
பொருளாதார மீட்பு திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, மத்திய அரசு மிகப் பெரிய அளவில் வரி குறைப்பு செய்துள்ளது. உற்பத்தி வரியில் (Excise Duty) இரண்டு சதவீதமும் சேவை வரியில் (Service Tax) இரண்டு சதவீதமும் குறைக்கப் பட்டுள்ளன. இந்த வரி குறைப்பால் உள்ளூர் விலைவாசிகள் ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்ற போதிலும் சர்வதேச தர வரிசையில் இந்தியா மேலும் கீழிறங்கவும் வாய்ப்புள்ளது. இது பற்றி இங்கு பார்ப்போம்.
மேலே சொன்னபடி, மத்திய அரசின் உற்பத்தி வரி அனைத்துப் பொருட்களின் மீதும் 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், டெலிவிஷன், கார், சோப் இன்னும் பல "தயாரிக்கப் பட்ட பொருட்களின்" விலை இரண்டு சதவீதம் குறையும். மிக முக்கியமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறுபது சதவீதத்திற்கு மேல் இடம் பெற்றுள்ள சேவைப் பணிகளின் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக, சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், தொலைபேசி, மின்சார கட்டணங்கள், விமான சேவை கட்டணங்கள் ஆகியவை குறையும்.
இந்த வரி சலுகைகள் மூலம் ஏற்கனவே பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு ஏற்படும் கூடுதல் வருவாய் இழப்பு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். (பட்ஜெட் பற்றாகுறை என்பது மறைமுக வரி விதிப்பு என்பது வேறொரு பதிவில் விளக்கப் பட்டுள்ளது.) இந்த சலுகையை அனைத்து நிறுவனங்களும் நுகர்வோருக்கு முழுமையாக அளிக்குமா என்பது சந்தேகமே என்றுள்ள நிலையில் இது போன்ற வரிகுறைப்புக்களால், மக்களுக்கு நிகர லாபம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.
அதே சமயம் உலக தர வரிசையில் இந்தியாவின் தரம் இறங்க இந்த வரி குறைப்பு வழி வகுக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.
இந்திய அரசின் தர மதிப்பீடு உலக தர நிர்ணய நிறுவனங்களால் BBB- என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த தரமதிப்பீடானது, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு என உருவாக்கப் பட்டுள்ள தரவரிசையில் மிகக் கீழே உள்ள இறுதி மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீட்டில் இன்னும் ஒரே ஒரு படி கீழே இறங்கினாலும், இந்தியா முதலீடு செய்ய உகந்த நாடு அல்ல என்ற பொருள் பெறும்.
அவ்வாறு ஏற்படும் நிலையில், இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து புதிதாக பண வரத்து இருக்காது. சொல்லப் போனால், இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு பணம் வெளியே போகவும் வாய்ப்பு உள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் முதல் திரட்டுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கும். இந்தியாவின் பணமான ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிரான தனது மதிப்பை மேலும் இழக்கும். இறக்குமதி பொருட்களின் விலை கூடுதலாகி விலைவாசிகளும் உயரக் கூடும். எனவே, தர வரிசையில் கீழே இறங்குதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பல சிக்கல்களை உருவாக்கும்.
சரிவின் விளிம்பில் உள்ள இந்தியாவின் நிலை இப்போது மேலும் மோசமாகி உள்ளது. உலக தர நிர்ணய நிறுவனங்களில் ஒன்றான S&P நிறுவனம் இந்தியாவின் நிலையை "நிலையான" (BBB- Stable) என்ற இடத்திலிருந்து "மோசமான" (BBB- Negative) என்ற இடத்திற்கு தற்போது கீழிறக்கி உள்ளது. இதற்கு உடனடி மற்றும் முக்கிய காரணம் , இந்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறையே என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தினால், உடனடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படப் போவதில்லை என்றாலும், இந்திய அரசினால் மேலும் புதிய திட்டங்களை உருவாக்க வசதி வாய்ப்பு இல்லாத "நிதி நெருக்கடி நிலை" ஏற்படும். இப்படிப் பட்ட ஓட்டாண்டி நிதி நிலையில், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையக் கூடிய மத்திய அரசு எந்த ஒரு பொருளாதார திட்டத்தையும் உருவாக்க அல்லது செயல் படுத்த விரும்பினால் பட்ஜெட் பற்றாக்குறை இன்னும் அதிகமாகி இந்தியா முதலீட்டு ஸ்தானத்திலிருந்து தவறி விழ வாய்ப்புள்ளது.
ஆக மொத்தத்தில், தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அள்ளி வீசும் இப்போதைய அரசு புதிய அரசுக்கு எந்த ஒரு நல்வாய்ப்பையும் வழங்க விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.
நன்றி
4 comments:
attached in Tamilish.
//தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அள்ளி வீசும் இப்போதைய அரசு புதிய அரசுக்கு எந்த ஒரு நல்வாய்ப்பையும் வழங்க விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.//
சிறு மாற்றம்
இப்போதைய அரசு புதிய அரசுக்கு என்பதற்கு பதிலாக
இப்போதைய அரசு நாட்டு மக்களுக்கு என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
நன்றி ஷங்கர்
அன்புள்ள வால்பையன்
//சிறு மாற்றம்
இப்போதைய அரசு புதிய அரசுக்கு என்பதற்கு பதிலாக
இப்போதைய அரசு நாட்டு மக்களுக்கு என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்//
மன்னிக்கவும். இந்த வரிவிலக்குகளால், மறைமுகமாக சில இழப்புக்கள் இருந்தாலும், நாட்டு மக்களுக்கு மாதாந்திர செலவினங்கள் சிறிதளவேனும் குறையும் என்ற வகையில் ஓரளவுக்கு லாபங்கள் உள்ளன. ஆனால், புதிதாக அமையப் போகும் அரசு தனது நிர்வாக செலவுக்கே மிகவும் கஷ்டப் படும் வகையில், இப்போதைய அரசு நிதி நிலைமையைச் சிக்கலாக்கி விட்டே போகும் என்ற பொருளில்தான் பதிவில் இவ்வாறு எழுதப் பட்டது.
நன்றி.
Post a Comment