Skip to main content

சரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த முரண்பாடு?

சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதம் வரை உயர்ந்த பணவீக்கம் இப்போது நான்கு சதவீதத்திற்கும் கீழே வந்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் என்பது அந்நாட்டில் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதை பிரதிபலிப்பதே ஆகும். ஆனால், இந்தியாவிலோ பணவீக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அரசு வெளியிடும் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி முதலான மளிகைப் பொருட்கள் மற்றும் பொது சேவைக் கட்டணங்கள் எந்த வகையிலும் குறைய வில்லை என்பதுடன் வெகுவாக உயர்ந்த வண்ணமே உள்ளன. கடந்த காலாண்டு நிதி அறிக்கையில், இந்திய தலைமை வங்கியே, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் குறைந்திருந்தாலும் விலைவாசிகள் குறைய வில்லை என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.ஏன் இந்த முரண்பாடு? காரணங்கள் என்ன என்று கொஞ்சம் யோசிப்போம்.

இந்தியாவில் அனைவராலும் அதிகம் பின்பற்றப் படும் பணவீக்க விவரம், மொத்த விலைகளின் (Wholesale Prices)போக்கை அடிப்படையாக கொண்டதாகும். அதே சமயம், மேலை நாடுகளில், நுகர்வோர் விலைவாசியின் அடிப்படையிலேயே பணவீக்கம் கணக்கிடப் படுவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே, மேலை நாடுகளில், பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி துல்லியமாக அரசாங்களால் உணரப் படுகிறது. உதாரணமாக, ஒரு பொருளின் மொத்த விலை (தொழிற்சாலையின் தயாரிப்பு விலை) 100 ரூபாயிலிருந்து 104 ரூபாய் ஆக உயர்ந்தால், இந்திய அரசு பார்வையில் பணவீக்கம் வெறும் நான்கு சதவீதம். பல இடைத்தரகர்கள் கைமாறி நம்மைப் போன்ற நுகர்வோரிடம் வரும் போது ஏற்படும் விலை ஏற்றங்கள் இந்த பணவீக்கத்தில் இடம் பெறுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயத்தில், நுகர்வோர் கையில் கிடைக்கும் போது, இந்த பொருளின் விலை 110 ஆக இருந்தால், மேலை நாடுகளில் பணவீக்கம் பத்து சதவீதமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தொழிற்துறையில் உபயோகிக்கப் படும் பல மூலப் பொருட்கள் கச்சா எண்ணெயை ஆதாரமாக கொண்டவையாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கண்ட படி உயர்ந்த போது, அந்த விலை உயர்வை நுகர்வோர் தலையில் கட்டிய தொழிற் நிறுவனங்கள் இப்போதைய கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனை நுகர்வோருக்கு வழங்க வில்லை என்பதும் கூட இந்த முரண்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம்.

தற்போது இந்தியாவில், பணவீக்கம், 1993-94 விலைகளை அடிப்படையாகக் கொண்டு 435 வெவ்வேறு பொருட்களின் விலை கண்டறியப் படுகிறது. முந்தைய ஆண்டு இதே நாளில் இருந்த விலையை விட இந்த ஆண்டு எவ்வளவு உயர்ந்தது என்ற கணக்கியல் மதிப்பீடே பணவீக்கம் ஆகும். இந்த முறையில் சில பலவீனங்கள் உள்ளன.

அதாவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அரிசி விலை 20 ரூபாய் அளவில் இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். உற்பத்தி குறைவாக இருந்ததால் அதே வருடம் பிப்ரவரி மாதம் இதுவே 30 ரூபாயாக உயர்ந்தது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் ஜனவரி/ பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை சமச்சீராக 33 ரூபாயாக அளவாக உள்ளது எனும் பட்சத்தில், இந்திய அரசின் மதிப்பீட்டின் படி ஜனவரி மாதம் பணவீக்கம், (33-20)/20 = 65% ஆக இருந்தது. அதுவே பிப்ரவரி மாதம் (33-30)/30 = 10% ஆக குறைந்துள்ளது.

இந்த கணக்கியல் ரீதியான பணவீக்க வீழ்ச்சி, "விலைவாசியை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளித்துள்ளன" என்று அரசு சார்பாக தம்பட்டம் அடிக்கவே உதவுகின்றது. ஆனால், அரிசி பொங்கி சாப்பிடும் நம்மைப் போன்ற பொதுஜனங்களுக்குத்தான் தெரியும், அரிசி விலை குறைய வில்லை என்று. மேற்சொன்ன உதாரணத்தின் அடிப்படையில், அரசு வெளியிடும் பணவீக்கமானது நம்மைப் போன்ற பொது மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விலைவாசி உயர்வு பிரச்சினையை சரிவர பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே சொன்னபடி, இந்தியாவில் பணவீக்கம் 435 பொருட்களின் விலைவாசி உயர்வு தாழ்வு அடிப்படையில் கணக்கிடப் படுகிறது. ஆனால், இந்த பொருட்களின் தொகுப்பு, இந்தியாவின் மாறி வரும் பொருளாதார சூழலின் அடிப்படையில் அமைய வில்லை என்பது என் கருத்து. பணவீக்க மதீப்பீடு, விவசாய, எரிசக்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலை ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இன்றைக்கு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சேவைப் பணிகளில் (தொலை தொடர்பு, போக்குவரத்து, பொதுச் சேவைகள் போன்றவை) ஏற்படும் விலைவாசி ஏற்றத்தாழ்வுககள் பணவீக்க கணக்கீட்டில் சரிவர இடம் பெறுவதில்லை.

கடைசியாக, ஆனால் முக்கியமாக, புள்ளி விவரத் துறையினரால் சரியான நேரத்தில், துல்லியமாக இந்த விலைவாசிகள் மதிப்பிடப் படுகின்றனவா என்பது கேள்விக் குறியான ஒன்றுதான். முதலில் வெளியிடப் படும் குத்துமதிப்பான பணவீக்கத்திற்கும் (Provisional Data), இறுதியாக வெளியிடப் படும் பணவீக்கத்திற்கும் பல சமயங்களில் பெரும் வேறுபாடு இருப்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, அரசாங்கம் பணவீக்க கணக்கிடும் முறையை காலத்துககேற்றார் போல, நுகர்வோர் (பொது மக்கள்) சந்திக்கும் விலைவாசி உயர்வை சரியாக பிரதி பலிக்கும் வகையில் மாற்றியமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் தற்போதைய முறையில் பணவீக்கம் குறைந்து வருகின்றது என்று தவறான மாயையில் தொடர்ந்து இருந்து விடாமல் விலைவாசியை குறைக்கும் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

நன்றி.

Comments

பொருளாதரத்தில் உங்களின் நிபுணத்துவம் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.business line போன்ற பத்திரிக்கைகளில் வெளிவரும் young investor என்ற பக்கத்தில் வெளிவர தகுதி கொண்டவை உங்கள் கட்டுரைகள். எவ்வளவு எகனாமி படித்தாலும் எதுவும் புரியாத என்னை போன்ற ஜீவ ராசிகளுக்கு மிகத்தெளிவாக புரிகிறது .
இப்போது கமென்ட் :
தேர்தலில் ஜெயித்து பதவியில் அமரும் முதல் நாளில் அடுத்த தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றும் பணிகளை தொடங்கு கின்றனர் நம்ம தலைவர்கள்.அதில் ஒன்று பணவீக்கம் பற்றியது. பெரும்பாலோனோர் அரசு எடுத்த முயற்சியினால் பணம் வீங்கி வீங்கி பெரிதாகிறதோ என்று நினைக்கின்றனர். அடிப்படையில் நம் பள்ளி கல்லூரி வகுப்புகளில் பொருளாதாரம் தவிர மற்ற படிப்புகளில் பொருளாதாரம் தொடர்பான அடிப்படை விஷயங்கள் சொல்லி தரபடுவதில்லை. இதனால் நாட்டின் நிலைமை மட்டுமன்றி தன்னுடைய தேவைகளையும் சரியாக திட்டமிட முடியாமல் திணறுகின்றனர் நமது slum dog millionaire கள். இந்த வகையில் உங்கள் கட்டுரை மிகச்சிறந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பொருளாதரத்தில் உங்களின் நிபுணத்துவம் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.business line போன்ற பத்திரிக்கைகளில் வெளிவரும் young investor என்ற பக்கத்தில் வெளிவர தகுதி கொண்டவை உங்கள் கட்டுரைகள். எவ்வளவு எகனாமி படித்தாலும் எதுவும் புரியாத என்னை போன்ற ஜீவ ராசிகளுக்கு மிகத்தெளிவாக புரிகிறது .//

அடிப்படையில் நான் ஒரு பொருளாதாரவாதி அல்ல என்பது உங்களுக்கு தெரியும். பல பொருளாதார விஷயங்களை வகுப்பறையில் படிக்காமல் முட்டி மோதி நானே தெரிந்து கொண்டிருக்கிறேன். ஓரளவுக்கு புரிந்த பிறகுதான், இவ்வளவு எளிமையான விஷயங்களை, ஏனிந்த மெத்த படித்த பொருளாதார மேதைகள் யாருக்கும் புரியாத ஒரு "தேவ பாஷையிலே" பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வகையில் கோபப் பட்டிருக்கிறேன். ஒரு பாமரனாக பல பொருளாதார பாடங்கள் கற்றுக் கொண்டதனாலேயே, இப்படி எளிமையாக வெளிப் படுத்த முடிகிறது என்று நினைக்கிறேன்.

//தேர்தலில் ஜெயித்து பதவியில் அமரும் முதல் நாளில் அடுத்த தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றும் பணிகளை தொடங்கு கின்றனர் நம்ம தலைவர்கள்.அதில் ஒன்று பணவீக்கம் பற்றியது. பெரும்பாலோனோர் அரசு எடுத்த முயற்சியினால் பணம் வீங்கி வீங்கி பெரிதாகிறதோ என்று நினைக்கின்றனர். //

இது உண்மைதான். அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் பணவீக்கத்தை அதிகப் படுத்துகின்றன. இதைப் பற்றி இன்னொரு பதிவு கூட போட்டிருக்கிறேன்.

//அடிப்படையில் நம் பள்ளி கல்லூரி வகுப்புகளில் பொருளாதாரம் தவிர மற்ற படிப்புகளில் பொருளாதாரம் தொடர்பான அடிப்படை விஷயங்கள் சொல்லி தரபடுவதில்லை. இதனால் நாட்டின் நிலைமை மட்டுமன்றி தன்னுடைய தேவைகளையும் சரியாக திட்டமிட முடியாமல் திணறுகின்றனர் நமது slum dog millionaire கள்.//

கார்ல்மார்க்ஸ் தியரி, ஆதாம் ஸ்மித் தியரி என்று மாணவர்களை ஆரம்பித்திலேயே குழப்பாமல், வாழ்வியல் பொருளாதாரத்தை பள்ளியில் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

// இந்த வகையில் உங்கள் கட்டுரை மிகச்சிறந்தது. தொடர்ந்து எழுதுங்கள்//

பொதுஜனத்தின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் போது என்ன கவலை? எழுதிட்டாப் போச்சு. :)
கபீஷ் said…
Very useful post for people who knows economy and for 'budhoos' like me. (Hi!! Two in One!!)
As ur articles being simpler in the way its being delivered, I started reading ur economy posts too. :-):-)

Keep rocking!!!
Maximum India said…
//Very useful post for people who knows economy and for 'budhoos' like me. (Hi!! Two in One!!)
As ur articles being simpler in the way its being delivered, I started reading ur economy posts too. :-):-)//

மிக்க நன்றி கபீஷ். "நடைமுறை வாழ்வியல் பொருளாதாரம்" என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நீங்களும் பொருளாதார பதிவுகளை படிக்க ஆரம்பித்திருப்பது இந்த பதிவுப் பூ அடைந்திருக்கும் வெற்றி என்றே நினைக்கிறேன். உங்களது தொடரும் ஆதரவுக்கு மீண்டுமொரு நன்றி. :-)
butterfly Surya said…
நல்ல அலசல். தொடர்ந்து எழுதுங்கள்.
KARTHIK said…
// அரசாங்கம் பணவீக்க கணக்கிடும் முறையை காலத்துககேற்றார் போல, நுகர்வோர் (பொது மக்கள்) சந்திக்கும் விலைவாசி உயர்வை சரியாக பிரதி பலிக்கும் வகையில் மாற்றியமைப்பது மிகவும் அவசியமான ஒன்று.//

இந்த விசயம் நம்ம பொருளாதார மாமேதைகளுக்கும் தெரியுமில்லையா.
இருந்தாலும் மாத்த மாட்டாங்க.

விரைவில் நல்ல மாற்றம் நடந்தா சரிதான்.

நம்ம பொதுஜனம் சொன்னதை வழிமொழிகிறேன்.
Maximum India said…
அன்புள்ள வண்ணத்துபூச்சியார் அவர்களே

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இந்த விசயம் நம்ம பொருளாதார மாமேதைகளுக்கும் தெரியுமில்லையா.
இருந்தாலும் மாத்த மாட்டாங்க.//

காரணம் உள்ளது உள்ளபடி எல்லாருக்கும் தெரிஞ்சா, அவங்க பொருளாதார மாமேதைகளா தொடர முடியாதல்லவா? :-)

//நம்ம பொதுஜனம் சொன்னதை வழிமொழிகிறேன்//

நானும் அவருக்கு கொடுத்த பதில வழி மொழியறேன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...