Monday, April 26, 2010

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:


வணிகமயமாகி விட்ட இன்றைய சமூக பொருளாதார சூழலில் நாம் மதிக்க தவறிய, மறந்து போனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பழங்குடி மக்கள். மேலும் பல விஷயங்களைப் போலவே ஊடக மயக்கம் இங்கும் உண்டு. பழங்குடி மக்கள் என்றாலே நாகரிகமற்றவர்கள் (சில சமயங்களில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) காட்டு மிராண்டிகள், மூட நம்பிக்கையில் முழுகிப் போனவர்கள் என்ற ஒருவித மூட நம்பிக்கையை நம் மீது திணித்திருப்பது சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள். உண்மையில் அவர்கள் உலக சமநிலைக்கு அவசியமானவர்கள், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்பவர்கள் என்பதெல்லாம் மறக்கடிப்பட்டு, அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் முயற்சி தீவிரமாக இப்போது நடைப் பெற்று வருகின்றது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் பலவகையில் உடந்தையாக உள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் நாமும் கூட ஒருவகையில் இவர்கள் படும் இன்னல்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறோம்.

மரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே.

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;

செய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)

தண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.

கிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.

பழங்குடியினருக்கும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :
வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர் பழங்குடியினரிடையே S T 47 %

தலித்துளில் S C 37 %

பிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%

மற்றவர் 16%


தலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்றுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)

இது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.

கிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.


ஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.

அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை;! ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).

தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா? அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.

இந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.

ஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).

பழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;

நன்றி!

Sunday, April 25, 2010

அடங்காத காளையும் விடாத கரடியும்!


கோல்ட்மென் சாக்ஸ் மோசடி விவகாரம் இந்திய பங்கு சந்தையில் இன்னொரு பெரிய சரிவை துவக்கி வைக்கும் என்று கரடிகள் ஆவலுடன் காத்திருக்கையில், மத்திய வங்கியின் வருடாந்திர நிதி அறிக்கை காளைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. விண்ணை முட்டும் விலைவாசிகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், கடனாளிகளுக்கு (குறிப்பாக மத்திய அரசாங்கம்) கடன் தங்கு தடையில்லாமல் கிடைக்கப் வழி வகுப்பதுவும் மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகவே அறிவிக்கப் பட்டு விட, கடன்களுக்கு வட்டி வீதம் இப்போதைக்கு (பெருமளவுக்கு) உயராது என்ற நம்பிக்கை சந்தையில் உருவாகியுள்ளது. மேலும் வங்கிகள் வாராக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்கான காலக் கெடுவை நீட்டிக்கப் போவதாக மத்திய வங்கி அறிவிக்க காளைகளின் கை மேலும் ஓங்கியது. வாராக்கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை குறைவாக செய்துள்ள பல வங்கிகளின் பங்குகள் சென்ற வாரம் வெகுவாக உயர்ந்தன. நலிவடைந்துள்ள சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் மத்திய அரசு முதலீடு செய்வதாக அறிவித்ததும் வங்கித்துறை பங்குகள் உயர உதவின. வட்டி வீதம் வேகமாக உயராது என்ற நம்பிக்கை வாகன உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளையும் கூட நன்கு உயர்த்தியது. சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் இந்த முறை வெகுவாக உயரும் என்ற வதந்தியும் சந்தை உயர உதவியாக இருந்தது.

கிரீஸ் நாட்டின் நிதி நிலை முன்னர் எதிர்பார்த்ததை விட மோசமாகவே இருக்கின்றது என்ற தகவலும் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை ஆபத்தான வளர்ச்சியை கண்டிருப்பதால் அந்த நாட்டின் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற ஊகமும் இந்திய பங்கு சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. (ஆறின கஞ்சி பழங்கஞ்சி?). அதே சமயம் மற்ற சந்தைகளை விட நமது சந்தை பலமுறை லேட்டாகவே ரியாக்ஷன் செய்திருக்கிறது என்பதையும் அந்த ரியாக்ஷன் ஓவர் ரியாக்ஷனாக இருந்திருக்கிறது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. (லேட்டானாலும் லேட்டஸ்ட்?).

சென்ற வாரம் சந்தை வெளிவந்த ரிலையன்ஸ் காலாண்டு நிதியறிக்கை எதிர்பார்த்ததை விட மோசமாகவே அமைந்துள்ளது வரும் வார துவக்கத்தில் காளைகளுக்கு சற்று தளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் "BULLS DIE HARD" என்ற சந்தை மொழிக்கேற்ப அவர்கள் முட்டி மோதி முன்னேறவே எத்தனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வரும் வருடத்திற்கான மழை அளவு நீண்ட கால சராசரியை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காளைகள் முயற்சிப்பார்கள். பொதுவாகவே இந்திய வானிலை அறிக்கைகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்பதையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் போலவே நம்பகத்தன்மை அற்றவை என்பதையும் இங்கே மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

கிரீஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிதிநிலை கரடிகளுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கக் கூடும். ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தாலும், அந்த உதவி போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான். குறிப்பாக அடுத்த மாதத்தில் முடிவடையும் கடனை கிரீஸ் நாட்டு அரசினால் குறித்த நேரத்தில் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகமும் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.

ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மாதாந்திர வருங்கால வர்த்தக நிறைவு அதிகப் படியான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.

ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Sunday, April 4, 2010

மீண்டும் ஒரு யேன்-பண-மாற்றும் (Yen Carry Trade) சுனாமி?


தொடர்ந்து எட்டாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் பங்குகளில் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத போதும் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் ஏராளமாக முன்னேறியுள்ளன. தொடர்ந்த அந்நிய பணவரவு, இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீதான புதிய நம்பிக்கைகள், உலக சந்தைகளின் சாதகமான சூழ்நிலை ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், சமீபத்தில் ஜப்பானிய யேன் நாணயத்தில் நிலவி வரும் மாறுதல்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறைந்த வட்டியில் கிடைக்கும் ஜப்பானிய நாணயத்தை மற்ற சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு, 2006 -07 ஆம் ஆண்டிற்கு மீண்டும் துவங்கியுள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இத்தகைய குறைந்த வட்டி பண வரவு துவக்கத்தில் பங்குசந்தைகள் வேகமாக முன்னேற உதவினாலும், இறுதி நேர திடீர் பண-திருப்புதல்கள் பங்குசந்தையின் மோசமாக பாதித்து விட வாய்ப்புள்ளது.

இந்திய பெரிய பங்குகளின் குறியீடான நிபிட்டி தனது முக்கிய எதிர்ப்பு நிலையான 5300 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வேலை இழப்புகள் குறைந்து வருவதாக கடந்த வெள்ளியன்று (இங்கு விடுமுறை) வெளிவந்த செய்தியின் துணையோடு இந்த எதிர்ப்பு நிலை முறியடிக்கப் பட நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அப்படி முறியடிக்கப் படும் பட்சத்தில், நிபிட்டி தனது அடுத்த குறிக்கோளான 5400 என்ற அளவை நோக்கி முன்னேற வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், நண்பர்கள் தமது வாங்கும் நிலையை (விற்று) முடித்துக் கொள்ளலாம். புதிய வாங்கும் நிலைகளை தவிர்ப்பது நல்லது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகளை பற்றிய யூகங்களை எடுத்த எடுப்பில் நம்பி விட வேண்டாம். ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.

மேலும் அடுத்த வாரத்தில் இருந்து வெளிவரும் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளின் அடிப்படையில் புதிய வாங்கும் நிலைகளை எடுக்கலாம். கிரீஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவி வரும் "அரசு கடன் நிலை", சீனா அதிபரின் அமெரிக்க பயணத்தில் எடுக்கப் படும் முடிவுகள், உலக சந்தையில் "யேன்" நாணயத்தின் போக்கு ஆகியவையும் நமது பங்கு சந்தையை பாதிக்கும்.

ஏற்கனவே சொன்னபடி இது லாப-விற்பனைக்கான நேரம். முதலீடு செய்திருக்கும் பங்குகள் நல்ல லாபத்தை தரும் பட்சத்தில் விற்று விடலாம். அதே போல ஒரு பங்கினை (நிறுவனத்தைப்) பற்றி தெளிவாக தெரியாமல் புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Blog Widget by LinkWithin