Saturday, February 14, 2009

காளையும் கரடியும் சந்தித்தால்?


வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.

வரப் போகிற இடைக்கால மத்திய பட்ஜெட்டில் சந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் புதிய வரி விலக்குகளும், தொழிற் துறைக்கான சில சலுகைகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த வாரம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது சந்தைகள் மேலே சென்றதும், F&O பிரிவில் அதிகமான திறந்தநிலை ஆர்வம் (Open Interest) ஏற்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டியவை. தொழிற்துறை உற்பத்தி சரிவைக் கண்டு (-2.00%) உள்ளூர் நிலைமை திருப்தி இல்லாத நிலையிலும் கூட நாம் சென்ற வாரம் குறிப்பிட்டது போல நிபிட்டி 2900 புள்ளிகளை விட்டு அதிகம் விலகாமல் இருந்தது முக்கியமான ஒரு விஷயம். மேலும், சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.

முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற ரியல் எஸ்டேட், வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.

பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டதின் எதிரொலியாக, கரன்சி வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக உயர்ந்தது.

வரும் வார நிலவரம்

வரும் வாரம் மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில், தொழிற் துறை, ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பில் வருகின்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஓரளவுக்கு சிறப்பாக இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், சந்தைகள் ஏற்கனவே ஏகப்பட்ட அளவுக்கு முன்னேறி இருப்பதால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏற்கனவே நாம் இங்கு தெரிவித்திருந்த படி, நிபிட்டி 3050 புள்ளிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும். ஆனால், அதற்கு மிகுந்த எதிர்ப்பும் காணப் படும். எனவே, வர்த்தகர்கள் இந்த அளவில் தமது திறந்த நிலைகளை ஓரளவுக்கு சமன் செய்து கொள்வது நல்லது. மேலும், 2850 ஐ ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலையை தொடரலாம். புதிய வர்த்தக நிலை எடுப்பதில் அதிக அபாயங்கள் இருந்தாலும் நிபிட்டி 3200 வரை கூட (3050 ஐ முறிக்கும் பட்சத்தில்), "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல" என்பவர்கள் 2850 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு புதிய வர்த்தக நிலை எடுக்கலாம்.

முதலீட்டாளர்கள், (கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வருவதின் அடிப்படையில்) பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க பரிசீலிக்கலாம். வங்கித் துறை, இரும்புத் துறை, நுகர்வோர் துறை பங்குகளை (பட்ஜெட் திட்டங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில்) வர்த்தகர்கள் கவனிக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி

2 comments:

பொதுஜனம் said...

காளையும் கரடியும் சந்தையின் இரு அச்சுகள். சந்தைபயணம் தொடர்ந்து செல்ல இவை இரண்டுமே தேவை. ஆனால் வண்டியை செலுத்துபவர்கள் மீது உள்ள நம்பிக்கை தான் இப்போது சந்தேகத்திற்கு உரிய தாகிவிட்டது. ராஜு போன்றவர்களை வண்டியில் இருந்து இறக்கி விட்டாலே பாதி பாரம் குறையும் வேகமாக முன்னேறும் நாடு என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள புத்திசாலித்தனமான முதலீடுகள் தேவை. அதை செய்ய நமது முதலீட்டாளர்களும் (காளைகள்) அரசியல்வாதிகளும் (கரடிகள்) முன் வரவேண்டும் .

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு மிக்க நன்றி

Blog Widget by LinkWithin