Thursday, November 19, 2009

பங்குசந்தை வெற்றிப்பயணம் - தொடர்பதிவு - ஒரு மீள்பார்வை!


பங்குசந்தையில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றிய சில முன்னோட்ட பதிவுகளை இது வரை பார்த்தோம். பங்குகளை பற்றிய இன்னும் ஆழமான விளக்க கட்டுரைகளுக்கு செல்லும் முன்னே, இதுவரை இட்ட பதிவுகளை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்ப்போம் என்று தோன்றியது.

பங்குகளை நேரடியாக பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் வழிமுறையை நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு எண்ணத்தில்தான் இந்த தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முக்கிய காரணம், பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய நேரடி புரிதல் (ஓரளவேனும்) இருக்கும் போதுதான், எடுக்கப் படும் முடிவுகள் சிறப்பாக இருந்திருக்கின்றன என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

இந்த உண்மையை ஒரு பங்கு சந்தை மேதை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

F&O வர்த்தகத்தில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் இவர். இந்த துறையில் ஏற்கனவே மிகப் பெரிய நிபுணத்துவம் பெற்று இருந்த தன்னுடைய நண்பரிடம் ஆலோசனை கேட்கின்றார். அவரும் ஒரு குறிப்பிட்ட பங்கின் "option" வாங்குமாறு அறிவுரைக்கிறார். தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்யும் நமது பங்குசந்தை மேதைக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. பணம் முழுவதையும் அந்த குறிப்பிட்ட வர்த்தகத்தில் இழக்கும் இவருக்கு தனது நண்பர் மீது கடும் கோபம் எழுந்து அவரிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறார். ஒரு நாள் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. வேண்டாவெறுப்புடன் அவரை சந்திக்க செல்லும் இவரிடம், நண்பர் இவர் இழந்த அனைத்து பணத்தையும் கொடுக்கிறார். எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்த இவரிடம், தான் பரிந்துரைத்த வர்த்தக நிலைக்கு நேர்மாறாக தான் ஒரு வர்த்தக நிலை எடுத்ததாகவும், மற்றவர் பேச்சை முழுமையாக நம்பி பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது என்ற பங்குசந்தையின் முதல் மற்றும் முக்கிய பாடத்தை புகட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் நண்பர் கூறுகின்றார்.

பங்குசந்தை புரியாதாவர்கள் அல்லது அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், பங்குசந்தை பக்கமே வர வேண்டாம் என்று இந்த பங்குசந்தை மேதை கூறுகின்றார். தன் மீதும் தான் எடுக்கும் அறிவார்ந்த முடிவின் மீதும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே பங்கு சந்தையில் நிலைக்க முடியும் என்ற இவரது கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

இந்த கருத்தில் அடிப்படையில்தான் , பங்குசந்தையைப் பற்றிய சில அடிப்படை கல்வியை பரிமாறவே இந்த தொடர்பதிவு ஆரம்பிக்கப் பட்டது.

இந்த தொடர்பதிவின் துவக்கத்தில் பங்குசந்தையில் வெற்றிப் பெற்றவர்கள் பின்பற்றிய பாதைகள் பற்றி மேலோட்டமாக விவரிக்கப் பட்டது. அதிபுத்திசாலித்தன முடிவுகளை எடுக்கும் முதல் பாதை, உழைப்பாளிகளின் இரண்டாவது பாதை மற்றும் பொறுமைசாலிகளின் மூன்றாவது பாதை ஆகியவை அறிமுகப் படுத்த பட்டன. எந்த பாதை சிறந்த பாதை என்பதை அவரவர் தேவைக்கேற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறி இருந்தேன். அல்லது தமக்கேற்றபடி ஒரு புதிய பாதையை கூட வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தேன்.

இந்த பாதைகள் மட்டுமில்லாமல், அதிரடியாக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் ஒரு துணை பாதை பற்றியும் கூட தெரிவித்திருந்தேன். இந்த பாதையில் செல்வது பற்றிய ஒரு நடைமுறை விளக்கம் கூட கொடுத்திருந்தேன். மீண்டு வரும் நிறுவனங்களில் (Recovery Stocks) முதலீடு செய்வது எவ்வளவு பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதை நீங்கள் மைத்தாஸ் கதை மூலம் நேரடியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். "இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்". " என்று குறிப்பிட்ட பதிவை முடித்த நான் மைத்தாஸ் விஷயத்தில் "சொல்லி அடித்திருப்பது" இந்த தொடர்பதிவை தொடரும் தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.

பங்குகளை வாங்குவது பற்றி முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகளைப் பற்றியும் மேலோட்டமாக இதுவரை பார்த்து உள்ளோம். பங்குகளின் அடிப்படைகளை அலசும் முறை, பங்கின் ஓட்டத்தை கவனிக்கும் தொழிற்நுட்ப வரைபட அறிவியல் மற்றும் வர்த்தகர்களின் மனநிலையை அறிய உதவும் மனவியல் போன்றவற்றைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக காளை மற்றும் கரடி மனநிலைகளை அறிந்து கொள்வது எப்படி என்று கூட தனியாக ஒரு பதிவில் பார்த்தோம்.

இதற்கிடையே ஒரு "விளையும் பயிரை" (யெஸ் பேங்க்) எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பது பற்றியும் பார்த்தோம். மூன்று வருடங்களில் முதிரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க, நடப்பு காளை ஓட்டம் இந்த பயிரை மூன்று மாதத்திலேயே முதிர வைத்து விட்டது என்பதை நீங்கள் நேரடியாக அறிந்திருப்பீர்கள். யெஸ் பேங்க் போன்ற ஆரம்ப கால பங்குகளை (Growth Companies) எப்படி தேர்வு செய்வது என்பது பற்றியும் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரி நண்பர்களே! பங்குசந்தையை பற்றிய சற்று ஆழமான விரிவான கட்டுரைகளை படிக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த தொடர்பதிவுக்காக நானும் கூட பங்குசந்தையில் சில பரிசோதனைகளை செய்து பார்த்து இப்போது இந்த தொடர்பதிவின் அடுத்த நிலைக்கு செல்ல ஓரளவுக்கு தயாராகி உள்ளேன் என்று நம்புகிறேன்.

புதிய பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

4 comments:

Thomas Ruban said...

உங்களுடைய பங்குசந்தை பற்றிய தொடர்பதிவு மூலம் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன் நன்றி சார். தொடரட்டும் உங்கள் சேவை .
பதிவுக்கு நன்றி சார்...

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

இந்த தொடர்பதிவு உங்களுக்கு பயன் அளித்தது என்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். வருங்காலத்திலேயும் இந்த தொடர்பதிவு பலருக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

குறும்பன் said...

நான் வெளிநாட்டு பங்குசந்தையில் வணிகம் செய்பவன். இந்திய பங்குசந்தையில் வணிகம் செய்யமுடியாத நிலையில் உள்ளவன். தங்களின் பங்குசந்தை குறித்த ஆழமான கட்டுரைகளை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்.

Maximum India said...

//தங்களின் பங்குசந்தை குறித்த ஆழமான கட்டுரைகளை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்//

நன்றி குறும்பன்!

நானும் என்னைக் கொஞ்சம் தயார் படுத்திக் கொண்டு வருகிறேன்.

கூடிய சீக்கிரமே சந்திப்போம்.

நன்றி.

Blog Widget by LinkWithin