
ஒரு குறிப்பிட்ட நிலைதான் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு சரியான அளவு என்றால் மற்ற நேரங்களில் யாரால் வர்த்தகம் செய்ய முடியும்?
வாங்குவதற்கு சரியான விலை என்று எல்லாருமே ஒரு விலையை நினைத்தால் அந்த விலையில் யார்தான் விற்பார்கள்?
நடைமுறையில், சந்தையின் எல்லா தருணங்களிலும் வாங்குபவர்களும் இருக்கின்றனர். விற்பவர்களும் இருக்கின்றனர்.
இவர்களில், தொழில் முறை தின வர்த்தகர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பங்குதரகர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு பங்கு வர்த்தகம் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அந்தந்த தருணத்தில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலும் தொழிநுட்ப வரைபடங்களின் அடிப்படையிலும் (Technical Analysis) சந்தையின் போக்கின் (Trend) அடிப்படையிலும் இயங்குகின்றனர். (ஒரு நிமிடம் என்பது இவர்களைப் பொறுத்த வரை மிகப் பெரிய கால இடைவெளி.) இவர்களின் ரியாக்சன் மிக வேகமானதாக இருக்கும். அந்த வேகம்தான் அவர்களுடைய பலமாகும்.
இவர்களின் பாணியை நம்மில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியாது என்பதால் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள குறுகிய கால வர்த்தகர்களின் பாதைக்கு செல்வோம்.
இந்த பாதையை உழைப்பாளிகளின் பாதை என்றும் திறமைசாலிகளின் பாதை என்றும் சொல்லலாம். காரணம் இவர்கள் இயல்பிலேயே திறமைசாலிகள் மற்றும் சந்தையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பவர்கள்.
செய்திகளை சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில்தான் இவர்களின் பலம் அடங்கி இருக்கிறது.
இதற்காக இவர்கள் படும் பாடு சாமான்யமானதல்ல. காலை முதல் இரவு வரை சில சமயங்களில் இரவு நேரங்களில் கூட இவர்கள் கடுமையாக உழைப்பார்கள்.
இவர்களது கண் பார்வை எப்போதுமே வணிக தொலைக்காட்சிகளின் மீதேதான் இருக்கும். கையில் எப்போதும் வணிக தாள்கள் அல்லது வணிக இதழ்கள் இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இவர்கள் நடத்தும் பெரும்பாலான உரையாடல்கள் பங்கு வணிகத்தை சார்ந்தே இருக்கும்.
ஏராளமான தரகர்களுடனும் இதர வர்த்தகர்களுடனும் இவர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பார்கள். நிபுணர்களின் பரிந்துரையை இவர்கள் விழுந்து விழுந்து படிப்பார்கள். யாராவது ஏதாவது டிப் தருவார்களா என்று எப்போதும் எதிர்பார்த்திருப்பார்கள்.
இவர்களில் சிலர் குறுக்கு வழியிலும் செல்வார்கள். சிலர் குழுக்களாக சேர்ந்து கொண்டு "தப்பு" விளையாட்டு விளையாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக, நீண்ட கால நோக்கில் மட்டுமே செயல்பட வேண்டிய பரஸ்பர நிதிகளில் சில கூட இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றன என்பது சந்தை தகவல்.
இவர்கள் வதந்தியையும் நிறுவனங்களின் உள்தகவல்களையும் முந்தியே அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள், எந்த பங்கில் ஆர்வம் காட்டுகிறார்கள், வாரன் பபெட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் எந்த பங்கில் முதலீடு செய்கிறார்கள் என்பதையெல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் புள்ளி விவரங்களின் ராஜாக்கள்.
இந்த புள்ளி ராஜாக்கள், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், மழை நிலவரம், அரசியல் மாற்றங்கள் என்று எல்லா முக்கிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். (சில சமயங்களில் அதிகாரபூர்வ தகவல்களுக்கு முன்னரே கூட)
இது போன்ற பொதுவான தகவல்கள் மட்டுமல்லாமல், பன்றி காய்ச்சல் போல புதிது புதிதாக வரும் பொருளாதார வைரஸ்(தகவல்)களையும் சந்தைக்கு முந்தியே அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துவார்கள். (இதைப் பற்றிய ஒரு வேடிக்கையான பழைய பதிவு இங்கே) சமீபத்திய சில உதாரணங்கள், டாலர் வரத்தை அறிய உதவும் டாலர் இன்டெக்ஸ், உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணிக்க உதவும் பால்டிக் ட்ரை இன்டெக்ஸ், சீனா பப்புள் போன்றவை.
இவர்களை நெரிசலான சாலை போக்குவரத்தில் குறுக்கிலும் நெடுக்கிலும் நுழைந்து, முந்தியடித்து பயணம் செய்யும் நம் சக வாகன ஓட்டிகளுடன் ஒப்பிடலாம். பொதுவாக ஒரு போக்குவரத்து நெரிசலின் போது, சாலையின் சராசரி வேகத்தை மிஞ்சுவது கடினம் என்றாலும் (ஒரு சிக்னலில் தப்பித்தால் இன்னொன்றில் மாட்டிக் கொள்வோம்) இவர்கள் அயராது முயற்சிப்பார்கள். மஞ்சள் சிக்னல் விழுந்தாலும் இவர்கள் வேகத்தை குறைக்காமல் (அதுதான் இவர்களுக்கு பழக்கம் இல்லையே) செல்வார்கள். இதனாலேயே இவர்களில் பலர் அதிகம் விபத்துகளில் மாட்டிக் கொள்வார்கள்.
இப்படி விபத்துக்களில் மாட்டாதவர்கள் மிகக் குறைவு என்றாலும், இவர்களுடைய வருங்கால பயணத்திற்கு அதிக உத்தரவாதம் இல்லை
இவர்களது சக்திநிலை அபாரமானது.
இவர்களது வேகமும் அசாத்தியமானது.
அதே சமயம், இந்த திறமை அளவை ஒவ்வொரு நாளும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கின்றனர். காரணம் இவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகம். அவர்களும் இவர்களைப் போலவே மிகவும் திறமைசாலிகள். அவர்களை ஜெயித்தால் மட்டுமே இவர்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் இந்த வகை பயணிகளுக்கு எப்போதுமே நெருக்கடி அதிகம்.
இவை எல்லாவற்றையுமே மீறி வருபவர்கள் வெகு சிலர் மட்டுமே.
எனவே இந்த பாதையில் வெற்றி வாய்ப்பு சற்று குறைவு.
கண்டிப்பாக இந்த பாதையை நான் உங்களுக்கு பரிந்துரைக்க போவதில்லை என்றாலும், இந்த பாதையைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் அவசியம். காரணங்கள் இரண்டு.
இந்த பாதையில் பழக்கப் பட்ட பயணிகள் ஆபத்தானவர்கள். சமயத்தில் தாறுமாறாக வண்டியை ஒட்டி, ஒழுங்கான பாதையில் செல்லும் நம்மையும் பதம் பார்த்து விடுவார்கள்.
இரண்டாவது காரணம், இந்த வகையினரே சந்தை வர்த்தகர்களில் மிகப் பெரும்பான்மையினர். (பெரும்பான்மையின் முடிவு பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும் என்பதை சந்தை பலமுறை உறுதி செய்கிறது என்பது நினைவு கூறத் தக்கது) சந்தையின் பெரும்பான்மையினரின் மனப்பாங்கை சரியாக புரிந்து கொள்ளாமல் சந்தையில் வெற்றி பெறுவது கடினமான விஷயம்.
ராட்சச வேட்டை சுறாக்களிடையேயான இந்த பயணத்தில் திரில் அதிகம் என்பதோடு இந்த பாதையிலும் சில முறை பயணம் செய்வது ஒருவரது சந்தை அனுபவத்தை மேம்படுத்தும்.
அதே சமயம், (இந்த பாதையில் பயணம் செய்யும் போது) விபத்துக்களில் மாட்டாமல் காயங்களின்றி எப்படி வெளிவருவது என்பதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
பயணம் தொடரும்.
Comments
இம்முறைய பயன்படுத்தி தான் நாங்கள் கமாடிடியில் விளையாடி கொண்டிருகிறோம்!
தின வர்த்தகம் ரிஸ்க் தான் என்றாலும் ஸ்டாப்லாஸ் காப்பாற்றுகிறது!
பல தகவல்கள் புதிதாக இருக்கிறது...
வெற்றிகரமான பயணம் தொடர பயணியின் வாழ்த்துக்கள்....
சந்தை பற்றி அழாகவும் தெளிவாகவும் எல்லோர்ருக்கும் புரியும்படியும் எழுதுவதற்க்கு நன்றிகள் பல.
பதிவுக்கு நன்றி.
சரியாக சொன்னீர்கள்.
//ராட்சச வேட்டை சுறாக்களிடையேயான இந்த பயணத்தில் திரில் அதிகம் என்பதோடு இந்த பாதையிலும் சில முறை பயணம் செய்வது ஒருவரது சந்தை அனுபவத்தை மேம்படுத்தும்.//
ஆனால் அதற்க்கு கொடுக்கும் விலை ரெம்ப அதிகமாகிவிட்டது.
//அதே சமயம், (இந்த பாதையில் பயணம் செய்யும் போது) விபத்துக்களில் மாட்டாமல் காயங்களின்றி எப்படி வெளிவருவது என்பதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.//
சில விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.முன்பே தங்களின் (அடுத்த) பதிவை முன்பே வெளியிட்டிருந்தால் தப்பித்திருப்பேனோ.
//இம்முறைய பயன்படுத்தி தான் நாங்கள் கமாடிடியில் விளையாடி கொண்டிருகிறோம்! தின வர்த்தகம் ரிஸ்க் தான் என்றாலும் ஸ்டாப்லாஸ் காப்பாற்றுகிறது!//
உண்மைதான். கமாடிடி மற்றும் நாணய சந்தைகளில் இது போன்ற பாணி அதிக வெற்றியை கொடுக்கிறது.
அதே சமயத்தில் பங்கு சந்தையில் இந்த முறையின் வெற்றி சதவீதம் சற்று குறைவுதான்.
நன்றி.
//வெற்றிகரமான பயணம் தொடர பயணியின் வாழ்த்துக்கள்....//
இந்த பயணத்தின் ஊடேயே இந்த பதிவிற்கு வருகை தரும் அனைவரும் நம்பிக்கையோடு பங்கு சந்தையில் காலடி வைத்தால் அதுவே இந்த தொடர் பதிவின் வெற்றியாகும்.
நன்றி.
//பல புதிய தகவல்கள் மிகவும் உபோயோகமாக இருக்கிறது. அடுத்து என்னமாதிரி தகவல்கள் தரப்போகிறிர்கள் என்ற எதிப்பார்ப்பு (ஆவல்) அதிகரித்துயுள்ளது.
சந்தை பற்றி அழாகவும் தெளிவாகவும் எல்லோர்ருக்கும் புரியும்படியும் எழுதுவதற்க்கு நன்றிகள் பல.
பதிவுக்கு நன்றி.//
எந்த ஒரு தகவலையும் புதிய நோக்கில் பார்ப்பதே பங்கு சந்தையில் வெற்றிக்கான அடிப்படைத் தேவை. இங்கேயும் அதே பாணியை கையாள முயற்ச்சிக்கிறேன்.
தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு தரும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
//முதல் பாதையில் வாரன் பபெட் போல இந்த பாதையை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் உள்ளார்களா?//
வாரன் பபெட் அளவுக்கு பங்கு சந்தையில் ஏன் மற்ற சந்தையில் கூட வெற்றி பெற்றவர்கள் யாருமே இல்லை. அதே சமயம் இந்த பாணி, அதிகமாக பொருட்கள் (கமாடிட்டி) சந்தை மற்றும் நாணய சந்தையில் அதிக அளவில் வெற்றியை தேடி தருகிறது. பங்கு சந்தையிலும் கூட ஓரளவுக்கு பலன் தருகிறது என்று சொல்லலாம்.
இந்த பாணியில் வெற்றி அடைந்து பெருமளவுக்கு உயர்ந்தவர்கள் ஏராளம். ஆனால் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, இந்த பாணியின் வெற்றி சதவீதம் சற்றுக் குறைவுதான்.
நன்றி
.
//ஆனால் அதற்க்கு கொடுக்கும் விலை ரெம்ப அதிகமாகிவிட்டது.//
கவலைப் படாதீர்கள். சில பாடங்கள் கற்றுக் கொள்ள கொடுக்கும் விலை அதிகம்தான். அதே சமயம் கற்று கொண்ட பாடங்கள் மூலம் கொடுத்த விலையை விட அதிகம் சம்பாதிக்க முயற்சிப்பது அவசியம்.
//சில விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.முன்பே தங்களின் (அடுத்த) பதிவை முன்பே வெளியிட்டிருந்தால் தப்பித்திருப்பேனோ.//
அடடா!
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விட வில்லை. சந்தை ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புக்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கின்றது.
சந்தை ரகசியங்களை நன்கு கற்றுக் கொண்டு வட்டியும் முதலுமாய் திருப்பி சம்பாதித்து விடலாம் விடுங்கள்.
தன்னம்பிக்கைதான் சந்தை வெற்றியின் முதல் ஆதாரம்.
நன்றி.
நன்றி ரஹ்மான்! பங்கு சந்தையில் வெற்றிக்கான ஒரு முக்கிய டிப் இதோ.
பங்கு சந்தையில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் வெற்றியில் எவ்வளவு அதிகம் சம்பாதிக்கிறோம் என்பதிலும் தோல்வியில் எவ்வளவு குறைவாக இழக்கிறோம் என்பதிலும்தான் நமது வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது.
லாபம் என்றால் ஒரு நிமிடம் கூட நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. அதே நஷ்டம் என்றால் பொறுமையாக காத்துக் கொண்டே இருக்கிறோம்.
மாறாக லாபம் என்றால் அதனை வளர அனுமதியுங்கள். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட லாப வீழ்ச்சி நிறுத்தம் இட்டுக் கொள்ளுங்கள்.
நஷ்டம் என்றால் (உடனடியாக) எங்கே தவறு, இன்னமும் விழ வாய்ப்புள்ளதா, என்று சிந்தியுங்கள். இழப்பு நிறுத்தத்தில் கட செய்து விட்டு சரியான அளவில் மீண்டும் நுழைய முயற்சி செய்யுங்கள்.
நன்றி!