Sunday, November 29, 2009

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!


சென்ற வார "துபாய் உலகம்" விவகாரம் உலக சந்தைகளை நிலை குலைய செய்திருக்கிறது. இதன் பின்புலத்தைப் பற்றியும், இந்த விவகாரத்தினால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

துபாய் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எண்ணெய் வளம் குறைந்த இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வணிகத்தையே நம்பி உள்ளது. துபாயை ஒரு மிகப் பெரிய வணிக மற்றும் சுற்றுலா மையமாக்க விரும்பிய துபாய் அரசு "துபாய் உலகம்" என்ற ஒரு அரசு நிறுவனத்தின் வாயிலாக பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, சென்ற ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் துறையை வெகுவாக பாதிக்க, "துபாய் உலகம்" தான் கடனாக பெற்ற தொகையில் சுமார் 59 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் முதன்மை நாடான அபுதாபி ஓரளவுக்கு உதவிக் கரம் நீட்டினாலும், அந்த உதவி முழுமையானதாக அமைய வில்லை. எனவே, இந்த கடனை திருப்பி செலுத்த ஆறுமாத கால அதிக அவகாசம் அளிக்கும்படி துபாய் அரசு தற்போது கோரியுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், துபாய் அரசு நிறுவன கடன் பத்திரங்களை "டீபால்ட்" (Default) நிலைக்கு உலக தர நிர்ணய நிறுவனமான (Rating Agency) S&P தரம் தாழ்த்தியது.

பொருளாதார சிக்கலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் உலக நாடுகளுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் துபாயின் பங்கு மிகச் சிறியதே ஆனாலும், வளமான நாடாக கருதப் பட்ட துபாய் அரசு "டீபால்ட்" செய்திருப்பது, உலக பொருளாதார சிக்கல் இன்னும் நிறைவு பெற வில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை சொன்னபடி, "V " வடிவ பொருளாதார மீட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் பங்கு சந்தைகள் கடந்த எட்டுமாத காலத்தில் ஏராளமாக முன்னேறியுள்ளன. ஆனால் அடுத்தடுத்து வரும் பொருளாதார தகவல்கள் "V " வடிவ மீட்சி இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளன. வரப் போகிற பொருளாதார மீட்சி ஒன்று "U" வடிவமாக இருக்கும் அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்தது போல (Double Dip Recession) "W" வடிவாக இருக்கும் என்ற ஒருவித பயம் சந்தைகளை இப்போதைக்கு ஆட்டிப் படைக்கின்றது. அதே சமயம், அமெரிக்காவில் குறைந்த வட்டியில் பெருந்தொகையை கடனாக பெற்று, அந்நிய சந்தைகளில் முதலீடு செய்யும் "Dollar Carry திருடி" முறை, ஏராளமான புதிய "விரைவு பணத்தை" (Hot Money) உருவாக்கி, சந்தைகளை கீழே வரவிடாமல் தடுத்து வந்துள்ளது.

இந்த நிலையில் சென்ற வார "துபாய் விவகாரம்", சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல சாக்காக அமைந்துள்ளது. அதே சமயம், துபாய் விவகாரம் ஏற்கனவே சொன்னபடி உலக பொருளாதாரத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் (ஒருவித செண்டிமெண்ட் பாதிப்பை தவிர) ஏற்படுத்திவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை துபாய் விவகாரம் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இந்தியர்கள் பலரும் துபாயில் பணி புரிகின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு ஏராளமான "அந்நிய செலவாணியை" சம்பாதித்து தருகின்றனர். இந்திய கட்டுமான நிறுவனங்கள் (வோல்டாஸ், எல்&டி போன்றவை) பலவும் துபாயில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன. பேங்க் ஆப் பரோடா வங்கி துபாயில் பல கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார் எம்ஜிஎப், துபாய் அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. துபாய் இந்தியாவின் ஒரு முக்கிய வணிக கூட்டாளியாகவும் (Exports-Imports) இருந்து வருகிறது.

தற்போதைய சிக்கலில் இருந்து துபாய் முழுமையாக மீண்டாலும் கூட, இந்த "டீபால்ட்" விவகாரம் துபாயின் வருங்கால வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருக்கும் ஒரு முக்கிய நாடான துபாயின் வளர்ச்சிக்கு வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் வீச்சு இந்தியாவிலும் (குறைந்த அளவேயாயினும்) உணரப் படும் என்று கருதுகிறேன்.

இந்திய பங்கு சந்தைகளை பொறுத்த வரை கூட பெரிய பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவு என்றாலும், ஏற்கனவே சொன்னபடி, ஏற்கனவே ஏராளமாக உயர்ந்துள்ள சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு இந்த விவகாரம் நல்ல உதவியாக இருந்துள்ளது. கடந்த வியாழன்று, அதிக வர்த்தகத்துடன் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது (Fall with high trade volume), சந்தையின் கீழ்நோக்கிய பயணம் இன்னும் கூட தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயம், குறுகிய கால வர்த்தகர்களின் "விற்றபின் வாங்கும் போக்கினால் (Short Covering)" சந்தைகள் அவ்வப்போது மேலே உயரவும் வாய்ப்புள்ளது.

வர்த்தகர்கள் சந்தைகள் மேலே சென்றால் விற்பதற்கு (Shorting) ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையின் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களை (Fudamentally Strong Companies) ஓராண்டு நோக்குடன் மெல்ல மெல்ல சேகரிக்கலாம்.

நிபிட்டி 5050-5150 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். 4700-4800 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

14 comments:

Thomas Ruban said...

விரிவான விளக்கமான பதிவுக்கு நன்றி சார்.

//இந்தியாவை பொறுத்த வரை துபாய் விவகாரம் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இந்தியர்கள் பலரும் துபாயில் பணி புரிகின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு ஏராளமான "அந்நிய செலவாணியை" சம்பாதித்து தருகின்றனர்.//

தென் மாநிலத்தவரே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

நன்றி சார்.

வடுவூர் குமார் said...

நான் துபாயில் இருந்தது வெறும் 7 மாத காலம் தான் ஆனால் அங்கு கட்டப்பட்டு வரும் பல கட்டிடங்கள் மற்றும் வாங்கும் ஆட்களின் மனநிலயை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.
நாமெல்லாம் ஒரு வீடு வாங்கனும் என்றால் பலதரப்பட்ட வசதிகள் இருக்கும் இடத்தையே தேர்ந்தெடுப்போம் ஆனால் இங்கு வீடு வாங்குபவர்கள் அல்லது முதலீடு என்ற எண்ணத்தில் வீடு வாங்குபவர்கள் அதுவும் பல மைனஸ் பாயிண்ட்கள் உள்ள பாலைவன பிரதேசம் என்பதை அறியாமலா இருப்பார்கள்? அப்படியென்றால் வாங்குவதின் நோக்கம்??
அநியாய வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள்.1 வருட வாடகையை முன்பணமாகவோ காசோலையாகவோ கொடுக்கவேண்டிய கட்டாயம் இப்படி பல இப்போது அடி வாங்கிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
நமது அமைச்சர் “பாதிப்பில்லை” என்று சொல்கிறாரே!!

கக்கு - மாணிக்கம் said...

Every thing is a fake in Dubai.I have been living there since 1993 onwards.

பொதுஜனம் said...

எங்கேயோ அடி வாங்கினால் இங்கே கொஞ்சம் வலிக்கிறது. முதலீட்டளர்கள் எல்லோரும் லாபம் என்ற பலூனை ஊதி ஊதி பெரிதாக்க முயல அவ்வப்போது யாரோ எங்கேயோ குத்தி ஓட்டை போடுகிறார்கள். இருப்பினும் நம்பிக்கையோடு ஊதுவோம். (பாய்களை நம்பி துபாயில் முதலீடு செய்தவர்கள் முகவரிஇதோ.: நம்பர் அஞ்சு , விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோட், துபாய்.)

Maximum India said...

நன்றி மாணிக்கம்!

//Every thing is a fake in Dubai.I have been living there since 1993 onwards.//

அப்படியென்றால் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்ற தலைப்பு சரிதானா? :)

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//தென் மாநிலத்தவரே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.//

என்னைப் பொறுத்த வரை இந்தியாவிலேயே இப்போது ஏராளமான தொழிற் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, எங்கேயோ ஊர் பேர் தெரியாத இடத்தில் கஷ்டப் படுவதை விட, உலகமயமாகி விட்ட இந்த நவீன காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து கொண்டே பெரிய அளவில் உயர முடியும் என்றே நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி வடுவூர் குமார்!
//நான் துபாயில் இருந்தது வெறும் 7 மாத காலம் தான் ஆனால் அங்கு கட்டப்பட்டு வரும் பல கட்டிடங்கள் மற்றும் வாங்கும் ஆட்களின் மனநிலயை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.
நாமெல்லாம் ஒரு வீடு வாங்கனும் என்றால் பலதரப்பட்ட வசதிகள் இருக்கும் இடத்தையே தேர்ந்தெடுப்போம் ஆனால் இங்கு வீடு வாங்குபவர்கள் அல்லது முதலீடு என்ற எண்ணத்தில் வீடு வாங்குபவர்கள் அதுவும் பல மைனஸ் பாயிண்ட்கள் உள்ள பாலைவன பிரதேசம் என்பதை அறியாமலா இருப்பார்கள்? அப்படியென்றால் வாங்குவதின் நோக்கம்?? அநியாய வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள்.1 வருட வாடகையை முன்பணமாகவோ காசோலையாகவோ கொடுக்கவேண்டிய கட்டாயம் இப்படி பல இப்போது அடி வாங்கிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.//

துபாய் மட்டுமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகப் பெரிய பல்கலைகழகங்களில், பல பட்டங்கள் பெற்றவர்கள் கூட "ஆசைக்கு அடிமையாகும் போது", அறிவை அடகு வைத்து விடுகின்றனர். எனவேதான் இறுதியில் கஷ்டப் படுகின்றனர்.

//நமது அமைச்சர் “பாதிப்பில்லை” என்று சொல்கிறாரே!!//

நமது அமைச்சர் ஒரு அரசியல்வாதியும் கூட. இப்படியெல்லாம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கும். துபாய் போன்ற ஒரு நெருங்கிய வர்த்தக தொடர்புகள் இருக்கும் ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளின் தாக்கம் இந்தியாவிலும் உணரப் பட்டே ஆக வேண்டும். "இல்லவே இல்லை" என்று சொல்வது முழுபூசணிக்காயை கையளவு சோற்றில் மறைக்க முயற்சி செய்வது போலத்தான் என்று கருதுகிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//எங்கேயோ அடி வாங்கினால் இங்கே கொஞ்சம் வலிக்கிறது. //

நாங்களும் வலிக்காத மாதிரியே எத்தனை நாளுக்குத்தான் நடிக்கிறது?

//முதலீட்டளர்கள் எல்லோரும் லாபம் என்ற பலூனை ஊதி ஊதி பெரிதாக்க முயல அவ்வப்போது யாரோ எங்கேயோ குத்தி ஓட்டை போடுகிறார்கள். இருப்பினும் நம்பிக்கையோடு ஊதுவோம். //

ஓட்டை பலூனை ஊதி பெருசாக்க முடியும்னு நம்பிக்கையோட ஊதரவங்க இருக்கற வரைக்கும் ஊசி குத்தரவங்களும் இருந்துகிட்டேதான் இருப்பாய்ங்க!

// (பாய்களை நம்பி துபாயில் முதலீடு செய்தவர்கள் முகவரிஇதோ.: நம்பர் அஞ்சு , விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோட், துபாய்.)//

பாயா துன்னுட்டே ஹாயா வரோம் சீக்கிரமா!

நன்றி.

குறும்பன் said...

The Dubai government has said it will not guarantee the debt of Dubai World,......"[Creditors] think Dubai World is part of the government, which is not correct," said finance minister Abdulrahman al-Saleh.

Greece and Latvia are paying more for their debt, thanks to Dubai."

http://news.bbc.co.uk/2/hi/business/8385164.stm

துபாய் அரசு கை விரிச்சுருச்சு.... $60 மில்லியன் கொஞ்ச காசு இல்லை.

வால்பையன் said...

டாலர் ஒரு கரெக்‌ஷனை காட்டிட்டு ஏமாத்தி புட்டானே தல!

Maximum India said...

//டாலர் ஒரு கரெக்‌ஷனை காட்டிட்டு ஏமாத்தி புட்டானே தல!//

உண்மைதான் வால்! புலி வரும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க வந்தது எலி மட்டும்தான்!

நன்றி!

Maximum India said...

தகவலுக்கு நன்றி குறும்பன்!

//The Dubai government has said it will not guarantee the debt of Dubai World,......"[Creditors] think Dubai World is part of the government, which is not correct," said finance minister Abdulrahman al-Saleh.

Greece and Latvia are paying more for their debt, thanks to Dubai."

http://news.bbc.co.uk/2/hi/business/8385164.stm

துபாய் அரசு கை விரிச்சுருச்சு.... $60 மில்லியன் கொஞ்ச காசு இல்லை.//


இது துபாயின் நம்பகத்தன்மையை மேலும் குறைக்கும்.

நன்றி!

Naresh Kumar said...

பல நல்ல தகவல்கள்!!!

வாழ்த்துக்கள்.

Maximum India said...

நன்றி நரேஷ்!

Blog Widget by LinkWithin