Friday, August 7, 2009

பன்றி காயச்சல் பற்றிய சில தகவல்கள்!பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா என்ற பல கேள்விகள் என்னுள்ளும் ஓடி கொண்டிருந்தன. அவற்றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில விபரங்கள் பகிர்தலுக்காக கீழே.

பன்றி காய்ச்சல் என்பது H1N1 என்ற ஒருவகை இன்ஃபுளுயென்ஸா வைரஸ் A கிருமியினால் உருவாகக் கூடிய காய்ச்சல் ஆகும். இந்த வியாதி சமீபத்தில் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் கண்டறியப் பட்டது.

பொதுவாக இந்த வகை கிருமிகள் பன்றிகளையும் பன்றிகளுடன் நேரடி தொடர்புள்ள மனிதர்களையும் மட்டுமே தாக்கக் கூடியவை. ஆனால் இந்த முறை, மனிதர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு இந்த கிருமிகள் பரவ ஆரம்பித்திருப்பது மனித குலத்திற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.

பொதுவாக இந்த காய்ச்சல் அறிகுறிகள் மற்ற சாதாரண ஃப்ளு காய்ச்சல் அறிகுறிகள் போன்றவைதான். கடுமையான காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்), இருமல் மற்றும் தொண்டையில் கரகர.

சில சிமயங்களில் மூக்கடைப்பு, ஒழுகும் சளி போன்ற மூச்சு சம்பந்தப் பட்ட லேசான வியாதிகளும் கூட பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம்.

இன்னும் சில சமயங்களில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வாந்தி, பேதி தலைவலி, தசை வலி, உடற்சோர்வு, குளிர்நடுக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் தென் பட்டிருக்கின்றன. நிம்மோனியா போன்ற கடும் காய்ச்சலும் ஏற்பட்டு சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வகை அறிகுறிகள் இருந்தாலும், சாதாரண ஃப்ளு காய்ச்சலா அல்லது பன்றி காய்ச்சலா என்பதை குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலமே கண்டறிய முடியும். (real-time RT-PCR, viral culture, four-fold rise in swine influenza A (H1N1) virus-specific neutralizing antibodies)

இந்த வகை காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கும், வேறு ஏதேனும் பெரிய வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்கும் (உயிரிழக்கும் அளவுக்கு) அதிக ஆபத்தானதாக கருதப் படுகிறது.

இந்த வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான வைத்திய முறைகள் எப்படி என்று பார்ப்போம்.

லேசான காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை சுகாதாரமான தனியறையில் (குறைந்த பட்சம் ஏழு நாட்கள் வரை) வைத்து பராமரிக்க வேண்டும். மற்றவர்கள், நோயாளியுடனான நேரடி தொடர்புகளை (ஆறடிக்கு உள்ளே) தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப் பட்ட மருத்துவ முகமூடிகள் உபயோகிப்பது நல்லது. அதிகமான காய்ச்சல் இருந்தாலோ அல்லது மேற்சொன்ன அபாயங்களுக்கு உட்பட்டவராக இருந்தாலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

மூச்சிறைப்பு, மூச்சு தடுமாற்றம், தோல் நிற மாற்றம், வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கும் மூச்சு விட முடியாமல் போவது, நெஞ்சு அல்லது வயிற்று வலி, மயக்க நிலை, குழப்ப நிலை, வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பெரியவர்களுக்கும் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

மற்ற சீசன் வைரஸ் காயச்சல்களைப் போலவே இந்த காய்ச்சலுக்கும், எதிர்ப்பு சக்தி மருந்துகளை உரிய இடைவேளை விட்டு எடுத்துக் கொள்ளவேண்டும். இங்கு தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன. ஆனால் பலருக்கும் (மற்ற சீசன் வைரஸ் காய்ச்சல் போலவே) மருந்துகள் இல்லாமலேயே குணமாகியும் உள்ளன.

(இந்த மருந்துகளை பதுக்கி வைப்பது தவறு என்று அரசு ஆணை இட்டிருப்பதாகவும் அரசாங்கமே அரசு மருத்துவமனைகள் மூலம் இந்த மருந்துகளை விநியோகிப்பதாகவும் அறிகிறேன்)

இந்த வியாதிக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த மருந்து விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்க படுகிறது.

மேலும் இந்த வியாதி பரவி உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுடனான அருகாமையை தவிர்ப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது மற்றும் கைகளை முகத்தில் வைப்பதை தவிர்ப்பது போன்றவையும் இந்த வியாதி அண்டாமல் தடுக்க உதவும்.

இந்த வியாதி பற்றி மிகப் பெரிய பீதி அலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த வியாதியால் பாதிக்கப் பட்டவர்களில் பலர் நன்கு குணமடைந்து விட்டனர் என்ற செய்தி உரிய முறையில் மக்களிடம் கொண்டு செல்லாததும் ஊடகங்கள் ஒரு தலைபட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பதும் கூட இந்த பீதி அலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில், இது மற்ற சீசன் வைரஸ் காயச்சல்களை போன்றே எளிதில் குணப் படுத்தக் கூடியது என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் மற்ற வைரஸ் காய்ச்ச்சல்களை போலவே துவக்கத்திலேயே உரியமுறையில் கவனிக்கா விட்டால் ஏற்படும் பேராபத்து இந்தவகை வைரஸ் காய்ச்சலிலும் உண்டு.

முக்கியமாக இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த அதே சமயம் சுகாதார வசதி குறைந்த ஒரு நாட்டில் இந்த வகை வைரஸ் காய்ச்சலை உடனடியாக கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.

அதே சமயத்தில் குறைந்த பட்ச சுகாதார பாதுகாப்புடன் (அதாவது பொது இடங்களில் சுகாதாரமற்ற உணவை தவிர்ப்பது, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது, அடிக்கடி கை சுத்தம் செய்வது, பொது இடத்தை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்ப்பது போன்றவை) வாழவேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.

இதை பற்றி இன்னும் அதிக தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(நன்றி - http://www.medicinenet.com/swine_flu/index.htm)

நன்றி.

14 comments:

வால்பையன் said...

மருந்து கண்டுபிடிச்சிடாங்களா!

அப்பா! மனிதம் இனி பிழைக்கும்!

பீர் | Peer said...

பயனுள்ள பகிர்வு.. நன்றி.

Maximum India said...

//மருந்து கண்டுபிடிச்சிடாங்களா!

அப்பா! மனிதம் இனி பிழைக்கும்!//

மருந்து ஏற்கனவே ஏராளமாக இருக்கிறது.

இப்போது தயாரித்துக் கொண்டு இருப்பது தடுப்பு மருந்து. அதுவும் சீக்கிரம் வெளிவந்து விடும்.

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி பீர்!

kggouthaman said...

வழக்கம் போல் - உபயோகமான பதிவு.
மிக்க நன்றி.
பல சந்தேகங்களைப் போக்கியது இந்த பதிவு.

Maximum India said...

நன்றி கௌதமன்!

பொன்மலர் said...

பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1

http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html

ரஹ்மான் said...

//முக்கியமாக இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த அதே சமயம் சுகாதார வசதி குறைந்த ஒரு நாட்டில் இந்த வகை வைரஸ் காய்ச்சலை உடனடியாக கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.//
மிகச் சரியாக சொன்னீர்கள்.அரசு எப்பொழுதும் தன் கடமையை காலதாமதப்படுத்திதான் செய்யும்.இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தினால் மக்கள் பீதியில் இருந்தும் மரண பயத்திலிருந்தும் மீள்வர்கள்.

Maximum India said...

நன்றி பொன்மலர்! உங்கள் திருப்பணி தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழில் பொருளாதார பின்னணியில் இது போன்ற பதிவுகள் உருவாகுவது தமிழையும் தமிழரையும் வளமாக வாழ வைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Maximum India said...

//இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தினால் மக்கள் பீதியில் இருந்தும் மரண பயத்திலிருந்தும் மீள்வர்கள்.//

உண்மைதான் ரஹ்மான்! அரசு விரைந்து செயல்படும் என்று நம்புவோம்.

நன்றி.

Thomas Ruban said...

//முக்கியமாக இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த அதே சமயம் சுகாதார வசதி குறைந்த ஒரு நாட்டில் இந்த வகை வைரஸ் காய்ச்சலை உடனடியாக கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.//

உண்மைதான் அய்யா .

அரசு இந்த விசியத்தை சரியாக கையலவிலை என்பது என்னுடய தாழ்மையானகருத்து இந்தியா வெப்பமான தேசம் இங்கு வராது என்று அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது அவதிபடுகிறார்கள். ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாட்லமன்ற உறுப்பினர்க்கு வந்தால் தான் (வரக்கூடாது ) அக்கறை எடுப்பர்களோ?

பதிவுக்கு நன்றி .

Maximum India said...

//அரசு இந்த விசியத்தை சரியாக கையலவிலை என்பது என்னுடய தாழ்மையானகருத்து இந்தியா வெப்பமான தேசம் இங்கு வராது என்று அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது அவதிபடுகிறார்கள். ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாட்லமன்ற உறுப்பினர்க்கு வந்தால் தான் (வரக்கூடாது ) அக்கறை எடுப்பர்களோ? //

நன்றி தாமஸ் ரூபன்!

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியா ஒரு வெப்பமான பிரதேசம் என்றாலும் இப்போதைய பருவகாலம் மழைக்காலமாக இருப்பதால் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.

இது போன்ற உலர் துறைகள் பொதுவாக அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் அதிகம் விரும்பப் படுவதில்லை. எனவேதான் அதிக அலட்சியம் காணப் படுகிறது என்று நினைக்கிறேன்.

நன்றி.

Thomas Ruban said...

//இது போன்ற உலர் துறைகள் பொதுவாக அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் அதிகம் விரும்பப் படுவதில்லை. எனவேதான் அதிக அலட்சியம் காணப் படுகிறது என்று நினைக்கிறேன்.//

உண்மைதான் சார்.

உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை ஜூன் 11 ம் தேதி கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதற்க்கு 5 ம் no எச்சரிக்கை கொடி கொடுத்துள்ளது (புயல் எச்சரிக்கை கொடிப்போல )இது 6 ம் noமாறினால் அதிக அபாயம் உள்ளது.

மெக்சிகோ,அமேரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர்பலியாகியுள்ளனர். பன்றி காய்ச்சலினால் மெக்சிகோ நாட்டு பொருளாதாரமேகடும்பாதிப்க்கு ஆலகியுள்ளது.

இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் கெடுதல்கிருமிகள் ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இன்று கடைசிப்பக்க செய்தி நாளை தலைப்பு செய்தியாக மாறக்கூடது.
அரசு இந்த விசியத்தை சரியாக கையலவேண்டும்.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

மெக்சிகோ இந்த நோயை கட்டுப் படுத்த சில கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததாக சொல்லப் படுகிறது. மெக்சிகோ மாடலை இந்தியாவிலும் முக்கியமாக மகாராஷ்டிராவிலும் முயற்சிக்க வேண்டும் என்ற குரல்கள் எழும்பத் துவங்கி விட்டன.

பொறுத்திருந்து பார்ப்போம்! அரசு நிர்வாக என்ன செய்கிறது என்று?

Blog Widget by LinkWithin