Skip to main content

யானைப் பசிக்கு சோளப் பொரியா?

தளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக இந்திய தலைமை வங்கியும் மத்திய அரசும் கிரியா ஊக்கித் திட்டத்தின் இரண்டாம் பகுதியை இன்று அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பற்றியும் இவை எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம்.

முதலில் தலைமை வங்கியின் அறிவிப்புகள்

மாற்று வட்டி வீதம் (ரெபோ) ஒரு சதவீதம் (5.50%) குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக வணிக வங்கிகள் இந்திய தலைமை வங்கியிடம் இருந்து குறைந்த கால நோக்கில் கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டித் தொகை குறையும். இதனால், வங்கிகள் பொது மக்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், ரொக்க கையிருப்பு வீதம் 0.50 சதவீதம் I5.00%) குறைக்கப் பட்டுள்ளது. இதனால், சுமார் 20,000 கோடி ரூபாய் வங்கிகளின் கையிருப்பில் அதிகமாக இருக்கும். இந்த நடவடிக்கை மூலமாக, பொது மக்களுக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் வங்கிகளால் கடன் தர முடியும்.

இரண்டாவது மத்திய அரசின் அறிவிப்புகள்

வணிக நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் வெளிநாட்டு கடன் பெறும் சில நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன. சிறிய நகர குடியிருப்புக்களை அமைப்பதற்கு வெளிநாட்டு கடன் வசதி அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதே போல, சிறிய மற்றும் இடை நிலை தொழிற் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இந்திய வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெறும் விதிமுறைகள் தளர்த்தப் பட்டுள்ளன. அரசு வங்கிகளுக்கான கடன் வழங்கும் இலக்குகள் அதிகப் படுத்தப் பட்டுள்ளன.

மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அடிப்படை கட்டுமான முதலீடுகள் செய்வதற்காக கூடுதலாக 0.50 சதவீதம் கடன் பெற அனுமதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30,000 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

ஏற்றுமதிக்கான தொகையை இந்திய ரூபாயில் மாற்ற சில சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் சில ஏற்றுமதி துறைகளுக்கு வரி சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப் பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்களை குறைக்க கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் எளிய மற்றும் மத்திய தர வர்க்கத்தினருக்காக கட்டப் படும் குடியிருப்புகளுக்காக நில வசதி செய்து தர மாநில அரசுகள் கேட்டுக் கொள்ள பட்டிருக்கின்றன. மத்திய மாநில அரசுகளின் நல்வாழ்வு திட்டங்கள் விரைவில் செயல் படுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் வரவேற்கப் படவேண்டியவையே என்றாலும், இந்த திட்டங்கள் மூலம் குறைந்த கால நோக்கில் பங்கு மற்றும் இதர சந்தைகளில் ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றாலும், இவை மட்டுமே இந்தியாவை நல்ல வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியுமா என்பது ஒரு கேள்விக் குறி. எனது பார்வையில் இந்த திட்டங்கள் யானைப் பசிக்கு வழங்கப் படும் சோளப் பொரிகள் போலவே காட்சி அளிக்கின்றன.

1990 களுக்கு பிறகு, இந்திய அரசு பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் அரசின் பங்கு குறைவாக இருக்கும் மேலை நாட்டுப் பாணியை பின்பற்ற ஆரம்பித்தது. இதன் படி அரசு இயந்திரம் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சில பொது சேவைகள் போன்ற குறைந்த வட்டத்திற்குள்ளேயே செயல் பட வேண்டும் என்றும் பொருளாதாரம் என்பது மக்கள் (வணிக நிறுவனங்கள்) கையில் என்றும் கருதிய ஆதாம் ஸ்மித் அவர்களின் காபிடலிச கொள்கை இந்தியாவிற்குள் நுழைந்தது. பொருளாதாரம் (வணிக நிறுவனங்கள்) மேம்பட அரசு நல்ல கடன் வசதியை மட்டும் செய்து கொடுத்தால் மட்டும் போதும் அரசு பொருளாதாரத்தில் நேரடியாக தலையிடக் கூடாது என்ற மேலை நாட்டு சிந்தனையாளர்களின் போக்கு (முக்கியமாக பணக்காரர்களிடையே) நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் காபிடலிசத்தின் தலைநகரமாக கருதப் படும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலைநாடுகளில் பெரியதொரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளை தேசிய மயமாக்குதல், பொருளாதாரத்தில் அரசு பெரும் முதலீடுகளை செய்தல் என்று இந்தியா 1960 மற்றும் 70 களில் நடைமுறைப் படுத்திய "பொருளாதாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்தல்" என்ற பழைய பாணி இப்போது மேலைநாடுகளில் (ஆம். நம் பொருளாதார மேதைகள் படித்த மற்றும் கோயில்களாக கருதும் அதே நாடுகள்தான்) பின்பற்ற ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு நண்பர், அங்கு இந்திரா காந்தி ஒரு சிறந்த தீர்க்கதரிசியாக இப்போது போற்றப் படுவதாக கூறினார்.

எனவே மேலை நாடுகளில் தோற்றுப் போன ஒரு பாணியை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா என்பது எனது கேள்வி. மேலும் இந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்குமிடையே ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு. அதாவது, வளர்ச்சியில் ஒரு நிறைவை பெற்றுள்ள அந்த நாடுகளின் அரசால் மேலும் புதிய முதலீடுகள் செய்து அதிக வளர்ச்சி காணச் செய்வது கடினமான காரியம். அதே சமயம் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு நல்ல குடியிருப்பு வசதி, தூய குடிநீர் வசதி, ஆரம்ப கல்வி, சாலை வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி இல்லாத நிலையில் அரசு நேரடியாக வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டால் இன்னும் நூறு ஆண்டுகள் கூட நம்மால் பத்து சதவீத வளர்ச்சியை தொடர்ச்சியாக காண முடியும். இதனால் அனைத்து தரப்பினரும் நலம் பெற முடியும். பணக்காரர்களையும் பெரும் வணிக நிறுவனங்களையும் சேர்த்துதான். எப்படியென்றால், அவர்களுடைய இப்போதைய பிரச்சினை பணத்தட்டுப்பாடு அல்ல. உற்பத்தித் தேவை குறைபாடுதான். அரசு நலத் திட்டங்களை நிறைவேற்றும் போது நிறைய பொருட்களுக்கும், உழைப்பிற்கும் தேவைகள் ஏற்படும். இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் கூட்ட முடியும். லாபம் அதிகம் பார்க்க முடியும்.

மக்களுடைய மனதில் எழும் ஒரு பொதுவான கேள்வி. ஏழை நாடாகக் கருதப் படும் இந்தியாவில் இவ்வளவு நலத் திட்டங்களை நிறைவேற்ற பண வசதி எப்படி கிடைக்கும் என்பதுதான். இதற்கு பல வழிகள் உண்டு. முறையான வரி வசூல், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தை திரும்பப் பெறுதல், புதிதாக அரசுப் பத்திரங்கள் வெளியிடுதல் முதலியன.(வட்டி வீதங்கள் குறைந்த நிலையில் இது சாத்தியமே). எனவே அரசு உடனடியாக (தங்க நாற்கர சாலை போன்ற) புதிய சாலைத் திட்டங்கள், மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெரிய விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை தயாரித்து நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் இப்போதைக்கு உலக சந்தைகளில் எரிபொருட்கள், உலோகங்கள் மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்திருப்பது பெரிய முதலீடுகள் செய்ய வசதி உள்ள நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும்.

இந்த விஷயத்தில் தேர்தல் அரசியல் பார்க்காமல் நீண்ட கால நோக்கில் அரசு செயல் பட்டால் அனைவருக்கும் நல்லது.

நன்றி.

Comments

இன்னும் பல முக்கியமான நிறுவனங்கள் அரசின் நேரடி பார்வையில் இருப்பது தான் இந்திய பொருளாதாரதை தாங்கி பிடிக்கும் காரணிகள்,

இருப்பினும் கும்பானி சகோதரர்கள் போல் சிலரால் மக்களுக்கு போய் சேர வேண்டிய சலுகைகள் சரியாக போய் சேருவதில்லை,
உதாரணம்: கச்சா எண்ணைய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையை குறைக்காமல் இருப்பது!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//இன்னும் பல முக்கியமான நிறுவனங்கள் அரசின் நேரடி பார்வையில் இருப்பது தான் இந்திய பொருளாதாரதை தாங்கி பிடிக்கும் காரணிகள்,//

சத்தியமான வார்த்தைகள். முக்கியமாக அரசு வங்கிகள். இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி பெறாமல் இருப்பதற்கு இவைகளுக்கு இந்தியர் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். அரசு வங்கிகளை தனியார் மயமாக்கி விட வேண்டும் என்று துடித்த மேலை நாட்டு சிந்தனையாளர்கள் கூட ஒப்புக் கொண்ட ஒரு விஷயம் இது.

//இருப்பினும் கும்பானி சகோதரர்கள் போல் சிலரால் மக்களுக்கு போய் சேர வேண்டிய சலுகைகள் சரியாக போய் சேருவதில்லை,
உதாரணம்: கச்சா எண்ணைய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையை குறைக்காமல் இருப்பது!//

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்று ஆரம்பித்த பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் நம் நாட்டையே தனியார்மயமாக்கி விட இருந்த ஒரு அபாயத்திலிருந்து (ஓரளவுக்கேனும்) மீட்ட பெருமை அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கே போய் சேரும்.

மிக விரைவாக படித்து அருமையான ஒரு பின்னூட்டமும் இட்ட உங்களுக்கு மீண்டுமொரு நன்றி. :-)
ஷாஜி said…
Blue color font - background color need some changes for better readabilty. current color combination makes eyes more strain.
Maximum India said…
Dear Shaji

Thank you for the feedback.

I have changed the colour of fonts and background. I hope that now it is comfortable for reading.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...