Saturday, August 8, 2009

அசலூர் நல்ல செய்தியும் உள்ளூர் கெட்ட செய்தியும்!


முதலில் அசலூர் நல்ல செய்தியை சொல்லி விடுகிறேன். அமெரிக்காவில் வெகுகாலத்திற்கு பிறகு (ஒரு வருடத்திற்கும் மேலாக) , வேலை இல்லாதோர் விகிதம் (Unempoyment Data) குறைந்திருப்பதாக அங்கிருந்து வரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விபரம் அமெரிக்காவின் பொருளாதார தேக்க நிலை கிட்டத்தட்ட முடிவுக்கு அருகே வந்து விட்டதை வெளிக்காட்டுகிறது. (அதே சமயம் முழுமையான மீட்சி எப்போதென்று அறுதியிட்டு கூறுவது கடினம்)

அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அந்நாட்டு பொருளாதார நிலையை சரிசெய்வதற்காக பல லட்சம் கோடி அமெரிக்க டாலரை இதுவரை சந்தையில் இறக்கி விட்டுள்ளது. மிக குறைந்த வட்டியில் அங்கு பெறப் படும் பணமானது, தொழில் வளர்ச்சிக்காக உரிய முறையில் பயன்படுத்தப் படாமல், பல்வேறு சந்தைகளில் பாய்ந்து (உலக பங்கு சந்தைகளிலும் பொருட் சந்தைகளிலும்) பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட வித்திட்டுள்ளது.

இப்போது அமெரிக்க பொருளாதாரம் ஓரளவுக்கு சீராக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை, நம் சந்தைகளுக்கு வந்தவுடன் கூடவே ஒரு புதிய பய உணர்வும் ஏற்பட்டுள்ளது. அதாவது இனிமேல் அதிக டாலர் வெளி சந்தைகளுக்கு பயணிக்காமல் உள்ளூர் சந்தையிலேயே (அமெரிக்கா) முதலீடு செய்யப் படலாம் என்ற எதிர்பார்ப்பு தோன்றி உள்ளது.

மேலும் மருந்து உணவாக வெகுகாலம் தொடர முடியாது என்ற காலத்தின் கட்டாயத்தில், ஒரு கட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது குறைந்த வட்டிக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேற்சொன்னது போன்ற ஒரு சூழல் ஏற்படுமேயானால், வளரும் நாடுகளுக்கான டாலர் வரவு குறைந்து போக வாய்ப்புள்ளது. (இந்த பயத்தினாலேயே சென்ற வாரம் வளரும் நாடுகளின் சந்தைகள் பெருமளவு வீழ்ந்தன. அதே சமயம் அமெரிக்க சந்தைகள் உயர்வை கண்டதும் குறிப்பிடத் தக்கது.)

இப்போது உள்ளூர் விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு மிகக் குறைவாக உள்ளது என்று இந்திய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 36 உபமண்டலங்களில் 27 உபமண்டலங்களில் மழை அளவு வழக்கத்தை விட மிகவும் குறைவாக உள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்றாலும், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நேரடியாக நம்பி வாழ்கின்றனர் என்ற வகையிலும் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு கிராமப் புற சிறு தொழில்களையும் பாதிக்கும் என்ற வகையிலும் இது ஒரு வருத்தம் தர தக்க செய்திதான்.

மேலும், ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில், மழைக் குறைவினால் நிகழக் கூடிய உணவு பொருட்கள் பற்றாக்குறையானது பதுக்கலையும் பணவீக்கத்தையும் எக்கச்சக்கமாக உயர்த்தி இந்திய பொருளாதாரத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

இப்போதைய நிலையில் நமது பங்கு சந்தை மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்கு (டாலர் வரத்து & இந்திய ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி.)
அதிக சென்சிடிவ்வாக உள்ளது.

இந்த இரண்டு விஷயங்கள் வரும் காலகட்டத்தில் எவ்வாறு மாறப் போகின்றன என்பதைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.

ஒருவேளை அமெரிக்காவில் நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, மழைக் குறைவினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப் படுமேயானால், மென்பொருட் துறை, எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இதர ஏற்றுமதி துறைகளில் முதலீடு செய்யலாம். அதே சமயம் உள்ளூர் பொருளாதாரத்தை அதிகம் நம்பியுள்ள வங்கித் துறை, வாகனத் துறை, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு துறை போன்றவை பாதிக்கப் படலாம்.

இப்போது தொழிற்நுட்ப நிலைகளுக்கு வருவோம்!


நாம் ஏற்கனவே சென்ற வாரம் சொன்னபடி 4700 புள்ளிகள் (நிபிட்டி) நிலையை முழுமையாக முறியடிப்பது சந்தைகளுக்கு பெரிய சவாலாக இருந்ததும் அந்நிலையை முறியடிக்க முடியாமல் பெரிய அளவில் சரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிபிட்டி எதிர்ப்பு நிலைகள் - 4430 & 4320 & 4200
நிபிட்டி அரண் நிலைகள் - 4550 & 4580 & ௪௭௦௦

அதே சமயம் முன்சொன்ன அடிப்படை அம்சங்களின் நிலைபாடுகளில் ஏற்படும் மாறுபாடுகளை சார்ந்தே வரும் வாரம் சந்தைகள் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

13 comments:

Anonymous said...

போன மாசம் 97000 பேரு அவுட்டாமே?

Maximum India said...

நன்றி புகழினி!

Payrolls fell by 247,000, after a 443,000 loss in June, the Labor Department said yesterday in Washington. The jobless rate unexpectedly dropped to 9.4 percent from 9.5 percent.

ப்ளூம்பெர்க் தகவலின் படி அமெரிக்காவில் கடந்த மாத வேலை இழப்பு எண்ணிக்கை 2,47,000. இது முந்தைய மாதத்தை விட (4,43,000) மிகவும் குறைவு ஆகும்.

வேலை இழப்பு விகிதம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.4 சதவீதமாக குறைந்து இருப்பது அந்நாட்டு சந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதே சமயம் வேலை இழப்பு விகிதம் பத்தை தொடும் என்று அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. பொருளாதார மீட்சி 2010 ஆண்டில்தான் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி

.

ரஹ்மான் said...

//இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்றாலும், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நேரடியாக நம்பி வாழ்கின்றனர்//
//ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில்//

விவசாயம் பாதித்தாலே நம் நாட்டு பொருளாதாரம் ஆட்டம் காண அதிக வாய்ப்பு இருக்கிறது.அதனுடைய பாதிப்பு பங்குசந்தையிலும் காணப்படும்.
உண்மையான பணவீக்கம் என்றால் இவ்வளவு நாட்களாக நடந்தது என்ன?

அருமையான பதிவு சார் நன்றி

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

இப்போதைய பணவீக்க புள்ளிவிபரத்திற்கும் உண்மையான விலைவாசி உயர்வு பற்றியும் ஒரு தனி பதிவே போட்டிருக்கிறேன்!

http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post_24.html

நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!

நன்றி!

Thomas Ruban said...

//மருந்து உணவாக வெகுகாலம் தொடர முடியாது//

அர்த்தமுள்ள வரிகள்.

அரசாங்கம் கொடுக்கும் எல்லா புள்ளி விவரங்களையும் நம்பினால் நாம் புள்ளிராஜா ஆகிவிடவேண்டியதுதான்

இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு 25% குறைவாக உள்ளது என்று இந்திய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நம் நாட்டின் GTP வளர்ச்சி விகிதம் 6.2% இருந்து 4.9%விகிதமாக குறையும் வாய்ப்பு உள்ளது.

//அதே சமயம் முன்சொன்ன அடிப்படை அம்சங்களின் நிலைபாடுகளில் ஏற்படும் மாறுபாடுகளை சார்ந்தே வரும் வாரம் சந்தைகள் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

நன்றி சார்.

புதியதாக சந்தைக்கு வந்துள்ள 36Rs NHPC IPO ல் (பிரிமியம் குறைவாக உள்ளதால்)கம்பெனியில் விண்ணிப்பிக்கிலமா?

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//அரசாங்கம் கொடுக்கும் எல்லா புள்ளி விவரங்களையும் நம்பினால் நாம் புள்ளிராஜா ஆகிவிடவேண்டியதுதான்//

நன்றாக சொன்னீர்கள்!

// இதனால் நம் நாட்டின் GTP வளர்ச்சி விகிதம் 6.2% இருந்து 4.9%விகிதமாக குறையும் வாய்ப்பு உள்ளது. //

தகவலுக்கு நன்றி!

//புதியதாக சந்தைக்கு வந்துள்ள 36Rs NHPC IPO ல் (பிரிமியம் குறைவாக உள்ளதால்)கம்பெனியில் விண்ணிப்பிக்கிலமா?//

பிரிமியத்தின் அடிப்படையில் ஒரு ஐபிஒ வில் முதலீடு செய்யக் கூடாது. மற்றபடிக்கு வெகுகாலத்திற்கு பின் வரும் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த ஐ பி ஒவிற்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தால் ஒரு தனி பதிவாக நாளை போட்டு விடுகிறேன்.

நன்றி!

கார்த்திக் said...

// மேலும், ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில், //

பணவீக்கம் மைனஸ்லைல போகுது :-))
அது என்ன கணக்குல போகுதுன்னே தெரியலங்க.
// முடிந்தால் ஒரு தனி பதிவாக நாளை போட்டு விடுகிறேன்.//

நன்றி

Maximum India said...

நன்றி கார்த்திக்!

வால்பையன் said...

தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!

Maximum India said...

நன்றி வால்பையன்!

//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!//

ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இன்றைய நாள் NHPC பதிவிற்காக செலவிடப் பட்டு விட்டது.

நன்றி.

Maximum India said...

//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!//

//ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இன்றைய நாள் NHPC பதிவிற்காக செலவிடப் பட்டு விட்டது.//

அன்புள்ள வால்பையன்!

தங்கத்தின் நிலைப்பாடு டாலர் நிலையைப் பொறுத்தே அமையும். இப்போது டாலர் ஓரளவுக்கு வலிவு பெற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது. டாலர் வலிவு பெறும் வரை தங்க விலை நலிவடைந்தே காணப் படும். தொழிற்நுட்ப ரீதியாக தங்கத்தின் எதிர்ப்பு நிலை 950 டாலருக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

நன்றி.

வால்பையன் said...

தற்ச்சயம் 946$

ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 1650$ வரை செல்லும்னு எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி டரியலாக்கிட்டான் அதான் கேட்டேன்!

Maximum India said...

//ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 1650$ வரை செல்லும்னு எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி டரியலாக்கிட்டான் அதான் கேட்டேன்!//

ரொம்ப திட்டாதீங்க. பாவம் அவர்.

சந்தையில இதெல்லாம் சகஜமப்பா!

நன்றி.

Blog Widget by LinkWithin