Sunday, August 16, 2009

பானா சூனா! போ போ! போயிட்டே இரு!


எதிர்பாராத வீதமாக அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம் குறைந்து போக, அமெரிக்காவின் மீட்சி விரைவாக இருக்கும் என்ற நம்பிக்கை உருவான அதே தருணத்தில், அமெரிக்க மத்திய வங்கி தனது "குறைந்த வட்டி கொள்கையை" விரைவிலேயே மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. டாலர் வரத்து என்பது இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சியின் முக்கிய காரணியாக அறியப் படுவதால், டாலர் வரத்தில் ஏற்படும் சிறு தடங்கல்களும் நமது சந்தையின் மனநிலையை பாதிக்கின்றன.

மேலும் தவறிப் போன பருவ மழையின் பாதிப்பு ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பெரிதாக இருக்குமோ என்ற அச்சமும் சேர்ந்து கொள்ள, சென்ற வாரத்தின் முதல் மூன்று நாட்கள் நமது சந்தை தடுமாறிக் கொண்டே இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கி, தனது குறைந்த வட்டிக் கொள்கையை இன்னும் பல காலம் நீட்டிக்க போவதாகவும், சந்தையில் மேலும் $ 300 பில்லியன் (சுமார் Rs.15,00,0000 கோடி) இறக்கி விடப்போவதாகவும் அறிவித்தது சந்தையை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தது. மேலும் ஜெர்மனி பொருளாதாரத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வளர்ச்சி, உலக பொருளாதாரம் கூடிய சீக்கிரமே தளர்ச்சியில் இருந்து மீளும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

சென்ற மாதத்திற்கான இந்திய தொழிற் துறை வளர்ச்சி எதிர்பார்த்ததற்கும் மேலாக வளர்ச்சி அடைய, பருவமழை தப்பிதத்தால் நேரக் கூடிய வீழ்ச்சி, சிறந்த தொழிற்துறை வளர்ச்சியினால் ஈடுகட்டப் பட்டு விடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு அறிவித்த புதிய வரிக் கொள்கை சந்தையை தற்காலிகமாக சந்தோசப் படுத்தியது.

மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் ஒரே நாளில் ஏகப் பட்ட அளவுக்கு உயர்ந்த சந்தை குறியீடுகள் அது வரையிலான மொத்த வாரத்தின் வீழ்ச்சியையும் சரி கட்டி சென்ற வாரம் ஒரு வெற்றிகரமான வாரமாக உதவி செய்தன.

அதே சமயத்தில் தேய்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் கவனத்தில் கொள்ள தக்கது. மேலும் சென்ற வார இறுதியில் வெளியிடப் பட்ட அமெரிக்க பொருளாதார தகவல்கள் பொருளாதார மீட்சி அவ்வளவு சுலபமானதாக இருக்காது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

உள்நாட்டின் தொழிற்துறை உற்பத்தியின் அசுர வளர்ச்சி தகவல்களின் நம்பகத் தன்மையும் கேள்விக்குரியது. அதே போல பன்றி காய்ச்சல் பீதியினால், சுற்றுலா துறையில் ஏற்கனவே ஏற்பட்டு விட்ட பாதிப்பினால் எந்த அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப் படக் கூடும் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

புதிய வரி கொள்கைகள் வெளிப்பார்வைக்கு மக்களுக்கு சாதகமாக தோன்றினாலும், எந்த ஒரு அரசாங்கமும் தனது வரி வருமானத்தை அதிகரிக்கவே முனையும் என்ற விகிதத்தில் நோக்கும் போது சந்தையின் ஆர்ப்பரிப்பு சற்று ஓவர் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் வருங்காலத்திற்கான சந்தையின் போக்கு ஏற்கனவே சொன்னது போல, உள்ளே வந்து விழும் டாலர் அளவைப் பொறுத்தே அமையும் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு அமெரிக்காவின் குறைந்த வட்டி டாலர் கொள்கை தொடரும் என்றாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

சந்தை 4610 & 4730 அளவுகளில் எதிர்ப்பை சந்திக்கும். 4480 & 4520 அளவுகளில் அரணைக் கொண்டிருக்கும்.

ரூபாய், தங்கம் மற்றும் உலக சந்தைகளுக்கான விரிவான அலசலை பார்க்க விரும்புவோர் இந்த பதிவரின் ஆங்கிலப் பதிவை சுட்டவும்.

http://maximumindia.blogspot.com/2009/08/easy-money-policy-for-extended-period.html

வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

10 comments:

ரஹ்மான் said...

//அரசு அறிவித்த புதிய வரிக் கொள்கை சந்தையை தற்காலிகமாக சந்தோசப் படுத்தியது. //
தற்காலிகமாக சந்தோசப் படுவது வரும் காலத்தில் அதிக துக்கத்திற்கு அடிகோலிடும்.

//புதிய வரி கொள்கைகள் வெளிப்பார்வைக்கு மக்களுக்கு சாதகமாக தோன்றினாலும், எந்த ஒரு அரசாங்கமும் தனது வரி வருமானத்தை அதிகரிக்கவே முனையும் என்ற விகிதத்தில் நோக்கும் போது சந்தையின் ஆர்ப்பரிப்பு சற்று ஓவர் என்றே தோன்றுகிறது.//
எனக்கும் சந்தையின் ஆர்ப்பரிப்பு ரெம்ப ரெம்ப அதிகம் என்றே தோன்றுகிறது.

Thomas Ruban said...

சந்தை மதில்மேல் பூனையாக உள்ளது.
என்று தெளிவாக கூறியதற்க்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

//தற்காலிகமாக சந்தோசப் படுவது வரும் காலத்தில் அதிக துக்கத்திற்கு அடிகோலிடும்.//

சரியாக சொன்னீர்கள் நண்பரே!

//எனக்கும் சந்தையின் ஆர்ப்பரிப்பு ரெம்ப ரெம்ப அதிகம் என்றே தோன்றுகிறது.//

சென்செக்ஸ் எட்டாயிரம் புள்ளிகள் இருக்கும் போது சந்தை இன்னும் கீழே வரும் என்று சொல்லி விற்றார்கள். இப்போது பதினாறாயிரம் புள்ளிகள் இருக்கும் போது, இன்னும் மேலே போகும் என்று சொல்லி வாங்க ஏதாவது காரணம் வேண்டுமல்லவா?

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//சந்தை மதில்மேல் பூனையாக உள்ளது.
என்று தெளிவாக கூறியதற்க்கு நன்றி சார்.//

உண்மைதான் தாமஸ் ரூபன்! டாலர் உள்ளே வந்தால் அனைத்து நல்ல செய்திகளும் கூடவே வந்து விடுகின்றன. டாலர் வெளியே சென்றால் நம் நிபுணர்கள் காரணங்களை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்றி.

DG said...

தல நீங்கள் தின வணிகம் செய்கிறீர்களா?
கட்டுரை எப்பவும் போல் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்
நன்றி

Maximum India said...

நன்றி DG!

//தல நீங்கள் தின வணிகம் செய்கிறீர்களா?
கட்டுரை எப்பவும் போல் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்//

பொதுவாக தனிப் பட்ட முறையில் பங்கு வணிகம் அதிகம் செய்ததில்லை. காரணம், பங்கு சந்தையின் பல முக்கிய தருணங்களில் சந்தையின் போக்கை முன்கூட்டியே கணிக்க ஓரளவுக்கு முடிந்தாலும் கூட அலுவலகத்தின் நலன்தான் கண் முன்னே நிற்கும். தனக்கென்று எதுவும் தோன்றாது.

இருந்தாலும் கூட பங்கு சந்தையில் தனிப்பட்ட முறையிலும் ஒரு தேர்ந்த வர்த்தகர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. முக்கியமாக F&O பகுதியில் திறமையான முறையில் வர்த்தகம் செய்ய கற்றுக் கொண்டு வருகிறேன். முடிந்தால் உங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கும் என் போன்ற பலருக்கும் உதவிகரமாக இருக்கும்.

நன்றி.

வால்பையன் said...

தங்கத்தின் விலை குறைந்தாலும் நமது பணமதிப்பு ஏறி டரியலாக்குகிறது!
60000 லாபம் வர வேண்டிய இடத்தில் வெறும் 20000 மட்டுமே!

DG said...

நான் பங்குவணிகத்தில் LKG சார்.நீங்கள்
PHD.எனவே நீங்கள் தான் எனக்கு கற்றுத்தர வேண்டும் :)

நன்றி

Maximum India said...

நன்றி வால்பையன்!

//தங்கத்தின் விலை குறைந்தாலும் நமது பணமதிப்பு ஏறி டரியலாக்குகிறது!
60000 லாபம் வர வேண்டிய இடத்தில் வெறும் 20000 மட்டுமே!//

தங்கம் இப்போதைக்கு விலை குறைவது போல தோன்றினாலும், பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கும் பட்சத்திலும் அமெரிக்கா டாலர் அடிப்பதை நிறுத்தாமல் இருக்கும் பட்சத்திலும், தங்கத்தின் விலை வேகமாக உயர வாய்ப்புக்கள் உள்ளது.

நன்றி.

Maximum India said...

//நான் பங்குவணிகத்தில் LKG சார்.நீங்கள்
PHD.எனவே நீங்கள் தான் எனக்கு கற்றுத்தர வேண்டும் :)//

சந்தை 20/20 கிரிக்கெட் போன்றது. யார் வேண்டுமானாலும் என்றைக்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். இங்கு எல்கேஜி என்றோ பிஹெச்டி என்றோ எதுவுமில்லை.

எனக்கு தெரிந்ததை நான் சொல்லித் தருகிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்லித் தாருங்கள். இருவருக்கும் மற்றும் இங்கு வரும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

நன்றி.

Blog Widget by LinkWithin