Skip to main content

ஜாலியாக இருக்கலாம்! ஆனால்?

நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதப் படும் "ஆல்கெமிஸ்ட் (The Alchemist)" புதினத்தில் இருந்து ஒரு சிறிய கதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

முன்னொரு காலத்தில், ஒரு வியாபாரி தன் மகனை "மகிழ்ச்சியின் ரகசியத்தை" அறிந்து கொள்வதற்காக, ஒரு மகாஞானியிடம் அனுப்பி வைத்தார். அவனும் பல நாட்கள் அலைந்து திரிந்து அந்த மகாஞானியின் இருப்பிடத்தை கண்டறிந்தான். அங்கே துறவியின் எளிமையான கோலத்துடன் மகாஞானி இருப்பார் என்று எதிர்பார்த்த வியாபாரியின் மகனுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு ஆடம்பரமான மாளிகையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருக்க ஒரு மூலையில் இன்னிசையுடன் மிகப் பெரிய விருந்தும் நடந்து கொண்டிருந்தது. பலருடனும் உரையாடிக் கொண்டிருந்த அந்த ஞானியுடன் பேசுவதற்கான வாய்ப்பே இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நமது ஹீரோவுக்கு கிடைத்தது.

நம் ஹீரோ தன்னை தேடி வந்த காரணத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஞானி, அவனிடத்தில் ஒரு டீ ஸ்பூனைக் கொடுத்து அந்த ஸ்பூனில் இரண்டு சொட்டு எண்ணெய்யை விட்டு விட்டு, "முதலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வா! அதே சமயத்தில் எண்ணெய் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்" என்று கூறினார்.

அந்த மாளிகை மிகவும் பெரியதாக இருந்தது. மாளிகையில் பல அடுக்குமாடிகள், நந்தவனங்கள், நூலங்கள், கேளிக்கை கூடங்கள் என்று பல பகுதிகளிலும் சுற்றினாலும், இளைஞனின் கவனம் முழுதும் ஸ்பூனில் இருந்த எண்ணெய் மீதே இருந்தது.

ஒருவழியாக பத்திரமாக எண்ணெய்யை திருப்பிக் கொண்டு வந்த இளைஞனிடம் ஞானி கேட்டாராம், "என்னுடைய மாளிகையில் உலகப் புகழ் வாய்ந்த பல அம்சங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தாயா?"

தன்னுடைய கவனம் முழுதும் எண்ணெய் மீதே இருந்ததால், ஒன்றையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்ட இளைஞனிடம், "மீண்டும் ஒரு முறை சென்று அனைத்தையும் ஆசை தீர அனுபவித்து வா" என்று பணித்தாராம்.

மனம் லேசாகிய இளைஞன், இந்த முறை ஸ்பூனைப் பற்றி கவலைப் படாமல், மாளிகை முழுதும் சுற்றிப் பார்த்து விட்டு ஆனந்தமாக திரும்ப, அந்த ஞானி கேட்டாராம், "உன்னை நம்பி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?" என்று.

திகைத்துப் போன இளைஞன் ஸ்பூனை பார்க்க அதில் எண்ணெய் இல்லை.

அப்போது ஞானி சொன்னாராம், "உனக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்ல விரும்புகிறேன்! மகிழ்ச்சியின் ரகசியம் உலகத்தின் அனைத்து சந்தோசங்களையும் அனுபவிக்கும் அதே சமயம் தன்னுடைய கடமையிலும் கவனமாக இருப்பதுதான்"

எனக்கு மிகவும் பிடித்த இந்த கருத்தை இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்

"வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஜாலியாக இருப்போம்! அதே சமயம் வருங்காலத்திலும் அந்த ஜாலி நிலைத்திருக்கும்படி ஜாக்கிரதையாகவும் இருப்போம்!"

நன்றி

டிஸ்கி: இந்த பதிவு எய்ட்ஸ் தினத்தன்று வெளியிடப் பட்டாலும், அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Comments

Btc Guider said…
"வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஜாலியாக இருப்போம்! அதே சமயம் வருங்காலத்திலும் அந்த ஜாலி நிலைத்திருக்கும்படி ஜாக்கிரதையாகவும் இருப்போம்!"

மிக அருமையான எச்சரிக்கை பங்கு வணிகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அருமையான வாசகம்.

பகிர்வுக்கு நன்றி சார்.
Btc Guider said…
கடந்த இரண்டு மாத காலமாக பதிவுகள் தங்களிடம் இருந்து மிகவும் குறைந்துவிட்டனவே?
உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கின்றோம் சார்.

நன்றி நட்புடன் ரஹ்மான்
நல்ல கதை...சூப்பர் டிஸ்கி.
இருப்போம் தல!
இருப்போம் தல!
கதை நல்லா இருக்கு; ஜாலியாவும் இருக்கணும், அதே நேரத்தில் கடமையிலும் கண்ணாக இருந்து, அந்த ஜாலியை எதிர்காலத்திலும் நிலை நிறுத்திக்கணும். சரிதானே?
நல்ல கதை. டிஸ்கி பஞ்ச்.

அனைவருக்கும் கூம்பு நோம்பி (கார்த்திகை ஒளித் திருவிழா) வாழ்த்துகள்.
Maximum India said…
நன்றி sammy !
Maximum India said…
நன்றி ரஹ்மான்!

//கடந்த இரண்டு மாத காலமாக பதிவுகள் தங்களிடம் இருந்து மிகவும் குறைந்துவிட்டனவே?
உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கின்றோம் சார் //

சில முக்கிய அலுவல்கள் பதிவுலகத்துக்கான நேரத்தை வெகுவாக குறைத்து விட்டன. இனிமேல் நிறைய பதிவுகளுடன் உங்களை சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்.

உங்களது அக்கறைக்கு மிக்க நன்றி.
Maximum India said…
நன்றி வால்!
Maximum India said…
//கதை நல்லா இருக்கு; ஜாலியாவும் இருக்கணும், அதே நேரத்தில் கடமையிலும் கண்ணாக இருந்து, அந்த ஜாலியை எதிர்காலத்திலும் நிலை நிறுத்திக்கணும். சரிதானே?//

சரிதான் கௌதமன் சார்!

கப்புன்னு பிடுச்ச உங்களுக்கு ஒரு கப் ஆயில் பரிசு!

:)
Maximum India said…
நன்றி குறும்பன்!
Naresh Kumar said…
நல்லாயிருக்கு கதை!!!

இருந்தாலும் டிஸ்கி கொடுத்ததுல ஏதாசது உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com
Maximum India said…
நன்றி நரேஷ்!

//இருந்தாலும் டிஸ்கி கொடுத்ததுல ஏதாசது உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!!!!//

உண்மையில் இந்த பதிவு தயார் செய்தது சில நாட்களுக்கு முன்னரே. ஆனால், டிசம்பர் ஒன்றாம் தேதி வந்த எய்ட்ஸ் தின விளம்பரங்களைப் பார்த்த போது, இந்த கதையுடன் அவற்றை "ரிலேட்" செய்ய முடிந்தது. அதனால்தான் இந்த டிஸ்கி.

நன்றி.
KARTHIK said…
// அதே சமயம் தன்னுடைய கடமையிலும் கவனமாக இருப்பதுதான்"//

அருமையான கதை
பகிர்வுக்கு நன்றிங்க.
Maximum India said…
நன்றி கார்த்திக்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...