
மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் பஞ்சாபிகள், பஞ்சாபி சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு வென்று இருக்கின்றார், பலர் மெத்த படித்து மிக உயரத்தில் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரிய வந்த போது சமூகங்களைப் பற்றிய ஒரு "மாயத்தோற்றம்" மனதிற்குள் ஆழமாக பதிந்து எப்படியெல்லாம் நமது "அறிவுப் பார்வையை" மறைக்கின்றது என்ற உண்மை புரிய வந்தது.
எதற்காக சர்தார்ஜிகளை பற்றிய ஒரு தமிழ் பதிவு என்று நினைக்கிறீர்களா?
சமீபத்தில் ஒரு சர்தார்ஜி தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் பெயர் "2 States: Story of My Marriage" அவர் பெயர் சேத்தன் பகத்.
பொதுவாக, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் படும் புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வாசகர்களை மட்டும் குறி வைத்து எழுதப் படுபவை என்று நான் கருதுவதால் இந்த புத்தகத்தை படிக்க விரும்ப வில்லை. அதே சமயம், ஒரு தமிழ் பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு சர்தார்ஜியின் கதை இது என்பதால், இந்த புத்தகம் குறித்து வெளிவந்த சில விமர்சனங்களையும், எழுத்தாளர் மற்றும் அவரது மனைவியும் அளித்த பேட்டியையும் படித்துப் பார்த்தேன். அப்படி படித்த போது இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் மனநிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.
DNA பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் எல்லோரும் கருப்பர்கள் என்று எழுத்தாளர் கருதியதை ஆட்சேபித்த மனைவியிடம் ஒரு சிலர் மட்டும் கருப்பானவர்கள் இல்லை சமாதானப் படுத்தியதாகவும் சேத்தன் பகத் நக்கல் அடிக்கின்றார். தமிழர்கள் தனது குடும்பத்துடன் அணு ஒப்பந்தம் பற்றி பேசுவார்கள். ஆனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று தமிழர்களைப் பற்றி நன்கு அறிந்தவர் போல கூறுகிறார். நாட்டியத்தை நாட்டியமாக (சந்தோசமாக) ஆடத்தெரியாதவர்கள் தமிழர்கள் என்றும் கூறுகின்றார். (நம்மூர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் குத்தாட்டங்களை இவர் அறியாதவர் என்று நினைக்கின்றேன்) - நன்றி DNA.
கதையின் நாயகி சீமை சாராயம் அருந்துபவர், பலான விஷயங்களில் ரொம்ப "சூடானவர்". தமிழ் பெண்கள் ஆளை மயக்குபவர்கள், ஹேமமாலினி முதல் ஸ்ரீதேவி (?) வரை அனைத்து தமிழ் பெண்களும் ஒரே கதைதான், தமிழர்கள் லுங்கியுடன் (வேட்டி) பர்சேஸ் செய்கின்றனர் என்றெல்லாம் வர்ணனைகள் இந்த நாவலில் இடம் பெற்று இருக்கின்றவாம். "ஏன், தமிழர்களை இவ்வளவு வாரு வாரியிருக்கிரீர்கள்?" என்று கேட்ட போது, "பஞ்சாபிகளையும் கூட கிண்டல் அடித்திருக்கிறேன்" என்று தனது பாரபட்சமில்லாத நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியிருக்கிறார். (நன்றி: ஆனந்த விகடன்)
தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தை வைத்துக் கொண்டே தமிழர்களைப் பற்றிய இவ்வளவு "அரிய உண்மைகளை" கண்டு பிடித்திருக்கும் இவர், புத்தகத்தை தனது மாமனார் மாமியாருக்கு சமர்ப்பணம் செய்து உலக வரலாற்றில் ஒரு முத்திரை படைத்ததாகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.
இவரது பேட்டியை படிக்கும் போது, ஒரு தவறான புரிதலின் பேரில் வடிவேலுவின் மனைவியை (கோவை சரளா) சத்யராஜ் கேவலமாக வர்ணிக்க, "எங்களுக்குள் இதெல்லாம் சகஜம், அவன் குடும்பத்தை நானும் என் குடும்பத்தை அவனும் கேலி செய்வது எங்கள் பொழுது போக்கு" என்று வடிவேலு சமாளிக்கும் ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி மனதில் ஓடியது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து சமுதாயங்களும் தம்முடைய சமூகம்தான் (மொழி மற்றும் மதம்) உயர்ந்தது என்பதை அந்தந்த சமூகத்தினரின் மனதில் நிலை நிறுத்துவதற்காக மற்ற சமூகங்களைப் பற்றிய ஒரு இழிவான கருத்தினைத்தான் பதிய வைக்கின்றனர். வேறென்ன, எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான்.
மேலும் ஒவ்வொரு சமுதாயமும் தன்னை ஒரு ஆண் சமுதாயமாகவும் மற்ற சமுதாயங்களை பெண் சமுதாயங்களாகவும் கருதிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். இதனால்தானோ என்னவோ, ஹிந்தி படங்களில் தென்னிந்திய நடிகைகளும் தென்னிந்திய படங்களில் வட இந்திய நடிகைகளும் சக்கைப் போடு போடுகின்றனர். அதே சமயம் நடிகர்கள், அவர்கள் எவ்வளவு சிறந்த நடிகர்கள் என்றாலும் கூட, பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனதும் கவனிக்கத் தக்கது.
இந்த பதிவு குறிப்பிட்ட சர்தார்ஜியை கண்டிப்பதற்காக அல்ல. காமெடி என்ற பெயரில் வணிக நோக்குடன், தனது மனைவியின் குடும்பத்தை பற்றிய சொந்த கருத்துக்களை ஒரு சமுதாயத்தின் மீதான பார்வையாக திணிக்க முயற்சிக்கும் ஒரு நாவலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். தன்மீது சேறு வாரி பூசிக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் பபூன் முயற்சி போன்றே இந்த நாவல் எனக்கு தோன்றுகிறது. (அதே சமயத்தில் பல சமயங்களில் இது போன்ற "பபூன் முயற்சிகள்" வணிகரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. காரணம். அதே இரு கோடுகள் தத்துவம்தான்)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி சமையலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் பல கோடி பேர் அடங்கிய சமுதாயங்களை ஒரு சிலரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே அளவிட நினைப்பது, யானையின் வாலைப் பிடித்த குருடனின் கதையாகி விடும் என்று நினைக்கிறேன். அதே போல, தன்னுடைய நடத்தையில் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் கௌரவத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்றும் சமுதாயத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பது தன்னை உருவாக்கிய அந்த சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன் என்பதையும் ஒவ்வொரு தனி மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி.
Comments
" NO GENERALIZATION IS WORTH A DAMN, INCLUDING THIS DAMNED STATEMENT ".
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான்!
//நாம நிறைய கிண்டல் பண்ணிட்டோம்னு கோபம் வந்துருக்குமோ!?//
இருக்கலாம். சர்தார்ஜி ஜோக்குகள் சொல்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். நகைச்சுவையில் சர்தார்ஜி என்று சொல்வதை விட மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லலாம்.
:)
சரியாக சொன்னீர்கள் சார்.
பதிவுக்கு ஏற்ற சரியான தலைப்பு சார் (யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!)
நன்றி..நன்றி...
ஆனா அவங்கள மொத்த இந்தியாவுமே காமடி பீஸாதான பாக்குது.
//ஆனா அவங்கள மொத்த இந்தியாவுமே காமடி பீஸாதான பாக்குது.//
எனக்கென்னவோ இது தவறு என்றுதான் தோன்றுகிறது. பதிவிலேயே சொன்னபடி ஒரு மொத்த இனத்தையும் பொதுப்படையாக வைத்து காமெடி பண்ணுவது (அவர்களே ரசித்தாலும் கூட) அவ்வளவு சரியாக படவில்லை.
நன்றி.