Tuesday, January 6, 2009

தேவை ஒரு அரசியல் தீர்வு


கிளிநொச்சியின் வீழ்ச்சி தமிழர்களின் மீதான சிங்களர்களின் வெற்றியாக இலங்கையில் கருதப் படுவதும், அதனடிப்படையில் அங்கு பட்டாசு வெடிகளுடன் நடைபெறும் கொண்டாட்டங்களும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த நமது அச்சத்தை அதிகப் படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள ஜனதா விமுக்தி பெரமுணா போன்ற ஒரு சிங்கள அடிப்படைவாத அமைப்பு அதிக செல்வாக்கு பெற்று வருவதும், அந்த அமைப்பு வருங்காலங்களில் தமிழர்களுடன் அதிகார பங்கீடு ஏற்படுத்திக் கொள்வதை கடுமையாக எதிர்ப்பதும் கவலையைத் தருகிறது. தமிழர்கள் தற்போது இலங்கையில் படும் பாடு குறித்து சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரே (அதிலும் இலங்கை தேசிய அமைதிக் குழு தலைவர் டாக்டர்.பெரேரா) தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகுந்த மன வேதனையை தருகின்றன.

உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை ராணுவ ரீதியான வெற்றிகள் தொடர்ந்து நிலைத்ததில்லை என்பது வரலாறு தரும் செய்தி மற்றும் பாடம். இதற்கு அமெரிக்கா எனும் உலகின் மிகப் பெரிய வல்லரசு வியட்நாம் எனும் சிறிய நாட்டிடம் (நீண்ட கால அடிப்படையில்) தோல்வி அடைந்து வெளியேற நேரிட்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். இலங்கையில் தற்போது நடைபெறும் தமிழீழ போராட்ட சரித்திரத்தில் கூட இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

அது மட்டுமல்ல, இது போன்ற (போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் பார்க்காத) ராணுவ தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவதால் முன்னிலும் அதிக போராளிகள் பிற்காலத்தில் உருவாகி இருக்கிறார்கள் என்பதற்கு சரித்திரம் பல சான்றுகளைக் கொண்டிருக்கிறது. எனவே சிங்கள ராணுவத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் எந்த ஒரு நிரந்தர தீர்வையும் கொடுத்து விட முடியாது என்பது எனது தனிப் பட்ட கருத்து. (பாலஸ்தீனியனில் தற்போது நடைபெறும் தாக்குதலுக்கு கூட கிட்டத் தட்ட இது பொருந்தும்).

எனவே, எதிர்ப்பினை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மேலும் அதிக எதிர்ப்புகளையும் விரோதங்களையும் உருவாக்கும் இது போன்ற செயல்களை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். சண்டையிடும் இரு வேறு தரப்புகளையும் பேச்சு வார்த்தை நடத்த நிர்பந்தித்து சுமுகமான அரசியல் தீர்வு காண உதவ வேண்டும். (இந்தியா கூட தனது நிலபரப்பிற்கு மிக அருகே நடைபெறும் இந்த விஷயத்தில் பாராமுகமாக நடந்து கொள்வது வருத்தத்தையே தருகிறது). ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பட்ட முறையில் தேவைப் படும் அமைதியும் பாதுகாப்பும் அனைத்து உலகும் அமைதியாகவும் சமாதானமாகவும் இருப்பதையே சார்ந்திருக்கிறது என்பதை யாரும் மறக்கக் கூடாது.

நன்றி.

12 comments:

ராஜ நடராஜன் said...

//ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பட்ட முறையில் தேவைப் படும் அமைதியும் பாதுகாப்பும் அனைத்து உலகும் அமைதியாகவும் சமாதானமாகவும் இருப்பதையே சார்ந்திருக்கிறது என்பதை யாரும் மறக்கக் கூடாது.//

சரியான பார்வை.ஆனால் நடப்புக்கள் இதனை மாற்றிப்போடுவது வருத்தம் அளிக்கிறது.

Maximum India said...

அன்புள்ள ராஜநடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//சரியான பார்வை..ஆனால் நடப்புக்கள் இதனை மாற்றிப்போடுவது வருத்தம் அளிக்கிறது//

சுயநலமும் பழிவாங்கும் போக்குமே இன்றைய பல பிரச்சினைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

வால்பையன் said...

ஏற்று கொள்ள கூடிய விசயம் தான் ஆனால், மொத்த உலகமும் தமிழர்களுக்கு எதிராக உள்ளதே!

Itsdifferent said...

Sorry about the diversion, but cannot believe this nonsense
Cut and paste from AV. if this is true, can the bloggers really create a awareness and a possible revolution to stop this nonsense at once?
நம் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே நமது ஒரே லட்சியமாக இருந்தது. இந்த நோக்கத்தை மனதில் வைத்தே விவசாயத் துறையில் பல புதிய திட்டங்களைத் தீட்டினோம். அணைகள் கட்டுவதில் ஆரம்பித்து, உணவுக் கிடங்குகளை அமைப்பதுவரை அப்போது நமக்கிருந்த ஒரே நோக்கம் ஒவ்வொரு இந்தியனும் பசித்த வயிறோடு தூங்கச் செல்லக்கூடாது என்பதுதான்.

ஆனால், இன்றைய நிலை என்ன? இந்தியா முழுக்க உள்ள கிராமங்களையும் ஏழை விவசாயிகளையும் பலி கொடுத்துதான் நம்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது! இந்தியா முழுக்க உள்ள 105 கோடி மக்களில் 83 கோடி பேர் வறுமையின் கொடுமைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆளாகலாம் என்கிற நிலையில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மட்டும் 93%. இதில் 80% தொழிலாளர் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்களைச் சார்ந்து இருப்பதாக ஒருங்கிணைப்படாத தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் சொல்கிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 48% நகர்மயமாகிவிட்டது என்கிறார்கள். 2020-க்குள் கிட்டத்தட்ட 70% நகர்மயமாகிவிடுமாம். இப்படி அசுர வேகத்தில் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருந்தால், நமக்குத் தேவையான உணவு எங்கிருந்து கிடைக்கும்? கிராமங்களிலிருந்து சாரைசாரையாகக் கிளம்பி நகர்ப்புறத்தை நோக்கி வருகிறார்கள் மக்கள். ஏன்? கிராமத்தில் வேலை இல்லை. விவசாயம் கட்டுப்படியாகக்கூடியதாக இல்லை. சிறிய அளவில் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு மட்டுமே 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதிலிருந்தே விவசாயத் துறையை நாம் எந்த அளவில் அக்கறையோடு கவனிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


கடந்த சில பத்தாண்டுகளாக விவசாயம் பற்றி நம் அரசாங்கத்தின் அணுகுமுறை முற்றிலும் மாறியிருக்கிறது. முன்பு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினோம். இன்று நமக்குப் பணம்தான் முக்கியம். பணம் கிடைக்க வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டோம். இப்போது தமிழகத்தில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டது. தானியங்களின் உற்பத்தி 40% குறைந்துவிட்டது. ராகி, கம்பு போன்ற சத்து தானியங்கள் ஏறக்குறைய அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

உணவு உற்பத்திக்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? பெட்ரோல் தயாரிக்கத் தேவையான 'ஜெட்ரோபா' என்னும் தாவரத்தை ஹெக்டேர் கணக்கில் வளர்க்கிறோம். அரசாங்கமும் அதைத்தான் வளர்க்கச் சொல்கிறது. அல்லது தேக்கு மரம் வளர்க்கிறோம்; பூக்களை வளர்க்கிறோம்; மலைப்பகுதிகளில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்களை வளர்க்கிறோம். இப்படியே போனால் நம்மிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிச்சயம் உணவு இருக்காது!

உணவு தானியத்தில் தன்னிறைவு என்ற நிலையை அடைவதற்குப் பதிலாக இரண்டு மிகப்பெரிய தவறுகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று ஏற்றுமதி, இன்னொன்று, இறக்குமதி. நம் விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையைக் கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆனால், இப்போது நமக்கு ரேஷனில் கிடைக்கும் பொருளின் விலையைவிடக் குறைவான விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த விலையை நம் விவசாயிகளுக்குக் கொடுத்தாலாவது அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்வார்கள். தவிர, அத்தியாவசியப் பொருட்களை எந்த அளவுக்குக் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கணக்குவழக்கும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நாம் நிறைய ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்தில் திடீரென ஏதாவது ஒரு விபரீதமான விளைவு ஏற்படுமெனில் அதைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போவோம்.இதேபோல, நம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாங்காமல், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான விலைக்கு அரிசி வாங்குகிறோம். பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் வாங்குகிறோம். தெற்காசிய நாடுகளிலிருந்து பருப்புகளை வாங்குகிறோம். ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வாங்குகிறோம். வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தால், உள்ளூரில் உற்பத்தியானதை கடலில் சென்று கொட்டவா முடியும்?

ஆக இந்த நிலைமை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கு வெறும் கடன் தள்ளுபடி மட்டும் போதாது. நீண்டகால நோக்கில் சில அடிப்படையான விஷயங்களை நாம் செய்தாக வேண்டும்.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுப்பதில் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு தோட்டத்திலும் சொட்டுப் பாசனம் அமைப்பது வரை பல வேலைகளை அரசாங்கம் உடனடியாகச் செய்தாகவேண்டும்.

நீடித்த வேளாண்மைக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யவேண்டும். பி.டி.விதை உற்பத்திக்கு அரசாங்கம் எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் எல்லா பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிச்சயம் கிடைக்கவேண்டும். உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. இந்த மானியத்தையும் அதிகமாக்கவேண்டும்.

இந்த மாதிரியான அடிப்படையான விஷயங்களைச் செய்தாலே போதும், இந்தியா முழுக்க விவசாயம் செழிப்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்தியா நிச்சயம் 9 சதவிகித வளர்ச்சியைக் கடந்திருக்கும்!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஆனால், மொத்த உலகமும் தமிழர்களுக்கு எதிராக உள்ளதே!//

தமிழர் தரப்பை சரிவர அனைவருக்கும் உணர்த்தாததே காரணம் என்று நினைக்கிறேன்.

Maximum India said...

அன்புள்ள இத்ச்டிபிபிறேன்ட்

சமூக அக்கறையுள்ள பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களுடைய கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. நானே இதை பற்றி ஒரு பதிவு இடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

pothujanam said...

பக்கத்தில் இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு பல இன மக்களை ஒன்று சேர்த்து முன்னேறி வருவதை ஒரு உதாரணமாக வைத்து இலங்கை முன்னேறி இருக்கலாம். இன துவேஷம் காரணமாக இரண்டு தலைமுறை மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டனர் அங்கு உள்ள தலைவர்கள். சிங்கள மக்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து உழைத்து இருந்தால் இன்னொரு சிங்கப்பூர் ஆகி இருக்கும் இலங்கை. பாழாய் போன அரசியல் இலங்கையை பாவம் சூழ்ந்த பூமி ஆக மாற்றி விட்டது. இன விரோதம் இவ்வளவு பகையை உருவாக்கி விட்ட பின் போர் தீர்வு என்பது தற்காலிகமே . நம்ம ஊர் தலைவர்கள் பாகிஸ்தான் பேர் சொல்லி அரசியல் செய்வது போல் அங்கு உள்ள அரசியல் வாதிகள் தமிழர்களை கட்டி அரசியல் செய்கிறார்கள்.( ஓதம் அடிசிருச்சோ" ). நார்வே செய்தது போன்ற நல்ல காரியத்தை வேறு நாடு செய்யலாம். ஆனால் அதற்கு இனி இரு தரப்பினரும் ஒத்து வருவார்கள?..
கண்ணுக்கு தெரிகிற தீர்வாக இருப்பது.. ரணில் விக்கிரம சிங்கே போன்ற நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு வந்து உண்மையான நோக்கத்தோடு பேச வேண்டும். அல்லது போஸ்னியாவில் அமெரிக்கா நுழைந்து கட்ட பஞ்சயத்து செய்தது போல் செய்ய வேண்டும். தற்காலிக தீர்வு சுனாமி தவிர ஏதும் இல்லை.
உருப்படியான தீர்வு ஒன்று உள்ளது. பேசாமல் இலங்கையில் உள்ள தேர்தல் தொகுதிகளை தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளோடு சேர்த்து விடலாம். நம்ம வேட்டிகள் அங்கு போய் அதிரடி பிரச்சாரம் செய்தல் எல்லோரும் சண்டையை விட்டு விட்டு இவர்களை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மாதம் ஒரு இடை தேர்தல் வைக்கலாம்.. ஓகே ?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

தனியே ஒரு பதிவாக தகுதி கொண்ட பின்னூட்டத்திற்கு நன்றி .

//பக்கத்தில் இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு பல இன மக்களை ஒன்று சேர்த்து முன்னேறி வருவதை ஒரு உதாரணமாக வைத்து இலங்கை முன்னேறி இருக்கலாம். இன துவேஷம் காரணமாக இரண்டு தலைமுறை மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டனர் அங்கு உள்ள தலைவர்கள். சிங்கள மக்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து உழைத்து இருந்தால் இன்னொரு சிங்கப்பூர் ஆகி இருக்கும் இலங்கை. பாழாய் போன அரசியல் இலங்கையை பாவம் சூழ்ந்த பூமி ஆக மாற்றி விட்டது. இன விரோதம் இவ்வளவு பகையை உருவாக்கி விட்ட பின் போர் தீர்வு என்பது தற்காலிகமே . //

நானும் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.

//பேசாமல் இலங்கையில் உள்ள தேர்தல் தொகுதிகளை தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளோடு சேர்த்து விடலாம். நம்ம வேட்டிகள் அங்கு போய் அதிரடி பிரச்சாரம் செய்தல் எல்லோரும் சண்டையை விட்டு விட்டு இவர்களை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மாதம் ஒரு இடை தேர்தல் வைக்கலாம்.. ஓகே ?//

ஐய். இது கூட ஒரு நல்ல யோசனையா இருக்கே?

கபீஷ் said...

உணர்வுப்பூர்வமா மட்டும் இல்லாம அறிவுப்பூர்வமா எழுதியிருக்கீங்க.

முன்னாடி, நார்வே அமைதிக்கான தூதுவர்களா இருந்து முயற்சி செய்த மாதிரி, இப்ப யாராவது செய்து, இரண்டு தரப்பும் ஒத்துழைப்பு கொடுத்து, போர் நிறுத்தம் நடந்து, அமைதி திரும்பி...
நினைச்சி பாக்க நல்லாருக்கு.

இல்லாட்டி பொதுஜனம் சொன்ன மாதிரி நடந்தாலும் நல்லாருக்கும் :-)

கபீஷ் said...

Its different,
கவலைப் படாதீங்க, நாமெல்லாம் சேர்ந்து நம்மால முடிஞ்சவரை விவசாய துறையில் ஈடுபட்டு, விழிப்புணர்வு, ஒரு புதிய சமூகத்தை ஏற்படுத்துவோம். நிறைய பேர் நம்மோட இருக்காங்க இதே மாதிரி எண்ணத்தோட. நான் இதுபத்தி ஒரு பதிவு விரைவில் எழுதுகிறேன்.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டங்களுக்கு நன்றி

நம்முடைய சகோதரர்கள் இலங்கையில் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்க நம்மால் உதவி செய்ய முடியாமல் இருப்பது ஒரு பெரிய குற்ற மனப் பான்மையை உருவாக்குகிறது.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//கவலைப் படாதீங்க, நாமெல்லாம் சேர்ந்து நம்மால முடிஞ்சவரை விவசாய துறையில் ஈடுபட்டு, விழிப்புணர்வு, ஒரு புதிய சமூகத்தை ஏற்படுத்துவோம். நிறைய பேர் நம்மோட இருக்காங்க இதே மாதிரி எண்ணத்தோட. நான் இதுபத்தி ஒரு பதிவு விரைவில் எழுதுகிறேன்.//

நல்ல சிந்தனை. உங்களுடைய பதிவிற்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin