
அமெரிக்காவில் வீடுகள் அதிக விற்பனை, மேற்கு ஐரோப்பாவில் தொழில் வளர்ச்சி, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி போன்ற பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளே இந்த பச்சை முளைகள்.
இந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா?
அல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா?
அல்லது, முளைகளுக்கான நீரை தானே உறிஞ்சி கொண்டு, மிகப் பெரிய அளவில் உலக சந்தைகளில் வளரும் "பப்புல்கள்" எனும் களைகள் உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லுமா?
இவையே இப்போதைக்கான கேள்விகள்.
சென்ற வாரம் வெளிவந்த பெரும்பாலான உலக பொருளாதார தகவல்கள் ஒரு துரித மீட்சிக்கான அறிகுறிகளை கொண்டிருந்தன. அதே சமயத்தில் இந்தியாவில் பருவமழை தவறியதும் சீனாவில் ஏற்பட்டு வரும் ஒரு வித பப்புளும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் பருவமழை தவறினாலும், டாலர் மழை இன்னும் பல வருடங்கள் இதே போல தொடரும் என்ற பாணியிலான தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
உலக சந்தைகளின் மீது கொட்டி தீர்க்கும் டாலர் மழையானது, அனைத்து வகையான விலைவாசிகளையும் மிகுந்த அளவுக்கு மேலேற்றி ஒருவகையான பப்புளை அனைத்து சந்தைகளிலும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த டாலர் வரத்தினால், இது வரை பங்கு சந்தைகள், முக்கியமாக வளரும் நாடுகளை சேர்ந்த பங்கு சந்தைகள், அதிக அளவு பலனை கண்டுள்ளன. இப்போது, இந்த பங்கு சந்தைகள் ஏற்கனவே பெருமளவுக்கு உயர்ந்து விட்டதாலும், மேலும் அதிக அளவு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் சற்று குறைவு என்பதாலும், டாலர் பணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த டாலர் பணம் தற்போதைக்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்க சந்தையில் அதிக அளவுக்கு நுழையும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. திடீரென்று சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்து முக்கிய எதிர்ப்பு நிலையான 71-72 அளவுகளை முறியடித்தது இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்துகிறது.
சென்ற வாரம் இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவுக்கு விற்றுத் தீர்த்தும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.
நம்மூரைப் பொருத்த வரை மழை தப்பிதத்தை தவிர பெரிய பொருளாதார பாதிப்புக்கள் இப்போதைக்கு இல்லை.
அதே சமயம் அடானி பவர் பங்கு தனது முதல் நாளில் பெரிய அளவில் முன்னேறாதது சந்தையில் ஒருவித தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்காத படி, அதிக வெளியீட்டு விலை நிர்ணயித்த அந்த நிறுவனத்தின் பேராசையே இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.
இந்த நிறுவனம் தனியார் நிறுவனம் என்பதால் இதன் பேராசையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். NHPC போன்ற அரசு நிறுவனமே இது போலவே அதிக விலையை நிர்ணயித்தது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது? NHPC பங்கு பெரிய அளவில் முன்னேறாவிடில், அரசின் இதர வெளியீடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி ஒரு முக்கிய நிலையில் இப்போதைக்கு உள்ளது. திங்கட்கிழமை சந்தை வலுவாக துவங்கினால் 4610 மற்றும் 4700 அளவுகளில் எதிர்ப்புகள் வரக் கூடும்.
கீழே 4450, 4380, 4320 ஆகிய அளவுகளுக்கு அருகே அரண் நிலை இருக்கக் கூடும்.
வர்த்தக நிலை எடுப்போர், கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்தால், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய் கண்டுபிடிப்பாளர்கள் போன்ற பங்குகளை கவனிக்கலாம். அதே சமயம், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சற்று சரிவை சந்திக்கும். மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதனால் 'வாங்கும் நிலையில்' சற்று கவனமாக இருப்பது நல்லது.
முதலீட்டாளர்கள் இப்போதைக்கு சற்று நிதானித்து செயல்படுவது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
8 comments:
சந்தையின் போக்கு வரும் வாரம் மேலேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.நம் சந்தை நம்பிக்கையில் மண்ணைப் போடுவதுதான் வழமை.பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி சார்.
அன்புள்ள ரஹ்மான்!
சந்தை கூடவே பயணித்து அதன் போக்கிற்கு தகுந்தார் போல வர்த்தகம் செய்யுங்கள். வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
வரும் வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.
//உலக சந்தைகளின் மீது கொட்டி தீர்க்கும் டாலர் மழையானது, அனைத்து வகையான விலைவாசிகளையும் மிகுந்த அளவுக்கு மேலேற்றி ஒருவகையான பப்புளை அனைத்து சந்தைகளிலும் ஏற்படுத்தி உள்ளது.//
100 க்கு200% உண்மைதான் சார்.
//முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்காத படி, அதிக வெளியீட்டு விலை நிர்ணயித்த அந்த நிறுவனத்தின் பேராசையே இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.ஆனால் இது இனி வரப்போகும் மற்றIPOக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.
//இந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா?
அல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா?//
அமெரிக்கா, சீனா இடையான டாலர்யுத்தம் முடிவடையும் பொதுதான் உண்மையான நிலைமை தெரியும் என்று நினைக்கிறேன்.(டாலர்யுத்தம் இப்பொதைக்கு முடிவடைதல்ப்போல் தெரியவில்லை).
//முதலீட்டாளர்கள் இப்போதைக்கு சற்று நிதானித்து செயல்படுவது நல்லது.//
F&Oசெட்டில்மென்ட் தேதி அருகில் இருப்பதால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
நன்றி சார்.
நன்றி தாமஸ் ரூபன்!
பதிவுகளை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து பதிவை படித்து வருவதுதான் என்னை மீண்டும் மீண்டும் பதிவுகளை இடத் தூண்டுகிறது .
நன்றி.
//பதிவுகளை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து பதிவை படித்து வருவதுதான் என்னை மீண்டும் மீண்டும் பதிவுகளை இடத் தூண்டுகிறது .//
நன்றி சார்.
யென் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு!
தங்கம் இறங்க மாட்டிங்குது!
நன்றி தாமஸ் ரூபன்!
//யென் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு!
தங்கம் இறங்க மாட்டிங்குது!//
சந்தைகள் இப்போது ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் உள்ளன என்று நினைக்கிறேன்.
யூரோ மதிப்பு உயரும் அதே சமயத்தில் ரூபாய் இறங்குகிறது.
ரூபாய் மதிப்பு இறங்கும் அதே சமயத்தில் இந்திய பங்கு சந்தை உயர்கிறது.
தங்கத்தை பொறுத்த வரை பதிவிலேயே சொன்ன படி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், தங்கத்தின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.
இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லா சந்தையிலும் பாய்ந்து விட்டு பின்னர், தங்கம் கச்சா எண்ணெய் போன்ற கமாடிடி சந்தைகளில் டாலர் செல்லும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
Post a Comment