Friday, February 13, 2009

ஆதலினால் காதல் செய்வோம்


வாலண்டைன் பிறப்பதற்கு முன்பு யாருமே இந்தியாவில் காதல் செய்யவில்லை. அவர்தான் இந்தியாவிற்கு காதலை அறிமுகம் செய்தார். எனவே அவர் காதலுக்காக உயிர் நீத்த நன்னாளில் காதல் செய்யா விட்டால் இந்தியாவில் காதல் மரித்து விடும் என்பது போல ஒரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், காதலர் தினத்தை தடுத்து விட்டால் இந்தியாவின் அத்தனை பண்பாட்டு பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது போல இன்னொரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையே ஊடக வியாபாரிகள் "சந்திலே சிந்து" பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என்று எனக்கு தெரிய வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக ராமாயணம் என்ற காவியம் எழுதப் பட்ட இதே பூமியில்தான் காமசூத்ரா எனும் காதல் இலக்கணமும் இயற்றப் பட்டது. அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, சமூகவியல் என்று உலகின் அத்தனை தத்துவங்களையும் உள்ளடக்கிய திருக்குறளிலேயே காதலுக்கு என்று ஒரு பகுதியும் ஒதுக்கப் பட்டது. காதலும் வீரமுமாக வாழ்ந்த பண்டைய தமிழர் அகநானூறு என்றும் புறநானூறு என்றும் தனித்தனியே வைத்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக காந்தர்வ விவாகம் என்ற பெயரில் காதல் திருமணங்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களாலேயே வெகுவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

எந்தையும் தாயும் கொஞ்சி மகிழ்ந்த இந்த பூமியில் மேற்கத்திய வியாபாரிகளின் மற்றுமொரு வியாபார தந்திரமாக உள் நுழைக்கப் பட்டதே இந்த காதலர் தினம். இந்த தினம் வருகின்ற போதெல்லாம் கலாச்சார காவலர்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளும் சிலர் பண்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் வாதம் இந்த குறிப்பிட்ட நாளில், காதலர்கள் ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு கேள்வி, இந்திய திரைப்படங்களை விடவா இவர்கள் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர்? கலாச்சார காவலர்களின் தலைவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமாக உள்ள திரைத் துறையினரை கொஞ்சம் (செல்லமாகவது) தட்டிக் கேட்கலாமல்லவா? மேலும், இவர்களின் இந்த தாக்குதல்களால், காதலர் தின வியாபாரிகளுக்கு இலவச விளம்பரம் அல்லவா கிடைக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பெண்கள் விடுதலை, பின் நவீனத்துவம் என்ற பெயரில் பப் கலாச்சாரத்தை காப்பாற்றியே தீருவோம் என்று கோஷமிடும் குழுக்களுக்கு ஒரு கேள்வி. எத்தனை குடும்ப பெண்கள் பப் செல்கிறார்கள்? பெண்களின் உண்மையான சமூக முன்னேற்றம் பப்களிலா உள்ளது? மத்தியதர கீழ்த்தட்டு பெண்களின் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளுக்காக போராட முன்வருவார்களா இந்த பெண்ணியவாதிகள்?

பெண்களை தாக்குவது எந்த அளவுக்கு பேடித்தனமான காரியமோ அதே அளவுக்கு வக்கிரமானது நவீனத்துவம் பெண்ணியம் என்ற பெயரில் இளஞ்சிவப்பு உள்ளாடைகள் அனுப்பி வைப்பது.

ஆக மொத்தத்தில் இந்த இரண்டு கூட்டமும் சுய லாபத்துக்காக அடிக்கின்ற கூத்துக்களை நாம் முழுமையாக புறந்தள்ளி விடலாம்.

காதலர் தினம் என்ற கலயம் புதிது என்றாலும் காதல் என்ற கஞ்சி பழையதுதானே. நமக்கு முக்கியம் கஞ்சிதானே. எனவே எவ்வளவோ அந்நிய கலாச்சார தாக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை "இந்தியப் படுத்தி" ஏற்றுக் கொண்ட நாம் இதையும் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

ஆதலினால் காதல் செய்வோம்.

நமக்கு வாழ இடம் தந்த இந்த மண்ணை காதல் செய்வோம்.
நமக்கு அறிவைத் தந்த தமிழ் மொழியைக் காதல் செய்வோம்.
நமக்கு உயிர் தந்த பேசும் தெய்வங்களை காதல் செய்வோம்
நம் வாழ்விற்கு பொருள் தந்த (நாம் பெற்ற) செல்வங்களை காதல் செய்வோம்.
நமக்கு உறவெனும் இன்பம் தந்த சகோதர சகோதரிகளை காதல் செய்வோம்
நமக்கு தோள் கொடுக்கும் நண்பர்களை காதல் செய்வோம்

இறுதியாக, ஆனால் முக்கியமாக நம் வாழ் நாளெல்லாம் கூடவே வரும் வாழ்க்கைத் துணையை காதல் செய்வோம்.

ஆதலினால் காதல் செய்வோம்.

காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி

13 comments:

பொதுஜனம் said...

சவுக்கு நன்றாக சுழன்று உள்ளது.எல்லாமே விளம்பரம் என்ற நிலையில் நாமாவது நல்ல விஷயங்களை பற்றி பேசுவோம். யார் போட்ட ஜட்டியை யார் கிழித்தால் நமக்கு என்ன ? ஒருவர் காதலர் தினத்தை எதிர்த்தல் அவர் நாண நன்னயம் செய்யாமல் கிழிந்த பழைய ஜட்டி அனுப்ப துணிகிறது ஒரு கூட்டம். லோக்கல் பாஷையில் கொக்கரிக்கும் ஒரு கூட்டம். நுனி நாக்கில் இங்கலிஷ் பேசி உளருகிறது இன்னொரு கூட்டம். இதில் பப் கலாச்சாரம் (!) காப்பாற்ற படவேண்டும் என்று ஒரு பெண் அமைச்சர் பொளந்து கட்டுகிறார். இந்திய பெண்கள் பாவம். இன்னும் எத்தனை பெரியார்கள் வர வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்.? பெண்களின் கல்வி, சமூக முன்னேற்றம், வேலை வாய்ப்பு, வெகு நாளாய் இழுத்தடிக்கும் இட ஒதுக்கீடு , பாலியல் வன்முறைகள் போன்றவை இவர்கள் கண்ணுக்கு தெரியாதா ?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி

//எல்லாமே விளம்பரம் என்ற நிலையில் நாமாவது நல்ல விஷயங்களை பற்றி பேசுவோம். யார் போட்ட ஜட்டியை யார் கிழித்தால் நமக்கு என்ன ?//

கண்டிப்பாக.


//இந்திய பெண்கள் பாவம். இன்னும் எத்தனை பெரியார்கள் வர வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்.? பெண்களின் கல்வி, சமூக முன்னேற்றம், வேலை வாய்ப்பு, வெகு நாளாய் இழுத்தடிக்கும் இட ஒதுக்கீடு , பாலியல் வன்முறைகள் போன்றவை இவர்கள் கண்ணுக்கு தெரியாதா ?//

சத்தியமான வார்த்தைகள். இந்த நடைமுறை வாழ்வியல் போராட்டங்களில் பெண்களுக்கு உதவி செய்ய எத்தனை பெண்ணியல்வாதிகள் முன்வருவார்கள்?

நன்றி

கபீஷ் said...

//இந்த நடைமுறை வாழ்வியல் போராட்டங்களில் பெண்களுக்கு உதவி செய்ய எத்தனை பெண்ணியல்வாதிகள் முன்வருவார்கள்?//

என்னையவா சொல்றீங்க? விரைவில் வருகிறேன். கார்த்தி வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிக்கறேன்

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//என்னையவா சொல்றீங்க? விரைவில் வருகிறேன்.//

கண்டிப்பாக வாங்க. இந்தியாவில் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது.

//கார்த்தி வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிக்கறேன்//

நானும் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-)

Maximum India said...

Tamilish Service to me
show details 6:38 AM (45 minutes ago) Reply



mgvenkateshan commented on your story 'ஆதலினால் காதல் செய்வோம்'

'காதல் என்பது புனிதமானது ,அதை கொட்சை படுத்தி நடு வீதியில் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து ,வீதிகள் போகும் சிறர்களயும்,முதிர் கன்னிகளையும், மனதால் கெடுக்க செய்வது தான்,காதலர் தின கொண்டாட்டத்தில் நாம் கண்ட பலன் .காதலர்கள் தனி இடத்திலோ ,தங்களது வீட்டிலோ ,காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடு பாடடும். அது தான் சரியான முறை .அதை காதலர்கள் தாண்டும் பொது தான் வேலி போடும் வேலையில் சிலர் இடுபடுவதும் ,அதை சாக்காக வைத்து விஷிமிகள் பெண் காதலர்களை இம்சிபதும் நடைந்து வருகிறது .இதை சரி செய்து கொள்ளுவதும் ,காதலர்கள் கையில் தான் உள்ளது .'

Here is the link to the story: http://www.tamilish.com/story/32804

Thank your for using Tamilish!

- The Tamilish Team

Maximum India said...

அன்புள்ள வெங்கடேசன்

கருத்துரைக்கு நன்றி

நீங்கள் சொல்வது போல, இந்த காதலர் தினம் கண்ணியமான காதல் தினமாக இருக்கட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி.

எட்வின் said...

//இந்திய திரைப்படங்களை விடவா இவர்கள் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர்?//
மில்லியன் டாலர் கேள்வி... ராம சேனாவும் சரி, பப் கலாச்சார இளசுகளும் தங்களுக்கென சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

Anonymous said...

உண்மையான காதலுக்கும், நாகரீகத்திற்கும் அர்த்தம் தெரியாதவர்கள்தான் இதில் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள்

மங்களூரில் அந்த சம்பவம் நடந்ததற்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது, ஆனால் இப்போது என்னவோ அந்த அமைப்பு ஒரு மிக சக்தி வாய்ந்த ஒரு அமைப்பாக காட்சி அளிக்கிறது. இதையே ஒரு தனி மனிதரோ அல்லது ஒரு இஸ்லாம் அமைப்போ செய்திருந்தால் அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பில் சேர்க்கப் பட்டிருக்கும், அந்த மனிதர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பார்...

ஆனால் இங்கோ இந்த அமைப்பின் தலைவர், கர்நாடக பிஜேபிக்கே சவால் விடுகிறார், முதல்வரோ ஊடகங்கள்தான் இந்தப் பிர்ச்சனையை பெரிது படுத்துகின்றன என்பது போன்று அறிக்கை விடுகிறார்

போற போக்கைப் பார்த்தால் என் மனைவியையோ, காதலியையோ நான் எப்படி கொஞ்ச வேண்டும் என்று எனக்கு சொல்லித் தருவார்கள் போலிருக்கிறது!

உண்மைக் காதலை புரிந்த யாரும் பெண்களை புரிந்து கொள்வார்கள், மனிதத்தை புரிந்து கொள்வார்கள்

வாழ்க காதல், வாழ்க காதலர் தினம்...

Maximum India said...

அன்புள்ள எட்வின்

கருத்துரைக்கு நன்றி.

//ராம சேனாவும் சரி, பப் கலாச்சார இளசுகளும் தங்களுக்கென சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.//

இவர்களுக்கிடையே ஊடக வியாபாரிகள் காசு பண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

அருமையான கருத்துரைக்கு நன்றி

//உண்மையான காதலுக்கும், நாகரீகத்திற்கும் அர்த்தம் தெரியாதவர்கள்தான் இதில் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள்//

உண்மை.

//மங்களூரில் அந்த சம்பவம் நடந்ததற்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது, //

இவர்கள் ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இந்த முறை மேல்தட்டு மக்களின் அடையாளமாக கருதப் படுகிற பப்கள் தாக்கப் பட்டதால், ஊடகங்கள் இந்த சம்பவத்தை முழு இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளன . ஊடகங்களின் மேல்தட்டு சமூகத்தினருக்கு ஆதரவான பாரபட்ச போக்கு மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது என்பதே என் கருத்து.

//ஆனால் இங்கோ இந்த அமைப்பின் தலைவர், கர்நாடக பிஜேபிக்கே சவால் விடுகிறார், முதல்வரோ ஊடகங்கள்தான் இந்தப் பிர்ச்சனையை பெரிது படுத்துகின்றன என்பது போன்று அறிக்கை விடுகிறார்//

கர்நாடகத்தில் எப்போதுமே இந்த பிரச்சினைதான். மொழி வெறி/இன வெறி தாக்குதல்களையும் இது போன்ற வன்முறைகளையும் மாநில அரசாங்கங்கள் மூடி மறைக்கத்தான் முயற்சிக்கின்றனவே தவிர அடக்க முயற்சிப்பதில்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு.

//போற போக்கைப் பார்த்தால் என் மனைவியையோ, காதலியையோ நான் எப்படி கொஞ்ச வேண்டும் என்று எனக்கு சொல்லித் தருவார்கள் போலிருக்கிறது!//

பொது இடங்களில் நாகரிகமான போக்கினை யாருமே சொல்லித் தரவேண்டியதில்லை. மும்பை போன்ற மாநகரங்களில் காதலர் என்ற போர்வையில் பொது இடங்களில் சிலர் நடத்தும் கூத்து திருமணமானவர்களே கூச்சப் படும் அளவுக்கு உள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதுடன் (சட்ட பூர்வமாக) தண்டிக்கப் பட வேண்டியதும் கூட.

//உண்மைக் காதலை புரிந்த யாரும் பெண்களை புரிந்து கொள்வார்கள், மனிதத்தை புரிந்து கொள்வார்கள்//

நிஜம்தான்.

//வாழ்க காதல், வாழ்க காதலர் தினம்...//

மனித நேயத்தையும் பண்பாட்டையும் அனைவரும் காதலிக்கட்டும்.

நன்றி.

Anonymous said...

//கர்நாடகத்தில் எப்போதுமே இந்த பிரச்சினைதான். மொழி வெறி/இன வெறி தாக்குதல்களையும் இது போன்ற வன்முறைகளையும் மாநில அரசாங்கங்கள் மூடி மறைக்கத்தான் முயற்சிக்கின்றனவே தவிர அடக்க முயற்சிப்பதில்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு//

உண்மை...

வன்முறையை விட அதைத் தொடர்ந்த சமூகம், அதிகாரம், ஊடகங்களின் போக்குதான் மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது...

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

//வன்முறையை விட அதைத் தொடர்ந்த சமூகம், அதிகாரம், ஊடகங்களின் போக்குதான் மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது...//..

என்னுடைய சிந்தனையும் இதே போக்கில்தான் உள்ளது. வன்முறையாளர்களை விட, அவர்களை ஆதரிக்கும் சமூகத்தின் (பெரிய அளவிலான மக்கள் தொகையினர்) மனநிலை, கண்டுகொள்ளாத அரசுகள், நியாயப் படுத்தும் ஊடகங்கள் ஆகியவை நாம் எங்கு போய் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

நன்றி.

பாலாஜி said...

/********ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக ராமாயணம் என்ற காவியம் எழுதப் பட்ட இதே பூமியில்தான் காமசூத்ரா எனும் காதல் இலக்கணமும் இயற்றப் பட்டது.******/

காமசூத்ரா களவியலின் நுணுக்கங்களை தான் சொல்லுகின்றதே தவிர பல தார மணத்தை பற்றி பேசவில்லை. ஆக ராமாயணத்தை காமசூத்திரத்துடன் ஒப்பிட முடியாது என்பது என் கருத்து.

Blog Widget by LinkWithin