எங்களுக்காகவும் சில பதிவுகள் இடுங்கள் என்று கோரிக்கை வைத்த செல்வன்.தீபக் சூர்யா, செல்வன்.ஜெய சூர்யா போன்ற சில இளம் அறிவியல் சிந்தனையாளர்களுக்கான ஒரு பதிவு இது. இளைஞர்கள் போல அறிவியல் தாகம் கொண்ட பெரியவர்கள் கூட இதை படிக்கலாம்.
துருவப் பகுதி போன்ற அசாதாரண தட்பவெட்ப நிலைகளைக் கொண்ட உலகின் சில பகுதிகளில் (சில சமயங்களில் சாதாரண பகுதிகளில் கூட)வாழும் சில உயிரினங்கள் வருடந்தோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெறும் கடுமையான பருவநிலை மாற்றத்தின் போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள ஒரு வித கோமா போன்ற நிச்சலன அல்லது ஜட நிலைக்கு சென்று விடுவது உண்டு. பருவ நிலை சீர்பெற்றவுடன் தம்மை தாமே மீண்டும் உயிர்ப்பித்து எழுவதும் உண்டு. இந்த அதிசய நிகழ்வுகள் பற்றியும் இந்த நிலையை மனிதன் எப்படி உபயோகித்துக் கொள்வது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.
இத்தகைய நிச்சலன நிலைக்கு அறிவியல் ரீதியான பெயர் HIBERNATION என்பதாகும். கடுமையான பருவநிலைகளில் உணவு தேடுவது (உணவு கிடைப்பது அரிது) உயிரினங்களுக்கு ஒரு சிரமமான செயலாகும். எனவே உணவு கிடைக்காத நிலையில் கூட உடல்ரீதியான தனது செயல்பாடுகளை ஒரே மாதிரி தொடர்ந்து கொண்டிருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உயிரினங்களின் உடல் தளர்ந்து போய் விடும். தொடர்ந்து பல நாட்கள் உணவு பெற முடியாத நிலையில் உயிரிழப்பு கூட நேரிடலாம். இந்த வகையான ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வகை உயிரினங்கள் இத்தகைய காலகட்டத்தில் ஒருவித நிச்சலன (ஜட) நிலையை மேற்கொள்ளும். அப்போது, உயிரினங்களின் உடலில் ஒருவித வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து அவற்றின் உடலின் வளர்சிதை மாற்றங்கள் (Metobolism) குறைந்து போகின்றன. மேலும் இவற்றின் உடல் வெட்ப நிலை மிகவும் குறைந்து போகிறது. மூச்சு விடும் வேகம் மிகவும் குறைந்து போகிறது. இதனால், அவற்றின் சக்தி வெளிப்பாடு (விரயம்) மிக குறைவாக மாறி, தமது சக்தியை பல நாட்கள் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலை மேற்கொள்ளும் சில உயிரினங்கள் கீழே.
ஒரு வித அணில்கள், ஒரு வகை வௌவால்கள், ஒரு வகை முள்ளம் பன்றிகள் மற்றும் ஒரு வித பாம்புகள்
(bats, some species of ground squirrels and other rodents, mouse lemurs, the West European Hedgehog and other insectivores, some rattlesnakes, such as the Western Diamondback, monotremes and marsupials.)
HIBERNATION நிலைக்கு செல்லும் சில உயிரினங்களின் (நிலத்தடி அணில்கள் - GROUND SQUIRRELS) வெட்ப நிலையோ 27* F அளவிற்கு கீழே (அதாவது நீரின் உறை நிலைக்கும் கீழே) சென்று விடுகிறது.

இந்த HIBERNATION எனும் நிச்சலன நிலை பொதுவாக குளிர் ரத்த பிராணிகளுக்கு அதிகம் சாத்தியமான ஒன்று. இவற்றின் உடலில் வெளியிடப்படும் ஒரு வித வேதி பொருள் இந்த நிச்சலன நிலை உருவாக முக்கிய காரணமாக உள்ளது என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பறவைகள், மனிதர்கள் போன்ற வெதுவெதுப்பான ரத்தம் கொண்ட உயிரினங்களுக்கு பொதுவாக இது சாத்தியமில்லை. அதே சமயம், வெதுவெதுப்பான ரத்த அமைப்பு கொண்ட பனிக் கரடிகள் உண்மையான நிச்சலன நிலைக்கு செல்லா விட்டாலும், குளிர்காலத்தில் ஒரு வித நீண்ட தூக்க நிலைக்கு சென்று விடுகின்றன. இந்த காலகட்டத்தில் அவற்றின் உடல் வெட்ப நிலை 98.6°லிருந்து 88 °F அளவிற்கு சென்று விடுகிறது. மனித உடல் கூட சில எதிர்பாரா விபத்துகளின் போது தற்காலிக நிச்சலன நிலைக்கு சென்று விடுவதாக சில அறிவியலார் வாதிடுகின்றனர். சில உதாரணங்கள் அவர்களால் கொடுக்கப் பட்டுள்ளன.
ஒரு பெண் நோர்வே நாட்டில் ஐஸ் நீரில் மூழ்கி ஒரு மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப் பட்டார். அப்போது அவருக்கு இதய துடிப்பு முழுமையாக நின்று போயிருந்தது. மற்றும் உடல் வெட்பம் 57* F ஆக குறைந்து போயிருந்தது. (1999)
கனடாவில் பதிமூன்று மாத குழந்தை இரவில் வெளிவந்தது விட பணியில் உறைந்து போனது. அப்போது வெளியில் இருந்த வெட்ப நிலை 11*F (உறை நிலைக்கும் மிகக் கீழே). அந்த குழந்தையும் இரண்டு மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப் பட்டது. அப்போது அதன் உடல் வெட்ப நிலை 61* F என கண்டுபிடிக்கப் பட்டது. (2001)
இது போன்ற தற்செயலான நிகழ்வுகள், மனிதர்களுக்கும் HIBERNATION எனப்படும் நிச்சலன நிலையை மருத்துவ ரீதியாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளன. இதனால், பல கடுமையான வியாதிகளை குணப் படுத்தலாம், உடல் உறுப்புகள் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றலாம் என்பதோடு, இப்போது கனவாக மட்டுமே உள்ள "தொலை தூர கிரகங்களுக்கு (ஏன் நட்சத்திரங்களுக்கு கூட) மனிதனின் பல ஆண்டுகள் பயணம்" என்பது கூட சாத்தியமாகும்.
இப்போது அமெரிக்காவில் உள்ள மார்க் ரோத் (Mark Roth) எனும் ஒரு விஞ்ஞானி, ஒருவித இயற்கையான வேதிபொருளை மனிதர்களுக்கு செலுத்துவதன் மூலம் (வெதுவெதுப்பான ரத்த அமைப்பை குளிர் ரத்த அமைப்பாக மாற்றி) அவர்களுக்கு "FORCED HIBERNATION" கொண்டு வர முடியும் என்று கூறுகிறார். இந்த வேதிப் பொருள் மனித உடலில் இயல்பாக தோன்றும் ஒன்றுதான் என்றும் இந்த வேதிப் பொருளை ஏற்கனவே எலியின் உடலில் செலுத்திய சோதனை முயற்சி வெற்றி பெற்று விட்டதாகவும் கூறுகிறார். கூடிய விரைவில் மனிதர்களின் உடலிலும் இந்த வேதிப் பொருள் கூடிய விரைவில் பரிசோதிக்கப் படும் என்று தெரிகிறது.
இந்த சோதனை வெற்றி பெற்றால், மனிதரின் அறிவியல் பயணத்தில் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். ஏற்கனவே சொன்னபடி, இன்று கான்செர் போன்ற கடுமையான வியாதியினால் அவதிப் படுவோருக்கு அறுவைசிகிச்சை செய்தல், உறுப்புகளை மாற்றி பொருத்துதல், வெளிக் கிரக பயணம் போன்றவை எளிதில் சாத்தியமாகும்.
நன்றி
பின்குறிப்பு: சமீபத்தில், செயற்கை முறையில் ஒருவரின் ரத்தத்தை முழுவதுமாக வெளியேற்றி உடலை ஒரு "மருத்துவரீதியான மரண நிலைக்கு" கொண்டு சென்று பின்னர் மிகக் குறைந்த வெட்ப நிலையில் (கிட்டத்தட்ட -17* c என்று ஞாபகம்) அறுவை சிகிச்சை (கான்செர்) வெற்றிகரமாக செய்த பிறகு ரத்தத்தை மீண்டும் பாய்ச்சி உயிர்ப்பித்து ஒரு புதிய மருத்துவ சாதனை படைத்துள்ளனர் நம்மூர் (மும்பை) விஞ்ஞானிகள். இவர்களுக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
28 comments:
//அறிவியல் தாகம் கொண்ட பெரியவர்கள் கூட இதை படிக்கலாம்.//
படிக்கும் போது அறிவியலில் 12 மார்க் மட்டும் எடுத்திருக்கலாம், ஆனாலும் எனக்கு தாகம் இருக்கு, நம்புங்க
கோமா போன்ற நிச்சலன அல்லது ஜட நிலைக்கு சென்று விடுவது உண்டு//
ஒரு வித நீண்ட உறக்கம் இல்லையா?
ஒருவித வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து அவற்றின் உடலின் வளர்சிதை மாற்றங்கள் (Metobolism) குறைந்து போகின்றன//
அதாவது பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகுவது மந்தமாகிறது அப்படி தானே!
ஒரு வித அணில்கள், ஒரு வகை வௌவால்கள், ஒரு வகை முள்ளம் பன்றிகள் மற்றும் ஒரு வித பாம்புகள்//
சில மனிதர்களையும் சேர்த்துகோங்க!
ஒருவேளைக்கு புல்லா சாப்பிட்டுட்டு நாலு நாளைக்கு உண்ணாவிரதம் இருப்பாங்க!
ஒரு பெண் நோர்வே நாட்டில் ஐஸ் நீரில் மூழ்கி ஒரு மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப் பட்டார். அப்போது அவருக்கு இதய துடிப்பு முழுமையாக நின்று போயிருந்தது. மற்றும் உடல் வெட்பம் 57* F ஆக குறைந்து போயிருந்தது. //
இதயம் நின்று விட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிசன் செல்லாதே!
ஆக்சிசன் இல்லையென்றால் அது இறந்த நிலையாகிறது. கோமா நிலையில் கூட மூளையில் சில பகுதிகள் இயங்காதே தவிர மூளைக்கு ஆக்சிசன் செல்லும் என்று தானே கேள்வி பட்டிருக்கிறேன்
தூர கிரகங்களுக்கு (ஏன் நட்சத்திரங்களுக்கு கூட) மனிதனின் பல ஆண்டுகள் பயணம்" என்பது கூட சாத்தியமாகும்.//
பல நூற்றாண்டுகள் பயணம்னு சொல்லுங்க!
நான் புரிஞ்சிகிட்டதை தான் பின்னூட்டமா போட்டுருக்கேன்.
தவறென்றால் சொல்லி கொடுங்கள் திருத்தி கொள்கிறேன்
நிச்சயமாக ... வாழ்த்துக்கள்.
படிக்கும் போதே பலவிதமான சிந்தனைகளை தூண்டிவிடுகிறது.
அருமையான் தகவல்......
அந்த ௪(4) பேருக்கு நன்றி...
Very useful, though i m not interested in these kind of information. U did well.Good job. Keep the good work
நான் என்ன என்ன கேள்வி கேக்கனும்னு நினைத்தேனோ எல்லாதையும் வால்பயனே கேட்டுட்டாரு அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..
நல்ல பதிவு..
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டங்களுக்கு நன்றி
//படிக்கும் போது அறிவியலில் 12 மார்க் மட்டும் எடுத்திருக்கலாம், ஆனாலும் எனக்கு தாகம் இருக்கு, நம்புங்க//
உங்க பேரிலேயே பையன் இருக்கு அதுவும் வாலோட. அதனால சுட்டிங்க லிஸ்ட்ல சேந்து கண்டிப்பா படிக்கலாம். நீங்க படிக்கும் போது அறிவியலில் 12 மார்க் மட்டும் எடுத்திருக்கலாம். ஆனால் டெலஸ்கோப் பத்தி அழகா எழுதுறவர் நீங்க. அதனாலே உங்க மேல அறிவியல் விஷயத்துலயும் ரொம்ப நம்பிக்க வைக்கிறவன் நான்.
அன்புள்ள வால்பையன்
//அதாவது பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகுவது மந்தமாகிறது அப்படி தானே!//
நீங்கள் சொல்வது மேடபோலிசம் செயலின் ஒரு பகுதிதான் என்றாலும் மேடபோலிசம் இன்னும் பல செயல்களை உள்ளடக்கியது. உதாரணமாக, கரிமப் பொருளை எரித்து சக்தி உருவாக்குதல், உடலுக்கு தேவையான ப்ரோடீன் மற்றும் நுயுக்லிக் ஆசிட் உருவாகுதல், மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் போன்றவை. மொத்தத்தில் ஒரு மனிதன் உயிர்வாழ ஒரு செல்லில் நடைபெறும் அத்தனை வேதி மாற்றங்களும் மேடபோலிசம் எனும் பொருளில் அடக்கம்.
சரியாக விளக்கி இருக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.:)
சரியாக விளக்கி இருக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.:)
அன்புள்ள வால்பையன்
//ஒரு வித நீண்ட உறக்கம் இல்லையா?//
உறக்கம் என்று முழுவதுமாக சொல்ல முடியாது. ஏனெனில் உறக்கத்தின் போது, உடலில் பல உறுப்புக்கள் இயல்பான முறையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இது ஒரு வித கடுமையான தியான நிலை என்று வேண்டுமானால் சொல்லலாம். இங்கே அனைத்து உறுப்புக்களும் (உள் உறுப்புக்கள் உட்பட) தனது நடவடிக்கைகளை சுருக்கிக் கொண்டு, சக்தியைச் சேமிக்கின்றன.
அன்புள்ள வால்பையன்
//சில மனிதர்களையும் சேர்த்துகோங்க!
ஒருவேளைக்கு புல்லா சாப்பிட்டுட்டு நாலு நாளைக்கு உண்ணாவிரதம் இருப்பாங்க!//
கண்டிப்பா. அவ்வையார் வயிற்றைப் பற்றி பாடி இருப்பது இவர்களுக்கு பொருந்தாது போலும். இவர்களுடைய இந்த திறமைய வளர்க்கத்தான் பல விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள வால்பையன்
//இதயம் நின்று விட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிசன் செல்லாதே!
ஆக்சிசன் இல்லையென்றால் அது இறந்த நிலையாகிறது. கோமா நிலையில் கூட மூளையில் சில பகுதிகள் இயங்காதே தவிர மூளைக்கு ஆக்சிசன் செல்லும் என்று தானே கேள்வி பட்டிருக்கிறேன்//
நான் இதைப் பற்றி எதுவும் படிக்க வில்லை. ஆனால் என்னுடைய அனுமானம் இது. உடலின் மற்ற உறுப்புக்களைப் போலவே மூளையும் தன்னுடைய நடவடிக்கையை மிகவும் சுருக்கிக் கொண்டு , தன்னிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பு சக்தியைக் கொண்டே இயல்பை விட அதிக நேரம் வாழ முடிகிறது. இது போலவே எல்லா உறுப்புக்களும் தம்முடைய நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்வதுதான் சாதாரண கோமாவிற்கும் hibernation க்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்று நினைக்கிறேன். இதை பற்றி மருத்துவம் படித்த யாரேனும் விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
அன்புள்ள வால்பையன்
//பல நூற்றாண்டுகள் பயணம்னு சொல்லுங்க!//
அப்போதெல்லாம் மனிதர்கள் (இப்போது ஊர் விட்டு ஊர் போவது போல) கிரகம்/நட்சத்திரம் விட்டு இன்னொரு கிரகம்/நட்சத்திரத்திற்கு போவார்கள். பல ஹாலிவுட் சினிமாக்கள் இந்த hibernation அடிப்படையில் எடுக்கப் பட்டுள்ளன.
நன்றி
அன்புள்ள வால்பையன்
//நான் புரிஞ்சிகிட்டதை தான் பின்னூட்டமா போட்டுருக்கேன்.
தவறென்றால் சொல்லி கொடுங்கள் திருத்தி கொள்கிறேன்//
சொல்லப் போனால் நான் கூட கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். பத்து வயதிற்கும் குறைந்த சிறுவன் இது பற்றி கேட்ட கேள்விக்கு ஓரளவு விடை தெரியவே பல இன்டர்நெட் சைட் பார்க்க வேண்டியிருந்தது.
அன்புள்ள வடுவூர் குமார்
பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புள்ள ராஜே
பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புள்ள வலைப்பூக்கள் குழுவிற்கு இந்த தகவலுக்காக நன்றி
அன்புள்ள வினோத் கெளதம்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நான் என்ன என்ன கேள்வி கேக்கனும்னு நினைத்தேனோ எல்லாதையும் வால்பயனே கேட்டுட்டாரு அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..//
கொடுத்த பதில் திருப்தியான்னு சொல்லுங்க.
நன்றி
அன்புள்ள கபீஷ்
எனக்கு கூட படிக்கும் போது பயாலஜின்னா கொஞ்சம் அலர்ஜிதான். அதனாலதான், இன்ஜினியரிங் படித்தேன். interest இல்லன்னாக் கூட படிச்சு பின்னூட்டம் போட்ட உங்களுக்கு நன்றி.
ஜட நிலை பற்றி சொல்கிறீர்கள். உண்மைதான் . வெளியில் நமக்கு ஒவ்வாத விஷயங்கள் நடுக்கும் போது ஜட நிலை போவது நல்லதுதான். நம் நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு ஒரே இடத்தில் அடுத்தவர்கள் கண் படாமல் வாழும் நிலை அது. அந்த திடீர் நிலை பற்றி மற்றவர் சொல்லுவதை நாம் கேட்க தேவை இல்லை.. நம் நிலை நமக்கு தெரியும். கொஞ்ச நேரம் ஜட நிலையில் இருந்தாலே போதும் நம்மை கைப்பற்றி விடுவார்கள்.எங்க.. இது அரசியல் பத்தின பதிவா.... ஒ சாரி சாரி .. அறிவியல் பத்தின பதிவா.. சாரிங்க டெய்லி சத்யம் பத்தி படிச்சு அதே மூட்ல பேசிட்டேன்.
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இது அரசியல் பத்தின பதிவா.... ஒ சாரி சாரி .. அறிவியல் பத்தின பதிவா.. சாரிங்க டெய்லி சத்யம் பத்தி படிச்சு அதே மூட்ல பேசிட்டேன்//
தவறில்லை பொதுஜனம். அரசியலுக்கும் அறிவியலுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பது நியுட்டன் தத்துவம். ஒவ்வொரு அறிக்கைக்கும் பதிலறிக்கை உண்டென்பது நம் தமிழக அரசியல் தத்துவம். தாடி வைத்த விஞ்ஞானிகள் சொல்பவை பல நமக்கு புரிவதில்லை. அது போலவே வேட்டி கட்டிய நம் அரசியல்வாதிகள் எடுக்கும் பல முடிவுகள் நமக்கு புரிவதில்லை. விஞ்ஞானிகளும் ஊழல் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்கிறார்கள். விஞ்ஞானிகள் புதிய தத்துவங்களை கண்டுபிடிக்கிறார்கள். அரசியல்வாதிகள் (ஊழல் செய்வதில்) புதிய புதிய வழிமுறைகளை தினந்தோறும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். (போதும்னு நினைக்கிறேன்)
/
வால்பையன் said...
படிக்கும் போது அறிவியலில் 12 மார்க் மட்டும் எடுத்திருக்கலாம், ஆனாலும் எனக்கு தாகம் இருக்கு, நம்புங்க
/
நான் 34/100ங்க ஆனா தாகம் இருக்குங்க நம்புங்க பிலிஸ்
அன்புள்ள சிவா
பின்னூட்டத்திற்கு நன்றி :)
வால்பையன் மீது வைத்த நம்பிக்கையை உங்கள் மீதும் வைக்கிறேன். மீண்டும் ஒரு அறிவியல் பதிவுடன் சந்திப்போம்.
நன்றி.
Post a Comment