Thursday, February 19, 2009

தங்கம் ஜொலிக்குமா?


சில காலம் முன் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. விண்ணை முட்டும் பங்கு சந்தைகள், வருவாயில் கொழித்த வணிக நிறுவனங்கள், சம்பளத்திற்கு மேல் போனஸ்கள் பெற்ற தொழிலாளிகள் என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கமும் செழிப்பில் இருந்தது. ஆனால், ஒரு வருடத்தில் நிலைமை தலைகீழ் ஆகி, பல விஷயங்கள் மண்ணோடு மண்ணாகி, இன்றைய தேதியில் மின்னுவது பொன் மட்டுமே. இந்த நிலை தொடருமா என்றும் தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா என்று இங்கு பார்க்கலாம்.

முதலில் தங்கத்துக்கே உரிய அரிய குணாதிசியங்களைப் பற்றி பார்ப்போம்.

தங்கம் வசீகர குணங்கள் கொண்ட ஒரு அரிய வகை உலோகம். இதன் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே, மனிதரின் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே தங்கத்திற்கு என்று ஒரு தனி மதிப்பு இருந்து வந்திருக்கிறது. காகித கரன்சி அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகள் வரை தங்கமே வணிகத்திற்கான ஒரு நாணயமாக பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தங்கத்திற்காகவே பல படையெடுப்புக்கள் கூட நடந்திருக்கின்றன. இந்திய வரலாற்றின் முதல் அன்னியப் படையெடுப்பாகக் கருதப் படும், அலெக்சாண்டர் கூட இந்தியாவின் தங்கத்திற்கு ஆசைப் பட்டுத்தான் வந்ததாக கூறப் படுகிறது.

இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்திற்கும் இதர வகை அசையும் சொத்து வகைகளுக்கும் (Liquid Assets) ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அதாவது, கரன்சி, பங்குகள், வைப்புத் தொகைகள் ஆகியவை தனக்கென ஒரு சுய மதிப்பு கொண்டிருக்க வில்லை. சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கரன்சியின் மதிப்பு அதை வெளியிடும் அரசாங்கத்தின் வலிமையை பொருத்து அமைகிறது. பங்கின் மதிப்பு அதை வெளியிட்ட நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ளது. வங்கி வைப்பு தொகைகள் கரன்சி மற்றும் வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே தன் சுயமதிப்பை அடைகின்றன.

ஆனால், தங்கத்திற்கு மட்டுமே "சுய மதிப்பு" என்று தனியாக ஒன்று உள்ளது.

இதன் காரணமாகவே உலக பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து மற்ற முதலீடுகளின் வருங்கால வரவுகள் பற்றி சந்தேகங்கள் எழுந்ததும், வர்த்தகர்கள் தங்கத்திற்கு மாறி விட்டார்கள். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஒரு வருடத்தில் (தொழிற் துறைகளில்) புன்னகைகள் மறைந்து போனதுதான் பொன்னகைகளின் மதிப்பு கூடியதற்கு முக்கிய காரணம்.

இப்போது, கடந்த சில நாட்களில் வெகு விரைவாக தங்க விலை ஏறியதற்கான வர்த்தக ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.

அமெரிக்காவின் பொருளாதார மீட்பு திட்டம் சந்தைகளை திருப்தி படுத்தாதது.

மற்ற சந்தைகளின் போக்கு பற்றிய குழப்பங்கள் ஏற்பட்டது.

பொருளாதார மீட்பு திட்டத்திற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்க அரசு புதிய டாலர் கரன்சிகளை அச்சடிக்கும் என்ற பயம் எழுந்தது.

மேற்கண்ட பயங்களையும், குழப்பங்களையும் உபயோகப் படுத்தி குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதற்காக, குறுங்கால வர்த்தகர்கள் பெருமளவுக்கு இந்த சந்தையில் நுழைந்தது.

உபரியாக ஒரு உள்நாட்டு காரணம்: இந்திய அரசின் அதிகமான நிதிப் பற்றாக் குறையின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவுக்கு குறைந்து போனது. இதனால் டாலர் மதிப்பில் ஏற்கனவே உயர்ந்து போன தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் கணக்கிடும் போது இன்னும் கூடிப் போனது.

இந்த விரைவான உயர்வு தொடருமா என்ற கேள்விக்கான விடையினை, இதே போல விரைவாக வானளவு உயர்ந்து பின் அதே வேகத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்த பங்கு சந்தை, கச்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோக சந்தைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தங்க சந்தையில் பொருளாதாரப் போக்கில் ஒரு தெளிவு ஏற்படும் வரை மட்டுமே இந்த விரைவான வளர்ச்சி தொடரும். ஓரளவுக்கு பொருளாதர தெளிவு கிடைத்தவுடன், தங்கத்தின் விலையில் ஒரு தேக்க நிலையே ஏற்படும்.

நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்று கேட்பவர்களுக்கான விடை.

முதலில் சாதக அம்சங்கள்

தங்கத்தின் மேல் ஆசை மனிதனுக்கு என்றுமே குறையாது.

சுற்றுப் புற சூழல் பாதிப்பு மற்றும் அதிக பராமரிப்பு செலவு காரணமாக பெருமளவு பழைய தங்கச் சுரங்கங்கள் மூடப் பட்டு வருகின்றன. அதே அளவிற்கு, புதிய தங்க சுரங்கங்கள் கண்டறியப் பட வில்லை.

உலகெங்கும் அரசாங்கங்கள் பெருமளவு கரன்சி நோட்டுக்கள் அச்சடிப்பதால், நிரந்தர நாணயமான தங்கத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

இப்போது பாதக அம்சங்கள்.

தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாக பொருளாதார நிபுணர்கள் எப்போதுமே ஏற்பதில்லை. காரணம், தங்கத்தினால் தனிப் பட்ட முறையில் பணத்தை உருவாக்க முடியாது. (உதாரணம்: பங்கு - டிவிடென்ட், வைப்புத் தொகை - வட்டி, ரியல் எஸ்டேட் - வாடகை).

வரலாற்று ரீதியாக நீண்ட கால அடிப்படையில், தங்கத்தின் மதிப்பின் வளர்ச்சி (பணவீக்கம் அட்ஜஸ்ட் செய்யப் பட்டால் - Inflation Adjusted Return) மிகவும் குறைவு.

தங்கத்தை வாங்குவோரால், அது ஒரு செலவினமாகவே கருதப் படுகிறது. எனவேதான், தங்கத்தின் விலை ஏறும் போதெல்லாம் அதற்கான தேவை குறைந்து போகிறது. உதாரணமாக, தங்கத்தை உலகிலேயே அதிகம் செலவிடும் நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு 24 டன் இறக்குமதி செய்யப் பட்ட தங்கம், இந்த ஆண்டு வெறும் இரண்டு டன் மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.

இதனால், மற்ற முதலீட்டு சந்தைகளைப் போல விலை ஏறினால் தேவை அதிகரிக்கும் என்ற வர்த்தகக் கோட்பாடு இங்கு செல்லாது. எனவே தங்கத்தின் விலை ஒரு சுழற்சி முறையில் உயருமே தவிர நேர்கோட்டில் வளர வாய்ப்புக்கள் குறைவு.

ஆக மொத்தத்தில் தங்கம் மற்ற சந்தை (வாழ்க்கை) அபாயங்களில் இருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ள (To moderate the Investment Risk) உதவும் ஒரு உபமுதலீடாக மட்டுமே இருக்க முடியும்.

பொன்னகையைக் கொண்டு புன்னகையை பெற முடியும் என்று நம்புவோர் குறிப்பிட்டத் தொகையை ஆபரணங்களாக முதலீடு செய்யலாம். மற்றவர்கள், தங்க பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்யலாம்.

தமது மொத்த முதலீட்டில் (Investment Mix) சுமார் ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை மட்டுமே தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

நன்றி.

10 comments:

வால்பையன் said...

தங்கத்தின் விலை 4 வருடங்களுக்கு முன் வரை கொஞ்சம் சீராக தான் இருந்தது,

கூமுட்டை அரசுகளின் பொருளாதார கொள்கைகள் பணம் என்னும் காகிததிற்கு மதிப்பிழக்க செய்து தங்கத்தில் முதலீடு செய்ய வைத்தது.

தங்கம் விலை இப்படி ஏறும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் உஷாரா இருந்திருப்பேன், கொஞ்சம் பலமான அடி தான்.

Anonymous said...

மிக்க நன்றி...

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//தங்கத்தின் விலை 4 வருடங்களுக்கு முன் வரை கொஞ்சம் சீராக தான் இருந்தது,//

சீராக இருந்தது என்பதை விட தேக்க நிலையில் இருந்தது என்பது சரியாக இருக்கும். சொல்லப் போனால், வெகுசமீப காலம் வரை டாலர் மதிப்பில் தங்க விலை சரிந்து கொண்டுதான் இருந்தது.

//கூமுட்டை அரசுகளின் பொருளாதார கொள்கைகள் பணம் என்னும் காகிததிற்கு மதிப்பிழக்க செய்து தங்கத்தில் முதலீடு செய்ய வைத்தது.//

உண்மைதான். நிர்வாக செலவு விஷயத்தில் அரசுகளின் ஓவர் தாராளம் அவைகளை அதிகம் நோட்டு அடிக்க வைத்தது.

//தங்கம் விலை இப்படி ஏறும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் உஷாரா இருந்திருப்பேன், கொஞ்சம் பலமான அடி தான்.//

கமாடிட்டி வர்த்தகத்தில் ஸ்டாப் லாஸ் லிமிட் கண்டிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள பாஷா

பின்னூட்டத்திற்கு நன்றி

கபீஷ் said...

'உருப்படி'யான பதிவு, நான் இது பத்தி உங்க கிட்ட கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதாவது மொத்த முதலீட்டுல எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கலாம்னு. அடுத்தது நிலம் எவ்வளவு சதவீதம் இருக்கலாம்னு கேக்கலாம்னு இருக்கிறேன் :-)

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//'உருப்படி'யான பதிவு,//

'உருப்படி'யான பின்னூட்டம் கூட (சேம் பிளட்! ) :)

//அடுத்தது நிலம் எவ்வளவு சதவீதம் இருக்கலாம்னு கேக்கலாம்னு இருக்கிறேன் :-)//

கண்டிப்பாக. ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு தனி குணாதிசியங்கள் உண்டு.

இடத்திற்கு இடம் மதிப்பு வளர்ச்சி மாறுவது, எளிதில் கைமாற்ற முடியாத தன்மை (Illiquidity), பொருளாதார சுழற்சியில் இறுதியான வளர்ச்சி பெறுவது, இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து தேவை (Demand) உள்ளது என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேற்சொன்ன காரணங்களால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வு மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும், விடாது முயற்சி செய்வோம்.

நன்றி.

பொதுஜனம் said...

பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தங்கத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது. அவரவர் சக்திக்கேற்ப வாங்கி சேமிக்கின்றனர். திருமண பந்தத்தின் தொடக்கத்தில் தங்கத்திற்கு எப்போதும் மரியாதை உண்டு. திருமணத்திற்கு பின் குடும்ப சொத்தின் அடையாளமாக தங்கம் பார்க்கபடுகிறது. மிகப்பெரிய உபாயம் அவசர காலத்தில் ஆபத்பாந்தவனை போல் உதவுவது தான். இரண்டாயிரம் வருஷமாக தங்கத்தை அடிச்சுக்க ஆள் இல்லை. மெல்ல மெல்ல சுரங்கங்கள் மூடப்பட்டு, கல்யாணத்தில் அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் தங்க கொள்கைகளை மாற்றிக்கொண்டு, ..... ம்ம் இன்னும் நிறைய வருஷங்களுக்கு தங்கம் டாலடிக்கும்..

கார்த்திக் said...

// தங்கத்தினால் தனிப் பட்ட முறையில் பணத்தை உருவாக்க முடியாது. (உதாரணம்: பங்கு - டிவிடென்ட், வைப்புத் தொகை - வட்டி, ரியல் எஸ்டேட் - வாடகை).//

இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை.அருமையான விளக்கம்.

// சீராக இருந்தது என்பதை விட தேக்க நிலையில் இருந்தது என்பது சரியாக இருக்கும்.//

இதுக்கு ஆன்லைன் வர்த்தகம் ஒரு காரணம்(Ex 35% மார்ஜின் ஏத்துனதுக்கப்புரம் கச்சா எண்ணை விலை இறங்கியது).அப்போ இந்தியா போன்ற பெரிய நாடுகள் இதுல ஈடுபடுல அதனால விலை சீர இருந்துன்னு சிலநேரம் நெனைப்பேன்.80கள்ல விலை யேருனதுக்கு என்ன காரணம்னு யோசிச்சா பதில் இல்லை.

காலத்துக்கு ஏத்த நல்ல பதிவுங்க.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//80கள்ல விலை யேருனதுக்கு என்ன காரணம்னு யோசிச்சா பதில் இல்லை.//

80களிலும் உலக அளவில் இதே போன்ற ஒரு பொருளாதார தேக்க நிலை காணப் பட்டதே தங்க விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அன்றைக்கு தங்கம் இருந்த விலை (டாலர் கணக்கில்) மீண்டும் அதே நிலைக்கு வர வெகு சமீப காலம் வரை பல ஆண்டுகள் பிடித்தது என்பது கவனிக்கத் தக்கது.

நன்றி

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

//அவரவர் சக்திக்கேற்ப வாங்கி சேமிக்கின்றனர். திருமண பந்தத்தின் தொடக்கத்தில் தங்கத்திற்கு எப்போதும் மரியாதை உண்டு. திருமணத்திற்கு பின் குடும்ப சொத்தின் அடையாளமாக தங்கம் பார்க்கபடுகிறது. மிகப்பெரிய உபாயம் அவசர காலத்தில் ஆபத்பாந்தவனை போல் உதவுவது தான். //

உண்மைதான்.

//இரண்டாயிரம் வருஷமாக தங்கத்தை அடிச்சுக்க ஆள் இல்லை. மெல்ல மெல்ல சுரங்கங்கள் மூடப்பட்டு, கல்யாணத்தில் அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் தங்க கொள்கைகளை மாற்றிக்கொண்டு, ..... ம்ம் இன்னும் நிறைய வருஷங்களுக்கு தங்கம் டாலடிக்கும்//

இன்னும் பல ஆண்டுகளுக்கு தங்கத்தின் மதிப்பு குறையாது என்பது உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய உயர்வு (Inflation Adjusted) இருப்பது கடினம்.

நன்றி.

Blog Widget by LinkWithin