Monday, January 12, 2009

திருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்


பரவலாக எதிர்பார்க்கப் பட்டது போலவே ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னவென்று பார்ப்போம்.

தி.மு.க. :

குடும்பம் மற்றும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வரும் இந்த வேளையில் திருமங்கலம் தொகுதி வெற்றி கட்சித் தலைமைக்கு ஓரளவுக்கு திருப்தியைத் தந்திருக்கக் கூடும். அதே சமயம் ஒரு சிறிய தொகுதியில் முழு அரசு பலத்தையும் காட்ட முடிந்தது போல, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காட்ட முடியாது என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை அப்போது என்னவாக இருக்கும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருப்பதாலும் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. பொருளாதார தளர்ச்சியின் பாதிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள இன்றைய சூழலில் சாதாரணமாக மக்களின் கோபம் ஆளுங்கட்சியின் மீதே திரும்ப வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, உடனடியாக தேர்தலை விரும்பாத மத்திய அரசு குறுகிய கால நோக்கில் பல பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை (பெட்ரோல் விலை குறைப்பு, வட்டி வீத குறைப்பு போன்றவை) எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் பெருமளவு பலன் தராத பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு பொதுத் தேர்தல் கடும் சவாலாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.

அ.தி.மு.க.:

இந்த தேர்தலின் மூலம் தி.மு.க. விற்கு மாற்றுக் கட்சியாக அ.தி.மு.கவையே மக்கள் கருதுகிறார்கள் என்பதும் மூன்றாவது நான்காவது கட்சிகள் பெருமளவு வோட்டுகளைப் பெற வில்லை என்பதும் அ.தி.மு.க. தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயங்கள். ஏற்கனவே சொன்னபடி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் இப்போதைய பொருளாதார தளர்ச்சி நீடிக்குமேயானால், அதன் பலன் அ.தி.மு.க.விற்கே அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், வெற்றி பெற்றால் அ.தி.மு.க. தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும், புதிய ஆட்சியில் அ.தி.மு.க. வின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அதன் தலைமை தெளிவு படுத்த வேண்டி இருக்கும். மேலும் பா.மா.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது, ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை தர உதவும் என்று கருதுகிறேன்.

தே.மு.தி.க. :

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பின்னர் வந்த இடைத் தேர்தலிலும் மிகப் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்திய தே.மு.தி.க. இந்த தேர்தலில் டெபொசிட் இழந்துள்ளது இந்த கட்சியும் ம.தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகளின் நிலையை (சிறந்த துவக்கத்திற்கு பின்னர் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிப் போனது) அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு நல்ல மாற்று போல துவக்கத்தில் தோற்றமளித்த இந்த கட்சியில் ஏற்பட்ட தலைமையின் குடும்ப தலையீடுகள் மற்றும் வாய் சவடால்கள் காரணமாக இந்த கட்சிக்கும் மற்ற திராவிட கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டதாலேயே இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை இந்த கட்சி பெற்றுள்ளது என்று கருதுகிறேன். இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சியால் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல, பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது அகில இந்திய அளவில் ஒரு அறிமுகத்தையும், நிதி தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பத்தோடு பதினொன்றான ஒரு கூட்டணி கட்சியாக மாறி மக்கள் மதிப்பை இழக்க வேண்டி இருக்கும். எனவே இந்த தேர்தல் முடிவுகள் கட்சித் தலைமைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

இதர கட்சிகள்:

கூட்டணியை மாற்ற காங்கிரஸ்சின் தமிழக கிளையின் ஒரு பிரிவினர் செய்து வந்த முயற்சிகள் இப்போதைக்கு பின்னடைவை சந்திக்கும். எந்த கட்சியுடன் கூட்டு என்ற பாமகவின் முடிவு பொதுத் தேர்தல் வரும் வரை தள்ளிப் போடப் படலாம். நான்காவது ஐந்தாவது இடம் பெற்ற கட்சிகள் ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து (சீட்டு இல்லாமல்) போட்டி இடலாம். அல்லது ஒரு மாபெரும் (?) மூன்றாவது கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம்.

வன்முறை:

தமிழகம் இதுவரை காணாத வன்முறையை இந்த தேர்தல் கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீர், பீகார் மாநிலங்களின் தேர்தல்களை விட அதிக வன்முறை திருமங்கலம் தேர்தலில் நடைபெற்றதாக தேர்தல் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கட்சிகள் இந்த தேர்தல் முடிவை கௌரவ பிரச்சினையாக நினைத்ததே இந்த வன்முறைக்கு காரணம் என்று நினைக்கிறேன். இது வருத்தத்துக்குரிய மற்றும் கடுமையாக கண்டிக்கத் தக்க விஷயம் என்றாலும், பரவலான பொதுத் தேர்தலின் போது இத்தகைய வன்முறை நிகழாது என்று நம்புகிறேன்.

ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஆதிக்கமே இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்பதையே இந்த இடைத் தேர்தல் முடிவு காட்டுவதாக கருதுகிறேன். மேலும் இந்த இரண்டு கட்சிகளில் (கூட்டணிகளில்) நாடாளுமன்ற தேர்தலுக்கான வியுகத்தை சிறப்பாக அமைக்கிற கட்சியே (கூட்டணியே) வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

நன்றி

10 comments:

nsaran said...

உமது கருத்து உண்மை தான்.

Maximum India said...

அன்புள்ள சரண்

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி.

குப்பன்_யாஹூ said...

ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் வாகு அளித்து உள்ள தொகுதியில் சரத்குமார் கட்சி பெற்ற வாக்கு ௮௪௧.

ஐம்பது மாவட்ட செயலாளர்கள் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் குடும்ப கட்சி பெற்ற வாக்குகள் ௧௩000.

இனிமேல் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் இந்த கட்சிகள் பற்றி எழுதும் டுபாக்கூர் செய்திகள் விலை போகாது.

நக்கீரன் சர்வே படி கடும் போட்டி இருக்கும், வாக்கு வித்தியாசம் பத்தாயிரம் என்பது எல்லாம் பொய் என வாக்காளர்கள் மீண்டும் நிரூபித்து உள்ளார்கள்.

pothujanam said...

திருமங்கலத்தை நன்றாக அலசி காய போட்டுள்ளீர்கள். பொதுவாக எல்லா இடை தேர்தல்களும் ஆளும் கட்சியின் பலத்தை பறை சாற்றுவதாகவே அமைந்து விடுகின்றன. இதுவும் அதே போல்தான். பெரும்பாலான நடு நிலை வாக்காளர்கள் வோட்டு போடும் போது தான் உண்மையான ரிசல்ட் தெரியவரும். வன்முறை, பண பலம் சூழ்ந்த இடை தேர்தல்களில் அது நடக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு கொஞ்சம் கையில் காசு சேர்ந்தது, நன்றாக பொழுது போனது, தேர்தல் அதிகாரிகளுக்கு பீ பி ஏறியது தவிர மிச்சமெல்லாம் same old story.

Maximum India said...

அன்புள்ள குப்பன் யாஹூ

பின்னூட்டத்திற்கு நன்றி

நீங்கள் சொல்வது உண்மைதான். மக்கள் மனதை சிலரைக் கொண்டு ஊடகங்களால் எடுக்கப் படும் சர்வேக்கள் கொண்டு சரியாக கணிக்க முடியாது. மேலும் இந்த தேர்தலின் ஹைலைட்டே ஊடகங்களால் அதிகம் தூக்கி வைக்கப் பட்ட சிறு கட்சிகள் ஓரம் கட்டப்பட்டதுதான்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//திருமங்கலத்தை நன்றாக அலசி காய போட்டுள்ளீர்கள். பொதுவாக எல்லா இடை தேர்தல்களும் ஆளும் கட்சியின் பலத்தை பறை சாற்றுவதாகவே அமைந்து விடுகின்றன. இதுவும் அதே போல்தான். பெரும்பாலான நடு நிலை வாக்காளர்கள் வோட்டு போடும் போது தான் உண்மையான ரிசல்ட் தெரியவரும். வன்முறை, பண பலம் சூழ்ந்த இடை தேர்தல்களில் அது நடக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு கொஞ்சம் கையில் காசு சேர்ந்தது, நன்றாக பொழுது போனது, தேர்தல் அதிகாரிகளுக்கு பீ பி ஏறியது தவிர மிச்சமெல்லாம் same old story.//

நீங்கள் சொல்வது சரிதான். பதிவிலேயே கூறியபடி ஆளும்கட்சி ஒரு சிறிய தொகுதிக்கான இடைதேர்தலில் முழு அரசு இயந்திரத்தை உபயோகித்து வெற்றி பெறுவது பழகிப் போன ஒன்றுதான். ஆனால். ஆளுங்கட்சிக்கு போட்டி எந்த கட்சி என்பதும், அந்த கட்சியால் ஆளுங்கட்சிக்கு எதிராக சாதாரணமாக பொதுத் தேர்தலில் உருவாகும் "எதிர்ப்பு அலையைச்" சிந்தாமல் சிதறாமல் தனக்கான வாக்குகளாக மாற்ற முடியுமா என்ற கேள்விகளுக்கு விடை தருவதாகவே இந்த இடைத்தேர்தல் அமைந்திருந்தது என்று நான் கருதுகிறேன்.

நன்றி

வால்பையன் said...

நல்ல அலசல்!

மத்திய தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக படுகிறது!

பொருளாதார பின்னடைவு அதற்கு பெரும் காரணமாக இருக்கலாம் என கருதுகிறேன்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//மத்திய தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக படுகிறது!

பொருளாதார பின்னடைவு அதற்கு பெரும் காரணமாக இருக்கலாம் என கருதுகிறேன்//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எதிர்கட்சிகளால் சரியான பிரதமர் வேட்பாளரை முன் வைக்க முடியாமல் போனால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடியவும் வாய்ப்பு உள்ளது.

கார்த்திக் said...

// பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது அகில இந்திய அளவில் ஒரு அறிமுகத்தையும், நிதி தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே.//

தமிழகத்தை பொறுத்தவரை பாஜாகவை விட தேமுதிக்கா மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமான கட்சி.

// அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. //

நீங்கள் சொன்னது போல்
ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்தாகவேண்டிய சூழல்தான்.
ஆனா மக்கள் அவருக்கு ஓடுப்போடுவதே அவர் எவருடனும் கூட்டணி வைக்காமல் இருப்பதற்குத்தான்.
பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

வழக்கம் போல் அருமையான அலசல்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//தமிழகத்தை பொறுத்தவரை பாஜாகவை விட தேமுதிக்கா மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமான கட்சி.//

உண்மைதான். ஆனால் ஒருவேளை பி.ஜே.பி.மத்தியில் ஆட்சி அமைத்தால், அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது, மந்திரி பதவி அல்லது மத்திய அரசில் செல்வாக்கு பெறுவதற்கு உதவும்.

// அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. //

//ஆனா மக்கள் அவருக்கு ஓடுப்போடுவதே அவர் எவருடனும் கூட்டணி வைக்காமல் இருப்பதற்குத்தான்.
பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.//

மிகச் சரியான கருத்து. இது போன்ற புதிய கட்சிகளுக்கு நிறைய மக்கள் ஒட்டு போடுவது தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிட கட்சிகள் மீது இருக்கும் வெறுப்பிலும் ஏதேனும் மாற்றம் வராதா என்ற ஆதங்கத்திலும்தான். பின்னர் இந்த கட்சிகள் (ம.தி.மு.க ஒரு சிறந்த உதாரணம்) பெரிய கூட்டணிகளில் ஐக்கியமாகும் போது இத்தகைய கட்சிகளின் செல்வாக்கு பெருமளவிற்கு குறைந்து போகிறது.

வழக்கம் போல் அருமையான அலசல்.

Blog Widget by LinkWithin