Sunday, November 29, 2009

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!


சென்ற வார "துபாய் உலகம்" விவகாரம் உலக சந்தைகளை நிலை குலைய செய்திருக்கிறது. இதன் பின்புலத்தைப் பற்றியும், இந்த விவகாரத்தினால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

துபாய் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எண்ணெய் வளம் குறைந்த இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வணிகத்தையே நம்பி உள்ளது. துபாயை ஒரு மிகப் பெரிய வணிக மற்றும் சுற்றுலா மையமாக்க விரும்பிய துபாய் அரசு "துபாய் உலகம்" என்ற ஒரு அரசு நிறுவனத்தின் வாயிலாக பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, சென்ற ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் துறையை வெகுவாக பாதிக்க, "துபாய் உலகம்" தான் கடனாக பெற்ற தொகையில் சுமார் 59 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் முதன்மை நாடான அபுதாபி ஓரளவுக்கு உதவிக் கரம் நீட்டினாலும், அந்த உதவி முழுமையானதாக அமைய வில்லை. எனவே, இந்த கடனை திருப்பி செலுத்த ஆறுமாத கால அதிக அவகாசம் அளிக்கும்படி துபாய் அரசு தற்போது கோரியுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், துபாய் அரசு நிறுவன கடன் பத்திரங்களை "டீபால்ட்" (Default) நிலைக்கு உலக தர நிர்ணய நிறுவனமான (Rating Agency) S&P தரம் தாழ்த்தியது.

பொருளாதார சிக்கலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் உலக நாடுகளுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் துபாயின் பங்கு மிகச் சிறியதே ஆனாலும், வளமான நாடாக கருதப் பட்ட துபாய் அரசு "டீபால்ட்" செய்திருப்பது, உலக பொருளாதார சிக்கல் இன்னும் நிறைவு பெற வில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை சொன்னபடி, "V " வடிவ பொருளாதார மீட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் பங்கு சந்தைகள் கடந்த எட்டுமாத காலத்தில் ஏராளமாக முன்னேறியுள்ளன. ஆனால் அடுத்தடுத்து வரும் பொருளாதார தகவல்கள் "V " வடிவ மீட்சி இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளன. வரப் போகிற பொருளாதார மீட்சி ஒன்று "U" வடிவமாக இருக்கும் அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்தது போல (Double Dip Recession) "W" வடிவாக இருக்கும் என்ற ஒருவித பயம் சந்தைகளை இப்போதைக்கு ஆட்டிப் படைக்கின்றது. அதே சமயம், அமெரிக்காவில் குறைந்த வட்டியில் பெருந்தொகையை கடனாக பெற்று, அந்நிய சந்தைகளில் முதலீடு செய்யும் "Dollar Carry திருடி" முறை, ஏராளமான புதிய "விரைவு பணத்தை" (Hot Money) உருவாக்கி, சந்தைகளை கீழே வரவிடாமல் தடுத்து வந்துள்ளது.

இந்த நிலையில் சென்ற வார "துபாய் விவகாரம்", சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல சாக்காக அமைந்துள்ளது. அதே சமயம், துபாய் விவகாரம் ஏற்கனவே சொன்னபடி உலக பொருளாதாரத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் (ஒருவித செண்டிமெண்ட் பாதிப்பை தவிர) ஏற்படுத்திவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை துபாய் விவகாரம் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இந்தியர்கள் பலரும் துபாயில் பணி புரிகின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு ஏராளமான "அந்நிய செலவாணியை" சம்பாதித்து தருகின்றனர். இந்திய கட்டுமான நிறுவனங்கள் (வோல்டாஸ், எல்&டி போன்றவை) பலவும் துபாயில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன. பேங்க் ஆப் பரோடா வங்கி துபாயில் பல கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார் எம்ஜிஎப், துபாய் அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. துபாய் இந்தியாவின் ஒரு முக்கிய வணிக கூட்டாளியாகவும் (Exports-Imports) இருந்து வருகிறது.

தற்போதைய சிக்கலில் இருந்து துபாய் முழுமையாக மீண்டாலும் கூட, இந்த "டீபால்ட்" விவகாரம் துபாயின் வருங்கால வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருக்கும் ஒரு முக்கிய நாடான துபாயின் வளர்ச்சிக்கு வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் வீச்சு இந்தியாவிலும் (குறைந்த அளவேயாயினும்) உணரப் படும் என்று கருதுகிறேன்.

இந்திய பங்கு சந்தைகளை பொறுத்த வரை கூட பெரிய பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவு என்றாலும், ஏற்கனவே சொன்னபடி, ஏற்கனவே ஏராளமாக உயர்ந்துள்ள சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு இந்த விவகாரம் நல்ல உதவியாக இருந்துள்ளது. கடந்த வியாழன்று, அதிக வர்த்தகத்துடன் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது (Fall with high trade volume), சந்தையின் கீழ்நோக்கிய பயணம் இன்னும் கூட தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயம், குறுகிய கால வர்த்தகர்களின் "விற்றபின் வாங்கும் போக்கினால் (Short Covering)" சந்தைகள் அவ்வப்போது மேலே உயரவும் வாய்ப்புள்ளது.

வர்த்தகர்கள் சந்தைகள் மேலே சென்றால் விற்பதற்கு (Shorting) ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையின் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களை (Fudamentally Strong Companies) ஓராண்டு நோக்குடன் மெல்ல மெல்ல சேகரிக்கலாம்.

நிபிட்டி 5050-5150 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். 4700-4800 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Saturday, November 28, 2009

ஏன்? எதற்காக?


நமது சாலைப் பயணம் சில சமயங்களில் ரேஸ் பயணமாக மாறி விடுவதுண்டு. நாம் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி சீராக பயணம் செய்து கொண்டிருக்கையில், விருட்டென்று ஒரு வண்டி நம்மை (சற்று முரட்டுத்தனமாக) முந்தினால் நமக்கு ஒருவகையான கோபம் வந்து விடுகிறது. உடனடியாக, "விட்டேனா பார்" என்று அந்த வாகனத்துடன் ஒருவித மானசீக ரேஸ் ஆரம்பித்து விடுகின்றது. சில சமயங்களில் அடைய வேண்டிய இலக்கு, மற்ற பிரச்சினைகள் அனைத்தும் மறந்து போய், அந்த குறிப்பிட்ட வாகனத்தை விஞ்சுவது மட்டுமே நமது ஒரே இலக்காக மாறி விடுகிறது. இந்த "சாலை வழி இலக்கிற்காக" நாம் சில சமயங்களில் உயிரைக் கூட பணயம் வைத்து வண்டியை செலுத்துவதும் உண்டு. இந்த ரேஸ்கள் பல சமயங்களில் ஈடு செய்ய முடியாத நஷ்டத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

இன்று மும்பை-புனே சாலையில் செல்லும் போது நான் சிந்தித்த ஒரு விஷயம், "சில நிமிட ரேஸ் (?) பயணத்திற்கு பின்னே அந்த போட்டி வண்டி (?) தடம் மாறி விடுகிறது. அதற்கப்புறம் அந்த வண்டி நம் கண்ணில் படப் போவதே இல்லை. அந்த வண்டி ஓட்டுனர் யாரென்று கூட நமக்கு தெரியாது. அல்லது அக்கறையும் கொள்வதில்லை. வெற்றி பெற்றதற்காக யாரும் இங்கே கோப்பைகளும் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் யாரும் கண்டுக் கொள்ளப் போவதுமில்லை. மானசீகமான ஈகோ வெற்றியை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பின்னர் எதற்காக இப்படி உயிரை (வாகன ஓட்டியின் உயிர் மட்டுமல்ல. இன்னும் பல உயிர்கள்) பணயம் வைத்து பிரயோஜனமில்லாத ஒரு போட்டி?"

இதே சிந்தனை நமது வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்துமல்லவா? வாழ்க்கைப் பயணத்தில் நாம் போட்டியாளர்களாக, சில சமயங்களில் எதிரிகளாகவே கூட கருதும் பலர் உண்மையில் நம்முடன் பயணிக்கப் போவது வெகு சில காலம் மட்டுமே. அவர்களுடன் முட்டி மோதி வெற்றி பெறுவது மட்டுமே நம் லட்சியமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அவ்வாறான முயற்சிகள், பெரும்பாலும் நம் சக்தியை வீணடிப்பதாகவே அமையும். சில சமயங்களில் நம்முடைய ஒரிஜினல் இலக்கை அடைய முடியாத படி கூட செய்து விடும்.

நம்முடைய கவனம், நாம் சென்றடைய வேண்டிய இலக்கு, அதை அடைய வேண்டியதற்கான தூரம், நேரம், முயற்சிகள் ஆகியவற்றின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னுள் எழும்பிய கேள்வி.

இடையில் வந்து இடையிலேயே காணாமல் போகிறவர்கள் பற்றி நமக்கு என்ன அக்கறை?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி.

Thursday, November 26, 2009

கடனில் தத்தளிக்கும் துபாய்!


பொதுவாக ஒரு வளம் கொழிக்கும் நாடாக அறியப் படும் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் (UAE) முக்கிய அங்கமான துபாய் இன்றைய தேதியில் பெரிய கடன் சிக்கலில் தத்தளித்து வருகின்றது தெரியுமா? இந்த தகவல் முதலில் எனக்குக் கூட மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சற்று ஆழமாக ஆய்ந்த போது, கிடைத்த சில தகவல்கள் பகிர்வுக்காக இங்கே.

ஐக்கிய அரேபிய கூட்டமைப்பில் மொத்தம் ஏழு நாடுகள் உள்ளன. அவற்றில் துபாய் மிகப் பெரிய "மாநகர" நாடாகும். துபாய் எண்ணெய் வளம் மிக்க அரேபிய பகுதியில் இருந்தாலும் அதனது பொருளாதாரத்தில் எண்ணெய் வருவாய் மிகக் குறைவானதேயாகும். மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய வணிக நகரமான துபாயின் பெரும்பாலான வருமானம் வணிக நடவடிக்கைகளின் வாயிலாகவே வருகின்றது.

இந்நிலையில் வணிக மற்றும் சுற்றுலா மையமான "துபாய் உலகம்" அமைப்பதற்காக சுமார் 80 பில்லியன் டாலர் (3,60,000 கோடி ருபாய்) கடனாக துபாய் அரசு நிறுவனங்களால் பெறப் பட்டது. கடந்த ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் விலைகளை பாதிக்கும் மேல் குறைத்து விட, "துபாய் உலகம்" தான் பெற்ற கடனில் சுமார் 59 பில்லியன் டாலர் அளவுக்கு இன்று வரை திருப்பி செலுத்த முடியவில்லை என்று சொல்லப் படுகிறது. எனவே கடன் திருப்பி செலுத்துவதை தள்ளி போட துபாய் அரசு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப் படுகிறது. கடந்த 2001 இல் கடன் திருப்பி செலுத்த முடியாமல் போன அர்ஜென்டினா அரசாங்கத்திற்கு பிறகு ஒரு அரசாங்கம் தனது கடனை திருப்பி செலுத்த முடியாமல் போவது இதுதான் முதல் முறை என்றும் சொல்லப் படுகிறது.

தனது ஒட்டு மொத்த பொருளாதாரத்தை விட (GDP is about $37 billion) அதிக கடன் சுமையை தாங்கி வரும் துபாய் அரசாங்கம் "திவால்" ஆகி விடுமோ என்ற அச்சம் இன்றைய தேதியில் உலக சந்தைகளில் எழுந்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கங்களின் கடன் பத்திரங்களின் மீதான "கடன் உத்திரவாத பிணையங்கள்" (Credit Default Swaps) விலை உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை அடி வாங்கியுள்ளது. அதனால் டாலர் மதிப்பு பெருமளவுக்கு உயர்ந்து மற்ற கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தைகளும் பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இங்கே ஆயிலையும் வழுக்கி விழச் செய்தது "அளவுக்கு மீறிய ஆசைதானே"?

நன்றி.

டிஸ்கி: பிளாக்கர் தளத்தின் சில தொழிற்நுட்ப கோளாறுகளின் காரணமாக என்னுடைய "பதில் பின்னூட்டங்களை" பதிய முடியவில்லை. எனவே பின்னூட்ட நண்பர்கள் பொறுத்தருளவும்.

Wednesday, November 25, 2009

தோல்வி எமக்கில்லை!


எட்மன்ட் ஹில்லாரி சரித்திரத்தின் ஒரு சிறு நிகழ்வு நமக்கு ஒரு நல்ல வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.

எட்மன்ட் ஹில்லாரி - டென்சிங் இணை எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக எட்டிப் பிடித்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால், பல முறை கண்ட தோல்விக்கு பின்னர்தான் அந்த சாதனை சாத்தியமாயிற்று என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக் குறியே.

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்வதற்காக ஹில்லாரி 1951 மற்றும் 1952 ஆண்டுகளில் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அவருடைய புகழ் இங்கிலாந்தில் பெருமளவுக்கு பரவி இருந்தது. 1952 முயற்சி தோல்வி அடைந்த சில வாரங்களுக்குள்ளேயே இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில் முக்கிய உரையாற்றும்படி ஹில்லாரிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.

மேடையை நோக்கி சென்ற ஹில்லாரிக்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே நிற்காமல் சற்று ஓரமாக நின்ற ஹில்லாரி, எவரெஸ்ட் மலை படத்தை பார்த்துச் சொன்னாராம்.

" எவரெஸ்ட்! இந்த முறை என்னை தோற்கடித்து விட்டாய். ஆனால் அடுத்த முறை உன்னை நான் தோற்கடிப்பேன். காரணம், நீ வளர முடிந்த வரை வளர்ந்து விட்டாய். ஆனால் நான் இனியும் வளர்ந்து கொண்டே இருப்பேன்"

சொன்னபடியே அடுத்த வருடம் எவரெஸ்ட் மலையை முறியடித்த ஹில்லாரி, மனித முயற்சியின் மகத்துவத்தை நிலைநாட்டி உலக சரித்திரத்தில் அழியாப் புகழை பெற்றுள்ளார்.

நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.

ஹில்லாரியின் வார்த்தைகளை மனதில் பதியம் போட்டுக் கொள்வோம்.

மனித முயற்சியின் மகத்துவத்திற்கு நிகரேதுமில்லை என்பதை மனனம் செய்து கொள்வோம்.

பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும்.

நன்றி.

Sunday, November 22, 2009

அந்நிய முதலீடுகளை கட்டுப்படுத்த வேண்டுமா?



பொதுவாக வளரும் நாடுகளில், மனித வளம், கனிம வளம், நீர் ஆதாரங்கள், நிலம் என பல்வேறு இயற்கை ஆதாரங்கள் மிகுதியாக இருக்கும். ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் கிரியா ஊக்கியான "மூலதனம்" (Capital) என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். எனவேதான், வளரும் நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களை ரத்தின கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

அந்நிய முதலீடுகளை அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடு (FII) என இரண்டு வகையாக பிரிக்கலாம். சீனா போன்ற நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஊக்குவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டின் வாயிலாக "மூலதனம்" மட்டுமில்லாமல் வேறு சில நன்மைகளும், அதாவது வளரும் நாடுகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் "அரிய வகை தொழிற்நுட்பங்கள்", "சீரிய மேலாண்மை முறைகள்", "ஏற்றுமதி வருவாய்" மற்றும் "அதிக வேலை வாய்ப்பு" போன்றவையும் அந்நிய நேரடி முதலீடுகள் வழியாக கிடைக்கின்றன. மேலும், இது போன்ற நேரடி முதலீடுகள் எளிதாக திரும்ப பெற முடியாதவை என்பதால் ஒரு வித "நிதி பாதுகாப்பு"ம் (Long Term Investments) வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன.

மற்றொரு வகையான அந்நிய முதலீடான "அந்நிய நிறுவன முதலீட்டின்" வாயிலாகவும் சில நன்மைகள் வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன. "தொழிற்முனைவோர் திறன்" (Enterpreneurship Skills) அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் இந்த வகையான முதலீடுகளை வரவேற்கின்றன. இந்த வகை அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடு மட்டுமே செய்கின்றனர். மற்ற பொறுப்புக்கள் அனைத்தும் இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன.

இந்த வகை அந்நிய முதலீடு, இந்திய நிறுவனங்கள் மற்றும் புதிய தொழிற் முனைவோர் திரட்ட விரும்பும் "மூலதனத்திற்கான செலவை (Capital Cost ) " பெருமளவு குறைக்கின்றது. இதனால் புதிய தொழில் துவங்குவதும் தற்போதைய தொழிலை விரிவுபடுத்துவதும் எளிதாகிறது. மேலும், தொழிற்துறையில் முன்னுக்கு வருவது பொருளாதாரரீதியாக மிகப் பெரிய வருவாயை அளிப்பதால் (Listing in Capital Markets) புதிய தொழிற்முனைவோர் அதிக அளவில் உருவாகவும் உதவுகின்றது. இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் (Import oriented ) நம் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளியை (Trade Deficit) ஈடுகட்டவும் இவ்வகை முதலீடுகள் உதவுகின்றன. எனவேதான் இந்திய அரசாங்கம் இந்த வகை முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கின்றது.

ஆனால், இந்த வகை முதலீடுகளால் பலவகையான பொருளாதார சிக்கல்கள் உருவாகுகின்றன. அதாவது, இவ்வாறு இந்தியாவில் வந்து குவியும் அந்நிய செலவாணி பணத்தை, குறிப்பிட்ட நாடுகளிலேயே குறைந்த வருவாயில் முதலீடு செய்யும் கட்டாயம் இந்திய மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இந்தியாவில் முதலீடு செய்யும் போது, அவர்கள் மூலம் இந்தியா வரும் அமெரிக்க டாலர்களை, அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் இந்திய மத்திய வங்கி முதலீடு செய்கிறது. அவ்வாறான பத்திரங்களில் மிகக்குறைவான (0.25% முதல் 4% வரை) வருவாயே கிடைக்கின்றது. மேலும் டாலர் மதிப்பீடு ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதாலும் இந்தியாவிற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. சென்ற நிதியாண்டில் மட்டும் இந்த வகையில் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப் படுகின்றது.

உள்நாட்டிலும் அதிகப் படியான அந்நிய பண வரத்தினால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டு முதலீட்டாளர்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. "சூடான பணம் (Hot Money)" அதிக பணவீக்கத்தையும் (Asset Inflation) உருவாக்குகின்றது. ரியல் எஸ்டேட், கம்மொடிட்டி போன்ற பொருளாதாரத்திற்கு நேரடி பலன் அளிக்காத துறைகளில் (Unproductive Sectors) இந்த வகை பணம் பாய்ந்து "சொத்து குமிழ்களை (Assets Bubbles)" உருவாக்குகின்றன. மேலும், வளரும் நாடுகளின் வளங்களை மறைமுகமாக சுரண்ட வளர்ந்த நாடுகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகவும் இந்த வகை முதலீடுகள் அமைகின்றன.

எனவேதான், இந்த வகையான முதலீடுகளை கட்டுபடுத்த பிரேசில் போன்ற சில வளரும் நாடுகள் சமீபத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கூட அரசின் சார்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில வலுவான இந்திய பங்கு வர்த்தகர்கள் குறுகிய கால லாப நோக்கிற்காக இவற்றை எதிர்த்து வருகின்றனர். இந்திய அரசாங்கமும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றது. பொதுவாக, பங்கு சந்தைகள் உயர்ந்து கொண்டே இருப்பதைத்தான் பலரும் (முக்கியமாக பங்கு வர்த்தகர்கள் மற்றும் பெரிய பணக்காரர்கள்) விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு உயர்வதற்காக நாடு ஒரு மிகப்பெரிய விலையை கொடுத்து வருகின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தாலும் கூட அலட்சியம் செய்கின்றனர்.

என்னைப் பொறுத்த வரை நீண்ட கால அந்நிய நிறுவன மற்றும் நேரடி முதலீடுகள் வரவேற்கப் பட வேண்டியவையே. அதே சமயம் குறுகிய கால நோக்கிற்காக சுனாமிகளை ஏற்படுத்தும் "குறுகிய கால பரஸ்பர நிதிகள் (Hedge Funds)" கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. இதற்காக அரசாங்கம், குறுகிய கால லாபத்தின் மீது அதிக வரிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பங்கு நம் நாட்டிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லையே? மேலும் இந்திய பங்கு வர்த்தகர்கள் கூட, ஒரு சீரான நிதானமான வளர்ச்சி பெறும் ஒரு பங்கு சந்தையின் மூலம்தான் அதிக பணம் ஈட்ட முடியும். மிக வேகமாக செயல்படக் கூடிய திறமை கொண்ட "குறுகிய கால அந்நிய முதலீட்டாளர்கள்" அவ்வப்போது ஏற்படுத்தும் "சுனாமிகள்" சிறிய இந்திய பங்கு முதலீட்டாளர்கள் பலரையும் காணாமல் போக செய்து விடுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது பங்கு சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

பிரேசில் போல நம் நாட்டிலும் அந்நிய முதலீடுகளின் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப் படுமோ என்ற அச்சத்தில் பங்குசந்தைகள் கடந்த சில காலமாக தடுமாறிக் கொண்டே இருந்தன. டாலர் சர்வதேச செலவாணி சந்தைகளில் முன்னேற்றம் அடைந்ததும், மீண்டும் ஒரு முறை பொருளாதார தளர்ச்சி (Doubel Dip Recession) ஏற்படும் என்று ஒபாமா கூறியதும், அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகளின் மீது அந்நாடுகளின் மத்திய வங்கிகள் கொண்டுவர விரும்பும் முதலீட்டு கட்டுப்பாடுகளும் இந்திய சந்தைகளின் தளர்ச்சிக்கு மற்ற காரணங்களாக இருந்தன. அந்நிய முதலீடுகளை கட்டுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று இந்திய அரசாங்கம் உறுதியளித்தவுடன், நமது பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப் பட்டது.

இந்த முன்னேற்றம் எந்த அளவு நீடிக்கும் என்பது இப்போதைய கேள்வி. "பில்டிங் ஸ்ட்ரோங் ஆனால் பேஸ்மென்ட் வீக்" என்ற பிரபல நகைச்சுவை வசனம்தான் தற்போதைக்கு மனதில் எழுகிறது. தெளிவில்லாத பொருளாதார மீட்சி அறிகுறிகளுக்கு இடையே, பங்குசந்தை மதிப்பீடுகள் (Share Price Valuations) மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன என்பதை பலரும் தற்போது உணர்ந்துள்ளனர். அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகள் தங்களது பழைய பாணியை பின்பற்றுவது உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒருமுறை சிக்கலை ஏற்படுத்த வல்லது என்பதை அந்நாடுகளின் மத்திய வங்கிகள் உணர்ந்துள்ளன என்பதை அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.

இந்திய சந்தையை பொறுத்த வரை, அந்நிய முதலீட்டாளர்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களது நடவடிக்கையை பொறுத்தே நமது பங்கு சந்தையின் போக்கு அமையும் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5100-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை (ஒவ்வொரு சரிவின் போதும்) சிறிது சிறிதாக சேகரிக்கலாம். வங்கிகளின் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டால், இந்திய பொதுத்துறை வங்கிகளின் மதிப்பீடு உயர வாய்ப்புள்ளது. விஜயா வங்கி, தேனா வங்கி போன்ற சிறிய வங்கிகளின் மீது வர்த்தகர்களின் கவனம் இப்போது திரும்பி உள்ளது.

குறுகிய கால வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையாக தகுந்த "இழப்பு நிறுத்தத்துடன்" பங்கு வணிகம் செய்யவும். குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகள் விதிக்கக் கூடிய முதலீட்டுக் கட்டுப்பாடுகள் நம் பங்குசந்தையை வெகுவாக பாதிக்கக் கூடும்.

மொத்தத்தில் வரும் வாரத்தில் சர்வதேச செலவாணி வணிகத்தில், டாலர் அளவில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே நமது சந்தையின் போக்கு அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.

வரும் வாரம் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, November 19, 2009

பங்குசந்தை வெற்றிப்பயணம் - தொடர்பதிவு - ஒரு மீள்பார்வை!


பங்குசந்தையில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றிய சில முன்னோட்ட பதிவுகளை இது வரை பார்த்தோம். பங்குகளை பற்றிய இன்னும் ஆழமான விளக்க கட்டுரைகளுக்கு செல்லும் முன்னே, இதுவரை இட்ட பதிவுகளை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்ப்போம் என்று தோன்றியது.

பங்குகளை நேரடியாக பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் வழிமுறையை நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு எண்ணத்தில்தான் இந்த தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முக்கிய காரணம், பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய நேரடி புரிதல் (ஓரளவேனும்) இருக்கும் போதுதான், எடுக்கப் படும் முடிவுகள் சிறப்பாக இருந்திருக்கின்றன என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

இந்த உண்மையை ஒரு பங்கு சந்தை மேதை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

F&O வர்த்தகத்தில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் இவர். இந்த துறையில் ஏற்கனவே மிகப் பெரிய நிபுணத்துவம் பெற்று இருந்த தன்னுடைய நண்பரிடம் ஆலோசனை கேட்கின்றார். அவரும் ஒரு குறிப்பிட்ட பங்கின் "option" வாங்குமாறு அறிவுரைக்கிறார். தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்யும் நமது பங்குசந்தை மேதைக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. பணம் முழுவதையும் அந்த குறிப்பிட்ட வர்த்தகத்தில் இழக்கும் இவருக்கு தனது நண்பர் மீது கடும் கோபம் எழுந்து அவரிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறார். ஒரு நாள் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. வேண்டாவெறுப்புடன் அவரை சந்திக்க செல்லும் இவரிடம், நண்பர் இவர் இழந்த அனைத்து பணத்தையும் கொடுக்கிறார். எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்த இவரிடம், தான் பரிந்துரைத்த வர்த்தக நிலைக்கு நேர்மாறாக தான் ஒரு வர்த்தக நிலை எடுத்ததாகவும், மற்றவர் பேச்சை முழுமையாக நம்பி பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது என்ற பங்குசந்தையின் முதல் மற்றும் முக்கிய பாடத்தை புகட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் நண்பர் கூறுகின்றார்.

பங்குசந்தை புரியாதாவர்கள் அல்லது அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், பங்குசந்தை பக்கமே வர வேண்டாம் என்று இந்த பங்குசந்தை மேதை கூறுகின்றார். தன் மீதும் தான் எடுக்கும் அறிவார்ந்த முடிவின் மீதும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே பங்கு சந்தையில் நிலைக்க முடியும் என்ற இவரது கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

இந்த கருத்தில் அடிப்படையில்தான் , பங்குசந்தையைப் பற்றிய சில அடிப்படை கல்வியை பரிமாறவே இந்த தொடர்பதிவு ஆரம்பிக்கப் பட்டது.

இந்த தொடர்பதிவின் துவக்கத்தில் பங்குசந்தையில் வெற்றிப் பெற்றவர்கள் பின்பற்றிய பாதைகள் பற்றி மேலோட்டமாக விவரிக்கப் பட்டது. அதிபுத்திசாலித்தன முடிவுகளை எடுக்கும் முதல் பாதை, உழைப்பாளிகளின் இரண்டாவது பாதை மற்றும் பொறுமைசாலிகளின் மூன்றாவது பாதை ஆகியவை அறிமுகப் படுத்த பட்டன. எந்த பாதை சிறந்த பாதை என்பதை அவரவர் தேவைக்கேற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறி இருந்தேன். அல்லது தமக்கேற்றபடி ஒரு புதிய பாதையை கூட வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தேன்.

இந்த பாதைகள் மட்டுமில்லாமல், அதிரடியாக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் ஒரு துணை பாதை பற்றியும் கூட தெரிவித்திருந்தேன். இந்த பாதையில் செல்வது பற்றிய ஒரு நடைமுறை விளக்கம் கூட கொடுத்திருந்தேன். மீண்டு வரும் நிறுவனங்களில் (Recovery Stocks) முதலீடு செய்வது எவ்வளவு பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதை நீங்கள் மைத்தாஸ் கதை மூலம் நேரடியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். "இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்". " என்று குறிப்பிட்ட பதிவை முடித்த நான் மைத்தாஸ் விஷயத்தில் "சொல்லி அடித்திருப்பது" இந்த தொடர்பதிவை தொடரும் தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.

பங்குகளை வாங்குவது பற்றி முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகளைப் பற்றியும் மேலோட்டமாக இதுவரை பார்த்து உள்ளோம். பங்குகளின் அடிப்படைகளை அலசும் முறை, பங்கின் ஓட்டத்தை கவனிக்கும் தொழிற்நுட்ப வரைபட அறிவியல் மற்றும் வர்த்தகர்களின் மனநிலையை அறிய உதவும் மனவியல் போன்றவற்றைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக காளை மற்றும் கரடி மனநிலைகளை அறிந்து கொள்வது எப்படி என்று கூட தனியாக ஒரு பதிவில் பார்த்தோம்.

இதற்கிடையே ஒரு "விளையும் பயிரை" (யெஸ் பேங்க்) எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பது பற்றியும் பார்த்தோம். மூன்று வருடங்களில் முதிரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க, நடப்பு காளை ஓட்டம் இந்த பயிரை மூன்று மாதத்திலேயே முதிர வைத்து விட்டது என்பதை நீங்கள் நேரடியாக அறிந்திருப்பீர்கள். யெஸ் பேங்க் போன்ற ஆரம்ப கால பங்குகளை (Growth Companies) எப்படி தேர்வு செய்வது என்பது பற்றியும் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரி நண்பர்களே! பங்குசந்தையை பற்றிய சற்று ஆழமான விரிவான கட்டுரைகளை படிக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த தொடர்பதிவுக்காக நானும் கூட பங்குசந்தையில் சில பரிசோதனைகளை செய்து பார்த்து இப்போது இந்த தொடர்பதிவின் அடுத்த நிலைக்கு செல்ல ஓரளவுக்கு தயாராகி உள்ளேன் என்று நம்புகிறேன்.

புதிய பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

Tuesday, November 17, 2009

யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!


முதல் தடவையாக, சர்தார்ஜி ஜோக்குகளை படிக்கும் போது, பஞ்சாபிகள் உண்மையிலேயே இவ்வளவு பெரிய முட்டாள்களா என்று எண்ணத் தோன்றி இருக்கின்றது. அதுவும், முரட்டுத்தனமான அதே சமயத்தில் மூடத்தனம் சற்றும் குறைவில்லாத பஞ்சாபிகள் சிலருடன் பழக நேர்ந்த போது, சர்தார்ஜி ஜோக்குகள் சரியாகத்தான் எழுதப் பட்டிருக்கின்றது என்று கூட தோன்றி இருக்கின்றது.

மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் பஞ்சாபிகள், பஞ்சாபி சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு வென்று இருக்கின்றார், பலர் மெத்த படித்து மிக உயரத்தில் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரிய வந்த போது சமூகங்களைப் பற்றிய ஒரு "மாயத்தோற்றம்" மனதிற்குள் ஆழமாக பதிந்து எப்படியெல்லாம் நமது "அறிவுப் பார்வையை" மறைக்கின்றது என்ற உண்மை புரிய வந்தது.

எதற்காக சர்தார்ஜிகளை பற்றிய ஒரு தமிழ் பதிவு என்று நினைக்கிறீர்களா?

சமீபத்தில் ஒரு சர்தார்ஜி தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் பெயர் "2 States: Story of My Marriage" அவர் பெயர் சேத்தன் பகத்.

பொதுவாக, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் படும் புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வாசகர்களை மட்டும் குறி வைத்து எழுதப் படுபவை என்று நான் கருதுவதால் இந்த புத்தகத்தை படிக்க விரும்ப வில்லை. அதே சமயம், ஒரு தமிழ் பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு சர்தார்ஜியின் கதை இது என்பதால், இந்த புத்தகம் குறித்து வெளிவந்த சில விமர்சனங்களையும், எழுத்தாளர் மற்றும் அவரது மனைவியும் அளித்த பேட்டியையும் படித்துப் பார்த்தேன். அப்படி படித்த போது இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் மனநிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

DNA பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் எல்லோரும் கருப்பர்கள் என்று எழுத்தாளர் கருதியதை ஆட்சேபித்த மனைவியிடம் ஒரு சிலர் மட்டும் கருப்பானவர்கள் இல்லை சமாதானப் படுத்தியதாகவும் சேத்தன் பகத் நக்கல் அடிக்கின்றார். தமிழர்கள் தனது குடும்பத்துடன் அணு ஒப்பந்தம் பற்றி பேசுவார்கள். ஆனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று தமிழர்களைப் பற்றி நன்கு அறிந்தவர் போல கூறுகிறார். நாட்டியத்தை நாட்டியமாக (சந்தோசமாக) ஆடத்தெரியாதவர்கள் தமிழர்கள் என்றும் கூறுகின்றார். (நம்மூர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் குத்தாட்டங்களை இவர் அறியாதவர் என்று நினைக்கின்றேன்) - நன்றி DNA.

கதையின் நாயகி சீமை சாராயம் அருந்துபவர், பலான விஷயங்களில் ரொம்ப "சூடானவர்". தமிழ் பெண்கள் ஆளை மயக்குபவர்கள், ஹேமமாலினி முதல் ஸ்ரீதேவி (?) வரை அனைத்து தமிழ் பெண்களும் ஒரே கதைதான், தமிழர்கள் லுங்கியுடன் (வேட்டி) பர்சேஸ் செய்கின்றனர் என்றெல்லாம் வர்ணனைகள் இந்த நாவலில் இடம் பெற்று இருக்கின்றவாம். "ஏன், தமிழர்களை இவ்வளவு வாரு வாரியிருக்கிரீர்கள்?" என்று கேட்ட போது, "பஞ்சாபிகளையும் கூட கிண்டல் அடித்திருக்கிறேன்" என்று தனது பாரபட்சமில்லாத நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியிருக்கிறார். (நன்றி: ஆனந்த விகடன்)

தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தை வைத்துக் கொண்டே தமிழர்களைப் பற்றிய இவ்வளவு "அரிய உண்மைகளை" கண்டு பிடித்திருக்கும் இவர், புத்தகத்தை தனது மாமனார் மாமியாருக்கு சமர்ப்பணம் செய்து உலக வரலாற்றில் ஒரு முத்திரை படைத்ததாகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.

இவரது பேட்டியை படிக்கும் போது, ஒரு தவறான புரிதலின் பேரில் வடிவேலுவின் மனைவியை (கோவை சரளா) சத்யராஜ் கேவலமாக வர்ணிக்க, "எங்களுக்குள் இதெல்லாம் சகஜம், அவன் குடும்பத்தை நானும் என் குடும்பத்தை அவனும் கேலி செய்வது எங்கள் பொழுது போக்கு" என்று வடிவேலு சமாளிக்கும் ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி மனதில் ஓடியது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து சமுதாயங்களும் தம்முடைய சமூகம்தான் (மொழி மற்றும் மதம்) உயர்ந்தது என்பதை அந்தந்த சமூகத்தினரின் மனதில் நிலை நிறுத்துவதற்காக மற்ற சமூகங்களைப் பற்றிய ஒரு இழிவான கருத்தினைத்தான் பதிய வைக்கின்றனர். வேறென்ன, எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான்.

மேலும் ஒவ்வொரு சமுதாயமும் தன்னை ஒரு ஆண் சமுதாயமாகவும் மற்ற சமுதாயங்களை பெண் சமுதாயங்களாகவும் கருதிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். இதனால்தானோ என்னவோ, ஹிந்தி படங்களில் தென்னிந்திய நடிகைகளும் தென்னிந்திய படங்களில் வட இந்திய நடிகைகளும் சக்கைப் போடு போடுகின்றனர். அதே சமயம் நடிகர்கள், அவர்கள் எவ்வளவு சிறந்த நடிகர்கள் என்றாலும் கூட, பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனதும் கவனிக்கத் தக்கது.

இந்த பதிவு குறிப்பிட்ட சர்தார்ஜியை கண்டிப்பதற்காக அல்ல. காமெடி என்ற பெயரில் வணிக நோக்குடன், தனது மனைவியின் குடும்பத்தை பற்றிய சொந்த கருத்துக்களை ஒரு சமுதாயத்தின் மீதான பார்வையாக திணிக்க முயற்சிக்கும் ஒரு நாவலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். தன்மீது சேறு வாரி பூசிக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் பபூன் முயற்சி போன்றே இந்த நாவல் எனக்கு தோன்றுகிறது. (அதே சமயத்தில் பல சமயங்களில் இது போன்ற "பபூன் முயற்சிகள்" வணிகரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. காரணம். அதே இரு கோடுகள் தத்துவம்தான்)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி சமையலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் பல கோடி பேர் அடங்கிய சமுதாயங்களை ஒரு சிலரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே அளவிட நினைப்பது, யானையின் வாலைப் பிடித்த குருடனின் கதையாகி விடும் என்று நினைக்கிறேன். அதே போல, தன்னுடைய நடத்தையில் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் கௌரவத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்றும் சமுதாயத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பது தன்னை உருவாக்கிய அந்த சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன் என்பதையும் ஒவ்வொரு தனி மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி.

Sunday, November 15, 2009

பங்குசந்தையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்!


இந்திய பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதிக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன.

இந்திய பங்கு சந்தைக்குள் நுழையக் கூடிய வெளிநாட்டின் பணத்தின் அளவு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டு காரணிகள் இப்போதைக்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் ஆகும்.

முதல் விஷயத்திற்கு வருவோம்.

இந்திய பங்கு சந்தைக்குள் அதிக வெளிநாட்டு பணம் வர வேண்டுமென்றால், உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலை குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சற்று அமைதியான சூழ்நிலையில்தான் இந்தியா போன்ற ஒரு "அதிக அபாயம் நிறைந்த பங்குச்சந்தையில்" முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வரும். ஒருவேளை உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால், டாலர் பணம் அமெரிக்காவிற்கே திரும்பி சென்று தஞ்சமடையும். உலக சந்தைகளின் ஏற்றத்தாழ்வு நிலை எவ்வளவு என்பதை CBOE Vix (Chicago Board Of Exchanges Volatility Indicator) இல் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம். அமெரிக்க சந்தையில் (தொடர்ச்சியாக) அதிக ஏற்றத்தாழ்வு நடக்கும் போதெல்லாம், நமது சந்தை பெரிய அளவு வீழ்ச்சி அடைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அடுத்த படியாக, டாலர் கரன்சியின் பலவீனம் ஆவது நமது நாட்டிற்கு அதிக வெளிநாட்டு பணம் உள்வர உதவும். அதாவது, அதிகம் உதவாத டாலர் கரன்சி பணத்தை முடிந்த வரை வெளியே தள்ளி விட்டு, மற்ற சொத்து வகைகளை வாங்கிக் குவிக்க உலக நாடுகள் பலவும் முனைகின்றன. அந்த வகையில் டாலர் பலவீனம் ஆனால் நமது பங்கு சந்தைக்கு அதிக பணம் வர வாய்ப்பு உண்டு என்று நம்பலாம். டாலர் நிலையை தெரிந்து கொள்ள Dollar Index அளவு எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளளலாம். இந்த டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

டாலர் பலவீனம் அடைவது, அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் "நோட்டு அச்சடிக்கும்" கொள்கை ஆகியவற்றை பொருத்தும் அமையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற வதந்தியின் அடிப்படையில் டாலர் சற்று வலுவடைந்ததை தொடர்ந்து நமது சென்செக்ஸ் குறியீடு இரண்டாயிரம் புள்ளிகள் வரை வீழ்ந்ததும், இன்னும் பல காலம் வரை வட்டி வீதங்கள் உயர்த்தபடாது என்று அமெரிக்க மத்திய வங்கி உறுதி அளித்த சில காலத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் பெருமளவுக்கு உயர்ந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஒரு பெரிய அளவு முன்னேற்றம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், பருவ மழை தவறியது இந்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்காது என்ற ஒருவித அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் அடுத்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்கும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் தொடர்ந்து கூறி வருவது சந்தையில் அவ்வப்போது எழுச்சியை ஏற்படுத்த உதவுகின்றது. மேலும் சிறப்பான இந்திய தொழிற்துறை முன்னேற்றம் (9.1%) மற்றும் மக்கள் உபயோக சாதனங்கள் (கார், பைக், டிவி போன்றவை) அதிகம் விற்பனை ஆவதும் சந்தையில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்கள் பங்குசந்தையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்சொன்ன இரண்டு காரணிகளை தொடர்ந்து கவனித்து வந்தால், நமது சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே அமைகின்றன.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

தொடரும் டாலர் பலவீனம் மற்றும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி வெளிவரும் நல்ல தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது சந்தை இன்னும் கூட மேலே உயர வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் நமது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சில சட்டத்திருத்தங்கள் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த துறை பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

அதே சமயத்தில், நிபிட்டி 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் 4950-5000 அளவுகளை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்கலாம். சென்ற பதிவில் கூறிய படி 4650 -4700 அளவுகளில் வாங்கியவர்கள், வாங்கிய பங்குகளில் ஒரு பகுதியை 5150-5200 அளவுகளில் விற்று விடலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி!
Blog Widget by LinkWithin