள் வெகு சிலர் மட்டுமே.

எனவே இந்த பாதையில் வெற்றி வாய்ப்பு சற்று குறைவு.

கண்டிப்பாக இந்த பாதையை நான் உங்களுக்கு பரிந்துரைக்க போவதில்லை என்றாலும், இந்த பாதையைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் அவசியம். காரணங்கள் இரண்டு.

இந்த பாதையில் பழக்கப் பட்ட பயணிகள் ஆபத்தானவர்கள். சமயத்தில் தாறுமாறாக வண்டியை ஒட்டி, ஒழுங்கான பாதையில் செல்லும் நம்மையும் பதம் பார்த்து விடுவார்கள்.

இரண்டாவது காரணம், இந்த வகையினரே சந்தை வர்த்தகர்களில் மிகப் பெரும்பான்மையினர். (பெரும்பான்மையின் முடிவு பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும் என்பதை சந்தை பலமுறை உறுதி செய்கிறது என்பது நினைவு கூறத் தக்கது) சந்தையின் பெரும்பான்மையினரின் மனப்பாங்கை சரியாக புரிந்து கொள்ளாமல் சந்தையில் வெற்றி பெறுவது கடினமான விஷயம்.

ராட்சச வேட்டை சுறாக்களிடையேயான இந்த பயணத்தில் திரில் அதிகம் என்பதோடு இந்த பாதையிலும் சில முறை பயணம் செய்வது ஒருவரது சந்தை அனுபவத்தை மேம்படுத்தும்.

அதே சமயம், (இந்த பாதையில் பயணம் செய்யும் போது) விபத்துக்களில் மாட்டாமல் காயங்களின்றி எப்படி வெளிவருவது என்பதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பயணம் தொடரும்.

Wednesday, August 19, 2009

முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை


பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன.

வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது.

இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.

வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள்.

ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய ஒரு விசாலமான அறிவு தேவைப் படும்.

மேலும் பங்கு முதலீட்டை பொறுத்த வரை, இறந்த காலத்தை விட எதிர் காலத்திற்கே அதிக மதிப்பு என்பதால், இந்த நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.

இப்படி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் உடனடியாக முதலீடு செய்வதில்லை. சரியான விலைக்காக காத்திருக்கிறார்கள். சரியான விலையை கண்டறிய சில கணித முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கணக்கு என்றவுடன் பயப் பட வேண்டாம்.

இன்று தாமும் பெருமளவுக்கு தோல்வியடைந்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களையும் அதிகம் தோல்வியுற செய்யும் பல நிபுணர்கள் எளிதில் விளங்காத கடினமான கணித முறைகளை பின்பற்ற வாரன் பபெட் போன்ற வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் மிக மிக எளிமையான கணக்கு முறையையே பின்பற்றி வருகின்றனர்.

இந்த புத்திசாலிகளை சந்தையின் குறுகிய கால மாற்றங்கள் பாதிப்பதில்லை. ஊடகங்கள் பரப்பும் வதந்திகள், பீதிகள், உள்ளிருப்பு தகவல்கள் (Insider Information) போன்றவற்றையும் இவர்கள் உதறித் தள்ளி விடுகிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் ரியாக்சனை விட ஆக்சனை விரும்புகிறார்கள்.

இதயம் சொல்வதை கேட்காமல் மூளை சொல்வதை அதிகம் கேட்கிறார்கள்.

அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள்.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஆண்டறிக்கையை இது போன்ற புத்திசாலிகள் படிக்க, இந்த நிறுவனத்தை வாங்கலாமா வேண்டாமா என்று ஊடக நிபுணர்கள் தரும் பரிந்துரையை நம்மைப் போன்றவர்கள் படிக்கின்றோம்.

இந்த பங்கின் விலையை மட்டுமே நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, இவர்களோ, நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நூறு புள்ளிகள் உயர்ந்து விட்டாலே கண்ணை மூடிக் கொண்டு உள்ளே குதிக்கும் நம் போன்றவர்க்கு மத்தியில் வருடக் கணக்காக கூட இவர்களால் பொறுமையாக இருக்க முடியும். அந்த பொறுமை இவர்களின் முடிவு எடுக்கும் திறன் மீது இவர்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

இவர்களின் பாதை அறிவார்த்தமானது. அபாயங்கள் குறைந்தது.

இவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகம். சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இவர்களை பெருமளவுக்கு பாதிப்பதில்லை.

இந்த பாதை இப்போதைக்கு சற்று சிரமமாக தோன்றினாலும், அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

அவர்களுடைய புத்திசாலித்தனம் தானாக வந்ததல்ல. அவர்களுடைய கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.

அந்த புத்திசாலிதனத்தை நாமும் அடைந்து இந்த பாதையில் நம்மாலும் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வல்ல விளக்கமான பதிவுகள் விரைவில்.

பயணம் தொடரும்.

Monday, August 17, 2009

வெற்றி பெறும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?


இன்றைக்கு பலருக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் பங்கு சந்தை பலருக்கும் என்றைக்கும் புதிரான புதிராகவே இருக்கிறது. அது எப்படி, ஒரு பங்கு சரியாக கீழே வருவதற்கு சில நாட்கள் முன்னர் மட்டுமே நாம் முதலீடு செய்கிறோம் என்ற கேள்வி கூட பலருக்கு எழும்புகிறது. எனக்கும் கூட அது போன்ற கேள்விகள் பல எழும்பியதுண்டு.

ஊடகங்களும் அதில் தோன்றும் நிபுணர்கள் என்று அழைக்கப் படுபவர்களும் தினந்தோறும் ஏதாவது ஒரு பங்கினை ஏதாவது ஒரு விலையில் வாங்க சொல்கிறார்கள். அவர்கள் பரிந்துரை செய்த பங்குகளின் வெற்றி சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பங்கு வணிகத்தின் நம்பர் ஒன தொலைகாட்சியானது பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இருபத்து ஒன்றாயிரம் இருக்கும் போது பல பங்குகளை பரிந்துரைத்ததையும் அதே சென்செக்ஸ் எட்டாயிரம் புள்ளிகள் இருக்கும் போது ஆறாயிரம் புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாக பல முறை சொன்னதையும் யாரும் மறக்க முடியாது.

இந்தியாவின் வெற்றிகரமான முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களை ஒரு முறை நேரில் சந்தித்த போது, சில 'நல்ல' பங்குகளை பரிந்துரைக்கும் படி கேட்டுக் கொண்டேன். அப்போது அவர் தெரிவித்த கருத்து இது.

"எந்த ஒரு பங்கையும் என்னால் பரிந்துரைக்க முடியாது. காரணம் இன்று நான் பரிந்துரைக்கும் பங்கு நாளையே எனக்கு மோசமானதாக தோன்றலாம். அப்போது உங்களை நான் தேடிக் கண்டுபிடித்து இந்த பங்கை வாங்காதீர்கள் அல்லது வாங்கியிருந்தால் விற்று விடுங்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு பங்கை வாங்குவது அவரவர் சொந்த பொறுப்பில்தான் இருக்க வேண்டும்"

அவர் கருத்து சிந்திக்கப் பட வேண்டியது.

ஒரு பங்கின் போக்கு ஒரு நாளில் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அந்த பங்கினை, பங்கு வர்த்தகமாகும் சந்தையினை, பங்கின் நிறுவனத்தை அல்லது பங்கு நிறுவனத்தின் துறையை பாதிக்கும் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய வெற்றியாளர் நாளைய தோல்வியாளர் ஆகி விடுகிறார். இன்றைய தோல்வியாளர் நாளைய வெற்றியாளர் ஆகி விடுகிறார். இது பங்கு நிறுவனம் மற்றும் அது சார்ந்துள்ள துறைகளுக்கும் கூட பொருந்தும்.

எனவே ஒரு பங்கினை பரிந்துரைப்பவர் அந்த தருணத்தில் உள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே பரிந்துரைக்கிறார் என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் மாறக் கூடிய சந்தை நிகழ்வுகள் அவருடைய பரிந்துரையை அடுத்த நிமிடமே கூட தவறாக்கி விடலாம் என்பதையும் நினைவு கூறுதல் அவசியம்

எனவே, ஒருவரது பரிந்துரையை, அவர் எப்படிப் பட்ட சந்தை நிபுணராக இருந்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்பது என் கருத்து. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அந்த பங்கின் போக்கை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு மட்டுமே.

எங்களுக்குத்தான் பங்கு சந்தை அனுபவம் இல்லையே? எங்களால் எப்படி பங்குகளை
தேர்வு செய்ய முடியும்? அல்லது பங்குகளை எப்படி தொடர முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.

பங்கு சந்தைக்கென்று தனிப் படிப்போ அல்லது ஏராளமான அனுபவங்களோ தேவையில்லை. உண்மையில், நிறைய படித்தவர்களும், நிபுணர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களும்தான் திரும்ப திரும்ப பெரிய தவறுகளை செய்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்றுள்ள பலர் இன்று வெற்றிகரமான முதலீட்டாளர்களாக உள்ளனர்.

பங்கு சந்தை முதலீடுகள் செய்வதற்கு ஒரு சராசரி அறிவுக் கூர்மை மட்டும் இருந்தால் போதுமானது. அதே சமயம் அதிக உணர்ச்சி வசப் படாதவராக இருப்பது மட்டும் அவசியம்.

உங்களுக்கு வெற்றிகரமான பங்கினை தேர்வு செய்யும் ஆர்வம் இருக்கின்றதா?

எனக்கு நிறையவே இருக்கிறது.

வெற்றிகரமான பங்கினை தேர்வு செய்வது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே அல்ல.

அது ஒருவரது புத்திகூர்மையின் வெளிப்பாடு. தாக்குப் பிடிக்கும் தன்மையின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் ஒரு யோகியின் விளையாட்டு. ஒரு விளையாட்டு வீரரை போலவும் போர்களத்தில் உள்ளவர் போலவும் துரித கதியில் திரும்பி தாக்குபவரின் வேகம் உள்ள விளையாட்டு.

இன்று பலருக்கு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் சரிவர வாய்ப்புக்கள் இல்லாமல் போனதனால், பிறருக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.

இங்கேயோ, உங்கள் திறமை உங்கள் வெற்றி. உங்கள் வெற்றி உங்கள் லாபம். உங்கள் சந்தோஷம்.

அதே சமயம் உங்களுடைய அன்றாட (இதர) அலுவல்கள் எதுவும் பாதிக்கமாலும் பார்த்துக் கொள்ள முடியும்.

பங்கு சந்தை ஒவ்வொரு நாளும் மாறுகிறதே? நிலையாக இல்லையே? எப்படி முதலீடு செய்வது என்கிறீர்களா?

நிலையான எந்த விஷயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாது. நிமிடத்திற்கு நிமிடம் மாறுவதுதான் வாழ்க்கை. அதுதான் ஒருவித எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வாழ்வின் ருசியை அதிகப் படுத்தும்.

பங்கு சந்தை முதலீடுகள் ஆபத்தானவை. சொத்தையே காலி செய்து விடும் என்பார்கள் சிலர். எதில்தான் ஆபத்தில்லை? நஷ்டமில்லாத தொழில் எது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பங்கு சந்தைக்கு அதிகமாகவே பொருந்தும்.

பங்கை பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்துவது சிறந்த சேவையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்த தேடல் சற்று நீளமானது. எனவே சில தொடர் பதிவுகள் உண்டு. பொறுத்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிவுத் தேடலில் உங்களுடனான பயணம் எனக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

இந்த பயணத்தில் என்னுடன் வழிநடக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

பயணம் தொடரும்!

Sunday, August 16, 2009

பானா சூனா! போ போ! போயிட்டே இரு!


எதிர்பாராத வீதமாக அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம் குறைந்து போக, அமெரிக்காவின் மீட்சி விரைவாக இருக்கும் என்ற நம்பிக்கை உருவான அதே தருணத்தில், அமெரிக்க மத்திய வங்கி தனது "குறைந்த வட்டி கொள்கையை" விரைவிலேயே மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. டாலர் வரத்து என்பது இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சியின் முக்கிய காரணியாக அறியப் படுவதால், டாலர் வரத்தில் ஏற்படும் சிறு தடங்கல்களும் நமது சந்தையின் மனநிலையை பாதிக்கின்றன.

மேலும் தவறிப் போன பருவ மழையின் பாதிப்பு ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பெரிதாக இருக்குமோ என்ற அச்சமும் சேர்ந்து கொள்ள, சென்ற வாரத்தின் முதல் மூன்று நாட்கள் நமது சந்தை தடுமாறிக் கொண்டே இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கி, தனது குறைந்த வட்டிக் கொள்கையை இன்னும் பல காலம் நீட்டிக்க போவதாகவும், சந்தையில் மேலும் $ 300 பில்லியன் (சுமார் Rs.15,00,0000 கோடி) இறக்கி விடப்போவதாகவும் அறிவித்தது சந்தையை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தது. மேலும் ஜெர்மனி பொருளாதாரத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வளர்ச்சி, உலக பொருளாதாரம் கூடிய சீக்கிரமே தளர்ச்சியில் இருந்து மீளும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

சென்ற மாதத்திற்கான இந்திய தொழிற் துறை வளர்ச்சி எதிர்பார்த்ததற்கும் மேலாக வளர்ச்சி அடைய, பருவமழை தப்பிதத்தால் நேரக் கூடிய வீழ்ச்சி, சிறந்த தொழிற்துறை வளர்ச்சியினால் ஈடுகட்டப் பட்டு விடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு அறிவித்த புதிய வரிக் கொள்கை சந்தையை தற்காலிகமாக சந்தோசப் படுத்தியது.

மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் ஒரே நாளில் ஏகப் பட்ட அளவுக்கு உயர்ந்த சந்தை குறியீடுகள் அது வரையிலான மொத்த வாரத்தின் வீழ்ச்சியையும் சரி கட்டி சென்ற வாரம் ஒரு வெற்றிகரமான வாரமாக உதவி செய்தன.

அதே சமயத்தில் தேய்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் கவனத்தில் கொள்ள தக்கது. மேலும் சென்ற வார இறுதியில் வெளியிடப் பட்ட அமெரிக்க பொருளாதார தகவல்கள் பொருளாதார மீட்சி அவ்வளவு சுலபமானதாக இருக்காது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

உள்நாட்டின் தொழிற்துறை உற்பத்தியின் அசுர வளர்ச்சி தகவல்களின் நம்பகத் தன்மையும் கேள்விக்குரியது. அதே போல பன்றி காய்ச்சல் பீதியினால், சுற்றுலா துறையில் ஏற்கனவே ஏற்பட்டு விட்ட பாதிப்பினால் எந்த அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப் படக் கூடும் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

புதிய வரி கொள்கைகள் வெளிப்பார்வைக்கு மக்களுக்கு சாதகமாக தோன்றினாலும், எந்த ஒரு அரசாங்கமும் தனது வரி வருமானத்தை அதிகரிக்கவே முனையும் என்ற விகிதத்தில் நோக்கும் போது சந்தையின் ஆர்ப்பரிப்பு சற்று ஓவர் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் வருங்காலத்திற்கான சந்தையின் போக்கு ஏற்கனவே சொன்னது போல, உள்ளே வந்து விழும் டாலர் அளவைப் பொறுத்தே அமையும் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு அமெரிக்காவின் குறைந்த வட்டி டாலர் கொள்கை தொடரும் என்றாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

சந்தை 4610 & 4730 அளவுகளில் எதிர்ப்பை சந்திக்கும். 4480 & 4520 அளவுகளில் அரணைக் கொண்டிருக்கும்.

ரூபாய், தங்கம் மற்றும் உலக சந்தைகளுக்கான விரிவான அலசலை பார்க்க விரும்புவோர் இந்த பதிவரின் ஆங்கிலப் பதிவை சுட்டவும்.

http://maximumindia.blogspot.com/2009/08/easy-money-policy-for-extended-period.html

வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Friday, August 14, 2009

திருப்பல்லாண்டு


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு


அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள்
குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள்
இராக்கதர்வாழ் இலங்கை*
பாழாளாகப் படைபொருதானுக்குப்
பல்லாணடு கூறுதுமே.*

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்
வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி
வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோ
நாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து
பல்லாணடு கூறுமினே.

அண்டக்குலத்துக் கதிபதியாகி
அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது
ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்
லாயிரத்தாண்டென்மினே.

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திரு
வோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி
அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்
தாண் டென்று பாடுதுமே.

தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி
திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்
தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை
வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே

உடுத்துக் களைந்தநின் பீதகவாடை
யுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன
சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தி திரு
வோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடி
யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற் றுய்ந்ததுகாண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுட்
சிலைகுனித்து *ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே

அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்
கோன்* அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும்
உனக்குப் பழவடியேன்*
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு
நாமம் பலபரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்
பல்லாண்டு கூறுவனே.

பல்லாண்டென்று பவித்திரனைப் பர
மேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விருமபியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ
நாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்
தேத்துவர் பல்லாண்டே

(பெரியாழ்வார் திருவடிகளே சரணம்)
அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!
நன்றி!

Thursday, August 13, 2009

அதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்!


என்னைக் மலைக்க வைத்தது கடைசி காட்சிதான்.

உங்களுக்கு எப்படி?எல்லாமே இருந்தும் நாம் ஏதேதோ குறை சொல்கிறோம்.

ஊனங்கள் மனதில் மட்டும்தான். வெளியில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் அல்லவா?
நன்றி!
(உபயம் : நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் மின்னஞ்சல் )

Wednesday, August 12, 2009

கிருஷ்ண விஜயம்!


விதி வலியது

பன்றி காய்ச்சல்
பற்றிக் கொள்ளுமோ
படபடவென்ற மனதுடன்
பைக்கில் அவன்
பயங்கர வேகத்தில்
பஸ் எதிரே!


கிருஷ்ண விஜயம்!

கோகுலாஷ்டமி காலை
கைகளில் கோலமாவு
காதுக்குள் ஓலம்
கண்கள் திரும்பின

தொலைக்காட்சியில் செய்திகள்
பன்றி காய்ச்சல்
பயங்கர வேகத்தில்
பரவுதல் பற்றி

கிருஷ்ணர் பாதம்
வாசலில் இடுமுன்
மனம் கேட்கின்றது
அவருக்கும் இருக்குமோ?


உலக மயமாக்கம்

மெக்சிகோவில் பன்றி பண்ணைகள்
இந்தியாவில் பன்றி காய்ச்சல்
இதுதான் உலக மயமாக்கலோ?


வராகம்

ஏழு மலை
ஏழு கடல்
ஏழு கண்டம்
தாண்டி வரும்
இதுவும் ஒரு
'வராக' அவதாரமோ?

நன்றி!

Tuesday, August 11, 2009

கதையல்ல நிஜம்!அந்த குழந்தையின் வயது இரண்டு. ஆகஸ்ட் இரண்டாம் தேதி லேசான காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து உடலில் தடிப்புக்கள் தோன்றின. அந்த குழந்தையின் பெற்றோர் முதலில் உள்ளூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.

இது பன்றி காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த மருத்துவமனையினர் குறிப்பிட்ட சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தனர்.

அந்த சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது குழந்தைக்கு பன்றி காய்ச்சலின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே இருக்கின்றது என்று வேறொரு தொலைபேசி எண்ணை அந்த மையத்தினர் கொடுத்தனர்.

அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல் வெட்ப நிலை நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டினால் மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்படியே நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டியது குழந்தையின் பெற்றோர் அந்த மையத்தை மீண்டும் தொடர்பு கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த குழந்தையை பரிசோதித்த பிறகு தமி ப்ளு மருந்தினை கொடுத்த பிறகு திரும்பி சென்று விட்டனர்.

ஒரு மணி நேரம் கழித்த பிறகு அந்த குழந்தையின் கண்கள் வெளிர்ந்து விட பயந்து போன பெற்றோர் அந்த மையத்திடம் மறுபடியும் தொடர்பு கொண்டனர். மருத்துவ குழுவினர் வருவதற்குள் அந்த குழந்தை காலமாகி விட்டது.

. உயிர் போனதற்கான காரணம் என்ன தெரியுமா? மேனிங்க்டிஸ் (Meningitis) என்று அழைக்கப் படும் ஒரு வித வியாதி (தமிழில் பொன்னுக்கு வீங்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்).இந்த வியாதியையும் பன்றி காய்ச்சலையும் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று மேனிங்க்டிஸ் மையம் இப்போது அறிவுறுத்தியுள்ளது
இது நடந்தது எங்கே தெரியுமா? மருத்துவ வசதிக்கு புகழ் பெற்ற கிரேட் பிரிட்டனில்தான்.

பன்றி காய்ச்சல் கட்டுபடுத்தும் பொறுப்பு அதிகம் பயிற்சி பெறாத "கால் சென்டர்" பணியாளர்களிடம் கொடுக்கப் பட்டதே இந்த உயிர் பலிக்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.

இந்த வியாதி கண்டவர்களை நேரடியாக பரிசோதிக்காமல் இந்த கால் சென்டர் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமே அவர்களுக்கு வியாதி இருக்கிறதா இல்லையா என்று நிர்ணயிக்கப் படுகிறது என்றும் அந்த பணியாளர்களின் அறிவுரையின் படியே தமி ப்ளு மருந்து வழங்கப் படுகிறது என்றும் சொல்லப் படுகிறது.

இந்தியா எவ்வளவோ பரவாயில்லை.

எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.

நன்றி

(நன்றி: ஸ்கை டிவி, எகோநோமிக் டைம்ஸ்)

Monday, August 10, 2009

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?


வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே.

NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது.

தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகிறது. இவற்றில் சுமார் 112 கோடி பங்குகள் மேற்சொன்ன ஏழு மின் நிலையங்களை அமைத்ததற்காக திரட்டப் படும் புதிய பங்குகள் (FRESH ISSUE) ஆகும். மீதமுள்ள பங்குகள் மத்திய அரசு தன் சொந்த கணக்கில் இருந்து விற்பனை (OFFER FOR SALE) செய்வதாகும்.

பங்குகளின் விலை அளவு ரூ.30-36 என்ற தொடர் கணக்கில் (BOOK BUILDING PRICE BAND) கூறப் பட்டுள்ளது. (இந்த வெளியீடு ஏற்கனவே பல மடங்கு அளவில் இதன் அதிக பட்ச விலையான 36 இல ஏலம் (BID) கோரப் பட்டிருப்பதால், இந்த பங்கிற்கான விலை நிர்ணயம் 36 இல் அமையவே அதிக வாய்ப்புள்ளது. )

இந்த பங்கிற்கான தர நிர்ணயம் மூன்றின் கீழ் ஐந்து அதாவது சராசரி அடிப்படை அம்சங்கள் என இக்ரா (ICRA) தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போது இந்த நிறுவனத்தின் சாதக பாதக அம்சங்களை பற்றி விவாதிப்போம்.

இந்த நிறுவனமானது, தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் பெரும்பகுதியை மாநில மின்வாரியங்களுக்கே (POWER PURCHASE AGREEMENT) அளித்து வருகிறது. அதிக விலை கிடைக்கக் கூடிய வெளி சந்தையில் பெரும்பகுதியை விற்பனை செய்யாதது ஒரு பாதக அம்சம்தான் என்றாலும், வெகுகாலத்திற்கு நிர்ணயம் செய்யப் பட்ட விலையிலேயே விற்பனை செய்வது நிறுவனத்திற்கு ஒரு 'ஏற்ற-இறக்கமில்லாத' வருவாய் பெற உதவியாக உள்ளது.

இந்த நிறுவனம் நீரையே முக்கிய மூலாதார பொருளாக கொண்டுள்ளது. மற்ற எரிபோருட்களுடன் ஒப்பிடும் போது, நீருக்கான செலவு மிகவும் குறைவுதான் என்றாலும் மழையற்ற காலங்களில் உற்பத்தி பாதிக்கப் படும் வாய்ப்புள்ளது. அதே சமயம், இந்த நிறுவனம் அதிக அளவில் வடநாட்டில் உள்ள பல்வேறு ஜீவ நதிகளில் அணை அமைத்து மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், பருவநிலை மாற்றங்கள் இந்த நிறுவனத்தின் வருவாயை அதிகம் பாதிக்காது என்று சொல்லப் படுகிறது.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக அமைந்திருந்ததால் இந்த நிறுவனத்திற்கு 'மினி ரத்னா' தரம் (MINI-RATNA STATUS) மத்திய அரசால் வழங்கப் பட்டிருக்கிறது. 'மினி ரத்னா' நிலையை பெற்றதன் மூலம், இந்த நிறுவனத்தால் அதிக சுதந்திரத்துடன் இயங்க முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிறுவனம் கடுமையான் புவியியல் மற்றும் பருவ சூழல்களிலும் கூட திறம் பட செயல் பட்டு பல்வேறு புதிய நிலையங்களை அமைத்து துறைரீதியான சிறப்பு மற்றும் தனிப்பட்ட திறன்களை பெற்று இருககிறது. இந்த சிறப்பு திறன்கள் வருங்காலத்தில் புதிய ஒப்பந்தங்களை அதிக அளவில் பெற உதவும் என்று நம்பலாம்.

இப்போது பங்கின் விலை பற்றி விவாதிப்போம்.

இதற்கு முன் வெளியிடப் பட்ட பெரும்பாலான அரசு நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தை சம்பாதித்து கொடுத்திருப்பதாலும் (ஏற்கனவே சொன்னபடி) வெகு நாட்களுக்கு பின்னர் வெளியிடப் படும் அரசு நிறுவனத்தின் பங்குகள் இவை என்பதாலும் சந்தையில் ஏகப் பட்ட கிராக்கி இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதிக கிராக்கி என்றால் பங்கு சந்தையில் முதல் நாள் லிஸ்ட் ஆகும் போது நல்ல விலை போக வாய்ப்புண்டு.

அதே சமயம், இந்த பங்கு வெளியீட்டின் அளவு மிகப் பெரியது என்பதால் (கிட்டத்தட்ட ஆறாயிரம் கோடி ரூபாய்) இந்த பங்கிற்கான முதல் நாள் பிரிமியம் குறைந்து காணப் படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கின் விலை சில மாதங்களுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கும் கீழேயே நிர்ணயிக்கப் பட்டது என்றும் கிடுகிடுவென்று உயர்ந்த பங்கு சந்தையில், "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்" என்ற சந்தர்ப்ப வாத கொள்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு அதிக விலை நிர்ணயித்துள்ளது என்றும் சந்தையில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

NTPC, ஜெபி ஹைட்ரோ போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த பங்கிற்கான விலை அளவு சற்று உயர்வாகவே அறியப் படுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் NTPC நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் (PRICE/EARNING RATIO) கிட்டத்தட்ட 20 மட்டுமே. இந்த நிறுவனத்தின் பங்கு வருவாய் (RETURN ON EQUITY) கிடடத்தட்ட 14 சதவீதம். அதே சமயம் NHPC நிறுவனத்தின் விலை-வருவாய் விகிதம் (மேல் விலையில்-UPPER BAND PRICE) முப்பதிற்கும் மேலே. பங்கு-வருவாய் கிட்டத்தட்ட ஆறரை சதவீதம் மட்டுமே. இது போலவே, ஜெபி ஹைட்ரோ நிறுவனத்துடன் ஒப்பிடுகையிலும் NHPC நிறுவன பங்கின் பெறும் மதிப்பெண் அளவு குறைவாகவே உள்ளது.

அதே சமயம், விலை-பங்கின் புத்தக மதிப்பு (PRICE/BOOK VALUE RATIO) என்ற வகையில் NHPC பங்கு மற்ற இரு நிறுவனங்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறது.

மொத்தத்தில் லிஸ்டிங் தேதி அன்று பெறக் கூடிய லாப அளவு அதிகமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஒரு பெரிய 'மினி ரத்னா' தரம் பெற்ற ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் முதலீடு செய்வது நீண்ட கால நோக்கில் ஓரளவுக்கு நல்ல வருவாயை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

இந்த நிறுவனம் உபயோகிக்கும் மூலப் பொருள் நீர் மட்டுமே என்ற வகையில், உற்பத்தி செலவு மிகவும் குறைந்து காணப் பட வாய்ப்புள்ளது. மேலும், வருங்காலத்தில் அரசு முதலீடுகள் குறைந்து கடன் விகிதம் (DEBT EQUITY RATIO) அதிகரித்தால் பங்கு-வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்தியாவைப் பொறுத்த வரை இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தேவை குறையாமல் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதே போல மின் நிலையங்களை அதுவும் நீர்மின் நிலையங்களை உருவாக்குவதில் உள்ள காலத தேவை (GESTATION PERIOD) மற்றும் சிரமங்கள் (ENTRY BARRIERS), ஏற்கனவே இந்த திறன்களையும் அனுபவத்தையும் அதிக அளவில் பெற்றுள்ள NHPC நிறுவனத்திற்கு அதிக மதிப்பு சேர்க்க வாய்ப்புக்கள் உண்டு.

எனவே, நீண்ட கால நோக்கில் ஒரு குறைந்த பட்ச அதே சமயத்தில் அதிக ஏற்ற-இறக்கமில்லாத வருவாய் பெற விரும்புவோர் இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது எனது தனிப் பட்ட கருத்து.

நன்றி.

டிஸ்கி:

இங்கு வெளியிடப் படும், பங்குகள், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

பின் குறிப்பு

ஒரு நிறுவனத்தின் பங்கினை பற்றி தமிழில் ஆய்வு கட்டுரை எழுதுவது இதுவே முதன் முறையாகும். உங்களுடைய வரவேற்பை பொறுத்து மேலும் சில நிறுவனங்களைப் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பதிவில் சரியாக விளக்கப் படாத பாகங்கள் ஏதேனும் இருந்தாலும் தயக்கமின்றி தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Saturday, August 8, 2009

அசலூர் நல்ல செய்தியும் உள்ளூர் கெட்ட செய்தியும்!


முதலில் அசலூர் நல்ல செய்தியை சொல்லி விடுகிறேன். அமெரிக்காவில் வெகுகாலத்திற்கு பிறகு (ஒரு வருடத்திற்கும் மேலாக) , வேலை இல்லாதோர் விகிதம் (Unempoyment Data) குறைந்திருப்பதாக அங்கிருந்து வரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விபரம் அமெரிக்காவின் பொருளாதார தேக்க நிலை கிட்டத்தட்ட முடிவுக்கு அருகே வந்து விட்டதை வெளிக்காட்டுகிறது. (அதே சமயம் முழுமையான மீட்சி எப்போதென்று அறுதியிட்டு கூறுவது கடினம்)

அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அந்நாட்டு பொருளாதார நிலையை சரிசெய்வதற்காக பல லட்சம் கோடி அமெரிக்க டாலரை இதுவரை சந்தையில் இறக்கி விட்டுள்ளது. மிக குறைந்த வட்டியில் அங்கு பெறப் படும் பணமானது, தொழில் வளர்ச்சிக்காக உரிய முறையில் பயன்படுத்தப் படாமல், பல்வேறு சந்தைகளில் பாய்ந்து (உலக பங்கு சந்தைகளிலும் பொருட் சந்தைகளிலும்) பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட வித்திட்டுள்ளது.

இப்போது அமெரிக்க பொருளாதாரம் ஓரளவுக்கு சீராக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை, நம் சந்தைகளுக்கு வந்தவுடன் கூடவே ஒரு புதிய பய உணர்வும் ஏற்பட்டுள்ளது. அதாவது இனிமேல் அதிக டாலர் வெளி சந்தைகளுக்கு பயணிக்காமல் உள்ளூர் சந்தையிலேயே (அமெரிக்கா) முதலீடு செய்யப் படலாம் என்ற எதிர்பார்ப்பு தோன்றி உள்ளது.

மேலும் மருந்து உணவாக வெகுகாலம் தொடர முடியாது என்ற காலத்தின் கட்டாயத்தில், ஒரு கட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது குறைந்த வட்டிக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேற்சொன்னது போன்ற ஒரு சூழல் ஏற்படுமேயானால், வளரும் நாடுகளுக்கான டாலர் வரவு குறைந்து போக வாய்ப்புள்ளது. (இந்த பயத்தினாலேயே சென்ற வாரம் வளரும் நாடுகளின் சந்தைகள் பெருமளவு வீழ்ந்தன. அதே சமயம் அமெரிக்க சந்தைகள் உயர்வை கண்டதும் குறிப்பிடத் தக்கது.)

இப்போது உள்ளூர் விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு மிகக் குறைவாக உள்ளது என்று இந்திய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 36 உபமண்டலங்களில் 27 உபமண்டலங்களில் மழை அளவு வழக்கத்தை விட மிகவும் குறைவாக உள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்றாலும், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நேரடியாக நம்பி வாழ்கின்றனர் என்ற வகையிலும் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு கிராமப் புற சிறு தொழில்களையும் பாதிக்கும் என்ற வகையிலும் இது ஒரு வருத்தம் தர தக்க செய்திதான்.

மேலும், ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில், மழைக் குறைவினால் நிகழக் கூடிய உணவு பொருட்கள் பற்றாக்குறையானது பதுக்கலையும் பணவீக்கத்தையும் எக்கச்சக்கமாக உயர்த்தி இந்திய பொருளாதாரத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

இப்போதைய நிலையில் நமது பங்கு சந்தை மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்கு (டாலர் வரத்து & இந்திய ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி.)
அதிக சென்சிடிவ்வாக உள்ளது.

இந்த இரண்டு விஷயங்கள் வரும் காலகட்டத்தில் எவ்வாறு மாறப் போகின்றன என்பதைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.

ஒருவேளை அமெரிக்காவில் நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, மழைக் குறைவினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப் படுமேயானால், மென்பொருட் துறை, எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இதர ஏற்றுமதி துறைகளில் முதலீடு செய்யலாம். அதே சமயம் உள்ளூர் பொருளாதாரத்தை அதிகம் நம்பியுள்ள வங்கித் துறை, வாகனத் துறை, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு துறை போன்றவை பாதிக்கப் படலாம்.

இப்போது தொழிற்நுட்ப நிலைகளுக்கு வருவோம்!


நாம் ஏற்கனவே சென்ற வாரம் சொன்னபடி 4700 புள்ளிகள் (நிபிட்டி) நிலையை முழுமையாக முறியடிப்பது சந்தைகளுக்கு பெரிய சவாலாக இருந்ததும் அந்நிலையை முறியடிக்க முடியாமல் பெரிய அளவில் சரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிபிட்டி எதிர்ப்பு நிலைகள் - 4430 & 4320 & 4200
நிபிட்டி அரண் நிலைகள் - 4550 & 4580 & ௪௭௦௦

அதே சமயம் முன்சொன்ன அடிப்படை அம்சங்களின் நிலைபாடுகளில் ஏற்படும் மாறுபாடுகளை சார்ந்தே வரும் வாரம் சந்தைகள் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Friday, August 7, 2009

பன்றி காயச்சல் பற்றிய சில தகவல்கள்!பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா என்ற பல கேள்விகள் என்னுள்ளும் ஓடி கொண்டிருந்தன. அவற்றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில விபரங்கள் பகிர்தலுக்காக கீழே.

பன்றி காய்ச்சல் என்பது H1N1 என்ற ஒருவகை இன்ஃபுளுயென்ஸா வைரஸ் A கிருமியினால் உருவாகக் கூடிய காய்ச்சல் ஆகும். இந்த வியாதி சமீபத்தில் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் கண்டறியப் பட்டது.

பொதுவாக இந்த வகை கிருமிகள் பன்றிகளையும் பன்றிகளுடன் நேரடி தொடர்புள்ள மனிதர்களையும் மட்டுமே தாக்கக் கூடியவை. ஆனால் இந்த முறை, மனிதர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு இந்த கிருமிகள் பரவ ஆரம்பித்திருப்பது மனித குலத்திற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.

பொதுவாக இந்த காய்ச்சல் அறிகுறிகள் மற்ற சாதாரண ஃப்ளு காய்ச்சல் அறிகுறிகள் போன்றவைதான். கடுமையான காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்), இருமல் மற்றும் தொண்டையில் கரகர.

சில சிமயங்களில் மூக்கடைப்பு, ஒழுகும் சளி போன்ற மூச்சு சம்பந்தப் பட்ட லேசான வியாதிகளும் கூட பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம்.

இன்னும் சில சமயங்களில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வாந்தி, பேதி தலைவலி, தசை வலி, உடற்சோர்வு, குளிர்நடுக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் தென் பட்டிருக்கின்றன. நிம்மோனியா போன்ற கடும் காய்ச்சலும் ஏற்பட்டு சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வகை அறிகுறிகள் இருந்தாலும், சாதாரண ஃப்ளு காய்ச்சலா அல்லது பன்றி காய்ச்சலா என்பதை குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலமே கண்டறிய முடியும். (real-time RT-PCR, viral culture, four-fold rise in swine influenza A (H1N1) virus-specific neutralizing antibodies)

இந்த வகை காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கும், வேறு ஏதேனும் பெரிய வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்கும் (உயிரிழக்கும் அளவுக்கு) அதிக ஆபத்தானதாக கருதப் படுகிறது.

இந்த வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான வைத்திய முறைகள் எப்படி என்று பார்ப்போம்.

லேசான காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை சுகாதாரமான தனியறையில் (குறைந்த பட்சம் ஏழு நாட்கள் வரை) வைத்து பராமரிக்க வேண்டும். மற்றவர்கள், நோயாளியுடனான நேரடி தொடர்புகளை (ஆறடிக்கு உள்ளே) தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப் பட்ட மருத்துவ முகமூடிகள் உபயோகிப்பது நல்லது. அதிகமான காய்ச்சல் இருந்தாலோ அல்லது மேற்சொன்ன அபாயங்களுக்கு உட்பட்டவராக இருந்தாலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

மூச்சிறைப்பு, மூச்சு தடுமாற்றம், தோல் நிற மாற்றம், வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கும் மூச்சு விட முடியாமல் போவது, நெஞ்சு அல்லது வயிற்று வலி, மயக்க நிலை, குழப்ப நிலை, வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பெரியவர்களுக்கும் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

மற்ற சீசன் வைரஸ் காயச்சல்களைப் போலவே இந்த காய்ச்சலுக்கும், எதிர்ப்பு சக்தி மருந்துகளை உரிய இடைவேளை விட்டு எடுத்துக் கொள்ளவேண்டும். இங்கு தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன. ஆனால் பலருக்கும் (மற்ற சீசன் வைரஸ் காய்ச்சல் போலவே) மருந்துகள் இல்லாமலேயே குணமாகியும் உள்ளன.

(இந்த மருந்துகளை பதுக்கி வைப்பது தவறு என்று அரசு ஆணை இட்டிருப்பதாகவும் அரசாங்கமே அரசு மருத்துவமனைகள் மூலம் இந்த மருந்துகளை விநியோகிப்பதாகவும் அறிகிறேன்)

இந்த வியாதிக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த மருந்து விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்க படுகிறது.

மேலும் இந்த வியாதி பரவி உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுடனான அருகாமையை தவிர்ப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது மற்றும் கைகளை முகத்தில் வைப்பதை தவிர்ப்பது போன்றவையும் இந்த வியாதி அண்டாமல் தடுக்க உதவும்.

இந்த வியாதி பற்றி மிகப் பெரிய பீதி அலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த வியாதியால் பாதிக்கப் பட்டவர்களில் பலர் நன்கு குணமடைந்து விட்டனர் என்ற செய்தி உரிய முறையில் மக்களிடம் கொண்டு செல்லாததும் ஊடகங்கள் ஒரு தலைபட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பதும் கூட இந்த பீதி அலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில், இது மற்ற சீசன் வைரஸ் காயச்சல்களை போன்றே எளிதில் குணப் படுத்தக் கூடியது என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் மற்ற வைரஸ் காய்ச்ச்சல்களை போலவே துவக்கத்திலேயே உரியமுறையில் கவனிக்கா விட்டால் ஏற்படும் பேராபத்து இந்தவகை வைரஸ் காய்ச்சலிலும் உண்டு.

முக்கியமாக இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த அதே சமயம் சுகாதார வசதி குறைந்த ஒரு நாட்டில் இந்த வகை வைரஸ் காய்ச்சலை உடனடியாக கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.

அதே சமயத்தில் குறைந்த பட்ச சுகாதார பாதுகாப்புடன் (அதாவது பொது இடங்களில் சுகாதாரமற்ற உணவை தவிர்ப்பது, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது, அடிக்கடி கை சுத்தம் செய்வது, பொது இடத்தை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்ப்பது போன்றவை) வாழவேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.

இதை பற்றி இன்னும் அதிக தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(நன்றி - http://www.medicinenet.com/swine_flu/index.htm)

நன்றி.

Tuesday, August 4, 2009

எது முக்கியம்?


ஊடகங்களில் இப்போதைய தலைப்பு செய்திகள்

ராக்கி சாவந்த் தனது மணமகனை(?) தேர்ந்தெடுத்தார்.

பாகிஸ்தானுடனான கூட்டறிக்கையின் மீது பாராளுமன்ற விவாதம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மோதல்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து கன்னட அமைப்புகளுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை

மேற்சொன்ன செய்திகள் பற்றிய காரசாரமான விவாதங்களும் சூடான கருத்துக்களும் ஊடகங்களின் முழுநேரத்தையும் பிடித்துக் கொண்டுள்ளன.

ஆனால் இன்னும் சில முக்கிய செய்திகள் பற்றி தகவல் தெரிவிக்கும் கடமையுடன் மட்டும் ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. அந்த விஷயங்களில் மேற்கொண்டு அதிகம் நகரவே இல்லை.

அவற்றில் சில இங்கே.

அண்ணன் தம்பி அம்பானிகள் வழக்கில் மத்திய அரசு அண்ணனுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தம்பியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தது.

இலங்கைக்கு சென்று சக்தி அம்மா தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தது.

முதல் பிரச்சினைக்கு வருவோம்.

அரசியல்வாதிகளை பற்றி (அவர் பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி அல்லது லோக்கல் கவுன்சிலராக இருந்தாலும் சரி) குற்றச்சாட்டுக்களை அள்ளி தெளிக்கும் ஊடகங்கள் தொழில் அதிபர்கள் விஷயத்தில் மிக மென்மையான போக்கையே கடைபிடிக்கின்றன. இத்தனைக்கும் முகேஷ் மீதும் பெட்ரோலிய மந்திரி மீதும் அனில் வீசிய குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல.

இந்த பிரச்சினை ஒவ்வொரு இந்தியனும் சம்பந்தப் பட்டது. ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமான இந்த நாட்டின் மண்ணில் இருந்து எடுக்கப் பட்ட எரிவாயுவை நம் நாட்டினருக்கே உலக சந்தைகளின் விலையை விட பன்மடங்கு அளவுக்கு அதுவும் டாலர் கணக்கில் விற்பனை செய்ய அனுமதித்தது ஏன் என்று விளக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் மீதான நடவடிக்கை, உங்களுடைய மற்றும் என்னுடைய மாதாந்திர மின்சார பில்லையே மாற்றக் கூடியது. இன்று இந்தியாவில்
அன்றாட நிகழ்வாகிவிட்ட மின்வெட்டை ஓரளவுக்கேனும் தவிர்க்க கூடியது.

இந்த விவகாரத்தில் ஒரு வலுவான பொதுக்கருத்து உருவாகும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றாலும் கூட, அது நாட்டின் எரிசக்தி தேவையை பெரிய அளவில் நிர்ணயிக்க கூடியது என்றாலும் கூட இவ்விவகாரத்தில் ரிலையன்ஸ் சம்பத்தப் பட்டிருப்பதாலோ என்னவோ தெரிய வில்லை. ஊடகங்களில் இதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் அதிகம் தென்பட வில்லை.

இத்தனைக்கும் குற்றம் சாட்டியவர் ஏதோ சாதாரணமானவரில்லை. அவர் குற்றம் சாட்டிய இடம் கூட சாதாரணமானதில்லை (முதலீட்டாளர்களின் பொதுக் கூட்டம் - அவர் மீது சட்டரீதியான பொறுப்புக்களை சுமத்தும் இடம்) என்று தெரிந்திருந்தாலும் கூட ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஊடகம் இந்த விவகாரத்தை பெருமளவு கண்டுகொள்ளாமலேயே போனது.

சொல்லப் போனால், ஜாதிக் கட்சியாக ஊடகங்களால் முன்னிறுத்தப் படுகிற சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற நடவடிக்கைகளை இந்த பிரச்சினையை காரணம் காட்டி தடுத்தது என்றோ அண்ணன் தம்பிகள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று மந்திரி கூறியதை முன்வைத்தோ இந்த பிரச்சினையை ஊடகங்கள் கை விரித்து விட்டன.

மற்றொரு முக்கிய செய்தி, சக்தி அம்மா அவர்கள் தனி ஹெலிகாப்டரில் இலங்கை நாட்டில் உள்ள வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழர் முகாமுக்கு சென்று உதவிப் பொருட்களை வழங்கியது. (ஏற்கனவே பண்டித் ரவிசங்கர் இலங்கை தமிழர் முகாமுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.)

ஒரு ஆன்மீகவாதியால் முடிந்தது ஏன் தம்மை தமிழினக்காவலர் என்று சொல்லிக் கொள்பவர்களால் இயலாமல் போனது?

தமிழ் நாட்டில் இருந்து ஏன் பெரிய தலைவர்கள் யாரும் தமிழர் முகாம்களை பார்வையிட செல்ல வில்லை?

ஏதோ உதவிப் பொருட்கள் செல்லும் கப்பலை மாற்றுவதுடன் மட்டும் பொறுப்பு தீர்ந்து விடுமா?

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒரு பொதுக் குழுவை அமைத்து அதை ஏன் இலங்கை தமிழர் வாழும் பகுதிக்கு அனுப்பக் கூடாது?

அப்போதுதானே அங்குள்ள உண்மையான நிலை அனைவருக்கும் புரிய வரும்?

இலங்கை அரசு நம்மில் பலருக்கு பிடிக்காத அரசாக இருந்தாலும் கூட (தமிழ் நாடு அளவில்) அதனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே அதன் மீது கொஞ்சநஞ்ச நிர்பந்தமாவது கொடுக்க முடியும் என்பது ஏன் மறந்து போனது?

அந்த நிர்பந்தங்கள் எஞ்சி இருக்கும் தமிழ் சகோதரர்களுக்காவது ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் அல்லவா?

இது போன்ற விஷயங்களை ஊடகங்கள் எடுத்துக் கொண்டு விவாதித்தால் மட்டுமே, நாட்டை ஆளுபவர்களுக்கும் சமூகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் (மக்களிடையே பொது கருத்து உருவாகுவதன் மூலம்) நிர்பந்தங்களை உருவாக்க முடியும்.

ஊடகங்கள் வணிக நோக்கத்தில் செயல்படுவதில் தவறில்லை. அதே சமயம் உணர்வு பூர்வமான பிரச்சினைகளை மட்டுமே முன்னிறுத்தி, மக்களின் கவனத்தை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவது ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் செய்யும் துரோகமாகவே அமையும்.

நன்றி.

Sunday, August 2, 2009

வழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்!


அமெரிக்க கணக்கு தணிக்கை அதிகாரி சென்ற வாரம் ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளார். அதன்படி நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டு, அமெரிக்க அரசின் உதவியால் நிமிர்ந்துள்ள அந்நாட்டு வங்கிகள் பத்தில், ஒன்பது வங்கிகள் அவற்றின் ஊழியர்களுக்கு சுமார் 1,50,000 கோடி வரை போனசாக கொடுத்துள்ளன. இந்த நடைமுறையை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் உத்தரவு இட்டுள்ளது.

தவறான நிதி கொள்கையால் தடுமாறிய அமெரிக்காவை மீட்டெடுக்க அந்த தவறான நிதி கொள்கையையே இன்னுமொருமுறை அதுவும் இன்னும் கொஞ்சம் அதிகம் புகட்டும் அமெரிக்க அரசின் இந்த "டாலர் வெளியீட்டு முயற்சி" இன்று உலக சந்தைகளை இன்னுமொரு ஆபத்தான நிலைக்கு அருகே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இதில் முதலில் பாதிக்கப் படப் போகும் சந்தை சீனா என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஷாங்காய் பங்கு சந்தை மிக வேகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் வழக்கம் கொண்டது. (இந்தியாவை விட வேகம் அதிகம்). சென்ற முறை கூட, மிக அதிகமான உள்ளூர் சீனர்கள் புதிய கணக்குகளை துவக்கியதும், அந்நாட்டின் பெரிய பங்கு வெளியீடுகள் பல மடங்கு உயர்ந்ததும் பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இப்போதும் கூட அந்த நிலைக்கு வெகு அருகே ஷாங்காய் பங்கு சந்தை வந்து விட்டதாகவே சொல்லப் படுகிறது.

இந்த பங்கு சந்தை உயர்வு ஒருவித பப்புள் என்று சென்ற வாரம் சீனா அரசாங்கம் சொன்ன ஐந்து நிமிடத்திலேயே, ஆசிய பங்கு சந்தைகள் (இந்தியா உட்பட) மற்றும் பொருட் சந்தைகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. அதே சமயம், தொடர்ந்து வரும் டாலர் முதலீடுகள் பப்புள் பயத்தை மறக்கடிக்கவே , வார இறுதிக்குள் சந்தைகள் மீண்டும் உயர்நிலையை அடைந்தன.

இது போன்ற டாலர் வரவுகள் இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, இந்த டாலர் பணம் மீண்டும் அமெரிக்க அரசின் கடன் பத்திரத்திலேயே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடுகளின் மத்திய வங்கிகள் உள்ளன. டாலர் மதிப்பு வீழ்ச்சி, கடன் பத்திரங்கள் மதிப்பு வீழ்ச்சி மற்றும் குறைந்த வட்டி என அனைத்து வகையிலும் டாலர் முதலீடுகள் மதிப்பை இழக்க, ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பை வளரும் நாடுகள் சந்திக்கின்றன.

ஆனால், குறுகிய கால நோக்கத்தில் (முதலீட்டாளர்களிடையே ஒருவித சந்தோச மனநிலை மற்றும் குறைந்த செலவில் பங்கு முதலீடு கிடைப்பதால்) வளரும் நாடுகளின் தலைமைகள் இந்த டாலர் பாய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

சீனா கூட தனது வாய் ஜாலங்களை விடுத்து, தனது கரன்சியை (யுவான்) சந்தை நாணயமாக மாற்றினால் பல பிரச்சினைகள் தீரும். இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சந்தைகளுக்கு வருவோம்.

சென்ற வாரம் கொடுத்திருந்த எதிர்ப்பு நிலைக்கு கீழேயே சந்தைகள் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரம் காளைகள் தமது பாய்ச்சலை தொடர முயற்சிப்பார்கள். அதே சமயம் (நிபிட்டி) 4700 அளவுக்கு அருகே கரடிகள் தமது பிடிகளை இறுக்குவார்கள். மொத்தத்தில் காளை-கரடி துவந்தமாகவே வரும் வாரம் இருக்கும்.

ஏற்கனவே சொன்னதுதான். இருந்தாலும் திரும்ப ஒரு தடவை சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவர் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. வதந்திகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டாம். ஊடகங்களின் பரிந்துரைகளை எச்சரிக்கையாக ஆய்வது நல்லது.

மேற்சொன்ன பரிந்துரைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான்.

குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.

இப்போது தொழிற்நுட்ப நிலைகள்.

சென்செக்ஸ்

எதிர்ப்பு - 15800 & 16200
அரண் - 15200 & 15000

நிபிட்டி

எதிர்ப்பு - 4700 & 4800
அரண் - 4475 & 4425

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

நன்றி.

நண்பர்களே!


கல்கி ஒரு முறை சொன்னார். "இளமை காலத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய விஷயங்கள் இரண்டு. ஒன்று காதல் மற்றொன்று நட்பு. அதே சமயம், காதலைப் பொறுத்தவரை அதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறதோ அவ்வளவு துக்கமும் அடங்கி இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை தவிர வேறு ஏதும் இல்லாத ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அது நட்பு மட்டும்தான்".

நட்பு நாட்கள் அற்புதமானவை. இன்றளவும் மறக்க முடியாதவை.

நட்புக்களில்தான் எத்தனை வகை? பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, பொதுவான நோக்கங்களால் உருவாகும் நட்பு, நட்பின் நட்பான "நாடோடிகள்" நட்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நட்புக்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் கிடையாது. சேலத்தில் ஒரு இரும்பு உருக்காலையில் பணி புரிந்து, பின்னர் அரசு பணி கிடைத்து அங்கிருந்து விலகிய போது, அங்கு மிகவும் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்த நண்பர்கள், தமது மாத வருமானத்தில் பெரும்பகுதியை இட்டு, நான் மறுத்த போதும், எனக்காக ஒரு கைக்கடிகாரம் வழங்கினார்கள். அதற்கு பிறகு நான் எத்தனையோ விலை உயர்ந்த கடிகாரங்கள் வாங்கினாலும் அந்த பழைய கடிகாரம் இன்றளவும் எனக்கு ஸ்பெஷல்தான். மற்ற கடிகாரங்கள் நேரத்தை மட்டும் காட்ட, இந்த கடிகாரம் நட்பையும் சேர்த்து காட்டுகிறது.

நட்புக்கு இனம், மொழி, மதம் வித்தியாசங்கள் கிடையாது. என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் பலர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்தான். எத்தனையோ முறை மதம் சார்ந்த இடங்களுக்கு செல்ல திட்டம் இடும் போது, இவர் இந்த மதத்தை சார்ந்தவர், இங்கு வர முடியாது என்றெல்லாம் நினைத்ததே இல்லை. போனால் எல்லோரும் ஒன்றாகத்தான் சென்று இருக்கிறோம்.

நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாது. பல சமயங்களில், நம்மை விட வயதில் மிகவும் மூத்தவர்களை "டா" போட்டு கூட பேசியிருக்கிறோம். சில பெரியவர்களுடன் ஏற்படும் மரியாதையான நட்பு நமக்கு வாழ்வின் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது. இளையவர்களுடன் ஏற்படும் நட்பு, நமது மனதின் வயதை குறைக்கின்றது.

நாடோடிகள் படத்தில் சொல்வது போல, "நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" மட்டுமே உண்மை அல்ல. "நண்பனின் உறவுகள் எனக்கும் உறவுகளே" என்பது கூட உண்மைதான். நானே எத்தனையோ முறை, நண்பர்கள் வீட்டில் இல்லாத போதிலும் அவர்களின் வீட்டில் தங்கி இருக்கின்றேன். இன்றளவும் கூட, சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம், எனது நண்பர்களின் உறவுகளையும் முடிந்த வரை பார்த்து விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்.

நட்பு வட்டாரம் பெரிதாக இருக்கும் போது, காதல் எல்லாம் ஒரு மண்ணாங்கட்டி என்று நினைக்க தோன்றும். ஆண் பெண் வித்தியாசம் தெரியாது. நம் மனம் ஒத்தவர் ஒரு மனித துணை என்ற உணர்வு மட்டும்தான் இருக்கும். நண்பர்களுடன் பயணம் செய்யும் போது, ஏதோ ஒரு பெரிய படையின் நடுவே நடப்பது போன்ற ஒரு பாதுகாப்பு உணர்வு கூட தோன்றி இருக்கிறது. மாலையில் தொடங்கி பின்னிரவு வரை எவ்வளவோ பேசி தீர்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் உலகமே நம் காலடியில் கிடப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றி இருக்கிறது. அன்று அப்படி என்னதான் பேசினோம் இன்று நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது.

சேலத்தில் இருந்தவரை எங்களுக்கு ஏற்காடு ஓர் வேடந்தாங்கலாக இருந்திருக்கிறது.
இதே ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினத்தில் எத்தனையோ முறை ஏற்காடு பின்வழி சாலையில் மெல்லிய மழைச் சாரலில் நடுசாலையில் ஆட்டம் போட்டிருக்கிறோம். மயங்கும் மாலை நேரத்தில், ஏரிக் கரையோரம் அரட்டை அடித்து விட்டு, இரவு நேரங்களில் சேலத்திற்கு திரும்பி இருக்கிறோம். மொபெட் முதல் கார் வரை அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் சாலை வெளிச்சம் இட்டு கொண்டு ஊர்வலமாக வந்திருக்கிறோம். அன்றைய தினம் எதிர்கொள்பவர்கள் அனைவருமே நண்பர்களாகத்தான் தெரிந்திருக்கிறார்கள்.

ஒருவரது இன்பதுன்பங்கள் மற்றவர்களாலும் பகிரப் பட்டிருக்கின்றன. காதல் தோல்வியில் காணாமல் போன ஒரு நண்பரை குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்புடன், ஊர் ஊராக தேடி அலைந்த அனுபவங்கள் உண்டு. முன் பதிவு செய்யப் படாமல், சில பிச்சைக்காரர்களுடனும், தொழு நோயாளிகளுடனும், ரயில் பயணம் செய்து, மொழி புரியாத மாநிலங்களில், தேடி அலைந்த "நாடோடிகள்" அனுபவங்களும் உண்டு. ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் போலீசாரிடம் புகைப் படத்தை காட்டி விசாரிக்கையில், ஒரு உரிமை கோராத பிணம் இருக்கிறது என்று தகவல் கிடைக்க, நெஞ்சம் படபடக்க "நண்பர் இல்லை" என்று உறுதி செய்ய வேண்டிய கட்டாயமும் வந்திருக்கிறது.

மேற்சொன்ன அனுபவங்களில் பல பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பல திரைப் படங்களும் எழுத்துக்களும் நட்பின் பெருமையை மிகச் சிறப்பாகவே வெளிக் காட்டியுள்ளன. இருந்தாலும், இருந்தாலும் கூட, சொந்த அனுபவங்களை இந்த நண்பர்கள் தினத்தில் அசை போடுவது ஒரு விளக்க முடியாத சந்தோசத்தை கொடுக்கிறது.

இன்றளவும் கூட என்னுடைய பல நண்பர்களுடன் தொடர்புகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். அதே சமயம் எத்தனையோ ஆண்டுகள் தொடர்பில்லாமல் பின்னர் எப்போதாவது பார்க்க நேர்ந்தாலும், அதே தோழமை உணர்வுடன் "டேய்! என்னடா இப்படி மாறி விட்டாய்" என்று அன்பை பகிரும் நண்பர்களும் உண்டு. நட்புக்கு ஒருவருடன் ஒருவர் மிக அருகாமையிலோ அல்லது அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டோ இருக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை.

இந்த பதிவுலகில் கூட பலரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, தொலைபேசி தொடர்புகள் இல்லாமலேயே மனதுடன் பெருமளவு நெருங்கி இருக்கிறார்கள். இந்த பதிவு வலையை ஆரம்பித்த பிறகு வரும் இந்த முதல் நண்பர்கள் தினத்தில் அனைத்து பதிவுலக தோழர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் உங்களது நட்பு அனுபவங்களை ஒரு கணம் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். முடிந்தால் உங்களது பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

நட்பை விட சிறப்பான, அள்ள அள்ள குறையாத, மகிழ்ச்சி செல்வம் வேறெங்கும் இல்லை.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

நன்றி.
Blog Widget by LinkWithin