Wednesday, August 19, 2009

முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை


பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன.

வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது.

இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.

வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள்.

ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய ஒரு விசாலமான அறிவு தேவைப் படும்.

மேலும் பங்கு முதலீட்டை பொறுத்த வரை, இறந்த காலத்தை விட எதிர் காலத்திற்கே அதிக மதிப்பு என்பதால், இந்த நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.

இப்படி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் உடனடியாக முதலீடு செய்வதில்லை. சரியான விலைக்காக காத்திருக்கிறார்கள். சரியான விலையை கண்டறிய சில கணித முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கணக்கு என்றவுடன் பயப் பட வேண்டாம்.

இன்று தாமும் பெருமளவுக்கு தோல்வியடைந்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களையும் அதிகம் தோல்வியுற செய்யும் பல நிபுணர்கள் எளிதில் விளங்காத கடினமான கணித முறைகளை பின்பற்ற வாரன் பபெட் போன்ற வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் மிக மிக எளிமையான கணக்கு முறையையே பின்பற்றி வருகின்றனர்.

இந்த புத்திசாலிகளை சந்தையின் குறுகிய கால மாற்றங்கள் பாதிப்பதில்லை. ஊடகங்கள் பரப்பும் வதந்திகள், பீதிகள், உள்ளிருப்பு தகவல்கள் (Insider Information) போன்றவற்றையும் இவர்கள் உதறித் தள்ளி விடுகிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் ரியாக்சனை விட ஆக்சனை விரும்புகிறார்கள்.

இதயம் சொல்வதை கேட்காமல் மூளை சொல்வதை அதிகம் கேட்கிறார்கள்.

அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள்.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஆண்டறிக்கையை இது போன்ற புத்திசாலிகள் படிக்க, இந்த நிறுவனத்தை வாங்கலாமா வேண்டாமா என்று ஊடக நிபுணர்கள் தரும் பரிந்துரையை நம்மைப் போன்றவர்கள் படிக்கின்றோம்.

இந்த பங்கின் விலையை மட்டுமே நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, இவர்களோ, நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நூறு புள்ளிகள் உயர்ந்து விட்டாலே கண்ணை மூடிக் கொண்டு உள்ளே குதிக்கும் நம் போன்றவர்க்கு மத்தியில் வருடக் கணக்காக கூட இவர்களால் பொறுமையாக இருக்க முடியும். அந்த பொறுமை இவர்களின் முடிவு எடுக்கும் திறன் மீது இவர்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

இவர்களின் பாதை அறிவார்த்தமானது. அபாயங்கள் குறைந்தது.

இவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகம். சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இவர்களை பெருமளவுக்கு பாதிப்பதில்லை.

இந்த பாதை இப்போதைக்கு சற்று சிரமமாக தோன்றினாலும், அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

அவர்களுடைய புத்திசாலித்தனம் தானாக வந்ததல்ல. அவர்களுடைய கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.

அந்த புத்திசாலிதனத்தை நாமும் அடைந்து இந்த பாதையில் நம்மாலும் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வல்ல விளக்கமான பதிவுகள் விரைவில்.

பயணம் தொடரும்.

24 comments:

வால்பையன் said...

வாரன் பப்பட் முறையே சிறந்தது.
அதற்கு சான்று அவரது வெற்றி!

ரஹ்மான் said...

/இப்படி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் உடனடியாக முதலீடு செய்வதில்லை. சரியான விலைக்காக காத்திருக்கிறார்கள்.//
நாம்தான் காத்திருப்பதை விரும்புவதில்லையே.
//இன்று தாமும் பெருமளவுக்கு தோல்வியடைந்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களையும் அதிகம் தோல்வியுற செய்யும் பல நிபுணர்கள் எளிதில் விளங்காத கடினமான கணித முறைகளை பின்பற்ற வாரன் பபெட் போன்ற வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் மிக மிக எளிமையான கணக்கு முறையையே பின்பற்றி வருகின்றனர். .//
சரியாக சொன்னீர்கள் சந்தை நூறு புள்ளி இறங்கிவிட்டாலே இனி சந்தையின் போக்கு கீழ் நோக்கியே இருக்கும்.சந்தை மீண்டும் திரும்ப சில காலம் பிடிக்கும் என்பார்கள் நிபுணர்கள்.அவர்கள் சொன்ன மறுநாளே சொன்னதற்கு எதிர்பக்கமாக சந்தை திரும்பும்.
//ஒரு நூறு புள்ளிகள் உயர்ந்து விட்டாலே கண்ணை மூடிக் கொண்டு உள்ளே குதிக்கும் நம் போன்றவர்க்கு மத்தியில் வருடக் கணக்காக கூட இவர்களால் பொறுமையாக இருக்க முடியும். அந்த பொறுமை இவர்களின் முடிவு எடுக்கும் திறன் மீது இவர்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.//
வாரன் பபெட் ஒருமுறை "நான் மிதலீடு செய்த நிறுவனம் சந்தையில் பல வருடங்கள் list ஆகாமலிருந்தாலோ அல்லது சந்தையே மூடியிருந்தாலோ எனக்கு கவலை இல்லை அந்த நிறுவனம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில்"
நம்மிடம் பொறுமை என்பது மட்டும் கடுகளவும் இல்லை.இஸ்லாத்தில் ஒரு பழமொழி உண்டு பொறுமை ஈமானில் பாதி என்று.(ஈமான் - இறைநம்பிக்கை)

DG said...

"பொருத்தார் பூமியால்வார்"

"பப்பட்" ஆள்கிளார்


நன்றி

Maximum India said...

நன்றி வால்பையன்!

//வாரன் பப்பட் முறையே சிறந்தது.
அதற்கு சான்று அவரது வெற்றி!//

உங்கள் கணிப்பு ஒரு வகையில் சரிதான். ஆனால், இன்னும் நான் மூன்று பாதைகளை சொல்லி முடிக்க வில்லையே. அதற்குள் என்ன அவசரம்?

மேலும் வாரன் பபெட் தலை சிறந்த முதலீட்டாளர் என்றாலும் அவரது வழிமுறை நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு எந்த அளவுக்கு பொருந்தக் கூடும் என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா?

இன்னும் விரிவாக பிறகு பார்ப்போம்!

நன்றி.

வால்பையன் said...

//இன்னும் நான் மூன்று பாதைகளை சொல்லி முடிக்க வில்லையே. அதற்குள் என்ன அவசரம்?//

வேறு சிறந்தது இருந்தால் அதை தானே முதலில் சொல்லியிருப்பீர்கள்!?

:)

Thomas Ruban said...

//இந்த புத்திசாலிகளை சந்தையின் குறுகிய கால மாற்றங்கள் பாதிப்பதில்லை. ஊடகங்கள் பரப்பும் வதந்திகள், பீதிகள், உள்ளிருப்பு தகவல்கள் (Insider Information) போன்றவற்றையும் இவர்கள் உதறித் தள்ளி விடுகிறார்கள்.//

உண்மைதான் சார்.

//அந்த புத்திசாலிதனத்தை நாமும் அடைந்து இந்த பாதையில் நம்மாலும் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வல்ல விளக்கமான பதிவுகள் விரைவில்.//

காத்துக்கொண்டுயிருக்கிறோம்.

நன்றி.. நன்றி.

Maximum India said...

நன்றி ரஹ்மான்!

// சந்தை நூறு புள்ளி இறங்கிவிட்டாலே இனி சந்தையின் போக்கு கீழ் நோக்கியே இருக்கும்.சந்தை மீண்டும் திரும்ப சில காலம் பிடிக்கும் என்பார்கள் நிபுணர்கள்.அவர்கள் சொன்ன மறுநாளே சொன்னதற்கு எதிர்பக்கமாக சந்தை திரும்பும்.//

அருமையாக சொன்னீர்கள். அதுவும் சில சமயங்களில் அவர்களது பரிந்துரைகள் காலந்தாழ்த்தி அதாவது காலாவதியான பின்னர் ஒளிபரப்பப்படும் போது வேடிக்கையாக இருக்கும்.

//வாரன் பபெட் ஒருமுறை "நான் மிதலீடு செய்த நிறுவனம் சந்தையில் பல வருடங்கள் list ஆகாமலிருந்தாலோ அல்லது சந்தையே மூடியிருந்தாலோ எனக்கு கவலை இல்லை அந்த நிறுவனம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில்"//

எப்படிப் பட்ட மனிதர் அவர்? தன்னுடைய சம்பாத்தியங்களில் பெரும்பகுதி நற்காரியங்களுக்கு கொடையாக கொடுத்து விட்டார். மேலும் அவரை சந்தித்த பில் கேட்ஸ் அவர்களையும் நற்காரியங்களுக்கு கொடை அளிக்க பெரும் தூண்டுதலாக இருந்திருக்கிறார்.

//நம்மிடம் பொறுமை என்பது மட்டும் கடுகளவும் இல்லை.இஸ்லாத்தில் ஒரு பழமொழி உண்டு பொறுமை ஈமானில் பாதி என்று.(ஈமான் - இறைநம்பிக்கை)//

அற்புதமான பழமொழி. தமிழில் கூட ஒரு வாசகம் உண்டு.

""அதாவது பொறுத்தார் பூமி ஆழ்வார்"

நன்றி ரஹ்மான்!

Maximum India said...

//வேறு சிறந்தது இருந்தால் அதை தானே முதலில் சொல்லியிருப்பீர்கள்!?

:)//

தல......................................................!

கலக்குறீங்க!


இருந்தாலும் ஹிந்தியில் "அந்தர் சிகந்தர்" என்பார்கள் . அதாவது கடைசிதான் பெஸ்ட் என்ற பொருள். :)

எனக்கு பிடித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதிகம் வொர்க் அவுட் ஆனது மூன்றாவது வழிதான். அதை கொஞ்சம் டெவலப் செய்தால் நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்கள் கூட நன்கு வெற்றி பெறலாம்.

அதே சமயத்தில் இந்த தொடர் பதிவில், மூன்று பாதைகளைப் பற்றியும் நன்கு விளக்கமாகவே சொல்லப் போகிறேன். யாருக்கு எது வொர்க் அவுட் ஆகிறதோ அதையே பின்பற்றட்டும்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

//"பொருத்தார் பூமியால்வார்"

"பப்பட்" ஆள்கிளார்//

குட்டிக் கவிதை. அழகாக உள்ளது.

நன்றி DG

அகில் பூங்குன்றன் said...

ஆரம்பம் அசத்தலாக உள்ளது.

வாரன் பப்பட் முறை இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்துமா...


நம்ம நீண்ட காலம் என்பது 1- 2 ஆண்டுகள்தானே.

பொதுஜனம் said...

சிறப்பான தொடக்கத்திற்கு பாராட்டுக்கள். காசு வாங்கி கொண்டு டீவீயில் பேசுவோர் போல் அன்றி, பத்திரிக்கைகளில் எழுதுவோர் போல் அன்றி, முகம் தெரியாத இணைய தளத்தில் தனக்கு தெரிந்ததை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு பாராட்டுக்கள். நீர் அள்ள அள்ள நீர் ஊரும் என வள்ளுவர் சொன்னது போல் நீங்களும் சுடர் கொண்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

Maximum India said...

நன்றி அகில் பூங்குன்றன்!

//வாரன் பப்பட் முறை இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்துமா...//

உங்களுடையது நியாயமான கேள்வி. வாரன் பப்பட் போன்றவர்களால் ஒரு நிறுவனத்தின் தலைமையுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த முடியும். சொல்லப் போனால் ஒரு நிர்வாகத்தில் ஏராளமான மாறுதல்களைக் கூட செய்ய முடியும். நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தின் உண்மையான பக்கத்தை அறிந்து கொள்வது சற்று கடினம்தான்.

அதே சமயம் வாரன் பபெட் வழி ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. மேலும் இரண்டு பாதைகள் உண்டு. அவற்றையும் பார்த்த பின்னே நம்முடைய வழியை நாமே நிர்ணயிப்போம். அது ஒரு தனி வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Maximum India said...

//சிறப்பான தொடக்கத்திற்கு பாராட்டுக்கள். //

என்னை இணையத்திற்கு வெளியேயும் புரிந்து வைத்துள்ள, நீண்ட நாள் அருமை நண்பர், அறிவைத் தேடும் எனது இந்த பயணத்தில் துணை வருவது எனக்கு பெருத்த நம்பிக்கையை கொடுக்கிறது. நல்ல உற்சாகத்தையும் கொடுக்கிறது.

உங்கள் வரவு நல்வரவாகுக.

// நீர் அள்ள அள்ள நீர் ஊரும் என வள்ளுவர் சொன்னது போல் நீங்களும் சுடர் கொண்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி. இந்த தொடர்பதிவுக்காக நான் பல நூல்களை படிக்கவும் புதிய பரிசோதனைகள் செய்யவும் வேண்டியிருக்கும். அது எனது வாழ்வில் மேலும் சுவை கூட்டும் என்று நம்புகிறேன்.

நன்றி பொதுஜனம்!

பீர் | Peer said...

இப்பவே கருத்து சொல்லக்கூடாதுன்ன சொல்லிட்டீங்க...

காத்திருக்கிறேன்.

Maximum India said...

நன்றி பீர்!

//இப்பவே கருத்து சொல்லக்கூடாதுன்ன சொல்லிட்டீங்க... //

மூன்று பாதைகளைப் பற்றி முழுமையாக சொல்லி முடிக்கும் முன்னர் மூன்றில் சிறந்தது எது என்று இப்போதே முடிவு செய்ய வேண்டாம் என்றுதான் கூறினேன் . மற்றபடிக்கு இந்த பாதையை பற்றிய உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம்.

நன்றி.

ravikanth k said...

உங்களின் முன்னுரை என்னுடைய எதிபார்பை அதிகப்படுத்தி இருக்கிறது. உங்களின் எழிய முறை விளக்கங்கள் எப்போதுமே அருமையாக இருக்கும். அதே சமயம் இந்த பதிவு விரிவானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். என்னை போன்ற மாணவர்கள் குறைந்த முடலீடோடு எப்படி சந்தைக்குள் நுழைவது என்பது பற்றியும் சொல்லுமாறு கேட்டுகொள்கிறேன். மேலும் பல இன்டர்நெட் தொடர் பதிவுகள் ஆரம்பத்தில் இருக்கும் motivation போக போக குறைந்து , பாதியிலே நிருதபடுகின்றன. இந்த பதிவு அவைகளை போல் இருக்காது என்று நம்புகிறேன். உங்கள் முயற்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். வரபோகும் பதிவுகழுகாக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Thomas Ruban said...

இன்றைய பங்கு சந்தையில் பட்டியியல்யிடப்பட்ட ADANIPOWER(100Rs) அதிகபட்ச்சமாக110 கும் குறைதபட்ச்சமாக 98.30 கும் வர்த்தகத்தின் முடிவில்100.10 கும் விலை போனது.(22 மடங்கு விண்ணப்பம் வந்திருந்தும்) சந்தையில் வெற்றி பெறதக்காரணம் என்ன சார்?.


அதிகம் எதிர்பார்க்கப்பட்டதல்தனோ!
(இன்று சந்தை உயர்ந்திருந்தும்) இதைப்பற்றி உங்களுடைய மேலனக்கருத்து என்ன சார்.

நன்றி சார்.

Maximum India said...

நன்றி ரவிகாந்த்!

//உங்களின் முன்னுரை என்னுடைய எதிபார்பை அதிகப்படுத்தி இருக்கிறது. //

உங்களுடைய எதிர்பார்ப்பை ஓரளவுக்கேனும் ஈடுகட்ட முயற்சிப்பேன்.

//உங்களின் எழிய முறை விளக்கங்கள் எப்போதுமே அருமையாக இருக்கும். அதே சமயம் இந்த பதிவு விரிவானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். என்னை போன்ற மாணவர்கள் குறைந்த முடலீடோடு எப்படி சந்தைக்குள் நுழைவது என்பது பற்றியும் சொல்லுமாறு கேட்டுகொள்கிறேன். //

இந்த தொடர்பதிவு நீங்கள் ஒரு வெற்றிகரமான பங்குச்சந்தை நிபுணர் ஆவதற்கான சிறப்பான அஸ்திவாரம் அமைக்க உதவும் என்று நம்புகிறேன்.

//மேலும் பல இன்டர்நெட் தொடர் பதிவுகள் ஆரம்பத்தில் இருக்கும் motivation போக போக குறைந்து , பாதியிலே நிருதபடுகின்றன. இந்த பதிவு அவைகளை போல் இருக்காது என்று நம்புகிறேன். //

உங்களுடைய ஆதங்கம் நியாயமானதே. ஒரு உயரிய நோக்குடன் இந்த தொடர் பதிவு ஆரம்பித்திருக்கிறேன். சரியாக நிறைவேறுமா என்ற பொறுப்பு கலந்த பயம் அவ்வப்போது தலை தூக்குகிறது. இந்த தொடர்பதிவில் நீங்கள் தொடர்ந்து ஆஜர் ஆவது கூட ஒரு வகையில் இந்த தொடர்பதிவை நிறுத்தாமல் தொடர உதவியாக இருக்கும்.

//உங்கள் முயற்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்வரபோகும் பதிவுகழுகாக ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

மிக்க நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//இன்றைய பங்கு சந்தையில் பட்டியியல்யிடப்பட்ட ADANIPOWER(100Rs) அதிகபட்ச்சமாக110 கும் குறைதபட்ச்சமாக 98.30 கும் வர்த்தகத்தின் முடிவில்100.10 கும் விலை போனது.(22 மடங்கு விண்ணப்பம் வந்திருந்தும்) சந்தையில் வெற்றி பெறதக்காரணம் என்ன சார்?.

அதிகம் எதிர்பார்க்கப்பட்டதல்தனோ!
(இன்று சந்தை உயர்ந்திருந்தும்) இதைப்பற்றி உங்களுடைய மேலனக்கருத்து என்ன சார். //

புதிய பங்கு வெளியீட்டாளர்கள் பெரும்பாலான தருணங்களில் அதிக ஆசை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால், பங்கின் மதிப்பை விட மிக அதிக அளவில் வெளியீட்டு விலையை நிர்ணயிக்கிறார்கள். இதில் அரசாங்கமும் அடக்கம் என்பது பற்றி NHPC பங்கு வெளியீட்டு பற்றிய பதிவில் கூட சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்.

இப்படி மதிப்பை மீறிய பங்கில், லிஸ்டிங் லாபத்திற்காக ஏராளமானவர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த வெளியீடு மிகப் பெரிய அளவிலானது என்பதால், வஞ்சனையின்றி பங்குகள் பலருக்கும் வழங்கப் படுகிறது.

அவ்வாறு பங்குகள் கிடைக்கப் பெறும் அனைவரும் லிஸ்டிங் நாளில் லாபம் பார்ப்பதற்காக விற்க முனைவதால் பங்கின் விலை பெருமளவிற்கு உயர்வதில்லை. சந்தையின் ஏற்றத்தாழ்வுகளும் ஒரு காரணம். அடுத்தடுத்து வெளியீட்டிற்காக பெரிய பங்குகள் காத்திருப்பதாலும் இந்த பங்கு லிஸ்ட் ஆன பிறகு முதலீட்டாளர்களுக்கு அதிக ஆர்வம் இல்லை என்று தோன்றுகிறது.

இருந்தாலும் கூட அடானி குழுமத்தின் மீது சந்தை முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருப்பதால் இந்த பங்கு வெளியீட்டு விலைக்கு கீழே செல்ல வில்லை என்று சொல்லப் படுகிறது. ஒவ்வொரு IPO முதலீட்டுக்கு முன்னரும் ரிலையன்ஸ் பவர் கதையை ஒரு முறை சிந்தித்து பார்த்து செயல் படுவது நல்லது.

நன்றி.

Thomas Ruban said...

உங்களுடைய மேலனக்கருத்துக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

இது போன்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருங்கள். அப்போதுதான் இந்த பதிவிற்கு வருகை தரும் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

நன்றி.

மஞ்சூர் ராசா said...

இந்த பதிவை இன்று தான் படிக்க ஆரம்பித்தேன் அதுவும் நீங்கள் சொன்ன பிறகே. மிகவும் பயனுள்ள பதிவு. உங்களின் பதிவுகளால் பலரும் பயனடைவார்கள். அதுவே உங்களுக்கான வெற்றி.

தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

Maximum India said...

நன்றி மஞ்சூர் ராசா!

தயவு செய்து பதிவுகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்

நன்றி.

Blog Widget by LinkWithin