இந்திய திரையுலகைப் பொறுத்த வரை, "துறை-திறமைசாலிகளை" விட கலையை காசாக்கத் தெரிந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டார் என போற்றப் பட்டு வந்திருக்கின்றனர். தம்மை தாமே ஒரு வணிகப் பொருளாக்கிக் கொண்டு அதை திறம்பட வியாபாரம் செய்ய இவர்கள் காலத்துக்கேற்றாற்போல பலப் பல புதிய உத்திகளை கையாண்டு வந்திருக்கின்றனர்.
இந்த வகையில் கோலிவுட்டுக்கு ஒரு ரஜினிகாந்த் என்றால் பாலிவுட்டுக்கு ஒரு ஷாருக்கான்!
கர்நாடகத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் நுழைந்த ரஜினிகாந்த் சற்று பிரபலமானவுடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை தமிழ்-பால் குடித்தவன் என்று ஒருபக்கம் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்த அதே சமயத்தில் தனது பிறந்த மண்ணின் பாசத்தினையும் தவிர்க்க முடியாமல், கர்நாடகத்தில் திரைப்பட ஷூட்டிங் அமைப்பது, கன்னட நடிகர்களுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புக்களை பெற்றுத்தருவது, கர்நாடகத்தில் நிறைய முதலீடு செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து வந்துள்ளார்.
தமிழகத்தில் "கன்னடர்களை உதைப்போம்" என்பது போல முழக்கமிடுவது, பின்னர் கர்நாடகா சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தன படத்தை பெங்களூரில் வெளியிடுவது, திரைப்பட வசனங்களின் மூலம் தனது ரசிகர்களை அரசியல் கனவில் மிதக்க விடுவது, அதே சமயத்தில், உள்ளூர் அரசியல்வாதிகளிடம் இணக்கமாக பழகி "தான் அரசியலுக்கு தற்போதைக்கு வரப் போவதில்லை என்று அறிக்கை விடுவது என நிஜ வாழ்க்கையிலும் பல இரட்டை வேடங்களை அணிந்து வந்துள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் இந்த விஷயத்தில் சற்றும் சளைத்தவரல்ல. மற்ற "கான்" நடிகர்கள் போல் அல்லாமல், தேவையற்ற மத உணர்வுகளை சற்று அளவுக்கதிகமாகவே திரைப்படங்கள் மூலமாகவும் பேட்டிகள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர் ஷாருக். இவருடைய சமீபத்திய திரைப்படங்கள் பெரும்பாலும் இந்திய ராணுவத்தினரையும், சாதாரண இந்தியரையும் குறை சொல்வது போலவே அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. "அஷோகா" போன்ற திரைப்படங்கள் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் நல மன்னராக சாதாரண மக்கள் அறிந்திருந்த அசோகரை இழிவு படுத்தின. "சக் தே" போன்ற திரைப்படங்கள், அசாருதீன் போன்ற கிரிக்கெட் வீரர்களை கொண்டாடிய ஒரு நாட்டின் மதசார்பின்மையை கேள்விக்குறியாக்கின.
தற்போது பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் மற்ற அணிகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று குறை கூறும் இவரால் தன்னுடைய அணி ஏன் பாகிஸ்தான் வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு சரியான காரணங்களை கூற முடியவில்லை. தன் தந்தை பாகிஸ்தானில் பிறந்தவர் என்று வெளிப்படையாகவே சொன்னதுடன் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானையும் நேசிப்பதாக வேறு கூறியுள்ளார். இந்தியர்கள் பாகிஸ்தானியர்களை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். சிவசேனா தவிர வோட்டு வங்கி மற்றும் சினிமா செல்வாக்கு ஆகியவற்றை இழக்க விரும்பாத காங்கிரஸ் போன்ற போலி மதசார்பின்மை கட்சிகள் இவரது பேச்சை தட்டிக் கேட்க வில்லை. இது சுதந்திர நாடு,யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மொட்டை சாக்குகளுடன் விவாதத்தை முடித்துக் கொண்டனர். சார்புத்தன்மை மிகுந்த (சிவ சேனாவால் வேறுவகையில் பாதிக்கப் பட்டுள்ள) மீடியாக்களும் ஷாருக் தரப்பு வாதங்களை நியாயப் படுத்தவே முயற்சித்தன. ராஜஸ்தான் அணியில் விளையாடி பெருமளவு சம்பாதித்த ஒரு பாகிஸ்தான் வீரர் தன்நாட்டில் இந்தியாவை பற்றி இழிவாக அளித்த பேட்டி இந்திய மீடியாக்களால் அதிகம் கண்டுக்கொள்ளப் படவில்லை. பல தவறான செயல்பாடுகளின் மூலம் ஏற்கனவே தனது மக்கள் மத்தியில் தனது நம்பகத்தன்மையையும் இழந்து விட்ட சிவசேனாவின் கூக்குரல்களை மக்களும் பெரிதளவில் பொருட்படுத்த வில்லை.
ஆக மொத்தத்தில் எப்போதும் போல ஷாருக் படத்திற்கு செலவில்லாமலேயே நல்ல விளம்பரம். பயங்கரவாதத்தை பாலூற்றி வளர்த்து வரும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவை ஒரு மதவாத நாடாக சித்தரிக்க விரும்பும் சில மேலைநாட்டு மீடியாக்களுக்கும் மெல்ல வாய் நிறைய அவல். எது எப்படிப் போனால் என்ன, ஷாருக்கானுக்கு தன் படம் நன்றாக போனால் போதும்.
ஆனால் மொழி மற்றும் மத பாகுபாட்டு உணர்வுகள் இல்லாமல் திறமை இருக்கும் எவரையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய சமூகத்திற்கு?
நன்றி!
Comments
முழுமையாக உடன்படுகிறேன்!
விசயத்தை காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் விட்டது தப்பு! ஆனால் சிவசேனா ஆட்டம் ஓவர்!
உண்மைதான் வால்!
சிவசேனா இங்கே ஷாருக்கானுக்கு ஒரு நல்ல துருப்புச்சீட்டாக பயன்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஷாருக்கின் முன்னுக்கு பின் முரணான வாதங்கள் மீடியாக்களில் அதிகம் முன்வைக்கப் படாமல் போக சிவசேனாவின் வன்முறை பயன்பட்டிருக்கிறது.
நன்றி!
வழர்ப்பவர்கள்தான் கலைஞர்களா உங்கள் பார்வையில்? சாருக்கான் என்ன நடக்காததையா சொல்லிவிட்டார்? உங்களுக்கு தேவை கமல் மாதிரி 3 முஸ்லிம்களை குற்றவாளியாக்கி
கொல்லும் துவேஷம். அவ்வளவே..
<< தமிழகத்தில் "கன்னடர்களை உதைப்போம்" என்பது போல முழக்கமிடுவது, பின்னர் கர்நாடகா சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தன படத்தை பெங்களூரில் வெளியிடுவது
இந்த சமயத்தில் ராஜ்குமார் உயிரோடு இல்லை !!
<<கர்நாடகத்தில் நிறைய முதலீடு செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து வந்துள்ளார்.
தற்போது நான் பெங்களூர்-ல் வேலை பார்த்து வரும் போது, எனது சொந்த ஊரான மதுரை-ல் இன்வெஸ்ட் செய்வது தவறா ? தயவு செய்து ஏன் என்று விளக்கவும் .?
<<ஆனால் மொழி மற்றும் மத பாகுபாட்டு உணர்வுகள் இல்லாமல் திறமை இருக்கும் எவரையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய சமூகத்திற்கு?
எந்த வகையில் இது தவறு? உதரணமாக எனக்கு "அவதார்" படம் பிடித்துள்ளது ...இது தவறா?
OYE SIVASENA ORU HINDU TERRORIST ORGANAIZATION
MIND IT
@ "என்ன கொடும சார்
//இந்தியாவில் நடப்பதை மறைத்து இந்துத்துவாவை வழர்ப்பவர்கள்தான் கலைஞர்களா உங்கள் பார்வையில்? சாருக்கான் என்ன நடக்காததையா சொல்லிவிட்டார்? உங்களுக்கு தேவை கமல் மாதிரி 3 முஸ்லிம்களை குற்றவாளியாக்கி கொல்லும் துவேஷம். அவ்வளவே..//
@ஜோ
//இம்மாதிரியான பதிவை எதிர்பார்கவில்லை//
மன்னிக்கவும் நண்பரே! இந்த பதிவு மத சம்பந்தப் பட்டது அல்ல.
இந்தியாவுடன் தொடர்ந்து ஒரு மறைமுகப் போரினை நடத்தி வரும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து வந்த கடைசி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள மும்பை மக்களின் மனக் காயம் முழுமையாக ஆறாத நிலையில், அதுவும் அந்த தாக்குதலில் நேரடியாக சம்பந்தப் பட்ட கசாபிற்கு தண்டனை எதுவும் வழங்கப்படாத நிலையில், தன்னுடைய தவறை சிறிதளவும் திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை தொடர்ந்து வரும் பாகிஸ்தானுக்கு ஷாருக் வெளிப்படையாக ஆதரவு அளித்தது மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது. சாதாரண வாழ்வைக் கூட நிம்மதியாக வாழ வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கும் பல கோடி இந்தியருக்கும் இருக்கக் கூடிய ஒரு குறைந்த பட்ச தேசப் பற்றுக் கூட, இந்த மண்ணினால் உயர்வான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார்களுக்கு இல்லாமல் போனதும் மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது.
பாகிஸ்தானை பற்றி பெருமையாக பேசினாலோ அல்லது அவ்வாறு பேசுபவர்களை கண்டிக்காமல் விட்டாலோ, இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தினர் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று போலி மதசார்பின்மை பேசும் சில அரசியல்வாதிகள் மனக்கணக்கு போடுவது, பெருவாரியான முஸ்லிம் மக்களின் தேசபக்தியை கேள்விக்குறியாக்கும் அல்லது கேலி செய்யும் ஒரு இழிசெயல் என்றே கருதுகிறேன்.
என்னைப் பொறுத்த வரை ஒரு சாதாரண இந்தியன் அவன் இந்துவாக இருந்தாலும் அல்லது முஸ்லீமாக இருந்தாலும் தேச பக்தி கொண்டவன்தான். அவனுடய அன்றாட வாழ்வியல் போராட்டங்கள் அவனது தேசபக்தியை அடிக்கடி வெளிக்கொணரவிடாமல் செய்தாலும் அன்னியர் அத்துமீறி உள்ளே நுழையும் பட்சத்தில் கோபப் படத்தான் செய்வான். என்னைப் பொறுத்த வரை நானும் ஒரு சாதாரண இந்தியன்தான். சூப்பர் ஸ்டார்களுக்கு இருப்பது வணிக நிர்பந்தங்களோ அல்லது அரசியல்வாதிகளுக்கு இருப்பது போன்ற வோட்டுவங்கி நெருக்கடிகளோ இல்லாத நிலையில் ஒரு சாதாரண இந்தியனான என்னால் கோபத்தை வெளிக்காட்டவும் முடிகிறது.
நன்றி!
//<< தமிழகத்தில் "கன்னடர்களை உதைப்போம்" என்பது போல முழக்கமிடுவது, பின்னர் கர்நாடகா சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தன படத்தை பெங்களூரில் வெளியிடுவது
இந்த சமயத்தில் ராஜ்குமார் உயிரோடு இல்லை !!//
என்னுடைய வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். "என்பது போல" என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். ரஜினி "கன்னடர்களை உதைப்போம்" என்றது ஹொகேனக்கல் பிரச்சனையின் போது. இதனால் கர்நாடகத்தில் குசேலன் படம் வெளியீடு பிரச்சினையானவுடன் கன்னட மக்களிடம் தயங்காமல் மன்னிப்பு கேட்டவர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டு டிவி சானல்கள் ஒருவித மன்னிப்பு பேச்சினையும் கன்னட சானல்கள் இன்னொரு விதமாக மன்னிப்பு பேச்சினையும் வெளியிட்டது, மீடியாக்களின் சார்புத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றன. 2002 ஆண்டின் போது எழுந்த காவேரி பிரச்சனையின் போது மற்ற மொழி புதிய திரைப்படங்களை கர்நாடகத்தில் உடனடியாக வெளியிடக்கூடாது என்று அங்குள்ள திரைத்துறையினர் கட்டுப்பாடு விதித்த போது, ராஜ்குமார் தலையீட்டால் வெளியானது ரஜினியின் பாபா திரைப்படம்.
இந்த சமயத்தில் நானும் பெங்களூரில்தான் வசித்துவந்தேன். தமிழ் சானல்களை கட் செய்வது, தமிழக பேருந்துகளை தடுப்பது என்று ஏகப் பட்ட ரகளையில் ஈடுபட்டு வந்த கன்னட தீவிரவாத அமைப்புக்களை அந்த சமயத்தில் ரஜினி ஒருபோதும் கண்டித்ததாக தெரிய வில்லை. பாரதிராஜா நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த ஊர்வலம் போனபோது, ஒருநாள் தனியாக அடையாள உண்ணாவிரதம் இருந்து "நதிகளை இணைப்போம்" என்ற ஒரு மகத்தான அறிவுரையோடு நிறுத்திக் கொண்டவர் ரஜினி. "அதற்கு ஒரு கோடி நிதி வேறு" நதிகளை இணைப்பதற்கு பதிலாக மலைகளை இணைக்கலாமே என்று சத்தியராஜ் நக்கலடித்ததும் மறக்க முடியாதது.
//<<கர்நாடகத்தில் நிறைய முதலீடு செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து வந்துள்ளார்.
தற்போது நான் பெங்களூர்-ல் வேலை பார்த்து வரும் போது, எனது சொந்த ஊரான மதுரை-ல் இன்வெஸ்ட் செய்வது தவறா ? தயவு செய்து ஏன் என்று விளக்கவும் .?//
ஏற்கனவே சொன்னபடி நானும் பெங்களூரில் வேலை செய்தவன்தான். அதுவும் ராஜ்குமார் கடத்தல் மற்றும் காவேரி பிரச்சினை போன்ற ஒரு சென்சிடிவான காலகட்டத்தில் அங்கு வாழ்ந்தவன் நான். ஆனால் நான் கன்னடப் பால் குடித்தவன் என்று போலியாக நான் நடிக்க வில்லை அதே போல கன்னடக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று என் நண்பர்களும் எதிர்பார்க்க வில்லை. நாம் ஒரு இடத்தில் பிழைக்கப் போனால், பிழைக்க வந்த இடத்தை மதிக்க வேண்டும். உழைக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர மற்றபடியான போலியான வாயசவடால்கள் தேவையில்லை.
முதலீட்டு பிரச்சினைக்கு வருவோம்.
நீங்களோ நானோ ஒரு பெரிய தொழில் அதிபராக இருக்காத பட்சத்தில் நமது முதலீட்டை எங்கு செய்தாலும் அது என்றைக்குமே எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதுவும் அந்நிய முதலீடுகள் பெருகிப் போன இன்றைய காலகட்டத்தில் ரஜினி போன்ற பெரிய பணக்காரர்களின் முதலீடுகள் கூட எந்த அளவுக்கு ஏற்படுத்த பாதிப்பை முடியும் என்பது கேள்விக் குறிதான். ஆனால், முதலீடு அரிது என்ற காலகட்டமும் ஒருகாலத்தில் இருந்தது. எனவே எங்கு முதலீடு செய்தார் என்பதும் முக்கியமான ஒன்றுதான்.
//<<ஆனால் மொழி மற்றும் மத பாகுபாட்டு உணர்வுகள் இல்லாமல் திறமை இருக்கும் எவரையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய சமூகத்திற்கு?
எந்த வகையில் இது தவறு? உதரணமாக எனக்கு "அவதார்" படம் பிடித்துள்ளது ...இது தவறா?//
தவறே கிடையாது. நான் கூட அவதார் படம் பார்த்தேன். அந்த படத்தை பார்கையில் திறமையை பாராட்டத்தான் தோன்றுகிறது, இந்த படத்தை எடுத்தவர் ஹிந்துவா, முஸ்லிமா, கிறித்துவரா என்ற கேள்வி எழவில்லை. இதுதான் ஒரு சாதாரண இந்தியனின் நிலை.
ஆனால் அந்த சாதாரண இந்தியனின் பணத்தில் வாழ்ந்து கொண்டு, இந்தியாவினை வேரறுக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்துவரும் ஒரு தேசத்தை நேசிப்பதாக சொல்வது மற்றும் தனது தந்தை பாகிஸ்தானில் பிறந்தவர் என்று கூறுவது எந்த அளவுக்கு நியாயம்? உண்மையில் அவரது தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். "விடுதலைக்கு முந்திய ஒருங்கிணைந்த இந்தியாவில்" பிறந்த அவரை, அதுவும் விடுதலை பெற்றதும் பாகிஸ்தானில் வாழப் பிடிக்காமல் இந்தியா வந்து குடியேறியவரை பாகிஸ்தானில் பிறந்தவர் என்று ஷாருக் குறிப்பிட்டது, அவரது தந்தையையே அவமானப் படுத்திய செயல் என்றே நினைக்கிறேன்.
நன்றி.
நீங்கள் தந்த பட்டத்திற்கு நன்றி ராஜா! ஆனால் என்னுடைய இந்த பதிவு, மதசார்பு அல்லது மதசார்பின்மையை பற்றியது அல்ல. இந்தியாவின் மானத்தைப் பற்றியது.
//இங்குதான் இந்துக்களை திருடன் என்று சொல்லவும், அவர்களின் வோட்டை வாங்கவும் முடியும். தமிழ் புத்தாண்டை மாற்றவும் அதற்கு ஆதரவாக உங்களை போன்ற secularist களும் ஆதரித்து அதற்காக இந்து மதத்தை பழிக்கவும் முடியும்.//
ஏற்கனவே நான் உங்களிடம் ஒரு முறை கூறியது "இந்திய சமுதாயம் ஒரு "சுதந்திர சமுதாயம் (Free Society)" ஆகத்தான் பல்லாண்டுகாலமாக வாழ்ந்து வந்திருக்கின்றது, எனவே சுதந்திரமான கருத்துக்களை பரிமாற, (மற்றவர்களை பாதிக்காமல்) தன்னிச்சையாக வாழ எல்லோருக்கும் சம உரிமை இருக்கின்றது" என்று மட்டுமே. அதற்காக நம்மை வேட்டையாட நினைப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது எனது நிலை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல, பிரிவினைவாதம் போலவே பேரினவாதமும் ஆபத்தானது. சொல்லப் போனால், பல சமயங்களில் பிரிவினைவாதம் உருவாவதே பேரினவாதத்தால்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
//பால் தாக்கரே போன்றோர்களினால்தான் இந்துக்கள் சொரனை மற்ற மதத்தினருக்கு புரிகிறது. //
இவருடைய நிலை இப்போதைக்கு நமது பாமாகவின் நிலை போலத்தான் இருக்கின்றது. இவர்களுடைய தடாலடி நிலைப்பாடுகள் பல சமயங்களில் "நல்லது" வெளிவராமல் செய்து விடுகின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
//அதற்காகவாவது அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ பிரார்த்திக்கொள்கிறேன்.//
கண்டிப்பாக! நானும் கூட வேண்டிக் கொள்கிறேன். சொல்லப் போனால் உங்களை விட எனக்குத்தான் அவர் நெருங்கியவர். ஏனென்றால், அவரது மாதாஸ்ரீ வாழ்விடத்திற்கு வெகு அருகாமையில்தான் எனது குடியிருப்பும் அமைந்திருக்கிறது. :)
நன்றி.
//SIVASENA IS POLITICAL PARTY?????
OYE SIVASENA ORU HINDU TERRORIST ORGANAIZATION
MIND IT //
உங்களுடைய ரஜினி பாணி டயலாகிற்கு வாழ்த்துக்கள்!
ஹிந்துக்களை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக சிவசேனா நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த கட்சி அரசியல் சட்டத்தினால் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஒரு சராசரி அரசியல் கட்சிதான். மற்ற இந்திய அரசியல் கட்சிகளுக்கு உரித்தான அத்தனை குணாதியசங்களும் இந்த கட்சிக்கும் உண்டு.
நன்றி!
கொல்லும் துவேஷம்.//
நீங்கள் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தைப் பார்த்துவிட்டு பேசுகிறீர்கள். A Wednesday படம் பாருங்கள் புரியும். இந்த படத்தைத் தான் கமல் கேவலமாக நடித்து ரீமேக்கினார். சொல்லவேண்டிய விடயத்தை விட்டுவிட்டு தமிழர்களிடம் உளறி இருந்தார். அப்படியில்லை என்பவர்கள் படத்தில் அவர் சொல்லும் ப்ளேஷ்பேக்கை என்னவென்று விளக்கவும்.
//இந்த சமயத்தில் ராஜ்குமார் உயிரோடு இல்லை !!//
ராஜ்குமார் இல்லை. ராஜ்குமார் மனைவியிடம் சூழ்நிலையை விளக்கினார்.
வாடாள் நாகராஜ் என்ற கன்னட சகோதரர்களை தமிழ்விரோதம் சொல்லி எமாற்றிப் பிழைக்கும் ஒரு ஓட்டுப்பொறுக்கியை சிறந்த பேச்சாளர் என்று வாயாரப்புகழ்ந்தவர் தான் இந்த ரஜினி. இது ஒன்று போதும் இவருடைய போலித்தனத்திற்கான சான்று.
//தற்போது நான் பெங்களூர்-ல் வேலை பார்த்து வரும் போது, எனது சொந்த ஊரான மதுரை-ல் இன்வெஸ்ட் செய்வது தவறா ? தயவு செய்து ஏன் என்று விளக்கவும் .?//
ரஜினி முதலீடு செய்வதும் தவறில்லை. போலித்தனம் தான் தவறு. நீங்க பேங்களூரில் வேலைப்பார்த்தாலும் 'சோறு போட்ட பேங்களூர். சாம்பார் ஊத்தின மைசூர்' என்று போலித்தனங்கள் காட்டவில்லையே.
//ஷாருக்கானின் பேச்சுக்கு உங்களை போன்ற போலி secularist கள் தான் காரணம்//
ஆளைக்கொல்லும் மததீவிரவாதிகளை விட போலி செகுலரிஸ்ட்கள் எவ்வளவோ மேல்.
நீங்கள் திரையில் தோன்றி "என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது *தமிழ* கன்னடமல்லவா. என் உடல், பொருள். ஆவியை *தமிழு* கன்னடத்துக்கும் *தமிழ* கன்னடர்க்கும் கொடுப்பது முறையல்லவா?" என்று பார்வையாளனை நோக்கி முழக்கமிடவில்லையே?
பின்னர் ஏன் இந்தக் கேள்வி?
உங்கள் சம்பாத்தியத்தை நீங்கள் எங்கு முதலீடு செய்தாலும் எந்தக் கன்னடன் உங்களைக் கேள்வி கேட்கப் போகிறான்?
// சொல்லவேண்டிய விடயத்தை விட்டுவிட்டு தமிழர்களிடம் உளறி இருந்தார். அப்படியில்லை என்பவர்கள் படத்தில் அவர் சொல்லும் ப்ளேஷ்பேக்கை என்னவென்று விளக்கவும்.//
"எ வெட்னேஸ் டே" திரைப்படம் மக்களின் மனதை தொட்ட அளவுக்கு "உன்னைப் போல் ஒருவன்" இயல்பாக அமைய வில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த காரணங்களில் ப்ளாஷ்பேக் காரணமும் முக்கியமான ஒன்று.
//ராஜ்குமார் இல்லை. ராஜ்குமார் மனைவியிடம் சூழ்நிலையை விளக்கினார்.
வாடாள் நாகராஜ் என்ற கன்னட சகோதரர்களை தமிழ்விரோதம் சொல்லி எமாற்றிப் பிழைக்கும் ஒரு ஓட்டுப்பொறுக்கியை சிறந்த பேச்சாளர் என்று வாயாரப்புகழ்ந்தவர் தான் இந்த ரஜினி. இது ஒன்று போதும் இவருடைய போலித்தனத்திற்கான சான்று.//
வெகுபிரபலமான சிலர் தவறுகள் செய்தாலும் அந்த தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் மூடி மறைக்கவே விரும்புகின்றனர். ஊடகங்களின் சார்புத்தன்மையும், மக்களின் ஞாபக சக்தி குறைவும் இவர்களுக்கு பெரிதும் துணை போகின்றன.
//ரஜினி முதலீடு செய்வதும் தவறில்லை. போலித்தனம் தான் தவறு. நீங்க பேங்களூரில் வேலைப்பார்த்தாலும் 'சோறு போட்ட பேங்களூர். சாம்பார் ஊத்தின மைசூர்' என்று போலித்தனங்கள் காட்டவில்லையே.//
பொதுவாகவே பல இந்திய திரைப்படத்துறையினர் திரைக்கு வெளியேதான் சிறப்பாக நடிக்கின்றனர். ஷாருக்கின் தற்போதைய வசனங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே அமைந்திருப்பதையும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கரன் ஜோகர் வெளிநாட்டில் வாழும் ஆசியர்களை குறிவைத்தே படங்களை தயாரிப்பதையும் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். ஷாருக்கின் வசனங்களுக்கான காரணம் புரிந்து விடும்.
//ஆளைக்கொல்லும் மததீவிரவாதிகளை விட போலி செகுலரிஸ்ட்கள் எவ்வளவோ மேல்.//
இருக்கலாம். ஆனால், தவறுகளை தட்டிக்கேட்காமல் மெளனமாக இருக்கும் சமூகமும் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணைபோகிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை பாருங்கள்! பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு துணை போகவில்லை என்று வாய்கிழிய கத்துகிறார்கள். ஆனால், பயங்கரவாதிகள் அங்கே பகிரங்கமாக நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் தனி ராஜாங்கம் நடத்திய தாவூது இப்ராஹீம் கூட அங்கே தனது பாதுகாப்பிற்காக பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து வருவதாக பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.
இந்தியாவிலும் அப்படிப் பட்ட நிலை உருவாவதை தடுப்பது அனைவரின் கடமையாகும். வாக்கு வங்கி அரசியல் நடத்தி வரும் அரசியல்வாதிகளையும், சுயலாபத்திற்காக மதவாதத்தை வளர்த்துவரும் மதத்தலைவர்களையும் அவர்கள் எந்த மொழி-மதம்-இனத்தவராக இருந்தாலும் மக்கள் தயங்காமல் புறக்கணிக்க வேண்டும். கொள்ளையடிப்பவன் தன்னுடைய ஜாதி, மதம், மொழி என்ற ஒரே காரணத்தினால் பணத்தை விருப்பத்துடன் நாம் கொடுத்து விடுவதில்லை. அதே போல எந்த ஒரு நாகரிக சமுதாயமும் தன்னிடையே வளரும் களைகளை களையவே விரும்ப வேண்டும்.
நன்றி!
மிக்க நன்றி தாமஸ் ரூபன்! உங்களைப் போன்றவர்களின் ஆதரவுதான் பதிவுலகில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்க முக்கிய தூண்டுதலாக அமைந்துள்ளது.
நன்றி!
கண்டிப்பாக ஒத்து கொள்கிறேன்....
ஆனால்...Please read your post again....இந்த ஒரு பாயிண்ட் மட்டும் அது சொல்ல வரவில்லை.
பாகிஸ்தான்இ வெறுப்பதின் மூலம் தேச பற்றை கட்ட முடியும் என்று நம்புறீங்கள?
<<சூப்பர் ஸ்டார்களுக்கு இருப்பது வணிக நிர்பந்தங்களோ அல்லது அரசியல்வாதிகளுக்கு இருப்பது போன்ற வோட்டுவங்கி நெருக்கடிகளோ இல்லாத நிலையில் ஒரு சாதாரண இந்தியனான என்னால் கோபத்தை வெளிக்காட்டவும் முடிகிறது.
அதானே பார்த்தேன் ...கோவத்துல எழுதுன மாதிரி இருக்கு. :)
அந்த மானமே இந்த போலி மதசார்பின்மையினால்தான் போய்கொண்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானை விடுங்கள். மதசார்பின்மை ஜனநாயக நாடுகள்னு சொல்லிக்கிற இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் NBA, EPL போன்ற விளையாட்டுகளில் அரசின் நிலைப்பாட்டைதான் பின்பற்றுகின்றனர். ராமதாஸை தாக்கரேயோடு ஒப்பிடு செய்வது தான் போலி மதசார்பின்மை பேசுவோரின் tactics.
//பாகிஸ்தான்இ வெறுப்பதின் மூலம் தேச பற்றை கட்ட முடியும் என்று நம்புறீங்கள?//
வெறுப்பின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடு என்ற நிலையை மாற்ற முடியாது என்பதை நானும் அறிவேன். பாகிஸ்தான் ஒரு "தோல்வியுற்ற நாடாக (Failed State)" இருந்தாலும் அது அழிவது அந்நாட்டை விட இந்தியாவிற்குத்தான் (பாதுகாப்பு விஷயத்தில்) அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமைக்காக பல முயற்சிகள் தற்போது அரசு தரப்பு உள்ளிட்ட பல தளங்களில் எடுத்து வரப் படுகின்றன. அவற்றையும் நான் குறை கூறியதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
என்னுடைய கோபமெல்லாம் பாகிஸ்தானை உயர்த்திப் பிடிப்பதற்காக இந்தியாவின் மீது ஷாருக் குறை சொன்னது மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சிகள் அவரை தட்டிக் கேட்காததும்தான். மீடியாக்களும் சிவசேனா பற்றி குறை கூறுவதில் அதிக கவனம் செலுத்தியதே தவிர, அவருடைய பச்சோந்தித்தனத்தை கேள்வி கேட்க வில்லை. அதிலும் வேடிக்கை என்னவென்றால், திரைப்படம் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளேயே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று மீடியாக்கள் தீர்ப்பு சொன்னது. மீடியாக்களில் வெளியான திரையரங்கு காட்சிகளில் நான் வசிக்கும் பந்திரா கிழக்குப் பகுதியில் இருந்த திரையரங்கும் ஒன்று. சரி போய்த்தான் பார்ப்போமே என்று போய் பார்த்தால் (அங்குதான் பால் தாக்கரேவின் மாதோ ஸ்ரீ வசிப்பிடமும் அமைந்துள்ளது) மக்கள் எண்ணிக்கையை விட போலீசாரின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கின்றது. பால் தாக்கரேவுக்கு வழங்கப் பட்ட அரசு பாதுகாப்பு வாபஸ் பெறப் பட்டு விட்டது என்பதையும் நேரில் காண முடிந்தது.
பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயங்கள் இன்னும் குறையாத நிலையில் வணிக நோக்கமுள்ள திரைப்படங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையா என்ற கேள்வியும் என்னுள்ளே எழுந்தது. என்னுடைய அச்சம் நியாயமானதுதான் என்பதை வெளிக்காட்டும் வகையில் புனே வெடிகுண்டு தாக்குதலும் நேற்று நிகழ்ந்தேறி விட்டது.
மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்ட இந்த நாட்டில், வாக்கு வங்கியை குறி வைக்கும் அரசியல்வாதிகளும், பண பெட்டியை குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்களும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகேனும் திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது இன்னுமொரு முட்டாள்தனமாகவே இருக்கும். ஏதோ நம்மால் முடிந்தது, இது போல பதிவுகள் இட்டு மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
நன்றி!
//நீங்கள் திரையில் தோன்றி "என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது *தமிழ* கன்னடமல்லவா. என் உடல், பொருள். ஆவியை *தமிழு* கன்னடத்துக்கும் *தமிழ* கன்னடர்க்கும் கொடுப்பது முறையல்லவா?" என்று பார்வையாளனை நோக்கி முழக்கமிடவில்லையே? //
உண்மைதான் நண்பரே! பதிவிலேயே சொன்னபடி தம்மையே ஒரு வணிகப் பொருளாக்கி அதை திறம்பட மார்கெட்டிங் செய்வதில் இந்த சூப்பர் ஸ்டார்கள் கில்லாடிகள்.
நன்றி!
உண்மைதான் ராஜா! நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் எந்த ஒரு காம்ப்ரமைசும் இருக்கக் கூடாது என்பது என் கருத்தும் கூட. அதே சமயம் சட்டத்தை சிலர் கையில் எடுத்துக் கொள்ள முடியாதபடி சிஸ்டம் பக்காவாக இருக்க வேண்டுமென்பதும் என் கருத்துத்தான்.
// ராமதாஸை தாக்கரேயோடு ஒப்பிடு செய்வது தான் போலி மதசார்பின்மை பேசுவோரின் tactics. //
இதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது என் கருத்து. ஏனென்றால் இவர்கள் மட்டும்தான் அவ்வப்போதுதாவது சில நல்ல கருத்துக்களை முன் வைக்கிறார்கள். :)
நன்றி!
I dont see any reason why we should start the dialog with them right now, when there is no progress on any requests we have made with them.
//It is no coincidence that, when India refuses to talk to Pakistan, we seem to have quiet periods. Whereas our sick politicians start to say that we will resume dialog with them, bombs go off.//
உங்கள் கருத்து சிந்திகக் வைக்கின்றது. இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தையினால் யாருக்கு நஷ்டம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த துரோகிகளை கண்டுபிடித்து கட்டுபடுத்த இரண்டு நாடுகளும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி!