கோல்ட்மென் சாக்ஸ் மோசடி விவகாரம் இந்திய பங்கு சந்தையில் இன்னொரு பெரிய சரிவை துவக்கி வைக்கும் என்று கரடிகள் ஆவலுடன் காத்திருக்கையில், மத்திய வங்கியின் வருடாந்திர நிதி அறிக்கை காளைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. விண்ணை முட்டும் விலைவாசிகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், கடனாளிகளுக்கு (குறிப்பாக மத்திய அரசாங்கம்) கடன் தங்கு தடையில்லாமல் கிடைக்கப் வழி வகுப்பதுவும் மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகவே அறிவிக்கப் பட்டு விட, கடன்களுக்கு வட்டி வீதம் இப்போதைக்கு (பெருமளவுக்கு) உயராது என்ற நம்பிக்கை சந்தையில் உருவாகியுள்ளது. மேலும் வங்கிகள் வாராக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்கான காலக் கெடுவை நீட்டிக்கப் போவதாக மத்திய வங்கி அறிவிக்க காளைகளின் கை மேலும் ஓங்கியது. வாராக்கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை குறைவாக செய்துள்ள பல வங்கிகளின் பங்குகள் சென்ற வாரம் வெகுவாக உயர்ந்தன. நலிவடைந்துள்ள சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் மத்திய அரசு முதலீடு செய்வதாக அறிவித்ததும் வங்கித்துறை பங்குகள் உயர உதவின. வட்டி வீதம் வேகமாக உயராது என்ற நம்பிக்கை வாகன உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளையும் கூட நன்கு உயர்த்தியது. சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் இந்த முறை வெகுவாக உயரும் என்ற வதந்தியும் சந்தை உயர உதவியாக இருந்தது.கிரீஸ் நாட்டின் நிதி நிலை முன்னர் எதிர்பார்த்ததை விட மோசமாகவே இருக்கின்றது என்ற தகவலும் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை ஆபத்தான வளர்ச்சியை கண்டிருப்பதால் அந்த நாட்டின் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற ஊகமும் இந்திய பங்கு சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. (ஆறின கஞ்சி பழங்கஞ்சி?). அதே சமயம் மற்ற சந்தைகளை விட நமது சந்தை பலமுறை லேட்டாகவே ரியாக்ஷன் செய்திருக்கிறது என்பதையும் அந்த ரியாக்ஷன் ஓவர் ரியாக்ஷனாக இருந்திருக்கிறது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. (லேட்டானாலும் லேட்டஸ்ட்?).
சென்ற வாரம் சந்தை வெளிவந்த ரிலையன்ஸ் காலாண்டு நிதியறிக்கை எதிர்பார்த்ததை விட மோசமாகவே அமைந்துள்ளது வரும் வார துவக்கத்தில் காளைகளுக்கு சற்று தளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் "BULLS DIE HARD" என்ற சந்தை மொழிக்கேற்ப அவர்கள் முட்டி மோதி முன்னேறவே எத்தனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வரும் வருடத்திற்கான மழை அளவு நீண்ட கால சராசரியை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காளைகள் முயற்சிப்பார்கள். பொதுவாகவே இந்திய வானிலை அறிக்கைகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்பதையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் போலவே நம்பகத்தன்மை அற்றவை என்பதையும் இங்கே மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
கிரீஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிதிநிலை கரடிகளுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கக் கூடும். ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தாலும், அந்த உதவி போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான். குறிப்பாக அடுத்த மாதத்தில் முடிவடையும் கடனை கிரீஸ் நாட்டு அரசினால் குறித்த நேரத்தில் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகமும் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.
ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மாதாந்திர வருங்கால வர்த்தக நிறைவு அதிகப் படியான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.
ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Comments
பங்குசந்தைகள் சரியவில்லை கரணம் நம்இந்திய அரசாங்கம் பங்குசந்தைக்கு கொடுக்கும் ஆதரவு (சாதகமான புள்ளி விவரங்கள்) FII முதலீடும் மிகவும் அதிகரித்துயுள்ளது.
//ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.//
உண்மைதான் சார், பதிவுக்கு நன்றி சார்.
//கடந்த வாரத்தில் பெரும்பாலான உலக பங்குசந்தைகள் சரிந்தாலும் நம் இந்திய
பங்குசந்தைகள் சரியவில்லை கரணம் நம்இந்திய அரசாங்கம் பங்குசந்தைக்கு கொடுக்கும் ஆதரவு (சாதகமான புள்ளி விவரங்கள்) FII முதலீடும் மிகவும் அதிகரித்துயுள்ளது.//
உண்மைதான். முக்கியமாக அரசு தரப்பில் வெளியிடப் பட்ட மாதாந்திர பணவீக்க அளவு துளிக் கூட நம்பும் படி அமையவில்லை. அந்நிய பண முதலீடுகள் கூட எங்கிருந்து வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் விவகாரத்தை பார்க்கும் போது, நம்பர் டூ பணம் இவ்வகையிலும் வருகின்றதா என்று சந்தேகம் கூட எழுகின்றது.
அதேசமயம் பதிவிலேயே சொன்னபடி, சற்று தாமதமானாலும் சரியும் போது எல்லாவற்றுக்கும் கூட்டு வட்டி போட்டுக் கொண்டு நமது சந்தை உலக சந்தைகளை விட அதிகமாக சரியும் என்று நினைக்கிறேன்.
நன்றி!