Sunday, February 14, 2010

மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி?


உலக நாடுகளின் அரசாங்கங்களின் கணக்கில்லாமல் வாங்கி வரும் கடன் தொகை அளவுக்கு மீறி உயர்ந்து வருவதால் மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. குறிப்பாக EURO - PIGS என்று அழைக்கப் படும் போர்ச்சுக்கல், இத்தாலி & அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கடனில் தத்தளித்து வருகின்றன. சமீபத்திய உலக பொருளாதார வீழ்ச்சியினால், பெருமளவுக்கு சுற்றுலாத்தொழிலை (ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்றவை) நம்பியிருக்கும் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன. பொருளாதாரத்தை மீட்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவில் கடன் வாங்கின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாத இன்றைய சூழ்நிலையில், இந்த அரசாங்கங்களால் பெரிய வருமானம் பெற முடியவில்லை. எனவே, இன்னமும் கூட நிறைய கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த நாடுகளால் பழைய கடன்பாக்கியை ஒழுங்காக திருப்பி செலுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது சற்று நிம்மதியை வரவழைத்தாலும், தொடர்ந்து உதவி செய்யுமளவுக்கு ஐரோப்பிய யூனியன் அதிக வலுவில்லாமல் இருப்பது புதிய கவலைகளை வரவழைக்கின்றது. புள்ளியியல் மாயைகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய யூனியனின் ஒட்டு மொத்த வளர்ச்சி 0.1% அளவுக்கே இருப்பது உலகப் பொருளாதாரத்தில் "இது வரை முக்கிய பங்கு வகித்து வந்துள்ள முன்னேறிய ஐரோப்பிய நாடுகள்" இப்போதைக்கு தலை நிமிர்வது கடினம் என்ற சந்தேகத்தை வரவழைக்கின்றது. உலகின் பொருளாதார என்ஜினாக கருதப் படும் அமெரிக்காவின் தற்போதைய நிலையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, நமது மத்திய வங்கித் தலைவர், திரு.சுப்பாராவ் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் உலகம் மீண்டும் ஒரு பொருளாதார சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றனர்.

இந்த கவலைகள் காரணமாகவே, உலக பங்குசந்தைகள் கடந்த ஒரு மாதமாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குகளை விற்றுத் தீர்த்து வருகின்றனர். அதே சமயம் கடந்த வாரம், கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்ததும், ஒரு தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், சீனா தனது ரொக்க கையிருப்பு விகிதத்தை இரண்டாவது முறையாக உயர்த்துவதாக அறிவித்ததும் உலக பங்கு சந்தைகளின் உயர்வு மீண்டும் ஒரு முறை நின்று போனது.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தொழிற் உற்பத்தி உயர்ந்திருப்பது நல்ல செய்தி ஆகும். "புள்ளியியல் ஜாலங்கள்" இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்றாலும், இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல "உயர்வுப் பாதைக்கு" திரும்புவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அதே சமயம், பணவீக்கம் அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு, அரசு மற்றும் மத்திய வங்கியினை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்காக வருங்காலத்தில் வரி சலுகைகள் மற்றும் வட்டி வீத குறைப்பு ஆகியவை மெல்ல மெல்ல திரும்பப் பெறப் படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். புள்ளியியல் மாயைகளின் ஆதரவு குறையக் கூடிய நிலையில், பொருளாதார சலுகைகள் முழுமையாக திரும்பப் பெறப் படப் பட்டால் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருக்கும்.

பங்குசந்தையை பொறுத்தவரை, நல்ல செய்திகளும் கெட்ட செய்திகளும் சமமான அளவிலேயே இருக்கின்றன. ஒரு பெரிய வீழ்ச்சிக்கு பிறகு சென்ற வாரம் சற்று தணிந்துள்ள இந்திய பங்குசந்தை திரும்ப மேலெழ முயலும். ஆனால் அன்னிய முதலீட்டாளர்களின் உதவியினால் மட்டுமே இந்த முயற்சி வெற்றிகரமாகும் என்று நம்புகிறேன்.
உலக சந்தைகளின் போக்கினை பொறுத்தே நமது பங்குசந்தையின் போக்கும் அமைந்திருக்கும் வாய்ப்புள்ளது.


தொழிற்துறை உற்பத்தி உயர்வு நல்ல செய்தி என்றாலும், கூடவே வரக் கூடிய "சலுகைகள் திரும்பப் பெறுதல்" ஒரு கெட்ட செய்தியாகும். சென்ற வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் தமது "விற்றபின் வாங்கும் நிலையை" முடித்துக் கொண்டது, உடனடியாக ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவும்.

நிபிட்டி 4650-4700 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும். 4850-4900 அளவுகளில் வலுவான எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாகவே வரும் வாரமும் இருக்க வாய்ப்புள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

4 comments:

Thomas Ruban said...

வரும் நாட்கள்களில் நமது சந்தைகளின் போக்கினை தீர்மானிப்பதில் முன்னிலை வகிப்பது எது சார்? சந்தை பட்ஜெட் காலகட்டத்துடன் ஓட போகின்றனவ அல்லது, சர்வதேச சந்தைகளின் தாக்கமே நமது சந்தைகளின் போக்கினை தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்குமா?

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

//வரும் நாட்கள்களில் நமது சந்தைகளின் போக்கினை தீர்மானிப்பதில் முன்னிலை வகிப்பது எது சார்? சந்தை பட்ஜெட் காலகட்டத்துடன் ஓட போகின்றனவ அல்லது, சர்வதேச சந்தைகளின் தாக்கமே நமது சந்தைகளின் போக்கினை தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்குமா?//

பதிவிலேயே சொன்னபடி, இந்திய பொருளாதாரம் தனது மீட்சி பாதையில் சிறப்பாக பயணித்து வருவதால், வருகிற பட்ஜெட்டில் வரிசலூகைகளை அரசாங்கம் திரும்ப பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இந்த விஷயம் சந்தைக்கும் தெரியும். எனவே எந்த அளவுக்கு வரிசலூகைகள் குறைக்கப் படும் என்பதே சந்தையின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

அதே சமயத்தில், உலக சந்தைகளின் தாக்கம் இந்திய சந்தையில் எப்போதும் போல வலுவானதாகவே இருக்கும். இந்தியா தனிக்கதை என்று சில பங்கு நிபுணர்கள் கூறினாலும், சரித்திரம் வேறு மாதிரியாகத்தான் சொல்கிறேன். சுருங்கிப் போய்விட்ட இன்றைய உலகப்பொருளாதார சூழ்நிலையில் இந்தியா மட்டும் தனிப்பாட்டையில் நடை பழக முடியாது.

நன்றி!

குறும்பன் said...

ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் கடன் எல்லை மீறும் போது உலகப்பொருளாதாரம் நிலைகுலைய வாய்ப்புகள் அதிகம். இவை இரண்டும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலை விட பெரிய நாடுகள் என்பதும் காரணம். இவை இரண்டையும் ஐரோப்பிய வங்கி உதவி தூக்கி நிறுத்துவது கடினம். எப்ப எது வெடிக்கும் என்று தெரியாமல் எல்லோரும் திண்டாடுறாங்க. அச்சமயத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்பு அதிகம்.

Maximum India said...

// ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் கடன் எல்லை மீறும் போது உலகப்பொருளாதாரம் நிலைகுலைய வாய்ப்புகள் அதிகம். இவை இரண்டும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலை விட பெரிய நாடுகள் என்பதும் காரணம். இவை இரண்டையும் ஐரோப்பிய வங்கி உதவி தூக்கி நிறுத்துவது கடினம். எப்ப எது வெடிக்கும் என்று தெரியாமல் எல்லோரும் திண்டாடுறாங்க//

உண்மைதான் குறும்பன்! அனைவரின் கவனமும் அமெரிக்காவிலேயே இருந்தது. ஆனால் அதிகம் பாதிக்கப் பட்டது ஐரோப்பா போலத்தான் தெரிகிறது.

நன்றி!

Blog Widget by LinkWithin