Friday, February 26, 2010

மதமும் மனிதமும் - வாலுக்கு ஒரு கோரிக்கை!


அன்புள்ள வால்!

மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன்.

சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு "ஆளுமை விரும்பி" மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவனை வீரன் என்று கொண்டாடும் ஒரு சமூகம், உள்ளூரில் கொலை செய்தவனை கொலையாளி என்று சிறையில் போடுகின்றது. சமூகத்திற்கு கொலை முக்கியமல்ல, கொலை அதற்கு விருப்பமானதா அல்லது இல்லை என்பது மட்டும்தான். (நன்றி ஓஷோ).

ஒருவரை ஒருவர் ஆளுமைப் படுத்தாத சமதர்ம உலகம் வேண்டுவது உங்களின் (வாலின்) ஆசையாக இருந்தாலும், மதத்தினை நீக்குவதால் மட்டுமே வன்முறை பிரச்சினைகள் தீர்ந்து விடாது. சகோதரத்துவத்தை உலகில் வளர்ப்பதுதான் வன்முறைகளை ஒழிப்பதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

எனவே மதங்களை பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டு, மனிதத்தைப் போற்றுவது எப்படி என்று அதிகம் யோசிப்போம்.

"கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்" என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு?

நன்றி!

Wednesday, February 17, 2010

சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா?


இன்றைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் ஒரு நாடு சீனா. பொருளாதார தளர்ச்சியில் பல மேற்கத்திய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தனது அபரிமிதமான வளர்ச்சி வேகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் வேகமான வளர்ச்சியின் பலனை அடைய விரும்புவர்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவில் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வரவேற்கத் தக்க செய்திதானே?

இந்தியாவின் பெஞ்ச்மார்க் முயுச்சுவல் பன்ட் (Benchmark Mutual Fund) இப்போது "ஹாங்செங் பங்கு குறியீட்டு நிதியினை (Hang Seng Benchmark Exchange Traded Scheme) " அறிமுகப் படுத்துகின்றது. இந்த நிதியில் தொண்ணூறு சதவீதம் ஹாங் செங் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப் படும். மீதம் உள்ள பத்து சதவீதம் நிதி மற்ற முதலீடுகளுக்காக உபயோகிக்கப் படும். இந்த நிதியின் போக்கு கிட்டத்தட்ட ஹாங்செங் குறியீட்டின் போக்கினை சார்ந்தே இருக்கும். இந்த நிதியில் குறைந்த பட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூபாய் - பத்தாயிரம். கடந்த பெப்ரவரி 15 துவங்கிய இந்த புதிய பரஸ்பர நிதி பெப்ரவரி 24 வரை முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே சில பதிவுகளில் கூறியபடி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவை மிஞ்சும் நாள் தூரத்தில் இல்லை என்பதும் இந்திய தனியார் நிறுவனங்களின் வணிகம் மற்றும் மேலாண்மை திறன் சீனா நிறுவனங்களை விடவும் அதிகமாகவே இருந்து வருகின்றது என்பதையும் இங்கு மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். (இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சாது என்று பந்தயம் கட்டும் சில நண்பர்களுக்கு ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்தியா விஞ்சும் என்று கடைசியாக சொன்னது சீனாவை சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர்தான்.) எனவே இந்திய பங்குகளும் சிறப்பான வாய்ப்புக்களை தந்த வண்ணமே இருக்கின்றன.

அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியின் பயனை அடைய விரும்புபவர்களுக்கும், உலக பங்கு சந்தைகளில் தமது முதலீடுகளை விரிவு படுத்த விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

டிஸ்கி: பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதர டிஸ்கிகளுக்கு பரஸ்பர நிதியின் விண்ணப்பத்தினை கவனமாக படிக்கவும்.

Sunday, February 14, 2010

மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி?


உலக நாடுகளின் அரசாங்கங்களின் கணக்கில்லாமல் வாங்கி வரும் கடன் தொகை அளவுக்கு மீறி உயர்ந்து வருவதால் மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. குறிப்பாக EURO - PIGS என்று அழைக்கப் படும் போர்ச்சுக்கல், இத்தாலி & அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கடனில் தத்தளித்து வருகின்றன. சமீபத்திய உலக பொருளாதார வீழ்ச்சியினால், பெருமளவுக்கு சுற்றுலாத்தொழிலை (ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்றவை) நம்பியிருக்கும் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன. பொருளாதாரத்தை மீட்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவில் கடன் வாங்கின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாத இன்றைய சூழ்நிலையில், இந்த அரசாங்கங்களால் பெரிய வருமானம் பெற முடியவில்லை. எனவே, இன்னமும் கூட நிறைய கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த நாடுகளால் பழைய கடன்பாக்கியை ஒழுங்காக திருப்பி செலுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது சற்று நிம்மதியை வரவழைத்தாலும், தொடர்ந்து உதவி செய்யுமளவுக்கு ஐரோப்பிய யூனியன் அதிக வலுவில்லாமல் இருப்பது புதிய கவலைகளை வரவழைக்கின்றது. புள்ளியியல் மாயைகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய யூனியனின் ஒட்டு மொத்த வளர்ச்சி 0.1% அளவுக்கே இருப்பது உலகப் பொருளாதாரத்தில் "இது வரை முக்கிய பங்கு வகித்து வந்துள்ள முன்னேறிய ஐரோப்பிய நாடுகள்" இப்போதைக்கு தலை நிமிர்வது கடினம் என்ற சந்தேகத்தை வரவழைக்கின்றது. உலகின் பொருளாதார என்ஜினாக கருதப் படும் அமெரிக்காவின் தற்போதைய நிலையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, நமது மத்திய வங்கித் தலைவர், திரு.சுப்பாராவ் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் உலகம் மீண்டும் ஒரு பொருளாதார சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றனர்.

இந்த கவலைகள் காரணமாகவே, உலக பங்குசந்தைகள் கடந்த ஒரு மாதமாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குகளை விற்றுத் தீர்த்து வருகின்றனர். அதே சமயம் கடந்த வாரம், கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்ததும், ஒரு தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், சீனா தனது ரொக்க கையிருப்பு விகிதத்தை இரண்டாவது முறையாக உயர்த்துவதாக அறிவித்ததும் உலக பங்கு சந்தைகளின் உயர்வு மீண்டும் ஒரு முறை நின்று போனது.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தொழிற் உற்பத்தி உயர்ந்திருப்பது நல்ல செய்தி ஆகும். "புள்ளியியல் ஜாலங்கள்" இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்றாலும், இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல "உயர்வுப் பாதைக்கு" திரும்புவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அதே சமயம், பணவீக்கம் அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு, அரசு மற்றும் மத்திய வங்கியினை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்காக வருங்காலத்தில் வரி சலுகைகள் மற்றும் வட்டி வீத குறைப்பு ஆகியவை மெல்ல மெல்ல திரும்பப் பெறப் படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். புள்ளியியல் மாயைகளின் ஆதரவு குறையக் கூடிய நிலையில், பொருளாதார சலுகைகள் முழுமையாக திரும்பப் பெறப் படப் பட்டால் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருக்கும்.

பங்குசந்தையை பொறுத்தவரை, நல்ல செய்திகளும் கெட்ட செய்திகளும் சமமான அளவிலேயே இருக்கின்றன. ஒரு பெரிய வீழ்ச்சிக்கு பிறகு சென்ற வாரம் சற்று தணிந்துள்ள இந்திய பங்குசந்தை திரும்ப மேலெழ முயலும். ஆனால் அன்னிய முதலீட்டாளர்களின் உதவியினால் மட்டுமே இந்த முயற்சி வெற்றிகரமாகும் என்று நம்புகிறேன்.
உலக சந்தைகளின் போக்கினை பொறுத்தே நமது பங்குசந்தையின் போக்கும் அமைந்திருக்கும் வாய்ப்புள்ளது.


தொழிற்துறை உற்பத்தி உயர்வு நல்ல செய்தி என்றாலும், கூடவே வரக் கூடிய "சலுகைகள் திரும்பப் பெறுதல்" ஒரு கெட்ட செய்தியாகும். சென்ற வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் தமது "விற்றபின் வாங்கும் நிலையை" முடித்துக் கொண்டது, உடனடியாக ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவும்.

நிபிட்டி 4650-4700 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும். 4850-4900 அளவுகளில் வலுவான எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாகவே வரும் வாரமும் இருக்க வாய்ப்புள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Friday, February 12, 2010

மை நேம் இஸ் பிசினெஸ்கான்!


இந்திய திரையுலகைப் பொறுத்த வரை, "துறை-திறமைசாலிகளை" விட கலையை காசாக்கத் தெரிந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டார் என போற்றப் பட்டு வந்திருக்கின்றனர். தம்மை தாமே ஒரு வணிகப் பொருளாக்கிக் கொண்டு அதை திறம்பட வியாபாரம் செய்ய இவர்கள் காலத்துக்கேற்றாற்போல பலப் பல புதிய உத்திகளை கையாண்டு வந்திருக்கின்றனர்.

இந்த வகையில் கோலிவுட்டுக்கு ஒரு ரஜினிகாந்த் என்றால் பாலிவுட்டுக்கு ஒரு ஷாருக்கான்!

கர்நாடகத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் நுழைந்த ரஜினிகாந்த் சற்று பிரபலமானவுடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை தமிழ்-பால் குடித்தவன் என்று ஒருபக்கம் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்த அதே சமயத்தில் தனது பிறந்த மண்ணின் பாசத்தினையும் தவிர்க்க முடியாமல், கர்நாடகத்தில் திரைப்பட ஷூட்டிங் அமைப்பது, கன்னட நடிகர்களுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புக்களை பெற்றுத்தருவது, கர்நாடகத்தில் நிறைய முதலீடு செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து வந்துள்ளார்.

தமிழகத்தில் "கன்னடர்களை உதைப்போம்" என்பது போல முழக்கமிடுவது, பின்னர் கர்நாடகா சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தன படத்தை பெங்களூரில் வெளியிடுவது, திரைப்பட வசனங்களின் மூலம் தனது ரசிகர்களை அரசியல் கனவில் மிதக்க விடுவது, அதே சமயத்தில், உள்ளூர் அரசியல்வாதிகளிடம் இணக்கமாக பழகி "தான் அரசியலுக்கு தற்போதைக்கு வரப் போவதில்லை என்று அறிக்கை விடுவது என நிஜ வாழ்க்கையிலும் பல இரட்டை வேடங்களை அணிந்து வந்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் இந்த விஷயத்தில் சற்றும் சளைத்தவரல்ல. மற்ற "கான்" நடிகர்கள் போல் அல்லாமல், தேவையற்ற மத உணர்வுகளை சற்று அளவுக்கதிகமாகவே திரைப்படங்கள் மூலமாகவும் பேட்டிகள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர் ஷாருக். இவருடைய சமீபத்திய திரைப்படங்கள் பெரும்பாலும் இந்திய ராணுவத்தினரையும், சாதாரண இந்தியரையும் குறை சொல்வது போலவே அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. "அஷோகா" போன்ற திரைப்படங்கள் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் நல மன்னராக சாதாரண மக்கள் அறிந்திருந்த அசோகரை இழிவு படுத்தின. "சக் தே" போன்ற திரைப்படங்கள், அசாருதீன் போன்ற கிரிக்கெட் வீரர்களை கொண்டாடிய ஒரு நாட்டின் மதசார்பின்மையை கேள்விக்குறியாக்கின.

தற்போது பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் மற்ற அணிகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று குறை கூறும் இவரால் தன்னுடைய அணி ஏன் பாகிஸ்தான் வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு சரியான காரணங்களை கூற முடியவில்லை. தன் தந்தை பாகிஸ்தானில் பிறந்தவர் என்று வெளிப்படையாகவே சொன்னதுடன் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானையும் நேசிப்பதாக வேறு கூறியுள்ளார். இந்தியர்கள் பாகிஸ்தானியர்களை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். சிவசேனா தவிர வோட்டு வங்கி மற்றும் சினிமா செல்வாக்கு ஆகியவற்றை இழக்க விரும்பாத காங்கிரஸ் போன்ற போலி மதசார்பின்மை கட்சிகள் இவரது பேச்சை தட்டிக் கேட்க வில்லை. இது சுதந்திர நாடு,யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மொட்டை சாக்குகளுடன் விவாதத்தை முடித்துக் கொண்டனர். சார்புத்தன்மை மிகுந்த (சிவ சேனாவால் வேறுவகையில் பாதிக்கப் பட்டுள்ள) மீடியாக்களும் ஷாருக் தரப்பு வாதங்களை நியாயப் படுத்தவே முயற்சித்தன. ராஜஸ்தான் அணியில் விளையாடி பெருமளவு சம்பாதித்த ஒரு பாகிஸ்தான் வீரர் தன்நாட்டில் இந்தியாவை பற்றி இழிவாக அளித்த பேட்டி இந்திய மீடியாக்களால் அதிகம் கண்டுக்கொள்ளப் படவில்லை. பல தவறான செயல்பாடுகளின் மூலம் ஏற்கனவே தனது மக்கள் மத்தியில் தனது நம்பகத்தன்மையையும் இழந்து விட்ட சிவசேனாவின் கூக்குரல்களை மக்களும் பெரிதளவில் பொருட்படுத்த வில்லை.

ஆக மொத்தத்தில் எப்போதும் போல ஷாருக் படத்திற்கு செலவில்லாமலேயே நல்ல விளம்பரம். பயங்கரவாதத்தை பாலூற்றி வளர்த்து வரும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவை ஒரு மதவாத நாடாக சித்தரிக்க விரும்பும் சில மேலைநாட்டு மீடியாக்களுக்கும் மெல்ல வாய் நிறைய அவல். எது எப்படிப் போனால் என்ன, ஷாருக்கானுக்கு தன் படம் நன்றாக போனால் போதும்.

ஆனால் மொழி மற்றும் மத பாகுபாட்டு உணர்வுகள் இல்லாமல் திறமை இருக்கும் எவரையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய சமூகத்திற்கு?

நன்றி!

Sunday, February 7, 2010

இந்தமுறையும் கணிப்பு பலிக்குமா?


ஏற்கனவே பலமுறை இந்த பதிவுவலையில் குறிப்பிட்டிருந்தபடி, பங்குசந்தை வணிகர்கள் பொருளாதாரத்தினை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போலவே வர்த்தகம் செய்து வருகின்றனர். குறிப்பாக பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் "பொருளாதார கணிப்பில்" சிறப்பாக செயல்படுகின்றன. அவற்றின் "பல நாட்டு அனுபவம்" மற்றும் "சிறப்பான தொழிற்நுட்ப கட்டமைப்பு வசதி" இந்த விஷயத்தில் துணை நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும். பொதுவாகவே இந்திய உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறுமுதலீட்டாளர்கள் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளனர். நம் நாட்டினர் அவ்வப்போதுக்கான பொருளாதாரப் போக்கின்படியே அதிகம் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான உள்ளூர்காரர்கள் வருங்காலத்தை கணிப்பதில், நம்மூர் வானிலை நிபுணர்கள் போலவே பலமுறை கோட்டை விட்டிருக்கின்றனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதி வாக்கிலேயே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் 2008 ஆம் ஆண்டு முற்பகுதி முடியும்வரை இந்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் சிறப்பாகவே அமைந்திருந்தன. அப்போது பல இந்திய பங்குசந்தை நிபுணர்கள் இந்திய பொருளாதாரத்தின் வருங்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் 2008 ஆம் ஆண்டு இறுதி முதல் 2009 ஆம் ஆண்டு முற்பகுதி வரை இந்திய பொருளாதாரம் மிகுந்த தளர்ந்த நிலைக்கு மாறியது பலரையும் ஆச்சரியப் படுத்தியதுடன், இந்தியாவின் வருங்காலம் பற்றிய பல புதிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.

ஆனால், அப்போதைய பொருளாதார சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருந்த போது கூட, அந்நிய முதலீட்டாளர்கள் ஏப்ரல் 2009 முதல் இந்திய பங்குசந்தையில் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் நம்மில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்து வந்தன. குறிப்பாக நம்மூர் பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல ஆண்டுகள் மந்தநிலையிலேயே இருக்கும் என்று பல இந்திய பொருளாதார நிபுணர்கள் கருதி வந்தனர். அந்த ஆண்டின் மிகப் பெரிய ஆச்சரியமாக காங்கிரஸ் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பங்கு சந்தை மடமடவென்று உயர ஆரம்பித்தது. எப்போதும் போலவே பல இந்தியர்கள் பங்குசந்தையில் குறைந்த விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பை இழந்தனர்.

இன்றைய தேதியில் இந்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் மீண்டும் சிறப்பான நிலையை எட்டி உள்ளன. தொழிற் உற்பத்தி சாதனை அளவை எட்டி உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. இந்திய நிறுவனங்களின் லாப விகிதம் நன்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் குறிப்பாக அமெரிக்க பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தை நிபுணர்கள் பல பங்குகளை பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால், மீண்டும் ஒருமுறை நம்மை குழப்பும் விதமாக அந்நிய நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் தமது பங்குகளை அதிக அளவில் விற்று வருகின்றன. அவர்களது விற்பனைக்கு சில தொழிற்நுட்ப விவகாரங்களே காரணம் என்றும் தற்போதைய விலையில் பங்குகளை துணிந்து வாங்கலாம் என்று பல பங்கு சந்தை நிபுணர்கள் கூறினாலும், எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை இன்னும் ஆறுமாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை உலகம் குறிப்பாக இந்தியா சந்திக்குமா என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளின் கடன் விவகாரங்கள் மற்றும் அமெரிக்காவின் அதிகப் படியான அரசு செலவினங்கள் உலகப் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்ச காலத்திற்கு மந்த நிலையிலேயே வைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. இந்தியா ஒரு தனிக்கதை என்று பல இந்திய நிபுணர்கள் சொன்னாலும் உலகப் பொருளாதார சுழல்களிலிருந்து இந்தியா முழுமையாக விடுபட முடியாது என்றே தோன்றுகிறது. ஒருவேளை இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை தவறிப்போனால், உலக பொருளாதாரத்தை விட நமது பொருளாதாரம் மிகவும் பின்தங்கிப் போய்விடவும் கூடும். சரித்திரத்தில் இல்லாத அளவாக இருக்கும் பணவீக்க விகிதமும் நம்மை பெரிய அளவில் பாதிக்கக் கூடும்.

இவையெல்லாம் பங்கு சந்தை நிபுணர்களின் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் இப்போதைக்கான கணிப்புத்தான். ஏற்கனவே ஒருமுறை சொன்னது போல மணியடித்த பிறகு யானையும் வரலாம் அல்லது பூனையும் வரலாம்.

நமது வாசகர்களைப் பொறுத்த வரை சந்தையின் வீழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன். இது வரை அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்கள் தற்போது ஓரளவுக்கு முதலீடு செய்யலாம். ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

வருமான வரியை தவிர்க்க விரும்புவர்கள் சிறப்பாக செயல்படும் HDFC Tax Saver Fund அல்லது Fidility Tax Advantage Fund போன்ற பரஸ்பர நிதிகளில், சரிவுகளின் போது முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்தால் மூன்றாண்டுகள் வரை முதலீட்டை திரும்பிப் பெறமுடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை ( :) ) என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 4680-4730 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அந்நிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்து ஒரு குறுகிய கால முன்னேற்றத்தையும் காண வாய்ப்புள்ளது. கனிமங்கள் போன்று அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட பங்குகள் வேகமாக முன்னேறவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்டாப் லாஸ் லிமிட்டை மறக்காமல் இருப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது.

வரும் வாரம் மிகவும் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நன்றி.

இதுவும் போலிதான்!


இந்தியாவில் மற்ற பலவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது.

தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.

சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?

காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரிவினைவாதங்களின் ஆரம்பக்கட்டங்களில், வலுவான உள்ளூர் அரசியல் கட்சியை ஒடுக்குவதற்காக பிரிவினைவாதிகளை வளரவிட்டதும், சமீபத்திய தெலுங்கானா பிரச்சினையில் இரண்டு பக்கமும் தலையையும் வாலையும் காட்டியதும் பெரிய தேசிய கட்சிகள்தான் என்பதையும் யாரும் மறக்க முடியாது.

நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் வெளிப்படையாக தெரிந்து விட்டால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமான காரியம்.

நன்றி.

பின்குறிப்பு

இந்த பதிவை எழுத தூண்டுகோலாக அமைந்தவை

தேன்கூடு

திருச்சிக்காரன்
Blog Widget by LinkWithin