Friday, February 20, 2009

தவறான அணுகுமுறை


தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு அவலம் நிகழ்ந்தேறி உள்ளது. இந்த முறை மோதியது, போலீசாரும் வழக்கறிஞர்களும். முதலில் தவறு யார் செய்தார்கள் என்பதை விட அரசாங்கமும் போலீசும் பிரச்சினைகளை (தவறுகளை) எப்படி அணுகுகிறார்கள் எனபதைப் பொறுத்தே நல்ல தீர்வுகள் அமைகின்றன.

காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.

வழக்கறிஞர்கள் விஷயத்திற்கு வருவோம். சில வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமியை தாக்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை கைது செய்ய போலீஸார் முயன்ற போது, வழக்கறிஞர்கள் தடுத்ததால் (அல்லது தாக்கியதால்), அவர்களை திருப்பி தாக்க நேர்ந்ததாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.

என்னுடைய சில சந்தேகங்கள்:

குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களை நீதி மன்ற வளாகத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீதி மன்றத்தில் மற்ற வழக்கறிஞர்கள் முன் வைத்து அவர்களை கைது செய்தால், எதிர்ப்பு தோன்றும் என்று போலீசாருக்கு தெரியாதா?

அவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே? பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை?

பொதுமக்கள் பெருமளவிற்கு கூடுகின்ற இடத்தில் இது போன்ற கலவரங்கள் உருவானால், அப்பாவிகள் பலரின் பாதுகாப்புக்கு ஆபத்து வரும் என்று தெரியாதா?

போலீஸார் வாதத்தின் படியே கூட கலவரங்கள் செய்தது வக்கீல்கள். நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் என்ன பாவம் செய்தன? அவைகளை போலீசாரே அடித்து நொறுக்கியதற்கும் கலவரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஏன் இந்த மிருக வெறி?

கலவரம் செய்தவர்கள் வக்கீல்கள்தான் என்ற பட்சத்தில், ஊடகங்களை சேர்ந்தவர்களும், நீதிபதிகளும் தாக்கப் பட்டதற்கு காரணம் என்ன?

கைது செய்ய செல்ல சென்ற சில போலீசாரின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே பல ஆயிரம் போலீஸார் நிறுத்திவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

ஒரு வேளை, இலங்கை தமிழர் பிரச்சினை முதலான பல சமூக பிரச்சினைகளில் முன் நிற்கிற வழக்கறிஞர்களுக்கு "ஒரு சரியான பாடம்" கற்பிக்கவே இந்த தாக்குதல் என்றால், இதற்கும் "என்கௌண்டேர்களுக்கும்" என்ன வித்தியாசம் இருக்கிறது? இது ஒரு தவறான அணுகுமுறை அல்லவா? இந்த தாக்குதல்களால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா? மேலும் விரோதங்கள் அல்லவா வளரும்?

அரசின் அனுமதி இல்லாமல் போலீசாரால் இது போன்ற தாக்குதலில் ஈடுபட முடியுமா? அரசின் முதல் கடமை மக்களைப் பாதுகாக்க வேண்டியதுதானே? பொதுமக்கள் பெருமளவிற்கு கூடும் இந்த பகுதியில், தாக்குதலை நடத்த அனுமதித்தது ஏன்?

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே, வன்முறையில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு தோன்றாதா?

ஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.

நன்றி

4 comments:

nerkuppai thumbi said...

தமிழ் நாட்டில் நடந்த இன்னொரு அவலம்; சட்டக் கல்லூரியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்ததே அது போன்றது தான் இதுவும்.

போலீசின் வன்முறை என்பது நாம் பலமுறை கேள்விப்பட்டது தான். இம்முறை தாக்கப்பட்டது வக்கீல்கள்; அவ்வளவே.

பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் வேலைநிறுத்தம்; ஈழத்தில் சண்டை என்றால் வேலை நிறுத்தம்; வழக்கு தொடுத்து அவதிப்படும் வாதி-பிரதிவாதிகள் எக்கேடு கெட்டதாவது போகட்டும். அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது அவர்கள் குற்றம் என்னும் மனப்பான்மை வந்து விட்டது.

சட்டக் கல்லூரியில் சாதி பார்த்து முக்குலத்தோரா தலித்தா என்று பார்த்து வெட்டும் மாணவர்கள் தேர்வு தேறி வக்கீல்கள் ஆனால் எப்படி நடந்து கொள்வார்கள்?

சட்டம் படிப்பவர்களே சட்டத்தை மதிக்காவிட்டால் வேறு எவன் மதிப்பான்?

தமிழ் நாட்டில் பிறந்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நடப்பது நம் போதாத காலம்.

Maximum India said...

அன்புள்ள ஐயா!

கருத்துரைக்கு நன்றி

//பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும். //

பொது மக்களின் ஆதரவு போராடும் வழக்கறிஞர்களுக்கு மிகக் குறைவு என்றே எனக்கும் தோன்றுகிறது. சொல்லப் போனால், யாராலும் நடத்தப் பெறும் எந்த ஒரு போராட்டத்திற்குமே மக்களின் ஆதரவு கொடுப்பதில்லை. யார் எப்படிப் போனால் என்ன? நாம் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றே பலருக்கும் தோன்றுகிறது. இதில் அவர்கள் தவறொன்றுமில்லை. பல போராட்டங்களில் சுயநலங்களும் அரசியலும் கலந்திருப்பதால்தான் இப்படி.

நன்றி.

வால்பையன் said...

வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.

வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.

வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.//

உண்மைதான். போலீஸார், தமது கவனத்தை நாட்டின் பாதுகாப்பிலும் வழக்கறிஞர்கள் தமது கவனத்தை மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதிலும் கொஞ்சம் திருப்பினால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Blog Widget by LinkWithin