Skip to main content

அன்புள்ள மும்பைக்கருக்கு ஓர் கடிதம்

மும்பையில் தற்போதைக்கு வசிக்கும் ஆனால் மும்பையை சொந்தம் கொண்டாடாத ஒரு இந்தியன் எழுதிக் கொள்வது. நான் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வாழ்ந்தவன். சில பயணங்களின் போதும் திரைப்படங்களின் மூலமுமே மும்பையின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வந்திருக்கிறேன். மும்பைக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை இங்கு வசிப்பதற்கு வந்த பிறகே அறிந்து கொண்டேன்.

சில ஆயிரம் ரூபாய் வாடகையில் பெங்களூர் போன்ற ஒரு மாநகரத்தின் மையப் பகுதியில் சௌகரியமாக வாழ முடிந்த நான் மும்பையில் பல ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குருவிக்கூடு போல ஒரு வீடு கிடைக்குமா என்று விசாரித்த போது ஏளனமாக பார்த்தீர்கள். அந்த வாடகைக்கு நகரத்தை விட்டு குறைந்த பட்சம் 50 கி.மீ. தூரம் வெளியே போக வேண்டும் என்றீர்கள்.

சில நூறு ரூபாய் பெறாத விஷயங்களுக்காக கூட பல ஆயிரம் ரூபாய் செலவழிக்கும் நீங்கள் எங்களை போன்ற மத்திய தர மக்களின் வாழ்க்கை முறையை திருப்பி போட்டது மட்டும் இல்லாமல் பணத்துக்கே அவமரியாதை செய்தீர்கள். இவ்வாறு செலவிடும் பணமெல்லாம் சொந்த கணக்கில் அல்ல, தம் பொறுப்பில் உள்ள நிறுவனக் கணக்கில்தான் என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன்.

டீ கடையில் கூட உலக விஷயங்கள் அலசப் பட்ட ஊரிலிருந்து வந்த என்னிடம் நீங்களோ உங்கள் தொழில் மற்றும் பங்கு சந்தைக்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டீர்கள். "அரசியல்வாதிகள் கூட எங்களைத் தேடியே வருகிறார்கள். எனவே எங்களுக்கு அரசியல் தேவையில்லை" என்று (அதிகம் படித்தவர்கள் இங்கே இருந்தும் கூட) வாக்களிக்கும் நாட்களை கூட விடுமுறை நாட்களாக மட்டுமே எடுத்துக் கொண்டீர்கள்.

சொந்த வீடு இருக்கும் போது உள்ளூர் ஹோட்டலில் தங்கினால் எங்கள் ஊர் பக்கம் வித்தியாசமாக பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ அதை வழக்கமாக கொண்டு தாஜ் போன்ற ஹோட்டல்களில் தங்குவதை வாடிக்கையாக கொண்டீர்கள். இன்போசிஸ் பெங்களூரில் இருக்கலாம் ஆனால் அதனால் அதிகம் சம்பாதித்தவர்கள் மும்பைக்கர்களே, இந்தியாவில் சம்பாதிக்கும் எல்லா செல்வமும் எங்கள் வாசல் கதவை தட்டித்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று மார் தட்டிக் கொண்டீர்கள்.

ஆனால் அதே சமயம் காஷ்மீர் பிரச்சினை காஷ்மீருடையது, குஜராத் பிரச்சினை குஜராத்துடையது என்றும் எங்களுக்கு பங்கு சந்தை மற்றும் வணிகம் மட்டும்தான் உலகம் என்று வாழ்ந்தீர்கள். மகாராஷ்ட்ராவில் கூட உழவர் தற்கொலை பிரச்சினை எழுந்த போதும் வட இந்தியர் தாக்கப் பட்ட போதும் மும்பையை ஹாங்காங் போல தனி ஆட்சிப் பகுதியாக மாற்றி உள்ளே வருபவர்களுக்கு தனி பாஸ்போர்ட் கொடுத்தால் என்ன என்று கேள்வி கேட்டீர்கள். மும்பைக்கென ரூபாயை தவிர்த்து புதிய கரென்சி (மும்பை டாலர்) புழக்கத்தில் விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தீர்கள். நீங்களோ, அல்லது உங்கள் முன்னோரோ இந்தியாவில் இருந்தே வந்தவர்கள் என்றாலும் கூட முற்றிலும் அந்நியர் போலவே நடந்து கொண்டீர்கள். நீங்கள் நாட்டுப் பற்று வெளிப் படுத்தியதெல்லாம் அதிகம் கிரிக்கெட் மாட்ச்களில் அதுவும் பார் வசதியுடன் கூடிய அரங்குகளில் அமர்ந்து கொண்டு.

நீங்கள் சொந்தம் கொண்டாடும் மும்பையிலும் கூட, பெரு வெள்ளம் (2005) ஏற்பட்ட போது துடிதுடித்துப் போன புதியவனான எனக்கு பெரும் ஆச்சர்யத்தையே கொடுத்தீர்கள். ஊரே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு கூட பங்கு சந்தை மேலே போனது என்று சந்தோசப் பட்டுக் கொண்டீர்கள். 2006 ரயில் குண்டு சம்பவத்தின் போதும் கூட கிட்டத் தட்ட அதே நிலைதான். மேற்சொன்ன அசம்பாவிதங்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் காணாமல் போயினர் என்ற விவரத்தை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படவில்லை. உங்களுக்கென்ன பங்கு சந்தைதான் எப்போதும் போல மேலே போய்க் கொண்டே இருந்ததே?

இங்கே பாதுகாப்பு அற்ற அச்ச உணர்வு இருந்தும் கூட வேறு வழியில்லாமல் எளிய மக்கள் பணிக்கு சென்று கொண்டிருப்பதை மும்பைக்கு வெளியே இருந்தவர்கள் ஒவ்வொரு அசம்பாவிதத்திற்கு பின்னரும் மும்பை மக்கள் எவ்வளவு வேகமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள் என்று ஆச்சரியத்துடன் நோக்க என்னை போல இங்கேயே இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இங்கே வாழ வந்த எளிய மக்களுக்கு வேறு வழி இல்லாமல் அன்றாட வாழ்விற்காக எந்த ஒரு பாதுகாப்பற்ற சூழ் நிலையிலும் பணிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மறு பக்கத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு (அதுதான் உங்களை போன்ற மும்பைக்கர் என்ற மேல்தட்டு மக்களுக்கு) எந்த சூழலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்று.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பிறகு அதிக செல்வாக்கு கொண்ட உங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கிய பின்புதான் இந்தியாவில் தீவிரவாதம் என்று ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். பங்குசந்தையையும் வணிகத்தையும் தாண்டி ஒரு உலகம் உள்ளது அதிலுள்ள பிரச்சினைகள் நம்மையும் கூட ஒரு நாள் தாக்கும் என்பதையும் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது கூட மும்பை தாக்கப் பட்ட போது இந்தியாவே கண்ணீர் விட்டது. ஆனால் நீங்களோ அதில் கூட வர்க்க பேதம் பார்த்தீர்கள். தாஜ் ஹோட்டலிலும் ஒபேராய் ஹோட்டலிலும் இறந்தவர்களின் உறவினர்கள் எப்படியெல்லாம் வருத்தப் பட்டார்கள் என்பதை இரவும் பகலும் வெளிச்சம் போட்டு காட்டிய நீங்கள் சி.எஸ்.டீ. ரயில் இறந்து போன குப்பன் சுப்பன் யார் என்றும் எத்தனை பேர் என்றும் கண்டுகொள்ளவே இல்லை. ஒபேராய் ஹோட்டல் முன்புறமும், தாஜ் ஹோட்டல் முன்புறமும் அணியணியாய் சென்று அஞ்சலி செலுத்திய நீங்கள் சி.எஸ்.டீ. ரயில் நிலையத்தில் இறந்தவர்களுக்காக ஒரு சிறிய மரியாதை கூட செய்ய வில்லை.

மும்பை பலகோடி ரூபாய் வரி இந்திய அரசுக்கு செலுத்துகிறது அதில் ஒரு பகுதியை மும்பையின் பாதுகாப்பிற்கு (அதுதான் உங்களை போன்றவர்களை பாதுகாக்க) உபயோகப் படுத்தவேண்டும் என்று சொல்லும் உங்களுக்கு, அந்த வரியானது மும்பையை தலைமையிடமாக கொண்ட அனைந்திந்திய நிறுவனங்களால் செலுத்தப்படுவதே என்றும் அந்த வரிக்கு முழு இந்தியாவுமே சொந்தம் கொண்டாட முடியும் என்பதும் ஏன் மறந்து போனது? மேலும் தனிநபர் வரி கூட யார் கட்டுகிறார்கள்? இந்தியா முழுதும் திரைப்படம் காட்டி சம்பாதிக்கும் திரைப் பட நடிகர்கள், அனைத்து இந்திய பணத்தில் வாழும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய பங்கு சந்தை தரகர்கள் போன்றவர்கள்தானே?

ஆனால் இப்போது கூட இதுபோன்று மேல்மட்டத்தினரை குறிவைத்து மும்பையில் இனியொரு தாக்குதல் நடைபெற கூடாது என்ற குறுகிய நோக்கத்திலேயே உங்கள் கோரிக்கைகள் மற்றும் கோஷங்கள் பலவும் அமைந்துள்ளதை உணர முடிகிறது. யானை உண்ணும் போது சிந்துவதை கொண்டு பல உயிர்கள் பல நாள் வாழும் என்பார்கள். அது போல உங்கள் பேச்சை கேட்க வேண்டிய நிலையிலேயே பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இருக்கும் பட்சத்தில், ஏன் உங்கள் கோரிக்கையை சற்றே விரிவு படுத்தி இந்திய மக்கள் அனைவர்க்கும் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்யக் கூடாது?

இப்படிக்கு

உங்கள் மீது மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதியிலும் இனியொரு தாக்குதல் நடைபெறக் கூடாது என்று விரும்பும் ஒரு இந்தியன்.

Comments

இது மும்பையில் தற்போது வசிக்கும் ஒரு தற்குறியின் கருத்து என்று தலைப்பிட்டிருக்கலாம். காரணம், உங்களுக்கு மும்பையைப் பற்றிய அறியாமையை முழுமையாக ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிக்கு
மும்பையில் 18 வருடங்கள் வாழ்ந்த ஒரு தமிழன்
Ramesh Yanthra said…
உண்மையான கருத்துக்கள்...
Ramesh Yanthra said…
அருமையான பதிவு...
Felix Raj said…
அருமையான பதிவு , மும்பை காரர்கள் விளங்கி கொண்டால் சரி
Maximum India said…
அன்புள்ள வேணு

பின்னூட்டத்திற்கு நன்றி.

//இது மும்பையில் தற்போது வசிக்கும் ஒரு தற்குறியின் கருத்து என்று தலைப்பிட்டிருக்கலாம். காரணம், உங்களுக்கு மும்பையைப் பற்றிய அறியாமையை முழுமையாக ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

//

உங்களது கருத்துக்களுடன் ஒரளவிற்கு ஒத்துப் போகிறேன்.

காரணம், பொருளாதாரம் அல்லது சந்தைகளின் போக்கு பற்றி நடு இரவில் எழுப்பிக் கேட்டாலும் ஓரளவுக்கேனும் பதில் தர முடிகிற எனக்கு மும்பை போக்கு இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் சரி வர புரியாமலேயே உள்ளது. அதே சமயத்தில் மும்பை மீதோ அல்லது மும்பையில் வாழும் நம்மைப் போன்ற சாதாரண மக்களின் மீதோ எனக்கு எந்த ஒரு வெறுப்போ கோபமோ கிடையாது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சொல்லப் போனால் இங்கு வாழும் மக்களின் சக்தி நிலையைக் கண்டு பல சமயங்களில் வியந்திருக்கிறேன். அதே போல மும்பை நகரத்திற்கென்று ஒரு தனி வசீகரம் உண்டு என்பதையும் நான் அறிவேன்.

என்னுடைய கோபமெல்லாம், நான் இங்கு வசிக்க வந்த (சில ஆண்டுகளில்) பிறகு நேரிட்ட பல பல துயர சம்பவங்களின் போது (நேரடியாக உணர்ந்த வகையில்) மனித உயிர்களின் இழப்பை அலட்சியப் படுத்தி சென்செக்ஸ் (வணிக) இழப்பை பற்றி மட்டும் பெரிதாக பேசியவர்களின் மீதும், அத்தகைய துயர சம்பவங்களில் கூட வர்க்க பேதம் பார்த்தவர்களின் மீதும், இந்தியாவின் பாதுகாப்பை விட மும்பையின் பாதுகாப்பே (அதுவும் மேல்தட்டு மக்களின் பாதுகாப்பே) முக்கியம் என்ற தொனியில் பேனர் பிடித்தவர்கள் மீதும், மனிதர்களின் உயிர்களைக் கூட ஒரு விலை தந்து வாங்க முடியும் என்ற மமதையில், சாலைக்கும் நடைபாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் (பண) போதையில் வாகனம் செலுத்துபவர்கள் மீதும்தான்.

//இப்படிக்கு
மும்பையில் 18 வருடங்கள் வாழ்ந்த ஒரு தமிழன் //

நான் மூன்று வருடம் மட்டுமே இங்கு வாழுகின்ற ஒரு இந்தியன். ஒருவேளை உங்களைப் போல 18 வருடங்கள் இங்கு வாழும் வாய்ப்பு கிடைத்தால் மும்பையை முழுமையாக புரிந்து கொள்வேனோ என்னவோ?

நன்றி.
Maximum India said…
அன்புள்ள ரமேஷ் யந்த்ரா

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.
Maximum India said…
அன்புள்ள பெலிக்ஸ் ராஜ்

பின்னூட்டத்திற்கு நன்றி
pothujanam said…
தற்குறி தமிழனின் பதிவினை மெத்த படித்த மும்பை வால் தமிழர்கள் யாராவது இந்தியில் மொழி பெயர்த்தால் பரவாயில்லை.
பஞ்சம் பிழைக்க வந்த தமிழனுக்கு என்ன ஒரு அகங்காரம் ?
மும்பையின் பெரிய மனிதர்கள் பற்றி குறை கூறுகிறார் இவர். அவர்கள்தான் இந்தியாவில் அதிக வரி கட்டுகிறார்கள்.இந்தியாவை முன்னேற்ற தாஜ் போன்ற ஓட்டல்களில் ரூம் போட்டும் பார்டி வைத்தும் மண்டையை குடைந்து யோசிகிறார்கள்.அவர்கள் நலம்தான் நமக்கு முக்கியம். அதனாலதான் அவர்கள் உயிரை காப்பாற்ற அரசு கம்மண்டோக்களை அனுப்பியது. பின்னே சி எஸ் டி ரயில் நிலையத்தில் கிராமத்திற்கு போக மூட்டை முடிச்சுகளுடன் நிற்கும் அன்றாடம் காச்சியின் குடும்பமா முக்கியம்? அவர்கள் சேவை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒட்டு போடும் போது மட்டும்தான். நாட்டுக்கு அவர்களால் என்ன லாபம்.ஆனால் தாஜ் பெரிய மனிதர்கள் கட்டும் வரி பணத்தில்தான் கம்மண்டோக்கள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு தான் மீடியா முக்கியத்துவம் தருகிறது. மும்பை தலை நிமிர்ந்து நிற்பதே அவர்களால்தான். அவர்களைப் போய் இந்த பதிவர் தவறாக எழுதுகிறாரே.
ஆக இந்த பெரிய மனிதர்களுக்கு பாதுகாப்பை அதிகரியுங்கள்.துக்காரம் போன்ற போலீஸ் காரர்களை இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நியமியுங்கள். நம்மை போன்ற பொது ஜனங்கள் ரயில் குண்டு வெடித்தோ, தீவிரவாதி சுட்டால் நாட்டுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

ஒரு மும்பை வாழ் தற்குறியின் கருத்தை ஒரு பொதுஜனத்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதை பின்னூட்டத்தில் வெளிப் படுத்தியதற்கு மிக்க நன்றி. பிறப்பிலேயே தம்மை மேதாவிகளாகவும் உயர்ந்த வர்க்கத்தினராகவும் பாவித்துக் கொண்டிருப்பவர்கள் நம்மை போன்ற சாதாரண மக்களின் வருத்தங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான காரியமே.

நன்றி.
கபீஷ் said…
எனக்கு மும்பையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. மும்பை வாழ் மேல் தட்டு மக்களைப் பற்றிய உங்களின் கருத்து என எண்ணுகிறேன்.
கபீஷ் said…
பொதுஜனம் பின்றாரு. எள்ளல் அருமையா வருது அவருக்கு.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டங்களுக்கு நன்றி

//பொதுஜனம் பின்றாரு. எள்ளல் அருமையா வருது அவருக்கு.//

அவருடைய பின்னூட்டங்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு என்னையும் சேர்த்து.
உங்கள் கிரீடத்தில் மற்றொரு வைரக்கல் இந்த பதிவு.

அருமையாக இருந்தது
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//உங்கள் கிரீடத்தில் மற்றொரு வைரக்கல் இந்த பதிவு.

அருமையாக இருந்தது//

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க நன்றி.
raje said…
எத்தனை தடவை கஷ்டமான அனுபவம் பெற்றாலும், யார் சுட்டி காட்டினாலும் இவர்கள் நோக்கம் எப்படியாவது பணம் பண்ணுவதில் மட்டுமே. இவற்றை தவிர்த்து வேற விசயம் குறித்து எண்ணுவது எப்பொழுதோ?
raje said…
எத்தனை தடவை கஷ்டமான அனுபவம் பெற்றாலும், யார் சுட்டி காட்டினாலும் இவர்கள் நோக்கம் எப்படியாவது பணம் பண்ணுவதில் மட்டுமே. இவற்றை தவிர்த்து வேற விசயம் குறித்து எண்ணுவது எப்பொழுதோ?
Maximum India said…
அன்புள்ள ராஜே

பின்னூட்டத்திற்கு நன்றி.

//எத்தனை தடவை கஷ்டமான அனுபவம் பெற்றாலும், யார் சுட்டி காட்டினாலும் இவர்கள் நோக்கம் எப்படியாவது பணம் பண்ணுவதில் மட்டுமே. இவற்றை தவிர்த்து வேற விசயம் குறித்து எண்ணுவது எப்பொழுதோ?//

பணம் மட்டுமே உயிர் காக்க உதவாது என்பதை அந்த இரவில் தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த பல தொழில் அதிபர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் தப்பி வந்த பின்னரும் கூட தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து நாட்டையே பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தம்மை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் தனியார் பாதுகாப்பு சட்டத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பலமாக குரலெழுப்பியது எனக்கு கோபத்தையே வரவழைத்தது.
KARTHIK said…
என்னத்த சொல்ல....


// அவருடைய பின்னூட்டங்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு என்னையும் சேர்த்து.//

நானும் ரவுடி தான்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நானும் ரவுடி தான்//

நான் என்னத்த சொல்ல. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும் போல.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...