Tuesday, January 20, 2009

இந்தியாவின் ஒபாமா?


இன்று உலகின் சரித்திரத்தின் மிக முக்கியமான நாள். சுரண்டலின் அடையாளமாக திகழும் அமெரிக்காவின் தலைவராக பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப் பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார். உலகின் மிக வலிமையான ஒரு ஜனநாயக நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாக ஏற்பட்டுள்ள இந்த புரட்சி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் (அதுதாங்க நம்ம இந்தியா) சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரைப் போன்றே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல நூற்றாண்டுகளாக நேர்மையற்ற முறையில் ஒடுக்கப் பட்ட தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவாரா என்றும் அப்படி ஆவது எப்போது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

அது வேறு இது வேறு என்று நினைப்பவர்களுக்காக, பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருவேறு திசைகளில் அமைந்திருக்கும் இரு பெரும் நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஏற்பட்ட இரண்டு சமுதாய மீட்சி இயக்கங்களுக்கிடையே உள்ள அதிசயத்தக்க சில ஒற்றுமைகள் பற்றி பார்ப்போம்.
தங்களுக்குள்ள நியாமான உரிமைகள் பற்றியும், தம் மீது இழைக்கப் படும் கொடுமைகளை எப்படி களைவது என்பது பற்றியும் பெருமளவு விழிப்புணர்வு நலிவுற்ற சமுதாயங்களுக்கு இல்லாத காலகட்டத்தில், இவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர்கள் இரண்டு நாட்டிலும் பிறப்பால் ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்திருந்தாலும் மனதால் சமுதாய சீர்திருத்தத்தை விரும்பிய சிலர்தான். அதே சமயம் ஒட்டுமொத்த நாட்டைச் சீர்திருத்த முயன்ற ஒரு பெரிய இயக்கத்தின் சிறு பகுதியாகவே ஒடுக்கப் பட்டவர்களை ஓரளுவுக்கேனும் உயர்த்தும் முயற்சி இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் அமெரிக்காவை ஒன்றிணைக்க அமெரிக்காவில் ஏற்பட்ட புனரமைப்பு இயக்கத்தின் (Reconstruction Movement) ஒரு பகுதியாக "அடிமை கலாச்சாரத்தை" ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தியர்களை சமூக ரீதியாக ஒருமைப் படுத்த இந்தியாவில் தோன்றிய ஆர்யா சமாஜ், பிரம்ம சமாஜ் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் "தீண்டாமை ஒழிப்பு" பணியிலும் ஈடுபட்டன. உயரிய சமுதாய கொள்கைகள் இந்த இயக்கங்கள் கொண்டிருந்தாலும், அவர்களுடைய பணிகளின் வீச்சும் பலனும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. மேலும் அடிபட்டவர்களின் வலி முழுமையாக தெரியாதவர்களால் இந்த இயக்கங்கள் நடத்தப் பட்டதால் இந்த இரு இயக்கங்களுமே பெரிய வெற்றி பெற வில்லை. அதே சமயம், பிற்காலத்தில் நடைப் பெற்ற பெரும் மாற்றங்களுக்கு இவை அடிகோலின என்பதை மறுக்க முடியாது.

இந்த புரட்சியின் இரண்டாம் பாகம் இரண்டு நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரின் வானில் விடி வெள்ளியாக அதே இனத்தைச் சேர்ந்த மார்ட்டின் லுதேர் கிங் அவர்களும், இந்திய தலித்துகளின் பகலவனாக அவர்களிடமிருந்தே அம்பேத்கர் அவர்களும் புரட்சிக்கு தலைமை வகிக்க முன் வந்தனர். தங்களது இனத்தைச் சார்ந்த ஒருவர் ஆதிக்க வர்க்கங்களில் இருந்து வந்த தலைவர்களுக்கு சமமான தகுதிகளுடன் அவர்களுக்கு இணையாக அரசியல் வானில் உயர்ந்தது இந்த இனங்களின் மக்களுக்கு புதிய தன்னம்பிக்கையும் எழுச்சியையும் அளித்தது.

அடிமைகள் எனப் பொருள் படும் "நீக்ரோக்கள்" என்ற பெயரில் முதலில் வழங்கப் பட்டு, ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்த மிதவாதிகளால் பின்பு "கறுப்பர்கள்" எனப் பெயர் சூட்டப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் தம் பெயர் மீது இருந்த மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க விரும்பி தம்மைத் தாமே "ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர்" என்று அழைத்துக் கொண்டனர். இதே போல, முதலில் கீழ்சாதி என்றும் தாழ்த்தப் பட்டவர் என்றும் அழைக்கப் பட்ட தலித் மக்கள், "ஹரிஜன்" என்று ஆதிக்க வர்க்கத்தினரால் சூட்டப் பட்ட பெயரையும் விரும்பாமல், தம்மைத் "தலித்" என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்பினர்.

வர்க்க வேறுபாடுகளுக்கு மதமே மூல காரணம் என்று நம்பிய ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் பெரும் எண்ணிக்கையில் கிறித்துவ மதத்தை விட்டு விலகி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர். கிட்டத் தட்ட அதே சமயத்தில் இந்திய தலித்துகள் தம்மை பிறப்பிலேயே தாழ்ந்தவராக வைத்த ஹிந்து மதத்தை விட்டு அம்பேத்கர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்தில் இணைந்தனர்

அதே சமயம் மார்டின் லூதர் கிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களுக்கு நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர தகுதிகள் பல இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வில்லை. ஆனால், அந்த வாய்ப்பை சுரண்டப் பட்ட சமுதாயங்களின் பிந்தைய சந்ததிகள் பெறக் கூடிய வகையில் அடித்தளம் போட்டவர்கள் இவர்கள் என்பதை மறுக்க முடியாது.

சமுதாய மாற்றத்தின் மூன்றாம் பகுதியாக, சுரண்டலின் சின்னமாகவும், ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவும், முதலாளித்துவத்தின் அடையாளமாகவும் அறியப் படும் அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் அடிமைகளாக கருதப் பட்டவர்களின் இனத்திலிருந்து ஒருவர் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

சரித்திரம் சொல்லும் ஆச்சரியகரமான ஒற்றுமைகளின் அடிப்படையில் இப்போது அமெரிக்காவில் ஒபாமா அடைந்த வெற்றியினை இந்தியாவில் பழமைவாதத்தின் அடிப்படையில் பிறப்பினாலேயே தாழ்ந்தவராக கருதி ஒடுக்கப் பட்ட தலித் இனத்திலிருந்து வரும் ஒருவர் பெறுவாரா என்பது இப்போது எழுந்துள்ள ஒரு கேள்வி.

பலருடைய பார்வை இப்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி அவர்களின் மீதுதான் உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள இவர், மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளர் எனவும் அறியப் படுவது குறிப்பிடத் தக்கது. இவரையும் ஒபாமாவையும் சற்று ஒப்பிடலாம்.

ஒபாமாவின் தந்தை ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் என்றாலும் தாயார் ஐரோப்பிய-அமெரிக்கா இனத்தைச் சார்ந்தவர். மேலும், தாயாரின் குடும்பத்திலேயே மேல்தட்டு நாகரிகத்துடன் வாழ்ந்து உயர்ந்த கல்வி மற்றும் சமூக வசதிகளைப் பெற்றவர் ஒபாமா. அதே சமயம் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடுமையான சூழல்களுக்கிடையே போராடியே வாழ்வில் உயர்ந்தவர் மாயாவதி. இந்த வகையில் மாயாவதியின் வெற்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

பெரும்பாலும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் அமெரிக்கத் தேர்தல் பிரசாரங்களில் தனது தனிப் பட்ட விவாதத் திறனால் மக்களைக் கவர்ந்தவர் ஒபாமா. சாதி மற்றும் வாக்கு வங்கிகளின் அடிப்படையிலேயே நடைபெறும் இந்தியத் தேர்தலில் தனது சிறந்த மேடைப் பேச்சுத் திறனாலும் சாதுரியமான வேட்பாளர் தேர்வாலும் உத்திரப் பிரதேச தேர்தலில் வென்றவர் மாயாவதி.

ஒபாமா ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாக அறியப் படாமல் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூடியவராகவே அறியப் படுகிறார். அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாகவே அறியப் படும் மாயாவதி மற்ற இனத்தவரால் குறிப்பாக மேல்தட்டு மக்களால் சாதிக் கட்சி தலைவராகவே அறியப் படுகிறார். இதை மாற்ற இப்போது முயற்சி செய்து வரும் மாயாவதி கடந்த உ.பி. தேர்தலில் பல இடங்களில் ஆதிக்க சாதியைச் சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தியதும், அந்த முயற்சி உ.பி. சட்ட மன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற உதவியதும் நாம் அறிந்ததே. இத்தகைய சாதுர்ய முயற்சி (கூட்டணி அரசியலாக வடிவெடுத்து) இந்தியா முழுதும் வெற்றி பெறுமேயானால் மைய அரசியலில் மாயாவதியின் முன்னேற்றம் தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பது என் கருத்து.

ஒபாமா மாற்றத்தின் அடையாளமாகவும் நம்பிக்கையின் சின்னமாகவும் பெரும்பாலான அமெரிக்கர்களால் அறியப் படுகிறார். அதே சமயத்தில் மாயாவதி பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இந்தியாவின் ஒரு சராசரி அரசியல்வாதியாகவே அதிகம் உணரப் படுகிறார்.

இப்படி இருவருக்குமிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், இப்போதைக்கு இந்தியாவின் தலைமைப் பொறுப்பேற்க அதிகம் வாய்ப்புள்ள தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் மாயாவதி என்றே கருதப் படுகிறது. இவரால் தலைமைப் பதவிக்கு உடனடியாக வரமுடிய வில்லையென்றாலும், அப்படி வந்து அதில் நீடிக்க முடிய வில்லையென்றாலும் கூட, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் (அது மாயாவதியாகவே கூட இருக்கலாம்) , அதன் தனி பிரதிநிதியாக உணரப் படாமலேயே, பெரும்பாலான இந்தியரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கு வர அதிக காலம் பிடிக்காது என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை விதைத்தது, இவ்விரு பெரிய நாடுகளில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களின் தோற்றங்களும், வளர்ச்சிகளும் வேறுபட்டு இருந்தாலும் விளைவுகள் கிட்டத்தட்ட ஒன்றே போலவும் ஒன்றையொன்று காலரீதியாக ஒட்டி அமைந்ததும்தான்.

ஒபாமா வெற்றி பெற்ற போது போட்டி வேட்பாளர் "மக்.கைன்" கூறியது.

"ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.''

இதே போல பல ஆயிரம் ஆண்டுகளாக கொடுமைப் படுத்தப் பட்டுள்ள தலித் இன மக்களில் இருந்து ஒருவர், மற்றவர்களின் அனுதாபத்தாலோ அல்லது அவர்கள் இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவோ அல்லது வெறுமனே சிம்பாலிக்காகவோ இல்லாமல், பெரும்பாலான இந்திய மக்களால் தனது தனிப் பட்ட தகுதியினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் அமர்வாரேயானால், அந்நாள் இந்தியாவின் பொன்னாளாக இருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

12 comments:

LOSHAN said...

அருமையான கருத்துகள்.. தெளிவான, தர்க்க ரீதியான நடை.. என் ஒபாமா மீது எதிர்பார்ப்புக்கள் உள்ளன என்பதை உங்கள் பதிவு தெளிவாக சொல்கிறது..

Maximum India said...

அன்புள்ள லோஷன்

பின்னூட்டத்திற்கும் முதல் வருகைக்கும் நன்றி.

veerani2001 said...

Mayavathi - The most currepted women in India to be a Indian OBAMA.?v

India will never come up

nerkuppai thumbi said...

++++++++++++++மீண்டும் ஒரு நல்ல பதிவு
"THE MAN" என்று Irving Vallace என்பவர் எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன் : அதில் சில நிகழ்வுகளினால் திடீரென்று ஒரு கறுப்பர் குடியரசுத் தலைவர் (ப்ரெசிடென்ட்) ஆகி விடுவதாக கற்பனை. சமூகத்தில் அதன் எதிர்வினை (reaction) என்ன என்று சுவைபட எழுதி இருந்தார். அது எழுதி சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அது நடந்தே விட்டது. ஆனால் மக்களின் எதிர்வினை அந்நூலில் கண்டதை விட முதிர்ச்சியுடன் irukkiradhu.
இங்கும் அதே போல நடக்கக் கூடும். நடக்கட்டும் : தலித்களுக்கு நீதி என்பதை விட்டு, சர்வ ஜன நல வாழ்வு என பேசத் துவங்கிவிட்டார் மாயாவதி.
சில மாற்றங்களை அவர் கொண்டு வர முயற்சிக்கலாம் என நினைக்கிறேன் .(udhaaranam) : மேல் தட்டு என்பதை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் naduvilum kondu வருவது . பொருளாதார அடிப்படையில் இட ஒத்க்கீடு போன்றவை அவர் போன்றவர் தான் கொண்டு வர முடியும்.
உங்கள் கனவு நனவாகட்டும்.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

//++++++++++++++மீண்டும் ஒரு நல்ல பதிவு//

உங்கள் ஆசீர்வாதம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.


//"THE MAN" என்று Irving Vallace என்பவர் எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன் : அதில் சில நிகழ்வுகளினால் திடீரென்று ஒரு கறுப்பர் குடியரசுத் தலைவர் (ப்ரெசிடென்ட்) ஆகி விடுவதாக கற்பனை. சமூகத்தில் அதன் எதிர்வினை (reaction) என்ன என்று சுவைபட எழுதி இருந்தார். அது எழுதி சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அது நடந்தே விட்டது. ஆனால் மக்களின் எதிர்வினை அந்நூலில் கண்டதை விட முதிர்ச்சியுடன் irukkiradhu. //

இது அமெரிக்காவின் ஜனநாயகம் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகிறது.

//இங்கும் அதே போல நடக்கக் கூடும். நடக்கட்டும் ://

நிச்சயமாக. நம்புவோம்.

//தலித்களுக்கு நீதி என்பதை விட்டு, சர்வ ஜன நல வாழ்வு என பேசத் துவங்கிவிட்டார் மாயாவதி. //

இதனால்தான் அவருக்கு பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டென்று நம்புகிறேன்.

//சில மாற்றங்களை அவர் கொண்டு வர முயற்சிக்கலாம் என நினைக்கிறேன் .(udhaaranam) : மேல் தட்டு என்பதை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் naduvilum kondu வருவது . பொருளாதார அடிப்படையில் இட ஒத்க்கீடு போன்றவை அவர் போன்றவர் தான் கொண்டு வர முடியும்.//

வெகுஜன ஆதரவு பெற்ற ஒரு பிரதமர் இந்தியாவில் பல ஆண்டுகளாக வராததே அரசின் உறுதியற்ற தன்மைக்கு முக்கிய காரணம் என்று நம்புகிறேன். எனவே பெரும்பான்மையினரின் உறுதியான ஆதரவைப் பெற்ற ஒருவர் அரசுத் தலைவரானால், தீவிரவாதம், மதவாதம், இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைக்களுக்கு தீர்வு காண்பது எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

//உங்கள் கனவு நனவாகட்டும். //

நமது கனவு என்று சொல்லுங்கள்.

நன்றி.

Maximum India said...

Dear Veerani

Thanks for the comments

//Mayavathi - The most currepted women in India to be a Indian OBAMA.?v

India will never come up//

Corruption has now become a way of life India. No politician is exempt from corruption charges. At the same time, India, as a young democratic country, has to experiment various options before finding an optimum one.

Don't lose hope on India. It's fate can not be decided by few individuals.

கபீஷ் said...

No comments :-):-)

Maximum India said...

Dear Kabeesh

Thank for "No Comments"

:)

Pullirajaa said...

"இன்று உலகின் சரித்திரத்தின் மிக முக்கியமான நாள். சுரண்டலின் அடையாளமாக திகழும் அமெரிக்காவின் தலைவராக பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப் பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார். "


ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டவர்/ உலகின் மிகச் சிறப்பான ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வசதியுடன் வாழ்ந்தவர். தாயாரும் அவ்வாறே!
ஒபாமாவுக்கும் அமெரிக்க அடிமைகளாக நடத்தப்பட்ட கருப்பு இன மக்களுக்கும் நிறத்தை தவிர வேறு வரலாற்று உறவு இல்லை.

அடிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க கருப்பு இனமக்களின் பாரம்பரியத்தில் இருந்து ஒபாமா வரவில்லை.

சோனியாவுக்கு "காந்தி" என்ற‌ குடும்ப‌ப் பெய‌ர் கைகொடுத்திருக்கிற‌து போல‌வே
ஒபாமாவுக்கும் "க‌ருப்பு நிற‌ம்" கை கொடுத்திருக்கின்ற‌து.

அவ‌ருடைய‌ ஆற்றல் பாராட்டிற்குரிய‌து. ஆழமான‌ சிந்த‌னையாள‌ர். க‌லியாண‌த்தின் மூல‌ம் அல்ல‌து ப‌ர‌ம்ம‌ப‌ரை அனுதாப‌ம் இல்லாம‌ல் ஆட்சிக்கு வந்த‌வ‌ர். அனைவ‌ரும் ம‌ன‌தார‌ வாழ்த்த‌லாம்.

புள்ளிராஜா

Maximum India said...

அன்புள்ள புள்ளிராஜா

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

//ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டவர்/ உலகின் மிகச் சிறப்பான ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வசதியுடன் வாழ்ந்தவர். தாயாரும் அவ்வாறே!//

சரியாக சொன்னீர்கள். மேலும் இவர் தாயாரின் குடும்பத்தினாலேயே மேல்தட்டு நாகரிகத்துடன் வளர்க்கப் பட்டவர் என்று பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.

//ஒபாமாவுக்கும் அமெரிக்க அடிமைகளாக நடத்தப்பட்ட கருப்பு இன மக்களுக்கும் நிறத்தை தவிர வேறு வரலாற்று உறவு இல்லை.அடிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க கருப்பு இனமக்களின் பாரம்பரியத்தில் இருந்து ஒபாமா வரவில்லை. //

இருக்கலாம். ஆனால் இவரும் ஆப்ரிக்க-அமெரிக்கா (கறுப்பர்) இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அடிமைகளாக நடத்தப் பட்ட மக்களுக்கு ஒரு திருப்தி. மார்ட்டின் லூதர் கிங் கனவான, "அடிமைகளின் சந்ததியினரும் அடிமைகளாக நடத்தியவர்களின் சந்ததிகளும் ஒன்றாக சகோதரத்துவ மேஜையில் அமர்ந்திருக்க வேண்டும்" என்பது ஓரளவுக்கேனும் நிறைவேறி உள்ளது என்பதினாலேயே அந்த மக்களிடையே மிகுந்த சந்தோஷம் நிலவி வருகிறது.

//சோனியாவுக்கு "காந்தி" என்ற‌ குடும்ப‌ப் பெய‌ர் கைகொடுத்திருக்கிற‌து போல‌வே
ஒபாமாவுக்கும் "க‌ருப்பு நிற‌ம்" கை கொடுத்திருக்கின்ற‌து.//

இது ஓரளவுக்குத்தான் என்பதும் அவர் வெற்றி பெற நீங்கள் கீழே சொன்ன காரணங்களே முக்கிய காரணம் என்பதும் என் கருத்து.

//அவ‌ருடைய‌ ஆற்றல் பாராட்டிற்குரிய‌து. ஆழமான‌ சிந்த‌னையாள‌ர். க‌லியாண‌த்தின் மூல‌ம் அல்ல‌து ப‌ர‌ம்ம‌ப‌ரை அனுதாப‌ம் இல்லாம‌ல் ஆட்சிக்கு வந்த‌வ‌ர். அனைவ‌ரும் ம‌ன‌தார‌ வாழ்த்த‌லாம்.//

நானும் வாழ்த்துகிறேன். நன்றி.

Advocate P.R.Jayarajan said...

பொறுமையான, ஆழ்ந்த பகுப்பாய்வு...

Maximum India said...

கருத்துரைக்கு நன்றி ஐயா!

Blog Widget by LinkWithin