
(Courtesy:econjournal.com)
ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.
ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய வேண்டியிருக்கிறது.
இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய "கரன்சி" நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.
ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.
எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை "மறைமுக வரி விதிப்பு" என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற "துண்டு" சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் "துண்டுகளின்" பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)
நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.
இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.
நன்றி.
14 comments:
//இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு.//
அந்த பருப்பு மன்னிக்கவும் பொறுப்பு இருந்திருந்தா தான் இந்த துண்டே விழுந்திருக்காதே, இல்லாட்டி துண்டை கர்சீப் ஆகவாவது மாத்த முயற்சி செய்யலாமே
//அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்//
நல்ல புரிதல். புரிஞ்சு ஒண்ணும் பண்ணவும் முடியாது. பாவம் நாமெல்லாம் :-(
அன்புள்ள கபீஷ்
கருத்துரைக்கு நன்றி
//அந்த பருப்பு மன்னிக்கவும் பொறுப்பு இருந்திருந்தா தான் இந்த துண்டே விழுந்திருக்காதே, //
உண்மைதான்.
//இல்லாட்டி துண்டை கர்சீப் ஆகவாவது மாத்த முயற்சி செய்யலாமே//
இதற்காகத்தான் நிதி பொறுப்பு சட்டம் (FRBM Act) கொண்டு வரப் பட்டது. ஆனால், அந்த சட்டம் கண்டிப்பாக பின்பற்றப் படுவதிலிருந்து இந்த வருடம் அரசு தனக்குத் தானே விளக்கு அளித்துக் கொண்டது.
நன்றி.
அன்புள்ள கபீஷ்
//புரிஞ்சு ஒண்ணும் பண்ணவும் முடியாது. பாவம் நாமெல்லாம் :-(//
அப்படியில்லை. நாமெல்லோரும் சரியாக புரிந்து கொண்டாலே, அரசாங்களுக்கு ஒரு வித பொறுப்புணர்வு ஏற்படும். நல்ல புரிதல் உள்ள நாட்டில் அரசாங்கங்களால் அவ்வளவு எளிதாக தவறுகள் செய்து விட முடியாது. எனவேதான், மக்கள் விழிப்புணர்வு ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியம்.
நன்றி.
// அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). //
Plan Expenditureலும் நிர்வாக செலவுகள் உண்டு. Non Plan Expenditure கட்டுமான செலவுகள் உண்டு.
தங்களின் கூற்றை சரிபார்க்கவும்.
ரானுவம் என்பது planஆ, non planஆ.
ரானுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள்
அன்புள்ள ப்ருனோ
பின்னூட்டத்திற்கு நன்றி
//Plan Expenditureலும் நிர்வாக செலவுகள் உண்டு.//
உண்மை. திட்டச் செலவுகளில் நிர்வாகச் செலவுகளை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொருத்த வரை திட்டச் செலவுகளில் நிர்வாக செலவுகளின் பங்கு மிக அதிகமாக உண்டு. இதனால், திட்டச் செலவுகளின் பலன் மக்களை முழுமையாக அடையாமல் போகிறது.
// Non Plan Expenditure கட்டுமான செலவுகள் உண்டு.//
உண்மைதான். ஆனால், Non Plan செலவுகளால் நாட்டிற்கு (வளர்ச்சிக்கான) ஆதாயங்கள் கிடையாது என்பதாலேயே அவற்றை Non Plan Expenditure என்று வகைப் படுத்தி வைக்கின்றனர். எனவே, இந்த வகை செலவை குறைக்க வேண்டியது அரசின் கடமை.
//ரானுவம் என்பது planஆ, non planஆ.
ரானுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள்.//
ராணுவத்திற்கு ஒதுக்கப் படும் செலவுகள் "Non Plan" வகையிலேயே வரும்.
அதே சமயம், ராணுவத்திற்காக ஒதுக்கப் படும் தொகையிலும் பெரும்பங்கு நிர்வாக செலவிற்கே போகின்றது. புதிய வகை தளவாடங்கள் வாங்குவதற்கு பெரும்பாலும் நிதிப் பற்றாக்குறையே ஏற்படுகிறது.
வெளிநாடுகளில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் அங்கு செல்வது இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள். இதே போன்ற கூத்து பல துறைகளிலும் நடைபெறுகிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம்.
நன்றி
எல்லாமே செயற்கையாக விலை ஏற்றப்பட்டுள்ளது. ஒரு கொத்தனாருக்கு 40 ரூபாய் கூலி போய் இப்போது 200 ரூபாய் (இது ஒரு உதாரணம் மட்டுமே, தவறாக என்ன வேண்டாம்) இப்படி, எல்லாமே விலை ஏற்றப்பட்டு, அரசாங்கம், செய்யும் ஒரு வேலைக்கு கோடிகள் ஒதுக்கப்பட்டு, அதில் வெறும் 10-20 சதவிகிதம் தான் செலவு செய்கிறார்கள், மீதம் யாரோ பாகெட்டில். இப்படி சேர்த்த பணத்தை, செலவு செய்யும் போது, அவர்களுக்கு பொருளின் உண்மையான மதிப்பு தெரிவதில்லை. தேவை ஒன்றே அடிப்படை.
மேலும், மக்கள் எல்லோரும் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் நாடு உருப்படும் என்பதும் ஒரு மாயை தன். அமெரிக்கா நிறைய படித்தவர்களை கொண்ட நாடு, ஆனால் இங்கும் இதே கதி தான். அதனால் பொறுப்பில் உள்ளவர்கள் நல்ல "ethics" உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே, நாடு உருப்பட முடியும். அல்லது, நல்ல "ethics" உள்ளவர்கள், பொறுப்புக்கு/அரசியலுக்கு வர வேண்டும், அப்படி வருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அது ஒன்றே நாடு முன்னேற வழி.
அன்புள்ள Itsdifferent
கருத்துரைக்கு நன்றி.
//எல்லாமே செயற்கையாக விலை ஏற்றப்பட்டுள்ளது. ஒரு கொத்தனாருக்கு 40 ரூபாய் கூலி போய் இப்போது 200 ரூபாய் (இது ஒரு உதாரணம் மட்டுமே, தவறாக என்ன வேண்டாம்) இப்படி, எல்லாமே விலை ஏற்றப்பட்டு, அரசாங்கம், செய்யும் ஒரு வேலைக்கு கோடிகள் ஒதுக்கப்பட்டு, அதில் வெறும் 10-20 சதவிகிதம் தான் செலவு செய்கிறார்கள், மீதம் யாரோ பாகெட்டில். இப்படி சேர்த்த பணத்தை, செலவு செய்யும் போது, அவர்களுக்கு பொருளின் உண்மையான மதிப்பு தெரிவதில்லை. தேவை ஒன்றே அடிப்படை. //
"செயற்கை" என்பது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. சந்தைமயமாக்கப் பட்ட இன்றைய உலகத்தில் (இந்தியாவில்) பெரும்பாலான விலைகளை "Demand - Supply" தான் முடிவு செய்கிறது. 10-20 சதவீதம் மட்டுமே உண்மையான குறிகோளுக்காக செலவு செய்யப் படுகிறது என்பது உண்மை. மீதமுள்ள பணம் ஊழல் வடிவில் வெவ்வேறு பாக்கட்டுகளுக்கு சென்று சேர்கிறது.
//மேலும், மக்கள் எல்லோரும் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் நாடு உருப்படும் என்பதும் ஒரு மாயை தன். அமெரிக்கா நிறைய படித்தவர்களை கொண்ட நாடு, ஆனால் இங்கும் இதே கதி தான். //
தெரிந்து கொள்வது என்பது வேறு. விழிப்புணர்ச்சி என்பது வேறு. மக்கள் விழிப்புணர்ச்சிதான், உலகில் இதுவரை நடைபெற்ற பல புரட்சிகளின் முதல் படி என்பதை மறந்து விட முடியாது. அமெரிக்காவில் படித்தவர்கள் பலர் இருந்தாலும், பொருளாதார விழிப்புணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்ள முடியாது. "Greed" என்பது பலர் கண்களுக்கு திரையிட்டு விட்டது.
//அதனால் பொறுப்பில் உள்ளவர்கள் நல்ல "ethics" உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே, நாடு உருப்பட முடியும். அல்லது, நல்ல "ethics" உள்ளவர்கள், பொறுப்புக்கு/அரசியலுக்கு வர வேண்டும், அப்படி வருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அது ஒன்றே நாடு முன்னேற வழி.//
உண்மைதான்.
நன்றி
எளிமையான விளக்கத்திற்கு நன்றி
//இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.//
அடுத்து உங்களுக்கு ஆப்பு தான்னு நாகரிகமா சொல்லிட்டிங்க!
தற்போதய அரசுக்கு
துண்டு விழுவதால் மக்கள் கோவணம் கிழியாமல் இருக்க வேண்டும். யாரை கேட்டு என் தலை மேல் கடன் வாங்கினார்கள் ? பதிவின் ஆசிரியர் சொல்வது சரி. ஒரு ஓட்டு தான் போடுகிறோம். ஆனால் நம் சந்ததியின் வளர்ச்சியை பாதிக்கும் ஆற்றல் கொண்டது அந்த ஒட்டு. கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மெதுவாக மாற்றம் நிகழும் .. ஆனால் அமெரிக்கர்கள் போல் முட்டாள்தனமாக இருக்க மாட்டர்கள் நம் மக்கள். நமக்கு இயல்பாக அமைந்த எச்சரிக்கை உணர்வு நம்மை காப்பாற்றும்.
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//அடுத்து உங்களுக்கு ஆப்பு தான்னு நாகரிகமா சொல்லிட்டிங்க!
தற்போதய அரசுக்கு//
ராமன் ஆளலாம், ராவணன் ஆளலாம். அனுமார் மட்டும் வராமல் இருந்தால் சரி.
நன்றி
அன்புள்ள பொதுஜனம்
//துண்டு விழுவதால் மக்கள் கோவணம் கிழியாமல் இருக்க வேண்டும்.//
சத்தமா சொல்லாதீங்க. மக்களோட கோவணத்த கிழிச்சி துண்டா போட்டாலும் போட்டுக்குவாங்க நம்ப அரசியல்வாதிங்க. :)
//யாரை கேட்டு என் தலை மேல் கடன் வாங்கினார்கள் ?//
பிறக்கும் போதே ஒவ்வொரு இந்தியனின் தலையும் அடமானம் வைக்கப் பட்டு விட்டது. (தலைக்கு தலை கடன் கம்மியா இருக்கட்டும்னுதான் நம்ம பெரியவங்க ஏகப் பட்டது பெத்துட்டு போனாங்களோ?) :-)
//பதிவின் ஆசிரியர் சொல்வது சரி. ஒரு ஓட்டு தான் போடுகிறோம். ஆனால் நம் சந்ததியின் வளர்ச்சியை பாதிக்கும் ஆற்றல் கொண்டது அந்த ஒட்டு. கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மெதுவாக மாற்றம் நிகழும் .. ஆனால் அமெரிக்கர்கள் போல் முட்டாள்தனமாக இருக்க மாட்டர்கள் நம் மக்கள். நமக்கு இயல்பாக அமைந்த எச்சரிக்கை உணர்வு நம்மை காப்பாற்றும்.//
நிச்சயமாக. ஆக்ஸ்பொர்ட், காம்ப்ரிஜ் கல்லூரிகளில் படித்த நமது பொருளாதார மேதைகளை விட நமது நாட்டின் குடும்பப் பெண்கள் புத்திசாலிகள். அதனால்தானே சிறிய வருமானத்திற்குள்ளேயே அழகாக பணத்தை மிச்சப் படுத்தி குடும்பத்தை துண்டு விழாமல் நடத்துகிறார்கள்.
நன்றி
எளிய விளக்கம்!!!
//இதற்காகத்தான் நிதி பொறுப்பு சட்டம் (FRBM Act) கொண்டு வரப் பட்டது//
இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், அல்லது ஏற்கனவே பதிவு போட்டா அந்த இணைப்பு தாருங்களேன்...
நிதித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசியல்வாதிகளாக இல்லாமல், தனியே ஒரு குழுவை அமைத்து, அவர்களுக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் திட்டமிடுதலும், செயல் படுத்துதலும் அமல்படுத்துதல் வேண்டும் என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...
அன்புள்ள நரேஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி
////இதற்காகத்தான் நிதி பொறுப்பு சட்டம் (FRBM Act) கொண்டு வரப் பட்டது//
இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், அல்லது ஏற்கனவே பதிவு போட்டா அந்த இணைப்பு தாருங்களேன்...//
FRBM சட்டம் அரசு செலவினங்களை கட்டுப் படுத்தி, 2009 ஆம் நிதி ஆண்டிற்குள் நிதிப் பற்றாக்குறையை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 3 சதவீதமாக குறைக்க 2003 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டமாகும். ஆனால், எறும்பு வளர்ந்து யானையாகியது போல இந்த நிதிப் பற்றாக் குறை இப்போது பத்து சதவீதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
//நிதித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசியல்வாதிகளாக இல்லாமல், தனியே ஒரு குழுவை அமைத்து, அவர்களுக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் திட்டமிடுதலும், செயல் படுத்துதலும் அமல்படுத்துதல் வேண்டும் என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...//
மன்மோகன் சிங், மோன்டேக் சிங், ரகுராம் ராஜன் போன்றவர்களை விட திறமையானவர்களை கண்டுப் பிடிப்பது கஷ்டம். ஆனால், அக்கறை குறைவு மற்றும் பொறுப்பற்றத் தன்மைதான் இது போன்ற நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.
நன்றி
Post a Comment