Saturday, November 3, 2012

கடன். கவனம் தேவை!


இது கலியுகம் இல்லை. ஒரு கடன் யுகம். சாமான்யன் முதல் சகல வசதி கொண்டவர் வரை கடனாக வாங்கித் தள்ளி கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் கூட இன்று கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான அரசாங்கங்கள் (இந்தியா உட்பட) புதிது புதிதாக கடன் வாங்கித்தான் வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கடன் படுத்தும் பாடு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். அதன் இணைப்பு கீழே!

http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html

இந்த கலியுகம் மன்னிக்கவும் கடன் யுகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எம்பெருமான்தான் இன்னுமொருமுறை அவதாரம் எடுக்க வேண்டும்.

நன்றி!

Tuesday, April 24, 2012

வேண்டாமே ஹீரோயிசம்!






சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம்.



ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்?



இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தைய விடுதலைகள் போலில்லாமல், இந்த முறையாவது, பாதுகாப்பு குறைவுக்கு யார் காரணம் என்பதை முறையாக விசாரித்து, ஒரு வேளை ஆட்சியரே பொறுப்பாக இருந்தால், அரசின் நஷ்டத்திற்கு அவரை பொறுப்பாக்கி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அந்த நடவடிக்கை வருங்காலத்தில் பொறுப்பற்ற இதர அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



நன்றி!

Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Thursday, December 15, 2011

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!


எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன்.

அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.

இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.

இவர்களும் இந்தியர்கள்தானே?

இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?

நன்றி!

Sunday, August 7, 2011

டாலர் செல்லா காசாகுமா?


நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது.

நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின.

சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு மாற்றாக, பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்னும் அதிக கடனை வாங்கின. குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அளவு, பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், நான்கு மடங்காக உயர்ந்ததுள்ளது.

கடனை திருப்புவதிலான அமெரிக்க அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இப்போது பெருமளவு சரிந்திருப்பதற்கான அடையாளமாக, உலக தர நிர்ணய நிறுவனம், அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களின் மீதான தர வரிசையை குறைத்துள்ளது. இதன் தாக்கம் ஏற்கனவே உலக சந்தைகளில் கடந்த வாரம் எதிரொலித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கிக் குவித்துள்ள உலக வங்கிகளும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த தர இழப்பால் அதிக அளவில் பாதிக்கப் படும் வாய்ப்புக்கள் உள்ளன.

பொருளாதார மீட்சி என்பது பொய்யாகிப் போய், ஒரு இரட்டை பொருளாதார வீழ்ச்சியாக உருப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக பல பொருளாதார வல்லுனர்களும் கருதும் இன்றைய சூழ்நிலையில், அமெரிக்கா இந்த கடன் இக்கட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர போகிறது என்பதைப் பொறுத்தே டாலரின் வருங்காலம் அமையும்.



வரும் வாரம் மிகவும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!
Blog Widget by LinkWithin